Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 23

பாகம் – 23

‘என்ன விட்டு எங்க போன பார்பி? நான் உன்ன காணும்னா தவிச்சி போயிடுவேன்னு உனக்கு தெரியாதா? அன்னிக்கி உன்ன அழ வச்சேன்னு பழிவாங்க இன்னிக்கி என்னை அழ வச்சு பாக்குறியா? எப்ப போனன்னு கூட தெரியலயே… உன்ன நான் எங்க போய் தேடுவேன்?’ சட்டென்று ஏதோ நியாபகம் வந்தவனாய் தன் லேப்டாப்பை தேடி ஓடினான். அதில் அவன் அத்தனை கேள்விக்கான பதிலும் கிடைத்தது. கேமராவில் ஒளி பதிவான அளவிற்கு ஒலி பதிவாகவில்லை.

 

அதில் அவன் கண்டது, மாலை நேரம் ஹாலில் அமைதியாக அமர்ந்து டீவி பார்த்து கொண்டிருந்த பார்பியை நோக்கி சாரதாம்பாள் வருகிறார். அருகில் வந்ததும் மரியாதைக்காக எழுந்து நின்ற பார்பியை அவர் கோபமாக திட்ட ஆரம்பிக்கிறார். அவள் கூறும் சமாதானங்களை ஏற்காமல் அவர் தொடர்ந்து பேச, அந்த பேச்சை கேட்க முடியாமல் பார்பி காதுகளை மூடிக்கொண்டாள். விடாமல் தொடரும் சாரதாம்பாளை எதிர்த்து பேச முடியாமல் பார்பி அங்கிருந்து நகர தொடங்க, அவளை நகர விடாமல் கையை இறுக பற்றி கொண்டார். அதன்பின் என்ன சென்னாரோ அவள் கையை உதறி துள்ள தொடங்க, அப்போதும் விடாமல் அவளை ஏதோ சொல்ல, பார்பி கதறி அழ ஆரம்பித்ததும் அவள் கையை விட்டார். பார்பி அழுது கொண்டே மாடி படியை நோக்கி ஓடினாள்.

 

அவள் அந்த கேமராவின் எல்லையை தாண்டி போக, அதற்குமேல் பார்க்கும் படியான அடுத்த கேமரா வீடியோவை ஓடவிட்டான். அவள் நேராக அவளுடைய அறையை தாண்டி இருக்கும் மொட்டை மாடிக்கான படிக்கட்டுகளை நோக்கி ஓட, அதற்குரிய கேமராவை பார்க்கும் நேரத்தை கூட தாமதிக்காமல் மொட்டை மாடியை நோக்கி அவனும் ஓடினான்.

 

‘பார்பி… எந்த தப்பான முடிவும் நீ எடுத்திருக்க கூடாது. உனக்காக நான் ஒருத்தன் இருக்குறத மறந்திடாதடா…’ என மனது கிடந்து தவியாய் தவித்தது. அவனை சோதித்து பார்க்கும் விதமாக மொட்டை மாடி விளக்கின்றி கும்மிருட்டாய் இருக்க, இருட்டில் கண்ணுக்கு எதுவும் தெரியாமல் தேடிப்பிடித்து லைட் சுவிட்சை போட்டான். அங்கே ஒரு மூலையில் மூன்று மணி நேரமாய் அழுது அழுது ஓய்ந்து, உட்கார்ந்த படியே உறங்கி கிடந்தாள் பார்பி. போன உயிரே திரும்பி வந்ததை போல உணர்ந்தவன் அருகில் சென்று அவளை பார்த்தான்.

 

‘சீராக மூச்சுவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளருகில் அமர்ந்து உறக்கம் கலைந்திடாதபடி அவளை தன் தோளில் மெல்ல இழுத்து சாய்த்து, அவளின் தளிர் விரல் பூத்த கையை தன் கையோடு சேர்த்து பிணைத்து கொண்டான். ‘எனக்கு தெரியும்டா செல்லம்… நீ என்ன விட்டு போக மாட்டனு… இனிமே உனக்கு எதுவும் ஆகாம பத்திரமா நான் பாத்துக்குறேன்… இந்த ஒரு தடவ என்னை மன்னிச்சிடுடா…’ என உறங்கி கொண்டு இருந்தவளிடம் உளறி கொண்டிருந்தான்.

 

சாரதாம்பாள் அவளை பற்றி இருந்த இடத்தில் கை கன்றி சிவந்திருக்க… அந்த இடத்தை தன் விரலால் மென்மையாக வருடி, தன் இதழ் முத்தத்தில் சில நிமிடங்களுக்கு இதமாக ஒத்தடமிட்டு, இறுதியில் தன் மார்பு சூட்டில் அதை புதைத்து கொண்டான். அவள் மூச்சு சத்தமே அவனுக்கு இதமான சங்கீதமாக இசைக்க எப்போது உறங்கினானோ அவனுக்கே தெரியாது. நெடுநேரம் கழித்து மெதுவாக கண்விழித்தாள் பார்பி.

 

அரைகுறை தூக்கத்தில், ‘ஐயயோ, இங்கயே ரொம்ப நேரம் தூங்கிட்டேனோ… என்ன கண்ணு கூசுது… நான் லைட் போடலையே… எப்படி ஆன் ஆச்சு…’ என்று எழுந்திருக்க முயல அவள் ஒரு கை அவளுடன் வராமல் மறுத்தது, திரும்பி பார்த்தாள். அங்கே ஆரவ்….

 

நிச்சயமாக இப்போது நேரம் நள்ளிரவை தாண்டி இருக்கும் என்று பார்பிக்கு புரிந்தது. ஆரவோ அவள் கையை இறுக்கமாக பற்றியபடி அசதியாக அவளருகே அமர்ந்த நிலையிலேயே தூங்கி கொண்டு இருந்தான். ‘எவ்ளோ பெரிய வீடு, எப்பேர்ப்பட்ட ஆள், கோடியில புரளும் இவன் கால் கூட வெறும் தரையில் படாதே, சாரதாம்பாள் என்ன திட்டுன விஷயம் தெரிஞ்சு என்னை சமாதான படுத்துறதுக்காக தேடி தான் வந்திருக்கிறான் போல. பாவம் இதுக்குமேல இந்த பனியில இவன் இங்க இருக்க வேணாம், எழுப்பி பாக்கலாம்.’

 

அவனது கம்பீரமான தோள்களை தொட்டு தட்டி எழுப்ப முயன்றாள், “ஆரவ்… ஆரவ்… எழுந்திரிங்க… ரூமுக்கு போய் தூங்குங்க”

 

அசதி அதிகமாக இருந்தால் உடனே முழிக்க முடியாமல் கண்களை கசக்கி, தான் இருக்கும் இடத்தை கிரகிக்க அவனுக்கு சில நிமிடங்கள் ஆனது. “கீழ போவோம் வாங்க ஆரவ்” என தன் கைகளை அவனிடமிருந்து பிடிங்கி கொண்டு அவள் எழுந்து இரண்டடி நடக்க, ஆரவ் இருந்த இடத்தை விட்டு எழாமல் எட்டி அவள் கையை பிடித்து கொண்டான்.

 

“போகாத… கொஞ்ச நேரம் இங்க உக்காரு பார்பி உன்கிட்ட பேசனும்” அரைத்தூக்கத்தில் இருக்கும் போதே அவன் பிடித்த பிடி அத்தனை அழுத்தமாய் இருந்தது.

 

“இங்க குளிரும் ஆரவ்… கீழ போய் பேசலாம்” என அவனிடமிருந்து தன் கைகளை விடுவிக்க முயல,

 

“ப்ளீஸ்…” என அவளை கிட்டத்தட்ட இழுத்து அமர்த்தி அவள் தோளில் கை போட்டு இறுக்கமாக தன்னோடு பிடித்து வைத்து கொண்டான். எப்போதும் தீர்க்கமான பார்வையும் சுறுசுறுப்பான முகமுமாய் இருப்பவன், இப்போது கலைந்த கேசம், ஏதோ வலியுடன் கூடிய வார்த்தைகள், பாதி மூடிய கண்கள், கசங்கிய ஆடைகளுடன் ஓய்ந்து போனதை போல தோற்றத்தில் இருப்பது அவள் மனதை பிசைய அவனிடம் முரண்டு பண்ணாமல் அருகில் அமர்ந்தாள்.

 

“ஈவ்னிங் என்ன ஆச்சு. அவங்க உன்ன என்ன சொன்னாங்க பார்பி” பாதியளவே திறந்திருந்த அந்த சிவந்த கண்களின் பார்வை அவள்மேல் கூராய் பாய்ந்தது…

 

“வீட்ட விட்டு போக சொன்னாங்க” என்று தலையை குனிந்து கொண்டாள்.

 

“அவ்ளோதானா?… ம்?…”

 

“அவ்ளோதான்.” அந்த வார்த்தைகள் திரும்ப நியாபகத்திற்கு வர, தன் கண்ணீரை கட்டு படுத்த தெரியாத பேதை அவன் கரங்களுக்குள் சிக்கி திண்டாடினாள்.

 

“உண்மைய சொல்லு, வேற எதும் சொல்லலியாடா? என்கிட்ட நீ எதையும் மறைக்க முடியாது….”

 

“…………”

 

“என்ன பாரு பார்பி…. என் கண்ண பாருடா…” என ஆரவ் அவள் முகத்தை தன்புறம் திருப்ப முயல, முகத்தை காட்ட கூடாதென அவள் அவன் கைகளை தட்டிவிட, அவனோ மீண்டும் மீண்டும் தன் திசைக்கு திருப்ப முயற்சிக்க இதற்குள் அவளுக்கு கண்ணீர் கரைகடந்து ஓடிவிட்டது. தன் தோல்வியை ஒப்புக்கொண்டு அவள் முகத்தை தன் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க, அவன் கைகள் அதை கட்டுபடுத்தும் பொறுப்பை எடுத்து கொண்டது. தோற்று போன அவமானத்தால் விழிகள் திறக்க மாட்டோம் என அடம் பிடிக்க, கண்ணீர் மட்டும் எந்த வித கட்டுபாடுமின்றி சுதந்திரமாக வழிந்தோடியது.

 

“என்ன ஆச்சுடா?”

 

“ஆரவ் அவங்க ரொம்ப அசிங்கமா பேசுறாங்க. என்னால தாங்க முடியல. ப்ளீஸ், என்ன வேற எங்கயாவது அனுப்பிடுறீங்களா…”

 

துக்கம் தாங்க முடியாமல் அவள் கேவி கேவி அழ அவளை தன் மார்போடு சேர்த்து அணைத்து கொண்டான். சட்டையை கெட்டியாக பிடித்து கொண்டு இருட்டை பார்த்து பயந்த குழந்தையை போல அவனுடலோடு ஒட்டிக்கொண்டாள். துளி துளியாக அவன் ஆடைகளை தாண்டி மார்பை தீண்டிய சூடான அவள் கண்ணீர் துளிகளால் அவனுக்கு தன் இதயமே பற்றி எரிவதை போலிருந்தது. அவளின் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் தான் பதில் தேடி தரவேண்டும் என முடிவு செய்து கொண்டான்.

 

“இதுக்கப்புறம் நான் சும்மா இருக்க போறதில்ல. எல்லா அசிங்கத்தையும் அவங்க பண்ணிட்டு எவ்ளோ தைரியம் இருந்தா உன்ன திட்டிருப்பாங்க. இப்பவே போய் அவங்கள வீட்ட விட்டு அனுப்பிட்டு வர்ரேன். இனிமே ஒரு பைசா கூட அவங்களுக்கு நான் தரப்போறதில்ல.”

 

அவள் விலகி அமர்ந்து, “இல்ல வேணாம்… என்ன ஷர்மா அங்கிள் வீட்டுக்கோ, ஹாஸ்டலுக்கோ இல்ல வேற எங்கயாவதோ அனுப்பிடுங்க. கொஞ்ச நாள் தான… நான் பாத்து கவனமா இருந்துக்குவேன். எப்டியும் நான் இங்க இருந்து போய்த்தான ஆகனும். நான் போனதுக்கு அப்புறம் எல்லாரையும் பகச்சுகிட்டு நீங்க தனியா இருந்து என்ன பண்ண போறீங்க. என்னால உங்க குடும்பம் பிரிய வேண்டாம். நீங்களும் உங்க அம்மாவும் ஏதோ பிரச்சனைக்காக பேசாம இருந்தாலும் இதுவரைக்கும் விலகி போகாம ஒரே வீட்ல இருக்கீங்க. உங்க தங்கச்சிக்கும் கூட நான் இங்க இருக்குறது பிடிக்கலன்னு நமக்கு தெரியும். அதுனால….” அவள் முடிக்கும் முன் அவனது இறுக்கமான குரல் ஒலிக்க தொடங்கிற்று.

 

“அவங்க ஒன்னும் என்னோட அம்மா இல்ல பார்பி, இன்னும் சொல்லபோனா அது என்னை புடிச்ச ஏழரைச்சனி. எனக்கு அத தூக்கி எறிய ஒரு நிமிஷம் போதும், ஆனா நான் பொறுத்து போறதுக்கு ஒரே காரணம் பிரியங்கா… அவளுக்கு அது எதுவும் தெரியாது, தெரியாமலே இருக்கட்டும்னு இத்தன நாள் பொறுமையா இருந்தேன். அவங்களுக்கு எப்போ என் பொறுமைக்கு காரணம் தெரிஞ்சதோ அப்போல இருந்துதான் ஓவரா ஆட ஆரம்பிச்சாங்க. இப்ப அதுவே என் கழுத்த இறுக்கிடும் போல இருக்கு”

 

பார்பி மனதினுள், ‘ஷர்மா அங்கிள் இங்க வந்த முதல் நாளே பழசு எதுவும் நானா கேக்க கூடாதுன்னு சொன்னாரே, இப்ப எதபத்தி பேசுறான்னே புரியாம நான் இவனுக்கு என்ன பதில் சொல்ல…. பொதுவா தலைய மட்டும் ஆட்டி வைப்போம்’ என அவனை பார்க்க, அவனோ இருளில் எதையோ வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.

 

“இதுவரைக்கும் நான் யாருகிட்டயும் சொல்லாதத உன்கிட்ட சொல்லனும்னு தோணுது. சொல்லட்டுமா…”

 

“ம்….”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: