Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – இறுதி பகுதி

ருண், “நான் இல்லாத நேரத்துல எவன்டா என் பொண்டாட்டிய திட்டினது?” என்றான்.

 

    யாதவ், “ஆமா… இவரு அரும பொண்டாட்டிய நாங்க அப்டியே திட்டி கொட்டிட்டோம்… சொல்றத ஒழுங்கா அவ காது குடுத்து கேட்டா நாங்க எதுக்குடா திட்ட போறோம்?”

 

    “நான் கேட்டேனா? என் பொண்டாட்டிக்கி  புத்தி சொல்ல யாருமில்ல, நீ வந்து சொற்பொழிவாற்றுன்னு சொன்னேனா? தேவையில்லாம எதுக்குடா நீ எங்களுக்கு நடுவுல பஞ்சாயத்து பண்ற?”

 

    “அப்படித்தான் அவள நல்லா செல்லம் கொஞ்சுடா… அவ இன்னும் உன் தலமேல ஏறி டான்ஸ் ஆடட்டும், உனக்கு போய் சப்போர்ட் பண்ணேன் பாரு என்ன சொல்லனும்…”

 

    “பசிக்கிற நேரத்துல படுத்தாதடா…”

 

    “ஏன், கல்யாணத்துல சாப்பிடலயா நீ?”

 

    “நாங்க யாருமே சாப்பிடல ரொம்ப பசிக்குது, நீ போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வர்றியா?”

 

    “ஓ… சரி, என்ன தவிர எல்லாருக்கும் வாங்கிடவா?”

 

‌ ‌‌   “ஆறு பேருக்கும் சாப்பாடு வேணும், அதுல ஒண்ணு மட்டும் தோசை இல்ல ஆப்பம் மாதிரி எதாவது கிடைக்குதான்னு பாரு”

 

    “உன்னெல்லாம் கணக்கு வாத்தியாரா போட்டேன் பாரு, என் புத்திய…” என்று செருப்பை தேட,

 

    “ஏன்டா?”

 

    “இருக்குறது 5 பேரு, நீ ஆறு சாப்பாடு வாங்க சொல்ற”

 

    வருண் அறையை சுற்றி பார்த்துவிட்டு, “ரவி எங்க?” என்றான்.

 

    கோகிலா, “அவன் இயல பாக்குறதுக்கு சங்கட பட்டுகிட்டு ஹாஸ்பிடல்க்கு வெளியவே நிக்கிறான்.”

 

    சித், “ஏன்?”

 

    “இயல் வீட்ட விட்டு போனதுக்கு அவன் தன்னத்தானே காரணம்னு நினைச்சுட்டு இருக்கான் தம்பி, அப்டி இல்லாடான்னு சொன்னா, ‘எனக்கு தெரியும், அவ என்னால தான் மனசு உடஞ்சு போயிட்டான்னு’ புலம்பிட்டு இருக்கான்.”

 

   வருண், “நீங்க போய் நான் அவன உடனே வர சொன்னேன்னு சொல்லி கூட்டிட்டு வாங்க. யாதவ் நீ தருணையும், சித்தையும் உன் கூட கூட்டிட்டு போறியா”

 

    வேண்டுமென்றே இயலுக்கு ரவியுடன் பேச இடம் ஒதுக்கி தருகிறான் என்று மற்றவர்களுக்கு புரிய, அனைவரும் அவரவருக்கு ஒதுக்கிய வேலையை செய்ய கலைந்து சென்றார்கள். அடுத்த இரண்டு நிமிடத்தில் ரவி அந்த அறைக்கு வந்த நேரம் இயல் அவனிடம் முகம் காட்ட விரும்பாமல் ஜன்னல் பக்கம் போய் நின்று கொண்டாள். அங்கே அவர்கள் மூவருக்கு மட்டும் தனிமை தரப்பட்டு இருந்தாலும் கூட யார் பேச்சை தொடங்குவதென்று தெரியாமல், அறைக்குள் சில நிமிடங்களுக்கு நிசப்தமே நிலவியது. திரும்பி சென்று விட நினைத்தவனை, வருண் ஒரு முறை அவளோடு பேசி பார்க்க சொல்லி தன் கண் ஜாடையில் தெரிவித்தான்.

 

    ரவி, “இசைம்மா….”

 

   குரல் குளற ஈர விழிகளுடன் இயல், “வருண் சார், உங்கள தேடி யாரோ வந்திருக்காங்க பாருங்க…”

 

    “எங்கூட பேச மாட்டியாம்மா?”

 

    “பேச மாட்டேன்… பாக்க வேண்டிய நேரத்தில வராம இருந்துட்டு, இப்ப மட்டும் எதுக்கு என்னை பாக்க வந்தீங்க? உங்களுக்காக நான் வருண் வீட்ல எவ்ளோ கஷ்டத்த அனுபவிச்சேன் தெரியுமா? உன் உயிர காப்பாத்துறதுக்காக எதையெல்லாம் இழக்க துணிஞ்சேன் தெரியுமா? எந்த தப்புமே செய்யாத எனக்கு, அந்த வீட்ல எவ்ளோ தண்டனை குடுத்தாங்க தெரியுமா? எதுக்காக எல்லாத்தையும் தாங்கிகிட்டேன்? என்னிக்காவது ஒரு நாள் நீங்க என்னை கூட்டிட்டு போக வருவீங்கன்ற நம்பிக்கையில தான… ஆனா, கண் முழுச்சதும் என்னை பாக்க கூட நேரமில்ல உங்களுக்கு, சரின்னு நானே தேடி வந்தா ரொம்ப ஈஸியா இனிமே அங்கேயே வாழ்நாள் முழுக்க இருந்துக்கோன்னு சொல்லிட்டீங்கல்ல…” என்று கண்ணை கசக்க,

 

    ரவி இயலின் முகத்தை கையில் ஏந்தி, “அதெல்லாமே நான் உன்னோட சந்தோஷத்துக்காக தானம்மா செஞ்சேன்.”

 

    ரவியின் சட்டையை கொத்தாக பிடித்து கொண்டு, “நான் சந்தோஷமா இருக்கனும்னு எப்பவாவது கேட்டு இருக்கேனா? கஷ்டமோ நஷ்டமோ உங்க தங்கச்சியா உங்ககூடவே இருக்கனும்னு தான சொன்னேன்”

 

     “படிப்பு, ஆக்ஸிடென்ட், கல்யாணம்னு நடந்து முடிஞ்ச எல்லா விஷயத்திலயும் என்னால தானம்மா உனக்கு எல்லா கஷ்டமும் வந்துச்சு… அதுனாலதான் நான் உன்ன விட்டு விலகி போக நினைச்சேன். ஆனா நீ அதுனால வாழ்க்கையே வெறுத்துட்டு போயிடுவன்னு நான் எதிர்பாக்கலயேடா”

 

    “எனக்கு உன்ன விட்டா இந்த உலகத்துல உறவுன்னு சொல்லிக்க யாரு இருக்கா? இப்ப கூட நான் இருக்குற இடம் தெரிஞ்சப்புறமும் நீ இவ்ளோ நாளா என்னை பாக்க வரலல ? மத்தவங்களுக்கு நான் உன் மேல வச்ச பாசம் புரியாம போனதுல எனக்கு வருத்தம் இல்ல, உனக்கே புரியல பாத்தியா அதான் வருத்தமா இருக்குண்ணா. நீ இல்லாம தனியா நான் ரொம்ப கஷ்ட பட்டுட்டேன்ணா” என்று அவன் மார்பிலேயே முகம் புதைத்து அழுதவளை, வருண் கண்கள் ஏக்கமாக பார்த்தது… நிமிடத்திற்குள் ரவியின் அத்தனை பிழைகளையும் மன்னித்து, இரண்டு ஆண்டுகள் சேர்த்து வைத்திருந்த கோபத்தையே மறந்து விட்டவளின் மனதில் தான் இன்னும் நுழைய முடியாமலேயே இருப்பதை எண்ணி அவன் உள்ளம் நோகத்தான் செய்தது. பேருக்கு அவன் எதையோ உண்டு, உறங்கி எழுவதற்குள் மாலை நெருங்கி இருக்க, அன்றே டிஸ்சார்ஜ் செய்வதற்கும் ஏற்பாடு நடந்தது. ஐந்தாம் தளத்தில் இருக்கும் இயலின் வீடு தற்போது இருவரது உடல் நிலைக்கும் ஒத்து வராது என்பதால், வருணுக்கு அவன் தந்தை வாங்கி தந்த வீட்டிற்கே அவர்களை அழைத்து செல்வதென முடிவெடுத்தார்கள். இரண்டு படுக்கை அறை வசதி கொண்ட அந்த வீட்டை ஒழுங்கு படுத்த, யாதவ் ஏற்கெனவே ஆட்களை அனுப்பி விட்ட படியால், அவர்கள் நால்வரும் வீடு வந்து சேர்கையில், இரவு நேர உணவு உட்பட அனைத்தும் அங்கே தயாராகவே இருந்தது.

 

    தருண் அலைச்சல் தந்த அசதியில் விரைவிலேயே உறங்கி விட கோகிலா, “குழந்தைய இன்னிக்கி என்கூட படுக்க வச்சுக்கிறேன் இயல், நீயும் வருண் தம்பியும் உங்க எதிர்காலத்த பத்தி உக்காந்து பேசி ஒரு முடிவுக்கு வர பாருங்க. அண்ணன் ஹால்ல தான் தூங்க போறான், ராத்திரி வருண் தம்பிக்கி எதாவது உதவி தேவைன்னா கூப்ட்டுக்க”  என்று தருணை தூக்கி கொண்டு பக்கத்து அறைக்கு சென்றார். பெட்டில் சாய்ந்து அமர்ந்திருந்த வருண், இயல் அறைக்குள் நுழைந்ததுமே இரண்டு கைகளையும் விரித்து அருகில் அழைக்க, தயங்கி தயங்கி அவனருகில் வந்து நின்றாள்.

 

    அவளின் கை பிடித்து இழுத்து தன் மார்பில் சாய்த்து கொண்ட வருண், “என்னடா ரொம்ப நேரமா உம்ம்முனே இருக்க? மதியம் யாதவ் உன்ன ரொம்ப திட்டிட்டானா?”

 

    “…….”

 

    “ஏதாவது பதில் சொன்னாத்தான எனக்கும் புரியும். சண்டை போடனும்னா போட்ரு, இப்டி மனசுக்குள்ளயே வச்சு குழப்பிக்காதடி”

 

     “ஏன் எல்லாரும் என்னையே திட்டுறாங்க? நீங்கதான தப்பு பண்ணீங்க, நீங்க செஞ்சததான நானும் உங்களுக்கு திருப்பி செஞ்சேன், இப்போ என்னடான்னா என்னை மட்டுமே எல்லாரும் டார்கெட் பண்ணி பேசுறாங்க. ஒரு பொண்ணுக்கு தன் மானம், கோபம் இது எதுவுமே இருக்க கூடாதா? நீங்க வந்து ‘நான் என்னோட தப்ப உணர்ந்துட்டேன், வா வீட்டுக்கு போகலாம்’னு சொன்னதும் உடனே நான் வால ஆட்டிகிட்டு வந்திடனுமா? நீங்க நல்லவருன்னு சொல்லி மன்னிக்க சொல்றாங்க, எங்க அண்ணன் கூட நல்லவன்தான், ஆனா நீங்க அவன மன்னிக்கலையே. நான் செய்றது தப்புனா நீங்க செஞ்சது மட்டும் எப்டி சரி ஆகும்? அப்போ பணம் இருக்குறவனுக்கு ஒரு நியாயம் ஏழைக்கு இன்னொரு நியாயம்னு தானே அர்த்தம்.”

 

    “சே… சே… அப்டி இல்லடா, யாதவ்வும் சித்தும் எனக்காக மட்டும் பேசல, உனக்காகவும் தான் பேசினாங்க. நான் செஞ்ச கெட்டத விட நல்லது நிறைய இருக்குறதால, என்னை புரிஞ்சுகிட்டாங்க. நீ எங்கூட இருந்தா சந்தோஷமாவும் பாதுகாப்பாவும் இருக்கலாம்னு நம்புறாங்க, அதுனால தான் உன்னோட மனச மாத்த இவ்ளோ கஷ்டபடுறாங்க.”

 

    “எனக்கு உங்களையும் உங்க ஊரையும் பிடிக்கலன்னு சொல்றேன்ல, அத ஏன் யாருமே புரிஞ்சுக்க மாட்டிக்கிறீங்க? நீங்க இல்லாமலேயே நான் பாதுகாப்பாவும் சந்தோஷமாவும் ரெண்டு வருஷம் வாழ்ந்து காட்டி இருக்கேன்ல…”

 

    “மேடம் எத சந்தோஷம்னு சொல்றீங்க? காலைல அஞ்சு மணிக்கே எந்திருச்சு, உப்பு உரப்பில்லாத ஒரு தோசைய சுட்டு சாப்பிட்டு, தெருவுல போறவங்கள எல்லாம் ஏக்கமா பாத்துகிட்டே ஸ்கூலுக்கு போய், யாரு கூடவும் ஒட்டாம வேலை செஞ்சுக்கிட்டு, வீட்டுக்கு வந்து நாலு சுவத்தையே வெறிக்க பாத்துகிட்டு, ஒரு நல்ல நாளுக்கு கூட புது டிரஸ் போடாம, நாலு பேர் கூட வெளியில போகாம வாழ்றது தான் உங்க சந்தோஷமா? இந்த சந்தோஷமான வாழ்க்கைய நான் வந்து வேற கெடுத்துட்டேனாக்கும்? நடந்து முடிஞ்ச நம்ம கல்யாணம் உன்னோட ஆசைப்படி இல்லன்னு சொல்ற நீ, அதுல என்னோட கல்யாண ஆசையும் அடிபட்டு போச்சுன்னு ஏன் புரிஞ்சுக்கவே இல்ல? இங்க வந்ததுக்கு அப்புறம் ஒருவேள நீ உண்மையிலேயே ஒரு புது வாழ்க்கைய உருவாக்கி சந்தோஷமா இருந்திருந்தா, நான் வந்த அன்னிக்கே திரும்பி போயிருப்பேன், உன்ன இவ்ளோ தூரம் டிஸ்டர்ப் பண்ணி இருக்கவே மாட்டேன்டி.”

 

     இயலோ விசும்பலோடு, “எனக்கும் எல்லார் கூடவும் சகஜமா பேசி பழகனும்னு ஆசை இருக்கு, ஆனா என்னால யாருக்காவது ஆக்ஸிடென்ட் ஆகிடுமோன்னு பயந்து ஒதுங்கி போயிடுவேன்.”

 

    “எங்கூடவும் அதுனாலதான் ஒட்டாம போறியா இயல்?”

 

    “உங்களுக்காக இல்ல, தருணுக்காக. அவன் ஏற்கனவே பெத்தவங்கள பறி கொடுத்துட்டான், நீங்களும் இல்லன்னா… எனக்கு நினைக்கவே பயம்மா இருக்கு. அம்மா அப்பா இல்லாம ஒரு குழந்தை வாழ்றது எவ்ளோ கஷ்டம்னு  ஏற்கனவே அனுபவிச்சவ நான்…”

 

    “நானும் கூட தாய் தகப்பனில்லாத புள்ள தாண்டி” என்றதும், விருட்டென நிமிர்ந்து பார்த்தவளின் காதருகினில் வருண், “எனக்கு ஒரு கிஸ் குடுக்கனும் போல இருக்கு, குடுத்துக்கலாமா? இல்ல காலைல இதுக்கும் கணக்கு பாத்து காசு கொண்டு வந்து நீட்டிடுவியா?” என்றதும் இயல் அதிர்ந்தே விட்டாள். அவள் விழி நீரையே பதிலாக கொண்டு நெற்றி முடி ஒதுக்கி உச்சி பொட்டில் முத்தமிட்டு இறங்கி வந்தவன், நீர் ததும்பிய சிப்பிக்குள் முத்தாய் கிடந்த நீல விழிகளுக்கும் ஒத்தடமாய் இரண்டு முத்தம் தந்தான். இதுவரை சாய்ந்திருந்த அவன் மார்பில் இன்னும் ஆழமாய் புதைந்தவள், விம்மி விம்மி அழ, வருண் கரிசனையாக, “என்னடா?” என்றான்.

 

    “அப்பா ஞாபகம் வந்திடுச்சு, நான் அழுதா அப்பாவும் இப்டித்தான் அவரோட நெஞ்சுல சாச்சுக்குவாரு” என்று இன்னும் கரைந்து அழுதிட,

 

    அவளை சமாதான படுத்த நினைத்து வருண், “இயல், ஒருவேள உங்க அப்பாவே உன்ன தேடி உன் வயித்துத்குள்ள குழந்தையா வந்திருக்கலாம், தெரியுமா?” என்றான்.

 

    “இல்ல… இதுவும் எனக்கு நிரந்தரம் இல்ல… எல்லாரும் போன மாதிரி இதுவும் ஒருநாள் என்னை விட்டுட்டு போயிடுனு எனக்கு தெரியும்… அதுவா போனா என்னால தாங்க முடியாது… அதுக்கு முன்னாடி நானே போய் அபார்ஷன் பண்ணிடுறேன்… “

 

   “ஏய் லூசு… இன்னொரு தடவ இப்டி சொன்ன…. பேசின வாய இழுத்து புடிச்சு கடிச்சு தின்னுடுவேன். அது என்னோட பாப்பா… புரியுதா?” என்றதற்கு எதிர் பக்கம் பதிலே இல்லை.

 

    “இங்க பாரு இயல், நான் உனக்கு ஒரு உண்மைய சொல்லட்டுமா? இது சுமாரா ஒரு அறுபது வருஷம் முன்னாடி நடந்தது. ஒரு நாள் கடவுள் கூட எனக்கு ஒரு மீட்டிங் இருந்தது. கடவுள் கேட்டாரு ‘இயலிசைன்ற பொண்ணு கூட யாரெல்லாம் பூமிக்கு போக போறீங்க?’ன்னு, உடனே உங்க அம்மா அப்பா, நான், தருண், குட்டி பாப்பா எல்லாரும் எந்திருச்சு நின்னோம். கடவுள் சொன்னாரு ‘இயலிசை கூட சந்தோஷமா வாழனும்னா கொஞ்ச நாள் வாழலாம். சண்டை போட்டுக்கிட்டே வாழனும்னா ரொம்ப நாள் வாழலாம்’னு சொன்னாரு. அதுல உங்க அம்மாவும் அப்பாவும் ஆப்ஷன் ஏ செலக்ட் பண்ணாங்க, நாங்க மூணு பேரும் ஆப்ஷன் பி செலக்ட் பண்ணிருக்கோம். ஸோ இந்த ஜென்மம் முழுக்க நாங்க மூணு பேரும் உன் கூடவே இருந்து தொல்ல பண்ணுவோம், உன்ன விட்டு எங்கயும் போக மாட்டோம்” என்று அவன் முடிக்கையில் அவள் கண்ணீர் காய்ந்து இருந்தது.

 

    தன்னிலை மறந்து, “நிஜம்மாவா?” என்றாள்.

 

    “சத்தியமா…” என்று அவள் தலையில் அடித்து சத்தியம் செய்தான். அதன் பின் அழவில்லை என்றாலும் உறங்காமல் ஏதோ யோசனையில் அரை மணி நேரமாய் உளன்று கொண்டே இருந்தவளிடம், வருண், “என்னடா, பாப்பா சேட்டை பண்ணுதா?” என்றான்.

 

    “ஏன்னு தெரியல, தூக்கம் வரல… ஆனா மனசு லேசா இருக்கு”

 

    “நான் வேணும்னா நீ தூங்குறதுக்காக ஒரு பாட்டு பாடவா?”

 

    “ம்…”

 

அழகே உன்னை பிரிந்தேன்,

என் அறிவில் ஒன்றை இழந்தேன்,

வெளியே அழுதால் வெட்கம் என்று, விளக்கை அணைத்து அழுதேன்…!

அன்பே உன்னை வெறுத்தேன்,

என் அறிவை நானே எறித்தேன்,

உறவின் பெருமை பிரிவில் கண்டு, உயிரில் பாதி குறைந்தேன்…!

பழைய மாலையில்

புதிய பூக்கள்தான் சேராதா…

பழைய தாலியில்

புதிய முடிச்சுகள் கூடாதா…

வாழ்க்கை ஓர் வட்டம்போலே

முடிந்த இடத்தில் தொடங்காதா…

அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?!

 

    அவன் நிறுத்தியதும் அவள் பாடினாள்…

 

தலைவா சுகமா சுகமா?…

உன் தனிமை சுகமா சுகமா?…

வீடு வாசல் சுகமா,

உன் வீட்டு தோட்டம் சுகமா?…

பூக்கள் எல்லாம் சுகமா,

உன் பொய்கள் எல்லாம் சுகமா?…

அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?….

 

    வருண் மெல்லிய புன்னகையோடு அவள் வயிற்றை பார்த்து, “குட்டிம்மா அம்மாவுக்கு குசும்பு கூடிப் போச்சு பாத்தியா? அப்பா பாட்டுக்கு எப்டி எசப்பாட்டு பாடுறான்னு பாரு…” என்று சொல்லிக்கொண்டே விரலால் அவள் வயிற்றை வருடிட, வெடுக்கென அவன் கைகளை தட்டி விட்டு மார்பினை பலம் கொண்ட மட்டும் சாத்து சாத்தென சாத்தினாள்.

 

   வருண், “அம்மா வலிக்குது… ஏய் நான் ஏற்கனவே பேஷன்ட்டுடி… வேணாம் போதும்… எதுக்கு இப்ப என்னை பாரபட்சம் பாக்காம அடிக்கிற? நான் உன்னை தொடலடி, என் பாப்பாவத்தான் தொட்டேன்… அடிக்காதடி வலிக்குது…”

 

   “இதெல்லாம் ஒரு அடியாக்கும்? நான் யாதவ் கூட பேசினதுக்கு சந்தேக பட்டு என்னை ஒரு அடி அடிச்சீங்களே, அன்னிக்கி நான் கண்ண கூட திறக்க முடியாம வலியில எவ்ளோ துடிச்சேன் தெரியுமா? அந்த ரெண்டு மணி நேரம் வலி தாங்க முடியாம, வெக்கத்த விட்டு வருண்… வருண்… ரொம்ப வலிக்குதுனு, அடிச்சுட்டு போன உங்களையே உதவிக்கு கூப்ட்டேன். ஆனா நீங்க கடைசி வரைக்கும் வரவேயில்ல, அவ்ளோதான் நம்ம சாப்டர் முடிஞ்சதுன்னு நினைச்சா, அடுத்து கண் முழிச்சு பாக்கும் போது ஹாஸ்பிடல்ல இருந்தேன். தலை எவ்ளோ வலிச்சது தெரியுமா? கன்னம் எவ்ளோ எரிஞ்சது தெரியுமா? என்ன செய்துன்னு கேக்க கூட பக்கத்துல ஆளே இல்ல. ஹாஸ்பிடல்ல சேத்ததுமே உங்க கடமை முடிஞ்சதுன்னு கிளம்பி போயிட்டீங்கள்ல…”

 

    “ஐயயோ நான் சந்தேக படவும் இல்ல, உன்ன விட்டுட்டு போகவும் இல்ல. இவ்ளோ நாளா நீ அப்டியா நினைச்சிட்டு இருக்க? சாரிடா அந்த நேரத்துலதான் ரவிக்கும் கான்சியஸ் வந்துச்சு, நீ வேற மயக்கத்துல இருந்த, அதான் அங்க போனேன். திரும்பி வந்து பாக்குறதுக்குள்ள உன்ன காணும், அடுத்த நாள் நான் எத்தன தடவ வந்து சாரி சொன்னேன். எனக்கு நீ நெருங்குறதுக்கே வாய்ப்பு குடுக்கலன்னா நான் எப்டி எனக்குள்ள இருக்குற நல்லவன உனக்கு நிரூபிப்பேன்? இதுனால பாரு வர்றவன் போறவன் எல்லாம் உனக்கு அட்வைஸ் பண்றான், வேற வழியில்லாம நானும் அத கைய கட்டிக்கிட்டு வேடிக்கை பாக்குறேன். இயல், நம்ம பாப்பாக்காக கொஞ்ச நாளைக்கு நான் சொல்றத கேளுடி, என் கூட ஒரு தடவ வாழ்ந்து தான் பாரேன், முயற்சியே பண்ணாம முடியாதுன்னு சொல்லாத இயல், அதுக்கப்புறமும் என்னை விட வேற எவனையாவது புடிச்சிருந்தா நீ தாராளமா போ…”

 

   “சரியோ தப்போ என்ன அடிச்சீங்கள்ல, உங்க அளவுக்கு இல்லனாலும், நானும் உங்களுக்கு வலிக்கிற மாதிரி திருப்பி அடிக்க வேணாமா? அதான் சித் பேரை சொல்லி நல்லா வெறுப்பேத்தினேன். உண்மை என்னன்னா அவன் விரும்புறேன்னு சொன்ன அன்னிக்கே அவங்க அம்மாவ பாத்து, எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்ற உண்மைய சொல்லி, அவனுக்கு சீக்கிரம் நல்ல பொண்ணா பாருங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன், பாவம் இந்த விஷயம் அவனுக்கு இதுவரைக்கும் தெரியாது.”

   

    “அடிப்பாவி…” என்ற நேரம் அவர்களின் அறைக்கதவு தட்டப்பட்டது. கதவை திறந்தது பார்க்க அங்கே தூக்க கலக்கமாய் தருண் கோகிலாவுடன் நின்றிருந்தான்.

 

    இயல், “என்னடா கண்ணா? என்ன ஆச்சு?”

 

    தருண், “ஒண்ணுமில்லம்மா, சும்மா நீங்க இங்க இருக்கீங்களான்னு பாக்க வந்தேன். குட் நைட் மா” என்று தன் அறைக்கு திரும்பி சென்று விட்டான்.

 

   கோகிலா, “புள்ள திடீர்னு முழிச்சுச்சு… உங்க ரெண்டு பேரையும் எங்கன்னு கேட்டுச்சு.‌.. பக்கத்து ரூம்ல இருக்கீங்கன்னு சொன்னதும், ஒரு தடவ பாத்துட்டு வந்திடுறேன்னு அதுவே வந்து கதவ தட்டுச்சு… உங்கள பாத்துட்டு இப்போ அதுவாவே திரும்பி போய் படுக்குது… ஒரு ஆறு வயசு புள்ள இம்புட்டு சமத்தா இருந்து நான் பாத்ததே இல்லடி.”

 

    வருண், “எல்லாம் உங்க பொண்ணு ட்ரெய்னிங்தான், தருண் இப்பல்லாம் ரொம்பவே மெச்சூர்டா பிகேவ் பண்றான். எவ்ளோ முடியுமோ அவ்ளோ ப்ரெய்ன் வாஷ் பண்ணி வச்சிருக்கா இவ… நானே அவன ஏமாத்த முடியலன்னா பாருங்க…”

 

    தனக்கும் இயலுக்கும் குணத்தில் ஏணி வைத்தாலும் எட்டாது என்று உணர்ந்த கோகிலாக இயலின் முகத்தை வருடி, “சரிமா நீங்க சீக்கிரமா தூங்குங்க, நான் போய் புள்ளய பாக்குறேன்” என்று அடுத்த அறைக்குள் சென்று விட்டார்.

 

    இயல், “ஏன் எங்க அம்மாவ வேணும்னே ஹார்ட் பண்ற மாதிரி பேசுறீங்க?அன்னிக்கி ஹாஸ்பிட்டலுக்கு ரவிய பாக்க கூட்டிட்டு போனப்பவும் இதே மாதிரி பிகேவ் பண்ணீங்க.”

 

    “ஏன்னு உனக்கே தெரியும் இயல்”

 

    “போங்க, நான் தூங்க போறேன்…”

 

    வருண், “நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லலியே…”

 

    “எதுக்கு?”

 

    “என்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு”

 

    “ம்… தர்றேன். பட் புடிக்கலன்னா வேணாம்னு சொல்லிடுவேன், நீங்க அதுக்கு மேல கட்டாய படுத்த கூடாது.”

 

    “ம்…”

 

    அதிகாலை குயில் பாட்டும் மெல்லிய குளிர் காற்றும் தேகம் வருட வாசற்படியில் அமர்ந்திருந்த இயல் தோளில் கோகிலா கை வைத்ததும் பயந்தடித்து திரும்பியவள், “நீங்களாம்மா… பயந்துட்டேன்…” என்றாள்.

 

     “ஏன்டி இப்டி பதறி சிதறுற, வருண் தம்பிக்கி கார் ஓட்டுறது புதுசா என்ன? ஆம்பளைங்க வெளியில போனா கொஞ்சம் முன்ன பின்ன ஆகத்தான் செய்யும், அதுக்குனு இப்டி வாசப்படியிலயேவா குத்த வச்சு உக்காந்திருப்ப? இன்னிக்கி பனி வேற ஜாஸ்தியா இருக்கு பாரு… போ இயல் உள்ள போ…” என்றார்.

 

   “ரொம்ப நேரமாச்சேம்மா, போன் வேற ஸ்விட்ச் ஆப்னு வருது, அதான் கொஞ்சம் பதட்டமா இருக்குது.”

 

    “நீ எழுந்து போய் புள்ளைங்கள பாரு… சின்னது முழிச்சிட போகுது…” என்றார்.

 

    இயல், ‘ஆமா..‌. காருண்யா குட்டி முழிச்சுட்டா வேற வினையே வேண்டாம். அவளோட அப்பா பக்கத்துல இல்லனு தெரிஞ்சதும் வீட்டையே ரெண்டு பண்ணிடும், அந்த ரெண்டு வயசு வாலு.’ என்று நினைத்து கொண்டே அவள் எழுந்து நின்ற நேரம் வருண் கார் வீட்டு காம்பவுண்டிற்குள் நுழைந்தது.

 

    கார் கண்ணில் தெரிந்த அடுத்த நொடியே புயல் வேகத்தில் வெளியே ஓடி வந்த இயல், “எத்தன தடவ சொல்றது உங்களுக்கு? கொஞ்சம் லேட் ஆச்சுன்னா ஒரு நிமிஷம் கால் பண்ணி லேட்டா வருவேன்னு சொல்ல முடியாதா உங்களால?” என்று பொறிந்து தள்ளினாள்.

 

    “அது ஒண்ணுமில்ல இயல், நைட் போன சார்ஜ் போட்டுட்டுதான் படுத்தேன். காலைல கிளம்புற நேரம் எடுத்து பாத்தா சார்ஜே ஏறல, ஸ்விட்ச்ச போடவே மறந்துட்டேன் நான், அதான் ஆப் ஆகிடுச்சுடா…” என்று இளித்தவனை முறைத்து கொண்டு நின்றவள் இப்போதுதான் காரையே கவனித்தாள்‌. இவ்வளவு நேரம் காரினுள் யாதவ்வும் சித்தும் தத்தமது மனைவியோடு அமர்ந்து இவர்கள் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

    சித், “மூணு வருஷத்துக்கு முன்னாடி சமாதானப்படுத்த ஆரம்பிச்சவன் இன்னும் சமாதான படுத்திகிட்டு இருக்கான்டா” என்றான் யாதவ் காதினுள் கிசுகிசுப்பாக.

 

    யாதவ், “ஜஸ்ட் மிஸ்ல நீ கிரேட் எஸ்கேப் ஆயிட்ட சித்தார்த்.”

 

    இயல், “ஹேய்… வாங்க வாங்க.  சொல்லவே இல்ல வர்றீங்கன்னு…”

 

   யாதவ், “ப்ரெண்ட் வீட்டுக்கெல்லாம் எவனாச்சும் சொல்லிட்டு வருவானா? சும்மா உங்கள எல்லாம் பார்க்கணும்னு தோணுச்சு அதான் உடனே கிளம்பி வந்துட்டோம்.”

 

    “எங்கள பாக்கவா? நம்ப முடியலியே…”

 

    “நம்ப மாட்டேன்னு வேற சொல்லுவியா நீ?”

 

    “ஐயோ, நம்பிட்டேன்ப்பா… இல்லன்னு சொன்னா நீங்க கழுத்த நெறிச்சு கொல பண்ணிடுவீங்களே” என்றதும் அத்தனை பேரும் யாதவ்வை பார்த்து சிரிக்க, அவனோ அப்பாவியாய் முகத்தை வைத்து கொண்டு, “நான் பண்றேனோ இல்லியோ நீ நல்லா பண்றமா” என்றான்.

 

    சித், “யாதவ்… மனுஷன்னா பொறும வேணும்டா, அவ நாலு தடவ திட்டுனதுக்கே உனக்கு நாக்கு தள்ளிடுச்சு, வருண் உனக்கெல்லாம் பெரிய கோயிலே கட்டனும்டா, இவள நீ சமாளிக்கிறதுக்காக”

 

   வருண், “என்கூட சண்ட போடுறதுக்கு இவளுக்கு இப்போ டைம்மே இல்லடா, ஏன்னா காருண்யா கூட சண்ட போட்டே இயல் ரொம்ப டயர்டாகிடுறா” என்றான் முகம் கொள்ளா புன்னகையோடு. அதேநேரம் அவர்களின் பாராட்டுக்குரிய அந்த வீட்டின் இளைய இளவரசி விழித்தெழுந்துவிட, அவள் ஆடிய ஆட்டத்தில் வீடு அல்லோல பட தொடங்கியது. அச்சு அசலாய் இயலின் பிரதியாய் வந்து பிறந்திருந்தாள் காருண்யா, அப்பாவின் ஆதரவோடு அண்ணனையும் சேர்த்து கொண்டு அத்தனை சேட்டையும் செய்து விட்டு, ‘தன் மேல் தவறே இல்லை’ என்று மழலையில் வாதிடும் மாயக்காரி அவள். இவளை சமாளிப்பதற்கென்றே இயல் இப்போதெல்லாம் நான்கு வேளை சாப்பிட்டு உடலை வலுவேற்றி கொள்கிறாள் என்றால் பாருங்களேன்… மற்ற குணத்தை போலவே அண்ணனிடம் அதீத அன்பு பாராட்டும் குணமும் குழந்தைக்கு இயல்பிலேயே இருந்ததால், தருணுடன் வெகுவாக ஒன்றிக் கொண்டாள். அருணின் ரத்தத்தில் உருவான தருணோ தன் செல்ல தங்கையினை தங்க தாம்பாளம் வைத்து தாங்கினான்.

 

    வராத விருந்தினர்களின் வருகையால் அன்று முழுவதும் வருண் வீடு சந்தோஷத்தில் திக்கு முக்காடியது. இரவு பத்து மணிக்கு வேலை எல்லாம் முடித்து விட்டு இயல் தன் அறைக்குள் நுழைகையில், ஆளுக்கொரு புறமென வருணை சுற்றி வளைத்து உறங்கி கொண்டிருந்தனர் குழந்தைகள் இருவரும். இயல், உருவத்தில் சிறிதாக இருக்கும் தன் மகளெனும் மாமியாரை நகர்த்தி போட்டுவிட்டு, அந்த இடத்தில் தான் போய் படுத்து கொண்டாள்.

   

    “வருண்… வருண்… அதுக்குள்ள தூங்கிட்டீங்களா?”

 

     முனங்கலாய், “ம்… காலைல இருந்து ஃப்ரெண்ட்ஸ் கூட ஊர சுத்தினதால டயர்டா இருக்குடா” என்று மீண்டும் குறட்டை விட,

 

    “வருண்… வருண்… எழுந்திரிப்பா”

 

    “ம்…. ம்… தூக்கம் வருதுடி”

 

    “வருண்…. வருண் சார்…”

 

    “ஏய் கொழுப்பா…” என்று அவனும் அவள் புறம் புரண்டு படுத்தான்.

 

    “பின்ன என்ன? ப்ராமிஸ் பண்ணாம நீங்க பாட்டுக்கு தூங்கிட்டு இருக்கீங்க”

 

    “முழிச்சிட்டேன் சொல்லு…”

 

    “ம்… நான் எவ்ளோ தொல்ல பண்ணினாலும் எப்பவும் இதே மாதிரி என்னை செல்லமா வச்சுக்குவியா?”

 

    “தருண், காருண்யாவ விட உன்ன செல்லமா வச்சுக்குவேன்.”

 

    “என்ன ஆனாலும் என்னை உன் கைக்குள்ளயே வச்சுக்கனும்”

 

   “கைக்குள்ள மட்டுமில்ல, காலுக்குள்ளயும் சேர்த்து வச்சுக்குவேன்” என்றவன் அதை செயலில் காட்ட முற்பட, அவனோடு தன்னை இணைத்து கொண்டவள்,

 

    “என்னை விட்டு எங்கயும் போக கூடாது”

 

    “உன்ன விட்டு நான் போக எந்த இடமிருக்கு? முதல்ல நீ இல்லாம என்னால இருக்க முடியுமாடி?”

 

    இயல் தினமும் இதே கேள்வி கேட்டாலும், அவன் அதே பதிலை தருவதில்லை. இன்றும் அவன் பதில்களால் திருப்தி அடைந்தவள் அவன் மார்பினுள் புதைந்து கொண்டு, “எனக்கு தூக்கமே வரல, ஒரு பாட்டு பாடு வருண்” என்றாள் அரை தூக்கத்தில் இருப்பவனிடம்.

 

உயிரே உன் உயிரென

நான் இருப்பேன் – அன்பே…

இனிமேல் உன் இதழினில்

நான் சிரிப்பேன்

 

இதமாய் உன் இதயத்தில்

காத்திருப்பேன் – கனவே…

கனவை உன் விழிகளாய்

பாத்திருப்பேன் – தினமே…

மழையாய்,

என் மனதினில் நீ விழுந்தாய்…!

விழுந்தாய்,

ஒரு விதையென நான் எழுந்தேன்…!

 

                    (முற்றும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: