Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 19

இயல் சமையல் அறையினில் தாளித்து கொண்டிருந்தாள், குழம்புக்கு மட்டுமல்ல வருணுக்கும். ‘இவனுக்கு பைத்தியம் புடிச்சதால இப்டி மாறி மாறி பேசுறானா? இல்ல எனக்கு பைத்தியம் புடிக்கனும்ங்கிறதுக்காக இப்டி மாறி மாறி பேசுறானா? எனக்காவது பரவாயில்ல, தருண் மனசுல எதாவது நினைச்சுட்டு அப்புறம் மறந்திடுன்னு சொன்னா தாங்குமா அந்த குழந்த? ஆளுதான் ஆறடிக்கி இருக்கானே தவிர அறிவு உப்புக்கும் தலையில கிடையாது போல’ என்று வறுத்தெடுக்கையில், “இயல்… இயல்…” என்று மாடியிலிருந்து குரல் வந்தது. கையிலிருந்த பாத்திரத்தை நங்ங்… கென வைத்து விட்டு கோபமாக மாடிக்கு வந்தாள்.

 

     “இப்ப என்ன வேணும் உங்களுக்கு?… செல்ல காணும் டவல காணும்னு இதோட நாலு தடவ ஏறி இறங்க வச்சிட்டீங்க. இப்ப என்னத்த காணும்னு சொல்ல போறீங்க?”

 

   பெட்டில் காலாட்டியபடி கைகளை பின் பக்கத்தில் முட்டு கொடுத்து சாய்ந்து அமர்ந்திருந்த வருண், “உன்ன யாரு ஏறி ஏறி இறங்க சொன்னா? நாங்க ரெண்டு பேரும் ரெடியாகுற வரைக்கும் இங்கயே இருன்னுதான சொன்னேன். நீ சொன்ன பேச்சு கேக்கலைனா அதுக்கு நான் என்ன பண்றது?”

 

    “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… எனக்கு தலைக்கு மேல வேல இருக்கு, இப்ப என்ன வேணும்னு மட்டும் சொல்லுங்க”

 

    “நாங்க குளிக்க போறோம், தருணுக்கு டிரஸ்ஸ கழட்டி விடனும்.”

 

    “எப்பவும் நீங்கதான கழட்டுவீங்க இப்ப என்ன திடீர்னு என்னை செய்ய சொல்றீங்க?”

 

    “அவன் நீதான் வேணும்னு அடம்புடிக்கிறான். நானென்ன எனக்கா கழட்டி விட சொன்னேன், அவனுக்குத்தான…”

 

    இயல் இதுக்கு மேல் வருணுடன் பேச பிடிக்காமல் தருணிடம் சென்று சட்டையை கழட்டி கொண்டே,  “ஏன்டா கண்ணா இப்டி படுத்துற?…”

 

    “அம்மா அப்பா பொய் சொல்றாரும்மா… அவருதான் கழட்டி விடமாட்டேன்னு சொன்னாரு…” 

 

    “அடேய் எட்டப்பா….” என்று தருணை தூக்கி இரண்டு சுற்று சுற்றி தோளில் போட்டு கொண்டு பாத்ரூமுக்குள் சென்றுவிட இயல், ‘சரியான இம்ச…’ என திட்டி கொண்டே திரும்பி நடந்தாள்.

 

    வருண் பாத்ரூம் கதவை படாரென்று திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டியபடி, “இயல் இங்கயே இரு… குளிச்சு முடிச்சதும் மறுபடியும் கூப்பிடுவேன்” என்றுவிட்டு பதிலை கூட கேட்காமல் அவசரமாய் உள்ளே போய்விட்டான்.

 

     மீண்டும் இறங்கி ஏற வேண்டாமென கால்கள் கெஞ்சிட வேறு வழியின்றி இயல் பால்கனியில் போய் நின்று கொண்டாள். சொன்னதை போலவே பத்து நிமிடத்தில் வருண் அவள் பெயரை ஏலம் விட தொடங்கி விட்டான்.

 

     “கத்தாதீங்க… இங்க தான் இருக்கேன்…”

 

     “இவனுக்கு தலைய துவட்டனும்…” எனும் முன் வருணை தள்ளி கொண்டு வெளியே ஓடி வந்த தருணை பிடித்து அமுக்கி, பெட்டிற்கு தூக்கி வந்து தலை துவட்டி விட்டாள். அவனை முடித்ததும் சொட்ட சொட்ட நனைந்தபடி டவலுடன் பின்னாலிருந்த வருண், “எனக்கு…” என்று தன் தலையை அவள் முன் கொண்டு வந்து நீட்ட, முதல் முறையாக ஆடையில்லாத அவனது சிக்ஸ் பேக் உடலை கண்டு தடுமாறி பெட்டிலேயே விழுந்தாள்.

 

     “அறிவில்ல… இப்டி வந்து நிக்கிறீங்க…”

 

      “ஓய்… தருண் ஜட்டி கூட இல்லாம ஓடி வந்தான். அவன தூக்கி வச்சு செல்லம் கொஞ்சுற, நான் டீசன்ட்டா டவலோட வந்திருக்கேன், என்னை நீ இப்டி நிக்கிறேன்னு திட்ற, வேணும்னா நான் வேற பொசிஷன்ல நிக்கவா” என பெட்டில் இருந்து இயல் எழ முடியாதபடி தன் இரண்டு கைகளைம் அவளின் இரு புறம் ஊன்றி நேர் மேலே முகத்தை வைத்திட இயலுக்கு உடல் உதற தொடங்கியது.

 

    ‘கதவு திறந்திருக்கு, குழந்தையும் பக்கத்தில நிக்குது, எதுவும் பண்ண மாட்டான்’ என அவள் நினைத்திருக்க அவனோ, ” தருண், அம்மா எப்ப பாரு அப்பாவ திட்டிட்டே இருக்காள்லடா, இனிமே திட்ட முடியாத மாதிரி இந்த அம்மாவ என்ன செய்யலாம்னு சொல்லு…” என பார்வையை அவளின் இதழில் பதித்தான்.

 

    இதுவரை இருந்த தைரியமெல்லாம் துளி மிச்சமின்றி வடிந்து போக, அவனின் வெற்று உடலை தொட்டு தள்ளி விட அவள் பயந்தாள்‌. அது புரிந்ததும் வருண் இன்னும் நெருங்கி வர ஆரம்பிக்க, இயல் மனதில் படு பயங்கர கற்பனை காட்சிகள் தோன்றியது. பயத்தில் உலர்ந்திருந்த தன் தொண்டைக்கு சிரமப்பட்டு சிறிது எச்சிலை விழுங்கி, “ப்ளீஸ்… வழிய விடுங்க…. நான் போகனும்…” என்றாள்.

 

    இன்னமும் அவன் உடல் அதே பொசிஷனில் இருக்க இயல் நேராக எழ முடியாமல் பின் பக்கம் ஊர்ந்து கொஞ்சம் நகர்ந்து எழ முயன்றாள். அவளின் உடல் அசைவுகளை கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்த வருண் தன் தலையை வேகமாய் சிலுப்பினான். தலையில் இருந்த தண்ணீரெல்லாம் அவள் மேல் தெரித்து விழுந்திட, முகம் சிவந்து கண்களை மூடி கொண்டிருந்தவளின் காதருகினில் வந்து, “இந்த பெட்ல நீ படுத்தா வேற பேரு வச்சிடுவேன்னு சொன்னீல்ல, கரெக்ட்தான், நைட் புல்லா யோசிச்சு உனக்கு ‘அம்மான்ற…’ பேர செலக்ட் பண்ணேன். பட் இதுல எனக்கு ஒரு டவுட் இருக்கு, தருணுக்கு நீ அம்மான்னா எனக்கு என்ன வேணும்??? …” என்றான்.

 

    இயலோ பயத்தில் இன்னும் இறுக விழிகளை மூடிக்கொண்டு, “வழிய விடுங்க, நான் போகனும்” என்றிட வருண் தருணிடம், “அம்மாவ விட்ரலாமாடா?…” என்றான் குறும்பாய்..

 

    வழக்கம் போல அம்மாவும் அப்பாவும் ஏதோ முக்கியமான விஷயம் பேசுவதாக நினைத்து பெட்டில் குதித்து விளையாடி கொண்டிருந்த குழந்தை,  “விட்ருங்கப்பா…” என்றதும் தன் ஒரு கையை மட்டும் விலக்கி வழி கொடுக்க, விட்டால் போதுமென சிட்டாய் பறந்து விட்டாள் அவள்‌. தலை தெறிக்க கீழே ஓடி வந்தவளுக்கு சில நிமிடங்கள் மூச்சு விடவே சிரமமாக இருக்க, தனிமையை தேடி தண்ணீர் பாய்ச்சுவது போல கார்டனுக்குள் சென்று ஒளிந்து கொண்டாள். வருணும் தருணும் டைனிங் டேபிளுக்கு வந்ததும் வருண் மீண்டும் விட்ட இடத்திலிருந்து சேட்டையை தொடர்ந்தான்.

 

    கார்டனில் இருந்த இயலிடம் சாந்தி, “இயல், உன்ன வீடு முழுக்க தேடிட்டு வர்றேன், இங்கேயா இருக்க நீ.”

 

    “என்ன ஆச்சுக்கா?”

 

    “நீ பரிமாறினாத்தான் சாப்பிடுவேன்னு சொல்லிட்டு ஐயா டைனிங் டேபிள்ள உக்காந்திருக்காரு…”

 

    “விடுங்கக்கா, பசிச்சா அவரே போட்டு சாப்பிடுவாரு, இல்லன்னா பட்னியாவே கிடக்கட்டும், எனக்கென்ன?”

 

    “இயல் ஐயா தருணுக்கும் ஊட்டாம உக்காந்திருக்காரு…”

 

    அடுத்த வினாடி டைனிங் டேபிளுக்கு கோபமாக வந்த இயல், “ஏன் இப்டி பாடா படுத்துறீங்க?”

 

    “நானில்ல தருண்தான் நீ வந்து ஊட்டனும்னு அடம்புடிக்கிறான்.”

 

    இயல் தருணை தூக்கி இடுப்பில் வைத்து கொண்டு தட்டில் உணவை போட்டு ஊட்ட ஆரம்பிக்க வருண், “எனக்கு யாரு சாப்பாடு போடுவா?” என்று தட்டை ஏந்தினான். ‘இதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன்’ என இயல் தருணுக்கு ஊட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்த வருண், “அதென்ன, எப்ப பாரு அவனுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு? எங்கிட்ட இல்லாதது அப்டி என்னடி அவங்கிட்ட இருக்கு?” என்றான்.

 

    அவளிடமிருந்து பதிலே வராமல் போக, வருண், “இயல்…. இயல்…. பசிக்குது…. இயல்….” என்று நச்சரித்தான்.

 

    “இப்ப என்ன வேணும் உங்களுக்கு?”

 

  ‌   “ஏன், இன்னுமா உனக்கு புரியல?”

 

    “நீங்க நேரத்துக்கொரு பேச்சு பேசுறீங்க, என்னால உங்கள மாதிரி டக்கு டக்குனெல்லாம் மாற முடியாது. எங்க அண்ணன கொல்றதுக்கு துடிச்சிட்டு இருக்குற உங்க கூட என்னால பாசமாவோ ஆசையாவோ ஒரு நிமிஷம் கூட நடந்துக்க முடியாது. ஒண்ணு எங்க மூணு பேரையும் மன்னிச்சு விட்ருங்க, இல்லன்னா கொன்னு போட்ருங்க. எங்கிட்ட இருந்து வேற எதையாவது எதிர் பாக்குற வேல வச்சுகிட்டீங்க, நான் மனுஷியா இருக்க மாட்டேன்” என்றவள் அவன் பதிலுக்கு காத்திருக்க, வருணோ சாப்பாட்டை எடுத்து போட்டு உண்ண தொடங்கிட, இயல் தருணை தூக்கி கொண்டு வேறு பக்கம் சென்றுவிட்டாள்.

 

    ஐந்து நிமிடம் கழித்து வருண் சர்வ சாதாரணமாக இயலிடம் வந்து, “இயல்… நான் இன்னிக்கி லஞ்ச்க்கு வர மாட்டேன் நைட்டும் வர லேட்டாகும், தருண பாத்துக்க. உனக்கு எதாவது வேலை இருந்தா இன்னிக்கே முடிச்சிடு. நாளைக்கு நமக்கு நிறைய வேலை இருக்கு” என்றதும் இயலின் மனது, ‘நாளைக்கி சனிக்கிழம, தருண் வீட்ல இருக்க மாட்டான், நிறைய வேலைன்னா…’ என அதிர்ந்திட, வருண் அவள் அசந்த நொடியில் சத்தமில்லா முத்தத்தை கன்னத்தில் இட்டு விட்டு ஓடி விட்டான். நல்லவேளை ஓடினான், அவள் கையில் மட்டும் கிடைத்திருந்தால் வெட்டி ஊறுகாயே போடுமளவு ரத்த காட்டேரியாய் உரு மாறி இருந்தாள்.

 

     ‘எங்க போயிடுவான்… வீட்டுக்கு வந்து தான ஆகனும்… வாடா வா…’ என்று கையில் கத்தியுடன் இரவு பத்து மணி வரை காத்திருந்தாள், அவன் வரவில்லை. அவனும் கொஞ்சம் புத்திசாலி இல்லையா… சரியாய் பன்னிரண்டு மணிக்கு வந்தான். இயலிசை தலைமேட்டில் கத்தியை கண்டதும் முதல் வேலையாக அதை எடுத்து ஒளித்து வைத்தான்.

 

     இயல் தூக்கத்தில் புரண்டு படுக்கையில், வழக்கத்திற்கு மாறாக ஏதோ கதகதப்பினை உணர, கண் திறந்து பார்த்தாள். அவள் பெட்டில் படுக்க வைக்க பட்டிருந்தாள், அவளுக்கு அருகிலேயே வருணும் தருணும் கட்டி பிடித்து கொண்டு உறங்கி கொண்டிருந்தனர். வந்த கோபத்திற்கு வருண் தலையில் நங்ங்…கென்று ஒரு கொட்டு வைத்து விட்டு போய் தரையில் தன் இடத்தில் படுத்தாள். சில மணி நேரங்கள் கழித்து விழித்து பார்க்க, மீண்டும் பெட்டில் இருந்தாள்‌, வருணும் தருணும் அதே போல் இருக்க, ‘நா முதல்லயே கீழ இறங்குனேனே…’ என்று தலையை சொறிந்து கொண்டே கீழிறங்கி படுத்தாள். சில மணி நேரம் கழித்து விழிக்க, மீண்டும் பெட்டில் இருந்தாள்‌.‌ இம்முறை கட்டிலுக்கு அடியில் போய் படுத்து கொள்ள, வருணுக்கு அவளை அசைக்காமல் வெளியே இழுத்து தூக்கி பெட்டில் போடுவதற்குள் பெரும் பாடாகி போனது. அதிகாலையில் இயல் கண் திறக்கையில் பெட்டில் இருந்தாள், வருணையும் தருணையும்  அருகே காணவில்லை. எழுந்ததும் முதல் வேலையாய், ‘எங்க இருக்கீங்க?’ என்று அந்த அறையே அதிர கத்திட, வருணோ பாத்ரூம் உள்ளிருந்து, “இங்கதான் இருக்கோம் இயல்… நாங்க சுதந்திர குளியல் குளிச்சுட்டு இருக்கோம், நீயும் வர்றியா?” என்றான். பதிலில்லை… வெளியே எட்டி பார்த்தான், அங்கே அவளே இல்லை… தயாராகி கீழே வந்த இருவரும் டைனிங் டேபிளில் தாளம் போட, இயல் சுடசுட இட்லியை கொண்டு வந்து வைத்தாள்.

 

     தருண், “இட்லியா… வேணாம்மா”

 

    வருண், “சும்மா இருடா… இட்லிய விட உங்கம்மா சூடா இருக்கா…”

 

    சினுங்க சினுங்க இயல் குழந்தைக்கு பாதி ஊட்டி இருக்கையில் வருண், “மிச்சத்த நான் ஊட்டுறேன். நீ போய் சீக்கிரமா குளிச்சிட்டு சாப்பிடு இயல், நாம ஷாப்பிங் போகலாம்.” அவள் தயாராகி வெளியே வருகையில் வாசலில் ஒரு பைக் இருந்தது.

 

     வருண், “என்னோடதுதான்… காலேஜ் படிக்கிறப்போ யூஸ் பண்ணது‌. அதுக்கு அப்புறம் அப்பப்போ எடுத்து சும்மா ஒரு ரவுண்டு அடிச்சிட்டு உள்ள வச்சிடுவேன். நீ காருக்கு பயப்படுறேல்ல, அதான் நேத்து எடுத்து க்ளீன் பண்ணி வச்சேன், இனிமே நாம எங்க போனாலும் பைக்லயே போகலாம்…” என்று சொல்லி கொண்டே தருணை முன்னால் அமர்த்தி அவளை ஏற சொன்னான். எந்த பிரச்சனையும் செய்யாமல் அவள் அமைதியாய் ஏறி அமர்ந்ததே அவனுக்கு பெரிய ஆச்சரியம் தான்.

 

    முதலில் நகைக்கடைக்கு சென்று அவளுக்கு பிடித்த நகைகள் எடுக்க சொன்னான். முதலில் ரத்தினத்தில் முகப்பு வைத்த தாலி கொடியை எடுத்தாள், அதன் பின் நெக்லஸ், தோடு, வளையல், மோதிரம், கொலுசு என அத்தனையும் பார்த்து பார்த்து எடுத்தாள். அடுத்ததாக டிரஸ்… அழகிய பட்டு புடவை இரண்டு, எம்பிராய்டரி சுடிதார் இரண்டு எடுத்து கொண்டாள்‌.

 

    “வேற எதாவது வேணுமா இயல்?”

 

    “ம்…”

 

    “என்ன?”

 

    “எனக்கு என்னோட சேலரி வேணும்.”

 

    அவன் புரியாமல் முழிக்க அவளே தொடர்ந்தாள், “இவ்ளோ நேரம் உங்க மரியாதைக்கு தகுந்த மாதிரி டிரஸ் எடுத்தேன். அது உங்க கூட, உங்க மனைவின்ற பேர்ல, உங்களுக்கு மரியாத வேணுங்கிற இடத்துக்கு போகும் போது தான் தேவைப்படும். இப்போ நான் வெறும் இயலிசையா, எனக்கு தேவையான திங்ஸ் எல்லாம் வாங்கிக்க எனக்கு என்னோட சேலரி வேணும்.”

 

     “அதான பாத்தேன். பொதுவா புயலுக்கு பின்னால அமைதி வரும்னு சொல்லுவாங்க, ஆனா இயல்கிட்ட அமைதிக்கு பின்னாடி புயல் வரும். சரி என்ன வேணுமோ போய் வாங்கு…”

 

     “எனக்கு கையில பணமா குடுங்க, நான் பிளாட் பார்ம்ல எடுத்துக்குறேன்.”

 

    “ஏய்… பிளாட் பார்ம்ல எடுத்தா குவாலிட்டி இருக்காது, ரெண்டு மாசத்துலயே எல்லாம் பாழா போயிடும்.”

 

    “ரெண்டு மாசத்துக்கு வந்தாலே போதும்னுதான் பிளாட் பார்ம்ல எடுக்க போறேன்.”

 

    வருண் வாயை மூடி கொண்டான், அடுத்து என்ன சொல்வாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். லச்சத்தி ஒன்றாம் முறை அதை கேட்க இஷ்டமில்லாததால், பக்கத்து ஏடிஎம்மில் பணம் எடுத்து தந்து விட்டு அமைதியாக அவளின் ஷாப்பிங்கை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். சாந்தியின் குழந்தைக்கு ரெண்டு டிரஸ், டிரைவர் அண்ணனுக்கு ஒரு ஸ்கார்ப், வாச்மேன் தாத்தாக்கு ஒரு ஸ்வெட்டர், தருணுக்கு சில டிராயிங் புக்ஸ், தனக்கு ஒரு பெட் ஷீட்டும்  சின்ன சின்ன கவரிங் ஆபரணங்களும் எடுத்தவள் இறுதியாய் ஒரு செருப்பு கடை முன் நின்றாள். வருண் இப்போதுதான் அவள் அளவை விட சற்று பெரிய சைஸ் செருப்பை போட்டிருப்பதை உணர்ந்தான். புதிதாய் வாங்குவதையும் அவள் பெரியதாகவே எடுத்திட,

 

    வருண், “ஏன் பெருசா எடுக்குற?”

 

    “நா உங்க வீட்டுக்கு வந்தப்போ செப்பல் போடாம வந்துட்டேன். புதுசு வாங்க பக்கத்துல கடையும் இல்ல, அதுனால அவசரத்துக்கு யூஸ் பண்ண சாந்தி அக்கா அவங்க செப்பல் தந்தாங்க. இப்ப நான் புதுசு வாங்கிட்டு அவங்களுக்கு பழச குடுக்குறதுக்கு பதிலா, அவங்களுக்கே புதுசா குடுத்துட்டா அவங்களுக்கும் சந்தோஷம், பியூச்சர்ல நானும் யூஸ் பண்ணிக்கலாம்ல…..”

 

    வருணுக்கு அவளின் அன்பை கண்டு சந்தோஷ படுவதா, இல்லை இத்தனை நாளாக இதைக்கூட காணாமல் இருந்த தன் முட்டாள் தனத்தை நினைத்து வருத்த படுவதா என்று தெரியவில்லை. இப்போது வருந்தி என்ன செய்வது, என வீட்டை நோக்கி பைக்கை செலுத்தினான். முதலில் நல்ல பிள்ளையாக பைக்கை ஒட்டியவன் அதன் பின் அடிக்கடி ஸ்பீடு பிரேக்கரில் ஏற்றி ஏற்றி இறக்கினான்.

 

     திடீரென இயல், “பைக்க நிறுத்துங்க” என்றாள்.

 

    வருண் நிறுத்தியதுமே இறங்கி வந்த பாதையில் திரும்பி செல்ல, ‘போச்சு… கோச்சுகிட்டா போல. ஸ்பீடு பிரேக்கர்ல வரும் போது ஒழுங்கா ஓட்டி இருக்கலாம், இப்ப என் நிலமை உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணான்னு ஆயிடுச்சே….’ என்று புலம்ப அங்கே இயல் நான்கு கடை தள்ளி இருந்த ஐந்தாவது கடைக்குள் நுழைந்தாள்.

 

     வருணும் தருணை தூக்கி கொண்டு அங்கு போய் பார்க்க, அது ஒரு ஹெல்மெட் ஷோரூம். உள்ளே இயல் தருண் சைஸ் ஹெல்மெட் ஒன்றை பார்த்து வாங்கி கொண்டு இருக்க, வருண் மெய் சிலிர்த்து போனான்.

 

    “சேலரியில பாதிய காலி பண்ணிட்ட, உங்க அம்மா காசு கேட்டா என்ன செய்வ?”

 

    “அதுக்கு தான் நீங்க இருக்கீங்கள்ள, இப்பதைக்கு கேத்குற பணத்த குடுத்திடுங்க. அப்புறம் உங்களுக்கு தெரிஞ்ச டாக்டர் கிட்ட சொல்லி என்னோட கிட்னி, லங்ஸ், ஐஸ், ஹார்ட், பிரைன்னு எல்லாத்தையும் வித்து காசாக்கிகோங்க….”

 

    “எல்லாம் சரி… பிரைன்னு ஒண்ணு சொன்னியே, அது எங்க இருக்கு?” என்றதும் அவள் முறைக்க அவன் சிரிக்க தருண் குதிக்க, மூவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

 

    அன்று இரவும் மறுபடி மறுபடி இயலை தூக்கி பெட்டில் போட, சில முறை இறங்கி படுத்தவள் தூக்க அசதியில் அடுத்து இறங்க மறந்து உறங்கி போனாள். அடுத்தடுத்த நாட்களிலும் வருண் கெஞ்சி கொஞ்சி எவ்வளவு தூரம் அவளை நெருங்க முயன்றாலும் அவள் தன் வட்டத்தை விட்டு வெளியே வரவில்லை. இறுதியாய் இறைவனே ஒரு முடிவெடுத்து இந்த கண்ணா மூச்சி ஆட்டத்தை நிறுத்திட ஒரு ஆளை அனுப்பினான்.

 

      யாதவ் கிருஷ்ணா….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: