Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 13

உனக்கென நான் 13

“அரிசி என்னடி கத்திகிட்டு இருக்க?” என்று சமையலறையிலிருந்து வந்த சத்தத்திற்கு தன் கையில் பேர்வையை சுற்றிக்கொண்டு சந்துருவை முறைத்துகெண்டிருந்தாள் அந்த அரிசி. சந்துருவோ காலையிலேயே பேய் அறைந்தார்போல் அமர்ந்திருந்தான். தாயின் நினைவுவேறு காலையில் எழுந்தவுடன் வந்துவிடும். தாயின் கையில் பெட் காஃபி அருந்தி எழுந்தவன் யாரோ ஒருவரின் கோபத்திற்கு ஆளானான்.

“ஒன்னும் இல்லைமா இந்த பையன் என் போர்வையை வச்சு தூங்குறான்” என இரவில் திடீரென முளைத்த காளானாக தன் வீட்டில் பூத்திருந்த சந்துருவின் மேல் கோபம் போகவில்லை அன்பரசி எனும் அரிசிக்கு. இரவில் அவசரமாக வீட்டிற்கு வந்து அவளது போர்வையில் சந்துருவை உறங்கவைத்த நியாபகம் இப்போதுதான் வந்தது பார்வதிக்கு. ‘ஐயோ தப்பு பன்னிட்டோமே’ என நாக்கை கடித்தவள். தன் பாட்டி வீட்டிற்கு உறங்கசென்றிருந்த அரிசி இந்த அளவுக்கு சண்டை பேடுவாள் என எதிர்பார்த்திருந்தாள்.

“ஏய் சந்துருவை தொந்தரவு பன்னாத உனக்கு வேற போர்வை வாங்கி தாரேன் அவன்கிட்ட கொடு தூங்கட்டும்” என மிரட்டும் தொனியில் கூறினாள்.

“போமா இது அப்பா எனக்கு வாங்கி வந்தது யாருக்கும் குடுக்கமாட்டேன்” என உதட்டை குவித்து இடம் வலமாக ஆட்டினாள். அவள் இவனை பார்த்து ஒழுங்கு காட்டிவிட்டு செல்ல எழுந்த அமர்ந்தான். தன் தாயின் குரல் வரும் வழியை தேடி நடந்தான் தன் பிஞ்சு கால்களுடன். இறுதியாக பாதயாத்திரை முடிய சமையல் அறையை அடைந்தான். பார்வதி சந்துருவுக்கு பூஸ்ட் போட்டு வைத்திருக்க அதை அவனிடம் கொடுத்தாள்.

“அம்மா ” என கூறிவிட்டு சுற்றிலும் பார்த்தான். இது தன் வீடு இல்லை எங்கோ நரகத்தில் இருக்கிறேன் என நினைக்கும்போது அந்த ராட்சசி அங்கு வந்தாள். தான் தன் தாய் என்ற தேவதையின் அருகில் இருப்பதால் பாதுகாப்பு என நினைத்திருந்தான். அப்போது அவனருகில் வந்தவள் பூஸ்ட் போடப்பட்டிருந்த டம்ளரை பிடுஙகிவிட்டு “அம்மா என்னை மட்டும் பல்லு வெளிக்கிட்டு வரசொன்ன இவனுக்கு மட்டும் பூஸ்ட் தார அதுவும் இல்லாம இப்போதான் எந்திருச்சான் தூங்குமூஞ்சி” என கீழே வைத்தாள் டம்ளரை. கையுடன் ஒரு வேப்பங்குச்சியையும் கொண்டுவந்திருந்தாள்.

இவளது பேச்சினை பார்வதியால் பார்க்க மட்டுமே முடிந்தது. அதற்கு காரணமும் இருந்தது. அரிசி அப்பா பொண்ணு. ஒருநாள் பார்வதி கேசரி செய்து தவறவில்லை என்று அம்மன் கோவிலில் சென்று அமர்ந்துகொண்டாள். இறுதியில் மிலிட்டரி மேனிடம் விசாரனை செல்லவே அது அரிசியின் பக்கம் தீர்ப்பாகியது. தண்டனை பார்வதிக்கு இரண்டு அடி முதுகில் பலமாக அதற்கு அரிசி பயன்படுத்திய யுக்தி “வீட்டுக்கு வந்தாலே அம்மா அடிச்சுகிட்டே இருக்கு ” என்பதாகும். அதனால்தான் இன்று இந்த குட்டி ராட்சசியின் வார்த்தைகளை கேட்டு அமைதியாக இருக்க வேண்டிய சூழல் இருந்தாலும் குரல் கொடுத்தாள். “ஏய் சந்துருவ தொந்தரவு பன்னகூடாது அவன் உன் பிரண்ட்” என்பதற்கு “போம்மா மலை மட்டும்தான் என் பிரன்ட் ” என மலர் மலையாகியிருந்தாள். அன்பரசியான அரிசி. அரிசியின் பெயருக்கு ஒரு சுவையான நிகழ்ச்சியும் உள்ளது பிறகு கூறுகிறேன்.

“இந்தாடா குச்சி பல்லு வெளக்கு ” என நீட்டினாள். சந்துருவோ இதை பார்த்தே இல்லை. அதை வாங்கியவன் “இதை எப்புடி யூஸ் பன்றது” என கேட்டான்.

அதை பிடுங்கி வாயில் வைத்து கடித்தாள்.நல்லவேலை அரசியின் தாய் கருவேப்பிலை பிடுங்க வெளியே சென்றிருந்தார். “இப்புடி நல்லா கடிச்சு முடிமாதிரி ஆக்கி வெளக்கனும் ” என தன் வாயில் நான்கு கடி கடித்துவிட்டு கொடுத்தாள். அதை சற்று தயக்கத்துடன் வாங்கினான்.

அதை பார்த்தவள் “நான் பல்லு வெளக்கிட்டேன் அதனால கிருமி இருக்காது நீ தைரியமா வெலக்குடா” என மிரட்டும் தொனியில் கூற சட்டென பேயறைந்தவன் போல முடிந்த அளவு கடித்து பார்த்தான். அதற்குள் வெளியே போஸ் வந்தருந்தார். கையில் பிரஸ் மற்றும் கேபால் பல்பொடியுடன்.

“அப்பா வந்துட்டாங்க” என அரிசி தன் தந்தையின் காலினை கட்டி அனைத்துகொண்டாள். அவளை தூக்கியவர். சந்துருவையும் தூக்க வாயிலிருந்த வேப்பங்குச்சி வெளிச்சத்திற்கு வந்தது. “என்ன சந்துருபையா இந்த பழக்கம் எல்லாம் இருக்கா” என வேப்பங்குச்சியை தன் கையால் அவனது வாயிலிருந்து எடுத்தார். “அப்பா எல்லாம் என் டிரயினிங்” என பெருமை வெளிப்பட்டது அரிசியிடம் இருந்து. ஆனால் அந்த குச்சியில் சந்துருவின் செங்குருதி இடம் பெற்றிருந்தது அவன் எந்த அளவுக்கு மென்மையானவன் என்பதை காட்டியது. உடனே அதை எடுத்து கீழே போட்டவர் பிரஸ்ஸையும் பொடியையும் கொடுக்க ஆனந்தமாக வாங்கிகொண்டு வெளியே சென்றான்.

“ஏய் பார்வதி என்னடி பன்ற சந்துருவுக்கு எதுக்கு வேப்பங்குச்சி கொடுத்த” தன் மனைவியின் மீது கோபம் “எல்லாம் உங்க பொண்ணுதான் அவனை எழுந்திருச்சதில இருந்து டார்ச்சர் பன்றா பாருங்க பூஸ்ட் கூட குடிக்க விடமாட்டேங்குறா” என எதிர்வாதம் புரிந்தாள்.

“அப்போ அவளை இரண்டு அடி போட வேண்டியதுதானே” என்ற வார்த்தை பார்வதியை திகைக்க வைத்துவிட்டது.”நான் திட்டுனாளே அம்மன் கோயில்ல போய் உட்காந்துகிறா இதுல அடிக்க வேற செய்யனுமாக்கும்” என கடுகை எண்ணெயில் போட வெடித்து சிதறியது.

சரி சின்ன புள்ளைங்க அப்படிதான் இருக்கும் இருந்தாலும் சந்துரு மனசு கஷ்டபடகூடாது. அப்படி கஷ்டபட்டுட்டா காவேரி ஆத்மா ரொம்ப கஷ்டபடும் என நினைத்துகொண்டு “அன்பு அன்பு!! இங்க வாம்மா” துப்பாக்கி துப்பிய தோட்டா என வந்து நின்றாள். “என்னப்பா.?!”

“மலர் உனக்கு என்ன வேணும்” என கேட்க “ஓ மலையா அவ என்னோட பிரண்ட்” என அழகாக சிரித்தாள். “இனி சந்துருவும் உன்னோட பிரண்டுதான் சரியா அவனை ஒழுங்கா பத்துகனும்” என தந்தை கூற  காதில் விழுந்ததா என தெரியவில்லை “சரிப்பா… அம்மா பூஸ்ட்” என ஓடினாள். அதற்குள்ளாகவே சந்துருவும் வந்திருந்தான் சமையலறைக்கு.

அடுத்த குருச்சேத்திரப்போர் ஆரம்பித்தது. என்ன வித்தியாசம் அது பாஞ்சாலிக்காக இது பார்லிஜிக்காக.

“ஏய் சந்துருவுக்கும் கொடுடி” என தாயின் வார்த்தைகள் கோபத்தை ஏற்படுத்த அதை சந்துருவிடம் காட்டினாள். தன் பார்லீஜியில் பங்குகேட்டவன் இவன்தான் என்பதால். இறுதியாக ஆண் பெண் சம உரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அரிசியின் மனதில் ஒரு பார்லீஜி அவனுக்கு ஒதுக்கப்பட்டது.

“ஏண்டி ஒரு பாக்கெட் முழுசா நீயேவா திங்கனும் பாதி அவனுக்கு கொடுடி ” என சபாநாயகர் பார்வதி மசோதாவில் அடிகோடிட்டார். அன்பரசியின் முகம் கோபமாக மாறியது. “எனக்கு காஃபியும் வேணாம் ஒன்னும் வேணாம்” என ரொட்டியை ஒரு மூலையில் தூக்கி எறிந்துவிட்டு எழுந்து ஓடினாள்.

“ரொம்ப கொழுப்புடி உனக்கு ” என அந்த ரொட்டியை எடுத்தவர் சந்துருவிடம் வைத்துவிட்டு “நீ சாப்பிடுப்பா அவ அப்படிதான்” என கூறவே “இல்ல அம்மா நான் ரொட்டி சாப்பிட மாட்டேன்” என மழலை குரலில் கூறினாலும் வீட்டில் சந்துருவுக்கு என்று விலையுயர்ந்த வெளிநாட்டு பிஸ்கட்டுகள் கேட்பாரற்றுகிடக்கும் என அனைவரும் அறிந்ததே.

அவன் அம்மா என்று அழைத்தது பார்வதியின் கண்ணில் நீரை சுரக்க செய்திருந்தது. வெங்காயத்தால் வந்தது என தன் மனசாட்சியையே ஏமாற்ற முயன்றாள். தீடீரென அந்த சம்பவம் அவளது கண்ணீரை மாற்றியது.

“ஏண்டி பூஸ்ட் டப்பாவை எங்கடி” என பார்வதி கத்தினார்.

கதவின் பின்னால் ஒளிந்துகொண்டு இரு கண்கள் சமையலறையை கண்கானித்தபடி கையிலிருந்த சிகப்பு பாட்டிலிருந்து வாயிலிட்டு மென்று கொண்டிருந்தது.

“இப்போ டப்பா இங்க வரலைனா நாக்குல சூடு வச்சுடுவேன் பாத்துக்கோ” என பார்வதி செல்லகோபம் காட்டினாள்.

இந்த நினைவுகளை அன்பரசியிடம் சந்துரு புரட்டிகொண்டிருந்தநேரம் ஓட்டபந்தயத்தின் எல்லையாக தோழர்கள் இருவரும் காரினை வந்து அடைந்தனர்.

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: