Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 26

நேற்று இரவு பிரிந்து இன்று காலை சேர்ந்ததிலேயே, உற்சாகம் ததும்ப பல நூறு கதைகளை கூட்டம் கூட்டமாக கூடி பேசியபடி கூச்சலிட்டு கொண்டிருந்தனர் குறும்புக்கார மாணவ மாணவிகள். வகுப்பு ஆரம்பிப்பதற்காக பெல் அடிக்கும் சத்தம் கேட்டதும், அவர்கள் தங்களது அரட்டையை தற்காலிகமாக முடித்து விட்டு தத்தமது இடங்களுக்கு சென்று சமத்தாக அமர்ந்து கொண்டனர். அதன் பின் வகுப்புகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் சத்தம் மட்டும் ஆங்காங்கே உரக்க ஒலித்து கொண்டிருந்தது. ஏனைய ஆசிரியர்கள் ஓய்வு அறையில் அடுத்த பீரியடில் தாங்கள் நடத்த போகும் பாடங்களை ஒருமுறை பார்வையிட்டு கொண்டிருந்தனர். வருண் சித்தார்த்தை தேடி வந்ததுமே, சுற்றி இருந்த ஆசிரியர்கள் எல்லாம் இப்போது அவர்கள் இருவருக்கும் குடுமி சண்டை நடக்கப்போவதாய் நினைத்திருக்க, இருவரும் ஏதோ சங்க காலம் தொட்டு இணைபிரியாது வாழ்ந்த நண்பர்கள் போல ஒட்டி உறவாடிய விதம் அவர்களுக்கு பேரதிர்ச்சி. அது போதாதென இவன் அவனுக்கு ரகசியம் சொல்வதும், அதை கேட்டதும் அவன் உற்சாக கூச்சலிட்டு கொண்டு இவனை அணைத்துக் கொள்வதும், அடடா!!! அவர்களின் இந்த உறவாடல் செய்தி காற்றுவாக்கில் இயலின் காதையும் சென்றடைந்தது.

 

     வழக்கம்போல பிரேக் டைமில் காபி கப்போடு வந்து நின்ற சித்திடம், “உங்ககிட்ட இருந்து இத நான் எதிர்பார்க்கல சித்” என்றாள் இயல்.

 

    “காபி கொடுக்க வந்தத சொல்றியா?”

 

    அவள் சின்ன முறைப்புடன், “நீங்க எனக்கு அல்வா கொடுத்த பத்தி சொல்றேன்.”

 

    அவன் சின்ன சிரிப்புடன், “நீ எனக்கு குடுத்த அல்வாவை விடவா, நான் பெருசா கொடுத்துட்டேன்? அது ஏன் அவன என்கிட்ட வந்து எல்லா கதையையும் சொல்லச் சொன்ன? அது அவனுக்கு செஞ்ச தப்ப உணரனும்னு கொடுத்த பனிஷ்மெண்ட்டா, இல்ல உனக்கு நான் லவ் ப்ரொபோஸ் பண்ணதுக்காக எனக்கு கொடுத்த பனிஷ்மெண்ட்டா?”

 

    “நீங்க லவ் சொன்ன முதல் நாள் நான், ‘எனக்கு இந்த கல்யாணம் எல்லாம் செட் ஆகாது’னு சொன்னேனே நீங்க கேட்டீங்களா? அன்னிக்கு நான், ‘எனக்கு மனுஷங்களையே புடிக்கல தனியா இருக்கத்தான் புடிச்சிருக்குனு சொல்லி இருந்தா, நீங்க என்ன செஞ்சிருப்பீங்க?”

 

    சித் கொஞ்சம் நிதானமாக யோசித்து நெற்றியை நீவி விட்டு, “சந்தேகப்பட்டு உன்ன கவுன்சிலிங் கூட்டிட்டு போய் இருப்பேன்”

 

     “இப்ப முழுசா புரியுதா என்னோட பிரச்சினை என்னன்னு?”

 

    “ம்…” என்றவன் திரும்பிச் செல்ல முயல, “ஹலோ சார் இந்த காப்பிய எடுத்துட்டு போங்க எனக்கு வேணாம்…” என்றாள்.

   

     “எம்மேல அவ்ளோ கோவமா இருக்கியா?”

 

    “பின்ன என்ன? கதைய கேட்டதுக்கு அப்புறம், அவனை தூக்கி போட்டு அடிக்கலனாலும் பரவாயில்ல, குறைஞ்ச பட்சம் ஏண்டா அப்படி பண்ணினாவது நீங்க கேட்டிருக்கலாமே…”

 

    “எதுவுமே பண்ணாதவன போய் நான் என்னனு கேட்கிறது?”

 

    “ஸோ.. நீங்க அவனுக்கு சப்போர்ட் பண்ணறதுனு முடிவு பண்ணிட்டீங்களா…”

 

    “இல்ல, உன்ன சர்ப்ரைஸ் பண்றதுன்னு முடிவு பண்ணியிருக்கோம்…”

 

    “சர்ப்ரைஸா? அப்டி என்ன செய்ய போறீங்களாம், நீங்களும் உங்க திடீர் ப்ரன்டும்?…”

 

    “மன்டே மார்னிங் தெரியும் பாரு” என்று சஸ்பென்ஸ் வைத்து விட்டு சென்றான். சும்மாவே அவளுக்கு சஸ்பென்ஸ் என்றால் பிடிக்காது, இதில் இப்போது தான் புதன்கிழமையே ஆகிறது, இன்னும் மூன்று நாட்கள் இந்த திகிலுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கையிலேயே அவளுக்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது. அன்று மாலை வீட்டிற்கு வந்த வருண் முகில் கிருஷ்ணன் அங்கிளோடும், பிரின்ஸிபலோடும் அடிக்கடி போனில் பேசிக்கொண்டு இருந்தான். வீட்டு ஓனர் ஜானகி மாமியிடமும் அவன் ஏதே சில முக்கியமான விஷயங்கள் பேசி கொண்டிருந்தான். இயலால் அவன் என்ன செய்ய போகிறான் என்று யூகிக்க முடியாததால், வெட்கத்தை விட்டு வருணிடமே சென்று கேட்டாள்.

    

    “என்ன செய்யப் போறீங்க?…”

 

    “உன்னோட மனச மாத்தி இங்கிருந்து நம்ம ஊருக்கு உன்ன கூட்டிட்டு போக போறேன்…”

 

    “உங்களால முடியாது…”

 

    “அதையும்தான் பார்க்கலாமே…” என்றவன் மில்லிமீட்டர் அளவு புன்னகையோடு புருவம் உயர்த்தி அவளின் இதழை நெருங்க முனைந்திட, அவள் தன் முழு பலத்தையும் சேர்த்து அவன் அடி வயிற்றில் ஓங்கி ஒரு குத்து குத்தினாள். சிறு வயதில் இருந்தே ஒரு முழு நேர பாக்ஸராக உடலை தயார் செய்திருந்தவனுக்கு, அவள் குத்தியது, தந்தையுடனான குழந்தையின் சண்டைக்கு சமம். இருந்தும் அவள் மனம் வருந்த கூடாது என்று, வலி தாளாமல் துடிப்பவனை போலவே கத்தினான்.

 

    “எங்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க நெனச்சா, என்ன கிடைக்கும்னு புரிஞ்சதா? ஒழுங்கா வாலை சுருட்டிகிட்டு இருக்குறதுன்னா இங்க இருங்க, இல்லனா இப்பவே வெளியில போயிடுங்க” என்றவள் கோபமாக கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள். ‘பரவாயில்லப்பா, எனக்கு கூட இவ்ளோ நல்லா ஆக்டிங் வருது. இன்னும் கொஞ்சம் இப்டியே மெயின்டெய்ன் பண்ணி சிம்பத்தி கிரியேட் பண்ணலாம்.’  என அன்று இரவு வரை, “அம்மா… ஐயோ…” வயிற்றை தடவி விட்டு கொண்டே திரிந்தான். இறுதிவரை அவள் அவனைக் கண்டு கொள்ளாமலேயே விட்டுவிட, பதிலுக்கு வருண் அந்த இரவு முழுவதும் இன்ச் அளவு கூட இடைவெளி இன்றி அவளை இருக்கமாக அணைத்து உறங்கினான். இதற்கு முன்னெல்லாம் தப்பி ஓட விடாமல் பிடித்து கொள்வதற்காகவே அவன் பிடித்திருந்தானே தவிர, இத்தனை மூர்க்கமாய் அணைத்ததே இல்லை. நிற்கதியாய் நிற்கும் தன்னிடம் இந்த இரவு நேரத்தை பயன்படுத்தி மேற்கொண்டு முன்னேறி விடுவானோ என்ற அச்சத்தில் அவள் அன்று இரவு முழுவதும் அரைத்தூக்கமாகவே தூங்கி கழித்தாள்.

   

    அடுத்த நாள் காலை வருண் கை நிறைய டாக்குமெண்ட்ஸுடன் பிரின்ஸிபல் அறைக்கு போவதை இயல் கண்டாள். இப்போது இயலுக்கு அவர்களின் திட்டம் ஓரளவுக்கு புரிந்து விட்டது, ‘அவனுக்கு இருக்குற வசதிக்கு இந்த ஸ்கூல் எல்லாம் ஜுஜுபி, இதை வாங்கிட்டா நான் மறுபடியும் அவனுக்கு வேலைக்காரி ஆகிருவேன். என் பக்கத்திலேயே இருந்து சும்மா சும்மா தொல்ல பண்ணி, என் உயிர வாங்க போறான். ஆனா வருண், எங்கிட்ட உன்னோட ஜம்பம் எல்லாம் பலிக்காதுடா. நீ எட்டடி பாஞ்சா நான் பதினாறடி பாயுவேன் பாரு.’

 

    வெள்ளிக்கிழமை முழுவதும் இயலும் வருணும் தங்களின் திட்டத்தை நினைத்து உள்ளுக்குள்ளேயே விஷம சிரிப்பு சிரித்துக் கொண்டு இருந்தனர். சனிக்கிழமை யாதவ் இந்தியா திரும்புவதால், அன்று வருண் முகில் கிருஷ்ணன் அங்கிளின் வீட்டிற்கு சென்று விட்டான். கிடைத்த சில மணி நேர தனிமையில் இயல் மெதுவாக வேறு ஊர்களில் இருக்கும் பள்ளிகளில் வேலைக்கு ஆன்லைனில் அப்ளை செய்ய ஆரம்பித்தாள். வெவ்வேறு மாநிலத்தில் இருக்கும் 15 பள்ளிகளுக்கு அப்ளை செய்து முடித்ததும் குரூரமாக புன்னகைத்தபடி, “வருண்… எனக்கு நீ சர்ப்ரைஸ் தர போறியா. நான் வச்சிருக்கேன் பாரு உனக்கு நிஜமான சர்ப்ரைஸ். ஒருவேளை நீ நான் போக போற ஸ்கூல கண்டுபுடிச்சு அதை விலைக்கு வாங்க வந்தா, அதுக்கு அப்புறம் நான் இன்னொரு ஸ்கூலுக்கு வேலைக்கு போயிடுவேன். அதையும் கண்டு பிடிச்சா அடுத்த ஸ்கூல். நம்ம ஊர்ல ஸ்கூலுக்கா பஞ்சம்? எத்தனை ஸ்கூலத்தான் உன்னால வாங்க முடியும்?” என்று கவலை மறந்து மகிழ்ச்சியாக உலவ ஆரம்பித்தாள். அங்கே வருண் யாதவை தனி அறைக்கு தள்ளிக் கொண்டு போய் கொலை வெறியோடு தாக்க ஆரம்பித்தான்.

 

     “எதுக்குடா இந்த அடி அடிக்கிற?… அட்லீஸ்ட் ரீசனையாவது சொல்லிட்டு அடிடா…”

 

    “ரீசனா கேட்கிற ரீசன், இந்தா வருது பாரு,” என்று அவன் முதுகில் மேலும் நான்கைந்து அடி அடித்துவிட்டு ஓய்ந்து அமர்ந்த வருண், “இயலிசை இங்க தான் இருக்கான்னு ஏன்டா இத்தன நாளா எங்கிட்ட சொல்லாம இருந்த?”

 

    “அவதாண்டா யாருக்கும் சொல்ல வேண்டாம்னு சொன்னா. அவளோட ஹஸ்பெண்ட் துபாயிலேயே வேற பொண்ண கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த ஆரம்பிச்சிட்டானாம். இயல தத்து எடுத்த அம்மா அப்பா மாச மாசம் துபாயில இருந்து வர்ற பணத்துக்காகவும், அவளோட சம்பள பணத்துக்காகவும், இத ரொம்ப நாளா அவகிட்ட சொல்லாம ஏமாத்தி இருக்காங்களாம். உண்மை தெரிஞ்சதுமே அவ அங்கிருந்து கிளம்பி இங்க வந்துட்டா. இயல் இங்க இருக்கிற விஷயம் தெரிஞ்சா, அவளோட அம்மா அப்பா வந்து மறுபடியும் கூட்டிட்டு போயிடுவாங்கன்னு பயந்து, யாருக்கும் சொல்லாதீங்கனு சொன்னா. ‘சர்டிபிகேட் இல்ல, ஏதாவது ஒரு வேலை வாங்கி கொடுங்க, எந்த வேலையா இருந்தாலும் பரவாயில்ல நான் செய்றேன்’னு சொன்னவள நான் தான் நம்ம ஸ்கூல்லயே சேர்த்து விட்டேன். தெரிஞ்ச இடத்துல சொல்லி சர்டிபிகேட்டும் வாங்கி தந்தேன். இதுல என்னடா தப்பு இருக்கு? நான் அவளுக்கு நல்லது தானடா செஞ்சேன், இதுக்கு போய் ஏன்டா என்னை இந்த அடி அடிக்கிற? அந்த துபாய் மாப்பிள்ள உனக்கு தெரிஞ்சவனா?”

 

    “ம்ம்ம்… அந்த ஓடிப் போன துபாய் மாப்பிள்ளயே நான் தான்டா.”

 

   யாதவ் அதிர்ச்சியோடு, “என்னடா சொல்ற?”

 

    “அவளுக்கும் எனக்கும் ஆரம்பத்துல இருந்தே பிரச்சனை இருந்தது, ஒரு நாள் சண்டை பெருசாச்சு, அதான் கோச்சுகிட்டு கிளம்பி வந்துட்டா. கொஞ்ச நாள் நான் இங்க இருந்து அவளை சமாதானப்படுத்தி கூட்டிட்டு போயிடுவேன்.”

 

    இப்போது மொத்துவது யாதவ் முறையாயிற்று, “என்கிட்ட சொல்லாமலே கல்யாணம் பண்ணியாடா நீ…” என்று உருட்டி புறட்டி துவைத்து எடுத்தான்.

 

    “ஒரு தடவ தெரியாம பண்ணிட்டேன். அடுத்த தடவை உன்கிட்ட சொல்லிட்டு கல்யாணம் பண்றேன் ஓகே வா…” என்றதும் மீண்டும் அங்கே ஒரு குத்துச்சண்டை அரங்கேற்றம் நிகழ்ந்தது. அடிதடி எல்லாம் முடிந்த பிறகு தானும் சித்தார்த்தும் செய்யப் போகின்ற வேலையை பற்றி யாதவிடம் விளக்கினான்.

 

     யாருக்காகவும் நிற்காமல் நகர்ந்து கொண்டிருந்த நேரத்தினால், அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த திங்கட்கிழமையும் வந்தது. இயல் தயாராகவே தன் ரெஸிக்நேஷன் லெட்டருடன் பள்ளிக்கு கிளம்பினாள். அவள் எதிர்பார்த்ததை போலவே வருணும் யாதவும் காலையிலேயே பள்ளிக்கு வந்திருந்தனர். திங்கள்கிழமை காலை என்பதால் கூட்டு பிரார்த்தனைக்காக அனைத்து மாணவ மாணவிகளும் கிரவுண்டில் கூடி இருந்தனர். வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்ததும் யாதவ் முன்னால் நின்று பேச வந்தான்.

 

    “குட்மார்னிங் எவ்ரி ஒன். நம்ம ஸ்கூல் தொடர்ந்து நாலு வருஷமா 10த் அன்ட் 12த் ல நல்ல ரிசல்ட் காமிச்சுட்டு இருக்குது. இந்த வருஷமும் அதே பெர்சன்ட்டேஜ் மெய்ன்டெய்ன் பண்ணுவீங்கன்னு நம்புறேன். நெக்ஸ்ட் வீக் பப்ளிக் எக்ஸாம் ஸ்டார்ட் ஆக போகுது, ஸோ ஸ்டூடென்ட்ஸ், ஐ விஷ் ஆல் த பெஸ்ட் பார் யுவர் எக்ஸாம்ஸ். ஐ ஹேவ் அனதர் குட் நியூஸ், நம்ம ஸ்கூலுக்கு இன்னோரு டீச்சர் புதுசா ஜாயின்ட் பண்ண போறாரு. மிஸ்டர் வருண்” என்று ஓரமாக நின்று கொண்டிருந்த வருணை நோக்கி கை காட்டினான்.

 

     ஒய்ட் அன் ஒய்ட் டிரஸ்ஸில் அட்டகாசமாக கிளீன் ஷேவ் செய்து, நடையே ஒரு ஸ்டைலாக நடந்து வந்த வருணை பார்த்து, மற்றவர்களால் கண்ணை வேறு பக்கம் நகற்றவே முடியவில்லை. அனைத்து பெண் பிள்ளைகளும் அவனின் அழகில் சொக்கி ஈஈஈ… என இளித்திருக்க, ஒருத்தி மட்டும் அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்.

 

    யாதவ், “ஹீ இஸ் மிஸ்டர் வருண். இனிமே 11த் ஸ்டூடன்ட்ஸ்க்கு மேத்ஸ் எடுக்க போறாரு. இவர பத்தி சொல்லனும்னா…” என்று ஆரம்பித்தவன் முடிக்க தெரியாமல், வானத்தை பார்த்து யோசித்து கொண்டிருந்தான். முழுதாய் ஒரு நிமிடம் கழிந்த பிறகும், அவன் வாய் திறக்காமலேயே நின்றிருக்க, வருண் அவன் முதுகில் ஒரு அடியை போட்டு, “என்னபத்தி சொல்ற மாதிரி ஒண்ணு கூடவாடா ஞாபகம் வரல, சீக்கிரமா சொல்லுடா…” என்றான். அவர்களின் பேச்சு மைக்கின் உதவியால், அனைவருக்கும் கேட்டுவிட கூடியிருந்த மாணவர்களின் சிரிப்பால் அங்கே ஒரு சிரிப்பு மழையே உருவானது.

 

    யாதவ், “எல்கேஜில இருந்து எம்பிஏ வரைக்கும் இவருதாம்ப்பா எப்பவும் பர்ஸ்ட் மார்க் எடுப்பாரு, வேற எவனையும் எடுக்க விடமாட்டாரு. அப்புறம் இவருக்கு பாக்ஸிங் நல்லா தெரியும்னு காட்றதுக்கு இப்டி அடிக்கடி எவனையாது அடிப்பாரு. அவ்ளோதான்… ப்ரேயர் முடிஞ்சது, நேஷனல் ஆன்த்தம் பாட ஆரம்பிங்க…” என்று உத்தரவிட்டான்.

 

     இயலுக்கு தலையே சுற்றுவது போல் இருந்தது. வருண் தன் பணக்கார தனத்தைவிட்டு ஒரு நாளும் இறங்கி வந்ததே இல்லை. ஆதலால் தான் பள்ளியை விலைக்கு வாங்குவான் அல்லது குறைந்த பட்சம் பிரின்ஸிபல் பதவியில் அமர்வான் என்று எதிர் பார்த்தாள். ஆனால் இங்கு நடந்ததோ விசித்திரத்திலும் விசித்திரமாக இருக்கிறது. அவன் தன் முன்னால் நின்று எதிர்த்தால் மீதி இருக்கும் மூன்று திசைகளில் ஏதோ ஒன்றில் ஓடி தப்பிக்க முடியும் என்று நினைத்திருக்க, அவனோ அவளின் பின்னால் தொடர்ந்து வர தொடங்கிவிட்டான். இனி எந்த திசைக்கு திரும்பினாலும் பின் தொடர்வானோ, என்ற அச்சம் அவளின் முகம் முழுவதும் ஆக்கிரமிக்க தொடங்கிய நேரம்,

 

     “அம்மா…” என்ற அழைப்புடன் தருண் அவள் வகுப்பு வாசலில் வந்து நின்றான்.

 

    “தருண்…” என்று ஓடி வந்து அள்ளி அணைத்துக் கொண்டாள்.

 

    “இது என்னோட புது ஸ்கூல் யூனிபார்ம்மா, எனக்கு எப்படி இருக்கு? நானும் இனிமே இந்த ஸ்கூல்ல தான் படிக்க போறேனாம்மா, அப்பா சொன்னாரு” என்று கை நீட்டி தூரமாய் நிற்கும் வருணை கை காட்டினான். வருண் தன்னை சுற்றி வளைப்பது புரிந்தாலும், தருணுடனான இந்த இன்ப நிமிடங்களை இழக்க அவள் மனம் ஒப்பவில்லை. தருணை அழைத்து கொண்டு வகுப்பினுள் சென்று விட்டாள். அன்று மாலை ஒரு பைக்குடன் வருண் பள்ளி வாசலில் காத்திருந்தான்.

 

    “வந்துட்டயா இயல்… வா வீட்டுக்கு போகலாம்.”

 

    “பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் நடக்கிறதுக்கு கால் இருக்கு, உட்கார வச்சு வீட்டுக்கு கூட்டிட்டுப் போறதுக்கு கவர்மெண்ட் பஸ் இருக்கு. இந்த பைக்கும் நீங்களும் தேவை இல்ல.”

 

    “நீயா வந்தனா அமைதியா பைக்ல கூட்டிட்டு போறேன். இல்லன்னா மௌனராகம் கார்த்திக் மாதிரி, நீ எந்த பஸ்ல ஏறினாலும் முன்னால வந்து பைக்க நிறுத்திட்டு என் பொண்டாட்டிய வெளியில அனுப்புங்க… என் பொண்டாட்டிய வெளியில அனுப்புங்கனு கத்துவேன்…”

 

    “இந்த பைக் எப்டி வந்துச்சு?”

 

    “எக்ஸேஞ்ச் பண்ணிகிட்டோம்.”

 

     “யாருகிட்ட…?” என்றதும், அப்பாவியாய் கேட்டுக்கு பின்னாலிருந்து, தருணுடன் சேர்ந்து மாங்காய் கீற்றை தின்று கொண்டே வெளியே வந்த சித்தார்த்தை கைகாட்டினான்.

   

     “இது உங்க பைக்கா…?”

 

   சித், “இல்ல எங்க அண்ணனோடது, சும்மா இருக்கேன்னு வருணுக்கு தந்தேன்…”

 

    இயலோ எரிச்சல் மண்ட, “ஸோ உங்களுக்கு சொந்தமான பைக்குதான?”

 

   சித், “ஆமா….”

 

    “எதுக்கு இவனுக்கு குடுத்தீங்க?”

 

    வருண், “அவன ஏன் மிரட்டுர? நாங்க விரும்பித்தான காரையும் பைக்கையும் எக்ஸேஞ்ச் பண்ணிகிட்டோம், அதுல என்ன தப்பு இருக்கு?”

 

    “ஆடி காருக்கு பழைய ஆக்டிவா பைக்க எக்ஸேஞ்ச் பண்ணீங்களாக்கும்? நீங்க ஒரு பைத்தியம்… உங்களுக்கு போய் சப்போர்ட் பண்றானே இவன் ஒரு பைத்தியம்…” என்றதும்,

 

    தருண், “பைத்தியமோ பைத்தியம்… பைத்தியத்துக்கெல்லாம் பைத்தியம்” என்றான். அந்த குட்டி சின்சேனின் அழகான ஆக்ஷனில், வருணும் சித்தும் விழுந்து விழுந்து சிரிக்க, இயலும் தன் சிரிப்பை அடக்க முடியாமல் மெல்லமாய் சிரித்துவிட்டாள்.

 

     ‘இத விட்டா இனிமே சான்ஸ் கிடைக்காது’ என்று அவசர அவசரமாக அவளை பைக்கில் ஏமாற்றி ஏற்றி விட, பைக் சாலையில் பறக்க தொடங்கியது. அன்றிரவு தருண் கல் போன்ற அந்த பெட்டில் உறங்க முடியாமல் தவிக்க, நள்ளிரவென்றும் பாராமல் இயல் மீண்டும் வருணுடன் பிரச்சினை செய்ய ஆரம்பித்தாள்.

 

     “உங்களோட சந்தோஷத்துக்காக ஏன் சின்ன குழந்தை போட்டு இப்படி படுத்தறீங்க? அவனுக்கு பெட், ஏசி இல்லாமல் தூங்க முடியல, பாருங்க குழந்தை எவ்ளோ கஷ்டப்படுதுன்னு”

 

    “இன்னிக்கி ஒருநாள் இருக்கட்டும், நாளைக்கே எல்லாத்தையும் சரி பண்ணிடுறேன்.”

 

    அடுத்த நாள் பள்ளி முடிந்து மூவரும் வீடு திரும்பிய நேரம், வீடே மாறி இருந்தது. டிவி, ஏசி, பிரிட்ஜ், சின்ன பீரோ, குழந்தைக்கென ஒரு சின்ன சைஸ் பெட், என்று அனைத்தும் அழகாக, இன்ஸ்டால் செய்யப்பட்டு இருந்தது. அதை பார்த்ததுமே இயலுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்தது, இருந்தும் தருண் முன் அதை காட்ட விரும்பாமல் அமைதியாய் இருந்தாள்.

 

    தருண் உறங்கியதும் அவனை தூக்கி புதிய பெட்டில் படுக்க வைத்து விட்டு, பழைய பெட்டுக்கு இயலை வருண் தூக்கி போனான். அவன் இதைத்தான் செய்வான் என்று முன்பே தெரிந்ததால், படுக்கையில் படுக்கும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாய் இருந்த இயல், “யாரைக் கேட்டு இதெல்லாம் வாங்கி போட்டிங்க? மறுபடியும் மறுபடியும் எனக்காக நீங்க பணம் செலவு பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல.”

 

    “மன்னிச்சுக்கோங்க மேடம் இதெல்லாம் உங்களுக்காக வாங்கல தருணுக்காக வாங்கினேன். கொஞ்சம் நல்லா கவனிச்சு பாரு, நான் உனக்கும் சேர்த்து பெட் வாங்கல. சின்ன பீரோதான் வாங்கி இருக்கேன்.”

 

   “அப்போ அந்த டிவியும் பிரிட்ஜ்ஜும்”

 

    “டிவி கூட தருணுக்காகத்தான், ஃப்ரிட்ஜ் ஸ்கூல் ரூல்ஸ் படி சமைக்கிறதுக்கு தேவையான காய்கறி வைக்கத்தான் வாங்கினேன்.”

   

    “இத நான் நம்பனுமா?”

 

     “நம்ப மாட்டேன் சொல்லுவியா? எங்கே சொல்லு பார்க்கலாம், உனக்கு தில் இருந்தா சொல்லு நம்பலன்னு” என்று தன் பார்வையை கூராக்கி அவள் இதழ்களில் பதித்தான்.

 

    “நான் நம்புறேன்… தள்ளி படுங்க… தூக்கம் வருது…”

 

    “இது நல்ல புள்ளைக்கு அழகு, நீ இப்படி சொன்ன பேச்சைக் கேட்டா, நானும் சொன்ன பேச்சைக் கேட்பேன். குட் நைட் ஸ்வீட் ஹார்ட்.” என்றுவிட்டு அடுத்த நிமிடமே ஆழ்ந்த நித்திரைக்கு போய்விட்டான்.

 

    அந்த வார இறுதியில் வருண் இயலையும் தருணையும் மெரினா பீச்சிற்க்கு அழைத்துச் சென்றான். நெடுநாள் கழித்து தனக்கு இஷ்டமான இடத்தை வந்து அடைந்த மகிழ்ச்சியில் இயலும் குழந்தையாக மாறி போனாள். இதுவரை இல்லாத புது மாதிரியான இயலை இன்று வருண் கண்டான், ஆடினாள், ஓடினாள், நீரைத் தெளித்து விளையாடினாள். அவளின் நடை, உடை, பாவனை, பாஷை அத்தனையும் மாறிப் போயிருந்தது. அலைகளில் ஆடி ஓடி விளையாடும் அவளையும் தருணையையும் கண்டு வருணுக்கும் ஆசை வர அவனும் அவர்களோடு இணைந்து கொண்டான். நெடுநாள் கழித்து அவர்கள் நெஞ்சில் இருந்த பாரம் எல்லாம் இறங்கும் அளவிற்கு மூன்று குழந்தைகளையும், கடல் அன்னை தன் மடியில் ஆடிக் களிக்க வைத்தாள்.

 

    இருள் சூழ தொடங்கியதும் மூவரும் பிரியாவிடையுடன், கடல் மண்ணை காலிலிருந்து உதிர்த்து விட்டு கிளம்பினார்கள். வீட்டிற்கு வந்து சேர்ந்ததுமே, ஜானகி மாமியின் மகள் பவித்ராவுடன் தருண் விளையாட ஓடிவிட்டான். சமையல் வேலையெல்லாம் முடித்துவிட்டு இயல் வந்து பார்ப்பதற்குள் அங்கேயே தருண் உண்டு, உறங்கி இருந்தான்.

 

    ஜானகி மாமி, “அசதியா இருந்ததால் அவன் இங்கேயே தூங்கிட்டான்ம்மா, நாளைக்கு சன்டே லீவுதான. நீ நாளைக்கு காலைல வந்து அவன கூட்டிட்டு போய்க்கோயேன்…”

 

    “சரி மாமி…”

 

    சந்தோஷமான மனநிலையில் இருவரும் அனுபவிக்கும் முதல் இரவு… தனிமை தந்த உந்துதலில் வருண் மனம் தடம்புறள தொடங்கியது. உள்ளிருக்கும் உயிரணுக்கள் எல்லாம் அவள் பெயர் சொல்லி கூச்சலிட, அவள் போகும் இடங்களுக்கெல்லாம், “இயல்… இயல்… ப்ளீஸ்” என்று மோகன புன்னகையோடு அவள் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் கெஞ்சுவதை நிறுத்திவிட்டு மிஞ்ச தொடங்கினான்.

 

     வெந்நீர் மேகமாய் அவள் இருக்க, அவனின் வெள்ளை கொடிகளெல்லாம் பயனற்று போனது. இனி வாய் வழி பேச்சுவார்த்தை பயனில்லை என்று தெரிந்ததும் அதை நிறுத்திவிட்டு, முத்த போர் ஆரம்பித்து அதை முன்னேற்றி செல்ல தொடங்கினான். எரிமலை சீற்றத்தில் எறும்பாக அவள் சிக்கி தவிக்க, சில நிமிடங்களிலேயே அவள் விதித்த தடைகளை எல்லாம் அவன் உடைத்தெறிந்தான். அவன் வளைக்கும் விதங்களில் எல்லாம் அவளும் வளைந்து கொடுக்க, வெற்றி திருமகனாய் கோட்டை மேலேறி கொடி நாட்டி வந்தான்.

 

உயிரே உனக்காக வந்தேன்…

உன்னிடம்தான் தவறாய் போனேன்..

உன்னிடம் தான் மன்றாடுகிறேன்..

மகிழ்ச்சியோ துயரமோ உன்னுடன்தான்..

ஊடலும் கூடலும் உன்னுடன் தான்..

ஊருக்கே உத்தமனாய் வாழ்பவன்..

உன்னுடன் தான் தவறுகிறேன்..

மீண்டும் வாய்ப்பை எதிர்பார்க்கிறேன்..

என்னோடு வாழ்ந்து பார்க்க வா பெண்ணே….

 

    மனதெல்லாம் மகிழ்ச்சி கரை புரண்டோட, அடுத்த நாள் காலை தாமதமாகவே கண்விழித்தான். காபி கப்போடு நின்றிருந்த இயலை கண்டதுமே, துள்ளிக் குதித்து எழுந்து அமர்ந்தவன், “குட் மார்னிங்டா இயல், நேத்து நைட் கொஞ்சம் ஓவரா போயிடுச்சு… நா உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திடலேல்ல?”

 

   ‘இல்லை’ என்று தலையசைத்தாள்.

 

   “உனக்கு என் மேல இருந்த கோபம் எல்லாம் போயிடுச்சா இயல்?”

 

   பதில் சொல்லாமல் காபி கப்பை நீட்டினாள். அதில் கப்புடன் சேர்த்து கொஞ்சம் பணமும் இருந்தது. கப்பை கையில் எடுத்துக் கொண்டு வருண், “என்னடா வெளியில ஏதாவது வாங்கனுமா?”

 

    “இல்ல இது உங்களுக்குத்தான். நேத்து ராத்திரி நீங்க என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டதுக்கு.”

 

    அவன் கைகளில் இருந்த பீங்கான் கப் விரல்களின் இறுக்கத்தில் உடைந்து நொறுங்கி விழுந்தது. தன்மானம் அடிபட்ட வலியால், உயிர் உருகி வெளியேறிய  காட்சி அவன் கண்களில் அப்பட்டமாய் தெரிய, “போ… நீ வெளியில போ… கொஞ்ச நேரம் நான் தனியா இருக்கணும்… நா கூப்புடுற வரைக்கும் நீ இங்கே வராத…” என்றான் இறுக்கமாக.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: