Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 24

பாகம் – 24

மாலை நேர செங்கதிர் மெல்ல கீழ் வானில் மறைய தொடங்க இரவின் கார்நிறம் ஆங்காங்கே தன் வண்ணத்தை பரப்பி, மும்பை மக்களுக்கு நாளை வரவிருக்கும் தீபாவளியை ஜெக ஜோராக ஆரம்பித்து வைத்தது.

 

மும்பையின் ஒதுக்குபுறத்தில், சில பழைய சிறிய வீடுகளின் வரிசையில், ஒரு வீடு மட்டும் சாணம் தெளித்து கோலமிட்டு, துளசி செடியோடு தனித்தன்மை கொண்டு நின்றது. அங்கிருந்த வீடுகள் அனைத்தும் ஒரே ஒரு அறையை மட்டுமே கொண்டவை,  வீட்டின் பின்புறம் ஒரு சிறிய பாத்ரூம் அவ்வளவே. வீட்டில் மாலை நேரத்து விளக்குகள், ஊது பத்தி மணத்தோடு கந்த சஷ்டி கவசம் பாடும் குரலும் காற்றெங்கிலும் கலந்திருக்க, புயல் வேகத்தில் புழுதி படிந்த சட்டை டவுசருடன் அடித்து பிடித்து உள்ளே ஓடி வந்தான் ஏழு வயதேயான கண்ணன்.

 

“அம்மா…. நான் விளையாடிட்டு வந்துட்டேன். இப்போவே போட ஆரம்பிக்கட்டுமா….”

 

“போய் கை காலெல்லாம் கழுவிட்டு வாடா” சுவாமிக்கு கற்பூரம் காட்டியபடி திரும்பாமலே குரல் கொடுத்தாள் வைதேகி.

 

“டுர்ர்………” இல்லாத வண்டியை ஓட்டி சென்றவன், ஒரே நிமிடத்தில் கைகால் கழுவி வந்து நின்றான்.

 

“இங்க வந்து சாமி மட்டும் கும்பிட்டுக்கோடா கண்ணா…. அதுக்குமேல அம்மா வேற ஒண்ணும் உன்னை சொல்லமாட்டேன். அப்புறம் நீ என்ன வேணாலும் செஞ்சுக்கோ.”

 

“சீக்கிரம்மா… எல்லாரும் ஆரம்பிச்சிட்டாங்க…”

 

“விபூதி வைக்க முன்னாடி பறக்காதடா…” ஆடிக்கொண்டிருந்தவன் நெற்றியில் விபூதி வைத்து, கல்கண்டை எடுத்து அவன் வாயில் போட்டு விட்டாள்.

 

“எனக்கு வெடி போட வெளியில ஒரு விளக்கு கொண்டுவந்து வைங்கம்மா… டுர்ர்….” என்றவன் இரவுநேர மத்தாப்புகளை கை நிறைய அள்ளிக்கொண்டு வாசலுக்கு ஓடினான்.

 

விளக்குடன் வெளியே வந்து, “இன்னும் நல்லாகூட இருட்டல… இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு போடலாம்ல கண்ணா, அப்பதான பாக்க நல்லா இருக்கும். இன்னிக்கு அப்பாவும் சீக்கிரமா வந்திடுவாரு”

 

சிணுங்கலோடு, “அம்மா…. இப்பவே…” என கைகால்களை உதறி அடம்பிடிக்க,

 

“சரி.. சரி..ஜாக்கிரதையா போடு. அம்மா உள்ள இருக்கேன்.”

 

“ஏம்மா… பயம்மா இருக்கா? வேணும்னா என் கைய புடிச்சுகிட்டு வெடி வைக்கிறீங்களா…”

 

“அடி வாங்கபோற” வைதேகியின் பயந்த சுபாவத்தை அவளை தெரிந்த அத்தனை பேரும் அறிவர், அவ்வளவு பெரிய பயந்தாங்கொள்ளி. தாளிக்கும் போது தெறிக்கும் கடுகு, கத்தரிக்காயில் இருக்கும் புழு, தெருவில் காலை சுற்றிவரும் நாய்குட்டி என அத்தனைக்கும் பாகுபாடின்றி பயப்படும் ஜீவன் வைதேகி. பயம் தவிர மற்றபடி எந்த குறையும் சொல்ல முடியாத பெண். இதுவரையில் எதற்காகவும் குழந்தையை அடித்ததோ, கணவனிடம் சண்டை போட்டதோ கிடையாது. வைதேகி எந்த வேலையை செய்தாலும் அதில் ஒரு நிதானம் இருக்கும். மற்றவர்களுக்கு உதாரணமாக சொல்லும் அளவிற்கு அவள் குணங்கள் அங்கே பிரபலம்.

 

வாசலிலிருந்து “அம்மா இங்க வந்து பாருங்க. நான் வச்ச தரை சக்கரம் ரொம்ப நேரம் சுத்துது.”

 

“சும்மா சும்மா கத்தாம இருடா…”

 

“ஏம்மா நீங்க இதுக்கெல்லாம் இப்டி பயப்படுறீங்க” என்றபடி அடுத்த சக்கரத்தை வைக்க குனிந்து அதை நெருங்கிய நேரம் மிக அருகிலிருந்து வந்த ஹாரன் சத்தத்தில் திரும்பி பார்த்தான். சிறிய லாரி ஒன்று ஏராளமான ஜாமான்களோடு வந்து நின்றது.

 

“தம்பி கொஞ்சம் அங்கிட்டு தள்ளி போய் விளையாடுப்பா” என்றபடி ஒரு பாட்டியும் ஒரு அத்தையும் வந்து நின்றனர். வந்த உடனேயே தன் இத்தனை நேர சந்தொஷத்தை பறித்த கோபத்தில் அவர்களை முறைத்து கொண்டு விறைப்பாக நின்றான் கண்ணன்.

 

சத்தம் கேட்டு வெளியே வந்த வைதேகி, “யாரும்மா நீங்க?”

 

பக்கத்துவீட்டை காட்டி, “இந்த வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கோம்மா, என்பேரு லச்சுமி இது என் மக சாரதா.”

 

“அப்டிங்களா… என் பேரு வைதேகி. இது என் மகன் கண்ணன்.”

 

இதற்குள் வண்டிக்காரர், “வண்டில இருந்து நாங்க பொருள எல்லாம் கீழதான் வைக்க முடியும். நீங்களே உள்ள எடுத்து வச்சிகோங்க” என்றார் கராராய். அவர்கள் எவ்வளவோ கெஞ்சியும் கீழே இறக்கி வைத்து விட்டு சென்று விட்டார்.

 

“நான் வேணும்னா எடுத்து வைக்க உதவி பண்றேன்மா…” என வைதேகி முன்வர, இருவரும் தமது குடும்பங்களை பற்றி பேசிக்கொண்டே கொஞ்சம் எடுத்து வைத்தார்கள்.

 

“என்ன வைதேகி, யாரு இவங்க?” கேட்டு கொண்டே தன் ஸ்கூட்டரிலிருந்து இறங்கினார் சிதம்பரம், வைதேகியின் கணவன்.

 

கணவனை நெருங்கி வந்து ரகசிய குரலில், “நம்ம பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்து இருக்காங்க. பாவம் அவங்க வாழ்ந்து கெட்ட குடும்பம் போல, உதவிக்கு ஆம்பளைங்க யாரும் இல்ல. நீங்க கொஞ்சம் ஆளுங்கள கூட்டிட்டு வந்து பெரிய ஜாமானெல்லாம் தூக்கி வைக்கிறீங்களா?”

 

“ஓகோ… சரிம்மா வேட்டி மாத்திட்டு வந்திடுறேன்” என்ற சிதம்பரம் சில நிமிடங்களில் எதிர்வீட்டு ஷர்மா மாமா, மேலும் சில அக்கம்பக்கத்து ஆட்கள் சிலரை சேர்த்து வந்தார். அனைவரும் சேர்ந்து எல்லா ஜாமான்களையும் வேண்டிய இடத்தில் வைத்து கொடுத்தனர்.

 

அடுத்த நாள் தீபாவளியை முன்னிட்டு சுடச்சுட பலகாரங்களை அக்கம் பக்கத்தினருக்கு கண்ணனிடம் கொடுத்து அனுப்பினாள் வைதேகி. அங்கிருந்தும் குழந்தைகள் கைகளால் பலகாரம் வந்து குவிந்த வண்ணமிருக்க கண்ணன் துள்ளி திரிந்து கொண்டிருந்தான். சில பலகாரங்கள் லச்சுமி பாட்டி வீட்டிற்கும் சென்றது. கண்ணனுக்கு அவர்களுடன் உறவாட துளியும் விருப்பமில்லை, ஆனால் வைதேகி அவர்களுக்கு ஓடி ஓடி உதவி செய்தாள்.

 

“எனக்கு அவங்கள புடிக்கவே இல்லமா… நம்ம பலகாரத்த அவங்களுக்கு இனிமே குடுக்காதீங்க” என்ற கண்ணனிடம் “நீ சின்ன பிள்ளடா, இப்படி எல்லாம் பேசக்கூடாது” என பெற்றோர் இருவரும் அவனை அடக்கி வைத்தனர். அடுத்தடுத்த நாட்களில் வைதேகியும், சாரதாவும் நெருங்கி பழக தொடங்கி இருந்தனர். வாரங்களும் மாதங்களும் உருண்டோட இப்போது சாரதா வைதேகியின் அடுப்பங்கறை வரை வந்து உலாவ தொடங்கி இருந்தாள்.

 

திடீரென ஒருநாள் பக்கத்துவீட்டு லச்சுமி பாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சாரதா அழுதாளே தவிர ஏன்? எப்படி? என்ற கேள்விகளுக்கு வாயை திறந்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. லச்சுமி பாட்டி இறந்ததன் காரணம் எதுவும் யாருக்கும் தெரியவில்லை. அதிலிருந்து வைதேகி சாரதாவிடம் இன்னும் கரிசனத்தோடு ஆகிப்போனாள். நாட்கள் செல்ல செல்ல சாரதாவின் வயிறு வீங்க ஆரம்பித்தது, லச்சுமி பாட்டியின் மரணத்திற்கான காரணமும் விளங்கியது.

 

ஒருநாள் கண்ணன் பள்ளியிலிருந்து வந்த வேளை, வீட்டுக்குள் அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக்கொண்டு இருக்க, கண்ணன் என்ன செய்வதென்று தெரியாமல் வாசலிலேயே நின்றுவிட்டான். கடைசியாக பளார் என்ற சத்தமும் அம்மாவின் அழுகையும் கேட்க, உள்ளே ஓடி வந்து ‘அம்மா… அம்மா…’ என்ற அழுகையோடு தன் அன்னையை கட்டிக்கொண்டான்.

 

அன்று இரவு முழுவதும் வைதேகி துளி உறக்கமின்றி கண்ணனை கட்டியணைத்து அழுது கொண்டே இருந்தாள். மறுநாள் காலை சிதம்பரம் வழக்கம்போல் வேலைக்கு செல்ல, வைதேகி கதவு ஜன்னல் எல்லாம் அடைத்துவிட்டு வந்தாள். இன்னமும் உறங்கி கொண்டிருந்த கண்ணனை எழுப்பி, அவன் வேண்டாமென மறுக்க மறுக்க கேட்காமல் சாப்பாடு ஊட்டிவிட்டாள்.

 

“அதுதான் பார்பி என் அம்மா கையால நான் சாப்பிட்ட கடைசி சாப்பாடு, நான் வயிறார கடைசியா சாப்பிட்டதும் அப்பதான். எங்க வீட்டுக்குள்ள மூலைல ஒரு தண்ணி தொட்டி இருக்கும். நாலடி பள்ளத்தில் இரண்டடி அகலத்தில் தோண்டி வச்சிருப்பாங்க. வீட்டுக்கு தேவையான தண்ணிய அங்கதான் எப்பவும் ஊத்தி வச்சிருப்போம். அம்மா என்ன தூக்கிட்டுபோய் முத்தம் கொடுத்து அதுக்குள்ள இறக்கி விட்டாங்க. எப்பவும் தண்ணி நிறைஞ்சு இருக்குறது, அன்னிக்கு பாதிதான் இருந்துச்சு.”

 

“அம்மா என்னம்மா பண்றீங்க? என்னால வெளியில வர முடியாதுன்னு தெரியும்ல… ஏன் என்ன உள்ள இறக்கி விடுறீங்க? என்ன தூக்குங்கம்மா… அம்மா.. அம்மா..ன்னு நான் கத்திக்கிட்டே இருந்தேன். எங்க அம்மா காதே கேக்காத மாதிரி நடந்து போய் எனக்கு நேர் எதிர் மூலைல நின்னாங்க… ஒரு கேன்ல இருந்து எதையோ உடம்பு முழுக்க ஊத்திகிட்டாங்க. தீப்பெட்டி எடுத்துகிட்டு அழுதுகிட்டே என்ன பாத்து ‘ஆரவ் கண்ணா… செல்லம் என்ன ஆனாலும் அதுக்குள்ள இருந்து வெளியில வராதடா’னு சொல்லிட்டு என்ன பாத்துகிட்டே அவங்க மேல நெருப்பு வச்சுகிட்டாங்க.”

 

“நான் ‘அம்மா… அம்மா… வேணாம்’னு கத்தி கதறினேன். வெளியில ஏற முயற்சி பண்ணி கால் வழுக்கி மறுபடியும் உள்ளேயே விழுந்தேன். அதுக்கு மேல என்னால முடியல… என் அம்மா என் கண் முன்னாடியே எறிஞ்சு ஒடஞ்சு விழுந்தாங்க. எல்லாமே இரண்டே நிமிஷத்துல நடந்து முடிஞ்சிருச்சு. கொஞ்ச நேரத்தில வெளியில இருந்து யார் யாரோ கதவ உடச்சு உள்ள வந்தாங்க. என்ன வெளிய தூக்கிவிட்டாங்க. கருகி ஒடஞ்சு கிடந்த அம்மாவ சுத்தி நின்னு எல்லாரும் வேடிக்கை பாத்தாங்க.”

 

“நான் கிட்ட போய் ‘அம்மா…’ னு சொல்லிக்கிட்டே அவங்க கைய தொட்டேன். அந்த கை என் கையோடவே ஒடஞ்சு வந்திடுச்சு… பயத்துல நான் மயங்கி விழுந்துட்டேன். முழிச்சதும் நான் ஷர்மா அங்கிள் மடியில அவர் வீட்டு வாசல்ல இருந்தேன், என்ன தூக்கிட்டு ஷர்மா அங்கிள் அவரோட வீட்டுக்குள்ள கூட்டிட்டு போனாரு…. ரொம்ப நேரமா அவரோட மனைவி மிருதுளா அத்தை என் கூடவே இருந்தாங்க.”

 

“அப்புறமா ஷர்மா அங்கிள் வந்து கூட்டிட்டு போனாரு, ஒரு வெள்ள துணியில ஏதோ மூடி இருந்தது. எல்லாரும் அத எடுத்துகிட்டு எங்கயோ போனாங்க… என்னவோ என்ன செய்ய சொன்னாங்க, நானும் செஞ்சேன். அப்புறம் திரும்பி வந்துட்டோம். நான் வீட்டுக்கு வந்ததும் உள்ள ஓடி போய் என் அம்மாவ தேடினேன். அங்க அவங்க எறிஞ்ச இடத்தில எதுவுமே இல்ல, யார கேட்டாலும் பதிலே சொல்லாம அழுதாங்க. அம்மா நாளைக்கு காலைல வந்திடுவாங்கன்னு யாரோ சொன்னத நம்பி நானும் அடுத்த நாள் காலைல வாசல்லயே காத்திருந்தேன். ஆனா அம்மா வரவே இல்ல…”

 

“நாளைக்கி இல்லனா என்ன?  அதுக்கப்புறம் என்னிக்காவது ஒருநாள் வந்திடுவாங்கன்னு நம்பிகிட்டு இருந்தேன். ஒரு வாரம் கழிச்சு அப்பா கூட நிறைய பேர் உக்காந்து ரொம்ப நேரமா என்னமோ பேசிகிட்டே இருந்தாங்க. அடுத்த நாள் காலைல என்ன எழுப்பி புது டிரஸ் போட்டு பக்கத்தில இருந்த கோவிலுக்கு கூட்டிட்டு போனாங்க. எங்க அம்மா இனிமே திரும்பி வரமாட்டாங்கன்ற உண்மை எனக்கு அன்னிக்குதான் புரிஞ்சது. அங்க என் அப்பா அவ கழுத்துல தாலி கட்டிகிட்டு இருந்தாரு….”

 

“பிரியங்கா பொறந்ததும் என்னோட அப்பா நான் இருக்குறதையே மறந்திட்டாரு. அதுக்கப்புறம் தான் எனக்கு பசியும், இருட்டும் எவ்ளோ கொடுமையான விஷயம்னு புரிஞ்சது. பல நாள் நடு ராத்திரியில முழிச்சு அம்மா… அம்மா… எங்க இருக்கீங்கன்னு அழுதிருக்கேன். என் பக்கத்தில யாருமே இருக்க மாட்டாங்க. பசி வயித்த போட்டு குடைஞ்சு எடுக்கும் ஆனா சாப்பிட வீட்டுல எதுவும் இருக்காது. என் அம்மா இருந்தவரைக்கும் எனக்கு பசினா என்னன்னே தெரியாது. என்ன கொழு கொழுன்னு வச்சிருந்தாங்க. இவ வந்ததுக்கப்புறம் ஒரே மாசத்துல துரும்பா ஆனேன். பாக்குரவங்க எல்லாம் அவள கூப்பிட்டு திட்ட ஆரம்பிச்சாங்க, அந்த கோபத்தை எல்லாம் அவ என்கிட்ட காட்டுவா. நிறைய நாள் அவ கிட்ட காரணமே இல்லாம அடி வாங்கி இருக்கேன். அதுக்கு பிறகு அழுதா ஏன்னு கேக்க கூட யாரும் இல்ல. அப்பப்போ ஷர்மா அங்கிள் மட்டும் தான் வீட்டுக்கு கூட்டிட்டு போய் சாப்பாடு போடுவாரு. என் ஸ்கூல் பேக், புக்ஸ், யூனிபார்ம் எல்லாம் வீட்டுக்குள்ளயே திடீர் திடீர்ன்னு காணாம போகும்.”

 

“நான் யோசிக்க ஆரம்பிச்சேன். பேக், யூனிபார்ம் எல்லாம் ஸ்கூல்லயே வச்சிட்டு வர ஆரம்பிச்சேன். சாயங்காலம் டீ கடைக்கு போய் வேல பாத்துட்டு அந்த காசுல சாப்பாடு வாங்கிக்குவேன். லீவுல பிரன்ட்ஸ்கூட கிரிக்கெட் விளையாடும் போது எங்க டீச்சர் பாத்திட்டு என்ன கூப்பிட்டு கோச்சிங் கொடுத்தாரு. நான் நல்லா விளையாடினதால ஸ்கூல்ல இருந்து எனக்கு எல்லாமே செய்ய ஆரம்பிச்சாங்க… நான் கஷ்டப்பட்டு என் வாழ்க்கைய நானே கத்துகிட்டு வாழ ஆரம்பிச்ச நேரம் என் அப்பா ஆக்சிடன்ட்ல இறந்து போனாரு…”

 

” ‘ஆம்பள இல்லாத வீடு, இனிமே நீதான் வேலைக்கு போய் என்னையும் பாப்பாவையும் காப்பாத்தனும்’னு பனிரெண்டு வயசில அவ வந்து என்கிட்ட சொன்னா. நான் ‘முடியாது நான் ஸ்கூலுக்குதான் போவேன், உங்களால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோங்க’னு சொல்லிட்டு, படிச்சுகிட்டே டியூசன் எடுத்தேன், டைம்க்கு கிரிக்கெட் கோச்சிங்கும் போனேன். மூணு வர்ஷத்தில டிஸ்டிரிக்ட் லெவல் ப்ளேயர் ஆனேன். பிரியங்கா வளர வளர என் அப்பாவோட சாயல்ல இருந்தா. அவங்க அம்மா என்ன சொன்னாலும் கேக்காம ‘அண்ணா.. அண்ணான்னு’ என் பின்னாடியே சுத்தி வருவா. எனக்கும் அவள விட்டா பாசம் காட்ட அன்னிக்கி யாரும் இல்ல…”

 

“ஷர்மா அங்கிள் நிறைய உதவி செஞ்சாரு, கிட்டதட்ட பத்து வருஷமா எனக்கு எல்லாமே அவருதான் செஞ்சுருக்காரு. இப்போ நான் பணம் குடுத்தா மட்டும் வாங்க மாட்டிக்கிறாரு. ஒரு ஹாஸ்பிடலே நான் கட்டி தர்ரேன்னு சொன்னேன். வேண்டாம்னு இன்னொருத்தர் கிட்ட கை கட்டி வேல பாக்குறாரு. அப்போ அவரு என்ன உறவா நினைக்காம தானம் தர்மம்னு தான நினைச்சு இதெல்லாம் செஞ்சு இருக்காருன்னு அர்த்தம். நான் ஒரு பணக்கார அனாதை பார்பி…” என்றவன் பார்வை இன்னமும் இருளை வெறித்தபடியே இருந்தது. சில நிமிடங்களுக்கு  அங்கே அமைதியே ஆக்கிரமித்தது.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: