Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 08

பாகம் – 8

உலகத்தை பொறுத்தவரை ஆரவ் கிரிக்கெடில் ஒரு லெஜன்ட். கிரவுண்டில் அவனுடைய ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். தன்னுடைய இருபத்து மூன்று வயதில் உலகின் கண்களில் அவன் தெரிய தொடங்கினான். கிரிக்கெட்டில் ஆரம்ப காலத்தில் கைக்கு கிடைத்த சொற்ப பணத்தையும் மிக சரியாக முதலீடு செய்தான். தன்னுடைய இருபத்தைந்து வயதில் அவன் இருந்தால் மட்டுமே அந்த ஆட்டத்தில் இந்தியா வெல்லும் என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டான். அவன் சொத்து மதிப்பும் அப்பொழுதே ஊரார் வாயை பிளக்கும் அளவு உயர்ந்து விட்டது. அவன் முதலீடுகள் அனைத்தும் லாபம் கிடைக்கும் வெவ்வேறு விதமான தொழில்களில் இருக்கும். இருபத்தி ஆறு வயதினுள் அவன் நுளையும்போதே கேப்டன் பதவி அவனை தேடி வந்தது. அவனுடைய முடிவுகள் நிச்சயம் அணிக்கு வெற்றியை தேடி தருமளவிற்கு அத்தனை துல்லியமாக கணித்திருப்பான். தற்போது அவன் மாத வருமானம் கோடிகளில் போய் நிற்கிறது.

 

பத்திரிக்கைகள், டீவிகளில் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட பேட்டி கேள்விகளுக்கு அவன் பதில்கள் அழகாக ரத்தின சுருக்கமாக இருக்கும். யாராவது தனிப்பட்ட தன் வாழ்க்கையை குறித்து ஏதாவது கேள்வி கேட்டால், கேட்டவன் பாடு திண்டாட்டம் தான். நடிகர் கமல் ரசிகனாய் இருப்பான் போல இவனுடைய பேட்டிகளையும் சில நேரங்களில் அவ்வளவு எளிதில் நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

 

நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் மொத்தமாக சேர்த்தால் கூட பத்து பேர் இருக்க மாட்டார்கள். அவர்களிடமும் கூட ஆரவ் அவர்களின் தேவையான நேரத்தில் அக்கறை எடுத்து கொள்வதோடு சரி. வேறு எந்த விதத்திலும் அவர்களின் வாழ்வில் உறவாட முனைவதில்லை. இவர்களை தவிர மற்ற மூன்றாம் தர நபர்களிடம் மரியாதை நிமித்தமாக மட்டுமே பழக்கம் வைத்திருந்தான்.

 

சுருக்கமாக சொல்வதானால் அனைவரும் ஆரவ்வின் அறிவு திறனை கண்டு, அவன் மீது அளவுக்கு அதிகமாக மரியாதை செலுத்தினரே தவிர யாருமே அன்புகாட்ட வில்லை. அவனுக்கென்ற உலகில் ஓய்வு, உணவு, உறக்கம், மகிழ்ச்சி, கொண்டாட்டம் எல்லாம் சின்னஞ்சிறு புள்ளி போல. அவனது தொலைந்து போன சின்ன சின்ன சிறுவயது இழப்புகளை மீட்டு கொடுத்தாள் பார்பி. அவள் அவனை முறைக்கிறாள்… அடிக்கிறாள்… கேலி செய்கிறாள்… அதோடு சேர்த்து அழகினால் வதைக்கவும் செய்கிறாள். ஆனால் கொஞ்சமும் நம்பவே மாட்டேன் என்கிறாள்.

 

இன்று ஆரவ் மனம் இதுவரை இல்லாததாக லேசானதை போல இருந்தது. அருவியின் உயரத்தில் மஞ்சள் வெயிலில், பொன்னிறமாக ஜொலிக்கும் அவளை அவன் ரசிக்க, அவளோ அருவி விழும் அழகை ரசித்து கொண்டு இருந்தாள். அவளது துப்பட்டா காற்றின் வேகத்தில் அவன் மார்பை தழுவிட அதை அங்கேயே இருக்கும்படி சிறை பிடித்தது கொண்டான். அதிலிருந்த அவளின் மந்தகாசன வாசனை மீண்டும் அவனுக்கு கிறக்கம் உண்டாக்க, எட்டி அவள் கையை பிடிக்க நினைத்து நெருங்கினான்.

 

சட்டென திரும்பிய பார்பி அவனை பார்த்து, “ஆரவ் இந்த அருவி ரொம்ப அழகா இருக்குல்ல. என்னை அருவியோட கார்னர் கிட்ட கூட்டிட்டு போறீங்களா. தனியா போக பயமா இருக்கு. ப்ளீஸ்… அருவி எப்டி விழுதுன்னு பக்கத்துல இருந்து பாக்க ஆசையா இருக்கு” என்றாள்.

 

பழம் நழுவி பாலில் விழ அவன் அதை விடுவானா? தன் நிழல் அவளை தீண்டும்படி அருகில் வந்து நின்று, வெயிலில் பொற்றாமரை போல் மின்னிய அவளின் பூங்கரத்தை பற்றி, அருவியின் முகட்டு பகுதிக்கு அழைத்து சென்றான்.

 

உண்மையில் அந்த அருவியின் அழகு அற்புதமாய்தான் இருந்தது. ஆர்ப்பாட்டம் இல்லாமல் தெளிவாய் அழகாய், மேலிருந்து கீழாக சீரான வேகத்தில் விழுந்தது. கீழே நீர் தேக்கமாக உருமாறி சற்று தொலைவில் ஆறாக வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. கண்களை இமைக்காது பார்பி அருவியினை ரசிக்க, இவனோ அவள் பிஞ்சு விரல்களின் நீள அகலங்களை தன் விரல் கொண்டு அளந்து கொண்டிருந்தான்.

 

‘நீ இப்படியே எப்பவும் என்கூட இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்’ என அவன் இன்ப கனவுகளில் மிதந்திருக்க, கடவுள் ‘நான் அதை விட்டால்தானே மகனே…’ என்று அவனை பார்த்து சிரித்து கொண்டிருந்தார். நாம் ஏதாவது ஒன்றினை வேண்டுமென்று நினைக்கும் போதுதான் அதை கடவுள் நமக்கு கொடுக்காமல் பிடுங்கி விளையாட்டு காட்டுவார். இருவரும் தத்தமது நினைவுகளில் லயித்து கிடக்க, அவர்களின் பின்னால் சத்தமின்றி வந்து நின்றவர்களை கவனிக்கவில்லை.

 

பத்து பேர் கொண்ட கடத்தல் குழு இவர்களை கண்டுபிடித்துவிட்டது. கடத்தல் கும்பல் தலைவன் கையில் கன் வைத்துக்கொண்டு, “இந்த தடவை நீ தப்பிக்க முடியாது ஆரவ். தப்பிக்க முயற்சி பண்ணினா நான் உன்ன சுடவும் தயங்கமாட்டேன்” என்று உரக்க கத்தினான்.

 

ஆரவ், “நீ சுடனும்னு நினைச்சு இருந்தா, என்ன பாத்ததுமே சுட்டு புடிச்சிருக்கலாம். உனக்கு நான் உயிரோட தேவைன்னு எனக்கு நல்லாவே தெரியும்.”

 

தலைவனோ கோபமாக, “கரெக்ட்டுதான் எனக்கு நீ உயிரோட தேவை, ஆனா உன் உன் பக்கத்துல இருக்குற பொண்ணோட உயிர் எங்களுக்கு தேவையில்லல… இப்ப நீ ஒழுங்கா எங்க கூட வரலன்னா நான் அந்த பொண்ண சுட்ருவேன். நடு காட்டுக்குள்ள இருந்துக்கிட்டு உன்னால அவள காப்பாத்த எதுவுமே பண்ண முடியாது, பாவம் உன் கண்ணு முன்னாலயே சாக போறா… ”

 

“நான் இருக்குற வரைக்கும் அவ நிழல கூட யாரும் நெருங்க விடமாட்டேன்” என்று அவன்மேல் எரிக்கும் பார்வையை வீசினான்.

 

தலைவன், “ஐயோ, பார்வையிலேயே எரிச்சிடுவான் போல. டேய் மக்கா… எனக்கு அவன பாத்தா பயமா இருக்குடா. ஹா.. ஹா.. இந்தா ஆரவ் லைட்டர், இத வச்சி வேணும்னா என்ன எரிக்க டிரை பண்ணு. ஹா…ஹா…..” என்று லைட்டரை தூக்கி எறிந்தான்.

 

அதை சரியாக கேச் பிடித்த ஆரவ், இங்கிருந்து எப்படி தப்பிக்கவென வேகமாக முடிவெடுத்தான். அவன் ரகசிய குரலில் அவளிடம், “பார்பி உனக்கு ஸ்விம்மிங் தெரியுமா”

 

“கொஞ்சம் தெரியும், ஆனா…” என்று அவள் முடிப்பதற்க்குள்,

 

“என்னை நம்பி வா…” என்று சரேலென்று அவளை இழுத்துக்கொண்டு மேலிருந்து நீரில் குதித்துவிட்டான்.

 

கடத்தல் கும்பல் தலைவன் தன் சகாக்களிடம், “இவன் இப்டி தான் செய்வான்னு நினைச்சேன், அதுனாலதான் அருவியோட முனையில இருந்து நகர்ந்து வரட்டும்னு வெய்ட் பண்ணாம தைரியாமா வெளிய வந்தேன். அறிவு கெட்ட பய, இந்த சின்ன தண்ணிக்குள்ள குதிச்சு தப்பிக்க போறானாக்கும். மண் பாதை வழியா கீழ இறங்கி தண்ணிய சுத்தி வளச்சு ரெடியா நில்லுங்கடா…” என்று உத்தரவிட்டான்.

 

அந்த நீர் தேக்கம் ஓரளவே பெரியது. அதன் கரைகள் எல்லாமே கண்களுக்கு தெரியும் தூரம்தான். நிச்சயமாக எந்தபக்கமாக அவர்கள் வெளியே வந்தாலும், கடத்தல் கும்பல் தலைவனால் அருவியின் மேலிருந்தே சுலபமாக சுட்டு பிடிக்க முடியும். தலைவன் பார்வையை கூர்மையாக்கி நாலாபுறமும் பார்த்து கொண்டே இருந்தான்.

 

“எவ்ளோ நேரம் ஆரவ் மூச்ச அடக்கமுடியும் உன்னால. வெளிய வா….”

 

5 நிமிடங்கள் ஆனது, 10 நிமிடங்கள் ஆனது, 20 நிமிடங்கள், 30 நிமிடங்கள் ஆனது. அவர்கள் வெளியே வரவேயில்லை.

 

Leave a Reply

%d bloggers like this: