Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 28

வெள்ளிக்கிழமை அந்தி மாலை நேரம் பள்ளியில் இருந்த பிள்ளையாருக்கு பூஜை போட்டு தேங்காய் உடைத்து விட்டு, மூன்று பெரிய பேருந்துகளில் மாணவ மாணவிகள், ஆறு ஆசிரியர்களுடன் இன்ப சுற்றுலாவிற்காக கிளம்பினார்கள். பதினோராம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் இருந்த பேருந்திலேயே வருணையும் கட்டாயப்படுத்தி ஏற்றி விட்டனர். ஆரம்பித்த சில நிமிடங்களுக்கு மாணவர்களின் ஆர்ப்பாட்டமே பெரிதாய் இருந்தது. ஏதோ காணாததை கண்டதை போல, வழி நெடுக ரோட்டில் போகும் மற்ற வழிப்போக்கர்களை பார்த்து கத்தி கொண்டே வந்தார்கள். நீண்ட தூர பயணமாதலால் பயத்தை மறைக்க, தானாகவே வருண் அருகில் வந்து இயல் அமர்ந்து கொண்டாள். நெடு நாட்களுக்கு பிறகு கிடைத்த மனைவி மகனுடனான இந்த குடும்ப பயணம், வருணையும் அளவுக்கு அதிகமாய் குதூகலம் கொள்ள செய்தது. பேருந்து ஊருக்கு வெளியே வந்ததும், மாணவர்கள் தங்களின் அடுத்த குறும்பு தனத்தை கையில் எடுத்தனர்.

 

     “சார்…இன்னும் எவ்வளவு நேரம் பக்தி பாடல்களையே ஒலி பரப்புவீங்க… நாம என்ன சபரி மலைக்கா போறோம்? நல்லா குத்து சாங்கா நாலு போட சொல்லுங்க சார்…” என்று கடைசி வரிசை சீட்டில் இருந்து குரல் வந்தது. வருண் எழுந்து போய் டிரைவரிடம் சொல்லி புது பாடல்களை போட்டு விட்டு வந்தான். அவ்வளவுதான்… ஆங்காங்கே சில வாலில்லாக் குரங்குகள் எழுந்து ஆட்டத்தை ஆரம்பிக்க, பின் அந்த ஜோதியில் மற்றதுகளும் இணைந்து ஆட ஆரம்பித்துவிட்டது. ஓடும் பேருந்தில் நின்றாலே ஆடுவது போல் இருக்கும், இதில் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடினால் என்ன ஆகும்? யார் எங்கே விழுந்தார் என்று தெரியாத அளவிற்கு ஒருவர் மேல் ஒருவர் விழுந்து எழுந்து ஆடிக்கொண்டு அலப்பறை செய்தார்கள். இரண்டு மணி நேரம் ஆடி ஆடி அசந்துபோய் அமர்ந்த நேரம், இரவு உணவுக்காக ஒரு சாலையோர ஹோட்டலுக்கு முன் பேருந்து நிறுத்தப்பட்டது. பின்னால் வந்து கொண்டிருந்த பேருந்துகளுக்கும், அந்த இடத்தின் தகவல் தரப்பட்டு அவர்களும் வந்து சேர்ந்தனர். ஆடிய அசதியின் காரணமாக பசியில் சோர்ந்திருந்த பிள்ளைகள் அனைவரும் சத்தமின்றி இரவு நேர உணவை உண்டு, அடுத்த குறும்புகளுக்காக தங்களை ரீசார்ஜ் செய்து கொண்டனர். இளங்கன்று பயமறியாது என்பது போல, தெரியாத இடத்திலும் ஒழுங்காக ஓரிடத்தில் நிற்காமல் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றும் மாணவர்களை பிடித்து இழுத்து வந்து பேருந்துக்குள் அடைத்து, எண்ணிக்கையை சரி பார்த்து வண்டியை கிளப்புவதற்குள் ஆசிரியர்களின் பாதி ஜீவன் கரைந்து விட்டது.

 

    அதன் பின் இதமான மெல்லிசை பாடல்கள் ஓடிட, பௌர்ணமி நிலவொளியில் தலை கோதும் தென்றல் துணைக்கு வர, அந்த பயணம் அத்தனை இன்பமாய் தொடர்ந்தது. பெண் பிள்ளைகள் பாடலோடு இணைந்த படி மென்மையாய் பாடிக்கொண்டே வர, ஆண் பிள்ளைகளோ, ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு விதமான கமெண்ட் அடித்து சிரித்துக் கொண்டே வந்தனர். அதிலும் சோக பாடல் வந்தாலோ, அவர்களின் சேட்டையை பற்றி சொல்லவே வேண்டாம், ‘ஏ அஞ்சல மச்சா அவ…’, ‘தள்ளி போகாதே, நெஞ்சை கிள்ளாதே கண்மணி…’, ‘அடியே அழகே… அழகே அடியே’ என்று குறிப்பிட்ட வரிகளை மட்டும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சத்தமாய், உச்ச ஸ்ருதியில் பாடி தள்ளினர். இதில் இடையிடையே ‘ஐயையோ வேறு… அம்மம்மா வேறு…’ கதறும் குரலாய் காரணமின்றி எழுப்பினார்கள். குறிவைத்து இசையைதான் அவர்கள் ஓட்டுகிறார்கள் என்று அப்பட்டமாய் அத்தனை பேருக்கும் புரிந்தது. அந்த சூப்பர் சிங்கர்ஸின் தொல்லை தாங்காமல், எழுந்து வேறெங்கும் போகவும் முடியாமல் இசை தலையை பிடித்து கொண்டு சாய்ந்து விட்டாள்‌.

 

     வருண் இப்போதுதான் இயலின் முகத்தையே கவனித்தான். “என்னடா ஏதாவது செய்தா?”

 

     “ஆமா… தலை வலிக்குது… உடம்பு ஏதோ மாதிரி இருக்குது…”

 

    “சரி நீ தருண பக்கத்துல வச்சிக்கிட்டு ப்ரீயா உக்காரு, நான் போய் ட்ரைவர் பக்கத்துல உட்காந்துக்கறேன்.”

 

    “ம்… அப்படியே அந்த பசங்களை கொஞ்சம் கத்தாம இருக்க சொல்லிட்டு போங்க”

 

    வருண் எழுந்து வந்து, “நான் உங்களுக்கு என்ன பாவம்டா செஞ்சேன், ஏன்டா இந்தப்பாடு படுத்துறீங்க?”

 

    “மச்சி… இங்க பாரேன், வேங்கை மகன் ஒத்தையில வந்திருக்காரு…”

 

    “கெஞ்சி, கதறி, கைய புடிச்சு, கால புடிச்சி, கஷ்டப்பட்டு இந்த மூணு நாள் ட்ரிப்புக்கு உங்க மிஸ்ஸ வர வச்சு இருக்கேன்டா… அதுல மண்ண அள்ளி போட்டுறாதீங்கடா…” என்றதும் மாணவர்களின் சிரிப்பு சத்தம் பஸ்சையே உலுக்கியது.

 

   வருண் பின்னால் வந்து நின்ற ஒரு அறுந்த வால் ஒன்று, “சார் வாழ்க்கைனா சில அடிகள் விழத்தான் செய்யும்… இதுக்கு போய் இப்டி நடுங்குறீங்களே, இது நம்ம கேங்குக்கு அசிங்கம்ல..” என்றிட அவன் கையை பிடித்து இழுத்து, கைவளைவிற்குள் கழுத்தை கொண்டு வந்து நிறுத்திய வருண் வலிக்காமல் இரண்டு கொட்டு கொட்டிட, தலையைத் தடவிக்கொண்டே “வலிக்கலயே” என்றான்.

 

    “யாருக்குமே அடங்க மாட்டீங்களாடா நீங்க?”

 

    இன்னோரு வாலு, “சார்… அவன அடக்குறதுக்கு, அஞ்சாவது சீட்டுல வெள்ளை சுடிதார் போட்ட பொண்ணு இருக்குல அத கூப்பிடுங்க சார்…” என்றான்.

 

    வருண், “மொளச்சு மூணு இல விடல அதுக்குள்ள உனக்கு ஒரு ஆளாடா? இன்னும் அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்து பாப்பேன், அத்தனை பேரும் தூங்கி இருக்கணு புரியுதா…”

 

   முதலாம் வாலு, “இதுவே சாரோட கட்டளை, கட்டளேயே அவர் சாசனம், மூடிக்கிட்டு படுங்கடா மக்கா…”

 

   வருண் சிரித்து கொண்டே தன் இடத்தில் போய் அமர மாணவர்களும் வாலைச் சுருட்டி கொண்டு அமர்ந்தார்கள். விளக்குகள் எல்லாம் அணைத்த பின்னும் உறக்கம் வராத ஒன்றிரண்டு பேர் உறங்கியவர்களை உறங்க விடாமல் தொல்லை செய்து விளையாட, பதினோரு மணிக்குமேல் வருண் வந்து பார்க்கையில் மொத்த கூட்டமும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தது. எவ்வளவு சேட்டை செய்தாலும், ஒருவர் மடியில் ஒருவர் படுத்து உறங்கும் வளர்ந்த பிள்ளைகளை பார்க்கையில் மனதிற்கு இதமாகத்தான் இருந்தது. பொழுது விடிகையில் மூன்று பேருந்துகளும் மூணாறை நெருங்கி இருந்தது. ஊருக்கு வெளியே இருந்த ஒரு சின்ன நீர்வீழ்ச்சி முன் ஓய்வுக்காக வண்டியை நிறுத்தி, அத்தனை வானரங்களையும் ஆசிரியர்கள் எழுப்பி விட்டனர்.

 

    எழுந்த அடுத்த நிமிடமே, “ஹேய்… நாம ஸ்பாட்டுக்கு வந்துட்டோம்…” என்று ஊரே அதிரும் படியாக கூச்சலிட்டு கொண்டாடினார்கள்.

 

    “டேய் இங்க பாருடா பால்ஸ்(falls) இருக்கு, செமல்ல… ஒரு சின்ன குளியல போட்ருவோமாடா… அத விட்றா, அங்க பாரு ப்ரட் ஆம்லேட்டு, காலிஃப்ளவர் ரோஸ்ட் சூடா நம்மள கூப்டுது, வா வயித்த கவனிப்போம்… கணக்கில்லாம தின்னுட்டோமே, காசு பத்தலன்னு சொன்னா நாயர் அட்ஜஸ்ட் பண்ணுவாரான்னு கேளு… விட்ரா நீ இங்கயே உக்காந்து பத்து பாத்திரம் கழுவு, நாங்க திரும்பி போகும் போது வந்து உன்ன பிக்கப் பண்ணிக்கிறோம்… இந்த கல்லு மேல ஏறி ஒரு குரூப் செல்பீ எடுப்போமாடா… பாறைய பாத்த நீ பின்னாடி இருக்குற பாதாளத்த பாக்கலயா? லேசா கால் வழுக்குனாலும் சங்கு தெறிச்சுடும், நாம அந்த மாமரத்துமேல ஏறுவோம் வா செல்லம்…” என்று ஆண் பிள்ளைகள் குதித்து கும்மாளமடிக்க,

 

     பெண் பிள்ளைகளோ, “என்னடி இது, மூஞ்சிய கழுவலாம்னு பாத்தா இவ்ளோ ஜில்லுனு இருக்கு, கை வச்சாலே விறைச்சுடும் போல… வாவ் எவ்ளோ அழகழகான ப்ளவர்ஸ், இங்க பாருடி கேரட் குட்டியா க்யூட்டா இலையோட இருக்கு… இந்த கேரட்டும், ஒரு ப்ரட் ஆம்ளேட்டும் மார்னிங் டிபனுக்கு போதும்டி… ஆத்தாடி எவ்ளோ பெரிய பள்ளம், எதுக்கும் நாம வேற பக்கம் போயிடலாம்பா” என்று செல்லம் கொஞ்சி விளையாடினர்.

 

    இந்த மூன்று நாட்களின் ஒவ்வொரு நிமிடத்தையும் வாழ்ந்து விட துடிக்கும் அந்த இளசுகளுக்கு மத்தியில், தருணை தூக்கி கொண்டு கடனே என்று நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் இசை. மகனுக்கும் மனைவிக்கும் காபி, ஸ்னாக்ஸ் வாங்க வந்த வருணை பலர் அடையாளம் கண்டு வந்து, வணக்கம் வைத்து, நலம் விசாரித்து சென்றனர்.

 

    மாணவர்கள், “என்ன சார் இந்த ஊருக்குள்ள நீங்க ரொம்ப பிரபலம் போல இருக்கே, எப்டி சார்? எல்லாருட்டயும் கடன் வாங்கி இருக்கீங்களா?…”

 

    “ம்ம்ம்… என்னோட வீட்டுக்கு போனதும், உங்களுக்கே தெரியும்”

 

     வருண் வீட்டை பேருந்துகள் அடைந்ததும் கட்டவிழ்த்து விடப்பட்ட கன்று குட்டியை போல, தாவி குதித்து ஓடிய மாணவர்கள், வடிவேலு திருடப் போன வீட்டில் தகிடுதத்தம் செய்வதை போல, “இங்க பார்றா டேய்… பென்ஸு காரு… பென்ஸூ காரு… எம்மாம்பெரிய பேலஸ்ஸு… எம்மாம்பெரிய பேலஸ்ஸு… ஐயோ சோபா செட்டு… சோபா செட்டு… டேய் இங்க வாடா பின்னால எத்தாத்தன்டி கார்டன் பாரு…” என்று நீட்டி முழங்கினார்கள். இதற்குள் மாடிப்பக்கம் ஓடிய சிலர், “டேய் இங்க இருந்து பாத்தா முழு ஊரே தெரியுதுடா… அங்க பாரு ஒரு லேக் இருக்கு… டேய் கீழ கார்டன்ல பாரு நம்ம க்ளாஸ் பொண்ணுங்கள… இவளுங்க ஏன்டா எப்ப பாரு எதாவது பூவ பிச்சுகிட்டே திறியிறாளுங்க… ஏய் குள்ளச்சிங்களா… இங்க இருந்து பாக்க இன்னும் ரொம்ப குள்ளமா தெரியிறீங்கடி…” என்று இரண்டாவது மாடியிலிருந்து கத்தினான் ஒருவன்.

   

    “மேல இருந்து பாத்தா, கீழ இருக்குறது குள்ளமாதான் தெரியும். ஏதோ பெரிய ஐன்ஸ்டீன் கிராவிட்டிய கண்டுபுடிச்சுட்ட மாதிரி பெரும பீத்துது பக்கி… கண்டதுலெல்லாம் ஏறி கைய கால உடச்சுக்காம ஒழுங்கா ஊரு போய் சேருடா…”

 

    “என்னடா சொல்றாளுங்க?…”

 

    “அவளுங்க வாய்ஸ் பக்கத்துல இருந்தாலே பாதி கேக்காது, இங்க நின்னு சரியா கேட்டு சொல்றதுக்கு எனக்கு என்ன பாம்பு காதா இருக்கு? ஆனா ஒண்ணு, கண்டிப்பா நம்மள திட்டி இருப்பாளுங்கன்னு மட்டும் ஷுயர்ரா சொல்றேன். சரி வா அந்த பக்கமா போய் எட்டி பாப்போம்”

 

    இது அத்தனையும் அவர்கள் உள் நுழைந்த மூன்று நிமிடங்களுக்குள் நிகழ்ந்தேறியவை. தருண் நெடுநாள் கழித்து வீட்டை அடைந்த மகிழ்ச்சியில் உள்ளே ஓடிவிட, இசை இப்போதுதான் தயங்கி தயங்கி ஹாலுக்குள்ளேயே நுழைகிறாள்…

 

    சாந்தி, “இயல்… எத்தன நாளாச்சு உன்ன பாத்து, அக்கா அக்கான்னு கூப்டுட்டு இப்டி திடீர்னு விட்டுட்டு போயிட்டயே… நீயில்லாம நானே தவிச்சு போயிட்டேன். பாவம், வருண் ஐயா எவ்ளோ மனசு உடைஞ்சு போச்சு தெரியுமா?”

 

    ஆரம்பத்தில் சாந்தியின் பேச்சால் நெகிழ்ந்திருந்தவள், வருண் பேரை கேட்டதுமே இறுகி விட்டாள்.

 

    “நீங்க எப்டி இருக்கீங்க அக்கா? எங்க உங்க பையன காணும்”

 

    “ஐயா நீங்க வர்றீங்கன்னு இடத்த ஒதுங்க வைக்க சொன்னாரு… அவன் அவங்க அப்பா கூடவே மாடிக்கு போயிட்டான்.”

 

    “நான் போய் அவன பார்த்துட்டு வரேன்” என்று நழுவி செல்ல, அவள் பின்னால் வந்து கொண்டிருந்த வருணிடம் சாந்தி, “இந்த பொண்ணுக்கு, இத்தனை நாளான பிறகும் இன்னும் கோபம் குறையலையா ஐயா?” என்றாள். வருண் ஒரு பெருமூச்சுடன் தலையை இடவலமாய் அசைத்து விட்டு இயல் பின்னால் சென்றான். முழுதாய் இரண்டு ஆண்டுகள் கழிந்து இருந்ததால், சாந்தியின் மகன் இயலை முற்றிலுமாய் மறந்து விட்டான்.

 

     மாணவ மாணவிகள் எல்லாம் அறைக்கு பத்து பேராய் நுழைந்து கொண்டு விரைவாக குளித்து முடித்து வெளியேற, அவர்களுக்கான காலை நேர உணவு பெரிய ஹாலில் பந்தி போல பரிமாறப்பட்டது. தருணை கொண்டு போய் பிரபாகரன் வீட்டில் விட்டுவிட்டு, அப்போதுதான் வருண்  திரும்பி வந்தான். இதுநாள்வரை சாதாரண உடையில் பார்த்திருந்த வருணை, முதல் முறையாக பணக்கார தோரணையில் கண்ட மாணவிகள்,

 

    “சார் இந்த டிரஸ்ல செம ஹேண்ட்சமா இருக்கீங்க”

 

    “தேங்க்ஸ் கிட்ஸ்” என்றான் வழக்கமான புன்னகையில்.

 

    “சார், உங்களுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ற ஐடியா இருந்தா சொல்லுங்க சார். இல்ல மூணாவது நாலாவதா இருந்தா கூட பரவால்ல, நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்” என்று கத்தி கலாட்டா செய்தனர்.

 

    கிச்சனில் இருந்த இயல் வேகமாக வெளியே வந்து, “யார் அது? கேக்குறேன்ல யாரது?” என்று கத்தினாள். ஹால் முழுவதும் குண்டூசி விழும் சத்தம் கேட்கும் அளவு நிசப்தம்.

 

    “வயசுக்கு தகுந்த மாதிரி பேசல, பல்லத் தட்டி கையில கொடுத்துருவேன் ஜாக்கிரத” என்றவள் மீண்டும் கிச்சனுக்குள் சென்று விட,

 

    வருண், “அவ கெடக்குறா… நீங்க சீக்கிரமா சாப்பிடுங்கம்மா, நான் உங்கள பர்ஸ்ட் போட்டிங் கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன். அப்புறம் நாம பார்க்குக்கு போக போறோம்… ஸோ லேட் பண்ணாதீங்க…” என்று ஏமாற்றி சமாதான படுத்திவிட்டு, கிச்சனுக்குள் வந்து, “இயல்.. ஏண்டா இப்படி திட்டுன? சின்ன புள்ளைங்க தெரியாம பேசிட்டாங்க, பாவம் அவங்களுக்கு என்ன தெரியும்?”

 

    “ஆனா யாருகிட்ட பேசுறோம்னு தெரியாம பேசிகிட்டு இருக்காங்களே…”

 

     வருண் முடிந்த அளவு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, இயலிடம் தன்மையாகவே பேசினான், “நான் என்ன அவ்ளோ மோசமானவனா இயல்?”

 

    “இதுக்கு நான் கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணுமா?”

 

     “அந்தப் பொண்ணுக்கு என் தங்கச்சி வயசுக்கும் கீழ இருக்கும்… அதுவும் போக அவ என்னோட ஸ்டூடண்ட். அவளுக்கு உலகம் தெரியாத சின்ன வயசு, வாய்க்கு வந்ததை யோசிக்காம பேசிட்டா. அதையே உடும்பா புடிச்சுகிட்டு நீ இப்டி தப்பா பேசாத இயல், கஷ்டமா இருக்கு.”

 

     “16, 17 வயசு பொண்ணுக்கும் 20 வயசு பொண்ணுக்கு எவ்வளவு தூரம் வித்தியாசம் இருக்கும்? அன்னைக்கு என்ன கல்யாணம் பண்ணினதுல இருந்து, இன்னிக்கி இந்த ட்ரிப்ப இந்த ஊருக்கு மாத்தி அரேஞ்ச் பண்ண வரைக்கும், எல்லாமே நீங்க பிளான் பண்ணி தான் பண்ணிட்டு இருக்கீங்க? இதுல நான் என்ன நல்லதா நினைக்க இருக்கு சொல்லுங்க?”

 

     “ஏண்டி, எங்க என்ன நடந்தாலும், அதுக்கு என்னையே காரணம் சொல்லி திட்டிட்டு இருக்க? இரு இரு… உன்ன நான் அப்புறமா கவனிக்கிற விதத்தில கவனிச்சுக்கறேன்…”

 

     “எனக்கு தெரியும் சார் நீங்க அங்க சுத்தி, இங்க சுத்தி இதுலதான் வந்து நிப்பீங்கன்னு…” என்றதும் அவன் இதற்குமேல் பேசி பயனில்லை என்று நினைத்து, தலையை தொங்க போட்டுக்கொண்டு  கிச்சனை விட்டு வெளியேறி விட்டான்.

 

    சாந்தி, “ஏன்மா இப்படி எல்லாம் பேசுற, அதுவும் நாங்க எல்லாரும் இருக்கும் போது?”

 

    “ஏங்க்கா, நான் இங்க வந்த புதுசுல, அவன் இதை விட நிறைய கொடுமையெல்லாம் செஞ்சானே, அப்ப நீங்க எல்லாரும் வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தீங்கன்றத மறந்துட்டீங்களா? இப்ப மட்டும் என்ன கேள்வி எல்லாம் கேக்குறீங்க? ஒருவேள உங்க முதலாளி செஞ்சா தப்பு கூட சரியா தெரியுமா உங்களுக்கு?”

 

    சாந்திக்கு தெரிந்ததெல்லாம் மற்றவர்களை அவமதித்து பேசத் தெரியாத இயலைத்தான், இன்று தன் முன்னால் இருப்பவளை உண்மையிலேயே தன்னோடு பழகிய இயலிசை என்று நம்ப முடியாமல், “இயல்…” என்றாள்.

 

    “அக்கா… யானைக்கு ஒரு காலம் வந்தா, பூனைக்கும் ஒரு காலம் வரும்னு சொல்லுவாங்களே நீங்க கேள்வி பட்டதில்லையா?. அன்னிக்கி அவன் எனக்கு கொடுக்கற இடத்துல இருந்தான், இன்னிக்கி நான் அவனுக்கு கொடுக்குற இடத்துல இருக்குறேன். அடியோ, இடியோ, நான் கொடுக்குறத அவன் தலைமேல வாங்கித்தான் ஆகனும்…” என்றபடி இயல் திமிராய் மாடி பக்கம் செல்ல, அதிர்ந்து போய் நின்றிருந்தாள் சாந்தி.

 

    உண்டு முடித்த மாணவர்கள் ஊரை சுற்றி பார்க்க பேருந்தை நோக்கி சென்றிட, இயலோ தலைவலி என்று உடன் வர மறுத்து விட்டாள். வருண் மாணவர்களை கவனிக்க தன் ஆட்களை ஒன்றுக்கு நான்காய் உடன் அனுப்பி விட்டு இயலுடனேயே வீட்டில் இருந்து விட்டான். அவன் உடன் வரவில்லை என்றாலும், அவன் பேரை சொன்ன மாத்திரத்திலேயே சென்ற இடங்களிலெல்லாம் அவர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது. இரவு உணவாக சைவமும் அசைவமும் சேர்த்தே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, பசியோடு வந்த மாணவர்கள் ஒரு வெட்டு வெட்டினார்கள். கார்டன் பக்கம் கேம்ப் ஃபயர் வைக்க ஏற்பாடு நடக்க, முழு விவரம் தெரியாத மற்ற ஆசிரியர்கள் இயலை கட்டாயப்படுத்தி அங்கே அழைத்து வந்தார்கள். கேம்ப் பயர் வைத்ததும்,

 

    வருண், “என்ன கேம் விளையாடலாம் கிட்ஸ்?”

 

    ஒரு மாணவி, “காலம் காலமா இந்த டைம்ல விளையாடுற ஒரு கேம் அந்தாக்ஷரிதான், அதையே இப்ப ஆரம்பிக்கலாமா?”

 

    ஒரு மாணவன், “ஓகே, பட் கேர்ள்ஸ் ஒரு டீம் பாய்ஸ் ஒரு டீம் வச்சுக்கலாம், அப்பதான் கேம் ஜாலியா இருக்கும்.”

 

    அனைவரும் அதற்கு ஒப்புக் கொண்டதும், கச்சேரியை ஆரம்பித்தார்கள். பெரும்பாலும் அவர்கள் காதல் பாட்டுகளையே பாடிக் கொண்டிருக்க ஒரு மணி நேரம் கழித்து ஒரு மாணவி, “வருண் சார் நீங்க பாடவே மாட்டிக்கிறீங்க, அப்போல இருந்து உங்கள நான் பார்த்துகிட்டே இருக்கேன்… சும்மா வாய் மட்டும் அசைக்கிறீங்க.”

 

    அதைக் கேட்டதும் மற்ற பெண் பிள்ளைகளும் சேர்ந்து கொண்டு அவனை ஏதாவது ஒரு பாட்டு பாடச் சொல்லி கட்டாயப்படுத்த, “என்னால முடியாதுப்பா…” எழுந்து போக முயன்றவனை பிள்ளைகள் விடாமல் பிடித்து இழுத்தார்கள். கைகளை நான்கு பேர் கால்களை நான்கு பேர் பிடித்துக்கொள்ள, கழுத்தை கட்டிக்கொண்டு தொங்கினான் ஒருவன். இத்தனை பேருக்கு நடுவில் மாட்டிக்கொண்டு சிரிக்கும் வருணை, எதேச்சையாய் அந்தப் பக்கம் வந்த சாந்தி அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்,

 

     “விடுங்கடா… விடுங்கடா… பாடி தொலைக்கிறேன் விடுங்கடா…” என்ற வருண், மற்றவர்களின் கைப் பிடியில் இருந்து விடுபட்டு தன் சட்டையை உதறிவிட்டு, இயலை நேரெதிராய் பார்க்கும்படியான ஒரு வசதியான இடத்தில் அமர்ந்தான்.

 

   கூரான தன் பார்வையை முழுக்க முழுக்க இயல் மேல் பதித்து, “எனக்கு பாக்ஸிங் தான் தெரியும், பாட்டு பாடெல்லாம் சரியா வராது. ஆனா என்னோட வொய்ப் ரொம்ப அழகா பாடுவா. கொஞ்ச நாள் அவ என் கூட இல்லை, இருந்தாலும் என்னிக்காவது ஒரு நாள் அவ திரும்ப இந்த வீட்டுக்கு வருவான்ற நம்பிக்கை எனக்கு இருந்துச்சு. ஸோ, அவள இம்ப்ரஸ் பண்றதுக்காக, யாருக்கும் தெரியாம ரகசியமா நான் பாட்டு பாட கத்துக்கிட்டேன். பாடவா?” என்றதும் அவளைத் தவிர அத்தனை பேரும், “பாடுங்க பாடுங்க” என்று கத்தினார்கள்.

 

    அவன் ‘உஷ்….” என்றதும் மயான அமைதி கொண்டு மாணவர்கள் அமர்ந்திருக்க, குளிர் காற்று முதுகை துளைக்கும் முழு நிலவொளியில், அவன் குரல் ஓங்கி ஒலித்தது.

 

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி!

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா

ஒரு உருண்டையும் உருளுதடி!

காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால்

ஒரு நிமிஷமும் வருஷமடி!

கண்களெல்லாம் என்னை பார்ப்பது போல் ஒரு கலக்கமும் தோன்றுதடி!

இது சொர்க்கமா நரகமா

சொல்லடி உள்ளபடி – நான்

வாழ்வதும் விடை கொண்டு போவதும்

உந்தன் வார்த்தையில் உள்ளதடி…!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: