Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 07

பாகம் – 7

மாலை நேரத்தை இளையவர்கள் அனுபவிக்க விட்டு, மழை மேகங்கள் எல்லாம் வேறு திசையில் ஒதுங்கி சென்றன. செவ்வண்ண வெயில் மரங்களுக்கு இடையில் ஊடுருவி வர, காற்று ஒருவித பூக்களின் வாசனையை அள்ளி தெளிக்க, இந்த உலகமே மாயலோகமாக தெரிந்தது பார்பிக்கு. வித்தியாசமான பூக்களை தேடி தேடி பறித்து கொண்டிருந்தாள். பூக்களை சுமந்து செல்லும் பூவையின் விளையாட்டை ரசித்து கொண்டே, சில மரங்களையும் கூர்ந்து கவனித்தபடி வந்தான் ஆரவ்.

 

“ஏன் அங்கிட்டும் இங்கிட்டும் குறுகுறுன்னு பார்த்துகிட்டு வர்ரீங்க? ஏதாவது பிரச்சனையா?”

 

“இல்ல… ஒரு நல்ல மரத்தை தேடிட்டு இருக்கேன்”

 

அவள் வாய் மூடி சிரித்துக் கொண்டே, “அச்சச்சோ… உங்களுக்கு அவ்ளோ அவசரமா வருதா? நான் வேணும்னா கண்ண மூடிக்கிட்டு திரும்பி நிக்கவா?”

 

“ஏய்… சீ சீ அது இல்ல. நான் இன்னிக்கு நைட் நம்ம தூங்குறதுக்கு வசதியா ஒரு மரத்தை தேடுறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில இருட்டிரும்ல, அதுக்குள்ள நமக்கு சாப்பிட ஏதாவது பழமும், தூங்க ஒரு பாதுகாப்பான மரமும் தேடனும்” என மீண்டும் பார்வையை மரங்களுக்கிடையே சுழற்றி கொண்டு இருந்தான்.

 

பார்பிக்கு தான் இது வரை ரசித்து கொண்டு வந்த அந்த அழகான பாதை, இப்போது பூதாகரமாக தோன்றியது. வெளிச்சம் இல்லாமல் இரவு நேரம் இந்த காடு எப்படி இருக்கும்? சட்டென நினைவு வந்தவளாய், “ஆமா, நைட் ரொம்ப இருட்டா இருக்கும் போது திடீர்னு யானை, புலி எதாச்சும் வந்தா என்ன பண்றது?”

 

“அதெல்லாம் வரும்போது பாத்துக்கலாம். அதோ அந்த மரம் கொஞ்சம் நல்லா இருக்கு பாரு, வா அத கிட்ட போய் பாக்கலாம்” என்ற படி அதனருகில் சென்று பார்க்கலானான். அந்த மரம் அகன்று விரிந்து, ரொம்ப பெரிய கிளைகளுடன் செழித்து வளர்ந்து இருந்தது. கீழே இருந்து பார்த்தால் எதுவும் தெரியாதபடி மறைவான கிளையை தேடிப்பிடித்து, அதன் மேலே ஏறி அமர்ந்து பார்த்து பாதுகாப்பை உறுதி செய்து கொண்டான்.

 

“இந்த இடம் ஓகே. இன்னிக்கு நைட் நாம இங்கயே தூங்கலாம். நீயும் மேல வந்து பாக்குறயா” என்றான் ஆரவ்.

 

“வரலாம். ஆனா எனக்கு வால் இல்லையே”

 

“உனக்கு மரம் ஏற தெரியல, ப்ளீஸ் உதவி பண்ணுங்கன்னு சொல்லாம என்னையே குரங்குன்னு சொல்றியா?” என்று விழியினை உருட்டி முறைப்பதாய் நடிக்க, பார்பியோ அவன் முகம் பார்த்து குறும்பாய் சிரித்தாள்.

 

“நீயும் மேல வரணும்னு ஆசபட்டா உன்னோட துப்பட்டாவோட ஒரு பக்கத்தை உன் இடுப்பை சுத்தி கட்டிக்கோ. இன்னொரு பக்கத்தை எனகிட்ட கொடு, நான் அப்படியே உன்ன மேல தூக்குறேன். நீ  மரத்த புடிச்சு மெதுமெதுவா மேல ஏறி வா” என்றான்.

 

அவள் அவன் சொன்னபடி செய்ததும், ஆரவ் தூக்குவதற்கு வசதியாக அமர்ந்து கொண்டு துப்பட்டாவை மேலாக இழுத்தான். அவளுக்கும் இது சரி என்று படவே மெதுவாக கை கால்களை மரத்தின் மீது பற்றி ஏற ஆரம்பித்தாள். எடையை அவன் தாங்கி கொண்டதாலும், கீழே விழாமல் உடல் கட்டப்பட்டு இருந்ததாலும், பயமின்றி ஏறி வந்து அவனருகில் அமர்ந்தாள்.

 

“எல்லாம் ஓகே பார்பி. இப்ப நாம கீழ போய் இருட்டுறதுக்குள்ள ஏதாவது சாப்பிட தேடலாம்”

 

ஏறியது போலவே அவளை மீண்டும் கீழே இறக்கி விட்டு தானும் கீழே குதித்திறங்கினான். அந்த பகுதியில் மூங்கில் மரங்கள், புதர்களே அதிகமாக வளர்ந்து கிடந்தது. பழம் தரும் மரங்கள் அரிதாக கிடைத்தது. தூரத்தில் மான்கள் கூட்டம் ஓய்வெடுப்பதை கண்ட ஆரவ், “ஹேய் பார்பி… இன்னிக்கு நாம மான்கறி சாப்பிடலாமா?” என்றான்.

 

“எனக்கு மான் கறி வேண்டாம், மீன் கறி ஓகே”

 

” யூ மீன் செட்டிநாடு பிஷ் பிரை?” அவன் குரலில் கேலி இருந்தது.

 

பார்பி தன் கரு விழிகளை சுருக்கி, “ப்ளீஸ் ஆரவ் மான் பாவம்ப்பா… அத விட்டுருவோமே” என்று செல்லமாய் கெஞ்சினாள்.

 

இது போதாதா, ஆண்பிள்ளையை ஏமாற்ற? தெரிந்தே கன்னியின் கடைக்கண்ணில் வீழ்வது ஆண்களின் குணமாயிற்றே! ஆரவ்வும் வீழ்ந்தான்.

 

அருகில் ஒரு சிறிய நீரோடை தெரிய, “பார்பி.. நாம இந்த தண்ணிய பாலோ பண்ணி போகலாம். கொஞ்சம் பெரிய நீர்த்தேக்கம் இருந்தா மீன் கிடைக்கும். இல்ல வழியில ஏதாச்சும் பழம் கிடைச்சாலும் சாப்பிடுவோம். பதினஞ்சு நிமிஷத்துக்குள்ள எதுவுமே கிடைக்கலனா, இதே இடத்துக்கு இந்த தண்ணி பாதையிலயே திரும்பி வந்திடலாம்” என்று அழைத்து சென்றான்.

 

சில நிமிடங்கள் நடைக்கு பிறகு, நீரின் ஓட்டத்தால் கோலி போல மாறிகிடந்த கற்கள் அவள் கண்களில் பட்டது. சிலவற்றை கையில் எடுத்து அளவு பார்த்து கொண்டு வந்தாள்.

 

” எதுக்கு இதல்லாம் எடுக்குற?”

 

“சும்மா, எங்க பக்கத்து வீட்டு சரசு அக்காக்கு தட்டாங்கல் விளையாட எடுத்தேன்.”

 

” அப்படினா”

 

“இந்த கல்லை எல்லாம் கீழ போட்டு, அப்புறம் ஒண்ணொண்னா இப்டி தூக்கி போட்டு பிடிச்சு விளையாடுவாங்க. இந்த மாதிரி உருண்டையா இருக்குற கல் எல்லாம் விளையாட நல்லா இருக்கும். நான் சின்ன வயசுல ஸ்கூல் முடிஞ்சதும், இததான் நிறைய தடவ விளையாடி இருக்கேன். ஆமா, நீங்க ஸ்கூல் படிக்கும் போது என்ன விளையாட்டு விளையாண்டீங்க.”

 

” நான்… நான்…. தினமும் ஸ்கூலுக்கு போயிட்டு வந்து ஒரு டீ கடையில கிளாஸ் கழுவிட்டு இருந்தேன். அந்த காசு தான் எனக்கு சாப்பிட, படிக்க, டிரஸ் வாங்க எல்லாத்துக்கும். எங்க ஸ்கூல்ல ப்ரீயா புக், நோட், யூன்பார்ம், கிரிக்கெட் விளையாட பேட், பால் எல்லாம் கொடுத்தாங்க. வேற எதுவும் செய்ய அப்போ எனக்கு நேரமே இல்லை” என்றான் எங்கோ வெறித்தபடி.

 

“அப்போ இல்லனா என்ன. இப்போ உங்களுக்கு டைம் இருக்குல, உங்களால முடிஞ்சா வாரா வாரம் சன்டே இதுக்குனு கொஞ்சம் ஒதுக்கி என்ஜாய் பண்ணுங்க. சின்ன குழந்தைங்க கூட விளையாடினா நம்ம மனசும் குழந்தையாவே மாறிடும் ஆரவ்”

 

அவன் அப்படியே இமைக்க மறந்து சிலையாக நின்று விட்டான். அவன் கேள்விக்கான பதில் இதுதான். அவளிடம் இருந்த ஈர்ப்பு குழந்தைதனம். இதுநாள் வரை பொறுப்புகளை மட்டுமே சுமந்து மற்றவர்களிடம் என் அறிவை காட்டிய நான், இவளிடம் மட்டுமே என் குறும்பு தனத்தை காட்டினேன்.

 

‘என்னை அவ சிரிக்க வச்சா, உலகத்த ரசிக்க வச்சா, சேட்டை செஞ்சு விளையாட வச்சா, கவலை மறந்து மனச இதமாக்கினா. இவகூட இருக்கும் போது நான் சின்ன பையனா மாறுறேன். ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் நான் என் அம்மா பக்கத்துல இருக்குற மாதிரி கம்பர்டபிளா பீல் பண்றேன்.’ சிறிது நேரத்தில் அவர்களிருவரும் அழகிய அருவி ஒன்றை வந்தடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: