Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 30

ருணால் இயலின் வலியினை உணர முடிந்தது, அவள் எதிர்பார்த்தது உணர்வினை மதித்து உரிமைக்கு இடமளித்து உருவாகி இருக்க வேண்டிய ஒரு மாங்கல்ய பந்தம். மற்ற உறவுகளெல்லாம் பொய்த்துப் போனாலும் அதை தாங்கிக் கொண்ட அவளின் இளநெஞ்சினால் மகத்தான மாலையிட்ட உறவு பொய்த்து போனதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் தன்னை அறியாமலேயே அழுது கொண்டிருக்கும் நிலையை கண்ட வருண்,

 

    “இயல் போதும்டா… வா நம்ம வீட்டுக்கு போகலாம்”

 

    “இன்னும் பங்ஷன் முழுசா முடியல சார்” என்றவளின் ‘சார்’ என்ற வார்த்தையில் மட்டும் அத்தனை அழுத்தம்.

 

    “வேணாம்னு சொல்றேன்ல”

 

    “வேணும்னு சொல்றேன்ல” அவள் வார்த்தையில் இருந்த உறுதிக்கு கட்டுப்பட்டு வருண் செய்வதறியாது அமர்ந்திருந்தான்.

 

     மணமேடையில் மணமக்கள் இருவரும் அக்னி வலம் சுற்ற ஆரம்பித்தனர். அவர்களின் திருமண முறைப்படி மணமகனின் சகோதரி முறை உள்ள ஒரு பெண் காமாட்சி விளக்கை கையில் ஏந்தியபடி முன்னால் சுற்ற அவளை பின் தொடர்ந்து மணமகளின் சகோதரன் மாப்பிள்ளையின் கையை பிடித்து அழைத்து சென்றபடி அக்னி வலம் ஆரம்பித்து வைக்க வேண்டும். ஸ்ருதியின் அண்ணன் மண மகனின் கைபிடித்து அழைத்துச் செல்ல அவர்களை பின்தொடர்ந்து மணமகளும் நடந்து வந்தாள்.

 

     “இந்த அக்னி வலத்தோட அர்த்தம் என்னன்னு தெரியுமா சார்?”

 

     “தெரியாது…” வருண் பதில் வேதனையோடு வெளிவந்தது.

 

   “இந்த நிமிஷத்துல இருந்து, நாம வாழ போற இந்த வாழ்க்கையில, நமக்கு வரப்போற எல்லா நல்லதும் கெட்டதும் என்னை தாண்டி தான் உன்னை நெருங்க முடியும்னு ஹஸ்பெண்ட் வொய்ப்கிட்ட சொல்றதா அர்த்தம்” என்று பொருள் பொதிந்த ஒரு பார்வை பார்த்தாள்.

 

   “………..”

 

   “அங்க பாத்தீங்களா ஸ்ருதியோட அண்ணன் எவ்ளோ சந்தோஷமா இருக்கான்னு…”

 

    “இயல் போதும்… நம்ம வெளியில போய் மிச்சத்த பேசிக்கலாம்.”

 

    “இன்னும் கொஞ்ச நேரம் பொறுங்க சார்” என்று அடம்பிடித்தாள்.

 

    “இப்போ வர்றியா இல்ல உன்ன தூக்கிட்டு போகவா, வா… எழுந்திரி வா…” என மிரட்டும் தொனியில் அழைக்க, தருண் இடையில் புகுந்து, “அப்பா சுச்சூ வருதுப்பா” என்றான்.

 

     “இயல், நான் குழந்தைய பாத்ரூம் விட்டு கூட்டிட்டு வந்ததும் நாம கிளம்பிடலாம்” என்று சென்றவன் திரும்பி வந்து பார்க்கையில் அவளை அங்கே காணோம். மண்டபம் முழுவதும் தேடிப்பார்த்தும் அவள் கிடைக்காததால் குழம்பிப்போய் நின்றவனுக்கு, சித்தார்த்திடம் இருந்து போன் வந்தது.

 

    “நீ இங்க வர்றதுக்கு இன்னும் எவ்ளோ நேரம்டா ஆகும்? நாங்க இங்க உனக்காக ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கோம்” என்றான்

 

   “நாங்கன்னா…”

 

   “வேற யாரு நானும் இசையும்தான், மேல டைனிங் ஹால்ல சாப்டுகிட்டு இருக்கோம். மூணாவது வரிசைல ரைட் சைடு கார்னர்ல…” என்று அவன் முடிப்பதற்குள்,

 

    “இயல் அந்த சாப்பாட்ட சாப்பிடுறாளா?”

 

    “ஆமா, ஏன்டா சாப்பாடு நல்லாத்தான இருக்கு?”

 

    “நீ அவளை சாப்பிட விடாத நான் உடனே இப்போ அங்க வர்றேன்” என்றான் பதற்றத்துடன்.

 

    முழுதாய் காரணம் புரியாவிட்டாலும் வருண் தன் வார்த்தையில் காட்டிய அவசரம் சித்தார்த்துக்கு புரிய, சாப்பிடுவதை நிறுத்தி விட்டு இயலை பந்தியிலிருந்து வெளியே அழைத்து வந்தான்.

 

     அதே நேரம் அங்கு வந்து நின்ற வருண், “உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? ஏன்டி இப்படி என் உயிரை வாங்குற? மரியாதையா வந்து சாப்பிட்டதை எல்லாம் வாமிட் பண்ண ட்ரை பண்ணு…”

 

    நடப்பது எதுவும் புரியாமல் இருந்த சித்தார்த், “ஏன்டா, என்ன ஆச்சு?” என்றான்.

 

    “இவளால லிக்விட் புட், தோசை இது ரெண்டையும் தவிர வேற எதையும் சாப்பிட முடியாதுடா. ரொம்ப நாளா தோசையா சாப்பிட்டதால குடலோட அளவு சுருங்கிடுச்சு, வேற எதையாவது சாப்பிட ட்ரை பண்ணா நடுவுல ஸ்ட்ரக்காகி நின்னுட்டு ப்ரீத் பண்ண முடியாம கஷ்டமாயிடும்.”

 

    இதை எதிர்பார்க்காத சித்தார்த் அதிர்ச்சியாய் இசையின் முகத்தைப் பார்க்க, அவளோ குரூரமாய் புன்னகைத்தபடி வருண் கண் கலங்கி நிற்பதை கண்டு ரசித்து கொண்டிருந்தாள்.

 

     வருண் தருணை சித்தார்த்திடம் ஒப்படைத்துவிட்டு, ஓரமாய் இருக்கும் கைகழுவும் இடத்திற்கு இயலை இழுத்துச் சென்று, “வாமிட் பண்ண ட்ரை பண்ணு இயல், ப்ளீஸ்டி… உன் கால்ல வேணாலும் விழுறேன், தயவு செஞ்சு வாமிட் பண்ணிடு” என்று கெஞ்ச அவளோ முன்னைவிட இன்னும் கொடூரமாய் சிரித்தாள்.

 

  மரம் போல் நிற்பவளின் மனதை கரைக்க வேறு வழியின்றி, “ப்ளீஸ் இயல் தயவு செஞ்சு வாமிட் பண்ணு, நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்” என்றான்.

 

    இந்த வார்த்தைக்காகவே இத்தனை நேரம் காத்திருந்த இயல், “எனக்கு உன்ன பிடிக்கல வருண், அவனத்தான் புடிச்சிருக்கு, நான் அவன் கூட வாழ ஆசைப்படுறேன்” என்று சித்தார்த்தை நோக்கி கை நீட்டினாள்.

 

     தலையில் இடியே விழுந்தது போல அதிர்ந்து நின்றான் சித்தார்த், காரணம் அவன் இப்போதுதானே இந்த வார்த்தையை முதன்முதலாய் அவளிடமிருந்து கேட்கின்றான்.

 

    மற்றவர்கள் வந்து போகும் இடத்தில் நின்று கொண்டு மரணத்தை விட கொடிய வலியில் துடிப்பவனால், அதை வெகு நேரம் மறைத்து வைக்க முடியாமல் வருண் குரல் தழுதழுக்க, “சரி… எனக்கு கொஞ்சம் டைம் குடு, நானே இங்கிருந்து போயிடுறேன்” என்றான்.

 

   அங்கே இயல் சிரமப்படாமல் வாந்தி எடுத்து கொண்டிருக்க, இங்கே வருண் கைகள் நடுங்க தலையை பிடித்து கொண்டு சுவற்றில் சாய்ந்து நின்றபடி, ‘இந்த வார்த்தைய கேக்குறதுக்காகவா ரெண்டு வருஷமா உன்னை தெரு தெருவா தேடி அலைஞ்சேன்?’ என்று தகிக்கும் தணலாய் தவித்தான்.

 

    சித், “டேய்… என்ன வார்த்த சொல்லிட்ட? அவளுக்குத்தான் அறிவில்லன்னா நீயுமா?”

 

    “என்னால முடியலடா”

 

    இயல் முகம் கழுவி விட்டு வந்த நேரம், கீழிருந்து மணமக்கள் மேலே ஏறி வந்து கொண்டிருந்தனர். மணமக்கள் உணவு உண்பது போல் போட்டோ எடுப்பதற்காக, கேமரா மேன் டைனிங் ஹாலினுள் வெளிச்சமான இடம் தேடி கொண்டிருக்க, அந்த நேரத்தில் ஸ்ருதியின் அம்மா இயலை அழைத்து, “சாப்பிட்டயாம்மா இயல்?” என்றார்.

 

     “திருப்தியா சாப்டேன்ம்மா” என்றாள் இரு பொருள்பட,

 

    “இயல் எனக்கு ஒரு உதவி பண்ணும்மா, மாலைய மறந்து போய் கழுத்துல போட்டுகிட்டே வந்துட்டாங்க, இப்டியே சாப்பிட கஷ்டமா இருக்கும். நீ இந்த மாலைய எடுத்துட்டு போய் பொண்ணு ரூம்ல வச்சிடுறியாம்மா?”

 

    “சரிம்மா…”

 

    “ஆங்… கீழ தரையில வச்சிடாத இயல், ஏதாவது பேக் மேலயோ இல்ல டேபிள் மேலயோ வை, நான் சீக்கிரமா வந்திடுறேன்.”

 

     “ஏம்மா?”

 

    ” ஏன்னா இது கல்யாண மாலைல, கண்ட இடத்துல வைக்க கூடாது, வாடின பிறகு கூட குப்பைல போடாம ஆத்துலயோ குளத்துலயோ தான் போடுவாங்க, அதான் கீழ வைக்காதன்னு சொல்றேன்” என்றுவிட்டு சென்றார்.

 

    “கேட்டீங்களா சார், கேவலம் இந்த மாலைக்கு கிடைச்ச மரியாத கூட எனக்கு என்னோட கல்யாணத்துல கிடைக்கல…” 

 

    சித்தார்த், “நாம மண்டபத்த விட்டு வெளியில போய் நின்னு பேசலாம்னு நினைக்கிறேன்.”

 

   வருணுக்கு வலிக்க வேண்டுமென்றே வார்த்தையில் விஷம் தோய்த்து, “நீங்க சொன்னா சரிதான் சித்” என்றாள். குழந்தையோடு வெளியே வந்தவர்கள், மற்றவர்கள் கண்ணில் படாதபடி இரண்டு தெரு தள்ளி ஒதுக்கு புறமாய் இருந்த ஒரு சிறிய அம்மன் கோவிலுக்குள் நுழைந்தனர்.

 

    சித், “இப்ப சொல்லு இசை, அவன புடிக்கலன்றதுக்கு என்ன காரணம் இருக்கு உன்கிட்ட? உனக்காகத்தான உன் அண்ணன உயிரோட விட்டான், உனக்காகத்தான முன்ன பின்ன தெரியாத என்கிட்ட வந்து வெட்கம் விட்டு எல்லா தப்பையும் சொன்னான், உனக்காகத்தான படிச்ச படிப்புக்கு தகுதி இல்லாத இந்த வேலைய பாத்துகிட்டு, ஒரு சின்ன வீட்டுக்குள்ள ஒண்டி குடித்தனம் நடத்திக்கிட்டு இவ்ளோ தூரம் கஷ்ட படுறான். நீ என்னடான்னா ரொம்ப ஈசியா அவன வேணாம்னு சொல்லிட்ட…”

 

    “எனக்கு ஆச்சரியமா இருக்கு, எப்டி ஆம்பளைங்க எல்லாருமே ஒரே மாதிரி இருக்கீங்க? என்னோட அண்ணன இவன் உயிரோட விட்டது, தொலஞ்சு போன என்னை கண்டுபிடிக்கத்தானே தவிர, என்னை காதலிக்க இல்ல. அவரு மட்டும்தான் படிச்ச படிப்ப விட கம்மியான வேல பாக்குறாரா, இல்ல அவரு மட்டும்தான் பெரிய வீட்ட விட்டு வந்து இவ்ளோ சின்ன வீட்ல குடி இருக்குறாரா? சென்னைக்கு வேல தேடி வர்ற பாதி பசங்க இதையெல்லாம் இங்க தினமும் அனுபவிக்கிறாங்கள்ல. உங்ககிட்ட நான் பர்மிஷன் வாங்க சொன்னதுக்கு ரெண்டு காரணம் இருக்கு. இப்பவாச்சும் வருணுக்கு அவன் என் வாழ்க்கைய எவ்ளோ அழிச்சு வச்சிருக்கான்னு புரியுதான்னு பார்க்க, இன்னொன்னு எனக்கு உண்மையிலேயே உங்கள பிடிச்சிருக்கு சித்.”

 

     “இல்ல இசை, உனக்கு என்னோட வேலைய புடிச்சுருக்கு, என்னோட குடும்பத்த புடிச்சிருக்கு, இந்த சாதாரண வாழ்க்கைய புடிச்சிருக்கு. உனக்கு உண்மையிலேயே என்னை புடிச்சிருந்தா, எம்மேல ஆசை இருந்திருந்தா நீ என்ன பாக்குற பார்வையில காதல் இருந்திருக்கும், நீ என்கூட பேசுற வார்த்தையில திணறல் இருந்திருக்கும், நீ என்னையோ நான் சம்பந்தப்பட்ட பொருளையோ தொடும் போது வெட்கம் இருந்திருக்கும், குறைஞ்ச பட்சம் என்னை காணும்னு தவிப்பாவது இருந்திருக்கும்.  இதுல பாதிய நீ வருண் மூலமா ஏற்கனவே உணர்ந்திருக்கன்னு உனக்கு தெரியுதா? எங்க அம்மா அன்னிக்கி நைட் என்னை தேடி கால் பண்ணவே இல்லை, நீ என்னை தேடி எனக்கு போன் பண்ணாம, வருணுக்கு போன் பண்ணினது ஏன்?”

 

    “என்ன புடிக்கலன்னா புடிக்கலன்னே ஸ்ட்ரெய்ட்டா சொல்லலாம் சித். இவ்ளோ சுத்தி வளச்சு சொல்ல வேண்டிய அவசியமில்ல…”

 

    “எனக்கு உன்ன புடிச்சதுனாலதான், நான் உன்னை உன்னோட குழந்தைகிட்டயும் உன்னோட புருஷன்கிட்டயும் சேர்த்து வைக்க நினைக்கிறேன். ஒரு ஆம்பள தனியா வாழ்றதுக்கும் ஒரு பொண்ணு தனியா வாழ்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.”

 

    இயல் ஏதோ சிந்தனையில் மூழ்கி இருக்க, சித் வருணிடம் வந்து, “சாரிடா, நீ அவகிட்ட ரஃபா நடந்துகிட்டதால உன்ன வெறுக்குறான்னு நினைச்சேன். நீ கொஞ்சம் சாஃப்ட்லியா, பணக்காரனா இல்லாம சாதாரண ஒரு ஸ்கூல் டீச்சரா அப்ரோச் பண்ணினா அவ உன் மனச புரிஞ்சுக்குவான்னு தப்பு கணக்கு போட்டுட்டேன். நீ எப்டி இருந்தாலும் அவ மனசு இறங்க மாட்டான்றது எனக்கு இப்போ புரியுது. பையனுக்கு பசிக்குதுன்னு நினைக்கிறேன், நான் பக்கத்துல இருக்குற ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போறேன். நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க‌. நாங்க சீக்கிரமா வந்திடுறோம்…”

 

     சித்தார்த் அங்கிருந்து வெளியேறியதும் வருண், “நாந்தான் தெரியாம பண்ணிட்டேன்னு சொல்றேன்லடி, ஏன்டி இப்டி மன்னிக்க மாட்டேன்னு அடம்புடிக்கிற?”

 

    “என்ன சார் இது, நீங்க செஞ்சதுல பாதிய கூட நான் இன்னும் செஞ்சு முடிக்கல, அதுக்குள்ள இவ்ளோ உடஞ்சு போயிட்டீங்க? கல்யாணத்தப்போ உங்களுக்கு 25 வயசு ஆனா தெரியாம தப்பு பண்ணிட்டதா சொல்றீங்க, இப்போ எனக்கு 22 வயசுதான, என்னையும் கொஞ்சம் தெரியாம தப்பு பண்ணிக்க விடுங்களேன்… யோசிச்சு பாருங்க, நான் உங்கள விட ரொம்ப ஜென்ட்டிலா பிகேவ் பண்றேன் தெரியுமா? மோர் ஓவர் ஒரு புது வாழ்க்கைய ஆரம்பிக்கிற அளவு, இன்னும் என் மனசு ஆறலயே, அதுவும் போக மன்னிப்புன்றது ஒன்னும் மிட்டாய் இல்ல, கேட்ட உடனே ஹேன்ட் பேக்ல இருந்து எடுத்து குடுக்க.”

 

     வருண், “கொஞ்சம் கொஞ்சமா வாட்டி வதைக்கிறியேடி, அப்டி என்னடி நான் மன்னிக்க முடியாத பெரிய பாவத்த பண்ணிட்டேன்?”

 

     “இவ்ளோ நேரம் வேடிக்க பாத்த பிறகும்கூட என்ன பாவம் செஞ்சேன்னு கேக்குறீங்களே! அது என்னோட ப்ரென்டோட கல்யாணம், என்னால அந்த சந்தோஷத்த மனசார அனுபவிக்க முடியல. ஸ்ருதியோட ஹஸ்பெண்டும் அவ அண்ணனும் அவள எவ்ளோ பாசமா பாத்துக்கிறாங்க… ரெண்டு பேரும் எவ்ளோ ஒத்துமையா சிரிச்சு பேசி விளையாடுறாங்க பாத்தீங்களா… ஒரு பொண்ணுக்கு இதுதான் வேணும்… அண்ணனா புருஷனாங்கிற கேள்விய எந்த பொண்ணும் விரும்பமாட்டா… யோசிச்சு பாருங்க, நம்ம கல்யாணத்தப்போ நீங்க என்னை மனுஷி மாதிரியா நடத்துனீங்க? ஒவ்வொரு தடவையும் உங்களால நான் தோத்துப்போய், அவமானபட்டு தவிக்கும் போது எனக்கு ஆறுதலுக்கு கூட அங்க ஆளே இல்ல. உங்ககிட்ட ரவிய விட்ற சொல்லி எப்டி எல்லாம் கெஞ்சி கதறினேன்?… அவனோட உயிர உங்க கையில இருந்து மீட்கத் முடியாத என் நிலைமை இருக்குதே, அது எவ்ளோ கஷ்டம்னு அனுபவிச்சாத்தான் தெரியும். நீங்கதான் இப்டின்னு பாத்தா ரவி கோமால இருந்து எழுந்த பிறகும் என்னை தேடி வரல, இப்ப நான் இருக்குற இடம் தெரிஞ்ச பிறகும் என்னை தேடி வரல… அவனுக்காக உங்க வீட்ல நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன், அது அவனுக்கு கடைசி வரைக்கும் புரியவே இல்ல போல, உங்க கையிலயே என்ன கொடுத்துட்டு போவான்னு நான் எதிர் பாக்கவே இல்ல. நீங்களும் கேட்க ஆளில்லன்ற தைரியத்தில உங்களால முடிஞ்ச அளவுக்கு என்னை என்னெல்லாம் செஞ்சீங்க?”

 

    “அன்னிக்கி நீங்க என்ன சொன்னீங்க, ‘எவ்ளோ வேணும்னாலும் பணம் தர்றேன், நீ நல்ல குடும்பத்துல பொறக்கல, எங்கிட்ட வா’ன்னு அசிங்கமா சொன்னீங்களா இல்லையா? அப்போ எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்… இப்போ நான் கேக்குறேன், உங்க கூட சந்தோஷமா இருந்துட்டு உங்களுக்கே பணம் தந்ததுக்கு என்னை மன்னிச்சிடுங்க… மன்னிக்க முடியுமா உங்களால? முடியாதுல்ல, வெளியில வலிக்காத மாதிரி காட்டினாலும், அந்த வார்த்தை உள்ளுக்குள்ள எவ்ளோ வலிக்கும்னு எனக்கு தெரியும்.”

 

     “நான் தெரியாமத்தான் கேக்குறேன் உங்களுக்கும் எனக்கும் எந்த விஷயத்துல கணவன் மனைவின்ற உறவு இருந்துச்சு? எப்பவுமே முதலாளி வேலைக்காரின்ற உறவு மட்டும்தான இருந்துச்சு… அப்புறம் ஏன் என்னை அடிக்கடி தொட்டு சீண்டி விளையாடுனீங்க? நான் யாதவ் கூட பேசுனா உங்களுக்கென்ன குறைஞ்சு போச்சு? நான் உங்க வீட்டு வேலைக்காரிதான… அடிமை இல்லையே… இவங்க இவங்க கூடதான் பேசனும், இவங்க இவங்க கூட பேசக்கூடாது, சிரிக்க கூடாது, பழக கூடாதுன்னு சொல்றதுக்கு நீங்க யாரு? என்னை கை நீட்டி அடிக்கிறதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? இப்போ உங்க காதலுக்கு உடனே ஒரு பதில் சொல்லனும்னு சொல்லி, ஒரு கூட்டத்தையே சேர்த்துகிட்டு என் உயிர வாங்குறீங்களே, நாலுக்கு பதிலா நாப்பது உயிர தரவான்னு நான் எவ்ளோ கெஞ்சி கேட்டேன்… ஒரு வார்த்த பதில் சொன்னீங்களா? கடைசி வரைக்கும் ரவிய உயிரோட விட்ருவீங்களான்னு ஆயிரம் தடவ உங்கள தேடி வந்து கேட்ட நான், சந்தோஷமா வாழ விடுவீங்களான்னு ஒரு தடவ கேக்காம விட்டுட்டேனே…” என்று முகத்தை மூடி கொண்டு சில நிமிடங்கள் அழுது தீர்த்தாள்.

 

     “நீங்க, உங்க பணம், உங்க பங்களா, உங்க பையன் இது எதுவுமே வேணாம்னுதான இவ்ளோ தூரம் விலகி வந்தேன், இங்கயும் வந்து ஏன் என்னை எல்லார் முன்னாடியும் அவமானபடுத்தி விளையாடுறீங்க? உங்களால இப்ப எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல, நான் வேற எங்கயாவது கண்காணாத ஊருக்கு போயிடுறேன், அங்கயும் வந்து என் உயிர வாங்காம இப்டியே நீங்க உங்க பையன கூட்டிட்டு உங்க ஊருக்கு போயிடுங்க…”

 

    “போகமாட்டேன் இயல், நம்ம ரெண்டு பேருக்கும் முடியாத கணக்கு ஒண்ணு மிச்சம் இருக்கு. உன் வயித்துல வளர்ற நம்ம குழந்தை…”

 

    அதிர்ந்து மீண்ட இயல் அழுத்தம் திருத்தமாக, “இது பணம் கொடுத்து வாங்கின என்னோட குழந்தை வருண், உங்களால இதுல உரிமை கொண்டாட முடியாது. ரவிக்கு பதிலா உயிர் பலி குடுக்குறேன்னு சொன்னேன்ல அந்த கணக்க தீர்க்குறதுக்காக வந்த உயிர், ரொம்ப நாள் இந்த உலகத்துல இருக்காது…”

 

   சித்தார்த் தருணுக்கு அவன் கேட்டதெல்லாம் வாங்கி தந்து சாப்பிட வைத்துவிட்டு, திரும்பி வந்து பார்க்கையில் வருணையும் இயலையும் அந்த கோவிலினுள் காணவில்லை. வருணுக்கு போன் போட்டு பார்த்தான், முதல் மூன்று முறை கால் அட்டர்ன் செய்யாமலே கட் ஆனது.

 

    நான்காவது முறை வருண் போனை எடுத்ததும் சித், “எங்கடா போனீங்க ரெண்டு பேரும்?”

 

    “பக்கத்துல இருக்குற சூர்யா ஹாஸ்பிடல்ல இருக்கோம், இங்க வாடா.”

 

    “ஹாஸ்பிடல்லா? யாருக்கு என்ன ஆச்சு?”

 

    “நீ வா சொல்றேன்…” என்பதோடு கால் கட் ஆகிவிட, சித் அந்த மருத்துவ மனையினை நோக்கி விரைந்தான். ரிசப்ஷனில் சித், வருண் இசையின் பேர் சொல்லி, அறை எண்ணை விசாரித்து அங்கே வந்து சேர்ந்தான். கதவை திறக்க முடியாமல் போக, ஜன்னல் கண்ணாடி வழியே எட்டி பார்த்தான். அங்கே படுக்கையில் தனியாக இருந்த இசையின் கழுத்தினை, கொலை வெறியோடு யாதவ் தன் கைகளால் நெறித்து கொண்டிருந்தான்.

1 Comment »

  1. ஏன் இயல் அவளையும் வருத்தி வருணையும் கஷ்டப்படுத்துகிறாளோ?! யாதவ் ஏன் கொலை செய்ய முயற்சி செய்கிறான்?! ஓரே மர்மமா இருக்கு. பார்க்கலாம் என்ன நடக்கும் என்று.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: