Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 24

  “ப்போ சரி, நான் நாளைக்கே வினோத்த அனுப்புறேன். வேற ஏதாவது?”

 

    “வேற சொல்ற மாதிரி எதுவும் இல்ல, ஆங்… அந்த அம்மா சன்டே நீங்க வந்துட்டு போனதில இருந்து அழுதுட்டே இருந்துச்சு. பட் ரவி இப்ப கண் முழுச்சதும் அவன்ட்ட எதையுமே சொல்லல, அவனுக்கும் சன்டே இயல் வருணின் வார்த்தைகளில் நம்பிக்கை இன்றி, ‘நெஜமாவா?… அண்ணன கொல்லாம விட்ருவீங்களா?… மறுபடியும் நாளைக்கி மாத்தி சொல்ல மாட்டீங்கள்ல?… உங்கள நம்பி நான் போகலாம்ல?…’ என்று மணிக்கொரு முறை வந்து கேட்டு கொண்டே இருந்தாள்.

 

    “எத்தன தடவ இதையே கேட்டுகிட்டு இருக்க போற இயல்? இங்க வா, சத்தியம் பண்றேன். ரவியை நான் கொல்ல மாட்டேன்… கொல்ல மாட்டேன்… கொல்ல மாட்டேன்…” என்று அவள் வலது கையில் அடித்து சத்தியம் செய்திட, அவன் செய்கையால் உச்சி குளிர்ந்தவள், உலகம் மறந்து சுற்றி கொண்டிருந்தாள்.

 

     ஆரம்ப நாட்களில் வருண் இயலின் காதலுக்கும் இந்துவின் நியாபகங்களுக்கும் இடையில்

மாட்டி கொண்ட மத்தளமானான். எவ்வளவு முயன்றாலும் இயலின் முகம் அவன் மனதினுள் நுழைந்து சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்வதை அவனால் தடுக்க முடியவில்லை. நாளாக நாளாக ‘நானும் அவளும், என் குடும்பம், என் குழந்தை’ என்கின்ற நினைப்பே அவனுள் ஆயிரமாயிரம் சந்தோஷ அலையினை வீசியது. இயலினையன்றி இனி எதுவும் இன்பம் தரப்போவதில்லை என்று உணர்ந்த நாள் முதல், ‘அவளை மட்டும் அந்த குடும்பத்திலிருந்து தனியாய் பிரித்து எடுக்க முடியாதா?’ என்ற யோசனையில் உழல, உண்மையிலேயே அவள் அந்த குடும்பமில்லை என்ற செய்தி அவனுக்கு சக்கரை பொங்கல்தான். ‘அவள் தேவையையும் என் தேவையையும் ஒரு புள்ளியில் நிறுத்தினால் என்ன?’ என்ற அவனின் யோசனைக்கு கிடைத்த பதில் தான் அவனின் இந்த முடிவு. இத்தனை நாள் இல்லாத சந்தோஷம் இன்று அவள் முகத்தில் குடியேறிட, நடையே சிறு  துள்ளலோடு இருக்க சந்தோஷமாக கோவிலுக்கு கிளம்பி செல்பவளை, மாடியிலிருந்து வருண் கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான்.

 

    ஒரு வாரத்திற்கு பிறகு வருண் ஃபேக்டரியில் இருக்கும் போது, ஹாஸ்பிடலில் இருந்து போன் வந்தது.

 

    டாக்டர் சதீஷ், “சார் ரவிக்கு கான்சியஸ் வந்திடுச்சி, டிஸ்சார்ஜ் பண்ண இங்க ஏற்பாடு நடக்குது.”

 

   “குட், அவனோட ஹெல்த் கன்டிஷன் நாம நினைச்ச வேலைக்கு சரிப்படுமா?”

 

   “எஸ் சார், மூணு மாசமா பெட்ல கிடந்ததால, நார்மலா நடக்க, உக்காந்து எழுந்திரிக்க மட்டும் ரெண்டு நாள் ஆகும். மத்தபடி ஹி இஸ் பெர்பெக்ட்லி ஆல் ரைட் நவ்.”

நடந்தது எதுவும் தெரியல. ரொம்ப நேரமா ரெண்டு பேருமே அமைதியா இருக்காங்க…”

 

    “ஓகே… இனிமே நான் பாத்துக்கிறேன்”

 

   அடுத்த நாள் மாலையே வருண் ரவியை தன் பேக்டரிக்கு வர சொன்னான். ரவி வருண் அறையில் நுழைந்தது முதலே பார்வையால் இசையினை தேடி துளாவி விட்டு, அவள் இங்கில்லை என்று புரிந்ததும் வருணை முறைத்து கொண்டிருக்க, வருணோ கை முஷ்டிகளை மடக்கி தன் பலத்தினை அவன் பார்க்கும்படி செய்தான். பாம்பும் கீரியுமான அவர்கள் இருவரும் முதல் முறையாக சந்திக்கும் நேரம், மற்றவர்கள் யாரும் அவர்களின் பேச்சை கேட்டு விட கூடாதென்று வெளியே மழை அடித்து கொளுத்த தொடங்கியது.

 

   அடுத்த நாள் அதிகாலை இயல் கோலம் போட வாசல் கதவை திறந்து வெளிவரும் போது, கோகிலா அந்த வீட்டு வாசலின் ஒரு மூலையில், குளிரினால் நடு நடுங்கி கொண்டு அமர்ந்திருந்தார்.

 

    இயல், “அம்மா… அம்மா… என்னம்மா இங்க வந்து உக்காந்திருக்கீங்க? எப்போ வந்தீங்க?… அம்மா…”

 

   அவள் சத்தத்தில் உணர்வு பெற்ற கோகிலா கேவலுடன், “இயல்… இயல்… ரவிய காணும்டி”

 

   “ஹாஸ்பிடல்ல தான இருந்தான், எப்டி காணாம போவான்?”

 

    “அவனுக்கு முந்தாநாளே நினைவு திரும்பிடுச்சு, முதல் நாள் கைகால அசைக்க முடியாத அளவு நடுக்கம் இருந்துச்சு, அதான் உன்ன பாக்க வரல. நேத்து கொஞ்சம் பரவாயில்ல, எழுந்திருச்சு ரெண்டு ரெண்டு எட்டா நடக்க ஆரம்பிச்சான். சாயங்காலம் போல வருண் வர சொன்னதா நாலு ஆளுங்க வந்து கூட்டிட்டு போனாங்க. போனவன் இன்னும் வீட்டுக்கு வரலடி…’

 

    “நான் தான் ஏற்கனவே வருண பத்தி உங்ககிட்ட சொல்லி இருக்கேன்ல… தெரிஞ்சும் அவன ஏன் நீங்க தனியா போக விட்டீங்கம்மா?”

 

   “போகாதடான்னு சொல்லாமலா இருந்திருப்பேன்? ஆனா எம்மேல இருந்த கோவத்துல ரவி கண்ணு முழிச்சதிலிருந்து கிளம்பி போன கடைசி நிமிஷம் வரைக்கும், எங்கிட்ட ஒரு வார்த்த கூட பேசலடி… நேத்து கூட போகாதடா… போகாதடான்னு… அவன் கால்ல விழாத குறையா கதறினேன்… கேக்கலியே… ரவிய வருண் எதாவது செஞ்சுட்டானானோன்னு எனக்கு பயமா இருக்கு இயல்…”

 

    “நீங்க பயப்படாதீங்கம்மா, ரவிய ஒண்ணும் பண்ண மாட்டேன்னு வருண் சொல்லி இருக்கான். நான் போய் விசாரிக்கிறேன்… நீங்க உள்ள வந்து உக்காருங்க…” என்று கைத்தாங்கலாக உள்ளே அழைத்து சென்று அமர வைத்துவிட்டு வருணை தேடி ஓடினாள்.

 

     வருணோ படுக்கையறையில் நிஜத்தில் தருணை கட்டி பிடித்து கொண்டும், நினைவில் இயலின் கரம் பிடித்து கொண்டும் இன்ப கனவுலகில் மிதந்து கொண்டிருந்தான். ‘வருண்… வருண்…’ என காதருகில் பல முறை கத்தி பார்த்தும் அந்த கும்பகர்னனிடம் அசைவேயில்லை. வேறு வழியின்றி அவன் தோள்களை பிடித்து உலுக்கிட உறக்கம் கலைந்து கண்விழித்தான்.

 

    கண்களை கசக்கி கொண்டே எழுந்தமர்ந்த வருண் அசிரத்தையாக, “என்ன இயல், இந்த நேரத்தில எதுக்கு எழுப்பின?” என்றான், அவள் பதற்றத்திற்கான காரணத்தை தெரிந்து கொண்டே.

 

    “நீங்க ரவிய என்ன செஞ்சீங்க? இப்ப அவன் உயிரோட இருக்கானா இல்லையா?”

 

     “நான் தான் சொன்னேன்ல, அவன நான் கொல்ல மாட்டேன்னு…”

 

    “பின்ன எங்க போனான் அவன்? எனக்கு என் அண்ணன இப்பவே பாக்கனும்னு இருக்கு கூட்டிட்டு போங்க.”

 

    “இப்ப முடியாது, ஒரு ஒன்பது மணிக்கு மேல தான் அவன நாம பாக்க முடியும். மத்ததெல்லாம் அங்க போனதுக்கு அப்புறம் உனக்கே புரியும்”என்பதோடு முடித்து கொள்ள, இடைப்பட்ட அந்த நான்கு மணி நேரமும் ரவியை பற்றிய பயத்தில் இயலின் மனம் நெருப்பாய் தகித்தது.

 

    ஒன்பது மணிக்கு கோகிலாவும், இயலும் வருணுடன் கிளம்பி சென்றனர். பத்து நிமிடம் பயணத்திற்கு பிறகு வருணின் கார் ஒரு போலீஸ் ஸ்டேஷன் முன்னால் வந்து நின்றது. இயலுக்கு வருண் என்ன செய்து வைத்திருக்கிறான் என்று தெரிந்ததும் முட்டி கொண்டு வந்த அழுகையை துப்பட்டாவின் நுனியினால் அழுத்தி பிடித்து நிறுத்தினாள். உள்ளே ஒரு சிறை அறையினை வருண் கை நீட்டி காட்டிட, இயல் ஓடிப்போய் அதன் முன்னால் நின்றாள். ரவி கட்டாந்தரையில் விட்டத்தை பார்த்தபடி படுத்து கிடந்தான். அடுத்த நிமிடமே கோகிலா ஊருக்கே கேட்கும்படி ஒப்பாரி வைக்க ஆரம்பிக்க, திரும்பி பார்த்த ரவி இயலை கண்டதும் திடுக்கிட்டு எழுந்து வந்தான்.

 

    “இசைம்மா நீ எதுக்குடா இங்கெல்லாம் வந்த?”

 

    இயலோ அழுகையை சிரமப்பட்டு முழுங்கி விட்டு திக்கி திணறி, “ஏன்ணா இப்டி செஞ்ச?”

 

    “நீ பொறந்ததில இருந்து சித்தியும் சித்தப்பாவும் உன்ன எவ்ளோ செல்லமா வளத்தாங்கன்னு எனக்கு தெரியும்டா. எங்க வீட்டுக்கு வந்த பிறகு நீ ரொம்ப கஷ்ட பட்டுட்ட. அண்ணன்னு நான் ஒருத்தன் தண்டத்துக்கு தான் இருந்தேன். உனக்குன்னு ஒரு நல்ல டிரஸ்ஸோ நகையோ இல்ல … நல்ல படிப்பு இல்ல… நல்ல சாப்பாடு இல்ல… எப்போ பாரு திட்டிகிட்டே இருக்குற இவங்க கிட்ட இருந்து உன்ன காப்பாத்த யாருமில்ல… அப்பப்போ நீ அழுறத பாக்கும் போது வர்ற வலிய விட, என்கிட்ட சொல்ல கூடாதுன்னு நீ சிரிப்ப இழுத்து பிடிச்சு நிக்கும் போதுதான் ரொம்ப வலிக்கும். என்ன பாக்குற? நீ வாய தொறந்து சொல்லலனாலும் என்னால உன்னோட மனச புரிஞ்சுக்க முடியும்டா… ”

 

    “ஒரு அண்ணனா இதுவரைக்கும் என்னோட எந்த கடமையும் முழுசா செய்யல, இதோ உம்பக்க்கத்துல இருக்காங்களே அவங்க எதையும் செய்யவும் விடல… இன்னிக்கி அந்த பழைய வாழ்க்கையவே உனக்கு அமைச்சு குடுக்க ஒரு வாய்ப்பு கிடச்சிருக்கு. நீ எனக்காக இதுவரைக்கும் அனுபவிச்ச கஷ்டமெல்லாம் போதும். இனிமே நீ உனக்காக உன்னோட வாழ்க்கைய வாழ ஆரம்பிம்மா…”

 

    “அண்ணா… நீ வருவ, அவங்கிட்ட இருந்து என்ன காப்பாத்தி கூட்டிட்டு போவன்னு நினச்சு இத்தன நாளா உனக்காக காத்திருந்தேன்.”

 

   “வருண்கிட்ட இருந்து உன்ன காப்பாத்தி கூட்டிட்டு போய் நான் என்ன செய்வேன்? வேற பையன தேடி பிடிச்சு கல்யாணம் பண்ணி வச்சா என் பிரச்சன தீந்திடும், ஆனா அப்போ உன் பிரச்சன ஆரம்பிச்சிடும். உங்க அம்மா கல்யாணமான அடுத்த நாளே அந்த வீட்ட விட்டு வெளிய வந்துட்டாங்க, ஆனா அவங்க செத்து இத்தன வருஷம் ஆன பின்னாடியும் அந்த கெட்ட பேரு அவங்கள விட்டு போகல… இதே நிலமை உனக்கோ உன் குழந்தைக்கோ வரனுமா?… வருண் உன்ன விரும்புறான், உன் வாழ்க்கைல நிச்சயமா இனிமே எந்த பிரச்சனையும் வராம பாத்துக்கிறேன்னு சொல்லி இருக்கான். அதுனால…”

 

    “அதுனால நீ எனக்காக ஜெயிலுக்கு போக போறியா?….”

 

    “உனக்காக நான் உயிரையே குடுப்பேன், கேவலம் கொஞ்ச நாள் ஜெயிலுக்கு போக மாட்டேனா?”

 

    “வேண்டாண்ணா… கால் வயித்து கஞ்சினாலும் பரவாயில்ல, உங்கூடவே உன்தங்கச்சியா நான் இருந்துக்குறேன். எனக்கு பணக்கார வாழ்க்கையெல்லாம் வேண்டாம், நீதான் வேணும்.”

 

   “முடியாதும்மா… காலம் முழுக்க நாம இப்டியே வாழ முடியாது. அன்னிக்கி நான் தண்ணியடிச்சதுக்கு காரணம் என்ன தெரியுமா? அந்த கூலிக்கார மாப்பிள்ள என்னோட ஆபீஸ்க்கு வந்து என்னையும் உன்னையும் சேத்து வச்சு தப்பா பேசினதாலதான். என்னதான் நீ பாசமான தங்கச்சியா இருந்தாலும் உனக்குன்னு ஒரு வாழ்க்கைய நான் அமைச்சு குடுக்கத்தான் வேணும். வருண பத்தி எனக்கு முன்னாடியே நல்லா தெரியும். பணக்காரனா இருந்தாலும் எல்லாருட்டயும் அன்பா பழகுவான், எந்த கெட்ட பழக்கமும் கிடையாது, தன்னோட குடும்பத்து மேல உயிரையே வச்சிருந்தான். அத இழந்த விரக்திலதான் என்ன பண்றோம்னு தெரியாம இஷ்டத்துக்கு பண்ணிட்டான். ஆரம்பத்துல உன்கிட்ட கொஞ்சம் மோசமா நடந்துகிட்டதாவும், இப்ப உம்மேல உயிரையே வச்சிருக்கிறதாவும் சொன்னான். அவனுக்கு எம்மேலதான் கோவம் இருக்கே தவிர, உன்மேல துளிகூட இல்ல. இதுவரைக்கும் போனதொல்லாம் போகட்டும், இனிமே நீ அவன்கூட சேர்ந்து வாழ்ந்தா அதுதான் எனக்கு சந்தோஷம்.”

 

    “எப்டின்னா எப்டி? உன்னால இந்த மாதிரி எல்லாம் பேச முடிது?”

 

    “எனக்காக நீ இத்தன வருஷமா கஷ்ட பட்டியேம்மா… நான் உனக்காக கொஞ்சம் கஷ்ட பட்டா எதுவும் குறைஞ்சு போயிடாது. இதுக்கு மேல இங்க நிக்க வேண்டாம்… நீ வீட்டுக்கு போ…” என்று கட்டாயப்படுத்தி அனுப்பினான்.

 

   ஸ்டேஷனுக்கு வெளியே வந்த இயல் வருண் இன்ஸ்பெக்டர் வினோத்திடம் ஏதோ பேசிக் கொண்டிருப்பதை கண்டு, “எங்க அண்ணன் மேல எத்தன கேஸ் போட்டு இருக்கீங்க?” என்றாள்.

 

    வருண் “நாலு” என்றிட, வினோத் “ஏழு” என்றதும் வருண் அவனை முறைக்க, இயல் வந்த அழுகையை அடக்கிக் கொண்டு காரில் ஏறி அமர்ந்தாள். வருண் அவளை வீட்டில் வந்து இறக்கி விட்டுவிட்டு சென்றதும், எங்கு போகிறோம், என்ன செய்கிறோம் என்று எதுவுமே நினைவில் பதியாமல் அன்று முழுவதும் ஒரு பைத்தியக்காரியை போல அறைக்குள் உலவிக் கொண்டு இருந்தாள். இரவு வரை உண்ணாமல் உறங்காமல் அறைக்குள்ளேயே சுருண்டு கிடந்தவளின் அருகில் வருண் ஒரு பேக்கை கொண்டு வந்து வைத்தான்.

 

    “இயல் உனக்கு இன்னும் பத்து நாள்ல ஃபைனல் எக்ஸாம் வருது இல்ல, அதுக்குள்ள புக்ஸ் எல்லாம் இந்த பேக்ல இருக்கு.”

 

    “எதுக்கு இதெல்லாம்? நான் இப்போ படிச்சு பரீட்சை எழுதி என்ன செய்யப் போறேன்?”

 

    “உன்னோட பேருக்கு பின்னாடி ஒரு டிகிரி இருக்க வேண்டியது ரொம்ப அவசியம்.”

 

    “என் மனசையே கொன்னுட்டீங்க, என் பேரு மட்டும் முக்கியமா உங்களுக்கு? நீங்க என்னோட அண்ணன கொல்ல மாட்டேன்னு சொன்னப்பவே நான் யோசிக்காம விட்டுட்டேனே… கடைசில என் கையாலயே என் கண்ண குத்த வச்சுட்டீங்களே… தயவு செஞ்சு, என்ன கொஞ்ச நேரம் தனியா விடுங்க, என் முன்னாடி வராதீங்க போயிடுங்க…”

 

   “போறேன் அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோ நீ இந்த எக்ஸாம் எழுதனும்னு ஆசை பட்டது நான் இல்ல, ரவி தான். ரெண்டு வருஷமா நீ கஷ்டப்பட்டு படிச்சது வேஸ்ட் ஆகிட கூடாதுன்னு, எக்ஸாம் தேதிய உனக்கு ஞாபகப்படுத்த சொன்னான்” 

 

    அவள் தன் அண்ணனின் அன்பினால் அழுது கொண்டிருக்க வருண், “இந்தா… இதெல்லாம் போட்டுக்கோ…” என்று அன்று ஒருநாள் வாங்கிய நகைகள் அத்தனையையும் எடுத்து கொடுத்தான்.

 

    அவள் நீர் நிரம்பியிருக்கும் தன் கூரிய வேல் விழிகளால் அவனை குத்தி கிழிக்க முயன்றிட அவனோ, “இப்ப இருந்து நீ என்னோட மனைவி, எனக்கு மட்டும்தான் சொந்தம். இதையெல்லாம் இனிமே எப்பவும் நீ போட்டுட்டு இருக்கணும். எக்ஸாம் முடியிற வரைக்கும் நான் உன்னை தொல்லை பண்ண மாட்டேன், அதுக்கு அப்புறம் நாம நம்மளோட எதிர்காலத்தை பத்தி பேசி ஒரு முடிவுக்கு வரலாம். நீ நான் சொன்ன பேச்சு கேட்டா உங்க அம்மாவுக்கு செலவுக்கு பணம் தருவேன், இல்லன்னா தரமாட்டேன் என்ன செய்யப் போறன்னு யோசிச்சு சொல்லு…”என்றுவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

 

    அடுத்த நாள் காலை முதலே இயல் அதீத அமைதியாய் இருந்தாள். ரவிக்காக தன் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள விரும்புவதாய் வருணிடம் அவன் நம்பும்படியாக சொன்னாள். கோவில் பக்கம் செல்வதை அடியோடு மறந்தாள், வீட்டு வேலைகள் போக ஓய்வு நேரங்களில் படிக்கும் வேலையையும் சேர்த்தே செய்து முடித்தாள். தருணிடம் அளவிற்கு அதிகமாய் அக்கறை எடுத்து, அவன் வேலைகளை அவனே செய்யப் பழக்கினாள். பிரபாகரனிடம் தாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவியாய் இணைந்து வாழ போவதாய் சொன்னாள். அவள் எக்ஸாம் எல்லாம் முடிந்ததும் ஒரு நல்ல நாள் பார்த்து ஊரைக்கூட்டி ரிசப்ஷன் வைக்கவும் ஏற்பாடு செய்ய சொன்னாள். அவள் கொஞ்சம் கொஞ்சமாய் மாறுவதாய் நினைத்திருந்த உறவினர்கள் அனைவரும் அவளை நம்பினார்கள். இயல் பரிட்சையும் நல்லபடியாகவே எழுதி முடிக்க, அதற்கு அடுத்த வாரத்தில் ரிசப்ஷனுக்கான தேதியும் குறிக்கப்பட்டது. குளிர்காற்று தேகம் தழுவிட உறக்கத்தில் இருந்து கண்விழித்துப் பார்த்த வருணுக்கு காலையிலேயே கண்கொள்ளாக் காட்சி காண கிடைத்தது.

 

    “ஹேய், என்ன விசேஷம் இன்னிக்கி? காலங்காத்தால சேரி கட்டிட்டு வந்து நிக்குற?”

 

    “இன்னிக்கி என்னோட பேர்த் டே”

 

    படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தவன், “ஹேப்பி பர்த்டே இயல்… ஐ ஹோப் ஆல் யுர் விஷஸ் கம் ட்ரூ” என்றான் தன்னை மறந்து கட்டியணைத்து கொண்டு.

 

    “சாரி இயல், ஏதோ ஒரு வேகத்துல உன்ன கட்டிபிடுச்சிட்டேன். உன்னோட கோபம் குறைஞ்சிருச்சுன்னு எனக்கு புரியுது, பட் நாம நம்மளோட வாழ்க்கையை பத்தி பேசி முடிவு எடுக்கணும். என்னோட சைடு நிறைய தப்பு இருக்கு, அதுக்கு நான் விளக்கம் குடுக்கணும், சாரி கேக்கணும்… இன்னிக்கி பேசினா சரியா வரும்னு தோணுது, நாம கொஞ்சம் மனசு விட்டு பேசலாமா? நீ என்ன சொல்ற?”

 

    “எனக்கு இன்னைக்கு ஒரு நாள் எங்க அம்மா கூட போய் இருக்கணும்னு தோணுது… நாம நாளைக்கு பேசலாமா” என்றாள் தயக்கத்துடன்.

 

    “பர்த்டே பேபி கேட்டா மாட்டேன்னா நான் சொல்லுவேன், தாராளமா போய்ட்டு வா. பட் ஈவ்னிங் இங்க வந்துடு,  நம்ம மேரேஜ்க்கு அப்புறம் வர்ற உன்னோட முதல் பிறந்தநாள் இது, ஸோ நம்ம மூணு பேரும் சேர்ந்து கொண்டாடலாம்.”

 

  ‌ “ம்…”

 

    அன்று மாலை அவளுக்காய் சில சர்ப்ரைஸ் கிஃப்ட்ளோடு வருண் காத்திருந்தான், அவள் இருள் சூழும் வரை வரவே இல்லை. பொறுமை இழந்து அவனே கோகிலாவின் வீட்டிற்கு கிளம்பிப் போனான். அங்கே நடுவீட்டில் கைகள் நடுங்க ஒரு கடிதத்துடன் கோகிலா அமர்ந்திருந்தார்.

Leave a Reply

%d bloggers like this: