Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 11

பாகம் – 11

குளிர்ந்த சாரல் காற்றுடன் அழகான காலை பொழுது இதமாக புலர்ந்திட, அனைவரும் தத்தமது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தனர். கதிரவன் தன் கடைக்கண் பார்வையை மலைமேல் வீசி பூக்களை கட்டவிழ்த்து கொண்டிருந்தான். பறவைக் கூட்டம் வெவ்வேறு திசைகளிலும் பறந்து திரிந்து பாட்டு பாடி கொண்டிருந்தது. கடத்தல்காரர்கள் கூட்டம் ஆரவ்வையும் பார்பியையும் தேட தொடங்கிய நேரம், அவர்கள் இருவரும் மலையிலிருந்து கீழே இறங்க தொடங்கினார்கள்.

 

சில நிமிடங்கள் நடையிலேயே மலையின் அடிவாரம் அவர்கள் கண்களுக்கு தென்பட்டது. இரவு உணவில்லாமல் உறங்கியதாலும் இப்போது நீரில் நன்றாக ஆட்டம் போட்டதாலும் பசி இருவரது வயிற்றையும் நன்றாக பதம் பார்த்திட, கொடுமைக்ககென்றே வழியில் உண்பதற்கு ஏற்றதாக ஒன்று கூட அவர்களது கண்ணில் படவில்லை. காட்டை கடந்து தரையில் இறங்கி ஊருக்குள் சென்றுவிட்டால் நிச்சயம் ஏதாவது உண்பதற்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடையை இருவரும் துரிதப்படுத்தினர். அரை மணிநேரம் கழித்து மலை அடிவாரத்திற்கு வந்திருக்கையில், அங்கே ஓரமாய் ஓரே ஒரு குடிசை வீடு மட்டும் தனியாக நின்றிருந்தது. அந்த வீட்டிற்குள் ஒரு வயதான பாட்டி மட்டுமே தனியாக வாழ்ந்து கொண்டு இருந்தார்.

 

யாரோ புதியவர்கள் இருவர் அவருடைய குடிசையை நோக்கி வருவதை பார்த்து, “யாரு புள்ளைகளா நீங்க?” என்றார் கரிசனையாய்.

 

“ஆக்சுவலி பாட்டி…” என ஆரவ் பேச ஆரம்பிக்கும் முன், அவனை இடித்து கொண்டு போய் அருகிலிருந்த திண்ணை மேல் தள்ளி விட்டுவிட்டு பார்பி சொல்ல ஆரம்பித்தாள்,

 

“பாட்டி எங்கள காப்பாத்துங்க. ஒரு பெரிய கடத்தல் குரூப் எங்கள கொலை பண்ண விரட்டிட்டு வர்ராங்க. ரெண்டு நாளா விடாம எங்கள விரட்டிகிட்டு இருக்காங்க பாட்டி. எந்த பக்கம் போனா சீக்கிரமா ஊருக்குள்ள போக முடியும்? பக்கத்தில ஹோட்டல் எங்க இருக்குனு சொல்லுங்க பாட்டி” என்று மூச்சுவிடாமல் பேசி முடித்தாள்.

 

” ஓ… சாப்பாடு வேணுமா… ரெண்டு நாளா சாப்பிடலயா… உள்ளார வா தாயி. எங்கிட்ட இருக்குறத எடுத்துக்கோ.”

 

அவள் கையால் காட்டிய இரண்டு என்ற எண்ணையும், வயிற்றை தொட்டு பேசியதால் பசி என்றும் பாட்டி புரிந்து கொண்டு உள்ளே செல்ல, பார்பியை பார்த்து ஆரவ் திண்ணையில் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருக்கிறான். அவளோ வந்த கடுப்பில் தன் இடுப்பில் கை வைத்து, அவனை முறைத்து கொண்டே, “பாட்டிக்கு காது கேக்காதுன்னு எனக்கெப்படி தெரியும்?” என்றாள்.

 

“என்னை தள்ளிவிட்டுட்டு போய் பேசுனல உனக்கு நல்லா வேணும்… சரி போ. பாட்டிகிட்ட சாப்பிட என்ன இருந்தாலும் எடுத்துட்டு வா, ரொம்ப பசிக்குது.”

 

“ஏன். நீங்களே உள்ள போய் வாங்கிக்க வேண்டியது தான?” வாய் சொன்னாலும் உள்ளே சென்று பாட்டி தந்ததை எல்லாம் வாங்கி கொண்டு வந்தாள். ஆரவ் அமர்ந்து இருந்த திண்ணையிலேயே அவனுக்கு ஒரு வாழை இலையை போட்டு தண்ணீர் தெளித்து, தட்டில் கொண்டு வந்திருந்த இட்லிகளில் நான்கை எடுத்து அவன் இலையில் வைத்தாள். பாட்டி உள்ளிருந்து சட்னியுடன் வந்தார். அவனுக்கு சட்னியை போட்டதும் இருவரும் மீண்டும் எதையோ எடுக்க உள்ளே சென்று விட, அவன் இலையிலிருந்த அனைத்தயும் காலி செய்துவிட்டு, தட்டிலிருந்த மீதி இட்லிகளையும் எடுத்து உண்ண தொடங்கினான். இரண்டு வாழை பழங்களுடன் பார்பி வெளியே வந்தாள்.

 

ஆர்வமாக சாப்பிட்டு கொண்டிருந்தவன் “பார்பி கொஞ்சம் சட்னி போடு” என்றான். “ம்” என்ற ஒற்றை சொல்லுடன் அமைதியாய் பரிமாறினாள்.

 

தண்ணீருடன் வெளியே வந்த பாட்டி, “ஏன் தாயி எல்லாத்தையும் புள்ளைக்கே குடுத்துட்டயா? இப்ப நீ என்னத்த சாப்புடுவ?” என்றதும் ஆரவ்விற்கு தூக்கி வாரி போட்டது. அதற்குமேல் அவனால் விழுங்க முடியாமல் உணவு தொண்டை குழியிலேயே நின்றுவிட்டது. இலையிலோ ஒரே ஒரு இட்லிதான் மிச்சமாயிருக்கிறது, இதை எப்படி அவளுக்கு கொடுக்க? குற்ற உணர்வோடு அவள் கண்களையே இறைஞ்சும் பார்வை பார்த்து கொண்டிருந்தான்.

 

“சட்னி போடும் போதே, வேற சாப்பாடு இல்லன்னு சொல்லி இருக்கலாம்ல…”

 

அவளோ மென்மையாய், “பழம் இருக்குல இது போதும் எனக்கு. நீங்க சாப்பிடுங்க” என்றாள் தலை கவிழ்ந்தபடியே. அவளுக்கும் நல்ல பசி என்று அவனுக்கு தெரியும். வேறு வழியின்றி மிச்சத்தையும் அமைதியாக சாப்பிட்டுவிட்டு கை கழுவி வந்தமர்ந்தான். அவள் பழத்தை சாப்பிட்டு கொண்டிருக்க, அவன் பாட்டியிடம் கை சைகையால் பேசிக்கொண்டு இருந்தான்.

 

“நீங்க மட்டும் ஏன் இந்த காட்டுக்குள்ள தனியா இருக்கீங்க பாட்டி?”

 

“இதுதான் என் வூட்டுகார்ரு வாழ்ந்த வீடு ராசா. மவனும் மருமவளும் பக்கத்து டவுனுகுள்ள இருக்காக. அவுகளுக்கு இடைஞ்சலா இருக்கப்படாதுன்னு இங்கனயே வந்துட்டேன்” என்றார்.

 

“செலவுக்கு என்ன பண்ணுவீங்க?”

 

“வெறகு வெட்டி பொழப்ப ஓட்டுரேன் ராசா”

 

“என்கிட்ட இப்ப குடுக்குறதுக்கு ஒண்ணுமே இல்ல பாட்டி.”

 

“இருக்கட்டும் ராசா, நீ பாட்டினு வாய் நிறைய கூப்புடுறல, அது போதும் ராசா”

 

இதற்குள் அவளும் வந்துவிட இருவரும், “சரி பாட்டி நாங்க கிளம்புறோம்” என்றனர்.

 

“செத்த இரு ராசா” என்றவர் உள்ளே சென்று கை நிறைய விபூதியுடன் வந்தார். அவனுக்கு நெற்றியில் பெரிய பட்டை போல பூசி “அய்யா கருப்பசாமி எம்புள்ளய நீதான் நோய் நொடி அண்டாம காப்பத்தனும்” என்று அவன் உச்சந்தலையில் கொஞ்சம் தூவிவிட்டார்.

 

அவளுக்கு பூச வருகையில் அவளோ தன்னிச்சையாக சட்டென்று அவர் கால்களில் விழுந்து நமஸ்காரித்தாள். பாட்டியின் மகிழ்ச்சியை அவர் உணர்வில் வெளிப்படுத்தினார். “இருக்கட்டும் தாயி… எந்திரிதா… நீங்க ரெண்டுபேரும் நூறு வருஷம் நல்லா இருக்கனும்… புள்ள குட்டிகளோட சந்தோஷமா இருக்கனும்…” என்றார்.

 

இந்த ஆசிர்வாதத்தை எதிர்பார்க்காத அவளோ அதிர்ந்து போய் மேற்கொண்டு செய்வதறியாது அவனை பார்க்க, அவனோ சின்ன சிரிப்புடன் அவளையே பார்த்து கொண்டு இருந்தான். அவள் பாட்டியிடம் ஏதோ சொல்ல வாயெடுக்க அவன் வேண்டாமென்று தடுத்துவிட்டான். இது எதையும் கவனிக்காத பாட்டியோ, “அடுத்த தடவ மலைக்கு வரும்போதும் கண்டிப்பா இந்த பாட்டிய பாக்க வா ராசா. கிழக்கால போலீச குமிச்சு வச்சிருக்காவ… யாரையோ தேடுறாகளாம்… நீங்க மேக்கால பக்கமா போங்க புள்ளைங்களா…” என்றார்.

 

அத்தனைக்கும் ஆரவ் தான் சரி பாட்டி சரி பாட்டி என்று மண்டையை ஆட்டிக்கொண்டு இருந்தான், இறுதிவரை அவள் குனிந்த தலையை நிமிரவே இல்லை. பாட்டியிடம் விடைபெற்று இருவரும், அவர் குறிப்பிட்ட போலீஸ் கேம்ப் இருக்கும் திசை நோக்கி நடக்க தொடங்கினார்கள். அவள் உன்னோடு பேசுவதற்கு எனக்கு எதுவுமில்லை என்பதை போல (கோபமாக) அமைதியாகவே வந்தாள். இருவரும் இரு துருவம் போல் கொஞ்ச நேரம் நடந்து கொண்டிருக்க, அந்த அமைதியான சூழ்நிலை பிடிக்காமல் ஆரவ் அவளிடம் வம்பிழுக்க விரும்பினான்.

 

“ஏன் அமைதியா வர்ற பார்பி?”

 

“அந்த பாட்டி என்னென்னவோ சொல்லிட்டு இருக்காங்க, நீங்களும் கேட்டுகிட்டே இருக்கீங்க. அப்டி எல்லாம் இல்ல பாட்டி, நாங்க ரெண்டு பேரும் வெறும் ப்ரன்ட்ஸ்னு ஏன் சொல்லல. சரி, நானாவது சொல்லலாம்னு பாத்தா, ஏன்  நீங்க என்னையும் சொல்ல விடல…” என பொறிந்து தள்ளினாள்.

 

“அந்த பாட்டிக்கு காது கேக்காதுன்னு மறந்திட்டயா”

 

“உண்மையிலே இது தான் காரணமா ஆரவ்?”

 

“பின்ன என்ன நீ நினைக்கிற? ”

 

“அது வந்து…. நான்”

 

“என்ன சந்தேகபடுறியா நான் உன்ன காதலிக்கிறேன்னு? எப்படி நீ அப்படி நீ நினைக்கலாம் பார்பி?”

 

“இல்ல இல்ல… அப்டி இல்ல…”

 

“அப்புறம் ஏன் கோபப்பட்டு கத்துற? உனக்கு என் கண்ணுல காதல் எதும் தெரிஞ்சதா?”

 

“நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க ஆரவ்”

 

“இல்ல, நீ இப்ப என் கண்ணை பார்த்து சொல்லு, அதுல காதல் தெரியுதா? பாரு பார்பி… என் கண்ண பாரு…”

 

கட்டாயத்தின் பேரில் பார்பி அவன் கண்களை பார்த்தாள். என்ன பார்வையடா இது? விழியினுள் நுழைந்து என் கண்களையும் தாண்டி உயிரை தொடுவதை போல ஏன் இப்படி பார்க்கிறான்? என் இதயத்தை ஊசி போல குத்துகிறதே, ஒரு ஆணின் பார்வையில் இவ்வளவு கூர்மை இருக்குமா? ஏன் அவன் கண்களை தாண்டி வேறு எதுவுமே எனக்கு தெரியவில்லை. ஒருவேளை உலகமே சூனியமாகி விட்டதா? ஏன் நொடிகள் இவ்வளவு மெதுவாக நகர்கிறது? ஏன் என் உள்ளுணர்வு இங்கிருந்து என்னை ஓட சொல்கிறது.

 

காரணம் தெரியாமலேயே அவள் கால்கள் தானாக பின்னோக்கி நகர, கல் தடுக்கி விழப்போனவளை அவன் வந்து கையில் தாங்கி கொண்டான். அவன் பார்வை இன்னும் அப்படியே இருக்க இப்போது இதழ்கள் மட்டும் புன்னகை பூத்திருந்தன. இவன் என்னில் எதை தெரிந்து கொண்டான்? ஏன் சிரிக்கிறான்? என் கைகளை பிடித்து இழுத்து கொண்டு செல்கிறானா? எனக்கு உணர்வே இல்லையே, ஒருவேளை நான் கனவுலகினில் இருக்கிறேனா?

 

மயக்கத்தில் இருந்து எழுந்ததை போல அவளுக்கு சுற்றி நடப்பது எதுவுமே விளங்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து ஏதோ உணர்ந்தவளாய் தன் கைகளை அவனிடம் இருந்து பிடுங்கி தனக்குள் ஒளித்து வைத்து கொண்டாள். அதன்பின் பார்பி மறந்தும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை, ஆனால் அவன் அவளை மட்டும் தான் பார்த்து கொண்டு நடக்கிறான் என புரிந்தது. உடலெல்லாம் கூசுவதை போலிருக்க அவள் அவனை விட்டு தள்ளி நடந்தாள், அவனும் புரிந்து கொண்டு கொஞ்சம் இடம் விட்டு தொடர்ந்தான். தூரத்தில் போலீஸ் கேமப் தெரிய தொடங்கியதும், பசுவை தேடும் கன்றாக தன் குடும்பத்தினர் அங்கே காத்திருப்பார்கள் என்று நினைத்து வேகமாக நடக்க தொடங்கினாள்.

 

பார்பி, ‘எல்லாம் முடிந்தது, இனி எந்த பிரச்சையும் இல்லை’ என நினைத்த நேரம், திடீரென ஆரவ் அவளருகில் வந்து பாட்டுபாட ஆரம்பித்தான்.

 

“தங்கமே உன்னத்தான்

தேடிவந்தேன் நானே,

வைரமே ஒருநாள்

உன்னத் தூக்குவேனே..!

 

ராசாத்திய ராத்திரி பாத்தேன்,

ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்,

ரகசியமா ரூட்டப் போட்டு..

கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன!”

 

அவள் பயந்து ஓட ஆரம்பிக்க, அவனும் விடாமல் பாடிக்கொண்டே அவள் பின்னாலேயே ஓடி வந்தான்.

 

“அவ ஃபேசு அட டட டட டா,

அவ ஷேப்பு அப் பப் பப் பா,

மொத்தத்துல ஐ யை யை யை யோ,

இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன!”

 

விட்டால் போதும் என்பதை போல காதுகளை மூடிக்கொண்டு பார்பி ஓடியதை கண்டு, அவன் சிரித்தபடியே நின்றுவிட்டான். பத்தடி தூரம் ஓடி இருப்பாள், எங்கிருந்தோ வந்த புல்லட் “டுமீல்…” என்ற சத்தத்துடன் அவள் இடது கையில் முழங்கைக்கு மேல் பாய்ந்தது. புல்லட்டின் வேகம் தாளாமல் சுழன்று விழுந்தவளின் பின்னந்தலையில் கீழே கிடந்த கல் சரியாக அடித்து பதம் பார்க்க அடுத்த நொடியே அவள் மூர்ச்சையானாள்.

 

“பார்பி………………” மலை முழுவதும் எதிரொலித்தது அந்த சத்தம்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: