Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள்,பார்த்திபன் கனவு கல்கியின் பார்த்திபன் கனவு – 21

கல்கியின் பார்த்திபன் கனவு – 21

அத்தியாயம் 21
பொன்னனின் சந்தேகம்

பொன்னி ஆற்றின் வெள்ளத்தின் மீது மற்றொரு நாள் பாலசூரியனின் பொற் கிரணங்கள் படிய, நதி பிரவாகமானது தங்கம் உருகி வெள்ளமாய்ப் பெருகுவது போலக் காட்சி தந்தது. அந்த பிரவாகத்தைக் குறுக்கே கிழித்துக் கொண்டும், வைரம், வைடூரியம் முதலிய நவரத்தினங்களை வாரித் தெளித்துக் கொண்டும், பொன்னனுடைய படகு தோணித் துறையிலிருந்து கிளம்பி வசந்த மாளிகையை நோக்கிச் செல்லலாயிற்று. படகில் ஜடா மகுடதாரியான சிவனடியார் வீற்றிருந்தார். கரையில் பொன்னனுடைய மனைவி நின்று, படகு போகும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நதியில் படகு போய்க் கொண்டிருந்தபோது, பொன்னனுக்கும் சிவனடியாருக்கும் பின்வரும் சம்பாஷணை நடந்தது. “பொன்னா! கடைசியில் இளவரசருடன் எவ்வளவு பேர்தான் ஓர்ந்தார்கள்?” என்று சிவனடியார் கேட்டார். “அந்த அவமானத்தை ஏன் கேட்கிறீர்கள், சுவாமி! ஆகா! அந்தக் கடைசி நேரத்தில் மகாராணிக்குச் செய்தி சொல்லும்படி மட்டும் இளவரசர் எனக்குக் கட்டளையிடாமற் போயிருந்தால்….” “என்ன செய்து விட்டிருப்பாய், பொன்னா? பல்லவ சைன்யத்தை நீ ஒருவனாகவே துவம்சம் செய்திருப்பாயோ?” “ஆமாம், ஆமாம் நீங்கள் என்னைப் பரிகாசம் செய்ய வேண்டியதுதான்.

 

நானும் கேட்டுக் கொள்ள வேண்டியது தான். இந்த உயிரை இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறனேல்லவா? ஆனால், சுவாமி! என்னத்துக்காக நான் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன் தெரியுமா? மகாராணியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு உடம்பைச் சுமக்கிறேன்…” “மகாராணியின் வார்த்தைக்காக மட்டுந்தானா பொன்னா? நன்றாக யோசித்துப் பார், வள்ளிக்காகக் கொஞ்சங்கூட இல்லையா? “வள்ளி அப்படிப்பட்டவள் இல்லை, சுவாமி! எப்படியாவது உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று நினைக்கிறவள் அவள் இல்லை. வீரபத்திர ஆச்சாரியின் பேத்தி அல்லவா வள்ளி? ஆகா! அந்தக் கிழவனின் வீரத்தைத்தான் என்னவென்று சொல்வேன்?” “வீரபத்திர ஆச்சாரி இதில் எப்படி வந்து சேர்ந்தான் பொன்னா?” “கிழவனார் சண்டை போடும் உத்தேசத்துடனேயே வரவில்லை என்ன நடக்கிறதென்று தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்தச் சமயத்தில் இளவரசர் அநாதைபோல் நிற்பதைப் பார்த்ததும் அவருக்கு ஆவேசம் வந்துவிட்டது. இளவரசருடைய கட்சியில் நின்று போரிடுவதற்கு ஆயிரம் பதினாயிரம் வீரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். உண்மையில் வந்து சேர்ந்தவர்கள் என்னைத் தவிர ஐந்தே பேர்தான். அவர்கள் கிராமங்களிலிருந்து வந்த குடியானவர்கள் திடீரென்று நாலாபுறத்திலிருந்தும் வீரகோஷத்துடன் வந்த பல்லவ வீரர்களைப் பார்த்ததும், அந்தக் குடியானவர்கள் கையிலிருந்த கத்திகளைக் கீழே போட்டுவிட்டுத் திகைத்துப் போய் நின்றார்கள்.

 

இதையெல்லாம் பார்த்தார் வீரபத்திர ஆச்சாரி. ஒரு பெரிய கர்ஜனை செய்து கொண்டு கண்மூடித் திறக்கும் நேரத்தில் இளவரசர் நின்ற இடத்துக்கு வந்துவிட்டார். கீழே கிடந்த கத்திகளில் ஒன்றை எடுத்துச் சுழற்றத் தொடங்கினார். ‘வீரவேல்! வெற்றி வேல்! விக்கிரம சோழ மகாராஜா வாழ்க!’ என்று அவர் போட்ட சத்தம் நெடுந்தூரத்திற்கு எதிரொலி செய்தது. அடுத்த கணத்தில் பல்லவ வீரர்கள் வந்து எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். ஆகா! அப்போது நடந்த ஆச்சரியத்தை நான் என்னவென்று சொல்வேன், சுவாமி? கிழவனாரின் கைகளில்தான் அவ்வளவு பலம் எப்படி வந்ததோ? தெரியவில்லை! கொல்லுப் பட்டறையில் சம்மட்டி அடித்த கையல்லவா? வாளை வீசிக் கொண்டு இடசாரி வலசாரியாகச் சுற்றிச் சுற்றி வந்தார். தொப்புத் தொப்பென்று பல்லவ வீரர்கள் மண்மேல் சாய்ந்தார்கள். ஏழெட்டு வீரர்களை யமலோகத்துக்கு அனுப்பி விட்டுக் கடைசியாக அவரும் விழுந்து விட்டார். இதையெல்லாம் தூரத்தில் நின்று தளபதி அச்சுதவர்மர் பார்த்துக் கொண்டிருந்தாராம். கிழவனாரின் வீரத்தைக் கண்டு அவர் பிரமித்துப் போய் விட்டாராம். அதனாலேதான் அந்தத் தீரக் கிழவருடைய உடலைச் சகல மரியாதைகளுடன் எடுத்துப் போய்த் தகனம் செய்யும்படியாகக் கட்டளையிட்டாராம்.”

 

“அதில் ஆச்சரியம் என்ன பொன்னா! வள்ளியின் பாட்டனுடைய வீர மரணத்தைக் கேட்டு உலக வாழ்க்கையை வெறுத்த எனக்குக்கூட உடம்பு சிலிர்க்கிறது. ஒரு தேசமானது எவ்வளவுதான் எல்லா விதங்களிலும் தாழ்வு அடைந்திருக்கட்டும்; இப்படிப்பட்ட ஒரு வீரபுருஷனுக்குப் பிறப்பளித்திருக்கும்போது, அந்தத் தேசத்துக்கு இன்னும் ஜீவசக்தி இருக்கிறது என்று சொல்வதில் தடை என்ன? சோழநாடு நிச்சயம் மேன்மையடையப் போகிறது என்று நம்பிக்கை எனக்கு இப்போது உண்டாகிறது” என்றார் சிவனடியார். சற்றுப் பொறுத்து, “அப்புறம் என்ன நடந்தது?” என்று கேட்டார். “அப்புறம் என்ன? இளவரசரும் நானும் கிழவருடைய ஆச்சரியமான பராக்கிரமச் செயலைப் பார்த்துக் கொண்டே திகைத்து நின்றுவிட்டோ ம். அவர் விழுந்ததும் நாங்கள் இருவரும் ஏக காலத்தில் ‘ஆகா’ என்று கதறிக் கொண்டு அவர் விழுந்த திசையை நோக்கி ஓடினோம். உடனே, இளவரசரை அநேக பல்லவ வீரர்கள் சூழ்ந்து கொண்டார்கள். நான் வெறி கொண்டவனைப் போல் என் கையிலிருந்த வாளை வீசிப் போரிட ஆரம்பித்தேன். அப்போது, “நிறுத்து பொன்னா!” என்று இளவரசரின் குரல் கேட்டது. குரல் கேட்ட பக்கம் பார்த்தேன். இளவரசரைச் சங்கிலியால் பிணித்திருந்தார்கள். அவர் ‘இனிமேல் சண்டையிடுவதில் பிரயோஜனமில்லை பொன்னா! எனக்காக நீ ஒரு காரியம் செய்ய வேண்டும். மகாராணியிடம் போய் நடந்ததைச் சொல்ல வேண்டும். மேற்கொண்டு என்ன நடந்தபோதிலும், என் தந்தையின் பெயருக்கு அவமானம் வரும்படியான காரியம் மட்டும் செய்யமாட்டேன் என்று நான் சபதம் செய்ததாய்த் தெரியப்படுத்த வேண்டும்” என்றார்.

 

எனக்குப் பிரமாதமான ஆத்திரம் வந்தது. ‘மகாராஜா! உங்களைப் பகைவர்களிடம் விட்டுவிட்டு நான் போகவா?’ என்று கத்திக் கொண்டு என் வாளை வீசினேன். பின்பிறமிருந்து என் மண்டையில் பலமான அடி விழுந்தது. உடனே நினைவு தவறிவிட்டது. அப்புறம் காராக்கிரகத்திலேதான் கண்ணை விழித்தேன்.” “ஓகோ! காராக்கிரகத்தில் வேறு இருந்தாயா? அப்புறம் எப்படி விடுதலை கிடைத்தது?” “மறுநாளே விடுதலை செய்துவிட்டார்கள். இளவரசரைத் தவிர மற்றவர் களையெல்லாம் மன்னித்து விட்டுவிடும்படி மாமல்ல சக்கரவர்த்தியிடமிருந்து கட்டளை வந்ததாம்” என்றான் பொன்னன். “சக்கரவர்த்தி எவ்வளவு நல்லவர் பார்த்தாயா பொன்னா? உங்கள் இளவரசர் எதற்காக இவ்வளவு பிடிவாதம் பிடிக்க வேண்டும்? அதனால் தானே அவரைச் சக்கரவர்த்தி தேசப்பிரஷ்டம் செய்ய நேர்ந்தது” என்றார் சிவனடியார். “ஆமாம்; நரசிம்ம சக்கரவர்த்தி ரொம்ப நல்லவர்தான்; பார்த்திப மகாராஜாவும், விக்கிரம இளவரசரும் பொல்லாதவர்கள்!” என்றான் பொன்னன். பிறகு, “நான் சக்கரவர்த்தியைப் பார்த்ததேயில்லை. பார்க்க வேண்டுமென்று ரொம்ப ஆசையாயிருக்கிறது. உறையூர்க்கு எப்போதாவது வருவாரா, சுவாமி?” என்றான். “ஆமாம்; சீக்கிரத்திலேயே வரப்போகிறார் என்று தான் பிரஸ்தாபம். ஏது பொன்னா! சக்கரவர்த்தியிடம் திடீரென்று உனக்கு அபார பக்தி உண்டாகிவிட்டது போல் தெரிகிறதே! சண்டையில் செத்துப் போகவில்லையென்று கவலைப்பட்டாயே! இப்போது பார்த்தாயா?

 

உயிரோடு இருந்ததனால் தானே உனக்குச் சக்கரவர்த்தியைப் பற்றிய உண்மை தெரிந்து அவரிடம் பக்தி உண்டாயிருக்கிறது!” “ஆமாம்; சக்கரவர்த்தியிடம் எனக்கு ரொம்ப பக்தி உண்டாகியிருக்கிறது. எனக்கு மட்டுமில்லை; இதோ என்னுடைய வேலுக்கும் பக்தி உண்டாகியிருக்கிறது!” என்று சொல்லிக் கொண்டே பொன்னன் படகில் அடியில் கிடந்த வேலை ஒரு கையால் எடுத்தான். “இந்த வேலுக்குச் சக்கரவர்த்தியிடம் சொல்ல முடியாத பக்தி; அவருடைய மார்பை எப்போது தழுவப் போகிறோம் என்று தவம் கிடக்கிறது” என்று சொல்லிப் பொன்னன் சிவனடியாரின் மார்புக்கு நேரே வேலை நீட்டினான். சிவனடியார் முகத்தில் அப்போது புன்சிரிப்புத் தவழ்ந்தது. “பொன்னா! நான்தான் சக்கரவர்த்தி என்று எண்ணிவிட்டாயா, என்ன?” என்றார். பொன்னன் வேலைக் கீழே போட்டான். “சுவாமி! சக்கரவர்த்தி எவ்வளவுதான் நல்லவராயிருக்கட்டும்; மகா வீரராயிருக்கட்டும்; தெய்வாம்சம் உடையவராகவே இருக்கட்டும் அவர் எனக்குப் பரம சத்துரு! ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் அவரை நான் நேருக்கு நேர் காண்பேன் அப்போது….” என்று பொன்னன் பல்லை நெற நெறவென்று கடித்தான். சிவனடியார் பேச்சை மாற்ற விரும்பியவராய்” ஏன் பொன்னா! அன்றைய தினம் மாரப்ப பூபதி உங்களுக்கு அருகில் வரவேயில்லையா?” என்று கேட்டார். “அந்தச் சண்டாளன் பேச்சை ஏன் எடுக்கிறீர்கள்? அவன் இளவரசரையும் தூண்டி விட்டுவிட்டு, அச்சுதவர்மரிடம் போய்ச் சகல விவரங்களையும் தெரிவித்து விட்டான்.

 

அப்படிப்பட்ட துரோகி அன்றைக்கு ஏன் கிட்ட வரப்போகிறான்? ஆனால் சுவாமி! அவனுடைய வஞ்சகப் பேச்சில் நாங்கள் எல்லாருமே ஏமாந்துவிட்டோ ம். வள்ளி ஒருத்தி மட்டும், “பூபதி பொல்லாத வஞ்சகன்; அவனை நம்பக் கூடாது” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சொன்னதுதான் கடைசியில் சரியாப் போச்சு” என்றான் பொன்னன். “வள்ளி ரொம்பவும் புத்திசாலி. பொன்னா! சந்தேகமேயில்லை, அவள் ஒரு பெரிய தளதிபதியின் மனைவியாகயிருக்கத் தகுந்தவள்…” “என்ன சொன்னீர்கள், சுவாமி!” “வள்ளி ஒரு பெரிய சேனாதிபதியின் மனைவியாயிருக்கத் தகுந்தவள் என்றேன்.” “நீங்கள் சொன்ன இதே வார்த்தையை இதற்கு முன்னாலும் ஒருவன் சொன்னதுண்டு.” “யார் அது?” “மாரப்ப பூபதிதான்; அவன் சோழ சேனாதிபதியாயிருந்த காலத்தில் அப்படிச் சொன்னான்.” “ஓகோ!” “எனக்கு ஒவ்வொரு சமயம் என்ன தோன்றுகிறது தெரியுமா? தாங்கள் கோபித்துக் கொள்ளாமலிருந்தால் சொல்லுகிறேன்.” “தாராளமாய்ச் சொல்லு; பொன்னா! நான் சந்நியாசி; ஐம்புலன்களையும் அடக்கிக் காமக் குரோதங்களை வென்றவன்.” “நீங்கள் கூட மாரப்ப பூபதியின் ஆளோ, அவனுடைய தூண்டுதலினால் தான் இப்படி வேஷம் போட்டுக் கொண்டு வஞ்சகம் செய்கிறீர்களோ – என்று தோன்றுகிறது.” சிவனடியார் கலகலவென்று சிரித்துவிட்டு, “இதைப் பற்றி வள்ளியின் அபிப்ராயம் என்ன என்று அவளை எப்போதாவது கேட்டாயா?” என்றார். “வள்ளிக்கு உங்களிடம் ஒரே பக்தி. ‘நயவஞ்சகனை நம்பி மோசம் போவாய், உத்தம புருஷரைச் சந்தேகிப்பாய்!’ என்று என்னை ஏசுகிறாள். மாரப்ப பூபதி இப்படிப்பட்ட பாதகன் என்று தெரிந்த பிறகு அவளுடைய கை ஓங்கிவிட்டது. என்னைப் பரிகாசம் பண்ணிக் கொண்டேயிருக்கிறாள்.”

 

“நான்தான் சொன்னேனே பொன்னா, வள்ளி புத்திசாலி என்று அவள் புத்திமதியை எப்போதும் கேளு. வள்ளி தளபதியின் மனைவியாயிருக்கத் தகுந்தவள் என்று நான் சொன்னது மாரப்ப பூபதி சொன்ன மாதிரி அல்ல; நீயும் தளபதியாகத் தகுந்தவன்தான்!” “ஆமாம் யார் கண்டது? விக்கிரம மகாராஜா சோழ நாட்டின் சிம்மாசனம் ஏறும்போது, ஒரு வேளை நான் தளபதியானாலும் ஆவேன்.” “இரண்டும் நடக்கக் கூடியதுதான்.” “ஆகா! இந்தப் பெரிய பாரத பூமியில் எங்கள் இளவரசருக்கு இருக்க இடமில்லையென்று கப்பலில் ஏற்றி அனுப்பிவிட்டாரே, சக்கரவர்த்தி! அவருடைய நெஞ்சு எப்படிப்பட்ட கல் நெஞ்சு! அதைக் காட்டிலும் ஒரே அடியாக உயிரை வாங்கியிருந்தாலும் பாதகமில்லை….” “நீ சொல்வது தவறு பொன்னா! உயிர் உள்ளவரையில் எப்படியும் நம்பிக்கைக்கும் இடமுண்டு. ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் நம்முடைய மனோரதங்கள் நிறைவேறும். நீ வேணுமானால் மகாராணியைக் கேட்டுப் பார். மகன் இந்த மட்டும் உயிரோடு இருக்கிறானே என்று மகாராணிக்குச் சந்தோஷமாய்த்தானிருக்கும்….அதோ மகாராணி போலிருக்கிறதே!” என்று சிவனடியார் வியப்புடன் சொன்னார். அப்போது படகு வசந்த மாளிகைத் தீவின் கரைக்குச் சமீபமாக வந்து கொண்டிருந்தது. கரையில் அருள்மொழித் தேவியும் ஒரு தாதியும் வந்து தோணித் துறையின் அருகில் நின்றார்கள். அருள்மொழித் தேவி படகிலிருந்த சிவனடியாரை நோக்கிப் பயபக்தியுடன் கை கூப்பிக் கொண்டு நிற்பதைப் பொன்னன் பார்த்தான். உடனே சிவனடியாரை நோக்கி, “சுவாமி! ஏதோ நான் தெரியாத்தனமாக உளறிவிட்டேன்; அதையெல்லாம் மன்னிக்க வேண்டும்” என்று உண்மையான பச்சாதாபத்துடனும் பக்தியுடனும் கூறினான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 08வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 08

அதைக் கேட்ட மகாராஜன் வெகுநேரம் வரையில் ஆழ்ந்து யோசனை செய்தபின் பேசத்தொடங்கி, “இதற்குமுன் இருந்த சிப்பந்திகள் தமது வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை என்று நான் கவர்னர் ஜெனரலுக்கு எழுதி, மகா மேதாவியும் சட்ட நிபுணருமான இந்த மனிதரை வரவழைத்து திவானாக நியமித்து,