Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 20

ன்று காலையில் இருந்தே மூணாறில் வழக்கத்தைவிட பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. எதிரில் வருபவர்கள் கூட தெரியாத அளவிற்கு பாதையெல்லாம் பனி சூழ்ந்து கிடக்க இயல் சற்று தாமதமாகவே எழுந்தாள். பிரபாகரன் குடும்பம் ஒரு வாரம் வெளிநாட்டிற்கு சுற்றுலாவிற்காக தருணை தங்களோடு நேற்று இரவே அழைத்துச் சென்று விட்டார்கள். நாளுக்கு நாள் வருணின் சீண்டல்கள் வேறு அதிகரித்து வரும் நிலையில், வரப்போகும் இந்த ஒரு வாரமும் தன் தன்னம்பிக்கையை தவிர துணைக்கு வேறு ஆள் இல்லை என்பதால் இயல் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நின்றாள்.

 

     அதே நேரம் மூணாறுக்கு சென்னை ஏர்போர்ட்டில் இருந்து யாதவ் கிருஷ்ணா கிளம்பினான். வருணும் யாதவும் கல்லூரி கால நண்பர்கள், முதுகலை படிப்பிற்காக வருண் சென்னை வந்த போது அவர்கள் இருவருக்குமான நட்பு ஆரம்பித்தது. வருணுக்கு இயல்பிலேயே ஆளுமை திறன் அதிகம், யாதவ்க்கு இயல்பிலேயே விளையாட்டு தனம் அதிகம். வருண் படிப்பில் பயங்கர சின்சியர், யாதவ்க்கு வகுப்பறையே ஒரு புதிய விளையாட்டறை. வருணுக்கு வீடே உலகமாய் தோன்றும், யாதவ்க்கோ உலகமே ஒரு விசித்திர வீடாக தோன்றுவதால், அதன் ஒவ்வொரு மூலையையும் சுற்றி பார்க்க ஆசை அதிகம். வருண் நவ நாகரீக ஏக பத்தினி விரதன், யாதவ் பேருக்கேற்ற படி வாழும் கலியுக கிருஷ்ணன். வெவ்வேறு துருவங்கள் விரைவில் ஈர்த்து கொள்வதை போல, வெவ்வேறு குணாதிசயங்களை கொண்ட இருவரும் மற்றவர்களில் இருந்து தனித்து நின்றதால் சில நாட்களிலேயே இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறி விட்டனர். இப்போது நண்பனை சந்திக்க மூன்று நாள் விஜயமாக மூணாறு வந்திருக்கிறான்.

 

   இன்று காலையில் வருண் பேக்டரிக்கு போனதும் இயல் வழக்கம் போல கோவிலுக்கு போய் ரவியின் பெயருக்கு அர்ச்சனை செய்துவிட்டு திரும்பி வருகையில் வீட்டிற்குள் புதிதாய் ஒருவன் அமர்ந்திருந்தான்.

 

     “யாரு சார் நீங்க?”

 

     யாதவ் தன் பார்வையை கூராக்கி இயலின் முகத்தை ஆராய்ச்சியோடு ஆழமாய் பார்த்தான்.

 

     “கேக்குறேன்ல யாரு சார் நீங்க. வருண் சார் இப்ப ஃபேக்டரில இருக்காரு, வீட்டுக்கு வர லேட் ஆகும். நீங்க அவர அவசரமா பாக்கனும்னா ஃபேக்டரிக்கு போலாம்” என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே சாந்தி ஓடிவந்து, “இயல் இவரு அய்யாவோட ஃப்ரெண்ட், ஐயா கூட தங்கிட்டு போக வந்திருக்காரு…” என்றாள்.

 

     “ஓ… சாரி சார். நான் வேலைக்கு புதுசு, இப்போதான் இங்க வேலைக்கு சேர்ந்து இருக்கேன், மன்னிச்சிடுங்க…”என்றவள் கிச்சனுக்குள் சென்றுவிட அந்த புதியவன்  இன்னும் அவள் மேலேயே பார்வையை வைத்திருந்தான். மதியம் வருண் வீட்டிற்கு வந்ததும், தன் நண்பன் யாதவை கண்டு அகம் மகிழ்ந்து போனான்.

 

    “டேய்.. என்னடா சொல்லாம கொள்ளாம திடீர்னு வந்து நிக்கிற?”

 

    “ப்ரெண்டு வீட்டுக்கெல்லாம் எவனாவது சொல்லிட்டாடா வருவான்? அதுவும் செம டூரிஸ்ட் ஸ்பாட்டுல அரண்மன மாதிரி உன் வீடு இருக்கும்போது கெடச்ச சான்ஸ மிஸ் பண்ணுவேனாடா?”

 

    “அப்போ நீ என்ன பாக்க வரல…”

 

    “அத நீ சொல்லாத, என்னம்மோ என்ன மாசாமாசம் பாக்க வந்துட்டியாக்கும்… எம்பிஏ முடிச்ச கையோட என்னயும் மறந்துட்ட சென்னையும் மறந்திட்ட, நீ சென்னை பக்கம் வந்து எத்தன வருஷமாச்சுன்னு கணக்கு பாத்து சொல்லு…” என்று வருணின் கையை பிடித்து முறுக்கினான்.

 

    “சரி விட்றா… விட்றா…”

 

    “நேத்துதான் ஃபாரின்ல இருந்து இன்டியாக்கே திரும்பி வந்தேன் வருண், அப்பா உங்க பேமிலி பத்தி சொன்னாரு… வெரி சாரி…”

 

   தலைகுனிந்து “இட்ஸ் ஓகே டா… நீ இங்க எப்ப வந்த? சாப்டியா?” என பேச்சை மாற்றினான்.

 

    “ம்… எப்பவோ ஆச்சு…”

 

     “இன்னைக்கு வெளியில மிஸ்ட் நிறைய இருக்கு, ஒருநாள் நல்லா ரெஸ்ட் எடு. நாளைக்கு நாம வெளியில சுத்தி பாக்க போகலாம்” என இருவரும் மாடியில் இருக்கும் ஒரு பெட்ரூமுக்கு சென்றனர்.

 

    “உங்க வீட்டில புதுசா ஒரு வேலைக்கார பொண்ணு இருக்குதே அது யாரு?”

 

    வருணுக்கு அவன் யாரை சொல்கிறான் என்று புரிந்தாலும் அவனின் கேள்வி கேட்ட விதத்திலே, இயல் அவளை அவனிடம் அறிமுக படுத்திக்கொண்ட முறை வருத்தம் தர பதில் சொல்லாமல் நின்றான்.

 

    “அந்த பொண்ண நான் எங்கியோ பாத்த மாதிரியே இருக்குடா… அவளுக்கு நேட்டிவ் இந்த ஊருதானா?”

 

    “இல்லடா, நேட்டிவ் மதுரை. ரெண்டு வருஷம் முன்னாடி இந்த ஊருக்கு பேமிலியோட வந்து செட்டில் ஆகிட்டாங்க. அவளுக்கு ஏற்கனவே மேரேஜ் ஆகிடுச்சு, பாக்க அழகா இருக்கான்னு நீ அவகிட்ட போய் உன்னோட பெர்பாமென்ஸ்ஸ காட்ட டிரை பண்ணாத, அசந்த நேரத்துல ஆளையே வெட்டி குழம்பு வச்சிடுவா… ராட்சஷி…”

 

     “ஹா.. ஹா.. அவ அவ்ளோ டெர்ர் பீஸா… பட் நெஜமாவே அவள நான் எங்கியோ பாத்திருக்கேன்டா..”

 

    “இங்க தான இருக்க போற… பொறுமையா உக்காந்து யோசி. நான் போய் சாப்ட்டு வர்றேன்.”

 

    கீழே வந்த வருண் நேராக இயலிடம் போய் நின்று, “அவன்கிட்ட ஏன் வேலைக்காரின்னு சொன்ன?”

 

    “முதல்ல இருந்து அப்டிதான் நான் என்னோட மனசுல நினைச்சுட்டு இருக்கேன். நீங்க மாத்தி மாத்தி முடிவு செஞ்சுக்கிட்டு இருந்தா நான் என்ன பண்றது.”

 

      “நீ இனிமே வேலைக்காரின்னு யாருகிட்டயாவது சொன்ன…. அவ்ளோ தான். யாரு கேட்டாலும் தைரியமா போய் என்னோட வொய்ப்னு சொல்லு….”

 

     “அடுத்த கேள்வி எப்போ கல்யாணம் ஆச்சுன்னு கேப்பாங்க, ஏன் கல்யாணம் செஞ்சீங்கன்னு கேப்பாங்க, எவ்ளோ பணம் குடுத்து வாங்குனாங்கன்னு கேப்பாங்க… நாளைக்கே நான் செத்துட்டா எப்டி செத்தேன்னு கேப்பாங்க… இந்த கேள்விக்கெல்லாம்  நின்னு பொறுமையா பதில் சொல்லிட்டு இருக்கவா? உங்க ப்ரென்ட பாத்தா ரொம்ப நல்லவரா தெரியுது, தேவையில்லாம உங்க பிரென்ட் கிட்ட இதெல்லாம் சொல்லிட்டு இருக்காதீங்க…”

 

     “யாரு… அவன் நல்லவனா? அவன் ஊருக்கு கிளம்பினதும் உனக்கு இருக்குதுடி…” என்றுவிட்டு தன் அறைக்கு சென்றான்.

 

     நள்ளிரவு வரை நண்பர்கள் இருவரும் அரட்டையில் மூழ்கி இருக்க, இயல் தன் வேலையை முடித்து விட்டு கிச்சனிலேயே படுத்து உறங்கி விட்டாள். காலை கண் விழித்த போது பெட்டில் வருண் அருகில் இருப்பதை கண்டு தலையில் அடித்து கொண்டு எழுந்தமர்ந்தவள், “இவனுக்கு அறிவுன்னு ஒண்ண அந்த ஆண்டவன் வைக்கவே இல்லையா? இவனொட பிரென்ட் திடீர்னு இவன பாக்க இந்த ரூமுக்கு வந்தா, எங்கள பத்தி என்ன நினைப்பான்? சொந்த புத்தியும் கிடையாது சொல் புத்தியும் கிடையாது…” என புலம்பிய படி கிச்சனுக்கு ஓடினாள்.

 

     இரண்டாம் நாள் முழுவதும் வருணும் யாதவும் வெளியே சுற்றி கொண்டு இருந்தனர். இருந்தும் அவ்வப்போது யாதவ் இயல் பற்றி பேச மறக்கவில்லை. வருணுக்கும் யாதவ் அளவுக்கு அதிகமாக இயல் பற்றி பேசுவது புரிய உள்ளுக்குள் எரிச்சல் உண்டானது.

 

   இரவு உணவின் போது இயலிடம் யாதவ், “நீ சாப்ட்டியாம்மா?”

 

    “சாப்ட்டேன் சார்”

 

    “கேக்குறேன்னு தப்பா நினைச்சிக்காத இயல்… எனக்கு உன்ன முன்னாடியே பாத்த மாதிரி இருக்கு. நானும் நேத்துல இருந்து யோசிச்சிட்டே இருக்கேன் ஞாபகமே வர மாட்டேங்குது. உனக்கும் என்னை முன்னாடியே பாத்திருக்குற மாதிரி ஏதாச்சும் தோணுச்சா?”

 

     இயல் நன்றாக யோசித்து விட்டு மறுப்பாக தலையசைத்தாள்.

 

    “பாக்க ரொம்ப சின்ன பொண்ணா இருக்க, உனக்கு எப்போ மேரேஜ் ஆச்சு?உன்னோட ஹஸ்பெண்ட் யாரு? இவன்ட்ட எத கேட்டாலும் திருதிருன்னு முழிக்கிறான்” என்று வருணை காட்டினான்.

 

     அவள் வருணை பார்த்தாள், கல்லை முழுங்கி விட்டு அது செமிக்காமல் உருளும் மலை பாம்பினை போல் முகத்தை வைத்திருந்தான். அது அவளுக்கும் பிடிக்கவே யாதவுடன் தன் பேச்சு வார்த்தையை வளர்க்க தொடங்கினாள்.

 

     “எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் ஆகுது சார், என்னோட ஹஸ்பெண்ட் துபாய்ல தான் ரொம்ப வருஷமா வேல பாக்குறாரு. வருஷத்துக்கு ஒரு தடவைதான் இங்கயே வந்திட்டு போவாரு, மேரேஜ்க்கே நாலு நாள் லீவுல வந்திட்டு போனாருன்னா பாத்துக்கங்க. எனக்காக சீக்கிரமே வேற வேலை தேடி சென்னைக்கு வரனும்னு சொல்லி இருக்காரு…” என்றிட அங்கே வருண் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. 

 

    “உன்னோட அம்மா அப்பா எல்லாம் எங்க இருக்காங்க?”

 

     “இங்கதான் பக்கத்து எஸ்டேட்ல வேல பாக்குறாங்க.”

 

    “நீ இங்க தனியாவா இருக்க?”

 

    “ஆமா சார். சென்னைல உங்களுக்கு தெரிஞ்ச இடத்துல எதாவது வேல இருந்தா சொல்லுங்க சார். சீக்கிரமே நாங்க சென்னைக்கு வந்திடுவோம்” அவள் எந்த நேரத்தில் இதை சொன்னாளோ வானுலக தேவதைகள் ‘ததாஸ்தூ’ என்று விட்டன.

 

    “இஸ் இட்… உன்னோட ஹஸ்பெண்ட் பயோ டேட்டா இருந்தா குடு, பாத்து சொல்றேன். இந்தா என்னோட விசிட்டிங் கார்ட்” என்று யாதவ் மாடிக்கு சென்றுவிட, வருண் அவளை முறைத்து கொண்டு அமர்ந்து இருந்தான்.

 

    “ஏன் சார் இப்டி முறைக்கிறீங்க?”

 

    “அந்த நாயே என்ன பாத்து பிட் அடிச்சு எம்பிஏ பாஸ் பண்ணுச்சு, அதுகிட்ட போய் நீ எனக்கு வேலை வாங்கி தர்ற. நல்ல பொண்டாட்டி, நல்ல பிரன்டு எனக்கு வந்து வாச்சிருக்கீங்க…” என்றதும் இயல், “உங்களுக்கு வேல வாங்கி தந்தேன்னு யாரு சொன்னா? நான் என் புருஷனுக்கு வேலை கேட்டேன்” என்றாள்.

 

    வருண் அவள் அருகில் வந்து புருவம் உயர்த்தி, “எல்லாம் சொன்ன நீ, கடைசி வரைக்கும் உன்னோட புருஷன் பேர சொல்லவே இல்லையே ஏன்? படு பயங்கரமான பதிபத்தினியா நீ…” என்றதும் இயல் கையில் கரண்டியை எடுத்து கொண்டு அடிக்க விரட்ட, வருண் நாலுகால் பாய்ச்சலில் மாடிக்கு தப்பி ஓடி விட்டான்.

 

    யாதவ் அன்று மாலையில் ஃப்ளைட் புக் செய்திருந்ததால் தாமதமாகவே எழுந்தான். மதிய நேர லஞ்ச் முடிந்ததும் வருணும் யாதவும் தங்கள் அறையில் டிவி பார்த்து கொண்டிருந்தார்கள். அதில் ‘திருமணம் என்னும் நிக்கா’ படத்தின் பாடல் ஓடிக்கொண்டு இருக்க திடீரென யாதவ், ‘ஞாபகம் வந்திருச்சு’ என்று சொல்லி விட்டு எழுந்து ஓடினான்.

 

     கார்டனில் இருந்த இயலின் அருகில் மூச்சு வாங்க வந்து நின்ற யாதவ், “இயல் நீ யாருன்னு எனக்கு ஞாபகம் வந்திடுச்சு, நீ பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை தான? உங்க அப்பா பேரு ராஜேந்திரன் தான? உன்னோட பத்து வயசு வரைக்கும் போரூரில் தன குடி இருந்தீங்க?” என்றதும் இயல் அதிர்ந்து போய் நின்றாள்.

 

   வருண், யாதவ் கீழே இறங்கியதில் இருந்தே ஜன்னலின் வழியே அவனை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். யாதவ் முதலில் பேச ஆரம்பித்ததும் இயல் அதிர்ச்சி அடைந்ததையும் அதன்பின் அவள் மகிழ்ச்சி அடைந்ததையும் அவன் கவனிக்க தவறவில்லை. யாதவும் இயலும் தொட்டு தொட்டு பேசிய விதம் வருணுக்குள் இருந்த பொறாமை உணர்வை தட்டி எழுப்பியது. தன்னுடன் சகஜமாக பேச தயங்குபவள், அவனுடன் சிரித்து பேசி விளையாடுவதை வருணால் கண்கொண்டு காண முடியவில்லை. மாலை வரை அவள் உடனே இருந்த யாதவ் ப்ளைட்டுக்கு தாமதமானதை உணர்ந்து அவசர அவசரமாக வருணிடம் வந்து, “அவள பத்திரமா பாத்துக்கோ, ஊருக்கு போனதும் நான் போன் பண்றேண்டா…” என்று அரை குறையாய் சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பினான். வழியனுப்ப வாசல்வரை சென்ற இயலுடன் நெடுநேர உரையாடலுக்கு பிறகு அவன் பிரிந்து செல்ல, வருண் கண்கள் சிவக்க நின்றிருந்தான்.

 

    அவன் போனதும் வருண் இயலை தன் அறைக்கு அழைத்து சென்று, “யாதவ்வும் நீயும் கார்டன்ல என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க?” என்றான்.

 

     “சும்மா கொஞ்ச நேரம் பேசினோம் சார்… என்ன பேசினோம்னு எல்லாம் தெரியாது, அப்படியே தெரிஞ்சாலும் அத உங்ககிட்ட சொல்ல முடியாது சார் “

 

    “விளையாடாத இயல்… கீழ நீயும் யாதவும் என்ன பேசிட்டு இருந்தீங்க?”

 

    “ஏன் நான் என்ன பேசினாலும், யாருகூட பேசினாலும், அதை ஏன் தெரிஞ்சுக்க நினைக்கிறீங்க? எனக்கு பெர்சனல் ஸ்பேஸ் கொஞ்சம் குடுக்க மாட்டிங்களா?”

 

    அவள் கைகளை இறுக பற்றி நிறுத்தியவன், “எங்கூட பேச முடியாத பெர்சனல் விஷயம் அப்படி என்னடி அவங்கூட பேச வேண்டியிருக்கு?”

 

    “உங்க கூட பெர்சனலா பேசுற அளவுக்கு உங்களுக்கும் எனக்கும் என்ன உறவு இருக்கு? ஆடு மாட விலைக்கு வாங்கிட்டு வந்த மாதிரிதான என்னையும் இங்க கூட்டிட்டு வந்தீங்க… எத்தன தடவ கெஞ்சி கேட்டிருப்பேன் எங்க அண்ணன விட்ருங்கன்னு, இதுவரைக்கும் ஒரு வார்த்தை பதில் சொல்லி இருக்கீங்களா? உங்க அண்ணனாவது ஒரே நாள்ல செத்துட்டாரு, ஆனால் என்னோட அண்ணன் உங்களால எப்போ சாவாருன்னு தெரியாம, காப்பாத்துற வழியும் புரியாம தவிச்சிட்டு இருக்கேன். நான் இங்க வந்த புதுசுல உங்களால எவ்ளோ கஷ்டப்பட்டேன்… கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் எப்படி நடந்துக்கிட்டீங்க… பொண்ணுன்னு கூட பாக்காம எப்படியெல்லாம் அசிங்கமா பேசுனீங்க… இப்ப மட்டும் திடீர்னு என் மேல பாசம் வந்துடிச்சின்னு சொன்னா எப்படி சார் நம்புவேன்?”

 

    “ஆரம்பத்துல நான் ஏதோ கோவத்துல அப்படி நடந்துகிட்டேன். ஆனால் நீ உங்க அம்மா மாதிரியோ உங்க அண்ணன் மாதிரியோ இல்லாம வித்தியாசமானவளா இருக்கிற… நீ மத்தவங்க கிட்ட காட்டுற அன்பும், தருண பாத்துக்குற விதமும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. எனக்காக இல்லன்னாலும் தருணுக்காக நீ என் கூட சேர்ந்து வாழ கூடாதா?”

 

   “தருண மட்டுமில்ல சாந்தி அக்காவோட குழந்தையும் நான் பாசமா தான் பார்த்துக்கிறேன், அதுக்காக அவங்க  புருஷனும் என்கிட்ட வந்து இதையே கேட்டா ஒத்துக்குவீங்களா?”

 

    “முடிவா கேக்குறேன் யாதவும் நீயும் கார்டன்ல என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க?”

 

    “இதுவரைக்கும் நீங்க ஒரு தடவை கூட என் கூட உக்காந்து சாப்பிட்டதில்லை,  சாகக் கிடக்கிற என் அண்ணனைப் பார்க்க ஒரு தடவ கூட கூட்டிட்டு போனது இல்லை, செஞ்ச தப்புக்கு ஒரு வார்த்தை சாரி கேட்கல, ஆனா நான் மட்டும் நீங்க கேட்டவுடனே எல்லாத்தையும் சொல்லனுமா? எப்படியும் என்னை கொல்லத்தானே போறீங்க, நான் இன்னொரு ஆம்பளை கூட பேசினா என்ன? அவன் கூடவே போயிட்டு வந்தா என்ன? ஒரு வேள எனக்கு முன்னாடியே நீங்க நல்ல டீல் பேசி வச்சிருந்தீங்களா? அத நான் கெடுத்திடுவேன்னு தான் திரும்ப திரும்ப என்ன பேசினோம்னு கேக்குறீங்களா?” என்று சொல்லி முடிப்பதற்குள் வருணின் கை அவள் கன்னங்களை பதம் பார்த்தது. ஒற்றை அறையிலேயே சுழன்று விழுந்தவளை கொஞ்சமும் கவனிக்காமல் வருண் வெளியேறி போய் விட்டான்.

 

     கார் போன பாதையில் போனவன், சில மணி நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு திரும்பி வர, இயல் இன்னும் அதே இடத்தில் விழுந்து கிடந்ததை கண்டு துணுக்குற்றான். மெதுவாக அவளை கைகளில் தூக்கி பார்க்க, அவள் தலையில் அடிபட்டு சோபாவின் அடியில் முழுவதும் ரத்தம் வடிந்து கிடந்தது.

 

    “இயல்… இயல்…” அழுதான்… அரற்றினான்… பதில் இல்லை…

 

    அவசர அவசரமாக அவளை தூக்கிக்கொண்டு வித்யா அத்தையின் ஹாஸ்பிட்டலுக்கு சென்றான். “ப்ளட் நிறைய போய் இருக்குடா… இப்ப ப்ளட் ஏறிகிட்டு இருக்கு, சீக்கிரமே சரியாகிடுவா… ஆமா இந்த பொண்ணோட புருஷன் என்ன ரவுடி பயலா? அன்னிக்கும் கைல காசில்லாம காய்ச்சலா கிடந்தவள அம்போன்னு விட்டுட்டு போயிருக்கான், இன்னிக்கும் சாகுற மாதிரி அடிச்சு தலைய உடச்சி போட்டுட்டு போயிருக்கான். பாவம் அவ தலையில் ஏழு தையல் போட்ருக்கேன், அவன் அடிக்கிறதுக்கும் கொல்றதுக்கும் இவ என்ன மனுஷியா இல்ல மாடா? அவன மாதிரி ஆளுங்கள எதுக்கு வீட்ல வேலைக்கு சேக்குற? முதல்ல போய் அவன உண்டு இல்லைன்னு பண்ணிட்டு வா…”

 

   அவர் வார்த்தைகளிலேயே நொந்து போனவன், “இப்ப நான் இயல பாக்கலாமா அத்த?”

 

    “ம்… பட் டிஸ்டர்ப் பண்ணாத, ஷீ நீட் சம் ரெஸ்ட்”

 

    தலையாட்டி விட்டு உள்ளே நுழைந்தவன், அவள் நிலை கண்டு மொத்தமாய் உடைந்து போனான். தலையில் பெரிய கட்டு, கன்னம் வீங்கி கன்றிப்போய், கையில் ஒரு புறம் ப்ளட் டிரிப்ஸ் வயர்கள். எல்லாவற்றையும் விட மயக்கத்திலும் நிற்காமல் வழியும் அவளின் கண்ணீர் துளி தான் அவனை புரட்டி போட்டது. வருணுக்கு அருணின் ஞாபகம் வந்தது, அவனும் சாவதற்கு முன் இதே போல மயக்கத்தையும் மீறி வலியால் அழுதான். வருண் முற்றிலும் உடைந்து விழுந்த அதே நிமிடங்கள் இன்று மீண்டும் கண்முன் உருவானது.

 

   நேரம் காலம் மறந்து “இயல் சாரி… சாரிடா… இயல்” என்று அவள் அருகில் அமர்ந்து உளறி கொண்டிருக்கையில், வருண் போன் அடித்தது.

 

    “சார், நான் கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல இருந்து டாக்டர் சதீஷ் பேசுறேன். இங்க ரவின்ற பேஷன்ட்க்கு இப்போ கான்சியஸ் வந்துச்சு. பட் ரெண்டு நிமிஷத்துலயே மறுபடியும் கோமாக்கு போயிட்டான். பட் அந்த ரெண்டு நிமிஷம் முழுக்க, ‘இசை… இசை’ன்ற பேரையே சொல்லி கத்திட்டு இருந்தான். சீக்கிரமே மறுபடியும் கான்சியஸ் வரும்னு நினைக்கிறேன் சார்.”

 

    “சரி, நான் உடனே கிளம்பி அங்க வர்றேன்.”

 

    நர்ஸிடம் இயலை பாதுகாப்பாக பார்த்து கொள்ள சொல்லிவிட்டு வருண் ரவியை பார்க்க சென்றான். அவர்களின் எதிர் பார்ப்பை வீணாக்காமல் முப்பது நிமிடங்கள் கழித்து ரவியும் கண் விழித்தான்.

 

   கண் திறந்தது முதலே, “இசை.. இசை..” என்று ஆர்ப்பரித்தவன், அங்கே வருணை கண்டதுமே, “வருண் இசைய ஒண்ணும் பண்ணிடாத… அவ ரொம்ப பாவம்டா… அவ எங்க வீட்டு பொண்ணே இல்ல… அவள விட்ருடா…” என்பதற்குள் மீண்டும் கோமாவிற்கு போய் விட்டான்.

 

    டாக்டர் சதீஷ், “சார் கோமால உடம்புதான் ஆக்டிவா இருக்காதே தவிர, பிரைன் முழிச்சுகிட்டே தான் இருக்கும். நீங்க இதுக்கு முன்னாடி பேசினது எதையோ அவரு பிரைன் கேட்டு இருக்கு போல… அதான் அவசரமா சொல்ல வந்ததெல்லாம் சொல்லிட்டாரு… பல்ஸ் ரொம்ப டவுன் ஆயிடுச்சு, இனிமே கான்சியஸ் வர ரெண்டு மூணு நாள் ஆகும்.” என்று விளக்கினார்.

 

    கோகிலாவோ அழுத்தமாய் இயலை பற்றி வாய் திறக்க மறுத்திட, யாதவ் போனும் சுவிட்ச் ஆப் என்று வந்திட வருணால் நிலை கொள்ள முடியவில்லை. வேறு வழியின்றி வருண் இயலை தேடி சென்றான். அங்கே ஹாஸ்பிடலில் அவளை காணவில்லை…

Leave a Reply

%d bloggers like this: