Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 22

வான் முட்டும் கோபுரங்களை கொண்ட மதுரை மாநகரம்… தமிழ்ச்சங்கம் வளர்த்த பாண்டிய மன்னர் பரம்பரையில் வழித்தோன்றலாய் வந்தவர்கள் தேவேந்திரன் ராஜேந்திரன். ராஜேந்திரனும் பர்வீனும் கல்லூரியில் சேர்ந்த காலம் தொட்டே நட்பாய் பழகினர். பேசப்பேச பழகப்பழக நட்பிற்கும் மேல் ஏதோ ஒரு அன்பை இருவரும் உணர ஆரம்பித்தனர். நண்பர்கள் வட்டத்துடன் அரட்டை அடித்து கொண்டிருந்தாலும் யாருக்கும் தெரியாமல் அவளை அடிக்கடி நோட்டமிட்டு வந்தன அவனின் கண்கள். அதுவே நாளடைவில் அனிச்சை செயலாய் மாறிய நேரம், காதல் கொண்ட மனது கட்டுப்பாட்டை மீறி வெளிவந்து விழுந்து அவளிடம் அவனை காட்டி கொடுத்து சென்றது. அவளுக்கும் அவனை பிடித்திருக்கவே, தன் வெட்க புன்னகையால் பதில் சொல்லிட இருவரும் ரெக்கை இல்லாமலே விண்ணில் பறந்து திரிந்தனர். கடிதங்களால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது அவர்கள் காதல். ஒளித்தாலும் மறைத்தாலும் வெளிவரும் புகையை போல காலப்போக்கில் விஷயம் மெல்ல மெல்ல நண்பர்களிடையே கசிந்தது, பர்வீனின் பெற்றோர் காதுக்கும் தான். இந்த நவீன நூற்றாண்டிலேயே காதல் திருமணம் சாத்தியம் இல்லாத போது 20 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும்?

 

    படிப்பு முடியும் தறுவாயில் இருந்ததால் தெரிந்தே அமைதிகாத்த பர்வீன் பெற்றோர், கல்லூரி முடிந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே அவளின் திருமண நாளையும் நிச்சயித்தனர். அழுது புரண்டு கெஞ்சி பார்த்தவளுக்கு அவர்கள் அளித்த பதில் மானம், மதம், கௌரவம்… பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் தன் கழுத்தை நீட்டினாலும், காதலனை சுமந்த மனதில் கணவனாய் வந்தவனை ஏற்க முடியாமல் அவனிடமே தன்னை கொன்று விடும்படி கதறினாள். அவளின் வலி அவனுக்கு புரிந்ததோ என்னவோ, யாருக்கும் தெரியாமல் அடுத்த நாளே அவளை அழைத்துக்கொண்டு போய் ராஜேந்திரனிடம் விட்டு விட்டான். நடந்தது எதுவுமே தெரியாத ராஜேந்திரன் அவனுக்கு கோடி நன்றிகளை தெரிவித்து விட்டு பர்வீனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். வேறு மதம், வேறு ஒருவன் மனைவி, வேறு பழக்க வழக்கங்கள் என்று வேறுபாடுகளே அவர்களின் கண்களுக்கு அதிகமாய் தெரிந்தது. மொத்த குடும்பமும் அவளுக்கு எதிராக நின்று வாய்க்கு வந்ததை எல்லாம் வசை பாட ஆரம்பித்தார்கள்.

 

    அடுத்த நிமிடமே ராஜேந்திரன் பெட்டி படுக்கையோடு அவளை அழைத்து கொண்டு வீட்டை விட்டு கிளம்பி விட்டான். நண்பர்களின் உதவியால் மதுரையிலேயே ரெஜிஸ்டர் மேரேஜை முடித்து கொண்டு கையோடு சென்னைக்கும் கிளம்பி விட்டனர். செல்வந்தனாய் இருந்தும் தனக்காக அத்தனையும் விட்டுவந்த அவனுக்கு, தன்னால் சிறு மனக்கசப்பும் வந்து விட கூடாதென்று பர்வீன் ஆரம்பம் முதலே தெளிவாக இருந்தாள். மதம் மாறுகிறேன் என்றவளை ராஜேந்திரன் அன்பினால் தடுத்துவிட்டான், அது ஒன்றில் தான் அவன் ஜெயித்தான், மற்றதையெல்லாம் அவள் நினைத்ததையே செய்ய விட்டான். மொத்த குடும்ப பாரத்தையும் அவன் தோள் மேல் ஏற்ற விரும்பாமல் அடம்பிடித்து அவளும் வேலைக்கு சென்றாள். வரவு செலவுகளை கணக்குப் பார்த்து அழகாக குடும்பம் நடத்தினாள், குழந்தை பிறப்பையும் சில காலம் தள்ளி போட்டாள். இரண்டு ஆண்டுகளிலேயே அவர்கள் வாழ்க்கைக்கு பிடிமானம் கிடைத்து விட அடுத்த ஆண்டே ராஜேந்திரனின் மார்பில் இயலிசை கால் தடம் பதித்தாள். குழந்தைக்கு பெயர் வைப்பதில் ராஜேந்திரன் பர்வீனுக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருந்தபோதும் எம்மதமும் சாராத தமிழ் மொழியிலிருந்து இயலிசை என்ற பேரையே தேர்ந்தெடுத்தாள். குழந்தை வளர வளர அவர்கள் வீட்டில் செல்வமும் சேர தொடங்கியது.

 

   “எங்க வீடு எப்படி இருக்கும் தெரியுமா? பூஜை ரூம்ல குர்ஆனும் பகவத்கீதையும் இருக்கும். இந்து பண்டிகையோ முஸ்லிம் பண்டிகையோ, ஏதோ ஒரு விசேஷம் மாத்தி மாத்தி எங்க வீட்ல வந்துகிட்டே இருக்கும். ஒவ்வொரு பண்டிகைக்கும் அப்பா எனக்கு புது டிரஸ் வாங்கி தருவாரு. எங்க அம்மா கல்யாணத்துக்கு அப்புறம் பர்தா போடுறத விட்டுட்டாங்க, எனக்கும் வாங்கி தர மாட்டாங்க… எப்பவும் பட்டு பாவாடை தான் வாங்குவாங்க. ஆனா எனக்கு பர்தா போட்டுக்க ரொம்ப ஆசை, எட்டு வயசு இருக்கும் போது அம்மாக்கு தெரியாம அப்பாகிட்ட அழுது அடம்புடிச்சு பர்தா வாங்கினேன். ரொம்ப நாளா அத அம்மாக்கு தெரியாம நானும் அப்பாவும் அவரோட ஸ்கூட்டருக்கு சைடுல இருக்குற பாக்ஸ்ல ஒழிச்சு வச்சிருந்தோம். அது போட்டுக்கும் போது நான் ஒரு சிஐடி மாதிரி, அதுக்குள்ள நான் ஒளிஞ்சிட்டு இருக்குற ஒரு உணர்வு வரும், அது எனக்கு ரொம்ப புடிக்கும். பர்தா போட்டுக்கும் போது, என்னோட முகம் பௌர்ணமி நிலா மாதிரி இருக்கும்னு அப்பா எப்பவும் சொல்லிட்டே இருப்பாரு.”

 

    “எனக்கு பத்து வயசு ஆகும்போது அப்பா எங்களுக்கு புது வீடு வாங்கினாரு… எங்க ட்ராவல்ஸ் பிசினஸும் அதுக்கு அப்புறம் நல்லா வளர்ந்துச்சு. எந்த கவலையும் இல்லாம பதினைஞ்சு வயசு வரைக்கும் அப்பா அம்மா கூட சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்தேன். ஒரு நாள் நாங்க கார்ல போயிட்டு இருக்கும்போது ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. நான் சுயநினைவு வந்து கண் முழிச்சு பார்க்கும் போது அம்மா அப்பா இறந்து ரெண்டு நாள் ஆயிடுச்சின்னு சொன்னாங்க… என் பக்கத்துல அப்பாவோட ஜாடையில ஒருத்தர் நின்னுகிட்டு இருந்தாரு. அவர்தான் எனக்கு தேவையானது எல்லாம் பார்த்துப் பார்த்து செஞ்சாரு, எங்க கம்பெனிய க்ளோஸ் பண்ணிட்டு வீட்டை வித்திட்டு என்னை அவர் கூடவே கூட்டிட்டு போனாரு. அவரு பேரு தேவேந்திரன் எங்க அப்பாவோட அண்ணனாம். என்னக்காக ஒரு அண்ணனும் அம்மாவும் காத்துக்கிட்டு இருக்கிறதா அவர் சொன்னாரு. நானும் எனக்கு ஒரு குடும்பம் இருக்குன்ற நினைப்போட அவரு கூட கிளம்பி வந்தேன்.”

 

    “ஆனா அவரோட மனைவி கோகிலாவுக்கு என்னை சுத்தமா புடிக்கலன்றது சீக்கிரமே புரிஞ்சது. அவங்க பெரியப்பாக்காகவும், அண்ணனுக்காகவும், என்னோட பேர்ல இருந்த கொஞ்ச பணத்துக்காகவும் ஆரம்பத்துல அன்பு இருக்கிற மாதிரி நடிச்சிருக்காங்க. அது பெரியப்பாக்கு ஆரம்பத்திலேயே தெரிஞ்சிருக்கு போல, அவரு என்னை கூப்பிட்டு ‘இனிமே எப்பவுமே பெரியம்மாவை அம்மான்னு கூப்பிடு, உன்னோட அம்மாவாவே நினைச்சுக்கோ. இன்னிக்கி இல்லன்னாலும் என்னைக்காவது ஒருநாள் உன் மேல அவளுக்கு பாசம் வரும்’ சொன்னாரு. நான் பெரியப்பாக்காக அவங்கள அம்மான்னு உறவு கொண்டாட ஆரம்பிச்சேன். எந்தப் பிரச்சனையும் இல்லாம ஒரு வருஷம் இப்படியே போச்சு, ஒரு நாள் ஸ்கூல் முடிஞ்சு பெரியப்பாவும் நானும் கார்ல வீட்டுக்கு வரும்போது மறுபடியும் ஆக்சிடன்ட் ஆயிடுச்சு. இந்த தடவையும் நான் சின்ன சின்ன காயத்தோட தப்பிச்சுட்டேன் ஆனா என்னோட பெரியப்பா…..” என நிறுத்தி விட்டு இயல் வாயை மூடி சில நிமிடங்கள் அழுதாள்.

 

    “அவரு இறந்ததுக்கு அப்புறம் தான் எங்களுக்கு அவரோட பிஸினஸ் பயங்கர லாஸ்ல போனதே தெரிஞ்சது. ரவியும் அப்பதான் படிப்ப முடிச்சுட்டு, வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருந்தான். அவனுக்கு இந்த ஊரில் தான் வேலை கிடைச்சது, இருந்த சொத்து எல்லாத்தையும் வித்து கடன அடச்சிட்டு நாங்களும் இந்த ஊருக்கே வந்துட்டோம். பொறந்ததுல இருந்து பணக்காரியா வாழ்ந்த பெரியம்மாவால இந்த ஏழ்மையை ஏத்துக்க முடியல. இங்க வந்ததுக்கப்புறம் தடுக்க யாரும் இல்லைங்கிற தைரியத்தில, பெரியம்மா என் மேல இருந்த வெறுப்ப வெளிப்படையா காட்ட ஆரம்பிச்சாங்க. பெரியப்பாவோட சாவுக்கும், அவங்க பிஸினஸ் லாஸ்சுக்கும் என்னோட ராசி தான் காரணம்னு குத்தி காட்டி பேச ஆரம்பிச்சாங்க, நான் நின்னா குத்தம் நடந்த குத்தம்ன்னு ஒவ்வொண்ணுலயும் குத்தம் கண்டு பிடிச்சுக்கிட்டு இருந்தாங்க. என்னதான் அண்ணன் எனக்கு சப்போர்ட் பண்ணி பேசினாலும் பெரியம்மாட்ட அவன் பேச்சு எடுபடல. ஒவ்வொரு தடவையும் நான் திட்டு வாங்கி அழும் போது அண்ணன் தான் வந்து என்னை சமாதான படுத்துவான்.”

 

    ரவி, “இங்க பாரு இயல் இதுக்காகல்லாம் அழக்கூடாது, யாருகிட்டயும் திட்டு வாங்காம நம்மால வாழ்நாள் முழுக்க இருந்திட முடியுமா சொல்லு… என்ன இருந்தாலும் அவங்க நம்ம அம்மாதான… அவங்க பாட்டுக்கு திட்டிகிட்டு இருக்கட்டும் நீ பாட்டுக்கு உன்னோட வேலைய பாத்துக்கிட்டே இரு… அவங்களே டயர்டாகி அப்புறம் வாய மூடிட்டு இருந்துக்குவாங்க…”

 

    “ஆனா அம்மா நான் என்ன செஞ்சாலும் திட்றாங்க அண்ணா…”

 

   “உனக்கே தெரியுதுல்ல… நீ என்ன செஞ்சாலும் திட்றாங்கன்னு அப்புறம் ஏன் அதுக்கு போய் வருத்தப்படுற?”

 

     “கஷ்டமா இருக்குண்ணா… எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது? நான் பொண்ணா பொறந்தத தவிர என்ன தப்பு செஞ்சேண்ணா…”

 

     “இங்க பாரும்மா, வாழ்க்கையில கஷ்டம் வர்றது சகஜம், உனக்கு மட்டும்னு எதுவும் கிடையாது… நீ பொண்ணுன்றதுனாலயோ நான் பையன்றதனாலயோ எந்த வித்தியாசமும் இல்லை… உனக்குள் எப்படி ஒரு உயிர் இருக்குதோ, அதே மாதிரி தான் எனக்குள்ளேயும் உயிர் இருக்கு. உனக்கு எப்படி அடிபட்டா வலிக்குமோ அதே மாதிரிதான் எனக்கும் அடிபட்டா வலிக்கும், என்ன… போற வர்ற இடத்துல எல்லாம் என்னை விட நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கணும் அவ்வளவுதான், புரியுதா? இனிமே அம்மா உன்ன திட்டும் போது அழுகை வராம இருக்கிறதுக்கு ஒரு ட்ரிக்ஸ் சொல்லி தரவா?”

 

    “ம்ம்….”

 

    “எனக்கு டாம் அண்ட் ஜெர்ரினா ரொம்ப புடிக்கும் இயல், அம்மா திட்டும் போதெல்லாம் அம்மாவ டாம் மாதிரி நெனச்சுக்குவேன். அவங்க பேசுற வாய்ஸ்ஸ கட் பண்ணிட்டு டாம் அண்ட் ஜெர்ரி யோட மியூசிக்க நானே மனசுக்குள்ள ப்ளே பண்ணி விடுவேன், செம காமெடியா இருக்கும் தெரியுமா… நெக்ஸ்ட் டைம் நீயும் இத ட்ரை பண்ணி பாரு… பட் சத்தமா மட்டும் சிரிச்சுடாதம்மா, நம்ம ரெண்டு பேர் முதுகுலயும் டின்னு கட்டிடுவாங்க…” என்றதும் அவள் சிரித்துவிட, இருள் மறைந்து தோன்றிய புத்தம் புது காலை பொழுதாய் அவள் முகம் பிரகாசமானது… அதன் பிறகு எந்த பிரச்சனை வந்தாலும் அவள் இரண்டு நிமிடத்திற்கு மேல் வருத்தப்படுவது இல்லை, அதையும் மீறி வருந்தினாளானால் ரவி அம்மாவிற்கு தெரியாமல் சின்ன சின்ன சாக்லேட், ஐஸ்கிரீம் என்று வாங்கி தந்து அவளை தேற்றினான். நாளாக நாளாக அவளும் பக்குவமடைந்து புரிந்து கொண்டாள்.

 

    “அப்போ நான் பிளஸ் டூ படிச்சுகிட்டு இருந்தேன், அம்மா கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம நிறைய வேலை கொடுத்து என்ன படிக்க விடாம தொல்ல பண்ணுவாங்க. அதையும் மீறி நான் பிளஸ் டூ ல ஆயிரத்துக்கு மேல மார்க் எடுத்தேன். அண்ணனுக்கு ரொம்ப சந்தோஷம், பக்கத்துல இருக்கிற எல்லா காலேஜ்ஜிலயும் அப்ளிகேஷன் வாங்கி தர ஆரம்பிச்சான். அப்பத்தான் அண்ணனோட பிறந்தநாள் வந்துச்சு, நாங்க குடும்பத்தோட பக்கத்துல இருந்த பெருமாள் கோவிலுக்கு போய் இருந்தோம். கோயில்ல ஒரு வயசான அம்மா பாட்டு பாடிக்கிட்டு இருந்தாங்க அந்த பாட்டு எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது, அதனால கொஞ்ச நேரம் அத முணுமுணுத்துகிட்டே இருந்தேன்.”

 

   “அத அவங்க கவனச்சு இருப்பாங்க போல என்னை கூப்பிட்டு, ‘நீ நல்ல பாட்டு பாடுற, பாட தெரியுமா’னு கேட்டாங்க. ‘தெரியும்’னு சொன்னேன்.”

 

   “எனக்கு ரொம்ப வயசாயிடுச்சிம்மா, இப்பல்லாம் முன்ன மாதிரி பாட முடியல. வேற ஆள் கிடைக்காததுனால நானே வந்து பாடிட்டு இருக்கேன், உன்னோட குரல் ரொம்ப அழகா இருக்குதும்மா… நீ இனிமே இங்கே பாட்டுப் பாட வர்றியா… உனக்கு நல்ல சம்பளம் பேசி தர சொல்றேன்…”

 

   “நான் யோசிக்கிறதுக்கு முன்னாடியே எங்க பெரியம்மா போய் சரின்னு சொல்லிட்டாங்க. என் தயக்கத்தைப் புரிஞ்சுகிட்ட அந்த வயசான அம்மா, ‘தினமும்லாம் வர வேண்டி இருக்காது, வாரத்துல ரெண்டு நாள் மட்டும் வர வேண்டி இருக்கும், அப்புறம் விசேஷ நாள்ல வர வேண்டி இருக்கும்’னு சொன்னாங்க.”

 

    “வீட்டுக்கு வந்ததும் அண்ணனுக்கும் அம்மாவுக்கும் ஒரே சண்டை. என்ன மேல படிக்க வைக்க போறேன்னு அண்ணன் சொன்னான். வீட்டு செலவுக்கே காசு பத்தல இதுல என்னோட படிப்புக்காக கையில இருக்கிற காசையும் தொலச்சுட்டா, பின்னாடி கல்யாணத்துக்கு செலவு பண்ண முடியாதுன்னு அம்மா சொன்னாங்க… அம்மாவ மீறி அண்ணனால எதுவும் செய்ய முடியாது, தவிர அவங்க சொன்னது சரின்னு எனக்கும் தோணுச்சு, அதுனால நான் படிப்ப விட்டுட்டு வேலைக்கு போகலாம்னு முடிவு எடுத்தேன்.”

 

     “வேற வழியில்லாம அண்ணனும் அரை மனசா சரின்னு சொன்னான். வாரத்துக்கு ரெண்டு தடவை கோவிலுக்கு போயி பாட்டு பாட ஆரம்பிச்சேன். ஒரு வாரம் கழிச்சு ரவி அவனோட ஆபீஸ் பக்கத்துல இருக்கற ஒரு லைப்ரரில நாலாயிரம் சம்பளத்துல வேலை இருக்குது சொன்னான். அண்ணன் கூடவே பைக்ல போய்ட்டு வந்தா செலவும் கிடையாது, நான் ரெண்டு வேலையும் பாத்தா மாசம் பத்தாயிரம் வரைக்கும் சம்பளமும் கிடைக்கும்னு அம்மா மனசு கணக்குப் பார்க்க ஆரம்பிச்சது. ‘கோயிலுக்கு காலையிலயும் சாயங்காலமும் மட்டும்தான் போகப்போற, மதியம் சும்மா இருக்கிறதுக்கு பதிலா இந்த வேலையில சேர்ந்துடு’ன்னு அம்மாவும் சொன்னாங்க, நானும் சேர்ந்தேன்… வேலையில சேர்ந்த இரண்டு நாள் கழிச்சி அண்ணன் ஒரு அப்ளிகேஷன் பார்ம் கொண்டு வந்து தந்தான்.”

 

    “ஐயோ.. என்னண்ணா இது? காலேஜ் எல்லாம் எனக்கு வேண்டாம், அம்மாவுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க.”

 

    “தெரியும்டா… ஆனா அதுக்காக உன்ன அப்படியே விட்டுட மாட்டேன். இந்த அப்ளிகேஷன் நீ கரெஸ்ல படிக்கிறதுக்காக வாங்கிட்டு வந்திருக்கேன். புக்ஸ் வாங்கற செலவும் இல்ல, இங்கேயே உனக்கு எல்லா புக்ஸும் கிடைக்கும், அம்மாவோட தொல்லை இல்லாம நீயும் ப்ரீயா படிக்கலாம். இந்த லைப்ரரில இதுக்கு முன்னாடி சதாசிவம் அங்கிள் தான் லைப்ரரியனா இருந்தாரு அவரு ஒரு ரிட்டையர்டு ப்ரபொசர், நாலு பில்டிங் தள்ளிதான் அவரு வீடு இருக்கு. அவர்கிட்ட உன்ன பத்தி ஏற்கனவே நான் சொல்லி இருக்கேன், உனக்கு பாடத்தில ஏதாவது டவுட் வந்தா அவரு கிட்ட போய் கேட்டுக்கோ நான் ஆபீஸ் கெளம்புறேன். சரியா…”

 

      “ம்ம்….”‌ என்றாள் மகிழ்ச்சியோடு.

 

     “அம்மாவுக்கு தெரியாமலேயே ரெண்டு வருஷமா அண்ணன் என்ன படிக்க வச்சு எக்ஸாமும் எழுத வச்சான். அந்த ரெண்டு வருஷமும் நானும் அண்ணனும் சிரிச்சு பேசினாலே அம்மாவுக்கு பொறுக்காது, என்னை எப்படிடா அழ வைக்கலாம்னு யோசிப்பாங்க போல… அவங்க பண்றது எல்லாமே அப்படித்தான் இருக்கும். என்னோட பெர்த் டேக்கு  அண்ணன் ஆசை ஆசையா எனக்கு ஒரு சேரி வாங்கி தந்தான். அதுதான் என்னோட பர்ஸ்ட் சேரி, எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா அம்மா அவங்களுக்கு வேணும்னு அத எடுத்துக்கிட்டாங்க, அன்னிக்கி அண்ணன் அம்மாட்ட திருப்பித் தரச் சொல்லி எவ்ளோ கோவமா சண்ட போட்டுக்கிட்டு இருந்தான் தெரியுமா, கடைசி வரைக்கும் தரவே மாட்டேன்னுட்டாங்க. அது கூட பரவாயில்ல, இன்னிக்கு என்னால கோயிலுக்கு போக முடியாது, முடியாத நாள்னு சொன்னாலும் கேட்க மாட்டாங்க… ‘கோயில் வாசல்ல பூ, தேங்காய், மாலை விக்கிற பொம்பளைங்க, கோயில கூட்டி பெருக்குறவ எல்லாம் இது மாதிரி நாளு பார்த்து கிட்டா இருக்காங்க. நம்ம வயித்து பசிக்கு நாமதான் கஷ்டப்படணும்’னு, கட்டாயப்படுத்தி என்ன அனுப்புவாங்க. என்னால அவங்ககிட்ட பேசி ஜெயிக்கவும் முடியாது, அண்ணன்கிட்ட இதையெல்லாம் சொல்லவும் முடியாது…”

 

    “எங்க அம்மா உயிரோடு இருந்த வரைக்கும் முஸ்லிம் சம்பிரதாயங்களை விட, இந்து சாஸ்திர சம்பிரதாயங்களை ரொம்ப பாலோ பண்ணினாங்க, என்னையும் பண்ண வச்சாங்க. என்னைக்காவது ஒருநாள் அப்பாவோட குடும்பம் எங்கள தேடி வந்து ஏத்துக்கும்னு நம்புனாங்க. அன்னைக்கு எனக்கோ அப்பாவுக்கோ அவங்க முன்னாடி, எந்த விஷயத்திலயும் தலைக்குனிவு வந்திடக் கூடாதுன்னுதான் அவ்ளோ கஷ்டப்பட்டாங்க. வீட்டுக்கு தூரமான நாள்ல எங்கம்மா கிச்சனுக்குள்ள கூட போக மாட்டாங்க, என்னையும் போகாதனு சொல்லுவாங்க. ஹால்லயே ஒரு சின்ன அடுப்பு வச்சு சமையல் பண்ணுவாங்க. அப்படி வளர்ந்த என்ன கோயிலுக்குள் போக சொன்னா… என்னால முடியுமா… மனசு உறுத்தலோட கோயிலுக்குள்ள நுழையும் போதெல்லாம், ‘ஆண்டவா எந்த கஷ்டமாயிருந்தாலும் எனக்கே குடுத்துடு, எங்க அண்ணன் நல்லா இருக்கனும்’னு வேண்டிக்குவேன்.”

 

    “ஆனா எல்லாமே வீணா போச்சு… நான் கரெஸ்ல படிக்கிறது அம்மாவுக்கு எப்படியோ தெரிஞ்சுடுச்சு. அதனால அவசர அவசரமா ஒரு கூலி வேல பாக்குறவன் கூட எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணினாங்க.

கல்யாண செலவுக்கு பணம் வேணும்னு மாப்பிள்ளை வீட்டிலேயே காசு வாங்கி இருக்காங்க… அந்த விஷயம் அண்ணனுக்கு தெரிஞ்சதும், அந்த மாப்பிள்ளையோட வீட்டுக்கு போய் கல்யாணத்தை நிறுத்த சொல்லி சண்டை போட்டான். பணம் கொடுத்ததால அவங்க கல்யாணம் நடந்தே ஆகனும்னு சொல்லிட்டாங்க… ‘வயசு பொண்ணுக்கு துணை வேணும்னு தான் இத்தனை நாளா நீங்க செஞ்சதெல்லாம் சகிச்சிகிட்டேன். ஆனா இனிமே அவ இங்க இருக்குறதே பாதுகாப்பில்ல, கூடிய சீக்கிரமே அவள கூட்டிட்டு நான் இந்த வீட்டை விட்டு போயிடுறேன். நீங்க இந்த பணத்தை எல்லாம் வச்சுகிட்டு சந்தோசமா இருங்க…’ன்னு அம்மாவை பயங்கரமா திட்டினான். என்ன தனியா கூட்டிட்டு போயி ஒரு பேங்க் பாஸ்புக்கையும் ஏடிஎம் கார்டையும் தந்து, ‘உன்னோட சம்பளம் நாலாயிரம் இல்ல ஆறாயிரம், மிச்ச பணத்தை தனியா அக்கவுண்ட்ல போட்டு சேத்து வச்சிருக்கேன். இது என்னோட ஏடிஎம் கார்டு இதுலயும் கொஞ்சம் பணம் இருக்கு. அம்மாவுக்கு தெரியாம இத ஜாக்கிரதையா வச்சுக்கோ நான் போய் என்னோட வேலைய ரிசைன் பண்ணிட்டு வந்துடறேன்’ன்னு சொல்லிட்டு போனான், ஆனா வரவே இல்ல. ஆக்ஸிடென்ட்டாகி ஹாஸ்பிடல்ல இருக்கான்ற நியூஸ்தான் வந்துச்சு…”

 

     “அவனோட ஆக்ஸிடென்ட்க்கும் என்னோட ராசி தான் காரணம்னு அம்மா அவன பாக்கவே என்னை விடல. எப்படி இருக்கான்? எங்க இருக்கான்? அவனுக்கு என்ன ஆச்சு, எதுவுமே எனக்கு சொல்ல மாட்டேனுட்டாங்க. திடீர்னு ஒருநாள் காலைல அம்மா வந்து, ஒரு பட்டு புடவையை எடுத்து தந்து, ‘ இத கட்டிட்டு வா கோயிலுக்கு போனும்’னு சொன்னாங்க. ஏதாவது நேர்த்திகடனா இருக்கும், அது முடிச்சதுமே  என்னை அண்ணனைப் பாக்க கூட்டிட்டு போவாங்கன்னு நினைச்சுதான் நம்பி போனேன். திடீர்னு கல்யாணம்னு சொல்லிட்டாங்க…”

 

    “மத்த பொண்ணுங்கள விட கம்மியாதான் என் மனசுக்குள்ள கல்யாணத்த பத்தின ஆசை இருந்தது. எனக்கு ஹஸ்பெண்ட்டா வர்றவன் பெரிய ஆளா இருக்க வேணாம், என்னை எனக்காக மட்டுமே விரும்பி ஏத்துக்குற ஒருத்தன், என் அண்ணன மாதிரி ஒரு சாதாரண வேலை, கைக்கடக்கமான சம்பளம், சிம்பிளா ஒரு கல்யாணம், சின்னதா ஒரு வீடு, அத்தை மாமா நாங்க, எங்களோட குழந்தைன்னு இருக்குற ஒரு குடும்பம், அளவான பணம் அளவில்லாத அன்பு… அதுதான் நான் எதிர்பார்த்தது.  என்னோட வாழ்க்கைக்கு பிடிமானமா, ஒரு லட்சியமா, ஒரே ஒரு ஆசையா இருந்தது என்னோட கல்யாண ஆசை மட்டும்தான். ஆனா எனக்கு கெடச்சது என்ன தெரியுமா? அந்த கல்யாணத்துக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி தான் கல்யாணத்தை பத்தியே சொன்னாங்க… என் மேல கொஞ்சம் கூட அன்பில்லாத ஒருத்தன், என்னை விலைக்கு வாங்கிட்டு எனக்கு புருஷனா வந்தான்… அன்னிக்கி நான் கட்டியிருந்த அந்த முகூர்த்த புடவை கூட சொந்தமில்லாத எனக்கு இந்த ஊர்ல பாதியவே சொத்தா வச்சிருக்கிறவன் புருஷன்… தாலி கட்டியே முழுசா ஒரு மணி நேரம் கூட ஆகல, என்னையும் என் அண்ணனையும் கொல்ல போறேன்னு என்கிட்டயே சொல்றான், எங்க அண்ணனைக் காப்பாத்துறதுக்கு  என்னால ஒண்ணும் பண்ண முடியல…”

 

     “உனக்கு என்ன வேணும்? உன் வீட்டில பறிகொடுத்த நாலு உயிருக்காக திருப்பி பழி வாங்க நாலு உயிர் வேணும் அவ்ளோதான… நாலு இல்ல நாப்பது உயிர என்னோட வயித்துல இருந்து நான் பெத்து தர்ரேன், உன்னோட இஷ்டப்படி கொன்னுக்கோ… அதுக்கு பதிலா ஒரே ஒரு உயிரை மட்டும் எனக்கு திருப்பி குடுத்துடு… ரவிய விட்ருடா….”

 

வெட்டப்படுவோமெனத்

தெரிந்தும்,

வெற்று பார்வை

பார்க்கும் ஆட்டைப் போல்,

இல்லாத உறவுக்காய்

உன்னிடம் சிறையாகி

கிடக்கிறேன் நான்……

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: