Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 09

பாகம் – 9

ஆரவ்விற்கு யோசிக்க இரண்டு நிமிடங்கள் மட்டும் தான் இருந்தது. அந்த கடத்தல் கும்பலிடம் மாட்டினால் எங்கள் இருவரின் நிலைமையும் நிச்சயமாக விபரீதம் தான். இப்போதிருக்கும் சூழ்நிலையில் சண்டை போட்டு தப்பிக்க வாய்ப்பே இல்லை. கையில் கன் வேறு வைத்திருக்கிறான் அந்த கடத்தல்காரர்கள் தலைவன். அவனின் தோட்டா என்னை நோக்கி பாய்ந்தாலும் பரவாயில்லை, அது உன்னையல்லவா குறி பார்க்கிறது. எனக்கென்ன ஆனாலும், அவர்களால் உனக்கு சிறு காயமும் ஆக விடமாட்டேன் பார்பி.

 

அருவியின் வேகம் அதிகமாக இருப்பதால் நிச்சயமாக கீழே நல்ல ஆழமாக இருக்கும் என்று அவன் அனுபவ அறிவு சுட்டி காட்டியது. இந்த சிறிய நீர் தேக்கத்தினை பயன்படுத்தி இருவராலும் தப்பிக்க முடியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பார்க்கலாம் என்று அவளையும் சேர்த்து கொண்டு கீழே குதித்து விட்டான்.

 

பார்பி கீழே குதித்த அடுத்த நொடியே கையையும் காலையும் தையா தக்கா என்று ஆட்டி ஆர்ப்பரித்தாள். அவளை மேலே செல்லாமல் தண்ணீரின் உள்ளேயே நீச்சலடிக்க இழுத்தான். அவளோ அவன் கைகளை உதறி தள்ளிவிட்டு, நீச்சலடிப்பதை தவிர வேறு எல்லாமே செய்து கொண்டிருந்தாள். ‘ஐயயோ… இவளுக்கு நீச்சல் தெரியாதா. பயத்தில உளறியிருக்கா போல, தெளிவா தெரிஞ்சுக்காம அவசரபட்டுடேனே.’

 

ஆரவ் வேகமாக நீந்தி அவளருகில் வரும்போது, அவனின் ஒரு கால் ஏதோ செடியில் சிக்கி கொண்டது. அவன் இழுத்து இழுத்து பார்த்தும் விடுவிக்க முடியாமல் போனதால் செடியையே பிய்த்து எறிந்து விட்டு அவளை தேடினான். அவளை காணவில்லை,

 

முன்னும் பின்னும் நீரின் அடியிலேயே தேடி பார்த்தான். மூன்று முறை நீரின் முழு பகுதியையும் சுற்றி வந்து விட்டான் அவளை அங்கே காணவில்லை. நீந்தி மேலே சென்றாளோ, இல்லை நீந்த தெரியாததால் நீருக்கு கீழே மூழ்கி சென்றுவிட்டாளோ, எதுவும் தெரியவில்லை. வெளியே போய் தேடுவதற்கு முன், இறுதியாக அவன் கால் சிக்கிய செடிகள் அருகில் வந்து ஓவ்வொரு அங்குலமாக தேடினான். நிறைய செடிகள் அங்கே புதர்போல வளர்ந்து கிடக்க திடீரென நீரோட்டம் ஓரிடத்தில் அவனை இழுப்பது போன்ற உணர்வு.

 

நீர் சுழலாக இருக்குமோ என்று நினைத்தவன், அவள் ஒருவேளை இதனுள் மாட்டி இருப்பாளோ என்று எண்ணி அச்சம் கொண்டு அதை நோக்கி நீந்தினான். சிறிது நெருங்கி சென்றதுமே, அது வேகமாக அவனை நீந்த விடாத அளவிற்கு இழுக்க ஆரம்பித்தது. அது நீர் சுழலாக இல்லாமல் மதமதவென நீரோட்டம் போல அவனை பிடித்து இழுத்து கொண்டு சென்றது. அவனால் அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் நீரோடு இழுத்து செல்லப்பட்டான்.

 

சில நிமிடங்கள் கழித்து வேறு பாதையில் வெளியே வந்து விழுந்தவன், எழுந்து அமர்ந்து எப்படி வந்தோம் என்று பார்த்தான். நீருக்கு அடியில் இயற்கையாய் உருவான ஒரு சிறிய குகை பாதை போல இருக்கிறது. அருகிலிருந்த மற்றொரு பாறையின் மீது பார்பி மயங்கி சரிந்து கிடந்தாள். வேகமாக அவள் மூச்சை பரிசோதித்து பார்த்தான், நன்றாக மூச்சு விட்டாள். அதிகமாக நீரை குடித்ததால் மயங்கி இருக்கலாம் என நினைத்தவன், மலர் குவியல் போல அவளை தன் இரும்பு கரங்களில் அள்ளி சென்று வெளியே நீர் இல்லாத பாறையில் கிடத்தினான். வயிற்றில் கை வைத்து அழுத்தி நீரை வெளியேற்ற முயன்றான். உள்ளங்கை கால் பாதங்களை தன் கைகளால் சூடு பறக்க தேய்த்து விட்டான். அவனுக்கு தெரிந்த அத்தனை முதலுதவிகளும் செய்தாகிவிட்டது, இருந்தும் அவள் இன்னும் கண் விழிக்கவில்லை.

 

இதற்கு மேல் நேரத்தை கடத்துவது வீண் என ஆரவ்விற்கு தோன்றியது. பேசாமல் நாமே நீரை உறிஞ்சி எடுக்கலாமா என யோசனையில் உழன்றவன், இறுதி முடிவாய் அவள் கண் விழித்தால் அதுவே போதும் என்று மெதுவாக வெண் தாமரை முகத்தை தன் கைகளில் ஏந்தினான். இறுதி முயற்சியாக ஒருமுறை பஞ்சு போன்ற கன்னத்தில் தட்டி பார்த்தான் பலனில்லை. ஆரவ் அவளை நெருங்கி வர, இப்போது அருகில்… மிக அருகில் அவள் பிங்க் நிற இதழ்கள்… இதழ் நான்கும் தொட்டுக்கொண்ட போது  அவன் முதுகுதண்டில் விர்ரென்று ஒரு மின்சாரம் பாய்ந்தது. என்ன தோன்றியதோ அவனும் தன் கண்களை மூடிக்கொண்டான்.

 

அவனிதழில் மோகன புன்னகை குடியேற, தன் இதழ் கொண்டு அவள் உதட்டை பற்றி உறிஞ்ச தொடங்கினான். அவளெச்சில் பட்டு வந்த நீர் தன் நாவில் படும் வேளையில் நாடி நரம்புகள் அனைத்தையும் வீணை மீட்டியதுபோல அதிர்ந்து நின்றன. நான்கு முறை உயிர் உறிஞ்சல்களுக்கு பிறகு அவள் மெதுவாக கண் விழித்திட, அவன் இடைவெளி விட்டு விலகி அமர்ந்தான். எழுந்ததுதான் தாமதமென்று அவள் செய்த முதல் வேலை அவன் தலையில் தீபாவளி கொண்டாடுவது.

 

” ஏன் இப்படி பண்ண? ஏன்டா இப்படி செஞ்ச எருமமாடு……தடிமாடு…… அறிவுகெட்ட முண்டம்…” என மரியாதை காணாமல் போக அடி ஒவ்வொன்றும் இடியாக விழுந்தது.

 

“ஐயோ…. அம்மா…… சாரிம்மா….. இனிமே இப்படி பண்ண மாட்டேன்…. ப்ளீஸ்…… போதும்…… விட்ரு…….” ஆனால் ஒருமுறை கூட ஆரவ் அவள் கைகளை தடுக்கவில்லை. தலை குனிந்து சின்ன சிரிப்புடனே அத்தனையும் வாங்கி கொண்டான்.

 

” என்ன ஏன் தண்ணிகுள்ள இழுத்துட்டு போன? நான் எவ்ளோ பயந்துட்டேன்னு தெரியுமா? அவ்ளோதான்… இப்டியே தண்ணிக்குள்ள ஜலசமாதியாகி சாக போறேன்னு நினைச்சேன்.”

 

“அப்போ நீ அதுக்குதான் அடிச்சயா?இதுக்கில்லயா?”

 

“எதுக்கு?”

 

“அது…. வந்து… ஒண்ணுமில்ல.”

 

“ஆமா, நாம எங்க இருக்கோம் ஆரவ். இது எந்த இடம்.”

 

“எனக்கும் சரியா தெரியலடா, இது ஏதோ குகை மாதிரி இருக்கு. நான் ஒரு தடவ சுத்தி பாத்துட்டு வந்து சொல்றேன், நீ இங்கயே பத்திரமா இரு” என்று எழுந்து நடந்து பார்க்க தொடங்கினான். வெளிச்சம் குறைய தொடங்கி விட்டதால் சரியாக எதுவும் தெரியவில்லை. ஆனால் மிருகங்கள் வாழ்ந்ததற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை.

 

குகையின் வாயில் அளவில் மிக சிறியதாக அதுவுமே இலைதழைகளால் திரை போல மூடியபடி இருந்ததால், வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக குகை என்று ஒன்று இங்கிருப்பதே தெரியாது. உள்ளே செடி கொடிகளின் காய்ந்த குச்சிகளும் சருகுகளுமே நிறைய கிடந்ததால், அது நிச்சயம் மழை வெள்ளம் தீண்டாத இடம் என்று பார்த்ததுமே புரிந்து போயிற்று. அவற்றில் சிலதை கையில் பொறுக்கி எடுத்து கொண்டு பார்பி இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

 

“பார்ப, இந்த குகை நமக்கு ரொம்பவே சேப், இன்னிக்கு நைட் நாம இங்கயே தங்கிக்கலாம்டா”

 

“போலீஸ்லாம் எப்போதான் நம்மள தேடி வருவாங்க ஆரவ். இன்னும் எவ்ளோ நேரம் நாம இப்டி காட்டுக்குள்ளயே சுத்திகிட்டு இருக்கனும். எனக்கு சீக்கிரமா எங்க வீட்டுக்கு போகனும்னு இருக்கு”

 

“ஓகேடா புரியுது, கொஞ்சம் பொறுத்துக்க. நம்மள இந்த வாட்டர் டனல் மலை மேல இருந்து கிட்ட தட்ட கீழ கூட்டிட்டு வந்திடுச்சு. நாளைக்கே நாம தரைக்கு போயிரலாம், முதல்ல உன்ன கொண்டு போய் உன் வீட்ல விட்டுட்டு, அதுக்கப்புறம் தான் நான் என் ஊருக்கு கிளம்பி போவேன் சரியா…” பேசிக்கொண்டே சருகுகளை சேர்த்து லைட்டரால் தீ மூட்டி அதனருகில் அமர்ந்து கொண்டான்.

 

“அப்போ நாம இப்பவே கீழ இறங்கிடலாம்ல.”

 

“சுத்தமா வெளியில வெளிச்சமே கிடையாதுடா. யானை, புலி எல்லாம் சுத்தும், நமக்கு வழியும் தெரியாது. கவலபடாத, நாம நாளைக்கி காலைலயே இங்கிருந்து கிளம்பிடலாம். நீ முதல்ல நெருப்புக்கு கிட்ட வந்து உக்காரு, ஈரமான டிரஸ் எல்லாம் காயட்டும், ரொம்ப நேரம் ஈரமாவே இருந்தா உடம்புக்கு முடியாம போயிடும்” என்றபடி அவன் நெருப்பை விட்டு கொஞ்சம் விலகி அமர்ந்தான்.

 

கடத்தல் கூட்ட தலைவனின் போன் அடித்தது, “ஹலோ சார், சாரி அவன் மறுபடியும் என் கையில இருந்து தப்பிச்சிட்டான்.”

 

போனில், ” யூஸ்லெஸ் பெல்லோ. எத்தன தடவை தப்பிக்க விட்டுக்கிட்டே இருப்ப? உன்கிட்ட போய் இந்த வேலைய குடுத்தேன் பாரு, என்னை சொல்லனும்”

 

“சார், உங்களுக்கு கண்டிப்பா அவன் உயிரோட வேணுமா?”

 

“ஆமா… என் கண்ணு முன்னாலயே அவன் நடை பிணமா கிடக்கனும். என் கம்பெனிய என் கையாலேயே இழுத்து மூட வச்சுட்டான்ல, அதோட வலிய அவனும் உணரனும். ஈசியா செத்துட கூடாது, நான் அவன கிரிக்கெட் விளையாட விடாம கை கால ஒடச்சி மூலைல உக்கார வைக்கனும். அதான் எனக்கு வேணும்…”

 

“சார். அதுக்கு இன்னொரு வழியும் இருக்கு. ஆரவ் அவன்கூட இருக்குற பொண்ண ரொம்ப காதலிக்கிறான்னு நினைக்கேன். அவளுக்காகதான் எங்க ஆளு கையை ஒடச்சி, காட்டுகுள்ள வந்து, தண்ணீல குதிச்சு கஷ்டபட்டு கிட்டு இருக்கான். அவள சுட்ருவேன்னு சொன்னதும் என்னை ஒரு பார்வை பார்த்தான் பாருங்க, அவ்ளோ கோவம் இருந்துச்சு அதுல.”

 

போனில், “அவள கொன்னுடு. ஆரவ்வ உயிரோட விட்ரு……..”

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: