Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 27

ன் காதல் புரியலையா?

உன் நஷ்டம் அன்பே போ…

என் கனவு கலைந்தாலும்

நீ இருந்தாய் அன்பே போ…

நீ தொட்ட இடமெல்லாம்

எரிகிறது அன்பே போ…

நான் போகும் நிமிடங்கள்

உனக்காகும் அன்பே போ…

இது வேண்டாம் அன்பே போ…

நிஜம் தேடும் பெண்ணே  போ…

உயிரோட விளையாட

விதி செய்தாய் அன்பே போ…

 

    ‘ஏன் இப்படி செய்தாய் என் அன்பே? செஞ்சூரியன் என்று தெரிந்தே உன்மேல் அளவற்ற அன்பு கொண்டிருந்தேனே, வறண்ட பூமியாய் எனை சுட்டு வாட்டி வைத்ததேனோ. எது குடித்தாலும் அணையாத வெப்பம், தணிக்க முடியாத தீப்பிழம்பு என் மனதின் ஆழத்தினுள்ளும், மிச்சமாய் இருந்து எனை இம்சித்து கொண்டிருக்கிறதடி… உன்னால் இன்று என் உடலென்ற பூமியில் நரம்பென்ற நதிகள் வற்றி, அங்காங்கே இரத்தம் சுண்டி போய் வலிகள் எடுக்கிறதடி… அவ்வலியின் ஆழம் சிறிதெனும் அறிவாயோ?’

 

    ‘ஆசையோடு சேர்ந்திருந்தால், என் மனம் அறிந்து எனை ஏற்றிருந்தால், நீ தரும் வலிகளையும் இனிமையாய் ஏற்றிருப்பேனடி… உன்னால் என் ஊன்களெல்லாம் கனல் வார்த்ததை போல் இங்கே நெருப்பினில் வேகுதடி… இன்னுயிர் துறந்த பின்னும் இது அணைந்திடுமா யான் அறியேனடி… இதுநாள் வரை நீ கொண்ட உன் மௌனமே மேல் போல, இதழ் பேசும் மொழிகளோ எனை உயிர் கொத்தி தின்றிடும் மிருகமென தோன்றிட செய்துவிட்டாயடி… பொய்யாய் வேசமிட்டு வந்து என் உயிர் மூச்சினைப் பறித்துச் செல்லுமளவிற்கா, நான் உன்னில் வேண்டாதவனாகி போனேன்? உன்னால் என் உள்ளம் உடைந்து விழுந்து, இங்கே உதிர்ந்து கிடக்கிறேன் பெண்ணே…’

 

      இயல் நேராக பர்ஸ்ட் ப்ளோருக்கு சென்று ஜானகி மாமியின் வீட்டில் தருணை கேட்க, அவனோ கடலில் விளையாடிய அசதியின் காரணமாக இன்னும் கூட எழுந்திருக்கவில்லை. மாமியுடன் வீட்டு கதை பேசிக் கொண்டு இயல் கொஞ்ச நேரம் அங்கேயே இருந்தாள். இரண்டு மணி நேரம் ஆகியும் வருண் அவளை அழைக்காததால், அவளே அவனைத் தேடி சென்றாள். அங்கே வீட்டின் கதவு திறந்தே கிடக்க, உள்ளே ஆள் அரவமின்றி இருந்ததால் இயல் மெதுவாக உள்ளே நுழைந்து வருணை தேடி பார்த்தாள். அவன் ஹாலில் இல்லாமல் போகவே, படுக்கை அறைக்குள் நுழைந்து பார்த்தாள். கட்டிலின் மேல் இருந்த அந்த பழைய பெட்டை காணவில்லை. எங்கே என்று விழி விரித்து பார்க்க, அறையின் ஒரு மூலையில் அது அடிவாங்கி, நைந்து போய் பஞ்சு பஞ்சாய் பறந்த வண்ணம் சுருண்டு கிடந்தது. அவளுக்கு கிடைக்க வேண்டியதெல்லாம் அது தன் தலைமேல் வாங்கி இருக்க, அதன் நிலையை கண்டு அதிர்ந்து போய் நின்றாள்.

 

     “இயல்…” என்றவனின் அழைப்பில் பயந்து நடுங்கி திரும்பி பார்க்க, அவளின் முதுகுக்குப் பின்னால் வருண் இதழில் சின்னப் புன்னகையோடு, கையில் இரண்டு காபி கப்பை ஏந்திய வண்ணம் நின்றிருந்தான்.

 

    “நான் இப்பத்தான் உனக்கு கால் பண்ணனும்னு நெனச்சிட்டு இருந்தேன்… நீயே வந்துட்ட, இந்தா…” என்று நீட்டினான்.

 

     கைகள் நடுங்க அதில் ஒன்றை வாங்கியவள் குடிக்க பயந்து அப்படியே நின்றிருக்க, “நீ பயப்படாம குடிக்கலாம் இயல்… நார்மல் காபிதான்.”

 

    அவள் பாதி குடித்து இருக்கையில், “இயல் சீக்கிரமா குளிச்சுட்டு ரெடியாகுடா, நான் தோசை போட்டு தாரேன், நாம ஷாப்பிங் போகலாம், நமக்கு புது பெட் வாங்கணும்” என்றான். என்னதான் அவன் தன்னை சாதரணமாக காட்டிக் கொள்ள முயன்றாலும், அவனால் துக்கத்தை முழுதாய் முழுங்க முடியவில்லை. அது ஆலகால விஷம் போல தொண்டையின் நடுவில் நின்று அவனை பேச விடாதபடி துன்புறுத்தியது, அவளுக்கு புரிந்தது.

 

    “ம்…” என்ற ஒற்றைச் சொல்லுடன் தன் பதிலை முடித்துவிட்டு, சில நிமிடங்களுக்கு பாத்ரூமுக்குள் சென்று ஒளிந்து மறைந்து கொண்டாள். இயல் குளித்து முடித்து வெளிவருகையில் வீடு முழுவதும் பரவியிருந்த நெய் தோசையின் மணம் அவள் மூக்கை துளைத்தது. சத்தமின்றி கிச்சனுக்குள் எட்டிப் பார்க்க வருண், ஒரு பக்கம் தோசையையும் மறுபக்கம் சட்னியையும் தயார் செய்து கொண்டிருந்தான். அடுப்பை கூட பற்றவைக்க தெரியாதவன் இன்று அழகாய் தோசை வார்க்கும் லாவகத்தை கண்டு தன்னை மறந்து நின்றிருந்தவளை, “டூ மினிட்ஸ்ல, முடிஞ்சுடும்டா” என்ற அவனின் குரல் அதிரடியாய் அதிர்வடையச் செய்தது.

 

    தட்டு, தண்ணீர், சாப்பாடு என்று அத்தனையும் அவளுக்காக ஹாலில் எடுத்து வந்து வைத்து விட்டு, “நீ சாப்ட்டுட்டு போய் தருண எழுப்பி கூட்டிட்டு வந்திடு, அதுக்குள்ள நான் குளிச்சிட்டு ரெடி ஆகிடுறேன்” என்று நகர போக, அவள் அவன் முன்னால் வந்து வழிமறித்து,

 

    “அப்படின்னா, நீங்க என்கூட சண்டை போட மாட்டிங்களா?” என்றாள்.

 

    அவள் நெற்றியின் ஓரத்தில் இருந்த வடுவை வருடிவிட்டு, “மாட்டேன்டா… என்னோட மனசு என் கட்டுப்பாட்டில் இல்லாத நேரத்துல நான் எப்பவும் உன் கூட சண்டை போட மாட்டேன். நீ வேணும்னுதான் இதெல்லாம் பண்றன்னு புரியுது, ஆனா இப்படி ஒரு வார்த்தைய சொல்லுவன்னு நான் எதிர்பாக்கல…”

 

     “…………”

 

   ‌‌ “ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் உனக்கு கொடுத்த ஒண்ணொண்னையும், நீ இனிமே எனக்கு திருப்பி கொடுக்கப் போறேன்னு நல்லா தெரிஞ்சிடுச்சு… என் மேல உனக்கு இல்லாத உரிமை, வேற யாருக்கு இருக்கு? தாராளமா என் உயிரோடு விளையாடு… விளையாடி முடிச்சதுக்கு அப்புறம், ஒருவேள என் மனசு உனக்கு புரிஞ்சா சொல்லு. அதுவரைக்கும் உனக்காக நான் என்னோட காதல் எல்லாம் எனக்குள்ளயே சேர்த்து வச்சுகிட்டு காத்திருப்பேன்” என்றுவிட்டு குளிக்கப் போய் விட்டான். அவன் திரும்பி வருகையில் இயல் போனில் ஏதோ செய்து கொண்டிருந்தாள்.

 

    “என்ன பண்ணிட்டு இருக்க இயல், சாப்பிட்டியா?”

 

    “ம்.. ஆச்சு. மெடிக்கல் லீவ்வ கேன்சல் பண்ணிட்டு இருக்கேன்”

 

    “என்ன?… புரியல….”

 

    அவளோ அப்பாவியாக முழித்தபடி, “நீங்க எங்கூட சண்ட போடுவீங்கன்னு நெனச்சு நான் ரெண்டு நாள் மெடிக்கல் லீவ் அப்ளை பண்ணி இருந்தேன், அத இப்போ கேன்சல் பண்ணேன்.”

 

    “இந்த வேலையை எப்படி பாத்த?”

 

    “நீங்க தூங்கிட்டு இருக்கும்போது…”

 

‌ ‌  “ராட்சஷிடி நீ…” என்று அவன் முணங்கிய சத்தம் கேட்டு அவளுக்குள் அத்தனை சந்தோஷம். அன்று முழுவதும் ஷாப்பிங்கிலேயே அவர்கள் நேரம் கழிந்திட, அடுத்த நாள் வருண் முகத்தை பார்த்தே சித் என்ன நடந்திருக்கும், என்று புரிந்து கொண்டான்.

    

    “என்னடா நீ ஏதோ ஸ்டிரஸ்ல இருக்கிற மாதிரி இருக்கு… ஏதாவது சண்டையா?”

 

    “ம்…”

 

    “விடுடா விடுடா… இதெல்லாம் பார்த்தா குடும்பம் நடத்த முடியுமா? பொண்டாட்டிட்ட அடிவாங்காத ஆம்பள, இந்த உலகத்துல இல்ல தெரியுமா.”

 

   “அடிச்சா கூட பரவாயில்ல, வேணும்னே அசிங்கப்படுத்துறாடா… அதான் டக்குனு மறக்க முடியாம கஷ்டமா இருக்கு.”

 

    “ஏன்டா, அவளுக்கும் இப்படித்தான இருந்திருக்கும்?”

 

    “எனக்கும் புரியுது. ஆனா என்னை நான் சமாதான படுத்திக்க வழி தெரியலயே”

 

    “நீ ஒண்ணு பண்ணு, ப்ரீ அவர்ஸ்ல போய் எல்கேஜி கிளாஸ் ரூம்ல உக்காரு.”

 

    “உக்காந்து?”

 

    “அந்த குழந்தைகளை வேடிக்கை பாரு, உனக்கு தேவையான பதில் கிடைக்கும்.”

 

    வருணும் சித் சொன்னபடியே செய்ய, பிரேக் டைமில் எல்கேஜிக்கு போனான். சின்ன சின்ன மலர் மொட்டுகளை போல அழகான குழந்தைகள், தங்களுக்கான தனித்துவ மொழியில் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். பிரேக் டைம் என்பதால் குழந்தைகள், கலர் கலரான டப்பாவில் இருந்த ஸ்னாக்ஸை எடுத்து சிந்திச் சிதறி தின்று கொண்டிருந்தனர். இவனுடைய ஸ்னாக்ஸை அவள் எடுப்பதும், அவள் தண்ணீரை அடுத்தவன் குடுப்பதும், அவனை அதற்கடுத்து அமர்ந்திருந்தவன் இடிப்பதும் என்று அவர்களுக்குள் ஒரு தனி உலகமே சுழன்று கொண்டு இருந்தது.ஆங்காங்கே சின்ன சின்ன அழுகைகளும் அரங்கேறியது. ஆசிரியை வந்து, “என்ன பிரச்சினை?” என்று கேட்பதற்குள் எதற்காக அழுதோம் என்றே மறந்து விடுகின்றனர் குழந்தைகள். தின்று முடித்த குழந்தைகளை கை கழுவ சொல்லி ஆசிரியை வரிசையாக அழைத்து செல்ல, ஒருவர் காலை ஒருவர் மிதித்த வண்ணம் நடக்கத் தெரியாமல் நடந்து சென்ற பிள்ளைகள் அத்தனை அழகு. திரும்பி வந்து அவரவர் இடத்தில் அமர்ந்ததும், இதுவரை போட்ட சண்டை எல்லாம் மறந்து விட்டு, ஒருவருக்கொருவர் முகம் பார்த்து சிரித்தபடி ஆசிரியையுடன் சேர்ந்து மழலையில் ரைம்ஸ் பாடிய விதம், குயில்களின் இன்னிசை குழுவிற்கு சமானம்.

 

    வருணுக்கு தேவையான பதில் இப்போது கிடைத்து விட்டது, ஆம்… அவளை ஒரு சின்ன குழந்தையாக பாவிப்பது. அவள் தன் அம்மா திட்டும் நேரம் டாம் அன்ட் ஜெர்ரியாய் நினைத்து கொள்வது ஞாபகம் வந்தது. அவனும் அவளை பாவாடை சட்டை போட்ட சின்ன பிள்ளையாக உருவக படுத்த முயன்று, அதில் வெற்றியும் கண்டான். இப்போதெல்லாம் அவள் வாழ்த்தினாலும் தூற்றினாலும், அடுத்த நிமிடமே அதை மறந்து விடுவான். ஆனாலும் அவள் தன் வார்த்தை அம்புகளை அவன் மார்பு மேல் தொடுப்பதை நிறுத்தினாளா என்றால் அவனின் பதில், ‘இல்லை.’

 

    வருண் ஆசிரியர் பணியில் மிக சுலபமாக தன்னை பொருத்திக் கொண்டான். உலக விபரம் தெரிந்த பெரிய பிள்ளைகள் என்பதால் அவனுக்கு வேலை அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. ஏற்கனவே இறுதி ஆண்டு தேர்வு நெருங்கி விட்டதால் பாடம் நடத்தும் வேலையும் இல்லை. தினமும் ஏதாவது ஒரு கிளாஸ் டெஸ்ட்டும், திருத்திய பேப்பரை திருப்பித்தரும் பணியுமே நடந்து கொண்டிருந்தது. ஏற்கனவே அவனுக்கும் இயலுக்குமான காதல் கதையை ஓரளவு தெரிந்து கொண்ட மாணவர்கள், அடிக்கடி அவனை சுற்றி வளைத்து நின்று அரட்டை அடிப்பது வாடிக்கையாய் போயிருந்தது. மாணவிகளோ பதின்ம வயதுக்கே உரிய குறும்புத்தனத்துடன், அவனை சீண்டி விளையாடினர்.

 

    “சார் நீங்க ரொம்ப ஹேண்ட்சமா இருக்கீங்க…. பொறாமையா இருக்கு சார் ஒரு ஆம்பள இவ்ளோ கலரா இருக்கிறத பார்த்தா…”

 

    “தேங்க்யூ கிட்ஸ்…”

 

    “கிட்ஸ்னு சொல்லாதீங்க சார், எங்க மனசு உடைஞ்சு போயிடும். ஒருவேள இசை மிஸ் உங்கள கழட்டி விட்டுட்டாங்கன்னா, எங்க கிட்ட சொல்லுங்க… உங்களுக்கு இங்க நிறைய ஆஃபர் இருக்கு…” என தங்களுக்குள்ளாகவே ஒருவரை ஒருவர் காலை வாரி கொண்டிருந்தனர்.

 

     “ஏய்… கீப் கொயட்” என்று பொய்யாய் முறைத்தான்.

 

     “உங்க ஊரு மூணாறுனா, நீங்க மலையாளியா சார்?”

 

    “இல்லம்மா தமிழ் பையன் தான், ஆனா நூறு வருஷத்துக்கு முன்னாடி எங்க குடும்பம் அங்க செட்டில் ஆகிடுச்சு.”

 

    “ஓஓஓ…..” என்று பொருள் பொதிந்த ஒரு பெரிய கோரஸ் பாட்டு பாடினார்கள்…

 

   லஞ்ச் பிரேக் தவிர, அனேக நேரங்களில் அவன் போகும் இடங்களுக்கெல்லாம் வானரப்படையாய் அவனைப் பின் தொடர்ந்தனர் மாணவ மாணவிகள். வந்த சில நாட்களிலேயே அனைவரிடமும் நல்ல பேர் வாங்கிய வருணை கண்டு இயலுக்கே கொஞ்சம் பொறாமையாய் இருந்தது. நாளாக நாளாக அவன் தினமும் அதிகாலையிலேயே எழுந்து இன்டர்நெட்டில் ரெஸிபி படித்து, மூவருக்கும் சேர்த்து சமையல் செய்தான். தருணுக்கும் தனக்கும் காய்கறிகள் நிறைந்த உணவை சமைத்து விட்டு, இயலுக்கு மட்டும் விதவிதமான நவதானிய தோசைகளை சுட்டு தந்தான். வீட்டு வேலைகளில் பாதியை அவனே செய்ய பழகினான்.

 

     விடுமுறை நாள் என்றால் அவர்கள் இருவரின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போகும், காலையில் எழுந்ததும் கோலம் போட பழகுகிறோம் என்று அப்பாவும் பிள்ளையும் வாசலை கோலப்பொடியால் குப்பை ஆக்கினார்கள். துணி துவைக்கிறோம் என்ற பெயரில் துணிகளையெல்லாம் பாதி அழுக்கோடே தோரணமாய் தொங்க விட்டார்கள். பாத்ரூமை கழுவுவதை பற்றி சொல்லவே தேவையில்லை, அவர்கள் வெளியேறிய பின் பார்த்தால் பாத்ரூமே குளித்ததை போல் சுவரெல்லாம் நீர் சொட்டிக் கொண்டு இருக்கும். வார இறுதியில் எல்லாம் எங்காவது வெளியில் கூட்டிச் செல்வதை வழக்கமாக்கினான். ஊர் சுற்றி விட்டு திரும்பி வருகையில் தருண், ஜானகி மாமியின் மகள் பவித்ராவிற்கும் சேர்த்து பொம்மைகளை வாங்கி வருவான்.

 

    மாணவர்களுக்கு பரிட்சை முடிந்த கையோடு இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கான ஏற்பாட்டை பள்ளி நிர்வாகம் செய்ய ஆரம்பித்தது. வழக்கமாக ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், வாழ்வில் மிக முக்கியமான அடுத்த வகுப்பு ஆரம்பிக்கும் முன் ரிலாக்சேஷனுக்காக, இந்த நேரத்தை நிர்வாகம் தேர்ந்தெடுத்து இருந்தது. இந்த மாணவர்களுக்கு டூர் முடித்து வந்ததுமே அடுத்த வகுப்பிற்கான ஸ்பெஷல் கோச்சிங்கை ஆரம்பித்து விடுவார்கள். இரண்டு நாள் பயணமாக ஊட்டி, குன்னூர் செல்வதென ஒரு மனதாக தேர்ந்தெடுத்து, இன்னும் பதினைந்து நாட்கள் கழித்து வரும் தேதியை சுற்றாலாவிற்காக அறிவித்து இருந்தனர். ஆளுக்கு ஒரு வேலையாய் பிரித்து கொடுத்ததில், பணத்தை சேகரிக்கும் வேலை, இயலின் தோழி ஸ்ருதிக்கு தரப்பட்டு இருந்தது.

 

    ஸ்ருதிக்கு இயலை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கும், என்னதான் ஸ்ருதி இறங்கி வந்து பேச முயன்றாலும் இயல் அவளுடன் அதிகமாய் ஒட்ட மாட்டாள், கெஞ்சி கேட்டாலும் ஒன்றாக அமர்ந்து உண்ண வரமாட்டாள், பக்கத்து கடைகளுக்கும் சேர்ந்து செல்ல மாட்டாள், சிறிது நேரம் சேர்ந்தமர்ந்து ஊர் கதை பேசி வாயடிக்க கூட மாட்டாள். பிறகு எப்படி தோழி என்கிறீர்களா? இயல் தன் பவள வாய் திறந்து, வார்த்தை முத்துக்களை உதிர்ப்பது சித், ஸ்ருதியிடம் மட்டுமே. ஆதலால் அவர்களே இயலின் தோழன் தோழி என்று பள்ளியில் பெயராகி போனது. சுற்றுலாவிற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கையில், ஒரு நாள் இரவு இயல் வருண் முன்னால் வந்து நின்றாள்.

 

    “என்ன மேடம் இந்த நேரத்தில சண்டை போட வந்திருக்கீங்க, தூக்கம் வரலையா?”

 

    “உங்ககிட்ட ஒரு உதவி….” என்று இழுத்தாள்.

 

     “வாய் வரைக்கும் வந்துடுச்சுல, சொல்லு…”

 

     “ஸ்ருதி டூருக்கு கலெக்ட் பண்ண பணத்தை தொலச்சுட்டா, அவ்ளோ பெரிய அமௌன்ட்ட அவளால உடனே ரெடி பண்ணவும் முடியாது. அவளுக்கு போன வாரம் தான் கல்யாணம் நிச்சயமாகி இருக்குது. இப்போ இந்த மேட்டர் வெளில தெரிஞ்சா அவ பேரு கெட்டு போயிடும். அதான் நீங்க ஏதாவது உதவி பண்ண முடியுமான்னு கேட்க வந்தேன்…”

 

    “யாதவ் உனக்கு ரொம்ப க்ளோஸ் ஆச்சே, நீயே போய் அவன்கிட்ட இத பத்தி பேசலாமே…”

 

    “முன்னெல்லாம் மாசத்துக்கு ஒரு தடவ போன் பண்ணி எப்படி இருக்கேன்னு கேட்பாரு. என்னன்னு தெரியல, அவரு இப்பல்லாம் என் கூட பேசறதே இல்ல.”

 

    “உன்னோட ப்ரெண்ட் நேம் ஸ்பாயில் ஆகிடாம இந்த மேட்டரை முடிச்சு தரேன். நீயும் எங்க கூட டூருக்கு வர்றியா?”

 

    “நீங்க பொறந்ததுல இருந்தே இப்படித்தானா? எல்லாத்துக்கும் டீல் பேசுவீங்களா?”

 

    “அது என்னோட நேச்சர். சரி, நீயும் பொறந்ததில இருந்தே இப்படிதானா? இல்ல நடுவுல ஏதும் தலைல அடிபட்டு இப்டி ஆயிட்டியா?”

 

    “எப்டி?”

 

    “நீ க்ராக்கானது பத்தி சொன்னேன்…”

 

    “நானா க்ராக்கு… உன்ன… என்ன பண்றேன்னு பாருடா…”

 

    ஓரமாய் அமர்ந்து ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்த தருண், “ஐயா அம்மா அப்பாவ அடிக்கிறாங்க… ஐயா… ஜாலி ஜாலி ஜாலி…”

 

   வருண், “புள்ளையாட நீ…”

 

    அடுத்த நாள் காலை ஆசிரியர்கள் அறையில் பிரின்ஸிபல் ஒரு அறிவிப்பை தெரிவித்தார்.

 

    “நம்மளோட டூர் ப்ளான்ல ஒரு சின்ன சேஞ்ச். நான் சொல்ல போற இன்பர்மேஷன, உங்க வார்டு ஸ்டூடன்ட்ஸ்ட்ட ப்ராப்பரா இன்பார்ம் பண்ணிடுங்க. டூர் டேய்ஸ் ரெண்டு நாள்னு அனவுன்ஸ் பண்ணியிருந்தோம் இல்லையா, அத இப்போ மூணு நாளா மாத்துறோம். அன்ட் த டூர் ஸ்பாட் இஸ் மூணாற்.”

 

     ஊர் பெயரை கேட்டதுமே இயல் உறைந்து சிலையாகி நின்றாள்.

Leave a Reply

%d bloggers like this: