Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

யாரோ இவன் என் காதலன் – 4

அத்தியாயம் – 4

விடிந்துவிட்டதைத் தெரிவித்த பறவைகளின் கீச்சுக்குரலைக் கேட்டபடி கண்விழித்தாள் அஞ்சலி. முதல் நாள் நடந்த சம்பவமே நினைவுக்கு வரவில்லை அஞ்சலிக்கு. காலை எழுந்ததும் சோம்பலாய் படுக்கையில் புரள்வதைப் போன்றதொரு இன்பம்…

மிக மிக அருமையான உணவின் நறுமணம் வேறு நாசியைத் தாக்கியது.

தனது இரவு உடையை சரி செய்தவள் பல் துலக்கியபின் அடுக்களைக்கு சென்றாள்.

“மாயா நீதானா இந்த அளவுக்கு நல்லா சமைக்கிறது?” என்று வியந்தபடி அறைக்குள் நுழைந்தவள் தீயை மிதித்ததைப் போலத் துள்ளினாள். அங்கே அவளது வீட்டு சமையலறையில் உரிமையாய் நுழைந்து தோசை ஊற்றிக் கொண்டிருந்தவன் அந்த கேசர்பாத்தேதான்.

 

“நீ எங்க இங்க வந்த… வெளிய போ”

 

“வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்கும் முறை இதுதானா? அஞ்சலினு பெயர் வச்சுட்டு எனக்கு மட்டும் டெவிலா இருக்கக்கூடாது”

 

“உனக்கு எப்போதுமே டெவில்தான். வெளிய போடா…”

 

“ராத்திரியே உன் மனசில் பதியுற மாதிரி என் பெயர் ஜெய்ஷங்கர்னு சொல்லித்தந்தேன். நேத்து சொல்லித்தந்த பாடம் பத்தலையா….

பிரஷ் பண்ணிட்டு மௌத் பிரெஷனர் எல்லாம் போட்டுட்டு வந்திருக்க போலிருக்கே” என்றபடி அவளது இதழ்களை உற்று நோக்கினான்.

 

வாயைப் பொத்திக் கொண்டவள் அப்படியே பின்வாங்கி அந்த சின்ன பிளாட்டில்  மாயாவைத் தேடினாள்.

 

“டீ மாயா குட்டிபிசாசே எங்கடி போன”

 

“பிசாசும் டெவிலும் தங்கிருக்குற பிளாட்டா இது”  என்றபடி இரண்டு தட்டுகளில் உணவை எடுத்து வந்தான்.

 

“உனக்கு உண்மையான ப்ரேக்பாஸ்ட் எந்த அளவுக்கு டேஸ்டா இருக்கணும்னு தெரிய வேண்டாமா… இந்த முட்டை தோசையும் தக்காளி சட்னியும் சாப்பிட்டுத் தெரிஞ்சுக்கோ”

 

“நான் எப்படி இங்க வந்தேன். மாயாவை என்ன செஞ்ச?”

 

“உன் முதல் கேள்விக்கு பதில்… நான் நெனச்சதை விட கொஞ்சம் வெயிட் ஜாஸ்தியாவே இருந்த… கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான்  உன்னைத் தூக்கிட்டு வந்தேன்.

ரெண்டாவது கேள்விக்கு பதில்…  மாயாவை நான் என்ன செஞ்சேனா… அடக்கடவுளே அவ என்னை எதுவும் செய்யாம இருக்குறதே நான் எந்த காலத்திலோ பண்ணிய புண்ணியம்”

 

“யார் நீ?”

 

“நல்ல கேள்வி. அதை சாப்பிட்டுட்டே கேக்கலாமே. சூடா இருக்கும் உணவு சுவையாவும் இருக்கும். சாப்பிடு.. அப்படியே என்னைப் பத்தியும் கேளு”

“உன் அக்கறை எனக்குத் தேவையில்லை. சொல்லு யார் நீ? எதுக்கு என் பின்னாடியே சுத்திட்டிருக்க?”

 

“ஒரு நாள் இந்தப் பக்கம் போனப்ப சாப்பிட உன் ஹோட்டலில் நுழைஞ்சேன். சாப்பாட்டை விட நீ அப்படியே என்னைக் கொக்கி போட்டு இழுத்துட்ட.

 

அதனால்தான் தினமும் சாப்பிட வந்துடுறேன். நீ சொன்ன மாதிரி உன் பின்னாடியே சுத்திட்டிருக்கேன். என்னை ஒரு பிரெண்டா நினைச்சுக்கலாமே…”

 

“மிஸ்டர். ஜெய்ஷங்கர் எனக்கு என்னோட வேலை இருக்கு, நண்பர்களும் இருக்காங்க. புதுசா ஒரு நண்பன் தேவையில்லை”

 

“இதை என்னால் ஒத்துக்க முடியாது அஞ்சலி. என்னைப் பத்தி ஒண்ணும் தெரியாம எப்படி நீ இந்த முடிவுக்கு வரலாம். கொஞ்சம் என் கூடப் பழகிப் பாரு. அப்பறம் உன் முடிவை சொல்லு. வாயை மூடிட்டு போயிடுவேன். எதையும் தெரியாம நீ சொல்றதை நான் ஏத்துக்கணும்னு அவசியம் இல்லை”

 

சற்று யோசித்தவள் அவனிடம் குதர்க்கமாக சொன்னாள் “சரி இப்ப சொல்றேன். நேத்து நடந்த சம்பவத்தையும், காலைல என் வீட்டுக்குள்ள அழையா விருந்தாளியா நுழைஞ்சு, உரிமையா எனக்கும் சேர்த்து சமைச்சதையும் பார்க்கும் போது…

 

சாரி, உனக்கும் எனக்கும் செட்டாகாது.இப்ப நீ என் வீட்டை விட்டுக் கிளம்பி உன் வேலையை பார்க்கப் போகலாம். நான் கையைப் பிடிச்சு இழுத்து நிறுத்தமாட்டேன்”

 

அவமானத்தால் சுருங்கிய ஜெய்யின் முகம் சில வினாடிகளில் பாறை போன்ற உணர்ச்சியற்ற தோற்றத்தை அடைந்தது. டைனிங் சேரிலிருந்து விருட்டென எழுந்தவன் காலணியை அணித்து கொண்டு  அமைதியாய் வெளியேறினான்.

 

அவன் அவளது புறக்கணிப்பை அமைதியாய் ஏற்றுக் கொண்டது மனதினுள் சங்கடத்தைத் தோற்றுவித்தது. அவனது வருத்தம் அவளையும் வாட்டியதை அதிர்ச்சியுடன் உணர்ந்தாள்.

 

கல்லைப் போல எவ்வளவு நேரம் நின்றாளோ அவளுக்கே தெரியாது, மாயா வந்து உலுக்கியதும்தான் நினைவுக்கு வந்தாள்.

 

“அவன் எப்படி வீட்டுக்குள்ள வந்தான்?”அஞ்சலியின் கோபக் குரலைக் கூட உணர்ந்து கொள்ளாத  மாயா கூலாக

 

“ஒ கேசர்பாத்தா… காலைல க்ராசரி கடைக்குப் போகக் கிளம்பினேன். ஜெய் வந்தான் அதுதான் கதவைத் திறந்துவிட்டேன்”

 

ஜெய்னு செல்லமா கூப்பிடுற அளவுக்கு முத்திப் போச்சா.

 

“யாரு தெரியாதவனை வீட்டுக்குள்ள விட சொன்னது. அதுவும் கிட்சன் வரை. உனக்கு அறிவில்லை” என்று பாய்ந்தாள்.

 

கைகளைக் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்தவண்ணம் மாயா பதில் சொன்னாள்.

 

“அந்தத் தெரியாதவன் தான் மயங்கிக் கிடந்த உன்னை நேத்து ராத்திரி வீடு வரைக்கும் வந்து விட்டுட்டுப் போனவன்”

 

நிஜம்தானா… உண்மையைத்தான் சொல்லிருக்கான்… திகைத்தவள்… ஒரு முடிவுடன் நிதானமாக அவன் செய்து வைத்த உணவை அப்படியே குப்பைத் தொட்டியில் கொட்டினாள்.

 

“நிறுத்து… நிறுத்து… “  என்று கத்தியவண்ணம் தடுக்க முயன்ற மாயா வெறுப்பாக.

“உனக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கு அஞ்சலி. ஒருத்தனை இந்த அளவுக்கா அவமானப் படுத்துறது. அவன் சமைச்சதை சூடு ஆறுரதுக்கு முன்னாடியே கீழ கொட்டுற”

 

“எது நல்லதுன்னு எனக்குத் தெரியும். அவனை நெருங்க விட்ட அப்பறம் நம்ம ரெண்டு பேரும் அடுத்த வருஷம் செயின்ட் ஜார்ஜ் மெட்டர்னிட்டி வார்ட்ல அட்மிஷனுக்கு நின்னுட்டு இருப்போம். போ… போயி உருப்புடுற வழியைப் பாரு”

 

சற்று நேரம் கழித்து சகோதரிகள் இருவரும் முகத்தைத் தூக்கி வைத்தபடியே உணவகத்திற்குக் கிளம்பினர்.

 

“தெரியாத நபரை வீட்டுக்குள் அனுமதிக்கிறது இதுவே முதலும் கடைசியுமா  இருக்கட்டும்” மறுமுறை எச்சரித்தாள் அஞ்சலி.

 

“போதும் நிறுத்து. அவனைப் பார்த்ததும் உன் முகம் பல்பு போட்ட மாதிரி எரியுறதை என்கிட்டே மறைக்காதே. அவன் உன்னைப் பார்க்குறதும், பதிலுக்கு ஓரக்கண்ணால் நீ அவனைப் பார்க்கிறதும் எனக்குத் தெரியாதுன்னா நினைக்கிற”

 

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. நீயா எதையாவது கற்பனை பண்ணிக்காதே”

 

“வேணும்னா சந்தானம் அங்கிளை கேட்கலாமா. என்ன பெட்டு”

 

“அவருக்கே கண்ணாடி போடாம சரிப்படாது. இதில் என் முகத்தை பார்த்துட்டு உட்கார்திருந்தாரா”

 

வொயிட் ஹார்சில் நுழைந்ததும் கண்கள் நேரே ஜெய்ஷங்கர் வழக்கமாக அமரும் இடத்துக்கு சென்றது. அவளது மனதைப்  போலவே அந்த இருக்கையும் வெறுமையாய் இருந்தது. கடந்த சில மாதங்களில் அவன் காலை உணவுக்கு வராமல் இருந்தது இல்லை. முதல் முறையாக இப்படி நேர்ந்திருக்கிறது.

 

ஏதோ ஒரு பாரம் மனதில் ஏற,  அங்கே அமர்ந்திருந்த சந்தானத்திடம் ஒரு அரைப் புன்னைகையுடன் குட் மார்னிங் அங்கிள் என்று முணுமுணுத்தாள்.

 

“அஞ்சலி என்னது இப்படி சோகத்தோடு உன் முகம். உன் பிரெண்டுக்கு ஏதாவது ஆச்சா… நேத்து மெயின் ரோட்டில் ஒரு தடியன் கூட பார்த்தேன். வீட்டை விட்டு ஓடிப் போயிட்டாளா… கவலைப்படாதே அவனே இன்னும் ரெண்டு நாளில் தொல்லை தாங்காம கொண்டாந்து விட்டுடுவான்”

 

“அதெல்லாம் இல்லை அங்கிள்”

 

“அடக்கடவுளே அவ இன்னமும் ஓடலையா”

 

“சந்தானம் அங்கிள் நீங்களே அம்பது பவுன் நகை போட்டு எனக்குக்  கல்யாணம் பண்ணி வைக்கிற வரைக்கும் இங்கதான் இருப்பேன்” வில்லச் சிரிப்புடன் ஆஜரானாள் மாயா.

 

அஞ்சலியால் அந்த குதூகலத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை

“நான் உங்க சாப்பாடு ரெடியாச்சான்னு பாத்துட்டு வரேன்” என்று தப்பித்தாள்.

 

“அப்படியே எனக்கும் ஒரு தோசை எடுத்துட்டு வா… கருமம்… நல்ல சாப்பாட்டை விட்டுட்டு இந்த நவீனோட  தீஞ்ச தோசையை சாப்பிட வேண்டிய தலையெழுத்து எனக்கு” திட்டியவண்ணம் அமர்ந்தாள் மாயா.

 

“அஞ்சலி இன்னைக்கு ஏன்  உர்ருன்னு  இருக்கா”  யோசனையோடு கேட்டார் சந்தானம்.

 

“கேஸர்பாத்தை திட்டி விரட்டிட்டா… அதுதான் அங்கிள் சோக கீதம்

 

வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே “ என  பாடி, நடந்த கதையை சுருக்கமாக அவள் சொல்லி முடிக்கவும், அஞ்சலி உணவினை எடுத்து வரவும் சரியாக இருந்தது.

 

“நேத்தே  நான் சொன்னேனே ரொம்ப சோர்வா இருக்க கொஞ்சம் ஓய்வெடுத்துக்கோன்னு. சொன்னா கேட்டாத்தானே… பேசாம ஒரு வாரம் வீட்டில் இரு. மாயா எல்லாத்தையும் பாத்துக்குவா. நான் வேணும்னா என்னால முடிஞ்ச உதவி பண்றேன்” என்று அவர் கனிவுடன் சொன்னது அவளது தந்தையை நினைவு படுத்தியது அஞ்சலிக்கு.

 

“பரவால்ல அங்கிள் என்னால வீட்டில் தனியா இருக்க முடியாது. நான் உங்களையெல்லாம் பார்க்கும்போதுதான் கவலையை மறக்குறேன்”

 

என்பவளை எப்படி வற்புறுத்துவது என்று அவர்கள் இருவரும் பேசாமல் இருந்தனர்.

 

“ இங்க நான் வந்தப்ப லைட்டெல்லாம் நிறுத்திருந்தது. அதனால வீட்டுக்குப் போயிட்டேன்னு நினைச்சுட்டேன். இந்த விஷயம் தெரியாம போச்சே. நல்லவன்தான் போலிருக்கு… உன்னை பாதுகாப்பா வீட்டில் ஒப்படைச்சிருக்கானே”

என்ற சந்தானத்தை இடைமறித்து ‘நான் மயக்கம் போட்டதே அந்த நல்லவனாலதான்’ என்று சொல்ல முடியாமல் ஏனோ உருவமில்லா ஒரு உருண்டை உருண்டு வந்து தொண்டை அடைத்தது.

 

“அப்படி சொல்லுங்க அங்கிள்… பொறுப்பா எல்லாத்தையும் பூட்டிட்டு இவளுக்கு முதலுதவி தந்து வீட்டில் விட்டா… ஒரு  தாங்க்ஸ் சொல்லலைன்னாலும் அவனை அவமானப் படுத்தாம இருக்கலாமே”

 

“அடப்பாவமே… அப்படி ஏன் செஞ்சம்மா” என்றவர் அவள் விட்டுவிடுங்களேன் என்ற மாதிரி பார்த்த பரிதாபப் பார்வையைக் கண்டு

 

“ இருந்தாலும் நான் அஞ்சலியைத்தான் சப்போர்ட் பண்ணுவேன். நீ செஞ்சது சரிதான். பொண்ணுங்க தனியா இருக்கும்போது ஜாக்கிரதையாத்தான் இருக்கணும். அவன் உதவி செஞ்சான்னு வீட்டுக்குள்ள விட்டுற முடியுமா. மாயா நீயும் அவள்கிட்டேருந்து பாடம் படிச்சுக்கோ”

 

அமைதியாய்  அமர்ந்திருந்தாள் அஞ்சலி.

 

“உங்கள மாதிரி ஒருத்தர் இருந்தா இவளுக்குக்  கல்யாணம் ஆன மாதிரிதான். நானே ஒரு லைஃப் டைம் வாய்ப்பைத் தவற விட்டுட்டாளேன்னு பீல் பண்ணிட்டிருக்கேன்” மாயா அலுத்துக் கொண்டாள்.

 

“தவறவிடலன்னு நான் நினைக்கிறேன்” என்றபடி மாயாவைப் பார்த்து பூடகமாக சிரித்தார் சந்தானம்.

 

அவர் கண் சென்ற திசையில் இருவரும் நோக்கினர். டார்க் க்ரே பேண்ட் மற்றும் ஸ்கை ப்ளூ ஷர்ட் அணிந்த ஜெய் உணவகத்தின் கதவைத் திறந்தான். ஷாக்கடித்தது போல அவனைப் பார்த்து பேந்த பேந்த விழித்தார்கள் சகோதரிகள்.

 

“என்னடி இது” என்றாள் மாயா அஞ்சலியைஉலுக்கி.

 

ஜெய்யின்  பார்வையோ  அஞ்சலியின் மேலேயே நிலைத்திருந்தது. அப்படியே நடந்து வந்து சந்தானத்தின் அருகிலிருந்த டேபிள் ஒன்றில் அவளைப்  பார்க்க வாகாய் அமர்ந்து கொண்டான். அந்தப் பார்வையின் குறுகுறுப்பால் இருந்த இடத்தில் இருப்புக் கொள்ளாமல் தவித்தாள் அஞ்சலி.

 

“ஏன் இவ்வளவு டென்சனாற ? ஒரு தடவை தப்பானால் இந்தத்தடவையும் தப்பாகும்னு நீயே முடிவு செய்துக்கிறதா?” என்றார் சந்தானம் எதையோ மோப்பம் பிடித்தாற்போல.

 

“ப்ளீஸ் அங்கிள் இந்தப் பேச்சு வேணாமே” கெஞ்சினாள்.

 

“உனக்கு இப்ப எத்தனை வயசு… ஒரு இருபத்தைஞ்சு இருக்குமா… இன்னும் எத்தனையோ காலம் வாழ வேண்டியிருக்கு. அதுக்கு ஒரு வழித்துணை வேண்டாமா? உங்கப்பாவா இருந்தா உன்னை இப்படியே விடுவாரா? வார்த்தைக்கு வார்த்தை எங்கப்பா மாதிரின்னு சொல்றது நிஜம்னா உன் வாழ்க்கையை பாதுகாக்கும் கடமையும் எனக்கு இருக்கே… அவன்கிட்ட பேசிப்பாக்கட்டுமா?”

 

“ஐயோ நீங்களும் விளையாடாதிங்க  அங்கிள்”

 

“சீரியஸா சொல்றேன். நான் பேசவேண்டாம்னா நீயாவது அவன்கிட்ட பேசி விவரம் வாங்கு. காலை நேரத்தில் அவன் வீட்டைப் பத்தி விசாரிக்கிறேன்”

 

“அங்கிள் கல்யாணம்னு ஒண்ணு நிச்சயமாகாம இருந்திருந்தால் எங்கப்பா என் கூட இன்னும் இருந்திருப்பார்”

கலங்கிய கண்களை மறைக்க தலையைக் குனிந்து கொண்டாள்.“ சோ, என்னோட ஸ்டான்ட் எந்த ஒரு ஆணும் என் வாழ்க்கையில்  வர வேண்டாம்”

 

“இல்லை, இனிமேல்தான் கண்டிப்பா வேணும்… உன் மேல அன்பு செலுத்தவும், போற்றிப்  பாதுகாக்கவும் ஒரு ஆண்  கண்டிப்பா வேணும். உன் மனசில் கல்யாணம் உங்கப்பாவைக் கொன்னுட்டதா பீல் பண்ணுற. நடந்த  நிகழ்வுகளுக்கு நீதான் காரணம்னு உன் மனசில் பயந்துட்டு இங்க வந்து ஒளிஞ்சிருக்க.

ஒரு நல்ல கம்பெனி உன் மனசில் இருக்கும் குழப்பங்களுக்குத் தீர்வா இருக்கும். அது இவனா இருந்தாலும் சரி இல்லை வேற யாராவது நல்ல பையனா இருந்தாலும் சரி. உனக்கு ஒரு கால்கட்டு போடாம நான் ஓயப்போறதில்லை”

 

அந்தப் பேச்சைத் தொடர விரும்பாது “ஒரே தலைவலி. ஒரு காப்பி எடுத்துட்டு வரேன்” என்றபடி எழுந்தாள்.

 

அவள் தனியே கிளம்பும் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தார்போல  அவளுடன்  இயல்பாக இணைந்து கொண்டான் ஜெய்.

 

“நேத்து கிட்சன்ல நடந்துட்ட முறைதான் உன்னோட கோபத்துக்குக் காரணம்னா சாரி, சாரி அண்ட் சாரி… ஒரு தடவை என் கூட வெளிய வா… நான் நல்லவன், நாணயமானவன்னு நிரூபிக்க ஒரே ஒரு சந்தர்ப்பம் தா” என்றான் மிகப் பணிவாக.

 

அவனது அணுகுமுறையால் கவரப்பட்ட அஞ்சலி தன்னிச்சையாகத் தலையாட்டி சம்மதம் தெரிவித்தாள்.

 

“இன்னைக்கு காலைல உன்னை அவமானப்படுத்தினத்துக்குப் பரிகாரமா ஒரே ஒரு தடவை உன் கூட வெளியே வர்றேன்.

 

அதுக்கப்பறம் நீ என் கண்ணுலையே  படாம ஓடிப் போயிடணும்”

 

முத்துப் பல் தெரிய புன்னகைத்தவன் “நான் எப்போதும் பாசிட்டிவா திங்க் பண்றவன். காலைல பட்ட அவமானம் ஒரு சந்திப்புக்கான வாய்ப்பளித்த தந்திருக்கு. அதே போல அந்த  சந்திப்பை நம்ம உறவைத் தொடரக் கிடைச்ச வாய்ப்பாத்தான் பார்க்குறேன்”

 

“நீ என்ன வேணும்னாலும் பாரு. நான் கூட இது உன் தொல்லைக்கு புல் ஸ்டாப் பண்ண கிடைச்ச வாய்ப்பாத்தான் பாக்குறேன்”

 

“யாரு ஜெயிக்கிறாங்கன்னு பார்ப்போம். காலைல சூடா செஞ்ச பிரேக் பாஸ்டை  சாப்பிடவிடாம செஞ்சுட்ட… இப்ப எனக்கு ஒரு கேஸர்பாத்தும், காராபாத்தும் தயிரோட வேணும். தயிருக்கு தனியா பே  பண்ணிடுறேன்” என்றவாறு காந்தச் சிரிப்புடன் அவனது டேபிளுக்கு சென்றான்.

Advertisements

5 Comments »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: