Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 31

சை, “இது பணம் கொடுத்து வாங்கின என்னோட குழந்தை வருண், உங்களால இதுல உரிமை கொண்டாட முடியாது. ரவிக்கு பதிலா உயிர் பலி குடுக்குறேன்னு சொன்னேன்ல அந்த கணக்க தீர்க்குறதுக்காக வந்த உயிர், ரொம்ப நாள் இந்த உலகத்துல இருக்காது…”

 

    வருண், “இதே வார்த்தைய உன்னோட உண்மையான அம்மா அப்பா முன்னாடி உன்னால சொல்ல முடியுமா இயல்?”

 

    இயல் உடலோடு உயிரும் சேர்ந்து அதிர அவன் முகத்தை பார்க்க முடியாமல் தலை குனிந்து இருந்தவள், சில நிமிடங்கள் கழித்து நிதானமடைந்து அங்கிருந்து எழுந்து செல்ல முயல வருண் அவள் கையை பிடித்து கொண்டு, “இவ்ளோ நேரம் பக்கம் பக்கமா பதில் பேசின, இப்ப ஏன் இயல் அமைதியா இருக்க? உன்னோட பர்வீன் அம்மா நீ பேசினதெல்லாம் கேட்டிருந்தா அவங்க காது குளிர்ந்திருக்கும்ல”

 

    “……..”

 

    “நீ செய்றது தப்புன்னு உனக்கே தெரியுதுல, அப்புறம் ஏன்டி அடம்புடிக்கிற”

 

    அம்மா இப்போது அருகில் இருந்தால் என்ன செய்திருப்பார் என்ற நினைவே அவளுள் மிகப்பெரிய மாற்றத்தை உண்டு செய்ய, “கைய விடுங்க… நான் வீட்டுக்கு போறேன்…” என்றாள் விழி நீர் ததும்ப.

 

   “நீ எங்க வேணும்னாலும் போலாம், ஆனா என்னையும் கூட்டிட்டு போ”

 

    “ரொம்ப பழைய டயலாக்…”

 

    “புதுசா ஏதாவது சொல்லவா?”

 

    “ஒண்ணும் வேணாம், என்னை விட்ருங்க, நான் போறேன்”

 

    “அப்டி எல்லாம் விட முடியாது, உனக்காக இல்லன்னாலும் என்னோட பாப்பாக்காக நான் உன் கூடத்தான் வருவேன்”

 

    “இவ்ளோ தூரம் திட்றேன், உங்களுக்கு கோவமே வரலியா?”

 

    “ஆரம்பத்துல கடுப்பா இருந்துச்சு அப்புறம் டெய்லி கேட்டு கேட்டு மனசு மரத்து போச்சு…” என்று பேசிக்கொண்டே கோவிலின் வாசல் வரை இருவரும் வந்து விட்டனர்.

 

    “வராதீங்கன்னு சொல்றேன்ல”

 

     “வருவேன்னு சொல்றேன்ல”

 

     வருண் தன் ஒரு கால் ஷூவை அணிவதற்குள், அவள் செப்பலை போட்டு கொண்டு சாலையை கடக்க ஆரம்பித்துவிட்டாள்.

 

   “இயல்… இயல்… நில்லுடி” என்று அவசர அவசரமாக ஷூவை மாட்டிவிட்டு சாலையை கடந்து ஓடி வந்தவனை, வேகமாக வந்த ஒரு பைக் இடித்து கீழே தள்ளியது. விழுந்த வேகத்தில் வலது காலில் பெரிய கல் ஒன்று பதம் பார்த்து விட, அடுத்து இரண்டு நொடிகளில் ஆடைகளை தாண்டி வந்து ரத்தம் வெளியே எட்டி பார்த்தது. பைக்கில் வந்தவன் ஓரமாய் அதை நிறுத்தி விட்டு வருணிடம் ஓடி வர, சாலையில் நடந்து கொண்டிருந்த சிலரும் உதவிக்கு வந்தார்கள்.

 

   வழிப்போக்கர்கள், “ரத்தம் ரொம்ப போகுதேப்பா… ஏம்ப்பா ஆளு போறது கூட கண்ணுக்கு தெரியலியா, இப்டியா போய் இடிக்கிறது?”

 

   பைக் காரன், “சார் நான் ஒழுங்காதான் வந்தேன், இவரு தான் திடீர்னு க்ராஸ் பண்ணிட்டாரு” என்றான்.

 

    வருண், “ஆமாங்க, அவருமேல தப்பு இல்ல… நான்தான் அவசரமா க்ராஸ் பண்ணேன்.”

 

    “அப்டி என்ன அவசரமோ, எதிர்ல வண்டி வர்றத கூட பாக்காம ரோட்டுல ஓடி பிடிச்சு விளையாடுறீங்க…” என்று இயலையும் சேர்த்து அவர்கள் வாய் திட்டினாலும், அது கூடவே பக்கத்து கடையில் தண்ணீர் வாங்கி தந்து அவனை குடிக்க சொல்லிவிட்டு, ஹாஸ்பிடல் போவதற்கும் அந்த வழியில் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி வைத்து இருந்தார்கள். வருண் இதுநேரம் வரை உயிருள்ள சிலையாய் நின்றிருந்த இயலையும் கைபிடித்து அழைத்து கொண்டு போய் ஆட்டோவில் ஏற்றினான்.

 

     ஆட்டோ கிளம்பியதும் வருண், “நான் பாத்தேன் இயல், எனக்காக நீ பயந்து, பதறி துடிச்சு ஓடி வந்தத நான் பாத்தேன்.”

 

    “நீங்கன்னு இல்ல, யாரா இருந்தாலும் அப்டிதான் செஞ்சிருப்பேன். உள்ள பெரிய காயமா இருக்கா? இவ்ளோ ரத்தம் வருது”

 

    வருண் கேலியாக, “வாட் எ மெடிக்கல் மிராக்கிள்! இத நீ தக்காளி சட்னின்னு சொல்ல போறன்னு நினைச்சேன்” என்றான்.

 

    இதுநேரம் வரை பார்க்காத அவன் கண்களை மறந்து போய் இயல் நிமிர்ந்து பார்த்திட, அதில் அத்தனை காதல் நிரம்பி வழிந்தது. வேறு பக்கமாக முகத்தை திருப்பி கொண்டு, “இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்ல… ரத்தம் கொட்டிட்டு இருக்குதே, அடிபட்ட வலியே தெரியலியா உங்களுக்கு?”

 

    “இதெல்லாம் ஒரு அடியா?” என்றதும் அவள் முறைக்க, “உன்ன சொல்லல டார்லிங், பாக்ஸிங்ல இதவிட பெரிய அடியெல்லாம் வாங்கி இருக்கேன்னு சொல்ல வந்தேன்டி. உன்ன சொல்ல முடியுமா? சொல்லிட்டு அதுக்கப்புறம் உயிரோட நான் நடமாட முடியுமா?”

 

    அவன் தன்னை கலாய்க்கிறான் என்ற விஷயமே அவளுக்கு இப்போதுதான் புரிய, “உங்கமேல பரிதாபபட்டு ஹாஸ்பிடலுக்கு கூடவே வந்தேன் பாருங்க… என்ன சொல்லனும்”  என்று கோபமாக முறைத்து விட்டு தள்ளி அமர்ந்து கொண்டாள்.

 

    “அத மட்டும் பண்ணிடாத… ஏன்னா நான் உன் மேல அன்னிக்கி பரிதாப பட்டதாலதான் இப்போ இந்த நிலமையில வந்து நிக்கிறேன்.”

 

    இதற்குள் ஹாஸ்பிடல் வந்துவிட, ஆட்டோவிலிருந்து இறங்கி வரவே வருண் மிக சிரமப்பட்டு போனான். எமர்ஜென்ஸி வார்டுக்கு சென்றதுமே, வருணுக்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கப்பட்டது. கால் ஃப்ராக்சர் ஆகி இருப்பதாகவும், ஒரு முறை ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றும் டாக்டர் சொல்லி செல்ல, வருண் யாதவ்விற்கு போன் போட்டான்.

 

    “யாதவ் எங்க இருக்க?”

 

    “மண்டபத்துல தான்…”

 

    “நீ பக்கத்துல இருக்குற சூர்யா ஹாஸ்பிடல் கொஞ்சம் வர்றியா?”

 

    “இதோ கிளம்பிட்டேன், என்ன ஆச்சு?”

 

    “எனக்கு சின்னதா ஒரு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு… ஃப்ராக்சர்னு நினைக்கிறேன், என்னோட பர்ஸ் மிஸ் ஆகிடுச்சு, சித்தார்த்  பக்கத்து தெருவுலதான் இருக்கான் பட் பேமென்ட் அவனால பண்ண முடியாது. இந்த ஹாஸ்பிடல் ரொம்ப ஹைஃபையா இருக்கு. நீ வந்தா பெட்டரா இருக்கும்.”

 

    யாதவ் ஹாஸ்பிடலுக்கு வந்த நேரம் வருண் ஸ்கேனிங்க்காக வேறு பில்டிங்கிற்கு அழைத்து செல்லப்பட்டு இருந்தான். அப்போதுதான் வருண் சித்தார்த்திற்கும் தாங்கள் இருக்கும் இடம் பற்றிய தகவல் தந்தான். தனியாக அறையில் அமர்ந்திருந்த இயலிடம் யாதவ் பதற்றமாய், “வருண் எங்க? எப்டி ஆக்ஸிடென்ட் ஆச்சு? அடி ரொம்ப பலமா பட்ருக்குதா?” என்று கேள்விகளை அடுக்கிக் தள்ளினான்.

 

     ஏற்கனவே அம்மா அப்பாவின் நினைவினால் சோர்ந்து போயிருந்த இயல் குரலில் வலுவின்றி, “ஒரு பைக் இடிச்சிடுச்சு, கால்ல பெரிய காயமா இருக்கு, இப்போ ஸ்கேன் பாக்க கூட்டிட்டு போயிருக்காங்க. யாதவ் சார், உங்க ப்ரெண்ட் இங்க இருக்கிற வரைக்கும் இப்டித்தான் எதாவது ஆகிட்டே இருக்கும். அவர உடனே மூணாறுக்கு அனுப்பி வச்சிடுங்க, நானும் சீக்கிரமே இங்க இருந்து போயிடுவேன்” என்றவளை யாதவ் உக்கரமாய் முறைத்து கொண்டு நின்றான்.

 

    “ஏன் சார் இவ்ளோ கோவமா பாக்குறீங்க?”

 

    “உங்கிட்ட கோபப்பட்டு என்னம்மா ப்ரயோஜனம்? இன்னும் நீ மனசு மாறுவன்னு நம்பி உன்னையே சுத்திட்டு இருக்கானே அந்த பைத்தியகாரன சொல்லனும்…”

 

    “நீங்களாவது ஒத்துகிட்டீங்க பாருங்க, அவரு பண்றது பைத்தியகார தனமா இருக்குன்னு”

 

    “பின்ன என்ன இயல்? வருண் எப்டி வாழ்ந்தவன் தெரியுமா? அவனோட அப்பா அவனுக்கு ஹாஸ்டல் செட் ஆகாது, கஷ்டமா இருக்கும்னு சொல்லி இங்க தனியா ஒரு வீடே வாங்கி தந்திருந்தாரு. அவங்க அண்ணன் ரெண்டு தடவ கால் பண்ணி இவன் எடுக்கலன்னா அடுத்த நாளே இங்க வந்து நிப்பான். இதுக்கும் மேல அவனோட அண்ணி, தினமும் ராத்திரி வருண்ட்ட பேசாம தூங்கவே மாட்டாங்க. ரெண்டு நாள் லீவு விட்டாலே போதும், உடனே ஊருக்கு கிளம்பி ஓடி போயிடுவான். அவ்ளோ பாசமா இருந்த குடும்பத்த உங்க அண்ணன் ஒரே நிமிஷத்துல வேரோட சாய்ச்சுட்டான். வருணோட இடத்துல நான் இருந்திருந்தா என்னிக்கோ உங்க மூணு பேரையும் கொன்னு புதைச்சிருப்பேன்… அவன் என்னடான்னா என்னோட இயல்… என்னோட இயல்… னு  உன் பின்னால சுத்திட்டு இருக்கான்.

 

    “…….”

 

    “நெக்ஸ்ட் மன்த் வரப்போற உன்னோட பேர்த்டேக்கு, அந்த லூசுப்பய உனக்குன்னு தேடி தேடி நிறைய கிஃப்ட் வாங்கி எங்க வீட்ல ஒளிச்சு வச்சிருக்கான். அது என்னன்னு தெரியுமா? 4 பர்தா, ஒரு குர்ஆன் புக், முத்து மாலை, மோதிரம் இதோட 4 செப்பலும், விட்டா தன் மேல காதலே இல்லாத ஒருத்திக்கு தாஜ்மஹாலே கட்டுவான் போல… ஏன் இயல், இன்னும் அவனோட அன்ப உன்னால புரிஞ்சுக்க முடியலயா?”

 

    “எனக்கு அவர புடிக்கலன்னு சொல்றேன்ல, நீங்க யாருமே அத ஏன் புரிஞ்சுக்க மாட்டிக்கிறீங்க?”

 

    “ஏன் புடிக்கல? எதுனாலங்கிறேன்? சின்ன வயசில இருந்து வருண உயிருக்கு உயிரா வளர்த்த குடும்பத்த ஒரே நிமிஷத்துல அழிச்சு பச்ச குழந்தைய அனாதையாக்கின, உன் அண்ணனோட ட்ரீட்மெண்ட்க்கு பணம் கொடுத்தானே அதுக்காக புடிக்கலயா? உன்ன கொன்னா கூட கேக்குறதுக்கு ஆளில்லன்னு தெரிஞ்சுமே, டீசென்ட்டா கல்யாணம் பண்ணி தன்னோட வீட்டுக்கே கூட்டிட்டு போனானே அதுனால புடிக்கலயா? யோசிச்சு பாரு… அன்னிக்கி நிலமைல நீங்க மூணு பேரும் நிர்க்கதியா அவன் கண் எதிர்ல இருந்தீங்க, கையில கத்தி வச்சுகிட்டு கொல்லனுனு கை ஓங்கினவன், குத்தாம பொறுமையா

இருந்தானே அந்த காதல உனக்கு புடிக்கலயா? உன்ன விரும்ப ஆரம்பிச்ச பிறகு வீட்டோட அடச்சு வைக்காம, கூட்டிட்டு போய் எக்ஸாம் எழுத வச்சானே அதுனால புடிக்கலயா? உன் பேச்ச கேட்டு ஊரறிய ரிசப்ஷன் வைக்க ஏற்பாடு பண்ணி, எல்லார் முன்னாடியும் அவமான பட்டானே அதுனால புடிக்கலியா? நீ விட்டுட்டு போயிட்டன்னு தெரிஞ்ச பிறகும் ரவிய உயிரோட விட்டு வச்சிருக்கானே அதுனால புடிக்கலியா? ரெண்டு வருஷமா கேரளா முழுக்க உன்ன தேடி தவிச்சானே அதுக்காக புடிக்கலியா? எந்த ஆதாரமும் இல்லாத அந்த கல்யாணத்த மனசுல வச்சுகிட்டு, இதுவரைக்கும் வேற எந்த பொண்ணையும் நெருங்காம இருக்கானே அதுக்காக புடிக்கலியா? இங்க வந்து உன்ன பார்த்த பிறகும் கைய கால கட்டி தூக்கிட்டு போகாம, உன் காலுக்கு கீழ செருப்பா கிடந்து தேயிறானே அதுக்காக புடிக்கலியா? லச்ச கணக்குல லாபம் தர்ற எஸ்டேட்டையும், ஆயிர கணக்குல சம்பளம் கிடைக்கிற படிப்பையும் ஓரமா ஒதுக்கி வச்சுட்டு, வெறும் அஞ்சாயிர ரூபாய்க்காக நண்பன்கிட்டயே கைகட்டி வேல பாக்குறானே, இந்த தியாகத்த புடிக்கலியா? பொறந்ததுல இருந்து கால் தரையில படாம வளர்ந்தவன், ஒரு ஓட்ட பைக்க ஓட்டிக்கிட்டு, அவன் பாத்ரூம் சைஸ்ல இருக்குற வீட்ல தங்கி இருக்கானே அதுக்காக புடிக்கலியா? அவனுக்கு வேலை பாக்கவே ஆயிரம் பேர் இருக்கும்போது, இப்ப வரைக்கும் நீ பேசுற பேச்செல்லாம் பொறுத்துகிட்டு உனக்கு சேவகம் பண்ணிட்டு இருக்கானே அதுனால புடிக்கலியா?” என்று மூச்சு வாங்க சொல்லி முடித்த போது இயல் மூச்சடைத்து போயிருந்தாள்.

 

   சில நிமிட மௌனத்திற்கு பிறகு இயல் “நான் ஒண்ணும் உங்க ப்ரெண்ட இங்க இருக்க சொல்….” என்று முடிக்கும் முன்,

 

   அருகிலிருந்த ட்ரிப்ஸ் ஏற்றும் ஸ்டான்டை கையில் தூக்கிப் பிடித்து, “பேசாத நீ… வாய தொறந்து ஏதாவது சொன்ன, வர்ற கோவத்துக்கு மண்டைய பொளந்திடுவேன். நீ பேசுறதெல்லாம் கேட்டுகிட்டு இருக்க என்னை என்ன வருண்னு நினைச்சியா? இப்ப நான் மட்டும்தான் பேசுவேன் நீ கேக்கனும், கேட்டே ஆகனும்… பதில் சொல்லுனு சொல்லும் போது திருவாயை திறந்தா போதும்.”

 

   “………”

 

   “உனக்கு தெரியுமா? பாக்ஸிங்ல அவன அடிச்சுக்க ஆளே கிடையாது, சின்ன வயசிலயே நிறைய ரெக்கார்ட்ஸ் கிரியேட் பண்ணி இருக்கான். அவங்க அம்மா சாகும் போது பாக்ஸிங் வேணாம்னு சொன்ன ஒரே காரணத்துக்காக, அதுக்கு அப்புறம் மேச்ல கலந்துக்குறதையே விட்டுட்டான் அவன். அவனுக்கு இருக்குற ஆர்ம் பவர்க்கு பயந்தே எங்க காலேஜ்ல எவனும் வருண்கிட்ட பிரச்சன பண்ண மாட்டானுங்க. அப்பேர்ப்பட்டவனையே கால உடச்சு ஹாஸ்பிடல்ல படுக்க வச்சிட்டல்ல நீ…” என்று கர்ஜிக்க, இயலிடம் பேரமைதி.

 

     “நீ என்ன பெரிய ரதி தேவின்ற நினைப்பா? இல்ல இந்த உலகத்துல உன்ன விட்டா வேற பொண்ணே இல்லையா? அவனுக்கு இருக்குற அழகுக்கும் வசதிக்கும் எத்தன பொண்ணுங்க வந்து க்யூல நிப்பாங்க தெரியுமா? நீதான் வேணும்னு ரெண்டு வருஷமா உன்ன தேடி திரியிறதுக்கு அவனுக்கு என்ன தலையெழுத்தா? அவன் இப்ப மட்டும் ‘ம்’னு ஒரு வார்த்த சொன்னா போதும், என் தங்கச்சிய நானே கல்யாணம் பண்ணி கொடுக்க தயாரா இருக்கேன், ஏன்னா அவன் அவ்ளோ நல்லவன். ஒரு புருஷனா எந்த நிலமையிலயும் கை புடிச்சவள கைவிட மாட்டான்ற அளவுக்கு அவன் மேல நம்பிக்கை இருக்கு. நீ ஒரு மனைவியா இது வரைக்கும் எதாவது ஒண்ணு அவனுக்கு செஞ்சிருக்கியா? அவனுக்கு மரியாத தரலனாலும், அட்லீஸ்ட் அந்த தாலிக்காவது மரியாத தந்தியா? கடைசியா ஒண்ணு சொல்றேன் தெரிஞ்சுக்க, உன்னால வருண் கூட வாழ முடியலன்னா வேற யாரு கூடவும் வாழ முடியாது…”

 

    “………”

 

    “இப்பவாச்சும் அவன் காதல புரிஞ்சுக்கிட்டயா?”

 

   ‌ “…….”

 

    “வாய தொறந்து பதில் சொல்லு இயல்”

 

   ‌ “……”

 

    “இவ்ளோ தூரம் கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி விவரமா சொல்லிட்டு இருக்கேன், ஒரு வார்த்த பதில் சொல்லாம ஊமையாவா இருக்குற? வருண் கூட வாழாத வாழ்க்கைய நீ வாழவே தேவையில்ல…” என்று அவள் கழுத்தை அவனின் கைகள் நெருங்கி வர,

 

    “நீங்க ஒருத்தர் மட்டும் என்னை சும்மா விட்டுட்டீங்களேன்னு நினைச்சேன்… எங்க, முடிஞ்சா என்னை கொல்லுங்க பாக்கலாம்…” என்ற வார்த்தை யாதவை மேலும் உசுப்பேற்றி விட, கொலை செய்துவிடும் நோக்கோடு அவள் கழுத்தை கொடூரமாய் இறுக்கினான்.

 

    அதே நேரம் அங்கு தருணுடன் வந்த சித்தார்த், உள்ளே நடப்பதை ஜன்னல் வழியாக பார்த்ததும், கதவை உடைத்து எறிந்துவிட்டு உள்ளே நுழைந்தான்.  இயலையும் யாதவ்வையும் அவன் தனித்தனியாக பிரித்து விட்டதும், தருண் அரண்டு மிரண்டு போய் இயலின் மடியினுள் ஒளிந்து கொண்டான். 

 

    “ஏன் யாதவ் இப்டி வெறி புடிச்ச மாதிரி பிகேவ் பண்றீங்க?”

 

    “அவதான்டா என்னை வெறுப்பேத்தி பாக்குறா”

 

   “அதுக்காக கழுத்த புடிப்பீங்களா… இது ஹாஸ்பிடல் சார், கொஞ்சம் உங்க ஸ்டேட்ஸ்க்கு தகுந்த மாதிரி நடந்துக்கங்க. இசை… நீ என்ன? ஒருத்தர் விடாம எல்லாருட்டயும் வம்பிழுக்கிறதுன்ற முடிவோட இருக்கியா? எப்பவும் உன்னோட வியூ பாய்ன்ட்ல மட்டுமே பாக்காம, மத்தவங்க மனசையும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு இசை. வருண பத்தி மட்டும் பேசல ரவி, யாதவ், நான், தருண்னு எல்லாரையும் சொல்றேன்.”

 

    “அது அவளோட தப்பில்ல தம்பி… யாருகிட்டயுமே பேச விடாம அவள வளர்த்த என்னோட தப்பு” குரல் வந்த திசையினை நோக்கி இருவரும் திரும்பி பார்க்க அங்கே கோகிலா நினறிருந்தார்.

 

    “பதினஞ்சு வயசில இருந்து நான் தான் இயல வளர்த்தேன், பக்கத்து வீட்டு ஆளுங்க யாருகிட்டயும் பேச விட மாட்டேன், வீட்லயும் டிவியோ போனோ தொட விட மாட்டேன், அவளோட அண்ணனையும் அஞ்சு நிமிஷத்துக்கு மேல அவளோட உக்காந்து பேச விடமாட்டேன். வீடு.. கோயில்.. வேலை.. படிப்பு.. இத தவிர எம் பொண்ணுக்கு வேற எதுவுமே தெரியாது, நான் தெரிஞ்சுக்க விடல தம்பி. பாவம் மாசமா இருக்குற புள்ளய திட்டாதீங்க…” என்று புடவை தலைப்பால் வாய் மூடி அழுதார்.

 

    யாதவ்வும் சித்தும் ஒரு சேர அதிர்ச்சி அடைந்திட, யாதவ், “சாரி இயல், நீ ப்ரக்னன்ட்டா இருக்குற விஷயம் எனக்கு தெரியாது, தெரிஞ்சிருந்தா இவ்ளோ கோவமா பேசிருக்க மாட்டேன். நீ அப்பவே சொல்லி இருக்கலாம்ல…”

 

    கோகிலா, “அவளுக்கே அது தெரியாது தம்பி, முன்ன பின்ன மாசமா இருக்குறவங்கள பாத்து பேசி இருந்தா தெரிஞ்சிருக்கும். நான் இவளத்தான் உலகத்தோட ஒட்டாமலயே வளர்த்துட்டேனே… வருண் தம்பிதான் சந்தேகமா இருக்குன்னு ரெண்டு நாள் முன்னாடி எங்களுக்கு போன் பண்ணி வர சொல்லுச்சு…”

 

    வருண் இந்துவின் இரண்டு கருவுறுதலிலும் அவளருகில் இருந்ததால், ஒரு நண்பனாக அவளின் உடல் நிலையை புரிந்து வைத்திருந்தான். கருதரித்தலை மாதவிடாயும், வாந்தியும் தெரிவிக்கும் என்பது அனைவரும் அறிந்த பொதுவான கருத்து, அதைவிட பல காரணங்கள் முன்னதாகவே பெண்ணில் உண்டாகிவிடும். அளவிற்கு அதிகமான பசி உணர்வு வந்து மூக்கையும் நாக்கையும் சுவைதூண்டும் வகையான உணவை தேடி போகச் செய்யும். அளவிற்கு அதிகமான வாசனை மிக சுலபமாக தலைவலியை உண்டாக்கி விட்டு செல்லும். எவ்வளவு வேலை செய்தாலும் நள்ளிரவில் ஒரு முறை விழித்து விட்டால், உறக்கம் வருவது பெரும்பாடுதான். காலை நேர அசதியோ மாலை நேர அசதியோ ஏதோ ஒன்று உடலை உடைந்து விழும் அளவு சோர்வடைய செய்தாலும், முகம் மாத்திரம் அன்றலர்ந்த மலராய் குளிமையோடு காணப்படும். வருணுக்கு அவள் உடல்நலம் குறித்த அதீத அக்கறை அவளின் ஆரம்ப கால மாற்றங்களை மிக சுலபமாக அவனுக்கு காட்டி கொடுத்தது.

 

    கோகிலா கையோடு கொண்டு வந்திருந்த விபூதியை இயலுக்கு பூசி கொண்டே, “உங்க வீட்டுக்குத்தான் முதல்ல போனோம் இயல், வருண் தம்பிதான் அவசரமா இந்த ஆஸ்பத்திரிக்கி வர சொல்லிட்டு போன வச்சிடுச்சு… டாக்டர பாத்தியா? என்ன சொன்னாங்க? வருண் தம்பி எங்க போச்சு, ஆளையே காணும்?”

 

   சித், “ஸ்கேன் பார்க்க போயிருக்கான்”

 

   கோகிலா, “அதுக்குள்ள குழந்தைய ஸ்கேன் எடுத்துட்டியா இயல்?”

 

    யாதவ், “ஸ்கேன் இவளுக்கு இல்ல, ஆக்ஸிடென்ட்டாகி கால உடச்சுட்டு கிடக்குற வருணுக்கு…”

 

   கோகிலா, “என்னது ஆக்ஸிடென்ட்டா? எப்போ ஆச்சு? இப்போ எப்டி இருக்குது தம்பிக்கி?” என்று பதறிட,

 

   வருண் “நான் நல்லா தான் இருக்கேன்…” என்று வீல் சேரில் அந்த அறைக்குள் நுழைந்தான். முழங்காலில் இருந்து பாதம் வரை நீண்டு இருந்த பெரிய பேண்டேஜ்ஜை பார்த்ததுமே யாதவ், “டேய்… என்னடா இது? சின்ன ஃப்ராக்சர்னு சொன்ன, இவ்ளோ பெருசா இருக்கு…” என்று குரல் உடைய கேட்டான்.

   

    “காயம் சின்னதுதான்டா, அந்த டாக்டர் இங்க பேண்டேஜ் நிறையா மிச்சமா கிடக்குன்னு சொல்லி என் கால்ல பாதிய கட்டி விட்டுட்டாரு… இப்ப மீதிய இன்னொருத்தன் தலையில கட்டிட்டு இருக்காரு… “

 

    இவ்வளவு நேரம் இயல் முந்தானைக்குள் ஒளிந்திருந்த தருண், வருணை கண்டதும் அவனிடம் ஓடிப்போய் காதுக்குள் ஏதோ கிசுகிசுத்தான்.

 

    அவன் சொல்லி முடிக்கும் வரை கவனமாக கேட்ட வருண், யாதவ்வையும் சித்தையும் பார்த்து, “நான் இல்லாத நேரத்துல எவன்டா என் பொண்டாட்டிய திட்டினது?” என்றான்.

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: