Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 29

ருண் குரலின் இனிமையில் மயங்கி கூடிய இருந்த மாணவர்கள் கூட்டம் மதி மயங்கி கிடக்க, யாருக்காக வெட்கம் விட்டு பாடினானோ அந்த அழகியோ எருமை மாட்டின் மேல் மழை பெய்ந்த ரியாக்ஷனில் முகத்தை வைத்திருந்தாள். அணு அளவேனும் அவளிடம் இருந்து வெட்கம், இரக்கம் குறைந்த பட்சம் ஒரு பார்வை… ம்ஹூம். தரையிலிருந்த புல்லை பிடுங்கி கேம்ப் ஃபயரில் எறிந்து விளையாடியவளை, ‘இவ என்ன லூஸா?’ என்று அனைவரும் ஒரு சந்தேக பார்வை பார்த்து கொண்டிருக்க, அவர்களின் சிந்தனையை கலைக்கும்படி சாந்தி அங்கே வந்து நின்றாள்.

 

    “ஐயா உங்களுக்கு போன் வந்திருக்கு”

 

    இயலிடம் தன் பாடலுக்கு எந்த பதிலும் கிடைக்காமல் போக, உடைந்த தன் மனதை சமாதான படுத்தி ஒரு இறுதி பார்வை பார்த்துவிட்டு வருண் எழுந்து சென்றுவிட்டான். அவன் போன பிறகு மூச்சு விடும் சப்தம் கூட கேட்காத அளவு இறுகி இருந்த மாணவர்கள், அவள் முகத்தை காண பிடிக்காமல் எழுந்து அவன் பின்னாலேயே சென்றிட, ஆசிரியர்களும் அமைதியாய் கலைந்து சென்றுவிட்டார்கள். அத்தனை பேரும் அவள் மேல் கடும் கோபம் கொண்டிருப்பது அவளுக்கும் புரிந்துதான் இருந்தது, இருந்தும் இறுமாப்புடன் இன்னும் கேம்ப் ஃபயரினுள் புல்லை எறிந்தபடி, “பதில் வேணுமாக்கும் துரைக்கு? இதே மாதிரி நானும் ஒருநாள், ‘பதில் சொல்லுங்க… பதில் சொல்லுங்க’ன்னு நாய் மாதிரி பின்னாலயே வந்தேனே! கொஞ்சமாவது என்மேல அனுதாப பட்டானா? இப்போ அவருக்கு லவ் வந்திடுச்சாம் நான் பதில் சொல்லனுமாம், போடா…” என்று தனியாக புலம்பி கொண்டு இருந்தாள்.

 

   மொதுமொதுவென அவன் இருந்த இடத்திற்கு வந்து நின்ற மாணவர்கள் படை, “சார் இன்னும் எவ்ளோ நேரம் போன் பேசுவீங்க? வாங்க சார் வேற கேம் விளையாடலாம்” என்று கை பிடித்து இழுக்க, “டேய் போதும்டா… டயர்டாயிடுச்சு, ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்.” என்று நகர முயன்றான்.

 

     “இசை மிஸ் ரொம்ப மோசம் சார். அவங்க வேணும்னே உங்கள ஹர்ட் பண்றாங்க, அவங்களால தான நீங்க வரமாட்டேன்னு சொல்றீங்க? இனிமே நாங்க யாரும் அவங்க கூட பேச மாட்டோம்.”

 

    “ம்ச்ச்ச்…. நீங்க எல்லாரும் ஒரு விஷயத்த புரிஞ்சுக்கனும், அவ என்னோட வொய்ப் அவள ஹர்ட் பண்ற மாதிரி எதாவது செஞ்சா நான் சும்மா இருக்க மாட்டேன், புரிஞ்சுக்கங்க. அதோட மத்தவங்ககிட்ட அன்பா இருக்குறவ எம்மேல இவ்ளோ கோவமா இருக்கான்னா அதுக்கான காரணமும் பெருசா இருக்கும்ல… ஸோ எதபத்தியும் யோசிக்காம போய் தூங்குங்க”

 

    “சார்… சார்… ப்ளீஸ் சார். இன்னும் கொஞ்ச நேரம் மட்டும் எதாவது விளையாடிட்டு தூங்குவோம் சார்.”

 

    “வேண்டாம்டா, அப்புறம் காலைல எந்திரிக்க முடியாது….”

 

    “ப்ளீஸ் சார்… அட்லீஸ்ட்… உங்க சின்ன வயசு ஆல்பம் எதாவது இருந்தா காட்டுங்களேன், சாந்தி ஆன்ட்டி பால் காய்ச்சி கொண்டு வர்ற வரைக்கும் அதையாவது பாக்குறோம்.”

 

    “ஆல்பம் இல்ல, சிடி தான் இருக்கு. இது என்னோட நாலு வயசுல எடுத்தது” என அதை டிவியில ஓட விட, மாணவர்கள், “நல்ல விவரம்தான், போட்டோவ ஆட்டைய போட்ருவோம்னு சிடிய போடுறீங்கள்ல, எங்க கூட சேர்ந்த பிறகு நீங்களும் புத்திசாலி ஆகிட்டீங்க.”

 

    அடுத்த பத்து நிமிடத்தில், அனைவருக்கும் இளஞ்சூடான பால் வந்து விட ஒரு மாணவன், “தூய்மையான பசும் பாலின் சுவை அபாரம் சாந்தி அவர்களே!” என்று ராஜ தோரணையில் கூறினான்.

 

   சாந்தி முகத்தை சிரிக்காமல் வைத்து கொண்டு, “இது எரும பாலு தம்பி…” என்றதும் கூட்டம் மொத்தமும் அவனை கேலி செய்து சிரித்தனர். பிள்ளைகள் பாலை குடித்து முடித்ததுமே ஆங்காங்கே ஒன்றிரண்டு கொட்டாவிகள் வர தொடங்கியது. ஆசிரியர்கள் அவர்களை கட்டாயப்படுத்தி அறைக்கு உறங்க அனுப்பிய பின், அதை உறுதி செய்து கொண்ட இசை எழுந்து உள்ளே வந்தாள். ஹாலில் தனியாக ஓடிக்கொண்டு இருந்த டிவியில் யதேட்சையாய் அவள் பார்வை பதிந்தது.

 

    நான்கு வயது வருண் அச்சு அசலாக தருணை போலிருக்க, அருகிலிருந்த 10 வயது அருணும் கொஞ்சம் வளர்ந்த தருணின் ஜாடையில் இருந்தான். நான்கு வயது பிள்ளைக்கு பத்து வயது பிள்ளை உணவூட்டுவது, தலை வாருவது, படிப்பிப்பது, குதிரை ஏற கற்று தருவது என்று, ஒவ்வொரு வீடியோவிலும் அருண் வருண் மேல் வைத்திருந்த பாசம் அவன் விழிகளிலேயே தெரிந்தது. விவரம் தெரிந்த பிறகு வந்த குட்டி தம்பியை தன் பிள்ளையாய் பாவிக்கும் குணம் இயல்பிலேயே அருணுக்கு வந்திருந்ததை இசை உணர்ந்தாள். அடுத்த வீடியோவில் ஒரு பெரிய பாத்டப்பினுள் அந்த குழந்தைகள் இருவரும் நீரை ஒருவர் மேல் ஒருவர் தெளித்து விளையாடியபடி குளித்து கொண்டிருக்க, சடாரென சின்னது எழுந்து நின்றுவிட்டது. குழந்தை ஜட்டி அணிந்திருக்கவில்லை என்பதை கண்ட அடுத்த நொடி அவள் மனம் ஒரு கணம் பெரிய வருணின் உருவத்தை ஞாபகபடுத்தி விட, பயந்து கண்களை இறுக மூடிக்கொண்டு சிலையாய் நின்றுவிட்டாள். அவள் கண்களை திறந்து பார்க்கையில் ஒரு ஜான் அளவு இடைவெளியில் முன்னால் நின்றிருந்த பெரிய வருண், “இப்பவும் நான் அப்ப இருந்த மாதிரியே அழகா இருக்கேனா?” என்று காதினுள் கிசுகிசுக்க, வீல்லென கத்தி கொண்டே தெறித்து ஓடிவிட்டாள்.

 

     அடுத்த நாள் காலை டேம், மியூசியம் என்று அவர்கள் அத்தனை பேரும் ஊரை சுற்றி விட்டு மாலை நேரம் தங்களது மலைக்கு அழைத்து சென்றான். வருணுக்கும் இயலுக்கும் அங்கே ராஜ வரவேற்பு வழங்கப்பட, மாணவர்கள், “தானை தலைவர் தங்க தலைவர் வருண் சார் வாழ்க வாழ்க!”, “பன மரத்துல வவ்வாலா, வருண் சார்ட்ட சவாலா!” என்று விதவிதமான கோஷமிட்டு இயலை கலாட்டா செய்தார்கள். வருண் அவர்களை கட்டுபடுத்த முடியாமல் திணறி கொண்டிருக்க, இயலோ அந்த இடத்தின் மாற்றங்களையே ஆச்சரியமாக கவனித்து கொண்டிருந்தாள். காரணம் என்றோ ஒரு நாள் அவள் சொன்ன வார்த்தைகளை நினைவில் வைத்து, அதை எல்லாம் செய்து தந்திருந்தான் வருண்.

 

    இரண்டு வருடங்களுக்கு முன் இயல், “எல்லாரும் உங்களுக்கு அடிமையா இருக்கனும்னு ஆசை இருக்குல உங்களுக்கு, அதான் அந்த மலைவாசி மக்களுக்கு எந்த நல்லதும் செய்யாம விட்டுட்டீங்க. அவங்களுக்கு அங்க என்ன இருக்கு? ஒரு கான்கிரீட் கட்டிட வீடு, சின்னதா முதலுதவி பெட்டி, பெரிய டீவி, கம்ப்யூட்டர், லைப்ரரி ன்னு எதாவது இருக்கா? இன்னும் எத்தன நாளுக்கு அவங்க உங்கள டிபன்ட் பண்ணி இருப்பாங்க? அவங்க ப்ளேஸ்ஸ ஒரு ப்ரைவேட் டூரிஸ்ட் ஸ்பாட்டா மாத்தினா வர்ற வருமானத்த வச்சு சுயம்மா வாழ்வாங்கள்ல?” என்று என்றோ ஒருநாள் அவள் சொன்னதிற்காக அது அத்தனையும் செய்து தந்திருந்தான். அன்றிரவு அங்கேயே மாணவர்கள் அத்தனை பேரும் தங்கும் அளவிற்கு அழகான பெரிய விடுதி இருக்க, அதைக் கண்ட இயல் அசந்து தான் போனாள். ‘காட்டுக்குள் ஒரு நாள்’ என்று தலைப்பு வைக்கும் அளவிற்கு அந்த கடைசி நாளில் மலைவாசிகளின் உணவுகள், மலையின் வரலாறு, அருவியில் ஆனந்த குளியல் என்று பிள்ளைகள் அங்கே உலகம் மறந்து லயித்து கிடந்தனர்.

 

    மாணவர் கூட்டத்தில் இருந்தால் தேவையில்லாத சீண்டல்களை அனுபவிக்க நேரிடுமென்று இயல் வந்த நிமிடத்தில் இருந்து, அடுத்த நாள் மாலை டூர் முடியும் வரை சொக்கு பாட்டியின் வீட்டிலேயே இருந்து கொண்டாள்‌. பாட்டியுன் பழங்கதை பேசி மகிழ்பவளை வீணாக தொல்லை செய்ய விரும்பாமல், வருண் அவ்வப்போது மட்டும் வந்து பார்த்துவிட்டு சென்றான். ‘உன் பிடிவாத குழந்தை தனத்தில் என் கர்வம் தொலைந்து வெகுநாட்களாகிறது பெண்ணே… அதை உனக்கு உணர்த்திடத்தான் இத்தனை முயற்சிகளையும் மேற் கொண்டேன். அது புரிந்த பின்னும் என் பாதையில் நீ இன்னும் முள்ளாகவே இருக்க நினைப்பதேனடி?’

 

    டூர் முடிந்ததும் வருண் வீட்டிற்கு சென்று, லக்கேஜை எல்லாம் எடுத்து கொண்டு தருணையும் அழைத்து கொண்டு சென்னை திரும்பினார்கள். அந்த பயணத்திற்கு பிறகு இயலிடம் மற்றவர்களின் பார்வையும் பழகும் விதமும் அடியோடு மாறிப்போய் இருந்தது. பள்ளி முழுக்க அவளின் பெயரே பேச்சு பொருளாகி போனது. ஸ்ருதியை தவிர வேறு எவரும் இயலிடம் சிரித்த முகமாய் ‘ஹாய், ஹலோ’ கூட சொல்வதில்லை. பேசிய சிலரும் தங்களுக்கு தெரிந்த மோசமான ஆண்களின் கதையை சொல்லி, வருணை நியாயப்படுத்த முயன்ற விதம் அவளுக்குள் இன்னும் எரிச்சலையே மூட்டியது. மாணவர்களோ அவள் வரும் பாதையில் கூட நடக்க விரும்பாமல் ஒதுங்கி நின்று கொண்டு அவமான படுத்தினர். அடிக்கடி உடலும் ஒத்துழைக்க மறுத்து சோர்ந்து விழ, வர வர பள்ளிக்கு போகவே இயலுக்கு பிடிக்கவில்லை, யாருக்கும் தெரியாமல் தீவிரமாக வேறு வேலை தேட ஆரம்பித்தாள்.

 

    அந்த வார இறுதியில் ஸ்ருதியும் அவளின் பெற்றோரும் இசையின் வீட்டிற்கு, திருமண அழைப்பிதழ் தர வந்திருந்தனர். வந்தவர்களை இயல் அகம் மலர வரவேற்று, உபசரித்து தனது வாழ்த்துக்களை பரிமாறிட, வந்தவர்களோ இயல் தலையில் பெரிய கல்லை தூக்கி போட்டனர்.

 

     “இங்க பாரும்மா இசை, நீயும் எங்களுக்கு பொண்ணு மாதிரிதான். ஸ்ருதியோட கல்யாணத்துக்கு நீங்க ரெண்டு பேரும் முதல் நாளே வந்திடனும்.”

 

     இயலின் முக வாட்டமே வருணுக்கு அவளின் விருப்பமின்மையை உணர்த்திட நாசூக்காக அவர்களிடம், “இல்லங்க, குழந்தையோட ரொம்ப நேரம் அங்கயே இருக்க முடியாது‌. எங்களால முடிஞ்ச அளவுக்கு கல்யாணத்துக்கு வர ட்ரை பண்றோம். “

 

    “நீங்க வரலன்னா தாலியே கட்ட மாட்டோம் சார், எங்க பொண்ண ரொம்ப பெரிய இக்கட்ல இருந்து காப்பாத்தி இருக்கீங்க, அதுனால உங்கள நாங்க ரொம்பவே எதிர் பாத்துகிட்டு இருப்போம். இயல், ஸ்ருதி கல்யாணத்துல நீதான் அவளுக்கு துணை பொண்ணா வந்து நிக்கனும். வருண் தம்பி நீங்களும் கட்டாயம் மாப்பிள்ள தோழனா வந்துடனும்.”

 

    சாதாரண அழைப்பாய் நினைத்து இருந்தவனுக்கு, அவர்கள் இப்படி தர்ம சங்கடத்தை உருவாக்கியபின் என்ன சொல்ல முடியும், “சரிங்க கண்டிப்பா வந்திடுறோம்‌” என்றவன் அத்தோடு அதை முடித்து விட்டான்.

 

     திருமண நாள் நெருங்க நெருங்க இயல் ஒவ்வொன்றுக்கும் சுணங்க தொடங்கினாள். எதெற்கெடுத்தாலும் திட்டி கொண்டே இருந்தவள் திடீரென மௌன சாமியாராகிவிட, பழைய நியாபகங்களால் வருண் மனம் பதைபதைக்க ஆரம்பித்தது. மிக பெரிய புயலின் முன் அறிவிப்பாய் வந்து நிற்கும் இந்த மௌனத்தை கண்டு அவன் அறிவு இது நல்லதிற்கில்லை என்று அறிவுறுத்த, அவளின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க தொடங்கினான். ஜானகி மாமியிடம் முகத்தை காட்டாமல் ஓடி ஒளிவதும், தருணை தனியே அழைத்துச் சென்று ரகசியம் பேசுவதும், வழக்கமான அளவினை விட அதிகமாக காபி போட்டு குடிப்பதும், அடிக்கடி அசதியாய் இருக்கிறதென்று படுத்து கொள்வதும் வருணுக்கு வேறெதையோ உணர்த்தியது. இருந்தும் வருணுக்கு அவளிடம் அதைப்பற்றி விவரம் கேட்க துணிவு வரவில்லை. திருமணத்திற்கு அணிந்து கொள்ள தேவையான ஆடைகள் வாங்க கல்யாண வீட்டில் இருந்து அழைப்பு வர, உடன் போகாமல் ஒதுங்கினாள். ஸ்ருதி எத்தனை முறை போன் போட்டாலும் அட்டர்ன் செய்யாமல், கையில் வைத்து கொண்டே வெறித்து பார்த்தபடி இருந்தாள்.

 

     வருணே முன் வந்து, “என்னடா ஆச்சு? ஏன் இப்டி இருக்க? எனக்கு உன்னையும் தருணையும் விட வேறெதும் முக்கியமில்ல. உனக்கு இஷ்டமில்லன்னா நாம அந்த கல்யாணத்துக்கு போக வேண்டாம்டா… எங்கிட்ட எதாவது சொல்லனும்னு தோணுச்சுனா சொல்லு, இல்ல திட்டனும்னாலும் திட்டு, இப்டி தனியா உக்காந்து யோசுச்சு வீணா மனச போட்டு குழப்பிக்காத…” என்று முடிந்தவரை அவளை பேசி கரைக்க முயன்றான், ஆனால் அதன் பலன் என்னவோ ஜீரோதான்.

 

    விடிந்தால் திருமணம், பெண் வீட்டார் போன் மேல் போன் போட்டு அழைக்க, வருண் ‘காலைல கண்டிப்பா வந்திடுவோம்ங்க’ என்ற மட்டில் தொடர்பை துண்டித்தான். இயலோ பெட்டில் சுருண்டு படுத்து கொண்டு உண்ணாமல், உறங்காமல் எதையோ யோசித்தபடியே சிந்தனையில் மூழ்கி இருந்தாள்.

 

    வருண் இயலின் தலை மேட்டில் அமர்ந்து, “இயல் இங்க பாரு… நாம அந்த கல்யாணத்துக்கு போகல புரியுதா? தேவையில்லாம நீ டென்ஷனாகாதடி, நாம நாளைக்கு விடிஞ்சதுமே திருப்பதி போயிடலாம்.”

 

    “வேணாம்… நாம ஸ்ருதி கல்யாணத்துக்கு போகலாம், எனக்கு அங்க கொஞ்சம் வேலை இருக்குது” என்றாள் அழுத்தமாய். வருண் மனம் ஒரு நிலையில் நில்லாமல் உளன்றது, நாளை இவள் என்ன செய்ய காத்திருக்கிறாளோ? என்னை திட்டினாலும் பரவாயில்லை, தன்னை தானே தண்டித்து கொண்டால் என்ன செய்வது? என்ற நினைப்பில் இரவு முழுவதும் அரைகுறை தூக்கமாய் தூங்கினான்.

    

    அடுத்த காலை பொழுது விடிந்தது முதலே, இயல் சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கினாள். வருண் கண் விழித்த போது, அவள் சமையலையும் முடித்துவிட்டு தருணையும் எழுப்பி தயார் செய்திருந்தாள். வருண் வாங்கி தந்து இதுநாள் வரை கட்டாமல் வைத்திருந்த பட்டு புடவையில் ஒன்றை தயாராக வைத்திருந்தாள்.

 

    “இயல் அடம்புடிக்காம நான் சொல்றத கேளு, நாம போக வேண்டாம்டா”

 

    “உங்களுக்கு ஞாபகம் இருக்குதா? என்னை இங்க இருந்து கூட்டிட்டு போகனும்னா உங்கள நான் சித்தார்த்கிட்ட பர்மிஷன் வாங்க சொன்னேன்ல, அது ஏன்னு தெரியனும்னா கல்யாணத்துக்கு வாங்க. அப்டியே உங்க க்ளோஸ் ப்ரன்ட் சித்தையும் வர சொல்லிடுங்க”

 

    நால்வரும் மண்டபத்தினுள் நுழைந்ததும், அவர்களை பெண் வீட்டாரே நேரடியாக வந்து பன்னீர் தெளித்து வரவேற்று, முன் வரிசையில் இடம் பார்த்து அமர வைக்கப்பட்டு, குடிக்க கூல்டிரிங்ஸ் கொண்டு வந்து தருவது வரை பார்த்து பார்த்து செய்து தந்தனர். சுமாராக ஆயிரம் பேர் கூடி இருந்த மண்டபம், குழந்தைகளின் விளையாட்டிலும் இளசுகளின் குறும்பிலும் இன்னும் இன்பம் நிறைந்து காணப்பட்டது. பள்ளியில் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் அநேகம் பேர் வந்திருக்க, இயல் போகும் இடத்திற்கெல்லாம் தேடி வந்து, தங்களின் வாழ்க்கை அனுபவங்களை எல்லாம் அட்வைஸ் மழையாக பொழிந்து விட்டு சென்றார்கள்‌.

 

     மணமகள் அறைக்குள்ளே மண பெண்ணிற்கு அலங்காரம் நடந்து கொண்டிருக்க, மாப்பிள்ளை மணமேடையின் அருகில் அவளுக்காக காத்திருந்தான். இயல் மணமகள் அறைக்கு வந்ததுமே ஸ்ருதி, “ஹேய் வாடி… எங்க நீ எஸ் ஆகிடுவியோன்னு பயந்துட்டே இருந்தேன். தேங்க்ஸ்டி, எங்க உன்னோட ஹீரோ? எவ்ளோ கெஞ்சி கேட்டாலும் உன்ன நேத்து அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தாரே, இப்ப இங்க வர சொல்லு சண்ட போடுவோம்” என்று இயலின் நிலமை புரியாமல் பேசிக்கொண்டே போனாள்.

 

    ஆம், இந்த உரையாடலின் போது இயல் ஸ்ருதியின் பேச்சை கவனிக்கவே இல்லை. அந்த அறைக்குள் ஸ்ருதி நடு நாயகமாக வீற்றிருக்க, அவளின் சித்தி அவளுக்கு பின்னல் பின்னிக் கொண்டு இருந்தார், இடப்புறம் இருந்த தங்கை ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை கிச்சு கிச்சு மூட்டி விளையாடிக் கொண்டு இருந்தாள், வலது புறமிருந்த ஸ்ருதியின் பெரியம்மா அவளுக்கு காபி ஆற்றிக் கொண்டிருந்தார், எங்கிருந்தோ வந்த ஒரு பாட்டி விபூதி பூசி ஆசிர்வதித்து விட்டு வெளியேறினார். இடையிடையே டேபிளின் மேலிருந்த ஸ்ருதியின் செல்போன், அவளின் வருங்கால கணவனிடமிருந்து அழைப்பை சுமந்தபடி வந்து அதிர்ந்துகொண்டே இருந்தது. இறுதியாய் ஸ்ருதியின் மாமியார் தன் மருமகளுக்காக ஒரு பெரிய தங்க சங்கிலியை கொண்டு வந்து தன்கையாலேயே மாட்டிவிட, இயல் முயன்று வரவழைத்த புன்னகையோடு அறையை விட்டு வெளியேறினாள்.

 

    நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க நற்றமிழால் நல்லோர்கள் வாழ்த்த, பட்டு புடவை சரசரக்க, புது மெட்டி அவளின் புருஷன் காதினுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் ஒலி எழுப்பிட, நறுமலர்களால் கோர்க்கப்பட்ட மாலையை தோளில் ஏந்தி, நெற்றியில் திலகம் நிறைந்திட, விழிகளில் நாணம் சூடி, அழகிய விதிர்ப்புடன் அருகில் வந்து அமர்ந்திருக்கும் மணமகளுக்கு மங்கல நாணை மணமகன் புன்னகை தவழும் இதழ் விரித்து சூட்டினான். சொந்தங்களும் பந்தங்களும் அர்ச்சதை தூவி ஆசிர்வதிக்க, மணமக்கள் தங்களுக்குள் தனிக்கதை பேசி சிரிப்பதை கண்டு களித்திருந்த வருணின் காதில் தருண், “அப்பா… அப்பா… அம்மா அழுறாங்கப்பா…” என்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: