Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 21

ருண் இதுவரை ஒரு முடிவு எடுத்து அது தவறாய் போனதாக சரித்திரமே இல்லை. படிப்பிலும் வேலையிலும் குடும்பத்திலும் தலை சிறந்தவனாக இருந்து வந்தவனை, முதன் முறையாக யோசிக்க முடியாத அளவிற்கு குழப்பி விட்டவள் இயல் மட்டும்தான். அவள் விஷயத்தில் அவன் என்ன செய்தாலும் எப்படி செய்தாலும், அவனுக்கு அவள் நேர் எதிர் திசையில் இருப்பாள். இப்போதும் அப்படித்தான், அவளுக்கும் அவளின் அம்மாவிற்கும் இணங்கவில்லை என்று நினைத்தானே தவிர, இணைப்பே இல்லை என்று நினைக்கவில்லை. எங்கிருந்து இங்கே வந்தாள்? ஏன் அவர்களுக்காக உயிரையே கொடுக்குமளவு துணிந்தாள்? நானே அவளிடம் மயங்கி அவளை ஏற்க துடிப்பதை அறிந்த பின்னும் துளி அன்பில்லாத அவர்களுக்காக ஏன் இத்தனை துன்பம் தாங்குகிறாள்? யாரடி நீ என் சகியே??? என விடையில்லா கேள்விகளுடன் பதில் தேடி அவளிடம் வந்தால், அங்கே அவளையே தேடும் படி வைத்து சென்றுவிட்டாள்.

 

     முதல் முறையாக ‘அவளை நான் இழந்து விடுவேனோ!’ என்ற பயம் வருண் மனதை ஆக்கிரமிக்க தொடங்கியது.

 

   வந்த கோபத்தை எல்லாம் அந்த அறையின் மூலையில் செய்வதறியாது நின்றிருந்த சிஸ்டரிடம் காமித்தான், “நர்ஸ்… உங்க கிட்ட பத்திரமா பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டு தான அவள விட்டு போனேன். இப்டி அசால்ட்டா அவ எங்க போனான்னு தெரியலன்னு சொல்றீங்க, இதான் நீங்க பேஷன்ட்ட பாத்துக்கிற லட்சணமா?”

 

    “சார் அந்த பொண்ணு நான் எவ்ளோ சொன்னாலும் கேக்காம எழுந்து போயிடுச்சு சார். மீறி கைய புடிச்சு இழுத்து இருக்க வச்சேன், அது போலீஸ்க்கு போவேன்னு என்னை மிரட்டுது சார், டாக்டர் வேற வீட்டுக்கு போயிட்டாங்க, என்னால தனியா என்ன பண்ண முடியும் சொல்லுங்க?” என்றாள் நடுங்கி கொண்டே…

 

    “ம்ச்ச்… உங்களால ஒரு பேஷன்ட்ட ஒழுங்கா பாத்துக்க முடியலயா? மிட் நைட்ல வெளிய போக விட்டு இருக்கீங்க, அவளுக்கு எதாவது ஆச்சுன்னா அப்புறம் இருக்கு”

 

    “சொல்ல சொல்ல கேக்காம அவங்க போனா, நான் என்ன செய்றது?” என்று அழும் தோரணையில் நர்ஸ் நிற்க, வருண் மனது, ‘அதுசரி, நான் சொல்றதையே அவ கேக்க மாட்டா, பாவம் இந்த நர்ஸ் சொல்றதையா கேட்டுருக்கப்போறா? இங்க நின்னு பேசிட்டு இருக்குறத விட போய் தேடுற வழிய பாக்கலாம்” என்று உத்தரவிட்டது.

 

   ஒரு கையால் காரை ஓட்டி கொண்டு, இன்னொரு கையால் வீட்டிற்கு போன் போட்டான், நடு சாமமாதலால் யாரும் எடுக்கவில்லை. யாதவ் போன் இன்னும் சுவிட்ச் ஆப், ‘அவளை பற்றி தகவல் கேட்பதற்கு வேறு ஆளே இல்லை, இனி என்ன செய்ய?’ என்று புரியாமல் காரை ஓட்டி கொண்டு வந்தான். வருணுக்கு அவளுடனனான எதிர்கால கற்பனைகள் மட்டுமே முக்கியமாய் இருந்ததால், ரவியுனான அவளின் இறந்த காலம் பற்றி இதுவரை தெரிந்து கொள்ள முற்படவில்லை. இன்று அவளின் கடந்த காலம் பற்றி துளியேனும் தெரிந்துவிடாதா என்று தவிக்கிறான், காலம் அவன் கைகளை கட்டி வைத்து சிரிக்கிறது.

 

     இருளின் போர்வையை கிழித்து கொண்டு அவன் கார் சாலையில் ஊர்ந்திட, அவனின் கண்களோ சாலையின் இரு‌புறமும் அவளை காண மாட்டேனா என தவியாய் தவித்த படி தேடிக் கொண்டு வந்தது. அவன் செய்த புண்ணியமோ, இல்லை அவன் முன்னோர் செய்த புண்ணியமோ அவள் அந்த பாதையில் தான் நடந்து போய் கொண்டு இருந்தாள். அவளை பார்த்ததுமே அவளருகினில் காரை கொண்டு போய் நிறுத்தி,

 

    “இயல்… இயல்… கார்ல ஏறு” என்று கத்தினான், அவளோ அவனின் காரை விட்டு தள்ளி நடந்தாள்.

 

    “இயல்… மிட் நைட்ல வெளிய நடக்குறது சேப் இல்லடி, ப்ளீஸ் கார்ல ஏறு” கெஞ்சினான், இன்னும் வேகமாக நடந்தாள்.

 

    “சொல்லிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்க, வா வந்து கார்ல ஏறு” என காரை விட்டு இறங்கி வந்து அவளின் கை பற்றி நிறுத்தியவனின் கையை தட்டி விட்டு துள்ளி துடித்தாள். வருண் காரணம் புரியாமல் அவள் கையை பார்த்திட, அதில் டிரிப்ஸ் ஏறிய‌ இடத்திலிருந்து அவன் பிடித்த வேகத்தால் ரத்தம் கசிந்திருந்தது. அவசர அவசரமாக தன் கர்ச்சீப்பை எடுத்து அதை சுற்றி கட்டி கொண்டே, “சாரி இயல், தெரியாம கைய இறுக்கி புடிச்சிட்டேன். ரொம்ப வலிக்குதாடா?” என்றதற்கு பதிலே இல்லை.

 

   ‘இவள் இத்தனை நேரம் அமைதியாய் இருக்க மாட்டாள், வார்த்தைக்கு வார்த்தை பதில் தந்திருப்பாளே!’ என்று அவனுக்கு தாமதமாக புரிந்திட, அவளை கூர்ந்து கவனித்தான். தளர்ந்த நடை, மங்கிய பார்வை, குற்றுயிராய் துடிக்கும் இதயம் என ஓய்ந்து போய் தெரிந்தாள்.

 

“இயல்… என்ன செய்யுதுடா? பேசினா வாய் வலிக்குதா?” என்றான் அனுசரனையாய். பதிலில்லை… அதே நேரம் மலை மேலிருந்து சில காட்டு மாடுகள் அவர்களின் அருகில் இறங்கி வர தொடங்கிட, “இயல் பைசன்ஸ் கிட்ட வருது, இதுக்கு மேல இங்க நின்னு அடம்புடிச்சுட்டு இருக்காதடி. எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசி தீத்துக்கலாம்” என்று கெஞ்சி பார்த்தான்.

 

   அவள் வலியால் வழியும் தன் கண்ணீரை காட்ட விருப்பமின்றி திரும்பி நின்றதை அவன் கோபமென அர்த்தம் கொண்டு, “நீயெல்லாம் வாயால பேசுனா சரிப்பட்டு வர்ற ஆளா?” என்றபடி, அவள் திமிற திமிற தூக்கி கொண்டு போய் காருக்குள் போட்டு, காரை கிளப்பினான். வீட்டிற்கு வந்த பிறகும் அவள் இறங்க மறுத்து காருக்கு உள்ளேயே இருக்க, அவனே அவளை பெட்ரூம் வரை தூக்கிக்கொண்டு போய் பெட்டில் போட்டான். ஓட முடியாமல் இயலை தன் மார்போடு அழுத்தி பிடித்து கையோடு கொண்டு வந்திருந்த ஆயின்மென்ட்டை அவள் கன்னத்தில் வலிக்காமல் தடவினான், தடவி முடித்த பிறகும் அவள் எழாது மார்பிலேயே படுத்திருக்க அவனுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத நிம்மதி. காமம் கொண்டு அணைத்த நாளை விட, காதல் கொண்டு அணைக்கையில் அவன் மனது லேசானதாக மாறி மிதந்திட, மெதுவாக தட்டி கொடுத்து தலையை வருடிவிட்டான். அந்த வருடலால் ஏனோ அவளின் அழுகை அதிகமானது.

 

    குலுங்கி குலுங்கி அழுதபடி கட்டுப்பாடின்றி அவள் கொட்டும் கண்ணீரா? தன்னால் உண்டான அவளின் காயங்களா? ரவியின் உறவில்லை என்ற உண்மையா? அவளை தேற்ற சொல்லி தன்னை உந்துவது எதுவென பிரித்தறிய தெரியாமல், ஆழ் மனதிலிருந்து,  “இயல் சாரிடா…” என்றான். அழுவதை தவிர அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை… இயலின் கோபத்தை தாங்கிய வருணால் அவளின் மௌனத்தை தாங்க முடியாமல் போக, முதன்முறையா அவளிடம் இறைஞ்சினான்.

 

   “இயல்… தெரியாம அடிச்சுட்டேன்… இனிமே இப்டி பண்ணவே மாட்டேன்டா, ப்ளீஸ்… அழாதடா… சாரி”

 

   இயல் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள், உண்மையாகவே வருந்தித்தான் மன்னிப்பு கேட்டிருந்தான். கண்ணீரை துடைத்து விட்டு தன் இடத்தில் போய் படுத்து கொள்ள, வருண் பெட்டில் படுக்க வைக்கிறேன் என்ற பெயரில் அதற்கு மேல் அவளை அழ வைக்க விரும்பாமல், அசந்து உறங்குபவளின் அருகிலேயே அமர்ந்து கொண்டான். உறக்கத்திலும் மெலிதாய் கண்ணீர் வழிவதை கண்டு அவனுக்கு மனது பாரமானது, இனி நித்திரை வருவதேது? உறக்கமில்லாத அந்த இரவு அவனுக்கு காதலின் வீரியத்தை காட்டி சென்றது. அவளின் ஒரு நாள் பிரிவும், ஒரு நிமிட மௌனமும், ஒரு துளி கண்ணீரும் சேர்ந்து வருணுக்கு நரகத்தை காட்டியது.

 

தாமதமாக உறங்கியதால், காலையில் நேரம் தவறி எழுந்தான். கண் விழித்தபோது இயலை அங்கே காணவில்லை, முகத்தை கூட கழுவாமல் அவளை தேடி கீழே ஓடி வந்தான், கிச்சனில் இருந்தாள். ரத்த கரையோடு தலையில் போட்டிருந்த கட்டு அப்படியே இருக்க, கன்னத்தில் வீக்கம் ஓரளவு குறைந்திருந்தது.

 

    ஏற்கனவே நிலைமையை உணர்ந்திருந்த வேலைக்காரர்கள் இருவருக்கும் தனிமை தந்து வெளியேறிவிட வருண், “ஏன்டி இப்டி பண்ணிட்டு இருக்க? காயமெல்லாம் பெருசா இருக்குல்ல, இன்னிக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுக்க கூடாதா?”

   

   “……”

 

    “இயல்… இயல்…”

 

    “……”

 

    “எக்கேடோ கெட்டு போ…” என்று திரும்பி சென்றவன், போன வேகத்திலேயே மீண்டும் வந்தான்.

 

    “இயல்… ப்ளீஸ்… நீ கஷ்ட படுறத பாக்கும்போது எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு… கொஞ்சம் ரெஸ்ட் எடுடா” என்று கெஞ்சினான்.

 

    “……” பாத்திரங்களை விளக்குவதிலேயே அவள் கவனம் முழுவதும் இருக்க, வேறு வழியின்றி அவனே பெட்ரூமுக்கு தூக்கி சென்றான். 

 

    “இங்க பாரு, இன்னிக்கு ஒரு நாள் மட்டும் நீ கண்டிப்பா ரெஸ்ட் எடுத்தே ஆகனும். ஒண்ணு நீயே ரூமுக்குள்ள அமைதியா உக்காந்து ரெஸ்ட் எடு, இல்லன்னா இந்த ரூம விட்டு நீ வெளியில போக முடியாத மாதிரி நானே எக்குத்தப்பா எதாவது செஞ்சிடுவேன்.”

 

   அவள் வழக்கமான மிரட்டலாய் நினைத்து வெளியேற முயல, வருண் அவளின் பின்னாலிருந்து இடை பற்றி இறுக்கி அணைத்து கொண்டு, “சுடிதாரோட பேன்ட் இல்லாம உன்னால வெளியில போக முடியுமா இயல்?” என்று தன் கைகளை ஆடைகளை தாண்டி உள் நுழைந்து வயிற்றை வருடவிட்டான்.

 

    “இப்ப என்ன சொல்ற? ஒழுங்கா ரூமுக்குள்ளே இருக்கியா?”

 

   வேறு வழியின்றி கண்களில் நீர் கோர்க்க சரி என்று தலையாட்டினாள். வருண் கீழே வந்து சாந்தியிடம் சூடாக கொஞ்சம் சூப் கொண்டு வந்து வர சொல்லிவிட்டு யாதவிற்கு போன் போட்டான். இம்முறை  யாதவ் போனை எடுத்ததும்,

 

   “யாதவ், எனக்கு உடனே இயல் பத்தி உனக்கு தெரிஞ்சதெல்லாம் சொல்லு”

 

    “இயல எனக்கு பொறந்ததுல இருந்தே தெரியும், போரூர்ல நானும் அவளும் பக்கத்து பக்கத்து வீட்டில தான் குடி இருந்தோம். இயலோட அப்பா பேரு ராஜேந்திரன், அம்மா பேரு பர்வீன் சுல்தானா அவங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜ் பண்ணி கிட்டதால அவங்களோட ஃபேமிலி அவங்கள சேர்த்துக்கலயாம். ராஜேந்திரன் அங்கிள் டிராவல்ஸ் ஏஜென்சி வச்சு நடத்திக்கிட்டு இருந்தாரு. அவளுக்கு பத்து வயசு ஆகும்போது அவங்க வேற வீடு வாங்கி குடி போயிட்டாங்க. அதுக்கப்புறம் அவங்க கூட எங்களுக்கு டச் இல்லாம போயிடுச்சு… இப்பகூட அவ என்கிட்ட அவள பத்தியும், அவளோட குடும்பத்தைப் பத்தியும் எதுவுமே சொல்லல… நானே உன்கிட்ட தான் அதப்பத்தி கேட்கணுமுன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.”

 

    இருந்த ஒரே வழியும் முட்டுக்கட்டை ஆகிட, அவளைப் பற்றி தெரிந்து கொள்ள வழியின்றி வருண் நிலை கொள்ளாமல் தவித்தான்.

 

    சாந்தி, “ஐயா சூப் கொண்டு வந்துட்டேன்.”

 

    “வச்சிட்டு போ சாந்தி…”

 

    அவள் போனதும், “இயல் நீயே சமத்தா சாப்பிடுறியா இல்ல நானே ஊட்டிவிடவா” நிச்சயமா சாப்பிட மாட்டாள் என்று தெரிந்ததால் மிரட்டலாகவே வந்தது அவன் வார்த்தைகள்.

 

    “……….”

 

     “உனக்கு ஃபைவ் மினிட்ஸ் டைம் தரேன் அதுக்குள்ள நீயே எடுத்து குடிக்க ஆரம்பிச்சுடு… “

 

   “………”

 

    “என்னதான்டி பிரச்சன உனக்கு”

 

    நீதான்… என்பதைப்போல ஒரு பார்வை பார்த்தாள். சில நிமிடங்கள் அவளுடன் போராடி பார்த்தவன், இறுதியில் தானே தோல்வியை ஒப்பு கொண்டு சூப்பை கிச்சனுக்கு திரும்ப எடுத்து போனான். சமையலில் மூழ்கி இருந்த சாந்தியிடம் வருண் தயங்கி தயங்கி, “சாந்தி… இயலுக்கு என்ன சாப்பாடு ரொம்ப பிடிக்கும்?”

 

     “அந்த பொண்ணுக்கு புடிச்சது புடிக்காததுன்னு எதுவும் இல்லங்கய்யா, என்ன இருக்கோ அத சாப்பிட்டு போயிடும். ஆனா அன்னிக்கு ஒரு நாள் ஷாக் அடிச்சு காய்ச்சல் வந்ததுல, அன்னில இருந்து அவ தோச மட்டும் தான் சாப்பிடுறா. வெளியில இருந்து அரிசி, பருப்பு வாங்கிட்டு வந்து வச்சிருக்கா, ரெண்டு நாளைக்கு ஒரு தடவ மிக்ஸில போட்டு மாவு ஆட்டிக்கிறா, ஒரு நேரத்துக்கு ஒரு தோச தான் போட்டு சாப்பிடுறா, தொட்டுக்க பொடி கூட வாங்காது, அதுக்கு மேல காபியோ டீயோ கூட குடிக்கிறதில்ல…”

 

    “இத ஏன் இவ்ளோ நாளா எங்கிட்ட சொல்லாம இருந்த?”

 

     “நீங்கதான் இயல இந்த வீட்டு சாப்பாட்ட சாப்பிட கூடாதுன்னு சொன்னதா அவ சொன்னா… அதான் உங்ககிட்ட யாரும் இத பத்தி பேசல”

 

    வருணுக்கு அன்று அவன் பேசிய வார்த்தைகள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது, ‘என்னோட சாப்பாட்ட இத்தன நாள் சாப்ட்டேல அதுக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோன்னு சொன்னதும், அவள் செத்தாலும் இனிமே உங்க சாப்பாட்ட சாப்பிட மாட்டேன்னு சொன்னா…’ சாப்பிடாம எங்க போயிடுவான்னு நினைச்சுத்தான் அசால்ட்டா விட்டான், ஆனால் அவளோ கிடைச்ச கேப்ல எல்லாம் கெடா வெட்றா…

 

   பிரிட்ஜில் அவள் மாவு வைத்திருக்கும் பாத்திரத்தை எடுத்து பார்த்தான், அது கை அளவே இருக்கும் ஒரு கிண்ணம். இதில் மாவை வைத்து இரண்டு நாள் சாப்பிடுவாளா? என்று அலுத்துபோனான்.  அறைக்கு வந்து பார்த்தால் அவள் இன்னும் அழுது கொண்டு இருந்தாள். இந்த நேரத்தில் போய், எந்தக் கேள்வியும் கேட்க அவனுக்கு மனம் வரவில்லை. பேசாமல் கிச்சனுக்கு போய் அவளின் மாவு கிண்ணத்தை எடுத்து, சாந்தியிடம் சொல்லி ஒரு தோசை சுட்டு வாங்கி வந்து தந்தான். எந்த சத்தமும் இன்றி அதை சாப்பிட்டு முடித்தாள். அடுத்த இரண்டு நாட்களும் பேக்டரிக்கு செல்லாமல் அவள் அருகிலேயே இருந்து பார்த்து கொண்டான். கன்னத்தில் வீக்கம் முற்றிலும் குறைந்து விட, தலை காயமும் ஓரளவு குணமாகி இருந்தது. இயலிடம் கேட்க வேண்டிய கேள்விகள் ஆயிரம் இருந்தது, ஆனால் அவளோ வருணுடன் பேசவே விரும்பவில்லை, முடியும் அளவு அவனை விட்டு விலகியே இருந்தாள். வருண் அவளைப் பற்றி வெளியே விசாரிக்க சென்ற இடமெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக பதில் மட்டுமே கிடைத்தது, ரவியும் கோமாவில் இருந்து இன்னும் கண் விழிக்க வில்லை, எத்தனை மிரட்டியும் கோகிலாவும் வாயை திறந்து எதுவும் சொல்வதாயில்லை.

 

   மூன்றாம் நாள் மாலை தருண் வந்துவிட இயல் அவனை வாரி அணைத்துக் கொண்டாள்.

 

     பிரபாகரன், “என்னம்மா தலையில இவ்ளோ பெரிய காயமா இருக்கு?”

 

    “கோயிலுக்குப் போனப்போ படிக்கட்டுல வழுக்கி விழுந்திட்டேன் சார்”

 

   லதா, “பாத்து இருந்துக்கோமா, காயம் ரொம்ப பெருசா இருக்கு” என பிரபாகரன் மனைவி லதாவும் அவளிடம் கொஞ்சம் அக்கறையாக பேசிட, அங்கே ஒரு ஜோடி கண்கள் மட்டும் இயலை கோபமாக முறைத்துக் கொண்டிருந்தது.

 

    அன்று இரவு தருணுக்கு கதை சொல்லி உறங்க வைத்து விட்டு இயல் கீழிறங்கி படுத்தாள். நள்ளிரவில் விழித்தவளுக்கு கட்டிலும் அல்லாமல் தரையும் அல்லாமல் வேறு ஏதோ ஒரு இடத்தில் படுத்திருப்பது போல் இருந்தது. எழுந்திரிக்க முயன்றவளை இரண்டு கரங்கள் இறுக்கமாக இழுத்து அணைத்தது.

 

   வருண் அவனுடைய மார்பில் தன்னை படுக்க வைத்திருப்பதை உணர்ந்ததும் இயல், “என்ன பண்றீங்க நீங்க?” என்று பதறி எழ முயன்றாள்.

 

   அவளை எழ முடியாதபடி பிடித்துக் கொண்டு, “கத்தாதடி தருண் முழிச்சிடப் போறான், நான் உன்ன ஒன்னும் பண்ணல”

 

   “ப்ளீஸ் விடுங்க நான் கீழ போறேன்”

 

   “உங்கிட்ட ஒன்னு கேட்கணும் இயல்…”

 

   “என்ன?”

 

   “நீ யாரு? நீ எப்படி இங்க வந்த? உன்னோட அம்மா அப்பாக்கு என்ன ஆச்சு?”

 

    “உங்களுக்கு எப்படி அதெல்லாம் தெரிஞ்சது?”

 

   “யாதவ் சொன்னான், ஆனா அவனுக்கு முழுசா தெரியல”

 

    “அது என்னோட பர்சனல். உங்ககிட்ட நான் எதுக்கு அதெல்லாம் சொல்லணும்”

 

   “சொன்னா ரவிய பாக்க கூட்டிட்டு போறேன். இப்பல்லாம் அவனுக்கு அடிக்கடி கான்ஷியஸ் வந்துகிட்டே இருக்கு, ஒவ்வொரு தடவையும் உன்ன பாக்கணும்னு சொல்லி கத்தி கலாட்டா பண்ணிட்டு இருக்கான்”

 

    ஒவ்வொன்றுக்கும் பேரம் பேசும் அவனை பார்த்து இயலுக்கு ஆயாசமாக இருந்தது. ரவியின் பாசத்தை கண்டு அவள் வடித்த கண்ணீர் துளிகள், வருணின் சட்டையை தாண்டி மார்பை தொட்டதும், “சாரி இயல், நான் நல்லா தூங்கி ரெண்டு நாளாச்சு தெரியுமா… நான் எவ்ளோ ட்ரை பண்ணாலும் யாருக்கும் உன்ன பத்தி எதுவுமே தெரியலடி, அதான் உன்கிட்டயே கேக்குறேன். ப்ளீஸ் சொல்லுடா…”

 

    உங்களுக்காக இல்ல என்னோட அண்ணன நான் பாக்கணும் அதுக்காக சொல்றேன்.

Advertisements

1 Comment »

  1. i like this story
    inum oru epi extra post panalame
    then adhu ena timing corecta 06.32pm
    dailyum epo post panuvenganu wait pana vendiyadha iruku

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: