Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

யாரோ இவன் என் காதலன் – 2

அத்தியாயம் – 2

னது கவலைகளைப் புறம் தள்ளியபடி அஞ்சலி வேலைகளைப் பார்க்க விரைந்தாள். உணவகத்தில் கூட்டம் அதிகம் மாயாவும் மற்ற பணியாளர்களுக்கும் கண்டிப்பாக உதவி தேவை. எதிர்பட்ட  வாடிக்கையாளர்களிடம் புன்னகைத்தாள். முன்பே அறிமுகமானவர்களிடம்  நலம் விசாரித்தாள். குழந்தைகளுக்கு உணவோடு சேர்த்து சிறு பொம்மைகளைத் தரும்படி பணிந்தாள். அவளும் உதவி செய்ய ஒவ்வொருவரின் வயற்றின் பசியையும் ஆற்றி அனுப்பினார்கள் உணவகத்தினர்.

அனைவரையும் சந்தித்தபின் அவளது மனதுக்கு நெருக்கமான வாடிக்கையாளரான சந்தானம் அமர்ந்திருக்கும் இருக்கையை அடைந்தாள். அந்த இருக்கை சமையலறைக்கு மிக அருகில் இருப்பதால் யாரும் அமர விருப்பப்படுவதில்லை. அங்கிருந்து வெளியே பார்க்கவும் முடியாது. ஆனால் சந்தானத்துக்கு அதெல்லாம் தேவையில்லை. அவர் மற்றவர்களைப் போல உணவை ருசிக்காக சாப்பிட வரவில்லை. இங்கு வருவதே தேவைக்காகத்தான். அதில் முக்கியமானது அஞ்சலியையும் மாயாவையும் சந்தித்து இரண்டு வார்த்தை பேசுவது. சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவர்களும் அவருடனேயே உணவருந்துவார்கள்.

சந்தானம் ஒரு ஓய்வுபெற்ற தனி மனிதர். மனைவி சில வருடங்களுக்கு முன்னர் மறைந்துவிட்டார். அதற்குப் பின் பெரிதாக உறவுகள் எதுவும் இல்லாதவர். அருகிலிருக்கும் கல்லூரியின் லைப்ரரியனாக வேலை பார்த்தார். வீடும் அந்தப் பகுதியிலேயே இருந்தது.

வேலை பார்த்தபோது கல்லூரி மெஸ்ஸில் சாப்பிடுவாராம். இப்போது சமைக்கவும் முடியாமல், சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ளவும் நிதி நிலைமை இடம் கொடுக்காமல் இருப்பவர். அவள் உணவகம் ஆரம்பித்ததிலிருந்து தினமும் வரும் ரெகுலர் கஸ்டமர் இவர்தான். தனது தந்தையை நினைவு படுத்தும் உயரத்துடனும் உடல்வாகுடனும் இருக்கும் சந்தானம் அவளது மனதை முதல் சந்திப்பிலேயே இளகச் செய்துவிட்டார்.

“அஞ்சலி…. இந்த ஹோட்டலை நீ எனக்காகவே ஆரம்பிச்சது போலிருக்கு”

“உங்களோடதுதான் அங்கிள்.  உங்களுக்கு வேணும்னுறதைக் கேட்டு வாங்கி சாப்பிடுங்க”

என்று எத்தனை முறை அவள் சொன்னாலும். கணக்குப் பார்த்து பார்த்து இருப்பதிலேயே விலை குறைவாக இருக்கும் உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுவதைப் பார்க்கும்பொழுது அவள் மனம் வலிக்கும். அதுவும் சிலசமயம் காப்பி மட்டுமே அருந்துவார்.

குழந்தைகளைப் போல வயதானவர்களும் தனி கவனம் செலுத்த வேண்டியவர்களே. அவளால் முடிந்த அளவுக்கு அவரது தன்மானத்தை பாதிக்காதவண்ணம்

“அங்கிள் இது ஸ்பெஷல் டிஷ். அடுத்த மாசம் மெனுவில் சேர்க்கலாம்னு இருக்கோம். ப்ளீஸ் ஒகேயான்னு சொல்லுங்க” என்றபடி வைப்பாள்.

“ஒரு வாரம் உங்களை மானிட்டர் பண்ணி உடம்புக்கு ஒண்ணும் ஆகலைன்னாதான் சேர்ப்போம்” என்றபடி மாயாவும் சேர்ந்து கொள்வாள்.

“ரெண்டு வாலுங்களும் என்னை சோதனை எலியா மாத்திட்டிங்களே” என்று சிரிப்பார் சந்தானம்.

சில நாட்கள் “அங்கிள் நீங்க ஆர்டர் பண்ண காப்பி கூட இந்த மசாலா தோசை ப்ரீ” என்பார்கள்.

“அங்கிள் இன்னைக்கு எட்டு ஆனியன் ரவா ஆர்டர் பண்ணிட்டு ஒரு க்ரூப் அப்ஸ்கான்ட் ஆயிடுச்சு. எங்களால் அத்தனையும் சாப்பிட முடியாது. அதனால எங்க பிரெண்டானதுக்கு தண்டனையா நீங்க ஒண்ணு சாப்பிடுங்க” என்று மிரட்டுவார்கள்.

“மீல்ஸ் சேர்க்கலாம்னு இருக்கோம். இந்த வீக் எண்ட்ல இருந்து ரெண்டு மாசத்துக்கு வாரா வாரம் ஒவ்வொரு மெனுவா ட்ரை பண்ணப் போறோம். மறக்காம வீட்டுக்கு வந்து ஹெல்ப் பண்ணுங்க அங்கிள்” என்று கெஞ்சுபவர்களை சந்தானம் கண்டு கொண்டாரா இல்லையா என்பதைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதே இல்லை.

எழுபதுகளின் ஆரம்பத்திலிருக்கும் சந்தானம் தனது செல்லத் தோழிகளைப் பார்த்து சிரித்துக் கொள்வார்.

கூட்டம் குறையத் தொடங்கிய வேளையில் சந்தானத்துக்கு ஹாய் சொல்லியபடி சமையலறை சென்றாள்.

“நவீன் உன் வேலை நேரம் முடிஞ்சதே… கிளம்பலை”

“சந்தானம் அங்கிள் ஆர்டர் செய்ததைத் தந்துட்டுக் கிளம்புறேன்”

“அங்கிள் என்ன ஆர்டர் செஞ்சார்”

“வழக்கம் போல ஒரு ப்ளேட் இட்லி”

“அவருக்கு நான் சாப்பாடு எடுத்துட்டுப் போறேன். நீ போ”

பணியாளர்கள் ஒவ்வொருவராக அவளிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப ஆரம்பிக்க, சந்தானம் ஆர்டர் செய்திருந்த இட்லியோடு சூடான செட் தோசைகளை வைத்தாள். கூட ஒரு டம்ளர் காப்பியும். அனைத்தையும் எடுத்துச் சென்று அவளே மேஜையில் வைத்தாள்.

“நான் இட்லி மட்டும்தானே ஆர்டர் பண்ணேன். நீ ஏன் இத்தனை எடுத்துட்டு வர”

“அப்படியா, நவீன் இட்லி செட் தோசைன்னு தானே சொன்னான். நாளைக்கு விசாரிக்கிறேன்”

“ஆனால் தோசைக்குக் காசு கொடுத்துடுவேன்”

“சாப்பிடுங்க அங்கிள். நாங்க செஞ்ச தப்புக்கு நீங்க காசு தர்றது சட்டப்படி குற்றம். என்னைக் குற்றவாளியாக்காதிங்க” அவரிடம் சொல்லியபடியே அவரது கிளாசில் தண்ணீர் நிரப்பப் போனாள். நீர் இல்லாததைக் கண்டு.

“ஜக்கில் தண்ணி பிடிச்சுட்டு வந்துடுறேன் அங்கிள்” என்றபடி அகன்றாள்.

ஆள் நடமாட்டம் குறைந்ததால் உணவகத்தின் ஒரு பாதியை சுத்தம் செய்து சேர்களைக் கவிழ்த்து மின் விளக்குகளை நிறுத்தி இருந்தார்கள். அதனால் அந்தப் பக்கம் இருந்த கண்ணாடி ஜன்னல்களின் வழியே வெளிப்புறம் ஓரளவு தெரிந்தது. பெரும்பாலும் அங்கு பூச்செடிகளும், பெரிய மரங்களும்தான்.

ஜக்கில் தண்ணீர் நிரப்பிய பின் அந்த கண்ணாடி வழியே போகிற போக்கில் ஒரு நோட்டம் விட்டவள் அங்கு தெரிந்த காட்சியைக் கண்டு அதிர்ந்தபடியே ஜக்கை நழுவ விட்டாள். ஜலீரெண்டு அது உடைந்த ஓசை கேட்டு அனைவரின் பார்வையும் அஞ்சலியின் மேல் நிலைக்க, சந்தானம் அவளை நோக்கி விரைந்தார்.

“என்னாச்சு அஞ்சலி” பதட்டத்துடன் வினவினார்.

“ஒண்ணுமில்லை அங்கிள்” என்று அவரிடம் சொல்லிவிட்டுத் திரும்புவதற்குள் அந்த உருவம் இருந்த சுவடு தெரியாமல்  மறைந்திருந்தது.

அவளை அழைத்து சென்று இருக்கையில் அமர வைத்தவர்

“உன் முகம் ஏன் இப்படிப் பேய் அறைஞ்ச மாதிரி இருக்கு”

கண்கள் கலங்க “நான் பார்த்தேன் அங்கிள். அந்த கண்ணாடிக்கு வெளியே எங்கப்பா நின்னுட்டு இருந்தார்” என்றாள் அதிர்ச்சி விலகாமல்.

“ஒரே ஒரு செகண்ட் தான் பார்த்தேன். ஆனால் சத்தியமா அவர் எங்கப்பாதான்”

“நீ ஓய்வே இல்லாம வேலை செய்ற அஞ்சலி. உடலுக்குப் போதுமான ஓய்வு இல்லாதப்ப மனசு இப்படித்தான் தாறுமாறா நடக்கும். இல்லாததை இருக்குற மாதிரியும் நடக்காததை நடந்த மாதிரியும் காட்டி நம்ப வைக்கும்.

உனக்குத் தேவை இப்ப சில நாள் விடுமுறையும் நல்ல ஓய்வும்தான்” என்றார் தனக்காக வந்த காப்பியை அவள் கைகளில் திணித்தபடி.

சர்க்கரை நிறைத்த சூடான காப்பி அப்போது அவளுக்கும் மிகவும் தேவையாகவே இருந்தது.

“என்னாச்சு அஞ்சலி” என்றபடி வந்தாள் மாயா.

“ஒண்ணுமில்லை கை வழுக்கி விட்டுருச்சு. நான் கிளீன் பண்ணிடுறேன்”

“நீ விடு.. நான் ஆளை அனுப்பிருக்கேன். அவன் சுத்தம் பண்ணிட்டு வாக்கூம் பண்ணிடுவான். கண்ணுக்குத் தெரியாத கண்ணாடி பீஸ் கூட வந்துடும். நீ வீட்டுக்குப் போயி ரெஸ்ட் எடு”

“எனக்கு ஒண்ணுமில்லை. கவலைப்படாதே” என்றபடி தான் சாதாரணமாக இருப்பதை உணர்த்தும் பொருட்டு “நான் ஆர்டர் எடுக்குறேன். நீ போ” என்றாள்.

அந்த விடுதிக்கு புதிதாய் ஒரு வாடிக்கையாளர் அந்த நேரத்தில் நுழைந்திருந்தான் . நல்ல உயரமும், அதற்கேற்ற உடல்வாகும், மாநிற உடலைத் தழுவியிருந்த கருநீல ஸ்வெட்டர், கழுத்துப் பகுதியில் தெரிந்த நீல கட்டம் போட்ட சட்டை, நீல நிற ஜீன் எல்லாம் ஒரு கம்பீரத் தோரணை  தந்தது அவனுக்கு. கீழே குனிந்து மெனுவைப் பார்த்தபோது அவனது தலைக் கேசம் நெற்றியில் விழுந்து முகத்தை மறைக்க, அந்தக் காலத்து ரஜினிகாந்தைப் போல நெற்றி முடியை இடது கையால் கோதி விலக்கினான்.

தமிழ்நாடே மயங்கிக் கிடக்கும் அந்த ஸ்டைலுக்கும் வசப்படாமல்

“யுவர் ஆர்டர் சார்” என்று கடமைப் பார்வை பார்த்தபடி வினவினாள் அஞ்சலி.

நிமிர்ந்து பார்த்த அவனது கூர்மையான  கண்கள் அவளது முகத்தை வருடின. சிலவினாடிகள் அவள் முகத்தில் மட்டுமே நிலைத்த பார்வை அன்று அவளது மனநிலைக்கு உகந்ததாய் இல்லை.

“ஆர்டரை சீக்கிரம் தர முடியுமா… நாங்க கிட்சன் க்ளோஸ் பண்ணனும்” அவளது வார்த்தைகளைக் கேட்டு புன்சிரிப்பு.

“ஒரு காராபாத், கேசர்பாத் காம்போ வித் கர்ட். தயிருக்குத் தனியா பே பண்ணிடுறேன். அதுக்கப்பறம் ஒரு ஸ்ட்ராங் காப்பி” என்றான்.

“ஒரு காராபாத் கேசர்பாத் ப்ளேட் ஒரு வாளி தயிரோட தா, அவன் தலைல கொட்டிட்டு வரேன்” என்றாள் அஞ்சலி கிச்சனுக்கு நுழைந்ததுமே கடுப்பாய்.

இவன் சமீப காலமாய்தான் இங்கு வருகிறான். காலை உணவு கண்டிப்பாக இங்குதான். வார இறுதிகளில் இரவு உணவும் கூட. அருகிலிருக்கும் ஐடி நிறுவனம் எதிலாவது வேலை பார்ப்பான் என்பது அவளது அனுமானம். முதலில் ஏதேதோ உணவை முயற்சித்துப் பார்த்தவன் கடைசியில் காராபாத் கேசர்பாத்தில் வந்து நின்றான். எப்போது வந்தாலும் மாறாமல் அதேதான் கொண்டு வரச் சொல்கிறான்.

கேசரியை விழுங்குபவன் கால் லிட்டர் தயிரோடு காராபாத்தை உண்ணுவான். அதுதான் அவன் வழக்கமான மெனு. இரவு நேரத்தில் வரும்போது வேறு வேலையாட்கள் அங்கு இருப்பதில்லை. அது போன்று சமயங்களில் அஞ்சலியே ஆர்டர்களை எடுப்பது வழக்கம். அதனால் இவனைத் தவிர்க்கவும் முடிவதில்லை.

அவன் உணவை முடித்ததும் அனைவரிடமும் கேட்கும் கேள்வியை அவனிடமும் கேட்டாள்

“வேறு ஏதாவது வேண்டுமா சார்”

அவன் கண்கள் ஒளிர அவளது பார்வையை சந்தித்தான்.

“எனக்கு இரண்டு விவரங்கள் வேண்டும். முதலாவது உன் ஷிப்ட் முடியும் நேரம். இரண்டாவது நீ ஓய்வு நேரத்தில் போக விரும்பும் இடம்”

Advertisements

2 Comments »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: