Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 27

பாகம் – 27

காலை நேர வெயில் சுள்ளென்று அடிக்க நேரம் பத்து மணியினை நெருங்கி கொண்டிருந்தது. மும்பை வாழ் மக்களின் பயணத்தின் அவசரங்கள் அந்த சாலை முழுவதும் நிறைந்து வழிய, அதற்கு இடையே ஆரவ்வின் கார் சாலையில் ஊர்ந்து சென்றது. அதிகாலையிலேயே வைதேகிக்கு திதி காரியம் முடிந்து விட, இப்போது அவர்கள் இருவரும் ஸ்டேடியத்திற்கு செல்கின்றனர். இன்று மதியம் மூன்று மணிக்கு இன்டியா ஶ்ரீலங்கா ஒன்டே மேச் அங்கே ஆரம்பிக்க இருக்கிறது.

 

வெளிப்பார்வைக்கு உள்ளிருப்பது எதுவும் தெரியாத கறுப்பு நிற கண்ணாடிகளால் ஆன அந்த காரை டிரைவர் கவனமாக ஓட்டி கொண்டு வர, இருவரும் பின் சீட்டில் அமர்ந்து இருந்தனர். இன்று காலையில் இருந்தே ஆரவ் தன் தாயின் நினைவுகள் தந்த தாக்கத்தினால் அதீத அமைதியில் மூழ்கி இருந்தான். இப்போதும் கூட அவன் சீட்டில் நன்றாக சாய்ந்து படுத்து கொண்டு வெறித்த பார்வையோடே இன்னமும் இருக்க, பார்பியும் அவனை தொந்தரவு செய்யாமல் மௌனமாகவே வந்தாள். அவனும் தன்னை நிதானமாக்க முயன்று கொண்டுதான் இருந்தான், ஆனால் பாவம் அவனால் முடியவில்லை.

 

பதினோரு மணியளவில் கார் ஸ்டேடியத்தை நெருங்கியதும், ஆரவ் மனதை கிரிக்கெட் உணர்வு ஆக்ரமிக்க, மெல்ல மெல்ல அவன் முக பாவனைகள் மாறி கொண்டே வந்தது. பழைய நினைவுகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டு இன்றைய ஆட்டத்திற்கான தனது அணியின் பலம் பலவீனம் என்று மனம் அது போக்கில் யோசிக்க தொடங்கி விட்டது. கார் ஸ்டேடியத்தினுள் நுழைந்ததும் தன்னைத்தானே கட்டு படுத்தி கொண்டு பழைய ஆரவ்வாக சுறுசுறுப்பாக மாறி சுற்று புறத்தில் கவனம் வைக்க தொடங்கினான்.

 

“பார்பி ஸ்கார்ப்ப எடுத்து முகத்தில கட்டிக்கோ, என்ன கேக்காம எடுக்காத சரியா…”

 

“ம்..” என்றபடி வேகமாக ஸ்கார்ப்பினால் தன் முகத்தை மூடி கட்டி கொண்டாள். காரிலிருந்து இருவரும் இறங்கியதும் அங்கிருந்த காவலர்கள் குழுவில் இருந்து சில தலைமை காவலர்கள் ஓடி வர, அதில் ஒருவர், “சார் ப்ளேயர்ஸ் எல்லாம் டிரஸ்ஸிங் ரூம்ல இருக்காங்க. இனிமேதான் வார்ம் அப் பண்ண போறாங்க” என்றார்.

 

“ஓகே” என்ற பதிலுடன் அவளையும் அழைத்து கொண்டு உள்ளே சென்றான். அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்து சுமார் இருபது காவலர்கள் லிப்ட் வரை உடன் வந்தனர். பார்பி இருபது பேருக்கு நடுவில் நடப்பதை அசௌகரியமாக உணர, ஆரவ் ரொம்ப சாதாரணமாக சென்று கொண்டிருந்தான். லிப்ட் வந்ததும் அத்தோடு அவர்கள் நின்றுவிட முதல் தளத்திற்கு ஆரவ்வும் பார்பியும் மட்டும் சென்றனர்.

 

இந்த இடைப்பட்ட நிமிடங்களுக்குள் ஆரவ் அவள் கண்களை படித்துவிட்டு, “என்னடா ஏன் ஒரு மாதிரி இருக்க? ஏதாவது கேக்கனும்னா கேளு…”

 

“ம்.. வெளியில எதுக்கு இத்தன போலீஸ் நிக்குறாங்க? குறைஞ்சது நூறு நூத்தம்பது பேரு இருப்பாங்க போல.”

 

“எல்லாம் எங்க பாதுகாப்புக்காக தான்.”

 

“உங்க பாதுகாப்புக்கு இத்தன போலீஸா?”

 

“ஹா.. ஹா.. இதுக்கே பயந்துட்டா எப்டி? கிரவுண்ட சுத்தி குறைஞ்சது ஆயிரம் போலீஸாச்சும் இருப்பாங்க. மேச் ஆரம்பிச்சதும் இன்னும் ஜாஸ்தி ஆகும். ஏன்னு ஈவ்னிங்  நாம மேட்ச் பாக்க வரும் போது உனக்கே புரியும்.”

 

‘என்ன ஆயிரம் பேரா….’ அவளுக்கு லேசாக கை கால் உதற தொடங்கியது. போலீஸ் கமிஷனர் அன்று ஹாஸ்பிடலுக்கு அரெஸ்ட் செய்ய வந்தது, ஆரவ் போலீஸெல்லாம் மனிஷ்க்கு ஆதரவாக இருப்பதாக சொன்னது எல்லாம் சேர்ந்து அவளுக்கு போலீஸின் மேல் பயத்தை உண்டு பண்ணி இருந்தது.

 

இதற்குள் அந்த லிப்ட் பர்ஸட் ப்ளோர்க்கு வந்து விட்டது. லிப்ட்டின் வாசலிலேயே யதேச்சையாக ரிஷி போன் பேசிய படி நின்றிருக்க, அவன் ஆரவ்வை கண்டதும் போனை கட் செய்துவிட்டு ஓடி வந்து “டேய்… வாடா மிஸ்டர் பிளாஸ்டர்… இங்க வர்றனு சொல்லவே இல்ல” என்று ஆரவ்வை கட்டி தழுவி கொண்டான்.

 

“என்ன கேப்டன்ஜி, வார்ம் அப் பண்ணாம இங்க சுத்திட்டு இருக்கீங்க?”

 

“என்ன நக்கலா? கேப்டன்ற…. ஈசி மேச்னு எவனும் வார்ம் அப் பண்ண வர மாட்டிக்கிறான். எப்டியும் கப் நமக்குத்தான், உனக்கு தெரியாதாடா?”

 

ரிஷி பார்பியை சுட்டி காட்டி, “இந்த பொண்ணு…” என்று ஆரம்பிக்க,

 

ஆரவ் வெட்க சிரிப்புடன், “ம்… பார்பிதான்” என்றதும், ஒரு பார்மாலிட்டிக்கு இருவரும் ஹாய் சொல்லிக் கொண்டனர்.

 

ரிஷி ஆரவ்வின் சட்டையை பிடித்து இழுத்து ரகசியமாக, “ஏன்டா எங்களுக்கெல்லாம் முகத்த காட்ட கூடாதுன்னு சொல்லி, முகமூடி போட்டு கூட்டிட்டு வந்திருக்கியா?” என்றான்.

 

“டேய் சீ… இது வேற பிரச்சனடா, அதபத்தி டீடெயில்லா அப்புறமா பேசுவோம். உங்களுக்கு எல்லாம் இன்ட்ரோ குடுக்கத்தான அவள இவ்ளோ தூரம் அதுவும் இந்த நேரத்துல கூட்டிட்டு வந்திருக்கேன். ஏற்கனவே போலீஸ பாத்து பயந்திருக்கா, நீ வேற அவள கலாய்க்காத” என சொல்லிக்கொண்டே ஸ்கார்ப்பை அவள் பின்னால் சென்று கழட்டி விட்டான். அவள் இன்னும் போலீஸ் பயத்திலிருந்து மீளாமலே இருக்க, ஆரவ் அவள் தோள்களை பற்றி தன்னோடு இறுக்கி கொண்டதை அவள் இதுவரை உணரவில்லை. இருவரும் அன்யோன்யமாய் இருப்பதாய் நினைத்து ரிஷி நண்பனுக்காக அகமகிழ்ந்து போனான்.

 

ரிஷி போட்டோவில் தான் பார்த்ததை விட அவள் நேரில் இன்னும் அழகாய் தெரிய வாயை பிழந்து, “பார்பி நீ நிஜம்மாவே ரொம்ப அழகா இருக்க…” என்று ஆரவ் பக்கம் திரும்ப, ஆரவ்வோ அவளின் பயந்த விழி அழகில் தன்னை தொலைத்து நின்றிருந்தான்.

 

ஆரவ் முதுகில் சுளீரென ஒன்று விழ, அதை அவனுக்கு கொடுத்த ரிஷியோ, “நீ ஸ்கார்ப்ப மூடியே இரும்மா, அதான் உனக்கு நல்லது. ஆரவ் நீ வந்ததும் உன்னை குரு பாக்கனும்னு சொல்லி இருந்தாருடா, இப்ப டிரஸ்ஸிங் ரூம்லதான் இருக்காரு வர்றியா…”

 

ஆரவ் வார்த்தைகளில் வேகம் தெறிக்க, “பார்பி நீ இங்கயே இரு, நான் போயிட்டு வந்திடுறேன்”

 

“எனக்கு பயம்மா இருக்கு ஆரவ், நானும் உங்க கூடவே வர்றேனே..”

 

ரிஷி, “அது மென்ஸ் டிரஸ்ஸிங் ரூம்மா. உள்ள பசங்க எல்லாம் ப்ரீயா சுத்திட்டு இருக்காங்க, உன்ன எப்டி உள்ள கூட்டிட்டு போகமுடியும்?”

 

அவளோ பயம் தெளியாமலே இருக்க, ஆரவ், “டோன்ட் ஒர்ரி இங்க நம்ம பசங்கள தவிர வேற யாரும் வர மாட்டாங்க, நான் போயிட்டு சீக்கிரமா வந்திடுறேன்” என முயன்றளவு சமாதான படுத்திவிட்டு நகர்ந்தான்.

 

அவளை விட்டு தள்ளி சிறிது தூரம் சென்றதும், ரிஷி ஆரவ் வயிற்றில் குத்தி, “இவ என்ன பொண்ணா பொம்மையாடா?”

 

“டேய்….”

 

“இல்ல நீ சொன்னாதான் நிக்குறா நடக்குறா… பேரு வேற பார்பின்னு இருக்கா, அதான் டவுட்டா இருக்கு…” என்றான்.

 

இதற்கு ஆரவ் என்ன பதில் சொல்வானென்று காத்திருக்க, ஆரவ்விடமிருந்து வெக்கத்தை எதிர் பாக்காத ரிஷியோ, “என்னடா வெக்க படுற? நீ நெஜமாவே ஆரவ்தானா? இல்ல சினிமால வர்ற மாதிரி இடம் மாறி வந்த டபுள் ஆக்ட் ஹீரோவா?”

 

“சும்மா இருடா. பசங்க யாராவது கேட்ர போறாங்க…” என்று அவன் வாயை தன் கையால் மூடி அழுத்தி கொண்டான். இதற்குள் டிரஸ்ஸிங் ரூமும் வந்திருந்தது.

 

* இனிமேல் நம்ம பார்பி இந்த டீம் கூட தான இருக்கனும். ஸோ கதையில் இனி வரப்போகும் முக்கிய கதா பாத்திரங்களுக்கான ஒரு சின்ன இன்ட்ரோ,

 

குரு: அணியின் சீனியர் ப்ளேயர். இயற் பெயர் “தேவ்” வயது முப்பத்தைந்து. இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன். முன்னாள் கிரிக்கெட் ரசிகர்களிடமும் இன்றைய இளைஞர்கள் மத்தியிலும் மிகப்பெரிய நற்பெயர் உள்ள ஒரு ப்ளேயர். அணியின் தலைமை பொறுப்பை தனக்கு தகுதி இருந்தும், விரும்பி ஆரவ்விடம் ஒப்படைத்தார். ‘யங்ஸ்டர்ஸ்க்கு வாய்ப்பு குடுத்து பாக்கனும்’ என்ற கொள்கையில் சற்றும் பின்வாங்காத மனிதர். அணிக்கும் மற்ற ப்ளேயர்ஸ்க்கும், தேவை என்று தனக்கு பட்டால் ஒரே ஒருமுறை அட்வைஸ் அளித்துவிட்டு நகர்ந்து விடும் விசித்திரமான குணம் அவருடையது. அதை அவன் கேட்டானா என பார்ப்பதுமில்லை, மீண்டும் சொல்ல முயற்சிப்பதுமில்லை. இன்னும் சில நாட்களில் ஓய்வு அறிவிக்க இருக்கும் அவர் மீது அணியினர் அனைவருக்கும் அளவு கடந்த மரியாதை உண்டு. நேற்றைய அனுபவங்களை இன்றயை குறும்பான தலைமுறையினருக்கு ஒரு புள்ளியில் சுட்டி காட்டி அணியினரை அன்பினால் ஒருங்கே கட்டி போடும் தன்மை கொண்ட அவரை ஒப்பிட வேண்டுமெனில் மகாபாரத பீஷ்மரை சொல்லலாம்.

 

ரிஷி: ஏற்கனவே ரிஷியை பற்றி ஓரளவு நமக்கு தெரியும். ரிஷி ஐதராபாத்தில் செல்வ செழிப்பான குடும்பத்தில் இரண்டாவது மகனாக பிறந்து வளர்ந்தவன். சிறு வயதில் இருந்தே பணத்தினை அதிகம் புழங்கியதனால் அவனுக்கு அதன் மேல் நாட்டம் குறைந்து நட்பின் மேல் ஆசை அதிகம் கொண்டவன். அனைவரிடமும் பாரபட்சமின்றி நட்பு பாராட்டும் குணம் எதிர் அணியினருக்கும் அவன்பால் நன்மதிப்பை வாங்கி தந்து விடும். ஆரவ்வின் பழக்க வழக்கங்களை ரிஷி பழகிய சில நாட்களில் புரிந்து கொண்டான். ஆரவ் தனக்கு நெருக்கமான நண்பனாக ரிஷியை நினைக்க வைத்து தன் மனதின் உணர்வுகளை முதன் முதலாக பகிர வைத்த பெருமை முழுக்க முழுக்க ரிஷியையே சேரும். நண்பனுக்காக எதையும் செய்யும் இவனை நாம் கர்ணனுக்கு நிகராக ஒப்பிடலாம்.

 

வஜ்ரா: இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். இருபத்தெட்டு வயது, பேருக்கேற்ற படி ஆஜானுபாகுவான உடல். அவன் லேசாக தூக்கி அடித்தாலே பால் நிச்சயம் பவுண்டரிதான். சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த பேங்க் மேனஜர், ஹவுஸ் வொய்ப்க்கு அவன் ஒரே மகன். ‘பொறுமை என்றால் என்ன?’ என கேட்பான். யாரிடமும் ஒட்டாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன். ஆரவ் மற்றவர்களுடன் சகஜமாக பேசி பழகாவிட்டாலும் அவர்களின் விருப்பத்தில் தலை இடாமல், தன் விருப்பத்தை அவர்கள் மீது திணிக்காமல் ஒதுங்கி இருப்பான். ஆனால் வஜ்ரா ஆரவ்வின் குணங்களோடு சேர்த்து முன் கோபத்தையும் தன்னோடு வளர்த்திருந்தான். இதனாலேயே இவனுக்கு பதிலாக ஆரவ்வை கேப்டனாக்கினார்கள். வஜ்ரா விற்கு விருப்பமில்லாததை செய்ய சொன்னால், சொன்னவன் முதுகில் ஐந்து விரல்களும் பதிந்து இருக்கும். கோபம் வந்துவிட்டால் குருவை தவிர யாராலும் இவனை அடக்க முடியாது. பீமனை போன்ற உடல் வலிமை பெற்றவனாதலால், ஆட்டத்தில் அவனுக்கு நிகர் யாரும் இல்லை. உலக தர வரிசையில் முதல் இடத்தை சில ஆண்டுகளுக்கு இவன்தான் குத்தகைக்கு எடுத்து இருக்கிறான். இதற்காகவே அவனது முன் கோபத்தை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவனுக்கு எல்லா மொழியிலும் பிடிக்காத ஒரே ஒரு வார்த்தை ‘அண்ணா’.

 

பிரித்வி: இருபத்தி நாலு வயது, இந்திய அணியின் சூப்பர் பாஸ்ட் பவுலர், நேட்டிவ் நம்ம சென்னை. பரம்பரை பரம்பரையாக வந்த வக்கீல் குடும்பத்தில் கிரிக்கெட்டை விரும்பி தேர்ந்தெடுத்த முதல் தலைமுறை அவன். வயதிற்கேற்ப தன் நண்பர்கள் தடம்புறளும் நேரத்திலும் எந்த காரணத்தை கொண்டும் வீட்டின் விதி முறைகளையும் சுய கட்டுப்பாட்டையும் தாண்டி செல்லாத சுத்தமான அக்மார்க் தமிழன். ரன் கொடுப்பது போல் ஆடவிட்டு ஏமாற்றி சில நிமிடங்களில் போல்ட் அடித்து பேட்ஸ்மேன்களை மண்டை காய விடும் திறமைசாலி. வெளியே குழந்தைதனம் துள்ளி விளையாடும் முகத்தையும், உள்ளுக்குள் புயலினை ஒத்த புரவியை போல அகத்தையும் உடைய இவனை நாம் நகுலனுக்கு இணையாக ஒப்பிட்டு கொள்ளலாமா…? இவனுக்கு உற்ற நண்பன் நாளைய அணியின் எதிர் காலமாய் கருதப்படும் யஷ்மித்.

 

யஷ்மித்: ஆரவ் அணியில் இல்லாத நாட்களில் அந்த வெற்றிடத்தை நிரப்ப வந்தவன் யஷ்மித். இருபத்தோரு வயதேயான கட்டுக்குள் அடங்காத கட்டிளங்காளை. தந்தையை இழந்த பின் தாயே தோழனுமாக காஷ்மீரில் இருந்து வந்த தங்கநிற ஆப்பிள். இதுவரை அவன் ஆடிய 6 மேச்களிலும் 550 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தான், இரண்டு சென்ட்சுரி உட்பட. காண்போரை கவர்ந்திழுக்கும் அவனின் காந்த கண்களுக்கு ஆண்களை விட பெண் ரசிகைகள் நான்கு மடங்கு அதிகம். ஒன்றரை மாதத்தில் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்க உலகத்திலேயே இவன் ஒருவனால் மட்டுமே முடியும். இன்னும் பால் மணம் மாறாத குழந்தை முகத்தை கொண்டதால் அவன் செய்யும் அதிக பிரசங்கி தனம் நிறைந்த குறும்பு தனங்களை கண்டிக்க யாருக்கும் மனமின்றி, அணியினரும் கூட அவன் ரசிகர்களாக மாறி போனார்கள். இனி வரும் ஆட்டங்களில் இவனுக்கும் நிச்சயமாக நிரந்தர இடம் இருக்கும் என்று அடித்து சொல்லமளவு தன் செங்கோலை நாட்டிவிட்டான். ஆட்டத்தில் ஆரவ் சிங்கம் என்றால் யஷ்மித் சீறிப்பாயும் சிறுத்தையை போன்றவன். உள்ளே நுழைந்த ஒன்றரை மாதத்தில் கிரிக்கெட் உலகின் முடிசூடா இளவரசனாக வலம் வரும் இவனை, தந்தையை மிஞ்சும் தனையனான அபிமன்யூவிற்கு இணையாக கூறலாம். ஆம் வரும் நாட்களில் ஆரவ் பார்பியை சுற்றி உருவாக்க இருக்கும் பத்ம வியூகத்தை உடைத்தெரிய கூடிய வீர அபிமன்யூ…

 

ஆரவ், ரிஷி, வஜ்ரா, பிரித்வி, யஷ்மித் இந்த ஐந்து வெவ்வேறு விரல்களுக்கும் நடுவேயான ஒற்றை உள்ளங்கை பார்பி.*

Leave a Reply

%d bloggers like this: