Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 25

 

யர்திரு வருண் முதலாளி அவர்களுக்கு,

 

தங்களின் வேலைக்காரி எழுதிக்கொள்வது:

 

   லட்ச கணக்கில் என்னை விலை கொடுத்து வாங்கிய தங்களின் பெருந்தன்மையை மதித்து, சொல்லாமல் சென்றால் நன்றாக இருக்காதே என்பதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன். மிகச் சுலபமாக எங்கள் குடும்பத்தை சிதைத்து விட்டு, நீங்கள் இப்போது எதிர்கால ஆனந்த கனவுகளில் மிதந்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் பற்ற வைத்து சென்ற சிறு தீப்பொறியினால் பேரன்பில் உருவான பெரும் வனமொன்று எரிந்து சாம்பலாய் போனது. அடுத்தவர்களின் வலியை தங்களது ஆறுதலென்று பேர் வைத்து கொண்டு, அமைதியாய் இருந்து அது முழுவதும் எரிந்து கருகுவதை வேடிக்கை பார்த்தீர்கள்.

 

   இதுநாள் வரை எனக்கு ஒரு ப்ரியமாக, ஒரு கருணையாக, ஒரு நம்பிக்கையாக இருந்த என் ஒரே ஒரு சொந்தத்தை, எந்த வருத்தமும் இல்லாமல் அறுத்தெரிய எப்படி உங்களால் முடிந்தது? உண்மையில் காதலென்று ஒன்று உங்களுக்குள் இருந்திருந்தால், வலி தெரியாமல் உறவை அவிழ்க்கும் முறையினை கையாண்டிருப்பீர்கள். இன்னொருவன் மடியில் நிச்சலனமாய் உறங்குபவளை வலுக்கட்டாயமாய் இழுத்து உங்கள் மார்பில் உறங்க சொல்கிறீர்கள். கணவன் என்ற உரிமையை கோர விரும்பி இருந்தால், என்னை அண்ணனின் மடியிலிருந்து திடுக்கிடாமல் விழிக்கச்செய்யும் கலையை நீங்கள் பின்பற்றி இருக்க வேண்டும்.

 

   பிறந்த வீட்டு உறவுகளை என்னோடு நின்று பேச நேரமில்லாது வெளியேற்றத் துடிக்கும் உங்கள் அவசரம் எனக்கு புரியாமலில்லை. இருப்பினும் இறுக பிணைந்த எங்களின் உறவு முடிச்சுக்களை உங்களால் கடைசி வரை அவிழ்க்க… மன்னிக்கவும், அறுக்க முடியாமல் போனது உங்களின் மிகப்பெரிய தோல்வி என்று உணர்ந்து கொள்ளுங்கள். வந்த நாள் முதல் என்னை வதைத்து பார்த்த உங்களுக்கும், பிரிவின் அக்கடைசி உரையாடலுக்கு முன் என்னை பாதுகாப்பாய் அனுப்பி வைக்க துடித்த அண்ணனுக்கும் ஆயிரம் வித்யாசங்களை என்னால் உணர முடிந்தது.

 

    வாலிப வயதில் என் அண்ணனை சிறைக்கு அனுப்பியாயிற்று, தள்ளாத வயதில் என் அன்னையை வேலைக்கு அனுப்பியாயிற்று, இப்போது என்னை கட்டில் விளையாட்டிற்கு அழைக்க துடிக்கும் தங்களை நான் காதலன் என்று வருணிப்பேனா… காமுகன் என்று வருணிப்பேனா… வருண் அவர்களே?

 

    நான் வீட்டை விட்டு வெளியேறியதால், வார்த்தை தவறிவிட்டேன் என்று கோபம் கொள்கிறீர்களா? என்ன செய்ய, தங்களோடு சில காலம் வாழ்ந்து பழகி இருக்கிறேனே, உங்கள் குணம் எனக்கும் ஒட்டிக்கொண்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை… இப்போது என் அண்ணனை என்ன செய்வதென்று நீங்கள் முடிவெடுத்து இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும். வாழ வேண்டிய வயதில் வாழாமல், காலம்போன கடைசியில் அவன் வெளியே வந்து வாழ்ந்து என்ன செய்ய போகிறான்? ஆதலால் அவனை நீங்கள் நினைத்தபடி கொன்று விடுங்கள்.

 

    தங்கள் வீட்டு நகைகள் அத்தனையும் (தாலி உட்பட) இங்கே டேபிளின் மேல் வைத்துவிட்டு, என் அண்ணன் எனக்கு தந்த படிப்பை மட்டும் கையோடு எடுத்து கொண்டு, நான் போகிறேன்…..

 

            ******   ******   ******  

 

     இரவு நேர குளிர் காற்று வீதியில் உலா வர தொடங்கிட, நாள் முழுவதும் அடித்து கொளுத்திய வெப்பத்திடமிருந்து விடுதலையான மகிழ்ச்சியில், உயிரினங்கள் எல்லாம் உடலை சிலிர்த்து கொண்டது. ஆடி ஓடி அசந்து போய் ஊர் முழுவதும் உறங்கும் நொடியில், விடியலை காணும் ஆசையில் விண்ணில் கண்விழித்துக் காத்து கிடந்தன நிலவும் அதன் தோழமை நட்சத்திரங்களும்… மூன்று மணி நேரமாய் பேசி தீர்த்த வருணும் சித்தார்த்தும், பள்ளியின் பின்புறத்தில் இருந்து முன்புறத்திற்கு நடந்து வந்திருந்தனர். வருணை கிழிந்த காகிதமாய் தூக்கி எறியும் இயலின் கடைசி கடிதத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கும் அவன் மேல் சித்தார்த்திற்கு அனுதாபம் வந்ததது. பள்ளியின் அலுவலக அறை வாசலுக்கு இருவரும் வருவதை கண்டார் ஸ்கூல் வாட்ச்மேன். நேரம் இரவு ஒன்பது மணியை நெருங்கி இருந்ததால், வாட்ச்மேன் அவர்களுக்காக பிளாஸ்க்கில் வைத்திருந்த சூடான காபியை டம்ளரில் ஊற்றி தந்தார்.

 

  அவருக்கு நன்றியை தெரிவித்து விட்டு காபியை சுவைத்து கொண்டே அங்கிருந்த படியில் இருவரும் அமர்ந்ததும் சித், “தப்பு செஞ்சவன ஒன்னும் செய்யாம விட்டுட்டு, அப்பாவி பொண்ண புடிச்சு ஒன்னு விடாம எல்லா சேட்டையும் நீ பண்ணி வச்சிருக்க. கூசாம இப்ப வந்து அவள வீட்டுக்கு வான்னு வேற சொல்றியேடா, கதைய கேட்ட எனக்கே காண்டாகுதுனா அவளுக்கு எப்படி இருக்கும்?”

 

   அந்த கேள்விகளுக்கு வருண் தன் புன்னகையையே பதிலாக தந்திட சித், “அவகிட்ட சேட்டை பண்ணத தவிர நீ எந்த தப்புமே பண்ணலியேடா, ஆரம்பத்துல இருந்தே சும்மா வாய் சவடால்தான விட்ருக்க? அத அவளுக்கு புரிய வைக்க முடியலையா உன்னால?”

 

    “அங்க தான் பிரச்சனையே… அவள நான் சமாதான படுத்துறதுக்கு, அவ முதல்ல என்கூட உக்காந்து பேசனுமேடா… அதுக்கே அவ ஒத்து வர மாட்டேங்குறாளே… இத்தன நாள் கழிச்சும் இன்னும் என் மேல எவ்ளோ வெறுப்பா இருக்கான்னு நீயே பார்த்தேல”

 

    சித், “உனக்கு இருக்குற வசதிக்கு நீ அவ மிஸ் ஆனதுமே, ஈசியா கண்டுபுடிச்சிருக்கலாமே. ஏன் இத்தன நாளாச்சு? அட்லீஸ்ட் அவ போட்டோவ எல்லா பேப்பர்லயும் போட்டு தேடி இருக்கலாம்ல… மிஞ்சி மிஞ்சி போனா தமிழ்நாடு, கேரளா இது ரெண்ட தாண்டி போயிருக்க மாட்டாள்ல…”

 

   “யாரு அவ… அவ்ளோ ஈஸியா அவள புடிச்சிட முடியும்னு நினைக்கிறியா… அவள்லாம் பெரிய கேடிடா. மூணாறுல இருந்து கிளம்புனவ நேர திருவனந்தபுரம் போயிருக்கா, அங்க இருந்து கொச்சின் போயிருக்கா, அதுக்கப்புறம் எங்க போனான்னு யாருக்கும் தெரியல… வேணுன்னே ஸ்ட்ரெய்ட்டா சென்னைக்கு வராம, என்ன சுத்தி விட்டு வேடிக்கை பாத்து இருக்காடா. அவ போனதுக்கு அப்புறம் தருண் அவள மிஸ் பண்ணாம இருக்க, ரொம்ப நாள் முன்னாடி இருந்தே அவன மென்டலி ரெடி பண்ணி வச்சிருக்கா. இன்னோரு விஷயம், அவ பதினஞ்சு வயசு வரைக்கும் சென்னைல தான் படிச்சா, ஸ்கூல்ல செகன்ட் லாங்குவேஜ் ஹிந்திதான்… ஸோ அவளுக்கு ஹிந்தி சரளமா வரும். இப்ப சொல்லு எந்த ஸ்டேட்டுக்கு போனான்னு தெரியாம எப்டிடா நான் தேடுவேன். தவிர எங்கிட்ட ஒரு போட்டோ கூட இல்லடா… ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பேங்க் பாஸ் புக், ஸ்கூல் ஐடி கார்டு வரைக்கும் செக் பண்ணிட்டேன். எல்லாத்தையுமே ப்ளான் பண்ணி க்ளீனா துடைச்சி வச்ச மாதிரி அழிச்சுட்டு போயிட்டாடா… “

 

     “சபாஷ்….”

 

     “ஏது சபாஷ்ஷா?… எனக்கு வாயில நல்லா வந்திரும்….”

 

     “ஹா… ஹா… ஹா… சரி, ரவி என்ன ஆனான்?”

 

     “என்னால அவ இல்லாம ரொம்ப நாள் இருக்க முடியலடா… ரவிக்காக என்ன விட்டு போனவ, அவன் வெளிய வந்தா அவன பாக்கவாச்சும் வருவாளேன்னு நினச்சேன். மத்த பொய் கேஸ் எல்லாம் வாபஸ் வாங்கினேன், ஆக்ஸிடென்ட் கேஸ்க்கு மட்டும் ஜெயிலுக்கு போயிட்டு வந்தான். வந்த நாள்ல இருந்து அவனும் முடிஞ்ச அளவுக்கு சைடுல தேடிட்டே இருந்தான்.”

 

     “அவளோட அம்மா???”

 

     “ரவி ஜெயிலுக்கு போனதுமே அவங்க வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க, நான் பணம் குடுத்தாலும் வாங்குறதில்ல.”

 

     “ம்…. சரி இப்போ என்ன செய்ய போற? உன்னால அவள கன்வின்ஸ் பண்ணி கூட்டிட்டு போக முடியுமா?”

 

     “கன்வின்ஸ் பண்ணவே முடியாதுடா… என் மேல அவ்ளோ கோவமா இருக்கா. அவளுக்கு என்மேல எவ்வளவு வெறுப்பு இருக்கோ, அதை விட அதிகமாக தருண் மேல பாசம் உண்டு. இப்பவும் அப்படியே இருக்காளான்னு கன்பார்ம் பண்ணிக்கதான் ஈவ்னிங் மீட்டிங் டைம்ல தருண வர வச்சேன். தருண அவ பார்த்த பார்வையிலேயே எனக்கு அவளோட மனசு புரிஞ்சிருச்சு, இனிமே தருண வச்சுத்தான் நான் என்னோட காரியத்தை சாதிக்கனும்.”

 

    “ஸோ இப்பவும் நீ எதுவும் பண்ண மாட்ட?”

 

    “புரியல….”

 

    “முதல்ல நீ அந்த பொண்ணோட மனச புடிக்க ட்ரை பண்ணனும்டா, அப்புறமா அவளே உன்ன தேடி வருவா. நீ இப்போதைக்கு தருண காட்டி ஏமாத்தி கூட்டிட்டு போயிடலாம். மறுபடியும் தப்பிச்சு போயிடாம டைட் செக்யூரிட்டி போட்டு அவள உன் பக்கத்துலயே வச்சுக்கவும் செய்யலாம். ஆனா அவ மனச உன் பக்கம் திருப்புறதுக்கு இது சரியான வழி இல்லையே… போனதடவ மாதிரி இல்லாம இந்த தடவ கொஞ்சம் பொறுமையா, துணைக்கு தருணையும் சேத்துகிட்டு நீ அப்ரோச் பண்ணலாம்னு நான் நினைக்கிறேன். அதுமட்டுமில்ல, அன்னிக்கி தொலஞ்சு போனவள ரெண்டு வருஷம் கழிச்சி இப்பதான் திரும்ப பாத்திருக்க. பியூச்சர்ல ஏதாவது பிரச்சனை வந்தா மறுபடியும் கோச்சுக்கிட்டு போயிட்டானா என்ன செய்வ?”

 

    “ஏன்டா நேரங்கெட்ட நேரத்தில லெக்சர் எடுத்து கொல்ற… சொல்ல வந்தத ஷார்ட்டா சொல்லி தொலையேன்டா”

 

    “உங்கிட்ட இருக்குற பிரச்சினயே நீ எல்லா விஷயத்திலயும் கெத்து காட்ரடா. உனக்கு அது நேச்சுரல்லா வந்திடுச்சு…”

 

    “அப்டின்ற..??!!”

 

    “ஆமா… மத்தவங்ககிட்ட கெத்தா இருக்குறது ஓகே. பட் உலகத்துலயே ரெண்டு பேருகிட்ட மட்டும் நம்ம கெத்து வொர்க் அவுட் ஆகாது…”

 

   வருண் புரியாமல் முழிக்க சித், “பெஸ்ட் ஃப்ரன்டும், பெட்டர் ஹாப்பும். மீறி சீன் போட ட்ரை பண்ணா டப்பா டான்ஸ் ஆடிடும் மகனே, இப்ப உனக்கு ஆடுதே அத மாதிரி.”

 

    சித்தார்த்தின் வார்த்தை வந்த விதத்தில் வருண் தன்னை மறந்து சிரிக்கும் நேரம், அவன் போன் அடித்தது.

 

    சித், “யாரு?”

 

    “யாருன்னு தெரியல, நியூ நம்பரா இருக்கு…”

 

    போனை எட்டி பார்த்த சித் சின்ன சிரிப்புடன், “யாரோ இல்ல பாஸ்… உங்க பொண்டாட்டி தான்.”

 

    “ரெஜிஸ்டர்ல வேற நம்பர் இருந்தது!”

 

    “அதுக்கப்புறம் சேஞ்ச் பண்ணிருப்பா, நீங்க அட்டர்ன் பண்ணுங்க ப்ரோ… நான் போய் என்னோட பைக்க எடுத்துட்டு வர்றேன்” என்று நாகரீகமாய் ஒதுங்கினான்.

 

    வருண், ‘பரவாயில்ல… இப்பவாவது நம்மள காணும்னு தேடி போன் பண்ணாளே’ என்று மகிழ்ந்தபடி போனை அட்டர்ன் செய்ய அவளோ,

 

    “சித்தார்த் இன்னும் வீட்டுக்கு வரலன்னு அவனோட அம்மா எனக்கு போன் பண்ணாங்க, அவன் உங்க கூட இருக்கானா?”

 

    “ம்.. ஆமா. நானும் அவனும் இன்னும் ஸ்கூல்ல தான் இருக்கோம். இப்ப கிளம்பிடுறோம்…”

 

     “அவன அவங்க அம்மாக்கு கால் பண்ணி பேச சொல்லுங்க. அவ்ளோ தான் வச்சிடுறேன்.” என்று பதில் வரும் முன்னரே காலை கட் செய்து விட்டாள்.

 

    பைக்குடன் வருண் முன்னால் வந்து நின்ற சித், “என்னடா மூஞ்சிய மூஞ்சூரு மாதிரி வச்சிருக்க?” என்றான்.

 

    “எம்பொண்டாட்டி என்னை தேடாம உன்ன தேடி எனக்கே போன் பண்றா, இந்த கொடுமைய நான் எங்க போய் சொல்ல?”

 

    “அவதான் போன் பண்ணிருக்காள்ல, என்ன செய்ற? சாப்ட்டியாமா? உனக்கு கடையில ஏதாச்சும் வாங்கிட்டு வரவான்னு கேக்க துப்பில்லயாடா?”

 

    வருண் திருதிருவென முழித்தபடி, “தோணலயேடா…” என்றிட,

 

    சித், “நீ சரிப்பட்டு வரமாட்ட போலயே… திம்மத்தூண்டு பசங்களே இப்பல்லாம் எவ்ளோ அழகா ரொமான்ஸ் பண்றாங்க, நீ என்னடான்னா இப்டி இருக்கியேடா. நானே நாளைக்கு ஏதாவது ஒரு நல்ல ஐடியா யோசிச்சுட்டு வந்து உனக்கு சொல்றேன்.”

 

     “எல்லாம் என் நேரம்…”

 

    “நாளைக்கு பாப்போம் பாய்டா” என்று சிநேக புன்னகையோடு விடைபெற்று செல்ல, இயல் ஏன் இவன் புகழ் பாடுகிறாள் என்று வருணுக்கு இப்போது நன்றாகவே புரிந்தது.

 

     பத்து மணி வாக்கில் வீட்டிற்கு வந்த வருணிடம் இயல், “இந்த நேரத்தில இங்க வராதீங்கன்னு ஏற்கெனவே சொல்லி இருக்கேன்ல.”

 

    “உன்ன தனியா விட்டுட்டு என்னால எப்படி அங்க நிம்மதியா தூங்க முடியும்?”

 

   “ஏன், ரெண்டு வருஷமா நான் இங்க தனியா தான இருந்தேன், இன்னிக்கு ஒருநாள்ல என்ன ஆயிடப் போவுது?”

 

    “இத்தன நாளா நீ தனியா இருந்து கஷ்டப்பட்டது போதும் இயல், நான் வந்துட்டேன்ல, இனிமே உன்னை ஒரு நிமிஷம் கூட தனியா விட மாட்டேன்.”

 

     “நான் கஷ்டப்பட்டேன்னு யாரு சொன்னா எனக்கு இந்த தனிமை ரொம்ப புடிச்சிருக்கு. இங்க என்ன திட்டவோ, காயப்படுத்தவோ யாரும் இல்லை… என்னாலயும் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. மத்தவங்களோட கட்டுப்பாடு இல்லாம நான் எனக்கு புடிச்சத செஞ்சுக்கிட்டு சுதந்திரமா இருக்கேன். சொர்க்கம் மாதிரி இருக்குற இந்த இடத்தை விட்டு அந்த நரகத்துக்கு என்னால வரவே முடியாது…”

 

    “நான் இனிமே பழைய மாதிரி நடந்துக்கவே மாட்டேன். தருணும் உன் மேல உயிரா இருக்கான், தயவுசெய்து நம்ம ஊருக்கு வா இயல்”

 

    “என் மேல உயிரா இருந்தவங்க எல்லாத்தையும், ஒருத்தர் பின்னாடி ஒருத்தரா ஆக்ஸிடென்ட்ல பறி கொடுத்துட்டேன். இனிமேலும் யாரும் எனக்காக கஷ்டப்பட வேண்டாம் தயவு செஞ்சு இங்க இருந்து போயிடுங்க.” என்றவள் அவனை வெளியே தள்ளி கதவை சாத்த முயன்ற நொடியில், வருண் அத்துமீறி உள்ளே நுழைந்து அவளையும் சேர்த்து அள்ளிக் கொண்டு கட்டிலுக்கு போனான். அத்தனை எளிதில் தோல்வியை ஒத்துக் கொள்ளும் பிள்ளையா அவன்? நேரம் நள்ளிரவை தாண்டிட உறக்கம் கலைந்து கண் விழித்து பார்த்த இயல், அவன் அசந்து உறங்குவதை உறுதி செய்து கொண்டு மெல்ல கட்டிலிலிருந்து இறங்கினாள். ஓரடி நகர்ந்திடும் முன் புடவை முந்தானை பின்னாலிருந்து வெடுக்கென இழுக்கப்பட, வந்த இடத்திற்கே மீண்டும் போய் விழுந்தாள்.

 

     “எங்க நைஸா எஸ்கேப் ஆகுற?”

 

     “எங்கயும் போகல, கீழதான் படுக்க போனேன்.”

 

    “என்னோட கைக்குள்ள இருந்து எந்திருச்சு போக ட்ரை பண்ணாத, அப்புறம் நான் தேவையில்லாத வேலை பாக்க வேண்டியிருக்கும்.”

 

    சில நிமிடங்கள் கழித்து அவள், “நீங்க நிஜம்மாவே சித்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டீங்களா?

 

     “நீதானடி போய் சொல்ல சொல்லி டார்ச்சர் பண்ணின…”

 

    “அவன் என்ன சொன்னான்…”

 

    “என்ன சொல்லுவான்… நல்லா திட்டினான், நாளைக்கு என்னையும் உன் கூட ஸ்கூலுக்கு வர சொன்னான்.”

 

   “ஓ…”

 

   கீழ் வானம் சிவக்க காலை கதிரொளி அறைக்குள் விழுந்து விரிய தொடங்கிட, எங்கோ கரையும் காகத்தின் குரலில் கண் விழித்தான் வருண். இயலோ அந்நேரமே நீராடி முடித்து தன் குழலை குழைய பின்னலிட்டு, காலை நேர ஓவியம் போல அவன் கண்முன் வந்து நின்றாள். காபி கப்போடு வந்து நிற்பவளை கனவென்றே கருதியவன், அந்த கண்கொள்ளா காட்சியை சில நிமிடங்கள் ரசித்துக் கொண்டே படுத்திருந்தான்.

 

    “எனக்கு ஏழு மணிக்கு பஸ், நான் முன்னாடியே கிளம்பி ஸ்கூலுக்கு போறேன். நீங்க குளிச்சிட்டு சாப்பிட்டு பொறுமையா, உங்க கார்ல வந்து சேருங்க”

 

  “எட்டரை மணி ஸ்கூலுக்கு ஆறரைக்கே ரெடியா நிக்கிற  ஒரே ஆளு நீதான்டி.”

 

    “இந்த டைம்ல நிறைய பேரு ஸ்கூலுக்கு ஆபீஸ்ஸுக்கு போவாங்கள்ல, எனக்கு வேடிக்கை பார்த்துக்கிட்டே நடக்கறதுக்கு ரொம்ப பிடிக்கும், அதான்” என்றவள் வீட்டு சாவியில் ஒன்றை அவன் கையில் தந்துவிட்டு வெளியேறிவிட்டாள்.

 

   வருண் படுக்கையை விட்டு எழுந்து ஆடி அசைந்து குளித்துவிட்டு, ஒரு ஹோட்டலுக்கு போய் பிரேக் பாஸ்ட்டையும் முடித்துவிட்டு, சென்னையின் காலை நேர டிராபிக்கை கடந்து பள்ளிக்கு வரும் போது மணி ஒன்பதை நெருங்கி இருந்தது. நேராக ஆசிரியர்கள் அறைக்கு சென்று பார்த்திட, அங்கே சித் அவனுக்காய் காத்து கொண்டு இருந்தான்.

 

     “என்னடா, அவள சமாதான படுத்த எதாவது ஐடியா தோணுச்சா?”

 

    சித், “செம ஐடியா வச்சிருக்கேன், காத குடு…” என்று அவன் காதினில் மந்திரம் ஓதிட, மற்ற ஆசிரியர்கள் உடனிருப்பதை மறந்து வருண், “ஹேய்…. சூப்பர்ரா…” என்று வாய்விட்டு கத்தினான்.

Leave a Reply

%d bloggers like this: