Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 19

பாகம் – 19

ஆரவ் பார்பியையும் அஸ்விகாவையும்  சாப்பிட சொல்லி டைனிங் ரூமிற்கு அனுப்பிவிட்டு, நிதிஷ் கொண்டு வந்திருந்த பைல்களை எல்லாம் சரி பார்க்க தொடங்கினான். ஆபீஸ் ரூமுக்குள் இருந்து ஆரவ்வினால் கறுப்பு நிற கண்ணாடி சுவரின் மூலம் வெளியே நடப்பதை சுலபமாக பார்க்க முடியும். ஆனால் வெளியே இருப்பவர்களுக்கு உள் அறையில் இருப்பது எதுவும் தெரியாது. ஆரவ்விற்கு இந்த வகை கண்ணாடி சுவர்கள் மீது அலாதி இன்பம். தனது கார், தனது ஆபீஸ் ரூம், தனது ப்ரைவேட் ரூம், தனது ஜிம், தன்னுடைய பால்கனி, தன் குளியலறை என்று அனைத்திலும் பாரபட்சமின்றி இப்படிப்பட்ட கண்ணாடி சுவர்களை நிறைத்திருந்தான்.

 

வேலைகளிடையில் யதேச்சையாக திரும்பிய போது சாரதாம்பாள் கோபமாக வீட்டிற்குள் நுழைவதினை கண்டான். அதுவும் நேராக பார்பி இருக்கும் திசையில் செல்வதை கண்டதும் அவரின் கோபத்திற்கான காரணம் புரிந்துவிட, ஆரவ் பார்த்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு வேகமாக அறையிலிருந்து வெளியேறினான்.

 

சாரதாம்பாள்: உலகிலேயே ஆரவ்விற்கு சுத்தமாக பிடிக்காத ஒரே நபர். அவருக்கு உறவென்று பார்த்தால் ஆரவ்வும், பிரியங்காவும் மட்டுமே. விவரம் தெரிந்த நாளிலிருந்து ஆரவ் அவரிடம் பேசுவதே இல்லை. அவர் கையால் செய்த எதையும் சாப்பிடவும் மாட்டான். சாரதாம்பாளும் இதற்கெல்லாம் கொஞ்சமும் கவலை கொள்வதில்லை. அவன் தரும் பணம் மட்டுமே அவரது இலக்கு. இவர்கள் இருவரையும் இணைக்கும் ஒரே உறவு பாலம் பிரியங்கா மட்டுமே.

 

ஆரவ் சாரதாம்பாளுக்கென தனியாக ஒரு அக்கவுண்ட் ஓபன் செய்து பணத்தை போடுவதோடு சரி, வேறெந்த வகையிலும் உறவை காட்டி கொள்வதே கிடையாது. வீட்டிற்குள் இதுவரை அவர் செய்த நாட்டாமை தனத்தை தன் தங்கைக்காக அவன் இத்தனை நாள் கண்டும் காணாமல் பொறுத்து கொண்டான். மற்றவர்களிடம் காட்டிய திமிரை பார்பியிடமும் காட்ட முயன்றார் சாரதாம்பாள். ஆனால் பார்பி தனக்கானவள், தன் உயிரில் பாதி என ஆரவ் நினைத்து கொண்டிருப்பவளை எடுத்த எடுப்பிலேயே நாய் என்றால் சும்மா விடுவானா. கோபத்தில் கண்கள் சிவக்க, ருத்ர மூர்த்தியாக மாறி நின்றான் ஆரவ்.

 

“இது என்னோட வீடு. நிதிஷ்…. செஃப்… எல்லாரும் இங்க வாங்க….” என்றவனின் அதட்டலில் வீடே அதிர்ந்தது. உக்கிரத்தின் உச்சியில் இருந்தவனது சத்தத்தால் அனைவரும் அரண்டு அவனருகில் ஓடி வர, அவனே தொடர்ந்தான், “இனிமே பார்பி இங்கதான் இருப்பா. எனக்கு குடுக்குற மரியாதையை எல்லாரும் இவளுக்கும் குடுத்தாகணும். இஷ்டம் இல்லாதவங்க இப்பவே வீட்டை விட்டு வெளியே போகலாம்” என்றான்.

 

ஆரவ்விடம் இவ்வளவு கோபத்தை எதிர்பாராத அனைவரும் விக்கித்து நின்றிருந்தனர், பார்பியையும் சேர்த்து… சாரதாம்பாள் சுக வாழ்க்கை வாழ பழகிவிட்டதால் அவன் பணம் அவருக்கு தேவையென்று பட, ஆரவ்வை பகைத்து கொள்ள விருப்பமின்றி அமைதியாக தன் அறைக்கு திரும்பி சென்றார்.

 

மற்றவர்களும் கலைந்து செல்ல ஆரம்பிக்க பார்பி அஸ்விகாவுடன் தன் அறைக்கு விரைந்து சென்றுவிட்டாள். தனியாய் நின்றிருந்த ஆரவ்வின் கண்களும் மனதும் முகம் வாடி செல்லும் பார்பியின் பின்னாலேயே சென்றது. ‘வந்த முதல் நாளே இப்படி ஒரு வார்த்தையை கேட்டு விட்டாளே என் செல்லம்… அவள் மனம் எவ்வளவு வலித்திருக்கும், அவளுக்கான நம்பிக்கையை நான்தான் கொடுக்க வேண்டும்’

 

அவன் நிதிஷ்ஷிடம் இன்னும் சில அலுவலக வேலைகளை ஒப்படைத்து விட்டு, கிச்சனுக்கு போய் இரண்டு ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் பவுல்லுடன் பார்பியை தேடி வந்தான். ஐஸ்கிரீமை கண்டதுமே துள்ளி குதித்து ஓடி வந்த அஸ்விகா தன் பங்கு ஐஸ்கிரீமுடன் பால்கனியில் போய் ஊஞ்சலினுள் ஐக்கியமானாள். பார்பி தனியாக அவனருகில் இருப்பதை சங்கடமாக உணர்ந்திட, அவளும் எழுந்து தயங்கி தயங்கி பால்கனி பக்கம் சென்றாள்.

 

அவனும் அவள் பின்னாலேயே வந்து, “பார்பி, நீ இவ்ளோ டென்ஷன் ஆகுற அளவுக்கு அவங்க வொர்த் இல்லடா, டம்மி பீஸு. ப்ளீஸ் அவங்க சொன்னதெல்லாம் நீ மனசுல வச்சுக்காதடா.”

 

“ஆரவ், அவங்களுக்கு நான் இங்க வந்தது பிடிக்கலனு நினைக்கிறேன். என்ன வெளியில வேற எங்கயாவது தங்க வைக்க முடியுமா?”

 

“அப்டி பாத்தா நான் தான் முதல்ல இந்த வீட்ட விட்டு வெளியில போகணும் பார்பி. ஏன்னா, அவங்களுக்கு என்னையும் சுத்தமா பிடிக்காது. வேணும்னா நாம அவங்கள வெளியில போக சொல்லிடுவோமா?”

 

“உள்ள வந்ததுமே என்னால உங்க குடும்பம் பிரியனுமா? வேண்டாம். நான் இன்னும் எவ்ளோ நாள் இங்க இருக்கனும்? என் பேரன்ட்ஸ் எப்போ தான் வருவாங்க ஆரவ்?”

 

“உன்னோட பேமிலி ஏன் இன்னும் உன்ன தேடலைன்னு எனக்கு தெரியல. நாம அவங்கள தேடி கண்டுபிடிக்கிற மாதிரி நம்மகிட்ட எந்த க்ளூவும் இல்ல. போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் குடுக்கலாம்னு பாத்தா, அவங்க எல்லாம் மனிஷ்க்கு சப்போர்ட்டா பிகேவ் பண்ணறாங்க. உன்னோட போட்டோவ வெளியில குடுத்து தேடலாம். பட் எனக்கு அது சரியான யோசனையா படலடா, இப்போல்லாம் டெக்னாலஜி ரொம்பவே அட்வான்ஸா இருக்கு. உன் போட்டவ கிராபிக்ஸ் மூலமா ஒரு பேமிலியோட அட்டாச் பண்ணி, திடீர்னு நாலு பேரு வந்து உன்ன கூட்டிட்டு போறோம்னு சொன்னா நான் என்ன பண்ண முடியும் சொல்லு? என்கிட்ட இருக்குற ஸ்டரென்த்தே நீ உன் குடும்பத்த பத்தி சொன்ன அந்த நாலஞ்சு வார்த்தை தான். அத வச்சு வர்றவங்க உண்மையாவே உன்னோட பேமிலியா இல்லையானு நான் கண்டுபிடிக்கனும். நிதிஷ் கிட்ட சொல்லி ஒரு நல்ல டிடக்டிவ் ஏஜென்ஸிய கூட்டிட்டு வர சொல்லி இருக்கேன். ரகசியமா பண்ண வேண்டி இருக்குறதால கொஞ்ச நாள் ஆகத்தான் செய்யும். நீ கொஞ்ச நாள்தான் இங்க கெஸ்ட்டா இருக்க போற, உனக்கு துணையா எப்பவும் நான் உன்கூடவே இருப்பேன். நீ எதுவும் யோசிக்காம போய் உருகிகிட்டு இருக்குற உன்னோட ஐஸ்கிரீம சாப்பிடு”

 

பார்பிக்கு தற்சமயம் அவன் பேச்சை கேட்பதை தவிர வேறு வழியில்லாமல் போக, நடக்கும் எல்லாமே தன் கைமீறி நடப்பது போல உணர்ந்தாள். மாலையில் தன் தங்கையை பார்க்க, பார்பியையும் அஸ்விகாவையும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றான். பிரியங்காவும் அவள் கணவன் குடும்பத்தினரும் பார்பியிடம் அன்பாகவே பழகினர். அஸ்விகா குட்டி பார்பியிடம் நன்றாக ஒட்டி கொண்டதால், அடுத்த நான்கு நாட்களுக்கும் பார்பியே அவளை பார்த்து கொள்வதாய் பொறுப்பேற்று கொண்டாள். ஆரவ் கோபத்தின் அளவினை கண்டிருந்த சாரதாம்பாளும், பார்பி விஷயத்தில் தலையிட பயந்து ஹாஸ்பிடலில் அமைதியாக ஒதுங்கி இருந்தார்.

 

ஹாஸ்பிடலில் நெடுநேரம் இருந்துவிட்டு, இரவில் தாமதமாக வீடு திரும்பிய மூவரும், டின்னருக்காக நேராக டைனிங் ரூமுக்கு சென்றனர்.

 

“அஸ்விகா குட்டிக்கு, நான் இப்ப ஒரு கதை சொல்ல போறேனாம். ஒரு ஊருல ஒரு நரி இருந்துச்சாம், அது ரொம்ப பேட் நரி, எல்லாரயும் ஏமாத்துமாம்…” என்றபடி பார்பி கதையை கூற ஆரம்பித்தாள். தன் கண்களாலும், கைகளாலும் விளங்க சொல்லி கதையை சுவாரஸ்யமாக்கிட, அஸ்விகா அந்த கதையினுள் மூழ்கி போனாள். பார்பி கதை சொல்லியபடியே மெல்ல மெல்ல இரண்டு சப்பாத்திகளை அவளுக்கு ஊட்டி முடித்து விட்டாள்.

 

குழந்தை சாப்பிட்டு முடித்ததால் கதையை பாதியில் நிறுத்திவிட்டு அவர்கள் இருவரும் கை கழுவ எழும்போது, “அப்புறம் அந்த நரிக்கு என்ன ஆச்சு?…..” என்றது இத்தனை நேரம் தன்னை மறந்து கதை கேட்டு கொண்டிருந்த அந்த பெரிய குழந்தை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: