Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 23

யல் தன் ஒற்றை வார்த்தையில் வருணை உயிரோடு கொன்று புதைத்து விட்டாள். நெடுநேரம் அவன் பதிலுக்காய் காத்திருந்தவளுக்கு, மறுமொழி ஏதும் கிடைக்காததால் தன் கண்ணீரை துடைத்து விட்டு அவன் மார்பில் இருந்து இறங்கினாள். மரண வலியில் உளன்று கொண்டிருந்தவனுக்கு அவள் தன் மார்பில் இருந்து இறங்கி சென்ற உணர்வே தெரியவில்லை. ‘நீ உதிர்த்த வார்த்தைகளால் இங்கே நான் மரணித்து கிடக்கிறேனடி சகியே… உடலை இந்த இடத்திலேயே விட்டுவிட்டு என் உயிர் மட்டும் உன் பின்னால் வருவதை நீ அறிவாயா அன்பே… நான் கட்டிய தாலியை கழட்டாததையும், தருண் மீது நீ காட்டிய பாசத்தையும் இதுநாள் வரை சாதாரணமாய் தான் நினைத்திருந்தேனடி… அது உன்னை ஈன்றவளின் வளர்ப்பினாலும், அவளை நீ இழந்த துக்கத்தினாலும் வந்த தாக்கம் என்பதை யான் அறியேனடி… நாலுக்கு பதிலாக நாற்பதை தருவாளாம், என்னுயிரை என்னிடமே பேரம் பேசுகிறாயா பெண்ணே… வியாபாரத் துறையில் நான் சகலகலா வித்தகன் என்பதை நீ மறந்து விட்டாய் போலும்… நீ கொண்ட வலியும் வேதனையும் பெரிதுதானென்று இன்று உணர்ந்தேன், ஆனால் அருணின் இறுதி நேர வேதனையை என்னை விட்டால் வேறு யார் உணர்வார்?…இயலுக்காக இந்தக் குடும்பத்தின் ஆணி வேராய் இருந்த இந்துவின் நியாபகங்களை அழித்து கொள்வதா? இல்லை, இறந்தவளுக்காக இருப்பவளை இழப்பதா? என்று பகுத்தறிய தெரியவில்லையடி எனக்கு…’

 

    இயலா? இந்துவா? எந்த பாதையில் செல்ல விரும்புகிறாய் என்று கேட்கும் இதயத்திடம், அவன் மூளை உரைத்த பதில் “லாபமும் இன்றி நஷ்டமுமின்றி இந்த வியாபாரத்தை முடிக்கிறேன் பார்…”

 

    அடுத்த நாள் பொழுது விடிந்தது முதலே இயல், ‘இவன் வாயை திறந்து ஏதாவது ஒரு பதில் சொல்லி விட மாட்டானா!’ என ஆராய்ச்சியோடு வருண் முகத்தையே அடிக்கடி வந்து பார்த்து சென்றாள். அவனோ முதல் நாளே முடிவெடுத்து விட்ட போதிலும், அவள் முன்னால் கல்லுளி மங்கனாய் வாயை திறப்பேனா என்று சாதித்தான். இறுதியில் அவளே மனதை திடப்படுத்திக் கொண்டு வருண் ஃபேக்டரிக்கு செல்ல தயாராகி கீழே வந்ததும், அவசர அவசரமாய் அவன் முன் போய் நின்றாள்.

 

    “ப்ளீஸ்… சரின்னோ முடியாதுன்னோ ஏதாவது ஒரு பதில் சொல்லுங்க… எந்த பதிலும் சொல்லாம இருந்தீங்கன்னா எப்படி?”

 

   இப்போதும் எதுவும் சொல்லாமல் அவன் கிளம்பி சென்றிட இயல், ‘இன்னுமாடா மனசு இறங்கல உனக்கு… ஒரு பொண்ணுக்கு உயிரை விட உயர்வான மானத்தையும், உலகினை விட உன்னதமான குழந்தையையும் உன் கையிலயே தந்திடுறேன்னு சொல்லிட்டேனே… இதுக்கு மேல உனக்கு நான் என்ன கொடுக்க முடியும்?’ என்று தன் நிலையை நினைக்க நினைக்க அழுகையாய் வந்தது. கண்ணீரும் கம்பலையுமாய் கார்டன் பக்கம் வந்து ஒரு புதரின் மறைவில் சுருண்டு படுத்துக் கொண்டு மனது ஆறும் மட்டும் அழுது தீர்த்தாள்.

 

     அழுது அழுது ஓய்ந்து போய் கிடந்தவளை சாந்தி வந்து வாஞ்சையாய் தலை தடவி, “இயல்… இயல்… என்னம்மா சாப்பிடாம கொள்ளாம இங்கே வந்து படுத்திருக்க… வா எழுந்திரி, ஐயா இப்ப போன் பண்ணாரு… உன்கிட்ட ஏதோ பேசனும்னு சொன்னாரு…” என்றதும் கண்ணீரை துடைத்து விட்டு எழுந்து வந்தாள்.

 

   இரண்டு நிமிட காத்திருப்புக்கு பிறகு வருணிடமிருந்து போன் வந்தது, அவன் முடிவை எதிர்பார்த்து ஆவலாய் போனை எடுத்தவளுக்கு அவன் சொன்ன பதில், “இப்போதைக்கு ரவி விஷயத்தில என்னால் எந்த முடிவும் எடுக்க முடியல இயல், எனக்கு பதில் சொல்ல ஒரு பத்து நாள் டைம் கொடு… ரவிக்கு கூடிய சீக்கிரமே கான்சியஸ் வந்திடும்னு டாக்டர் சொல்றாரு. மே பீ இந்த மன்த் என்டுக்குள்ள அவன் கண் முழிச்சிடுவான். கம்மிங் சண்டே நான் உன்ன ரவி பாக்க ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போறேன்.” என்று முடித்து விட்டு போனை வைத்து விட்டான்.

 

   அவன் கொடுக்கும் இடத்தில் இருக்கிறான், இயலோ அவனிடம் இறைஞ்சும் நிலையில் இருக்கிறாள்… அவன் சொன்ன காலக்கெடு வரை காத்திருப்பதைத் தவிர அவளால் என்ன செய்ய முடியும்? வேறு வழியின்றி ஞாயிற்று கிழமைக்காக காத்திருந்தாள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒருநாள் மாலை கார்டனில் இயல் தருணுடனும் சாந்தியின் குழந்தையுடனும் விளையாடிக் கொண்டிருந்தாள். பிரபாகரன் கொடுத்த பைலை வருணிடம் தர வந்திருந்த சிந்துவுக்கு, அங்கே இயல் சிரித்து விளையாடுவதை காணவே பிடிக்கவில்லை.

 

    வருண், “வா சிந்து, அப்பா சொன்னாரு. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு, நம்மை மலைக் கோவிலுக்கு குடுக்க பட்டாசு வந்து இருக்கு, அதை எடுத்து வச்சிட்டு வந்து நான் பைல பார்க்கிறேன்.”

 

    காட்டு விலங்குகளை விரட்டுவதற்கு தேவையான பட்டாசுகளை மலைக்கோயில் மக்களுக்கு நான்கைந்து மாதத்திற்கு ஒரு முறை வருண் குடும்பம் வாங்கி தரும். இது சிந்துவும் அறிந்த விஷயமே… மூன்று பெரிய பெட்டிகளில் இருந்த பட்டாசுகளை பாதுகாப்பாக ஒரு அறைக்குள் வைக்கச்சொல்லி, அறையை வெளிப்பக்கம் தாழிட்டு விட்டு வந்தான்.

 

    “இன்னிக்கு ஒரு நாள் மட்டும் நான் தருண் கூட இருக்குறதுக்காக, இங்கேயே தங்கிகட்டுமா அத்தான்?”

 

    கடந்த சில நாட்களாக சிந்து தன்னிடம் ஒதுக்கும் காட்டுவது வருணுக்கும் புரிந்து இருந்ததால், அவளின் இந்த ஆசையை நிராகரிக்க அவனுக்கு மனம் ஒப்பவில்லை.

 

   “என்ன கேள்வி இது சிந்து, இதுவும் உன் வீடுதான, தாராளமா தங்கிக்கோ.”

 

    இரவு உணவு முடிந்ததும் இயல் வருணிடம் வந்து, “என்ன இருந்தாலும் சிந்து உங்க முறைப்பொண்ணு… வயசுக்கு வந்த ஒரு பொண்ணு பக்கத்துல இருக்கும் போது, நாம ஒரே ரூம்ல தூங்கினா தப்பா இருக்கும். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நான் வெளியில இருக்கிற என்னோட குவாட்டர்ஸ் ரூம்ல தூங்கிக்கிறேன்.” என்றாள். ரவியின் நினைப்பினால் இரண்டு நாட்களாக அடிக்கடி யாருக்கும் தெரியாமல் இயல் அழுது கொண்டே இருக்கிறாள், தலையில் இருந்த காயம் வேறு இன்னும் முழுதாய் ஆறவில்லை, சிறிது தனிமை கிடைத்தால் அவள் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொள்ள அது உதவும் என்று நினைத்து தான் வருண் அவளுக்கு சரி என்றான். அதுவே பின்னால் பெரும் பிழையாகிவிட்டது.

 

    நெடுநாள் கழித்து குவாட்டர்ஸ் பக்கம் தூங்க வந்த இயலை சாந்தியின் மகன் பிடி பிடி என்று பிடித்துக்கொண்டு விடவே இல்லை. சாந்தி, “டேய் வாடா தூங்கப் போலாம்” என்று கெஞ்சி பார்த்தாள், குழந்தையோ இயலின் இடுப்பிலிருந்து இறங்குவதாய் தெரியவில்லை.

 

     “சரிக்கா… இன்னைக்கு ஒரு நாளு குழந்தையை நான் என் கூடவே படுக்க வச்சுக்கிறேன், இவனுக்கு ராத்திரி பசிச்சா குடிக்குறதுக்கு ஒரு டம்ளர்ல பால் மட்டும் குடுங்க…” என்று கேட்டு வாங்கிக் கொண்டு தனக்காக ஒதுக்கி இருந்த அறைக்குள் சென்று விட்டாள்.

 

    நள்ளிரவில் திடீரென பட்டாசு சத்தம் கேட்க தூக்கம் கலைந்த வருண் பால்கனி வழியே எட்டி பார்த்தான். குவாட்டர்ஸ் பக்கம் தான் சத்தம் கேட்டது, இங்கிருந்து பார்க்கையில் எங்கே என்று சரியாக தெரியவில்லை. சத்தம் கேட்டு முழித்துக்கொண்ட தருணையும் சேர்த்து தூக்கிக் கொண்டு கீழே ஓடி சென்றான். குவாட்டர்ஸின் அருகில் செல்ல செல்ல சாந்தி, “ஐயோ என் குழந்த… ஐயோ… இயல்…” என்று கத்தும் சத்தம் கேட்க வருண் தன் ஓட்டத்தின் வேகத்தை அதிக படுத்தினான்.

 

     அங்கே இயல் இருந்த அறை கரும்புகையால் சூழ்ந்திருக்க, அப்போதுதான் சாந்தியின் கணவரும் வாட்சுமேன் தாத்தாவும் கதவை உடைத்து போட்டு அவளை வெளியே தூக்கி வந்தனர். இயலின் முதுகுப்பக்கம் முழுவதும் பட்டாசு வெடித்ததால் தீக்காயங்கள் நிறைந்திருக்க, இதுவரை தன் மடிக்குள் பத்திரமாய் ஒளித்து வைத்திருந்த சாந்தியின் குழந்தையை வெளியே இறக்கி விட்டாள். சிறு காயமும் இன்றி குழந்தை அதன் அம்மாவின் அருகில் ஓடி போக, இயல் வலி தாங்க முடியாமல் மயங்கி சரிந்தாள். வருண் தருணை சிந்துவிடம் ஒப்படைத்துவிட்டு, இயலை வித்யா அத்தையின் ஹாஸ்பிடலுக்கு தூக்கிச் சென்றான். இயலுக்கு முதலுதவியை முடித்து விட்டு வெளியே வந்த வித்யா அத்தை, வருண் சட்டையைப் பிடித்துக் கொண்டார்.

 

    “வருண்… உண்மைய சொல்லு.. யார் இந்த பொண்ணு? எப்படி மறுபடியும் மறுபடியும் இவளுக்கு அடிபட்டு கிட்டே இருக்குது? ஒவ்வொரு தடவையும் நீ ஏன் ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு வர்ற? அவளோட புருஷன் எங்க போனான்?  உனக்கும் இந்த பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்?”

 

   “நீங்க நினைக்கிற மாதிரி எனக்கும் அவளுக்கும் எந்த தப்பான தொடர்பும் இல்லை அத்தை. இவதான் என்னோட வொய்ப்.” என்றதும், அவர் சில நிமிடங்களுக்கு அதிர்ந்தாரா உறைந்தாரா என்று தெரியவில்லை.

 

    வந்த கோபத்திற்கு வருணை தனியாக அழைத்துச் சென்று திட்டி தீர்க்க ஆரம்பித்தார், “அறிவு இருக்காடா உனக்கு? அந்த பொண்ண பொண்ணுனு நீ நினைச்சியா, இல்ல மண்ணுனு நெனச்சியா? இந்த தடவையாது பரவாயில்ல, எல்லாம் வெளிக்காயம் தான், மருந்து போட்டா ஒரு வாரத்தில ஆறிடும். போன தடவை தலையில எவ்வளவு ஆழமான காயம் தெரியுமா? இன்னும் கொஞ்சம் லேட்டாகி இருந்தா அன்னைக்கே இவ செத்து இருப்பா… இந்துவ நீயும் அருணும் கவனிச்சுக்கிட்டு விதத்த பார்த்து, உங்க வீட்டுக்கு வாழ வர போற இரண்டாவது மருமக எவ்வளவு கொடுத்து வச்சவளா இருக்கணும்னு நினைச்சேன் தெரியுமா? இப்ப அத நெனச்சா என் மூஞ்சில நீ கரிய அள்ளி பூசின மாதிரி இருக்குடா… எனக்கு இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா இந்த பொண்ண உன்கிட்ட இப்படி அடி வாங்க விட்ருக்க மாட்டேனே… ஆமா இந்த விஷயம் உங்க பிரபாகரன் மாமாவுக்கு தெரியுமா?”

 

   வருண் தலை குனிந்தபடியே, “அவள கல்யாணம் பண்ணது மட்டும்தான் தெரியும், வேற எதுவுமே அவருக்கு தெரியாது.”

 

    விருவிருவென தன் அறைக்கு சென்ற வித்யா அத்தை பிரபாகரனுக்கு போன் போட்டார். அடுத்த அரைமணி நேரத்தில் பிரபாகரன் லதாவுடன் ஹாஸ்பிடலுக்கு வந்துவிட, லதா இயலை கவனிக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார்.  அதேநேரம் இதற்கு முன்பு இயலுக்கு உண்டான காயங்களை பற்றி வித்யா அத்தை பிரபாகரனிடம் புட்டு புட்டு வைக்க, பிரபாகரன் ஒரு தனி அறையில் வருணை செமத்தியாக கவனிக்க ஆரம்பித்தார். காலையில் இயல் கண்விழித்த போது லதாவும், பிரபாகரனும் அவள் அருகில் இருந்தனர். தூரத்தில் நின்றிருந்த வருண் முகத்தில் இருந்த காயங்கள், இரவு இங்கே என்ன நடந்திருக்கும் என்று அவளுக்கு சொல்லாமல் சொல்லியது. வீடு வரும் வரை யாரும் எதுவும் பேசாமல் இருந்தனர்.

 

    வீட்டிற்கு வந்ததுமே ஓடிவந்து இயலை அணைத்துக் கொண்ட சாந்தி பிரபாகரனிடம், “ஐயா நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே…”

 

    “என்னம்மா?”

 

    “பேசாம இந்த பொண்ண கொன்னுடுங்கய்யா…” என்றாள் அழுதுகொண்டே….

 

    “என்னம்மா சொல்ற?”

 

    “ஆமாய்யா, கொஞ்சம் கொஞ்சமா கொல்றதுக்கு பதிலா ஒரேடியா கொன்னுட்டா நிம்மதியாவது செத்துடும். பாவம்யா… ஒவ்வொரு தடவையும் வலி தாங்க முடியாம தனியா உக்காந்து அழுறத பாக்க எங்களுக்கே சங்கடமா இருக்கு.”

 

    “கேட்டியாடா நீ என்ன பண்ணி வச்சிருக்கன்னு… இந்த பாழாப்போன முன் கோபத்தால நான் உன் வயசுல எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேன். அவசரப்படாத அவசரப்படாதன்னு அனுபஸ்தனா உனக்கு எத்தன தடவ சொன்னேன். ஒரு தடவையாவது காது கொடுத்து கேட்டியாடா நீ? இயல்… இதுக்கு மேலயும் நீ இங்க இருக்க வேணாம்மா, பேசாம எங்க வீட்டுக்கு வந்திடு… இன்னொரு பொண்ணா நினைச்சு நானே உன்ன பாத்துக்கறேன்.”

 

    “இல்ல சார், நான் இங்கேயே இருக்குறேன்” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்,

 

    “உன்ன இவன் கொண்ணுடுவான்னு எனக்கு பயமாயிருக்கும்மா… இத உனக்காக மட்டும் சொல்லல, அவனுக்காகவும் சேர்த்துதான் சொல்றேன் புரிஞ்சுக்க….”

 

   “சார், கடைசியா எங்களுக்கு ஒரு வாரம் டைம் குடுங்க, எங்க பிரச்சனையை நாங்க பேசி தீர்த்துக்க முயற்சி பண்றோம். முடியலன்னா அதுக்கப்புறம் நீங்க சொல்றத நான் கேட்கிறேன்.”

 

    “ஒரு வாரம் தான வேணும்… சரி, இந்த ஒரு வாரம் முடிஞ்சதும் நான் என்ன சொல்றேனோ அத ரெண்டு பேரும் கேட்கணும்” என்று விட்டு தருணையும் தன்னோடே அவர் கூட்டி சென்றிட, மற்றவர்களும் தத்தமது இடத்திற்கே திரும்பிச் சென்றனர்.

 

    வருண் நேராக சிந்துவின் அறைக்கு சென்று, “ஏன் இப்படி செஞ்ச சிந்து? உன்கிட்ட இருந்து இவ்வளவு கொடூரமான முகத்தை நான் எதிர்பாக்கல…” என்றான்.

 

    “என்ன பார்த்தா உங்களுக்கு அவ்ளோ கெட்டவளா தெரியுதா அத்தான்? நான் அப்படியே தான் இருக்கேன், ஆனா நீங்க எல்லாரும் தான் ரொம்ப மாறிட்டீங்க… இல்ல மறந்துட்டீங்க… அருண் அத்தான, அக்காவ, மாமாவ நீங்க எல்லாரும் மறந்துட்டீங்க… அவங்க சாவுக்கு காரணமானவங்க கூடவே கொஞ்சிக் குலாவ ஆரம்பிச்சுட்டீங்க… நீ அந்த பொண்ண விரும்புறன்னு எனக்கு தெரியும். இனிமேலும் நான் உன்ன நம்ப போறதில்ல… என்னோட அக்கா அத்தான் சாவுக்கு காரணமானவங்கள நானே பழி வாங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். நீ குறுக்க வந்தா உன்னையும் கொல்ல தயங்க மாட்டேன். நேத்து எங்கிட்ட இருந்து அந்த இயல் தப்பிச்சுட்டா, ஆனா இனிமே அவ எங்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது…” என்றவளை வருண் அடிக்க நெருங்கிட,

 

    இயல் டீ ட்ரேயுடன் அந்த அறை வாசலில் வந்து நின்று, “சார் டீ….” என்றாள் சத்தமாக.

 

   வருண் ஓங்கிய கையை இறக்கிவிட்டு ஜன்னல் ஓரமாய் போய் நின்றான்.

 

    இயல் டீயை எடுத்து கொடுத்து கொண்டே, “மத்தவங்கள இப்டி பட்டு பட்டுன்னு கை நீட்டுறீங்களே, அவ செஞ்ச இதே தப்பதான ஆரம்பத்தில நீங்களும் செஞ்சீங்க? பின்ன எந்த தைரியத்துல அவளை மட்டும் அடிக்க போறீங்க? அப்புறம் நீ சிந்து, என்னை கொல்றதுக்கு ட்ரை பண்றேன்னு உன்னோட டைம்ம வேஸ்ட் பண்ணிட்டு இருக்காத, ஏன்னா என்னை யாராலும் கொல்ல முடியாது. வேணும்னா, ஏற்கனவே ட்ரை பண்ணி தோத்து போன உங்க வருண் அத்தான்ட்ட அந்த டீட்டெயில்ஸ் எல்லாம் கேட்டுக்கோ”

    

    ‌ “எனக்கு யாருகிட்டயும் பேசனுங்கிற அவசியம் இல்ல, என்னால தனியாவே எதையும் செய்ய முடியும். அவன் வேணும்னா உன்னோட அழகுல மயங்கி பழச மறந்து கிடக்கலாம், எங்கிட்ட உன்னோட வித்தை எல்லாம் பலிக்காது.”

 

    “சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்” என்றவள் நிதானமாக இறங்கி தன் குவாட்டர்ஸ்க்கு ஓய்வெடுக்க போய் விட்டாள். வருண் சிந்துவிற்கு இயலை பற்றியும், தான் செய்யப் போகின்ற காரியத்தைப் பற்றியும் சுருக்கமாக சொல்லி முடித்தான். அவன் பதிலால் மன நிறைவடைந்த சிந்து அங்கிருந்து கிளம்பி தன் வீட்டிற்கு சென்றாள்.

 

   நாட்கள் நகர்ந்து ஞாயிற்றுக்கிழமை வந்ததும் ரவியை பார்ப்பதற்காக, வருண் இயலை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் போனான். ரவியை பார்த்ததுமே தான் கொண்ட கஷ்டங்கள் எல்லாம் பஞ்சாய் பறந்திட, அவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு அருகிலேயே அமர்ந்து சில நிமிடங்கள் அழுது கரைந்தாள். மூன்று மாதத்திற்கு பிறகு இயலை கண்ட கோகிலாவோ அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தார். காரணம் இயலின் அழகில் மயங்கியே வருண் அவளை திருமணம் செய்ததாய் இதுநாள் வரை கோகிலா நினைத்திருக்க, இன்று அவர் முன் வந்த இயலோ மெலிந்த தேகம், கறுத்த சருமம், பழைய ஆடை, தலையில் மிகப்பெரிய காயம், உடல் எல்லாம் சின்ன சின்ன தீக்காயங்கள் என முற்றிலுமாய் உருமாறி இருந்தாள். ‘வெளிக்காயங்களே இத்தனை இருந்தால் உள்காயங்கள் இன்னும் எத்தனை இருக்குமோ!’ என்று நினைக்கையிலேயே கோகிலாவின் மனது துடிதுடித்து போனது. என்னதான் இயலை தனக்கு பிடிக்காது என்றாலும், கோகிலா இதுவரை ஒருமுறை கூட அவள் மேல் கை நீட்டியதும் இல்லை, பட்டினி போட்டதும் இல்லை. இயலுக்கு அவர் முதலில் பார்த்திருந்த மாப்பிள்ளை கூலிக்காரன் என்றாலும், குணத்தில் நல்லவனாகவே தேர்ந்தெடுத்திருந்தார். படுக்கையில் கிடக்கும் ரவியைவிட மெலிந்து போய் இருக்கும் இயலை பார்த்து, முதல் முறையாக கோகிலாவிற்கு குற்ற உணர்வு தலை தூக்கியது.

 

    வருணோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தன் பாக்கெட்டில் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து இயல் கையில் கொடுத்து, “நீயே உங்க அம்மா கிட்ட குடுத்திடு” என்றான்.

 

    ‘இந்தாங்கம்மா…’ என்று பாசத்தோடு பணத்தை நீட்டும் இயலை பார்க்க பார்க்க கோகிலாவின் கண்கள் கலங்கியது. இந்த பணத்திற்காக ஆசைப்பட்டுத்தானே அவளை அவன் கையில் பிடித்துக் கொடுத்தாய்… என்று கோகிலாவின் மனச்சாட்சியே அவரை கேலி பேசியது.

 

    வருண், “போதும் இங்கிருந்து கிளம்பலாம் இயல்” என்று அவளையும் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்.

 

    “வேணா… அவள விட்ருப்பா… நான் உன்னோட பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்திடுறேன்… என் பொண்ண என்கிட்டேயே குடுத்திடு தம்பி…” என்று கதறிக் கொண்டிருக்க, வருணோ இயல் திரும்பிக்கூட பார்க்க முடியாத அளவிற்கு வேகமாக இழுத்துச் சென்றான்.

 

   “ஐயோ… போறாளே… டேய் ரவி எந்திரிடா… அவ நிலமைய பாருடா… உன் தங்கச்சிய நான் ஒரு வார்த்த சொன்னாலே தாங்க மாட்டியே… இப்ப உயிரோட பாழுங்குழியில தள்ளி விட்டு வச்சிருக்கேனே இந்த பாவி… ரவி கண்ண தொறடா… அவளுக்காக எந்திரிச்சு வாடா…” என்று உயிர் இல்லாத சடலமாக கிடந்தவனை அடித்து எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தார். இதற்குள் வருண் இயலுடன் ஹாஸ்பிடல் வாசலை தாண்டி வெளியேறிவிட்டான்.

 

     திரும்பி வரும் வழியெல்லாம், ‘இத்தன வருஷத்துல அம்மா என்னை ‘எம் பொண்ணு’ன்னு சொன்னது இது தான் முதல்முறை. பெரியப்பா மட்டும் இத கேட்டு இருந்தா நிச்சயமா சந்தோஷப்பட்டு இருப்பாரு.’ என்று அவளின் நினைவெல்லாம் அவளுடைய குடும்பத்தைச் சுற்றியே இருந்தது.

 

    வீட்டிற்கு வந்த பிறகு இயல் வருணிடம், “உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்…” என்றாள்.

 

    “நான்தான் சொன்னேன்ல ரவிய பத்தி  யோசிச்சு முடிவெடுக்குறேன்னு…”

 

    “இல்ல அது இல்ல… இது வேற”

 

    “என்ன?”

 

    “ஒருவேளை நீங்க எங்கள கொல்லனும்னு  முடிவெடுத்தா, முதல் நாள் சொன்ன மாதிரியே என்னை கொன்னுட்டு அப்புறம் தானே எங்க அண்ணன கொல்லுவீங்க?”

 

    “.……….”

 

    “பதில் சொல்லுங்க… முதல்ல என்னத்தான கொல்லுவீங்க? ப்ளீஸ்… எனக்காக இது ஒன்னு மட்டும் பண்ணுங்க… என்னோட கடைசி ஆசையா இத உங்ககிட்ட கேக்குறேன்…”

 

     “நான் ரவிய கொல்ல போறது இல்ல இயல்… அவன் விஷயத்தில வேற ஒரு முடிவு எடுத்திருக்கேன்.”

 

     அவன் தந்தது வரமில்லை, சாபம் என்று தெரியாமல் இயலிசையின் மனம் ஆனந்த கூத்தாடி கொண்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: