Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள்,பார்த்திபன் கனவு கல்கியின் பார்த்திபன் கனவு – 20

கல்கியின் பார்த்திபன் கனவு – 20

அத்தியாயம் 20
துறைமுகத்தில்

அன்றிரவு குந்தவி சரியாகத் தூங்கவில்லை. சோழ ராஜகுமாரனுடைய சோகமும் கம்பீரமும் பொருந்திய முகம் அவள் மனக்கண்ணின் முன்னால் இடைவிடாமல் தோன்றி அவளுக்குத் தூக்கம் வராமல் செய்தது. நள்ளிரவுக்குப் பிறகு சற்றுக் கண்ணயர்ந்த போது, என்னவெல்லாமோ பயங்கரமான கனவுகள் தோன்றியதால் அவள் திடுக்கிட்டு கண் விழிக்க வேண்டியதாயிற்று. சோழ ராஜகுமாரனைக் கழுத்து வரையில் பூமியில் புதைந்திருக்கிறது. அவனை நோக்கி ஒரு மத யானை அதிவேகமாக ஓடி வருகிறது. அடுத்த நிமிஷம் ஐயோ! யானையின் கால்கள்- தூணையொத்த கால்கள், அந்தச் சுகுமாரனுடைய தலையை இடறிவிடப்போகின்றன! குந்தவி பதைபதைப்புடன் ஓடி வந்து யானை வரும் வழியில் நிற்கிறாள். யானை தன் துதிக்கையினால் அவளை லாவகமாகத் தூக்கித் தன் முதுகின்மேல் வைத்துக் கொண்டு மேலும் ஓடுகிறது. குந்தவி பயங்கரத்துடன் எதிரே பூமியில் புதைந்து நிற்கும் ராஜகுமாரனுடைய முகத்தைப் பார்க்கிறாள்! அந்தச் சமயத்திலும் அந்த முகத்தில் அலட்சியமும் அவமதிப்பும் கலந்து புன்னகை குடிகொண்டிருப்பதைக் காண்கிறாள். கண்டதெல்லாம் கனவென்று தெரிகிறது. ஆனாலும் அவள் உடம்பு வெகுநேரம் நடுங்கிக் கொண்டிருக்கிறது.

 

சற்று நேரத்துக்கெல்லாம் மறுபடியும் கண்ணயர்ந்து வருகிறது. அரைத் தூக்கத்தில் மீண்டும் பயங்கரமான கனவு. கழு மரங்கள் வரிசையாக நட்டிருக்கின்றன. சோழ ராஜகுமாரனைக் கழுவேற்றுவதற்காகக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். குந்தவி அவ்விடத்துக்கு ஓடோ டியும் வருகிறாள். துர்க்கை அம்மனை மனத்தில் தியானித்துக் கொண்டு அந்தக் கழு மரங்கள் பற்றி எரிய வேண்டுமென்று பிராத்திக்கிறாள். அவையெல்லாம் தீப்பற்றி எரிகின்றன. குந்தவி அளவில்லாத மகிழ்ச்சியுடன் ராஜகுமாரன் நின்ற இடத்தை நோக்குகிறாள். அந்தோ! அவனைச் சுற்றிலும் பன்னிரண்டு பல்லவ வீரர்கள் நின்று பன்னிரண்டு ஈட்டிகளை அவன் மீது செலுத்தச் சித்தமாயிருக்கிறார்கள். அடுத்த கணத்தில் ஈட்டிகள் அந்த அரசிளங் குமாரனுடைய மிருதுவான தேகத்தில் பாயப் போகின்றன. குந்தவி “ஐயோ!” என்று கதறிக் கொண்டு கீழே விழுகிறாள். கண் விழித்துப் பார்த்தால், மஞ்சத்திலிருந்து கீழே விழுந்திருப்பதாகத் தெரிகிறது. இதன் பிறகு குந்தவி தூங்கு வதற்குப் பிரயத்தனம் செய்யவில்லை. யானையின் காலில் வைத்து இடறுதல், கழுவேற்றுதல் முதலிய கொடூரமான தண்டனை களெல்லாம் தன் தகப்பனாரின் தர்ம ராஜ்யத்தில் இல்லையென்பதை ஞாபகப்படுத்திக் கொண்டு தைரியமடைந்தாள். ஒருவாறு இரவு கழிந்து பொழுது விடிந்தது. சக்கரவர்த்தி சபைக்குப் புறப்படும் நேரமும் வந்தது. அவரிடம் மறுபடியும் சோழ ராஜகுமாரனைப் பற்றிப் பேச வேண்டும் என்று குந்தவி துடித்தாள்.

 

ஆனால் சக்கரவர்த்தியைப் பரிவாரங்கள் சூழ்ந்திருந்தபடியால் அது சாத்தியமில்லை. அவர் விடை பெற்றுக் கொண்டு கொஞ்சதூரம் சென்றுவிட்டார். ஏதாவது சொல்லாவிட்டால் குந்தவிக்கு நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது. “அப்பா! நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்” என்றாள். நரசிம்மவர்மர் அவளைத் திரும்பிப் பார்த்து, “எதைச் சொல்லுகிறாய், குந்தவி! ஓகோ! சோழ ராஜகுமாரனைக் கடுமையாய்த் தண்டிக்க வேண்டுமென்று சொன்னாயே, அதுதானே! ஞாபகம் இருக்கிறது!” என்று சொல்லிவிட்டுப் பின்னர் திரும்பிப் பார்க்காமலேயே சென்று விட்டார். “குந்தவிக்குச் சொல்ல முடியாத ஆத்திரமும் துக்கமும் பொங்கிக் கொண்டு வந்தன. விரைந்து பள்ளியறைக்குச் சென்று மஞ்சத்தில் குப்புறப் படுத்துக் கொண்டு கொஞ்ச நேரம் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். தன்னாலே தான் ராஜ குமாரன் கடுந்தண்டனை அடையப் போகிறான் என்ற எண்ணம் அவள் மனத்தில் வேரூன்றி விட்டது. இது அவனுக்குத் தெரியும் போது எவ்வளவு தூரம் தன்னை வெறுப்பானென்ற எண்ணம் அவளைப் பெருவேதனைக்கு உள்ளாக்கியது. தான் ஏதாவது செய்துதான் ஆகவேண்டுமென்று அவள் பதைபதைத்தாள். சற்று நேரத்துக்கெல்லாம் அரண்மனை அதிகாரியை அழைத்து வரச் செய்து, “உதயவர்மரே! இன்று சக்கரவர்த்தியின் சபையில் சோழ ராஜகுமாரனுடைய விசாரணை முடிந்ததும் அதன் விவரத்தை உடனே எனக்கு வந்து தெரியப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

 

ஒரு கண நேரங்கூட இதில் தாமதம் கூடாது” என்றாள். அரண்மனை அதிகாரி “அப்படியே ஆகட் டும்” என்று சொல்லிச் சபைக்கு ஆளையும் அனுப்பி வைத்தார். குந்தவி அன்று வழக்கமான காரியங்கள் ஒன்றும் செய்யவில்லை. நந்தவனம் சென்று மலர் எடுக்கவில்லை. ஆலயங்களுக்கும் போகவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு இராஜசபையிலிருந்து எப்போது ஆள்வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந் தாள். கடைசியாக அந்த ஆளும் வந்து சேர்ந்தான். விசாரணையையும் முடிவையும் பற்றி விவரமாகக் கூறினான். சக்கரவர்த்தி ரொம்பவும் கருணை காட்டினாராம் ‘இப்போதாவது பல்லவ சாம்ராஜ்யத்துக்குப் பணிந்து கப்பம் செலுத்துவதாக ஒப்புக் கொண்டாயானால் உன்னுடைய குற்றத்தை மன்னித்து சோழ ராஜ்யத்துக்கும் முடிசூட்டி வைக்கிறேன்’ என்றாராம். அதைச் சோழ ராஜகுமாரன் ஒரே பிடிவாதமாக மறுத்து விட்டானாம். அதோடு நில்லாமல், சக்கரவர்த்தியைத் தன்னுடன் வாட்போர் செய்யும்படி அழைத்தானாம்! அதன்மேல் சக்கரவர்த்தி தீர்ப்பு கூறினாராம்! அவனுடைய இளம்பிராயத்தை முன்னிட்டு அவனுக்கு மரண தண்டனை விதிக்காமல் தேசப் பிரஷ்டதண்டனை விதிப்பதாகவும் மறுபடியும் சோழ நாட்டிற்குள் அவன் பிரவேசித்தால் சிரசாக்கினைக்குள்ளாக வேண்டு மென்றும் சொல்லி உடனே அவனைக் கப்பலேற்றித் தீவாந்திரத்துக்கு அனுப்பிவிடும்படி கட்டளையிட்டாராம்.

 

அதன்படி அவனை உடனே மாமல்லபுரம் துறைமுகத்துக்குக் கொண்டுபோய் விட்டார்கள் என்பதை யும் இராஜசபையிலிருந்து வந்த ஆள் தெரிவித்தான். விக்கிரமனுக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்ற செய்தி குந்தவிக்குச் சிறிது ஆறுதல் அளித்தது. ஆனால் அவனைக் கப்பல் ஏற்றி அனுப்பப் போகிறார்கள்; இனிமேல் என்றென்றைக்கும் அவனைத் தான் பார்க்க முடியாமற் போகலாம் என்ற எண்ணம் மிகுந்த துன்பத்தை உண்டாக்கியது. அந்த அரசிளங்குமரன் கப்பலேறிப் போவதற்கு முன் ஒரு தடவை அவனைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆவல் பொங்கி எழுந்தது. அவளுடைய உடம்பையும், மனத்தையும், ஆத்மாவையு மே இந்த ஆவல் கவர்ந்து கொண்டது. அந்த இராஜகுமாரனை உடனே பார்க்க வேண்டுமென்று அவளுடைய தேகத்தின் ஒவ்வொரு அணுவும் துடித்தது. அவனைத் தான் நேரில் பார்த்துப் பேசினால் அவனுடைய மனத் தை ஒரு வேளை மாற்றித் தன் தந்தையின் கீழ் சிற்றரசனாயிருக்கச் சம்மதிக்கும்படி செய்யலாம் என்ற ஆசை உள்ளத்தின் ஒரு மூலையில் கிடந்தது. குந்தவி அக்கணமே தன் தந்தையைப் பார்க்க விரும்பினாள். விக்கிரமனுடைய விசாரணை முடிந்ததும் சக்கரவர்த்தி குதிரை மீதேறி எங்கேயோ போய்விட்டார் என்றும், போன இடந்தெரியாது என்றும் தெரிய வந்தபோது அவளுக்குப் பெரிதும் ஏமாற்றமுண்டாயிற்று.

 

சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு அரண்மனை அதிகாரியை அழைத்து, “உதயவர்மரே, மல்லைத் துறைமுகத்துக்கு நான் உடனே போக வேண்டும்! என் தாயாரின் நவரத்தின மாலையைக் காணவில்லை. மாமல்லபுரத்து அரண்மனையில் போட்டுவிட்டு வந்து விட்டேன் போலிருக்கிறது. நானே போய்தான் தேடி எடுக்க வேண்டும்” என்றாள். உதயவர்மர் சற்றுத் தயங்கி “சக்கரவர்த்தி வந்தவுடன் போகலாமே!” என்றதும் குந்தவிக்கு வந்த கடுங் கோபத்தைக் கண்டு அவர் மிரண்டு விட்டார். குந்தவி தேவியின் கட்டளைக்கு மறுமொழி சொல்லும் வழக்கம் இதுவரை இல்லையாதலால், மாமல்லபுரத்துக்கு அவ்வளவு அவசரமாகவும் தனியாகவும் அவள் போகும் யோசனை ஆச்சரியம் அளித்தாலும் அரண் மனை அதிகாரி உடனே அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். சற்று நேரத்துக்கெல்லாம் குந்தவி பரிவாரங்களுடன் பல்லக்கில் மாமல்லபுரத்துக்குப் பிரயாணமானாள். இதுவரையும் இல்லாத வழக்கமாக விரைந்து செல்லுமாறு ஆக்ஞாபித்தாள். கடைசியாக மாமல்லபுரத்தை அடைந்ததும், விக்கிரமனை ஏற்றிக் கொண்ட கப்பலானது துறைமுகத்திலிருந்து அப்போதுதான் பாய் விரித்துக் கிளம்பிக் கொண்டிருந்தது என்று தெரிய வந்தது. குந்தவியின் பல்லக்கு கடற் கரையை அடைந்த போது அவளுடைய கண் முன்னால் தோன்றிய காட்சி இருதயத்தைப் பிளப்பதாயிருந்தது. சிங்கக் கொடி பறந்த பாய் விரித்த கப்பல் கிளம்பிக் கடலோரமாகப் போய்க் கொண்டிருந்தது. அதில் நேற்று அவள் வீதியில் பார்த்த இராஜகுமாரன் கயிற்றினால் பிணிப்புண்ட கைகளைக் கூப்பிய வண்ணம் நின்று கொண்டிருந்தான்.

 

அச்சமயம் அவனுடைய பார்வை கரைமீதுதான் இருந்தது. அவ்வளவு பக்தி விசுவாசத்துடன் யாரைப் பார்க்கிறான் என்று குந்தவி தெரிந்து கொள்ள விரும்பி, கரையில் அவனுடைய பார்வை சென்ற திசையை நோக்கினாள். ஜடாமுடி தரித்த கம்பீரத் தோற்றமுடைய சிவனடியார் ஒருவர் அங்கே நின்று கொண்டிருந்தார். அவர் தமது வலது கரத்தைத் தூக்கி விக்கிரமனை ஆசீர்வதிக்கும் நிலையில் காணப்பட்டார். மறுபடியும் குந்தவி விக்கிரமனை நோக்கினாள். ஒரு கணநேரம் அவனுடைய பார்வை இவள் பக்கம் திரும்புவது போலிருந்தது. “இது நிஜந்தானா? அல்லது பிரமையா?” என்று நிச்சயமாய்த் தெரிவதற்குள்ளே, விக்கிரமன் முகத்தைத் திருப்பிக் கொண்டு மீண்டும் சிவனடியார் இருந்த திசையை நோக்கினான். குந்தவிக்கு அப்போது சட்டென்று ஒரு ஞாபகம் வந்தது. சோழ ராஜகுமாரனுக்கு துர்ப்போதனை செய்து அவன் புத்தியைக் கெடுப்பது ஒரு சிவனடியார் என்பதாக நேற்று அப்பா சொல்லவில்லையா? அந்த பொல்லாத சாமியார் இவராகத்தான் இருக்க வேண்டும்! சந்தேகமே இல்லை! அந்தச் சாமியைக் கையும் மெய்யுமாய்ப் பிடித்து விட வேண்டுமென்னும் எண்ணத்துடன் குந்தவி பல்லக்கை அவரிருந்த திசையை நோக்கி விரைந்து போகும்படி கட்டளையிட்டாள். ஆனால் அடுத்த கணத்திலேயே சிவனடியார் துறைமுகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்களுக்குப் பின்னால் மறைந்து மாயமாய்ப் போய்விட்டார்! குந்தவி எவ்வளவோ தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்குள்ளாக விக்கிரமன் இருந்த கப்பலும் கடலில் வெகுதூரம் போய்விட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ஆப்பிள் பசி – 19சாவியின் ஆப்பிள் பசி – 19

 பாப்பா அவனை உன்னிப்புடன் பார்த்த போது உலகெங்கும் கண்கள் தோன்றி சாமண்ணாவைப் பார்ப்பது போல் இருந்தது. மனசுக்குள் ஓர் அதிர்ச்சி ஓடியது. கண்கள் இமைக்கவில்லை. சைக்கிளை விட்டு இறங்கினான். “என்ன?” என்றான், என்ன பேசுவதென்று தெரியாமல். பாப்பா தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

கல்கியின் பார்த்திபன் கனவு – 68கல்கியின் பார்த்திபன் கனவு – 68

அத்தியாயம் 68 பைரவரும் பூபதியும் பொன்னன் சிறிதும் சத்தம் செய்யாமல் மரங்களின் இருண்ட நிழலிலேயே நடந்து சாலையருகில் சென்று ஒரு மரத்தின் மறைவில் நின்றான். “சித்திர குப்தா, எங்கே மகாப் பிரபு?” என்று மாரப்பன் கேட்டது பொன்னன் காதிலே விழுந்தது. பிறகு,

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 47கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 47

அத்தியாயம் 47 – பூமி சிவந்தது “முத்தையா! நல்ல இடம் பார்த்துக் கொண்டு வந்து உட்கார்ந்திருக்கிறாய்! நீ எவ்வளவோ சரியாக அடையாளம் சொல்லியிருந்தும் கண்டு பிடிப்பதற்குத் திண்டாடிப் போய் விட்டேன். எவ்வளவு அடர்த்தியான காடு! இதில் புகுந்து வருவதற்கு ரொம்பக் கஷ்டப்பட்டுப்