Tamil Madhura முழுகதைகள் ராணி மங்கம்மாள் – முழுகதை

ராணி மங்கம்மாள் – முழுகதை

ராணி மங்கம்மாள் – முன்னுரை 

    • ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது.

 

    • மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் சிறப்புடன் கதாபாத்திரமாக அவள் விளங்குகிறாள்.

 

    • அந்த மங்கம்மாவை நாயகியாக வைத்து ஒரு நாவல் எழுத எண்ணி வரலாற்று நூல்கள்களையும், கர்ண பரம்பரைக் கதைகளையும், செய்திகளையும் ஆராய்ந்ததன் விளைவே இந்தப் புத்தகம்.

 

    • மங்கம்மாளை மட்டுமே முக்கியக் கதாபாத்திரமாக ஏற்காமல் நாயக்கர் வரலாற்றை விவரிக்கப் புகுந்திருந்தால் இந்நாவல் ஒரு வேளை இதை விடவும் பெரிதாக அமைந்திருக்கக்கூடும்.

 

    • ஆனால் என் நோக்கத்தை நான் முன்பே வரையறுத்துக் கொண்டு விட்டதால் கதைப் போக்கிற்கும் இதை உருவாக்கிய எனக்கும் வேலை கச்சிதமாக அமைந்துவிட்டது.

 

    • இன்று பெரிதாகப் பேசப்படும் மதங்கள் சம்மந்தமான சமரச மனப்பான்மையைத் திருமலை நாயக்கர் தொடங்கி மங்கம்மாள் வரையிலான நாயக்க வம்சத்தினர் இயல்பாகக் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

 

    • எந்த மதுரைச் சீமையில் சமணரைக் கழுவேற்றுகிற அளவு மத உணர்வு தீவிரமாக இருந்ததோ அதே மதுரைச் சீமையில் இப்படியும் சமரசம் நிலவச் செய்திருக்கிறார்கள் நாயக்க வம்சத்தினர். கிழவன் சேதுபதி போன்ற தீவிர உணர்வாளர்களும் அதே காலகட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் மறப்பதற்கில்லை.

 

    • கதையில் ராணி மங்கம்மாளுக்கு அடுத்தபடி நம்மைக் கவருகிற கதாபாத்திரம் கிழவன் சேதுபதி தான். மடங்கா வீரமும் பிறருக்கு அடங்கா ஆற்றலும் கொண்ட அந்தக் கிழச்சிங்கம் நம் கவனத்தைக் கவர்வதில் வியப்பேதும் இருக்க முடியாது. நாயக்கர்கள் காலத்து மதுரை, இராமநாதபுரம், திரிசிரபுரம் பிரதேசங்களின் நிலையையும் இந்நாவலின் மூலம் காணமுடிகிறது.

 

    • இப்புத்தகத்தின் வாசகர்களுக்கு என் அன்பையும் வாழ்த்துக்களையும் கூறி விடைபெறுகிறேன்.

 

    • நா. பார்த்தசாரதி

 

    • ————–

 


 

ராணி மங்கம்மாள்

1. சித்ரா பெளர்ணமியன்று கிடைத்த செய்தி 

    • மதுரை மாநகரம் கோலாகலமாக விழாக் கோலம் பூண்டிருந்தது. பார்க்கும் இடமெல்லாம் புதுமையும், பொலிவும், திருவிழாக் கலகலப்பும் தென்பட்டன. வேனிற் காலத்தில் இளந்தென்றலின் இதமான சுகானுபவம் தன் பொன்மேனிக்குக் கிடைக்க வேணும் என மார்புக் கச்சுக்கு மேல் நிறை ஆடைகள் அணியாமல் தோளில் ஓர் ஓரமாக அலங்கார மேலாடைச் சரியவிட்டுக் கொண்டு மஞ்சத்தில் துவண்டு கிடக்கும் இளமங்கை போல் மணல் திட்டுக்களுக்கிடையே ஓர் ஓரமாகச் சிறிதளவே நீர் பாயும் இளைத்த எழில் நதியாக வையை இலங்கிக் கொண்டிருந்தாள். ஆம்! அது தான் அவளுடைய வேனிற் காலத்து விழாக்கோலம். அவளது பொன்னிற மணல் மேனியில் பந்தல்களும், தோரணங்களும் தென்பட்டன. பெரும் புலவர்களும், பேரறிஞர்களும், மக்களும் கூடிச் சிந்திக்கும் முதன்மையும் அருமையும் இருப்பதால்தானே இந்த நகரத்திற்குக் கூடல் என்றே ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள்! உலகத்தை முழுவதையும் பெயர்த்துக் கொண்டு வந்து ஒரு தராசுத் தட்டில் வைத்து மற்றொரு தராசுத் தட்டில் மதுரை மாநகரத்தை மட்டும் வைத்தால் கூட இதன் மதிப்புதான் அதிகமாக இருக்கும் என்றெல்லாம் புலவர்கள் புகழ்ந்தது பொருத்தம் என்றே தோன்றியது.

 

    • மீனாட்சி கல்யாணம் முடிந்து தேர் நிலைக்கு வந்து மகிழ்ச்சி நிறைவடையு முன்னே ஆற்றில் அழகர் வந்து இறங்குகிறார். தென்னாடு முழுவதும் குழந்தை குட்டிகளோடும் மனைவி மக்களோடும் தத்தம் சொந்த ஊர்களிலிருந்து ஒழித்துக்கோண்டு மதுரையிலே கூடிவிட்டாற்போல் நகரம் முழுவதும், சுற்றுப்புறங்களிலும் எள் விழ இடமின்றி மக்கள் கூடிவிட்டார்கள். நிறைய விருந்தனர் வந்திருக்கும் வீட்டில் எப்படி அதிகக் கலகலப்பும், பரபரப்பும், மகிழ்ச்சியும், உபசரணைகளும், உல்லாசமும் நிரம்பியிருக்குமோ அப்படி நகருக்கே உல்லாசம் வந்துவிட்டது போலிருந்தது; நகருக்கே விருந்து வந்தது போலிருந்தது.

 

    • பூக்கள் தீபதூப வாசனைகளின் நறுமணமும் வாத்தியங்களின் இன்னொலியும், ஆரவாரங்களின் அழகும், அலங்காரப் பந்தல்கள், அழகுத் தோரணங்களின் காட்சியும் நகரையே இந்திரலோகமாக்கியிருந்தன. சித்திரா பெளர்ணமி நகரையே சிங்கார புரியாக்கியிருந்தது. எங்கும் ஆரவாரம், எங்கும் மகிழ்ச்சி, எங்கும் விழாக்கோலம்.

 

    • இப்போது இந்த விழாவுக்காகவே ராணி மங்கம்மாளும், இளவரசர் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பரும் திரிசிரபுரத்திலிருந்த்து தமுக்கம் அரண்மையிலே வந்து தங்கியிருக்கிறார்கள். தமுக்கம் ராஜகிருஹத்திற்கு இப்போது புதுமணப் பெண்ணின் பொலிவு வந்திருக்கிறதென்றால் மகாராணியும் இளவரசரும் வந்து தங்கியிருப்பது தான் அதற்குக் காரணமாக இருந்தது.

 

    • நேற்று மீனாட்சி கல்யாணத்தைத் தரிசித்தாயிற்று. ஆற்றில் அழகர் இறங்குவதைக் கண்டு வணங்கிவிட்டு மகாராணியும், இளவரசரும் திரிசிரபுரத்திற்குத் திரும்பிவிடக் கூடுமென்று தெரிகிறது.

 

    • ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி ஆற்றின் கரைக்கு வந்ததும் குதிரை வாகனத்திற்கு மாறித் தரிசனமளித்தார் கள்ளழகர். காலை இளங்கதிரவனின் செம் பொன்னொளி பட்டு அழகரின் குதிரை வாகனம் மின்னுகிறது. இது வையை ஆறா அல்லது மக்கள் நதியா என்று மாற்றி நினைக்கும்படி நதிப்பரப்பே கண்ணுக்குத் தெரியாதபடி அவ்வளவு மக்கள் கூட்டம். அரண்மனைச் சேவகர்கள் வழிவிலக்கி இடம் செய்து கொடுத்தும் அந்தப் பெருங்கூட்டத்தினரிடையே ராணி மங்கம்மாளும் இளவரசர் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பரும் அமர்ந்திருந்த சித்திரப் பல்லக்கு, கீழிறங்க முடியாமல் இருந்தது. பல்லக்குத் தூக்கிகள் எப்படியோ சிரமப்பட்டுப் பல்லக்கை மணற்பரப்பில் இறக்கினர்.

 

    • மகாராணியும் இளவரசரும் பல்லக்கிலிருந்து இறங்கினர். அரசியையும், இளவரசரையும் கண்ட மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். நெருக்கியடித்துக் கொண்டு காண முந்தினர். மகிழ்ச்சி ஆரவாரமும் வாழ்த்தொலிகளும் விண்ணை எட்டினாற்போல் முழங்கின. அனைவர் முகமும் பயபக்தியோடு கூடிய மகிழ்ச்சியை அடைந்தன.

 

    • இன்னும் இளமை வாடா வனப்பும், காம்பீர்யமும், கட்டழகுமாக ராணி மங்கம்மாள் இறங்கி நின்ற போது அந்த எடுப்பான எழில் தோற்றமே சுற்றி நின்றவர்களிடையே ஒரு பயபக்தியை உண்டாக்கிற்று. கறைதுடைத்த முழுமதி போன்ற ராணியின் அழகும், காம்பீர்யமும் இவள் கணவனை இழந்தவள் என்ற அனுதாப உணர்வை ஏற்படுத்துவதற்குப் பதில் தனது சாதுர்யத்தால் பாலப் பருவத்தைக் கடந்து இப்போதுதான் இளைஞனாகியிருக்கும் ரங்ககிருஷ்ண முத்து வீரப்பனுக்காக நாட்டைக் கட்டிக் காத்து வருகிற தைரியசாலி என்ற பெருமித உணர்வையே உண்டாக்கின.

 

    • மிக இளம் வயதாயிருந்தும் அரும்பு மீசையும், எடுத்து அள்ளி முடிந்த குடுமிக் கொண்டையும் ஆஜானுபாகுவான உயரமுமாயிருந்தான் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன். அழகில் தாய் மங்கம்மாளையும், உயரத்திலும் ஆஜானுபாகுவான உடலமைப்பிலும், தந்தை சொக்கநாத நாயக்கரையும் கொண்டு விளங்கினான் அவன். தெய்வ தரிசனத்தோடு ராஜ குடும்பத்தின் தரிசனமும் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தது மக்கள் கூட்டம்.

 

    • அழகர் ஆற்றில் இறங்கினார். ராணி மங்கம்மாளும், ரங்க கிருஷ்ண முத்துவீரப்பனும் கள்ளழகரின் திருவடிகளைச் சேவித்த அருள் உவகையோடு தமுக்கம் அரண்மனைத் திரும்பினர். நேரம் நண்பகலாயிருந்தது. தமுக்கம் அரண்மனையின் முகப்புத் தோட்டம் அமைதியாயிருந்தது.

 

    • அவர்கள் பல்லக்கு தமுக்கம் அரண்மனையில் நுழைந்த போதே அரண்மனை முகப்பிலுள்ள புல்வெளியில் புதிய குதிரைகள் இரண்டு மூன்று நின்று கொண்டிருந்தன. யாரோ தேடி வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. வந்திருக்கும் புதியவர்கள் யாராயிருக்கக் கூடும் என்கிற யோசனையுடனே ராணி மங்கம்மாளும், ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனும் பல்லக்கிலிருந்து இறங்கினர்.

 

    • அவர்களுடைய சந்தேகத்தை அதிக நேரம் நீடிக்க விடாமல் அரண்மனைக் காவலாளி ஒருவன் வந்து தெரிவித்தான். அவன் எதிர்கொண்டு வந்து தெரிவித்த விதமே செய்தியின் அவசரத்தையும், அவசியத்தையும் உணர்த்துவதாயிருந்தது.

 

    • “திண்டுக்கல்லிலிருந்தும் அம்மையநாயக்கனூரிலிருந்தும் நம் படைத் தலைவர்களும், ஒற்றர்களும் அவசரமாகத் தங்களைக் காண வந்திருக்கிறார்கள் மகாராணீ!”

 

    • ராணி மங்கம்மாளோ, இளவரசனோ காவலாளிக்கு மறுமொழி எதுவும் கூறாமல், அவன் உரைத்த விவரத்தைக் கேட்டுக் கொண்டதை முகஜாடையால் ஏற்றுக்கொண்ட பின் உள்ளே விரைந்தனர். தெரிவதற்கிருந்த செய்தியில் அந்த இருவர் மனமுமே மிக விரைந்த நாட்டமும் பரபரப்பும் அடைந்திருந்தன. இளவரசன் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனை விட ராணி மங்கம்மாளின் மனம் தான் அதிகக் கலக்கமும் பரபரப்பும் அடைந்திருந்ததென்று சொல்லவேண்டும். மகாவீரனும், பேரழகனுமாகிய தன் கணவன் சொக்கநாத நாயக்கன் எந்தச் சூழ்நிலையில் காலமானான் என்பதை அவள் எண்ணினாள். நாட்டையும், தன்னையும், இளங்குருத்தான ரங்ககிருஷ்ணனையும் எந்த நிலையில் விட்டுச் சென்றார் என்பதையும் எண்ணினாள். நாட்டைச் சுற்றிலும் பகைவர்களும், ஆதிக்க வெறியர்களும், மதுரைச் சீமையைக் கைப்பற்றி ஆள இரகசிய ஆசை வைத்திருக்கும் அந்நியர்களுமாகச் சூழ்ந்திருக்கும் கவலைக்கிடமான காலத்தில் கணவனை இழந்து பால் மணம் மாறாத சிறுவன் ரங்ககிருஷ்ணனை இடுப்பில் ஏந்திச் சீராட்டி வளர்த்தது போலவே தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட நாட்டையும் மற்றொரு குழந்தையாக எண்ணிப் பாதுகாக்க வேண்டி நேர்ந்த தன் மனச் சுமையின் கனத்தை எண்ணினாள். அனுபவங்களாலும், அவசியத்தாலும், அவசரத்தாலும், சந்தர்பங்களின் நிர்ப்பந்தங்களாலும், தான் மெல்ல அரசியல் சிக்கல்களில் சிக்கியதையும், சிக்கல்களிலிருந்து தன்னையும் நாட்டையும், ஆட்சியையும் விடுவிக்கக் கற்றுக் கொண்டதையும் நினைத்தாள்.

 

    • “அறிவு ஒருவனை வெறும் விவரந் தெரிந்தவனாக மட்டுமே ஆக்குகிறது. அனுபவம்தான் உலகிலேயே மிகப்பெரிய ஆசிரியன். அனுபவம் தான் திறமையைக் கற்றுக் கொடுக்கிறது. அனுபவம் தான் மனத்தையும், வாக்கையும் புத்தியையும் பளிச்சென்று இலட்சணமாகத் தெரியும்படி மெருகிடுகிறது” என்று பாவாடை அணியும் சிறுமியாக சந்திரகிரியில் தன் தந்தை லிங்கம நாயக்கரோடு வாழ்ந்த போது அவர் தனக்குக் கூறிக்கொண்டிருந்த புத்திமதி இப்போது கணவனின் மரணத்துக்குப்பின் இப்படித் தன் வாழ்விலேயே பலித்து விடும் என்று மங்கம்மாள் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.

 

    • சிறு பருவத்தில் தந்தையிடம் கேட்டுக் கேட்டு ரசித்த இராமாயணம், பாரதம், முதலிய வீரதீரக் கதைகள் நினைவு வந்தன. பயம் தயக்கம் என்பதெல்லாம் என்னவென்றே அறியாமல் சந்திரகிரிக் காடுகளிலும் மலைகளிலும் தோழிகளோடும் தனியேயும் சுற்றிய நாட்கள் ஞாபகத்தில் மேலெழுந்து மிதந்தன. அப்படி அடங்காப்பிடாரியாகச் சுற்றிய நாட்களில் ஒரு நாள் தன் வளர்ப்புத் தாதியரும் செவிலித்தாயும் தந்தையிடம் போய், தன்னைப் பற்றிக் குறை கூறிய போது “உன்னை நான் சிறிதும் அடக்கவோ, ஒடுக்கவோ, கட்டுப்படுத்தவோ விரும்பவில்லை மகளே! நீ சுதந்திரமாகக் காட்டு மல்லிகை போல இஷ்டப்படி வளரலாம். சுதந்திரமாக வளர்பவர்கள் எதிர்காலத்தில் விரும்பத்தகுந்த நல்ல கட்டுப்பாடுள்ளவர்களாக மாறுவதும், கட்டுப்பாடாக வளர்பவர்கள் எதிர்காலத்தில் விரும்பத்தகாதபடி தாறுமாறாகத் திரிவதும் சகஜம். காடு மலைகளில் அலைகின்ற தண்ணீர் ஒரு நாள் ஓரிடத்தில் கரைகளுள்ள நதியாக மாறிப் பேரும் புகழும் பெற்றுக் கடலை அடையும் தகுதியைப் பெறும் என்பது தான் நியதி. உன் தாதியாரும் செவிலியும் உன்னைப் பற்றிக் கூறும் குறைகளை நான் இலட்சியம் செய்யப் போவதில்லை. கவலைப் படாமல் உன் விருப்பப்படி இரு குழந்தாய்!” என்று தன்னைக் கூப்பிட்டு அன்போடு அரவணைத்துப் பிரியத்தோடு அவர் கூறிய நல்லுரைகளை எண்ணினாள். மனம் அந்நினைவில் இளகி நெகிழ்ந்தது.

 

    • காடு மலைகளில் அலைகின்ற தண்ணீரெல்லாம் கீழே இறங்கியதும் ஓரிடத்தில் கரைகளுள்ள நதியாவது போல் தன் வாழ்வும் இப்போது ஆகியிருப்பதனை மங்கம்மாள் உணர்ந்தாள்.

 

    • “அம்மா!… என்ன யோசனை… இப்படி ஒரேயடியாக…? ஒற்றர்களும் படைவீரர்களும் இங்கே ஆலோசனை மண்டபத்து முகப்பில் காத்திருக்கிறார்கள். நீங்கள் பாட்டுக்கு ஏதோ யோசித்தபடியே அந்தப்புரத்தை நோக்கி நடக்கிறீர்களே?” என்று ரங்ககிருஷ்ணன் குறுக்கிட்ட பின்புதான் மங்கம்மாள் நிகழ்காலத்துக்கே வந்தாள்.

 

    • புகழ்பெற்ற திருமலை நாயக்கரின் பேரரும் தன் கணவருமான காலஞ்சென்ற சொக்கநாத நாயக்கரின் கம்பீரத் திருவுருவை மனக்கண்ணில் உருவகப்படுத்திப் பார்த்துவிட்டு அந்த நினைவு மாறுவதற்குள்ளே அதே ஞாபகத்தோடு அருகே உடன் வந்து கொண்டிருந்த மகன் ரங்ககிருஷ்ணமுத்து வீரப்பனையும் புறக்கண்களால் பார்த்து உள்ளூற ஒப்பிட்டுக் கொண்டாள் ராணி மங்கம்மாள்.

 

    • தஞ்சை மன்னர்களின் விரோதப் போக்கு, சேதுபதிகளின் மறவர் சீமை மனஸ்தாபங்கள், ரஸ்டம்கான் என்ற படைத் தளபதி தன் கணவரை ‘அரசரே இல்லை’ என்று கூறி அவமானப்படுத்த முயன்ற சம்பவம், கணவரின் சிரமங்கள், ஆட்சிக்கால வேதனைகள்… எல்லாம் ஞாபகம் வந்து அந்த ஞாபகத்தோடு மகனின் முகத்தை நம்பிக்கை பொங்கப் பார்த்தாள் அவள். அவன் சொன்னான் :

 

    • “ஏதோ கஷ்டம் வரப்போகிறது என்று இப்போது மனசில் படுகிறது அம்மா!”

 

    • மகனின் குரலிலே கவலை தோய்ந்திருப்பது தெரிந்திருந்தது.

 

    • “கவலைப்ப்டாதே! ஒவ்வொரு கஷ்டமும் நம்மை வளர்ப்பதற்குத்தான் வரும்! சுகங்கள் நம்மை ஒரேயடியாக அயர்ந்து தூங்கச் செய்துவிடாதபடி அடிக்கடி நம்மை விழிப்பூட்டுவதற்கு வருபவை எவையோ அவற்றிற்குத்தான் ஜனங்களின் பாமர மொழியில் கஷ்டங்கள் என்று பெயர் அப்பா!”

 

    • “கள்ளழகர் கருணையாலும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருவருளாலும் உங்கள் அரிய ஆலோசனையின் உதவியாலும் எந்தக் கஷ்டத்தையும் வென்று விடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது அம்மா!”

 

    • “மகனே! நம்பிக்கை தான் அரசியலில் தவம்! நம்பிக்கை தான் வெற்றி! நம்பிக்கை இருந்தால் எதையும் வெல்லலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லோரும் ஒன்றைத் தொடங்கு முன்னேயே தோற்றுப் போகிறார்கள். நம்பிக்கை உள்ளவர்களோ தோற்றுப்போன பின்னும் வெற்றி கொள்ளத் தொடங்குகிறார்கள். இந்த தாரக மந்திரம் உன் இதயத்தில் இடைவிடாமல் ஞாபகம் இருக்க வேண்டும். இந்த ஒரே மந்திரத்தால் தானே பெண் பிள்ளையாகிய நானே இத்தனை காலம் இத்தனை துன்பங்களுக்கும் விரோதங்களுக்கும் நடுவே இந்த நாட்டையும் உன்னையும் பாதுகாத்து வளர்க்க முடிந்தது?”

 

    • இவ்வாறு கூறிய படியே மகனுடன் தமுக்கம் அரண்மனைக்குள்ளே இருந்த விசாலமான ஆலோசனை மண்டபத்திற்குள் நுழைந்தாள் ராணி மங்கம்மாள்.

 

    • அங்கே காத்திருந்த படைத் தலைவர்களும் ஒற்றர் தலைவர்களும் முன் வந்து ஏழடி விலகி நின்று பயபக்தியோடு ராணி மங்கம்மாளையும், இளவரசரையும் வணங்கினார்கள். மங்கம்மாள் தான் முதலில் அவர்களை வினவினாள்:

 

    • “என்ன விஷயம்? நீங்கள் எல்லோரும் இத்தனை அவசரமாகப் புறப்பட்டு வந்திருப்பதிலிருந்து ஏதோ அவசரமான காரியம் என்று நான் அநுமானித்துக் கொண்டது சரியாக இருக்குமா?”

 

    • “உங்கள் அநுமானம் முற்றிலும் சரிதான் மகாராணீ! டில்லி பாதுஷா ஒளரங்கசீப்பின் படை வீரர்களும், செருப்பு ஊர்வலமும் திண்டுக்கல்லைக் கடந்து வேகமாக மதுரையை நோக்கி வந்து கொண்டிருப்பதைத் தெரிவிக்கவே நாங்கள் விரைந்து வந்தோம்”.

 

    • “இது படையெடுப்பா? அல்லது பயமுறுத்தலா?”

 

    • “இரண்டும்தான் மகாராணீ!”

 

    • “அது சரி; என்னவோ செருப்பு ஊர்வலம் என்கிறீர்களே…? அது என்ன கூத்து?”

 

    • “வருஷா வருஷம் தென்னாட்டு அரசர்களிடமும், சிற்றரசர்களிடமும் கப்பமும், வரியும் வாங்குவதற்குப் பாதுஷாவின் படைவீரர்கள் புறப்பட்டு வருவதுண்டல்லவா? இந்த வருஷம் ஒரு புது ஏற்பாடாக ஒளரங்கசீப்பின் கால் செருப்பு ஒன்றை யானை மேல் அலங்கார அம்பாரியில் ஜோடித்து வைத்து அனுப்பியிருக்கிறாரகள். கப்பம் கட்டுகிற நாட்டு அரசர்களும், மக்களும் அந்தச் செருப்பை வணங்கி வழிபட வேண்டுமாம்”.

 

    • “வணங்கி வழிபட மறுத்தால்?”

 

    • “அப்படி மறுப்பவர்களோடு அவர்கள் போர் தொடுப்பதாகப் பயமுறுத்துகிறார்கள்; அந்த பயமுறுத்தலுக்கு நடுங்கி எல்லா இடங்களிலும் அந்தப் பழைய செருப்புக்கு வணக்கமும், வழிபாடும் நடக்கிறது மகாராணீ!”

 

    • “இது, அக்கிரமம்… அநியாயம்…”

 

    • “அதிகாரத் திமிரில் இருப்பவர்கள் தங்கள் அக்கிரங்களையும், அநியாயங்களையும் கூடச் சட்ட ரீதியானவை என்று பிரகடனம் செய்து விட முடிகிறது அம்மா! அதை மீறினால் தண்டனை என்று அறிவித்து விடவும் முடிகிறது. அறியாது மக்கள் செய்யும் சில குற்றங்கள் சட்டப்படி தவறாகின்றன என்றால் இப்படி மன்னர்கள் செய்யும் சட்டங்களே தவறுகளாக இருக்கின்றன!”

 

    • “நம் நிலை என்ன? நாம் என்ன செய்யப் போகிறோம் என்றறிந்து செல்லவே மகாராணியையும், இளவரசரையும் காண வந்தோம்.”

 

    • “அம்மா! அழகரையும், ஆலவாயண்ணலையும் வணங்கிய தலையால் அந்நிய அரசனின் அடிமைச் சின்னமாகிய செருப்பை வணங்குவதற்கு ஒருபோதும் நாம் சம்மதிக்கக் கூடாது” என்று ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன் அன்னையை முந்திக்கொண்டு கொதிப்படைந்து சீறினான்.

 

    • படைவீரர்கள் ராணி மங்கம்மாளின் முகத்தை உத்தரவுக்காகப் பார்த்தனர். அது பதற்றமோ, பரபரப்போ, சலனமோ அற்று நிதானமாகவும், சிந்தனை லயிப்போடும் இருந்தது. ஒவ்வொரு வார்த்தையாகத் தேர்ந்தெடுத்து அளந்து பதறாத குரலில் மங்கம்மாள் பேசலானாள்:

 

    • “நீ சொல்வதை நான் மறுக்கவில்லை முத்து வீரப்பா! ஆனால் இதை ஆத்திரத்தோடு சமாளிப்பதைவிட மிகவும் அடக்கமாகவும் இராஜ தந்திரத்தோடும் சமாளிக்க வேண்டும். முன் கோபமும், ஆத்திரமும் அரசியல் காரியங்களில் ஒரு போதும் வெற்றியைத் தராது. நமது எதிரியைச் சந்திக்கத்தக்க விதத்தில் நம்மைப் பலப்படுத்தி ஆயத்த நிலையில் வைத்துக் கொண்டு தான் செயலில் இறங்க வேண்டும். அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவை.

 

    • ‘பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

 

    • உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்’

 

    • என்று வள்ளுவர் சொல்லியிருப்பதை நினைத்துப் பார்! எதிரியைக் கண்டு உடனே வியர்க்க விறுவிறுக்க முன் கோபப்பட்டுப் பயனில்லை. கோபம் முதலில் உள்ளத்தில் எழுதல் வேண்டும். பின் சமயம் பார்த்து அது வெளிப்படவும் வேண்டும்.”

 

    • “தங்கள் உத்தரவு எப்படியோ அப்படியே நடக்கும் மகாராணீ!”

 

    • “எங்கள் இளவரசர் ரங்ககிருஷ்ண முத்து வீரப்பர் சித்ரா பௌர்ணமிக்காகத் தரிசனத்துக்கு வந்த இடத்தில் நோய்வாய்ப் பட்டு மறுபடி திரிசிரபுரத்துக்கே திரும்பிவிட்டார். ஆகையால் நீங்கள் மதுரையில் சென்று அவரைச் சந்திக்க இயலாத நிலை” என்று கோபப்படாமல் பதறாமல் அடக்கமாகச் சென்று பாதுஷாவின் படைத் தலைவனிடம் தெரிவியுங்கள்…”

 

    • “பாதுஷாவின் படைத்தலைவன் தங்களைப்பற்றி விசாரித்தால்…?”

 

    • “என்னை இதில் சம்பந்தப்படுத்த வேண்டாம். அரசியல் காரியங்களை இளவரசரே நேரில் கவனிப்பதாகச் சொல்லிக் கொள்! நான் செய்ய வேண்டியதைப் பின்னால் திரை மறைவிலிருந்து செய்து கொள்ள முடியும்”.

 

    • “பாதுஷாவின் படைகளும் செருப்பு ஊர்வலமும் நம் ராஜ தானியாகிய திரிசிரபுரத்துக்கே தேடிக் கொண்டு வந்தால்…?”

 

    • “அப்படி வந்தால் அவர்களையும் அந்த பழைய செருப்பையும் எப்படிச் சந்திக்க வேண்டுமோ அப்படிச் சந்திக்க எல்லாம் ஆயத்தமாயிருக்கும், கவலை வேண்டாம். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. வீரர்களே! நாம் கடவுளுக்குப் பக்தர்களாக இருக்க முடியுமே ஒழிய மனிதர்களுக்கு அடிமைகளாக இருக்க முடியாது.”

 

    • இதைக் கூறும் போது ராணியின் குரலில் அழுத்தமும் காம்பீர்யமும் ஓர் உத்தரவின் உறுதியும் தொனித்தன.

 

    • இப்படி உத்தரவு கிடைத்தபின் ராணியையும் இளவரசரையும் வணங்கிவிட்டுப் புறப்பட ஆயத்தமான படை வீரர்களின் தலைவனை மீண்டும் அருகே அழைத்துத் தணிந்த குரலில் அவனிடம் சில இரகசிய உத்தரவுகளையும் பிறப்பித்த பின், “நினைவிருக்கட்டும்! நான் கூறியதை எல்லாம் உடனே நிறைவேற்று. நானும் இளவரசரும் இன்று மாலையிலேயே திரிசிரபுரம் புறப்பட்டுப் போய்விடுவோம்” என்றாள் அவள்.

 

    • வடக்கே அம்மைய நாயக்கனூரிலிருந்தும், திண்டுக்கல்லிலிருந்தும் வந்திருந்த படை வீரர்கள், ஒற்றர்களின் குதிரைகள் உடனே அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டதைத் தமுக்கம் மாளிகையின் உப்பரிகையிலிருந்து ராணியும் இளவரசரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

    • ————

 


 

2. சின்ன முத்தம்மாளுக்குப் பெரிய முத்துமாலை 

    • படை வீரர்களின் குதிரைகள் கண்பார்வைக்கு மறைகிற வரை அந்தத் திசையிலேயே பார்த்துக் கொண்டிருந்தான் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன். படை வீரர்களின் தோற்றம் கண் பார்வையில் தொலைதூரத்துப் புள்ளியாக மங்கி மறைந்த பின் தன் தாய் ராணி மங்கம்மாளின் பக்கம் திரும்பினான்.

 

    • “இது குனியக் குனியக் குட்டுவது போல் இல்லையா அம்மா? எவ்வளவு தான் பொறுத்துக் கொள்வது?”

 

    • “மகனே! அரசியலில் பொறுமை என்பதன் அர்த்தமே வேறு. நமது எதிரிக்கு நாம் அடக்கமாக இருப்பதுபோல் தோன்றச் செய்துவிட்டு அவனை எதிர்க்க இரகசியமாக நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்குத் தான் பொறுமை என்று பெயர்.”

 

    • “நாம் இப்படி நினைக்கிறோம். ஆனால் நம் எதிரிகளோ தூங்கினவன் தொடையில் திரித்தமட்டும் கயிறு மிச்சம் என்று நினைக்கிறார்கள்.”

 

    • “நாம் தூங்கினால்தானே அவர்கள் கயிறு திரிக்க முடியும்?”

 

    • தாயின் இந்தக் கேள்வியில் இருந்த குரல் அழுத்தம் மகனுக்குத் தெளிவாகப் புரிந்தது. அவள் நினைவோ உணர்வோ தூங்கவில்லை என்பதை அந்தக் குரல் புரியவைத்தது. தன்னை விட அதிக ஆத்திரம் அடைந்திருந்தும் தாய் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் உள்ளூறத் திட்டமிடுகிறாள் என்பதும் விளங்கிற்று.

 

    • அங்கே தமுக்கம் ராஜமாளிகையின் மேல் மாடத்திலிருந்து கம்பீரமாகத் தெரிந்த மதுரை மாநகரின் முழுமையான தோற்றமும், வையை நதியும் நகரின் இடையே இருந்தாலும் நகரை விட நாங்கள் உயர்ந்தவை என்பதுபோல் மேலெழுந்த கோபுரங்களும் அவனுள்ளே இருந்த பெருமிதத்தை வளர்த்தன. அவன் தோள்களைப் பூரிக்கச் செய்தன.

 

    • பகல் உணவுக்குப் பின் சிறிது களைப்பாறிவிட்டுத் தாயும், மகனும் திரிசிரபுரத்துக்குப் புறப்பட்டார்கள். அந்தப் பல்லக்குப் பயணம் மிகவும் பரபரப்பான மனநிலையோடு துரிதமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. வழி நெடுகிலும் இரைபட்டுக் கிடந்த வசந்த கால வளங்களைப் பார்க்கும் பொறுமையோ மனநிலையோ அப்போது அவர்களுக்கு இல்லை. மனதில் வேறு காரியமும் அதைப் பற்றிய கவலையும் இருந்தன. ஆற்றில் அழகர் இறங்குவதைத் தரிசனம் செய்து விட்டுத் திரும்புவோரும், தொடர்ந்து நடைபெறவிருந்த திருவிழாவைக் காண மதுரை மாநகருக்குச் செல்லுவோருமாகச் சாலையெங்கும் கலகலப்பாக இருந்தது. மதுரையின் திருவிழா வனப்பு சாலைகளிலும், சோலைகளிலும் தர்ம சத்திரங்களிலும் வழிப் பயணிகளிடமும் தேசாந்தரிகளிடமும் கூடத் தெரிந்தது. பால் பொழிவது போன்ற அந்த முழுநிலா இரவில் பிரயாணம் செய்யும் சுகத்தைக் கூட அவர்கள் அப்போது உணரவில்லை. சூரியாஸ்தமனமோ சந்திரோதயமோ கூட அவர்கள் மனத்தைக் கவரவில்லை.

 

    • அந்தப் பல்லக்கில் அமர்ந்திருப்பவர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதுபோல் அதைத் தூக்கிச் சென்றவர்கள் வாயு வேகத்தில் விரைந்து கொண்டிருந்தனர். ரங்ககிருஷ்ணன் பல்லக்கினுள் எதிரே அமர்ந்திருந்த தன் தாயைக் கேட்டான்.

 

    • “அம்மைய நாயக்கனூரிலிருந்தும் திண்டுக்கல்லிலிருந்தும் பாதுஷாவின் செருப்பு ஊர்வலத்தைப் பற்றிச் சொல்லிவிட்டுப் போக வந்தவர்களிடம் எனக்கு உடல் நலமில்லை என்றும் அதனால் நான் உடனே திரிசிரபுரம் திரும்புவதாகவும் சொல்லி அனுப்பினீர்களே, அதன் பொருள் என்ன அம்மா?”

 

    • “பாதுஷாவின் செருப்பையும், அதைவிட அடிமைகளான ஏவலாட்களையும் மதுரையிலேயே நாம் ஏன் காத்திருந்து எதிர்கொண்டு சந்திக்கவில்லை என்பதற்கு ஏதாவது ஒரு காரணத்தைச் சாக்குப்போக்காகச் சொல்ல வேண்டுமே அதனால் தான்…”

 

    • “மதுரையிலேயே அவர்களை எதிர்கொண்டு ‘மாட்டேன்’ என்று நேருக்கு நேர் மறுத்துவிட்டிருக்கலாமே அம்மா?”

 

    • “அது ராஜதந்திரமில்லை மகனே! போருக்கும் விரோதத்துக்கும் முன்னால் முதலில் நாம் நமது எதிரியைப் போதுமான அளவு குழப்பவும் இழுத்தடிக்கவும் வேண்டும். நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது நம் எதிரிக்கு முன்கூட்டியே தெரிந்துவிடக்கூடாது. நமது எதிரி அதிகபட்சமான தவறுகளையும் குழப்பங்களையும் புரிந்து தடுமாறுகிற எல்லைவரை நாமே அவனைத் துணிந்து அனுமதிக்கவேண்டும். யாரைத் தேடி வந்திருக்கிறார்களோ அவனுக்கே உடல் நலமில்லை என்றால் அவர்களது வேகம் தானே மட்டுப்படும்? எதிரியின் அந்த வேகக் குறைவு நாம் வேகம் பெறப் பயன்படும்.”

 

    • தாயின் மறுமொழியில் இருந்த சாமர்த்தியமும், சாதுர்யமும் ரங்ககிருஷ்ணனை வியப்பிலாழ்த்தின.

 

    • கிழக்கு வெளுத்துப் பின் மெல்ல மெல்லச் சிவக்கத் தொடங்கியது. அடிவான வெளுப்பில் அப்படியே ஒரு சித்திரத்தை எழுதிப் பதித்தது போல் மலைக்கோட்டையும் திரிசிரபுர நகரமும் தெரியத் தொடங்கின. புள்ளினங்களின் குரல்களும் அதிகாலையின் குளிர்ந்த காற்றும் பல்லக்கில் அமர்ந்திருந்தவர்களின் தளர்ச்சியைப் போக்கின. காவிரிக்கரை பிரதேசம் நெருங்க நெருங்கப் பல்லக்குத் தூக்கிகளின் உற்சாகம் அதிகமாகியது. பல்லக்குக்கு முன்னும் பின்னும் தீப்பந்தங்களோடு வெளிச்சத்துக்காக ஓடிக்கொண்டிருந்தவர்கள் தீவட்டிகளை அணைத்தார்கள். பல்லக்குத் தூக்கிகள் களைப்புத் தெரியாமலிருப்பதற்காகவும் உறங்கி விடாமல் இருப்பதற்காகவும் ஒரு சீரான குரலில் பாடிக்கொண்டிருந்த வழிநடைப் பாடல்கள் நகரம் நெருங்குவதையறிந்து ஒலி மங்கிப் படிப்படியாக நின்றன. உறையூரையும் கடந்தாயிற்று.

 

    • பல்லக்கினுள் ராணி மங்கம்மாள் திருவரங்கமும் மலைக்கோட்டையும் இருந்த திசைகளை நோக்கிக் கைகூப்பினாள். ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனும் அந்தத் திசைகளை நோக்கித் தொழுதான். மங்கம்மாள் கூறினாள்:

 

    • “மதுரையில் மீனாட்சி சுந்தரேசரும், கள்ளழகப் பெருமாளும் நம்மைக் காப்பாற்றி விட்டார்கள். இங்கே ரங்கநாதரும் மலைக்கோட்டைப் பெருமானும் காக்க வேண்டும்.”

 

    • “பாதுஷாவின் ஆட்கள் மதுரையோடு திரும்பிப் போய் விடமாட்டார்கள். இங்கேயும் வந்து தொல்லை கொடுப்பார்கள் என்றே தோன்றுகிறது அம்மா!”

 

    • “மகனே! உத்தமமான வீரர்கள் நியாயமான முறையில் தன் எதிரியை மதித்து அவனை வெல்லவேண்டும் என்று மட்டுமே நினைப்பார்கள். மத்திமமான வீரர்கள் எதிரியை அழித்து அவன் உடைமைகள் பொருள்கள் பெண்டு பிள்ளைகளைச் சூறையாட வேண்டும் என்று நினைப்பார்கள். மிகவும் மூன்றாந்தரமானவர்கள் எதிரியை வெல்வதோடு அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் அவமானப்படுத்த வேண்டும் என்றும் நினைப்பார்கள். டில்லி பாதுஷ ஔரங்கசீப்பின் ஆட்கள் மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள் என்று தோன்றுகிறது.”

 

    • “இருக்கட்டும் அம்மா! மூன்றாந்தரமான அவர்களுக்கு நாம் முதல் தரமான பாடத்தைக் கற்பித்து அனுப்பலாம்.”

 

    • திரிசிரபுரம் கோட்டையில் புகுந்த பல்லக்கு அரண்மணை முகப்பில் இறக்கப்பட்டது.

 

    • உயரமும் அதற்கேற்ற உடலழகும் நிறைந்த பேரழகி ஒருத்தி இளவரசன் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனுக்கு ஆரத்தி சுற்றிக் கொட்டி வரவேற்றாள். ராணி மங்கம்மாள் ஆரத்திக்குக் காத்து நிற்கவில்லை. ராணியை அழைத்துக் கொண்டு பணிப்பெண்கள் அந்தப்புரத்துக்குள் சென்றுவிட்டார்கள்.

 

    • அழகாகக் கோலமிட்டு இருந்த தரையில் ஆரத்தி சுற்றிக் கொட்டிய பெண்ணிடம் ரங்ககிருஷ்ணன் புன்முறுவலுடன் வினவினான்.

 

    • “நீ வரைந்த கோலத்தை உன் ஆரத்தி நீரால் நீயே அழித்து விட்டாயே முத்தம்மா!”

 

    • “சில திருக்கோலங்களைக் காண வந்தால் இப்படிச் சொந்தக் கோலங்கள் அழிவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது இளவரசே!”

 

    • “மதுரை மாநகரத்தில் இருந்த சில நாட்களில் உன்னை ஒரு கணம் கூட மறக்க முடியவில்லை முத்தம்மா!”

 

    • “அப்படியானால் பல கணங்கள் மறந்திருந்தீர்கள் போலிருக்கிறது”.

 

    • “அழகான பெண்கள் குதர்க்கமான பேச்சுக்களைப் பேசக் கூடாது.”

 

    • “இன்னும் கொஞ்ச நேரம் உங்களைப் பேச அனுமதித்தால் குதர்க்கமாகப் பேசுகிறவர்கள் அழகாக இருக்கக்கூடாது என்று கூடச் சொல்வீர்கள் போலிருக்கிறதே!”

 

    • “சொல்லலாம் தான்! ஆனால் அந்தத் தத்துவம் உனக்கு மட்டும் பொருந்தவில்லையே என்றுதான் தயங்க வேண்டியிருக்கிறது” என்று கூறியபடியே அவளருகில் நெருங்கினான் ரங்ககிருஷ்ணன். அங்கங்கே நின்ற பணிப்பெண்கள் மலர் கொய்யப் போகிறவர்கள் போல் விலகி நந்தவனத்திற்குள் புகுந்தனர்.

 

    • “சற்று எட்டியே நிற்கலாம், திடீரென்று மகாராணியாரே வந்தாலும் வந்துவிடுவார்.”

 

    • “அந்தக் கவலை உனக்கு வேண்டாம் முத்தம்மா. அம்மா நீராடித் திருவரங்கத்திற்கும் மலைக்கோட்டைக்கும் முதலில் தரிசனத்திற்குச் சென்று விட்டுத்தான் வேறு பக்கம் திரும்பவே அவகாசமிருக்கும்.”

 

    • “மாமன்னர் சொக்கநாத நாயக்கருக்கும் ராணி மங்கம்மாளுக்கும் புதல்வராகத் தோன்றிய தாங்கள் படையெடுக்கத் தேசங்களும், எதிரிகளும் இல்லாமற் போயிற்றா என்ன? இப்படித் திடீர் திடீரென்று என்னைப் போல அபலைப் பெண்களின் மேல் படையெடுப்பது ஏனோ?”

 

    • “மன்மதன் காரணமாக இருந்து நடக்கிற ஆக்கிரமிப்புகள் எதிரிகளோடு நடப்பதில்லை பெண்ணே! பரஸ்பரம் இருவருமே ஜெயிக்கிற போருக்கு எதிரி ஏது? நண்பன் ஏது?”

 

    • “மதுரை மாநகரிலிருந்து உங்கள் பிரியத்துக்குரியவளுக்கு என்ன வாங்கி வந்தீர்களாம்?” – அவள் குரலில் பிணங்குவது போன்ற சிணுக்கம் ஒலித்தது. ரங்ககிருஷ்ணன் அவளது சின்ன இடையைத் தன் கரங்களால் வளைத்துத் தழுவினான். பின் தனது இடுப்பிலிருந்து பட்டுத் துணியாலான சுருக்குப்பை ஒன்றை எடுத்துப் பிரித்துப் பளீரென்று மின்னும் அழகிய பெரிய முத்துமாலை ஒன்றை அவள் கழுத்தில் அணிவித்தான்.

 

    • “சின்ன முத்தம்மாவுக்குப் பெரிய முத்துமாலை.”

 

    • “இந்த முத்துமாலையை விட்டால் மதுரை மாநகரத்தில் வாங்கிவர வேறென்ன கிடைக்கப்போகிறது உங்களுக்கு?”

 

    • “நீ வாய்விட்டுக் கலீர் கலீரென்று சிரிக்கும் போதெல்லாம் உன் பல் முத்துக்களைப் பார்த்து இந்தப் புகழ்பெற்ற கொற்கை முத்துக்கள் அவமானப்பட்டுப் புழுங்கட்டுமே என்றுதான் இவற்றை வாங்கி வந்தேன்.”

 

    • “ஆகா! பிரமாதம்! பிரமாதம்! நீங்கள் இந்த இளவரசுப் பொறுப்பை விட்டுவிட்டு, கவி எழுதவே போகலாம்.”

 

    • “பாடுவதற்குரிய பொருளாக அல்லது பாத்திரமாக உன்னைப் போல் வசீகரமான பேரழகி ஒருத்தி கிடைப்பதாயிருந்தால் அதற்கும் நான் சித்தமாயிருக்கிறேன் முத்தம்மா!”

 

    • “அப்படியானால் ஓர் அழகான பெண் அகப்பட்டால் இருக்கிற பொறுப்புகளை எல்லாம் கைகழுவத் துணிவீர்கள் என்று சொல்லுங்கள்!”

 

    • “எல்லா அழகான பெண்களுக்காகவும் அல்ல. இந்தச் சின்ன முத்தம்மாள் என்கிற ஒரே ஓர் அழகிக்காக மட்டும் தான் அதைச் செய்யமுடியும்.”

 

    • அவள் நாணித் தலைகுனிந்தாள். மணமுள்ள பூவுக்கு நிறம் போல அழகிய அவளுக்கு அந்த நாணம் மேலும் அழகூட்டியது. உயரத்திலும் வனப்பு வாய்ந்த கட்டழகுத் தோற்றத்திலும் முத்தம்மாள் ரங்ககிருஷ்ணனுக்கு இணையாக இருந்தாள். அந்த அரண்மனையிலேயே நம்பிக்கைக்குரியவளாக வளர்ந்த முத்தம்மாளும் ரங்ககிருஷ்ணனும் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாகவும், பிரியமாகவும் நேசிப்பது ராணிமங்கம்மாளுக்குத் தெரிந்த விஷயம் தான். ஆனால் எல்லோருக்கும் ஒரு சிறிய சந்தேகமும் இருந்தது. நாயக்க வம்சத்தில் பலர் வைத்துக் கொண்டிருந்தது போல் அந்தப்புரத்து உரிமை மகளிரில் ஒருத்தியாக முத்தம்மாளை ஏற்றுக் கொள்வார்களா? அல்லது ரங்ககிருஷ்ணனின் பட்டத்தரசியாகவே ஏற்பார்களா என்பது சந்தேகத்துக்கிடமானதாயிருந்தது.

 

    • ராணி மங்கம்மாள் குடிப்பிறப்பு அந்தஸ்து என்றெல்லாம் பார்த்து எங்கே முத்தம்மாளை வெளிப்படையாகப் பட்டத்து மகிஷியாய் ஏற்காமல் அந்தப்புரத்து மகளிர் எனற அழகு மந்தைக்குள் தள்ளிவிடுவார்களோ என்னும் பயத்துக்குக் காரணமில்லாமலில்லை.

 

    • ராணி மங்கம்மாளை மணப்பதற்கு முன் அவள் கணவர் சொக்கநாத நாயக்கர் தஞ்சை நாயக்க அரசபரம்பரையைச் சேர்ந்த விஜயராகவ நாயக்கரின் வம்சத்தில் பெண்ணெடுக்க முயன்று முடியாமற் போயிற்று. காரணம், தஞ்சை நாயக்க வம்சம் விஜயநகர அரச வம்சத்துக்கு இணையான அந்தஸ்து உடையது என்றும், மதுரை நாயக்க வம்சம் அத்தகைய அந்தஸ்து உடையதில்லை என்றும் சொல்லப்பட்டது. அதிலிருந்தே தஞ்சை நாயக்க வம்சத்துக்கும் மதுரை நாயக்க வம்சத்துக்கும் விரோதம் நீடித்தது.

 

    • விஜயநகர மாமன்னராய் இருந்த அச்சுதராயரின் தங்கை கணவரான செல்லப்ப நாயக்கர் தஞ்சையில் ஆண்ட நாயக்க வம்சத்தின் முதல்வர். ஆனால் சொக்கநாத நாயக்கரோ பேரரசின் ஊழியராக நியமனம் பெற்று மதுரைக்கு வந்த விசுவநாத நாயக்கரின் வழித்தோன்றல்களில் ஒருவர். நேரடியான அரசவம்சமில்லை. இந்த அந்தஸ்துப் பிரச்சனை சொக்கநாத நாயக்கரையே உறுத்தியது; இதே அந்தஸ்தை மனதில் கொண்டு ரங்ககிருஷ்ணனுக்கு எந்த அந்தஸ்துமில்லாமல் சிறு வயதிலிருந்தே அரண்மனையில் வளர்ந்துவரும் முத்தம்மாளை மணமுடிக்கத் தயங்குவார்களோ என்ற சந்தேகம் சகலருக்கும் இருந்தது.

 

    • தாங்கள் உயர்ந்த ராஜவம்சம் என்று மற்றவர்களுக்கு நிரூபித்துக் காட்டுவதற்காகவே ராஜபரம்பரையில் மங்கம்மாள் தன் மருமகளைத் தேடக்கூடும் என்ற எண்ணம் அரண்மனை வட்டாரத்தில் பரவலாக நிலவியது. ஆனால் ரங்ககிருஷ்ணனோ தன் ஆருயிர்க் காதலி பேரழகி முத்தம்மாளுக்கு வாக்குக் கொடுத்திருந்தான். “மணந்தால் உன்னை மட்டுமே மணப்பேன். உடலாலும் உள்ளத்தாலும் உன் ஒருத்திக்கு மட்டுமே நாயகனாக இருப்பேன்.”

 

    • இப்படி அவன் வாக்களித்தபோது முத்தம்மாள் அவனிடம் ஞாபகமாக ஒன்றைக் கேட்டிருந்தாள்.

 

    • “உங்கள் அரசவம்சத்தில் ஒவ்வோர் இளவரசரும் குறைந்தது இருநூறு பெண்களுக்காவது வாக்களித்திருக்கிறார்கள். இருநூறு பேரையும் அந்தப்புரத்தில் ஆசை நாயகிகளாக வைத்துக்கொண்டு அந்த வாக்கைக் காப்பாற்றி விட்டு அப்புறம் ஒரு பட்டத்து அரசியையும் மாலையிட்டு மணந்திருக்கிறார்கள். நீங்களும் அப்படி ஒரு வாக்குறுதியைத்தானே எனக்கு அளிக்கிறீர்கள்? அப்படி வாக்குறுதிக்கும் நீர்மேலெழுதிய எழுத்துக்கும் என்ன வித்தியாசம்?”

 

    • “இல்லை முத்தம்மா! எங்கள் வம்சத்திற்கே இது விஷயத்தில் நான் முன்னுதாரணமாக இருப்பேன். எனக்குப் பட்டத்தரசி, ஆசை நாயகி எல்லாமுமாக நீ ஒருத்திதான் இருப்பாய்” என்று அப்போது அவன் அவளுக்கு உறுதி கூறி வாக்களித்திருந்தான்.

 

    • ஆனால் மகாராணியும் அமைச்சர்கள் பிரதானிகள் ஆகியோரும் மூத்தவர்களும் பட்டத்தரசி விஷயமாக முடிவு செய்யும்போது அரசியல் காரியங்களைக் கொண்டு முடிவு செய்வார்களோ அல்லது ரங்ககிருஷ்ணனின் சொந்த இலட்சியத்துக்காக முடிவு செய்வார்களோ என்ற கலக்கமும் ஐயமும் முத்தம்மாளுக்கே உள்ளூற இருந்தன.

 

    • “ஓர் அரச வம்சத்துக்கு இளவரசரின் திருமணம் என்பது அவனுடைய சொந்த ஆசையைப் பொறுத்தது மட்டுமில்லை. அவனது ஆசை மிகவும் சிறிய குறைந்த முக்கியத்துவமுள்ளதாகி அதைவிடப் பெரிய முக்கியத்துவமுள்ள ராஜதந்திர பிரச்சனைகளுக்காகவும் அது எதிர்பாராத விதமாக நடந்துவிடலாம். உலகில் பல அரச குடும்பங்களில் அப்படித்தான் நடந்திருக்கிறது” என்றெல்லாம் முத்தம்மாளே ரங்ககிருஷ்ணனிடம் விளையாட்டாகவும் வினையாகவும் வாதிட்டிருக்கிறாள். இன்றும் கூட மதுரையிலிருந்து திரும்பியிருந்த இளவரசரிடம் அதேபோலச் சொல்லிப் பிணங்கினாள் அவள்.

 

    • “அரசகுமாரர்கள் காதல் வேட்கை மிகுதியால் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அளிக்கும் மோதிரங்கள் முத்து மாலைகள் எல்லாம் வரலாற்றில் துயரங்களின் சாட்சியாக நிரூபணமாகி இருக்கின்றனவே ஒழியச் சத்தியங்களின் சாட்சியமாகவோ சாத்தியங்களின் சாட்சியமாகவோ நிரூபணமானதாக ஒரு சின்ன உதாரணம் கூட இல்லையே இளவரசே?” “நீ அதிகம் தான் சந்தேகப்படுகிறாய் முத்தம்மா!”

 

    • “சாம்ராஜ்யாதிபதிகள் விஷயத்தில் சந்தோஷப்படுவதை விட அதிகம் சந்தேகப்பட வேண்டிய அவசியம் தான் இருக்கிறது இளவரசே! சகுந்தலை ஏமாந்தாள். காளிதாஸனுக்குக் காவியம் கிடைத்தது. என்னைப்போல் ஓர் அப்பாவி ஏமாந்தால் வரலாறுகூட அதை மறந்துவிடும். அல்லது மறைத்துவிடும்.”

 

    • “உனக்கு எதற்குக் காவியம் முத்தம்மா! நீயே ஒரு நடமாடும் காவியமாக இருக்கிறாயே?”

 

    • “எல்லா அரசகுமாரர்களுக்கும் எது தெரிகிறதோ தெரியவில்லையோ, வஞ்சகமில்லாமல் புகழத் தெரிகிறது. புகழ் என்பது செலவில்லாதது. சுலபமானது…! காற்றோடு போய்விடக் கூடியது.”

 

    • “உன் விஷயத்தில் அது இயற்கையானது. பொருத்தமானது. உன்னைப் புகழும் போது வார்த்தைகள் ஏழ்மை அடைந்து விடுகின்றன. பொருள் வறுமைப்பட்டுப் போகிறது.”

 

    • “போதும் உங்கள் புகழ்! என் தோழிகள் நந்தவனத்திலிருந்து திரும்புவதற்குள் நானும் அங்கு போக வேண்டும். இல்லையானால் அவர்களே இங்கு என்னைத் தேடிக்கொண்டு வந்து விடுவார்கள். நான் போய் வருகிறேன்” என்று ரங்ககிருஷ்ணனிடமிருந்து விடுபட்டு நந்தவனத்துப் பக்கமாக நழுவினாள் முத்தம்மாள்.

 

    • பொற்சிலை போன்ற அவள் நடந்து செல்லும் அழகை இரசித்தபடி நின்றான் ரங்ககிருஷ்ணன்.

 

    • எதிர்பாராத விதமாக அன்று அவனையும் திருவரங்கம் கோவிலுக்கு வரவேண்டும் என்று தாய் மங்கம்மாள் திடீரென்று வேண்டவே அவனும் நீராடித் தாயுடன் தரிசனத்துக்குப் புறப்பட வேண்டியதாயிற்று.

 

    • பல்லக்கில் போகும் போது தாய் அவனிடம் மீண்டும் டில்லி பாதுஷா விஷயத்தை அவளாகவே தொடங்கினாள்.

 

    • “ஔரங்கசீப்பின் ஆட்கள் இங்கு வர இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம். அதற்குள் இங்கே சில முக்கிய மாறுதல்கள் நடந்தாக வேண்டும். இப்போது இந்த அரண்மனையிலுள்ள இரண்டுங்கெட்ட நிலை நீடிக்கக்கூடாது. நான் இதுவரை உனக்குப் பட்டம் சூட்டவில்லை. முழுமையாக நானேயும் ஆளவில்லை. கணவனை இழந்த நிலையில் ஏதோ சமாளிக்கிறேன். எதிரிகள் வந்து நம் கதவைத் தட்டும் போது எவ்வளவுதான் கெட்டிக்காரியாக இருந்தாலும் ஒரு பெண் என்ற முறையில் சிலவற்றை நான் எதிர்கொள்வதில் பல பண்பாட்டுச் சிக்கல்கள் உண்டாகும் மகனே! அந்நிய அரசன் அந்நிய மதத்தைச் சேர்ந்தவன். ஒரு செருப்பை அனுப்பிக் ‘கும்பிடு’ என்கிறான். என்னைப்போல் ஓர் அரச குடும்பத்துப்பெண் அதை ஆதரிக்கவும் முடியாது. எதிர்த்து அவமதித்தாலும் ஒரு பெண் அவமதித்த விட்டாளே என்ற உணர்வில் எதிரியின் ஆத்திரம் பலமடங்கு அதிகமாகும். எதிர்க்கவும் வேண்டும். நாம் எதிர்த்தது நியாயமென்றும் ஆண்மையென்றும் எதிரிக்கு உறைக்கும்படி எதிர்க்கவும் வேண்டும். என்ன செய்வதென்று முடிவைப் பள்ளிகொண்ட பெருமாளிடமே கேட்கப் போகிறேன் மகனே!”

 

    • “எப்படி அம்மா?”

 

    • “பூக்கட்டி வைத்துப் பார்த்தால் அரங்கன் முடிவைச் சொல்லுவான் அப்பா!”

 

    • அவர்கள் பேசிக்கொண்டிருந்த போதே பல்லக்கு சந்தனமும் சண்பகமும் பச்சைக் கர்ப்பூர வாசனையும் மணந்து கொண்டிருந்த திருவரங்கமுடையானின் சந்நிதி முகப்பில் போய் இறங்கியது.

 

    • ————

 

3. பாதுஷாவின் பழைய செருப்பு 

    • அரவணையில் துயிலும் அரங்கநாதப் பெருமாளின் தரிசனம் கிடைத்ததோடன்றி, ராணி மங்கம்மாள் தன் மனத்தில் கருதிப் பூக்கட்டி வைத்துப் பார்த்த மிக முக்கியமான அரசியல் பிரச்சனைக்கும் அந்தப் பெருமாளே வழிகாட்டி உதவவும் செய்தார். அவள் எண்ணியபடியே செய்ய அரங்கனின் உத்தரவும் கிடைத்தது. திரும்புகிற வழியில் திருவானைக்காவிலும், நகருக்குள் மலைக்கோயிலிலும் வழிபாட்டை முடித்துக்கொண்டு, அவர்கள் அரண்மனைக்குத் திரும்பும்போது உச்சிவேளை ஆகியிருந்தது.

 

    • மலையிலிருந்து கீழே இறங்கும்போதே, கோயிலில் உச்சிகால பூஜைக்கான மணி ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

 

    • “மகனே! நான் உன்னிடம் எதைப் பேச நினைத்தேனோ அதைப் பேசத் தொடங்கும்போதே ஆலயமணியின் அருள் நாதம் கூட அதை ஆமோதிப்பது போல ஒலிக்கிறது. திருவரங்கத்துக்குப் போகும்போது நான் ஏற்கனவே சொல்லியபடி பொறுப்புகளை உன்னிடம் ஒப்படைக்க அரங்கனும் அனுமதி அளித்துவிட்டான்.”

 

    • “அதற்கு இத்தனை அவசரமும் அவசியமும் ஏன் அம்மா?”

 

    • “இந்த அவசரத்துக்கும் அவசியத்துக்கும் என்ன காரணம் என்பதை நீயே நாளடைவில் புரிந்து கொள்வாய் ரங்ககிருஷ்ணா! உன் தந்தை இறந்த போதே, நானும் என்னை மாய்த்துக்கொள்ள நினைத்தேன்; அப்போது உன்னை நான் கருவுற்றிருந்த காரணத்தினால் என் உள்ளுணர்வே என்னைத் தடுத்தது. மற்றவர்களும் தடுத்துவிட்டார்கள். இந்த வம்சம் வாழவும் இதன் ஆளுமைக்கு உட்பட்ட மக்கள் நன்றாயிருக்கவுமே நான் இந்தச் சுமையை ஏற்றுத் தாங்கிக் கொண்டேன். சக்தியால் சிலவற்றையும் சமாளித்து வருகிறேன். ஆனாலும் தொடர்ந்து நான் இவற்றை நேரடியாகச் செய்யமுடியாது. உனக்குப் பட்டம் சூட்டியே ஆகவேண்டும்…”

 

    • “உங்கள் உத்தரவை மீறக்கூடாது என்பதற்காக நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டாலும், தொடர்ந்து உங்களது யுக்தியாலும் சக்தியாலுமே நான் காரியங்களைச் சாதிக்கமுடியும் அம்மா!”

 

    • “அந்த வகையில் என் ஒத்துழைப்பை நீ குறைவில்லாத வகையில் பெறமுடியும் மகனே!”

 

    • – இந்த உரையாடலுக்குப் பின் அரண்மனைக்குத் திரும்பிய மறுகணத்திலிருந்து போர்க்கால அவசரத்தோடு துரிதமாக ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினாள் ராணி மங்கம்மாள். அரண்மனைப் புரோகிதர்களை அழைத்து அவசரமாக நல் முகூர்த்தங்களைப் பார்த்தாள். அவளுடைய அவசரத்துக்கும் அவசியத்துக்கும் ஏற்றபடி அடுத்த சில நாட்கள் தொடர்ந்து நல்ல நாட்களாகவே வாய்த்திருந்தன. அரண்மனை வட்டாரத்தினர் அனைவருக்குமே அந்த ஏற்பாடுகளின் வேகம் ஆச்சரியத்தை அளித்தது. ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனின் விவாகத்துக்கும் முடிசூட்டு விழாவுக்கு அடுத்தடுத்து மங்கல முகூர்த்தங்கள் குறிக்கப்பட்டாயிற்று.

 

    • அரண்மனையில் விவரமறிந்த எல்லாரும் வியக்கும்படி ரங்ககிருஷ்ணமுத்துவீரப்பனின் திருமணம் சின்ன முத்தம்மாளுடன் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ராணி மங்கம்மாளுக்கே அவளுடைய தாய் வீட்டுப் பெயராக ‘அன்ன முத்தம்மாள்’ என்பது திருமணத்துக்கு முன் வழங்கிய காரணத்தால் அரண்மனையிலேயே மங்கம்மாளுக்குத் துணையாகவும், உறவினராகவும் உடனிருந்த மூத்த பெண்கள் சிலர் பழைய பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியாமல் ‘ராணி முத்தம்மா’ என்றே அழைத்தும் வந்தனர். அன்ன முத்தம்மாளான ராணி மங்கம்மாளுக்கும், இந்த இளம்வயது முத்தம்மாளுக்கும் ஓர் அடையாள வித்தியாசமாகத்தான் இவளைச் ‘சின்ன முத்தம்மாள்’ என்று அழைக்கத் தொடங்கியிருந்தார்கள்.

 

    • ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக விரைந்து மேற்கொள்ளப்பட்ட திருமண வைபவமும், முடிசூட்டு விழாவும் அளவு கடந்த கோலாகலத்தையும், குதூகலத்தையும் கொண்டிருக்கவில்லை. அரண்மனைச் சுற்றத்தையும், உறவினரையும் தவிர, அந்த ஆட்சியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு அங்கங்கே இருந்த படைத் தலைவர்களுக்கும், தளபதிகளுக்கும், தளவாய்களுக்கும், தலைக்கட்டுக்களுக்கும் மட்டுமே அவசரம் அவசரமாக அழைப்புச் சொல்லி வரத் தூதுவர்கள், விரைந்து பாயும் புரவிகள் மூலம் அனுப்பப்பட்டனர்.

 

    • இந்த ஏற்பாடுகள் அரண்மனை வட்டாரங்களிலும் சுற்றத்தினரிடமும் இரண்டு விதமான வியப்பைக் கிளரச் செய்தன. பாதுகாப்பையும் அரசியல் உதவியையும் கருதி மங்கம்மாள் ஒரு பெரிய அரச வம்சத்தில்தான் பெண்ணெடுப்பாள் என்று நினைத்திருந்தவர்களுக்கு, அவள் சின்ன முத்தம்மாளைத் தேர்ந்தெடுத்தது வியப்பாயிருந்தது. திடீரென்று இந்த வைபவங்கள் ஏற்பாடு செய்யப்படுவானேன் என்பது மற்றொரு வியப்பாயிருந்தது. காரணம், இந்த ஏற்பாட்டில் சம்பந்தப்பட்டிருந்த ராஜதந்திரப் பிரச்சனைப் பலருக்குத் தெரியாதிருந்ததுதான்.

 

    • திரிசிரபுரத்தில் அந்தத் திருமண வைபவமும், பட்டாபிஷேகமும் அதை ஒட்டி நடந்த பட்டணப்பிரவேசமும் நம்பமுடியாத வேகத்தில் நடந்து முடிந்தன. பட்டணப்பிரவேசம் முடிந்து அரண்மனை திரும்பியதுமே முடிசூடிய கோலத்தில் பட்டத்தரசியாகச் சின்னமுத்தம்மாளையும் அருகிலழைத்துக் கொண்டு, எதிரே தன் ஆசிகோரி வந்து வணங்கிய மகனைப் பார்த்ததும் ராணி மங்கம்மாள் அவனுக்கு ஆசி கூறி வாழ்த்திய பின் மேலும் கூறினாள்.

 

    • “மகனே! பாதுஷாவின் ஆட்களும் பழைய செருப்பும் நாளைப் பகலில் இங்கே வரக்கூடுமென்று தெரிகிறது. உனது திருமணத்திற்காகவும், முடிசூட்டு விழாவுக்காகவும் இங்கே வந்த படைத்தலைவர்களும், படைவீரர்களும் கோட்டைச்சுற்றி நாலா பக்கமும் மறைந்திருப்பார்கள். நானும் சின்ன முத்தம்மாளும் சபைக்கு வரா விட்டாலும் உப்பரிகையில் அமர்ந்து சபையைக் கவனித்துக் கொண்டிருப்போம். உன்னுடைய இந்தப் பேரழகியான மனைவியின் கடைக்கண் பார்வையில் நீ உறுதியாக நடந்து கொள்ளத்தக்க நெஞ்சுரம் உனக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் உன்னை வாழ்த்துகிறேன்.”

 

    • “தாயே! உங்கள் ஆசி கிடைக்குமானால் எத்தகைய எதிரியையும் வெல்லும் பலம் எனக்கு வந்துவிடும்”.

 

    • “சொல்லிக் கொடுத்த வார்த்தைகளும், கட்டிக் கொடுத்த சோறும் அதிக நேரம் கெடாமல் இருக்காது மகனே! என்று எந்த வேளையில் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று அன்று அந்த வேளையில் அப்போதே துணிந்து முடிவு செய்யும் மனோதிடம் உனக்கு வந்தாலொழிய ராஜ்ய பாரத்தைத் தாங்க உன்னால் முடியாது.”

 

    • “நீங்கள் உடனிருக்கும் வரை எனக்கு எதுவும் சிரமமில்லை தாயே!” என்று மீண்டும் வணங்கினான் ரங்க கிருஷ்ண முத்துவீரப்பன்.

 

    • ராணி மங்கம்மாள் சிரித்தபடியே சின்ன முத்தம்மாளைப் பார்த்துக் கூறலானாள்:

 

    • “முத்தம்மா! இளவரசரைக் கெட்டிக்காரியும் பேரழகியுமான உன்னைப் போன்ற பெண் ஒருத்தியிடம் ஒப்படைத்திருக்கிறேன். இளவரசரின் வீரத்தையும், செருக்கையும், தன்மானத்தையும் வளர்ப்பதாக உன் அழகு அமைய வேண்டும்! கெட்டிக்காரத்தனமில்லாத அழகும் – அழகில்லாத கெட்டிக்காரத்தனமும் அரசியல் காரியங்களுக்குப் பயன்படுவதில்லைப் பெண்ணே!”

 

    • சின்ன முத்தம்மாள் இதைக் கேட்டுப் பவ்யமாக நாணித் தலை குனிந்தாள். அவர்கள் இருவரையும் விடைகொடுத்து அனுப்பிவிட்டு இராயசத்தை அழைத்துச் சில உத்தரவுகள் போட்டாள் ராணி மங்கம்மாள்.

 

    • மறுநாள் பொழுது புலரும் பொழுது காவிரிக்கரையில் கதிரவன்கூட ஆவலோடு உதித்தாற் போலிருந்தது. திரிசிரபுரம் கோட்டையில் அரசவை கூடிய போது பட்டம் சூடிக்கொண்ட ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன் அரியணையில் கம்பீரமாகக் கொலுவீற்றிருந்தான்.

 

    • அந்தப்புர பகுதியிலிருந்து புறப்பட்டு வந்து அப்படியே மேல்மாடத்து உப்பரிகையிலிருந்து அரசவையைக் காண முடிந்த வகையில் ராணி மங்கம்மாளும் சின்ன முத்தம்மாளும் அங்கே அமர்ந்திருந்தார்கள்.

 

    • பட்டம் சூடிப் பதவியேற்றிருக்கும் இளவரசைப் புகழ்ந்து தமிழ்ப் புலவர்களும், சில தெலுங்குப் புலவர்களும் கவிதை பாடினார்கள்.

 

    • சபையும், அரசரும் கவிதைகளை இரசித்துக்கொண்டிருக்கும் போதே, “டில்லி பாதுஷாவின் பிரதிநிதியும், ஆட்களும் கோட்டை வாசலில் காத்திருக்கிறார்கள்” என்று தகவல் வந்தது. அவர்களை உள்ளே அழைத்து வரச் சொல்லி ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன் சிறிதும் தயங்காமல் உடனே எதிர்கொள்ள ஆயத்தமானான்.

 

    • யானையைக் கோட்டை வாசலிலேயே நிறுத்திவிட்டு அதன்மேல் அம்பாரியிலிருந்த ஔரங்கசீப்பின் பழைய செருப்பை அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு பழுக்காத் தாம்பாளத்தில் எடுத்து வைத்துக்கொண்டு உடன் வந்திருந்த வீரர்கள் பின் தொடர ஆடம்பரமாகவும் படாடோபமாகவும் உள்ளே நுழைந்தான் பாதுஷாவின் பிரதிநிதி.

 

    • நெடுந்தூரம் பயணம் செய்திருந்த களைப்பாலும் எங்கேயும் யாரும் போரிடாததாலும் டில்லியிலிருந்தே உடன் வந்திருந்த படை வீரர்களில் பெரும் பகுதியினரை அநாவசியம் என்று கருதி மதுரையிலிருந்தே அவசரப்பட்டு வடக்கே திருப்பி அனுப்பியிருந்தான் அந்தப் பிரதிநிதி.

 

    • “இளவரசருக்கு உடல் நலமில்லை. திரிசிரபுரம் திரும்புகிறார்” என்று மதுரை தமுக்கம் மாளிகையிலிருந்து ராணி மங்கம்மாள் திண்டுக்கல்லுக்கு அனுப்பியிருந்த தகவல் வேறு டில்லியிலிருந்து வந்திருந்த ராஜப்பிரதிநிதியின் வேகத்தைத் தடுத்துப் போதுமான அளவு குழப்பியிருந்தது.

 

    • எல்லாரும் தலைவணங்கிவிட்ட செருப்புக்கு ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனும் மறுக்காமல் தலை வணங்கி விடுவான். படைபலத்தைக் காட்டி அவனை மிரட்ட வேண்டிய அவசியம் இராது. தானும் சில வீரர்களும் பழைய செருப்புடன் திரிசிரபுரம் சென்றாலே போதுமானது என்ற முடிவுடந்தான் அந்தப் பிரதிநிதி அன்று அங்கே வந்திருந்தான்.

 

    • டில்லி பாதுஷாவின் பிரதிநிதி வேகம் குறைந்து குழம்பி விடவேண்டும் என்பதை எதிர்ப்பார்த்துத்தான் மதுரையிலேயே அவனை எதிர்கொண்டு சந்திக்காமல் கவனத்தைத் திசை திருப்பி மகனுக்கு உடல் நலமில்லை என்று சொல்லித் திரிசிரபுரம் திரும்பியிருந்தாள் ராணி மங்கம்மாள்.

 

    • “இத்தனைப் பேர் எதிர்க்காத பாதுஷாவின் செருப்பை ஒரு விதவையை தாயாகக் கொண்ட நோயுற்ற ஓர் இளவரசனா எதிர்க்கப்போகிறான்?” – என்று நினைத்து மிகவும் அலட்சியமாகவும் சற்று அஜாக்கிரதையாகவும் திரிசிரபுரத்துக்கு வந்திருந்தான் டில்லி பாதுஷாவின் பிரதிநிதி.

 

    • பாதுஷாவின் பிரதிநிதியை எதிர்கொண்டு வரவேற்று அவையில் அமரச் செய்தான் ரங்ககிருஷ்ணன். இராயசத்தை அழைத்துத் தந்தை சொக்கநாத நாயக்கரின் மறைவுக்குப் பின் தாய் வழக்கமாக டில்லி பாதுஷாவுக்குச் செலுத்தி வந்த கப்பத்தொகையையும் கூட முறையாகச் செலுத்தச் செய்தான். பெருமக்கள் நிறைந்திருந்த அந்த ராஜசபையில் பாதுஷாவின் பிரதிநிதியையும் உடன் வந்திருந்தவர்களையும் அதிகபட்ச முகமலர்ச்சியோடும் விநயத்தோடும் மரியாதையோடும் நடத்தினான் ரங்ககிருஷ்ணன்.

 

    • ஒரு சுவாரஸ்யமான ஏற்கனவே நன்கு ஒத்திகை செய்யப்பட்ட நாடகத்தைப் பார்ப்பதுபோல் மேலே உப்பரிகையிலிருந்து ராணி மங்கம்மாளும் சின்ன முத்தம்மாளும் அவையில் நடப்பதை எல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். பாதுஷாவின் பிரதிநிதிக்கும் ரங்ககிருஷ்ணனுக்கும் உரையாடல் தொடர்ந்தது.

 

    • “இளவரசருக்கு உடல் நலமில்லை என்பதாகச் சொன்னார்கள். இப்போது எப்படியோ?”

 

    • “நோயும் விருந்தும் எப்போதாவது வரக்கூடியவை… இப்போது தாங்கள் வந்திருப்பதைப் போல…”

 

    • “நோயாக வந்திருக்கிறேன் என்கிறீர்களா? விருந்தாக வந்திருக்கிறேன் என்கிறீர்களா?”

 

    • “நான் விருந்தென்று எண்ணித்தான் சொன்னேன். தங்களுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படி வைத்துக் கொள்வதில் எனக்கு ஆட்சேபணை இல்லை.”

 

    • “முடிசூடிப் பட்டமேற்றுக் கொண்டபின் இளவரசருக்கு மிகவும் சாதுர்யமாகப் பேச வருகிறது.”

 

    • “பேச்சு மட்டும் அப்படி என்று பாதுஷாவின் மேலான பிரதிநிதி அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது.”

 

    • “தாங்கள் தாய் மகாராணி மங்கம்மாள் இப்படியெல்லாம் சாமர்த்தியமாகப் பேசுவதில் நிபுணர் என்று கேள்வி…”

 

    • “மறுக்கவில்லை. ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இப்போது நீங்கள் என்னோடு தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.”

 

    • “பாதுஷாவின் புதிய நிபந்தனை இளவரசருக்கும் மகாராணிக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.”

 

    • “எப்போது நிபந்தனை புதிதோ அப்போது அதை நீங்களே வெளிப்படையாகச் சொல்லிவிட வேண்டியதுதான் முறை.”

 

    • பதில் பேசாமல் பாதுஷாவின் பிரதிநிதி தன்னுடன் வந்திருந்த வீரர்களில் ஒருவனுக்குச் சைகை காட்டி அழைத்து ஏதோ கூறினான்.

 

    • உடனே அந்த் டில்லி வீரன் பட்டுத்துணியிட்டு மூடியிருந்த பழுக்காத் தாம்பாளத்தை அப்படியே அரியணைக்கு முன்பிருந்த அலங்கார மேடையில் வைத்துவிட்டுத் துணியை நீக்கினான்.

 

    • தாம்பாளத்தில் ஔரங்கசீப்பின் பழைய செருப்பு ஒன்று இருந்தது. அதைக் கண்டவுடன் ரங்ககிருஷ்ணனின் முகத்திலிருந்த மலர்ச்சியும் புன்னகையும் மறைந்தன. மீசை துடிதுடித்தது. ஆனாலும் பொறுமையை இழந்துவிடாமல் கேட்டான்.

 

    • “என்ன இது?”

 

    • “டில்லி பாதுஷாவின் பாதுகை”.

 

    • “டில்லி பாதுஷா மற்றொரு காலுக்குச் செருப்பே போட்டுக் கொள்வதில்லையா?”

 

    • “மரியாதையாகப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள் இளவரசே! பாதுஷா கப்பம் வாங்குகிறவர். நீங்கள் கப்பம் கட்டுகிறவர்! ஞாபகமிருக்கட்டும்.”

 

    • “மரியாதை என்பது கொடுத்துப் பெற வேண்டியது. கேட்டுப் பெறக்கூடியது இல்லை.”

 

    • “மறுபடியும் எச்சரிக்கிறேன். நீர் கப்பம் கட்டுகிறவர். பாதுஷா வாங்குகிறவர்.”

 

    • “அவர் கப்பத்தை வாங்கலாம். மானத்தை வாங்கிவிட முடியாது. கூடாது.”

 

    • “டில்லிப் பேரரசுக்கு அடங்கிக் கப்பம் கட்டுகிற அனைவரும் இந்தப் பாதுகையை வணங்கவேண்டும் என்பது பாதுஷாவின் புதிய கட்டளை.”

 

    • “தெய்வங்களின் திருவடிகளைத்தான் பாதுகை என்று சொல்வதும், வணங்குவதும் எங்கள் வழக்கம். மனிதர்களின் பழைய செருப்பை நாங்கள் பாதுகையாக நினைப்பதில்லை.”

 

    • “இன்றைய திமிர் நாளைய விளைவைச் சந்திக்க வேண்டியதாகிவிடும் இளவரசே!”

 

    • “அன்புக்குக் கட்டுப்படலாம். பயமுறுத்தலுக்குப் பணிய முடியாது. மீண்டும் சொல்கிறேன். தெய்வங்களின் திருவடிச் சுவடுகளைத் தலைவணங்கலாம். மனிதர்களின் கிழிந்த செருப்பை வணங்குவது பற்றி நினைக்கக்கூட முடியாது.”

 

    • “இதுதான் உங்கள் முடிவான பதிலா?”

 

    • “இதை விட முடிவான பதில் தேவையானாலும் தர முடியும். இது புரியாவிட்டால் அதையும் தருகிறேன்.”

 

    • “இந்த மிரட்டல் சிறுபிள்ளைத்தனமானது இளவரசே!”

 

    • “பெருந்தன்மையான காரியங்கள் என்னவென்றே தெரியாதவர்கள் சிறுபிள்ளைத்தனம் எது என்றும் கண்டுபிடிக்கத் தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள்.”

 

    • “பேச்சு எல்லை மீறுகிறது.”

 

    • “புரியவில்லையானால் செயலிலேயே காட்டிவிடுகிறேன். இதோ” என்று கூறிய படியே அரியணையிலிருந்து எழுந்து ரங்ககிருஷ்ணன் அந்தப் பழுக்காத் தாம்பாளத்திலிருந்த செருப்பை, தன் காலில் எதற்குப் பொருந்துமோ அதில் அணிந்து கொண்டான். பாதுஷாவின் பிரதிநிதியைக் கம்பீரமாக நிமிர்ந்து பார்த்துச் சொன்னான்.

 

    • “இவ்வளவு பெரிய மகாராஜாவான டில்லி பாதுஷா போன்றவர்கள் கேவலம் ஒற்றைக் காலுக்கு மட்டுமா செருப்பு அனுப்புவது? முடிந்தால் மற்றொரு காலுக்கும் சேருகிறார் போல் அனுப்பி வைக்கும்படி சொல்லுங்கள்.”

 

    • பாதுஷாவின் பிரதிநிதி இதைக் கண்டு ஸ்தம்பித்துப் போனான். அவன் இப்படி நடக்கும் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை. அவமானப்பட்டுவிட்ட உணர்விலும், ஆத்திரத்திலும் அவன் முகம் சிவந்தது. கடுமையாக ஏதோ சொல்ல விரும்பி ஆனால் உணர்ச்சி மிகுதியால் வார்த்தைகள் வராமல் அவனுடைய உதடுகள் துடித்தன. புருவங்கள் நெரிந்தன. முகம் வியர்த்தது.

 

    • —————

 


 

4. இராயசம் அச்சையாவும் ரகுநாத சேதுபதியும் 

    • டில்லி பாதுஷாவின் பிரதிநிதி ஆத்திரம் அடைந்ததைக் கண்டு ரங்ககிருஷ்ணமுத்து வீரப்பன் அவனை நோக்கிப் புன்னகை பூத்தான்.

 

    • “நெருப்புடன் விளையாடுகிறீர்கள்! இதன் விளைவுகள் கடுமையாயிருக்கும் என்பதைச் சிந்திக்காமல் செயல்படுகிறீர்கள் என்பதை மீண்டும் வற்புறுத்த விரும்புகிறேன்” என்றான் பாதுஷாவின் பிரதிநிதி.

 

    • “தங்கள் பேரரசுடன் முன்பு நாங்கள் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி கப்பம் கட்டுவதாக மட்டும் ஒப்புக் கொண்டது உண்மை. செருப்பை வணங்குவது அந்தப் பழைய உடன்படிக்கையில் அடங்காத ஒன்று. உடன்படிக்கைப்படி பார்த்தால் வரம்பை மீறுவது தங்கள் அரசரேயன்றி நாங்கள் இல்லை.”

 

    • “வலிமை உள்ளவர்களுக்கு வலிமையற்றவர்கள் அடங்கித்தான் ஆகவேண்டும்.”

 

    • “அடக்கம் வேறு; அடிமைத்தனம் வேறு.”

 

    • “இதற்குப் பாடம் கற்பிக்காமல் விடப்போவதில்லை.”

 

    • “முடிந்தால் செய்யுங்கள்.”

 

    • இவ்வளவில் பாதுஷாவின் பிரதிநிதியும் உடன் வந்திருந்தவர்களும் வெளியேறி விட்டார்கள். படைகளையெல்லாம் மதுரையிலிருந்து அவசரப்பட்டு வடக்கே திருப்பியனுப்பி விட்டது எத்தனை பெரிய தவறு என்ற ஏக்கத்துடனே வேறு வழியில்லாத காரணத்தால் ஒன்றும் செய்யமுடியாமல் டில்லி திரும்பினான் ஔரங்கசீப்பின் பிரதிநிதி. போகிற போக்கில் திரிசிரபுரம் கோட்டையும் அதன் சுற்றுப்புறங்களும் படை வீரர்களால் நிரப்பப்பட்டு ஆயத்தமாயிருப்பதையும் அவன் கண்டுகொண்டான். கையாலாகாத்தனமும் ஆத்திரமும் அவன் உள்ளத்தை வெதுப்பின. அந்த ஆத்திரக் குமுறலில், முத்து வீரப்பனின் கோட்டைப் படை வீரர்களுடன் பாதுஷாவின் ஆட்கள் போர் செய்ய முயன்று தோற்றுப் போனார்கள். சிலர் அதில் உயிரிழக்கவும் நேரிட்டது.

 

    • ‘கணவனை இழந்து கைம்பெண்ணான ஒரு ராணி உங்களை அவமானப்படுத்திவிட்டாள்’ என்பதாகப் பாதுஷாவிடம் போய் அவருக்குச் சினமூட்டுகிற விதத்தில் சொல்லலாம் என்றால் மங்கம்மாள் தான் இதில் சம்பந்தப்படாமல் எல்லாவற்றையுமே சாதுரியமாகச் செய்திருந்தாள். அவளுடைய அந்தச் சாதுரியத்தை நினைக்கும்போது அவன் குமுறல் இரண்டு மடங்காயிற்று. நேரடியாக அவமானப்பட்டது முத்து வீரப்பனிடம் என்றாலும் தங்களை அவமானப்படுத்திய மதிநுட்பம் ஒரு பெண் பிள்ளையினுடையது என்ற உறுத்தல் உள்ளே இருந்தது அவனுக்கு.

 

    • டில்லி பாதுஷாவின் ஆட்கள் திரும்பிப்போன பின்புதான் கைப்பிடித்த மனைவி சின்ன முத்தம்மாளுடன் இரண்டு வார்த்தை சிரித்துப் பேசவும், சரசமாடவும் நேரம் கிடைத்தது முத்துவீரப்பனுக்கு. அடுத்து சில நாள்கள் மண வாழ்வின் இனிய மயக்கத்தில் கழிந்தன. காவிரியில் புதுவெள்ளம் வந்தது. அவர்கள் மனத்தைப் போலவே காவிரியும் நிரம்பி வழிந்தது. கோடையின் சுகத்தைக் காவிரிக்கரையின் இதமான மாந்தோப்புகளில் செலவிட்டார்கள் அந்த இளம் காதலர்கள். ஆடிப்பாடி மகிழவும் படகு செலுத்திக் களிக்கவும் நேரம் போதாமலிருந்தது அவர்களுக்கு.

 

    • ஒரு மண்டலத்திற்குப் (40 நாள்) பின் விடிந்த ஒரு வைகறையில் ராணி மங்கம்மாளும் இராயசம் அச்சையாவும் (அரண்மனைக் காரியஸ்தர்) அவசரம் அவசரமாக முத்து வீரப்பனை அழைத்து வரச் சொல்லி அந்தப்புரத்திற்கு ஆளனுப்பினார்கள். விடியலின் கனவும் நனவும் கலந்த இனிய உறக்கத்திலிருந்து அவன் எழுந்திருந்து விரைவாக அவர்கள் இருவரையும் அரண்மனை மந்திராலோசனை மண்டபத்தில் வந்து சந்திக்க வேண்டுமென்று ராணி மங்கம்மாளிடமிருந்து வந்த ஆள் கூறிவிட்டுப் போயிருந்தான். அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த சின்ன முத்தம்மாளை எழுப்பாமலே தாயையும் இராயசத்தையும் சந்திக்கச் சென்றான் அவன். இன்னும் இருள் பிரியவில்லை. காற்று சில்லென்றிருந்தது.

 

    • தன் தாயோடு அரண்மனை இராயசமான அச்சையாவும் கூட இருக்கிறார் என்றறிந்ததுமே ஏதோ மிகவும் இன்றியமையாத காரியத்தைப் பற்றி ஆலோசனை நடக்கிறது என்பதை முன்கூட்டியே முத்துவீரப்பன் அநுமானம் செய்துகொள்ள முடிந்தது. தாயின் நம்பிக்கைக்குரியவர் அச்சையா என்பதை அவன் அறிவான். அதிகமான செயல் திறமையையும் மிகக குறைவான வார்த்தைகளையும் உடையவர் அவர். மிகப் பெரிய ராஜதந்திரியான அவர் எதிரே நின்று பேசுகிறவர்களை பயபக்தியோடு தம்மை அணுகச் செய்து விடும் ஆஜானுபாகுவான சுந்தரபுருஷர். தீர்க்கமாகப் பார்க்கும் ஒளி நிறைந்த கண்களும், கூரிய நாசியும், விசாலமான நெற்றியும், அழுத்தமான உதடுகளுமாக அச்சையாவை ஏறெடுத்துப் பார்க்கும் யார்க்கும் அவர் முன் ஒரு பணிவு தானாக வந்துவிடும். அள்ளி முடித்த குடுமியும், நெற்றியில் சந்தனத் திலகமுமாக அவர் சிரிக்கும்போது வெளேரென்று தெரியும் அழகான அளவான பல்வரிசை யாரையும் வசியப்படுத்திவிடக் கூடியது. நின்றால் பரந்த மார்பும் திரண்ட புஜங்களுமாக முழங்காலைத் தொடக்கூடிய நீண்ட கரங்களோடு எடுப்பும் ஏற்றமுமாகக் காட்சியளிப்பார் அச்சையா. அசைப்பில் கோயில் ராஜகோபுரம் எதிரே நிற்பது போல இருக்கும்.

 

    • இப்படி அச்சையாவைப் பற்றிய கம்பீரமான நினைப்புகளுடன் அவன் மந்திராலோசனை மண்டபத்திற்குள் நுழைந்த போது, “வா மகனே! காரியம் மிகவும் அவசரமானது! அதனால் தான் உன்னைத் தூக்கத்திலிருந்துங்கூட எழுப்பிவிட்டேன்” என்றாள் தாய். தாயையும் இராசயம் அச்சையாவையும் வணங்கிவிட்டு அமர்ந்தான் முத்துவீரப்பன்.

 

    • “தூங்கிக் கொண்டிருந்தால் கூட என்னை விழிப்பூட்டுவது உங்கள் கடமை அம்மா!”

 

    • “நீ சிறிது குழந்தையாயிருந்த வரை உன்னைத் தாலாட்டிச் சீராட்டிப் பாலூட்டித் தூங்கச் செய்வது மட்டும் தான் என் கடமையாயிருந்தது மகனே!”

 

    • “இப்போது இன்னும் நான் குழந்தையில்லை அம்மா. ஆகவே இப்போது நீங்கள் விழிப்பூட்ட வேண்டுமேயன்றித் தூங்கச் செய்யக் கூடாது.”

 

    • “பிரமாதமான வார்த்தை முத்துவீரப்பா! ஆனால் இன்னும் நீ குழந்தை என்பதை நீ உணர்ந்தால் மட்டும் போதாது. உன் எதிரிகளும் உணர வேண்டும்.”

 

    • “முதல் எதிரியாக என் முன் எதிர்பட்ட டில்லி பாதுஷா ஔரங்கசீப்பின் பிரதிநிதிக்கு அதை நான் நன்றாக உணர்த்தி விட்டேன். இன்னும் வேறு யாருக்காவது அதை உணர்த்துவதற்கு அவசியமிருந்தால் சொல்லுங்கள் ஐயா உணர்த்துகிறேன்.”

 

    • “அவசியம் நேற்று வரை ஏற்படவில்லை, இன்று இப்போது இதோ ஏற்பட்டிருக்கிறது”.

 

    • “சற்றே விவரமாகச் சொல்லுங்கள்! எங்கே யாரிடம் அந்த அவசியம் ஏற்பட்டிருக்கிறது?”

 

    • “எதிரிகளை விடத் துரோகிகள் மோசமானவர்கள்.”

 

    • “யார் அந்தத் துரோகிகள்?”

 

    • “இந்த அரண்மனை கடந்த காலத்தில் கண்ட துரோகி அழகிரிநாயக்கன். இன்று காணும் துரோகி கிழவன் சேதுபதி என்ற இரகுநாத சேதுபதி! அன்று உன் தந்தை சொக்கநாத நாயக்கரின் உத்தரவுப்படி அவர் அரசாள தஞ்சையை ஆளச் சென்ற அழகிரி நாயக்கன் உன் தந்தைக்குத் துரோகம் செய்து பின்பு வெங்கண்ணாவின் சூழ்ச்சியால் தானும் சீரழிந்துப் போனான். அதே போல் உன் தந்தை சொக்கநாத நாயக்கரிடம் பணிந்து சிற்றரசனாக இருந்த கிழவன் சேதுபதி இப்போது தான் தோன்றித்தனமாக நடந்து கொள்ளத் தொடங்கிவிட்டார். முன்பு உன் தந்தைக்கும் ருஸ்டம்கானுக்கும் போர் ஏற்பட்ட போது இந்தக் கிழவன் சேதுபதி, பெரிதும் உதவியாயிருந்து உன் தந்தையை அவனிடமிருந்து காப்பாற்றினார். அதற்குப் பிரதியாக உன் தந்தை கிழவன் சேதுபதிக்குப் பரிசில்களும் விருதும் கொடுத்துப் பாராட்டியதோடு தன்னிடமிருந்த அதிபுத்திசாலியான குமாரப்ப பிள்ளை என்ற தளவாயையும் சேதுபதிக்கு உறுதுணையாக ஆட்சிப் பணிபுரிய இராமநாதபுரம் அனுப்பி வைத்தார்.

 

    • “உன் தந்தையால் அனுப்பப்பட்ட அந்த அரிய மனிதரான குமாரப்ப பிள்ளையைக் குடும்பத்தோடு கொலை செய்து இப்போது பழிதீர்த்துக் கொண்டு விட்டார் கிழவன் சேதுபதி. நமது ஆட்சிப் பிடிப்பின் கீழ் சிற்றரசராக இருக்க விரும்பாத சேதுபதி தஞ்சை நாயக்க மன்னர் பரம்பரையின் வாரிசான செங்கமலதாசனுடனும், பழைய மதுரைத் தளவாய் வேங்கட கிருஷ்ணப்பனோடும் சேர்ந்து நமக்கு எதிராகச் சதி செய்த போது அந்தச் சதியை எதிர்த்து அதற்கு உடன்பட மறுத்தார் என்ற ஒரே காரணத்துக்காகக் குமாரப்ப பிள்ளை குடும்பத்தோடு கொல்லப்பட்டிருக்கிறார்.

 

    • “நல்லது சொல்லியவருக்கு இப்படி ஒரு கொடுந்தண்டனையா?”

 

    • “நம்மையும் நமது ஆட்சியையும் அழிப்பதற்குப் பரிசாகத் தனக்கு உதவி செய்ய முன்வரும் தஞ்சை மன்னனுக்குப் புதுக்கோட்டைக்கும், பாம்பாற்றுக்கும் இடைநிலப் பகுதியில் வரி வாங்கும் உரிமையை விட்டுக் கொடுத்திருக்கிறார் சேதுபதி. இந்த நன்றி உணர்வற்ற சதியை முறியடித்துச் சேதுபதியையும் வேங்கடகிருஷ்ணப்பனையும் திருத்த முயன்ற போது தான் குமாரப்ப பிள்ளை கொல்லப்பட்டிருக்கிறார்.”

 

    • “நமக்கு வேண்டியவரைக் கொன்றால் என்ன? நம்மைக் கொன்றால் என்ன?”

 

    • “இந்த விசுவாச உணர்வுதான் நம்மைக் காக்கக்கூடியது முத்துவீரப்பா! கிழவன் சேதுபதி முரட்டு மனிதர்! மனித வாழ்வை அர்த்தமுள்ளதாகச் செய்யக்கூடிய எந்த இங்கிதமான உணர்வுகளும் இல்லாதவர். ஆட்சியையும், செல்வத்தையுமே மதிப்பவர். நாம் அவருக்குப் பாடம் கற்பிக்க வேண்டிய காலம் வந்து விட்டது.”

 

    • “இப்போதே படைகளோடு புறப்படுகிறேன். பாடமும் புகட்டுகிறேன்.”

 

    • “அது அத்தனை சுலபமானதில்லை மகனே! மறவர் சீமையின் கிழட்டுச் சிங்கத்தை எளிதாக வென்றுவிட முடியாது. இரகுநாத சேதுபதி மற்ற மறவர்களை அழைத்துத் தலையைக் கொடு என்றாலும் கொடுத்து விடுவார்கள். அவ்வளவு செல்வாக்கும் கட்டுப்பாடும் அங்கே அவருக்கு உண்டு.”

 

    • “நன்றியும் விசுவாசமும் இல்லாத இடத்தில் எத்தனைக் கட்டுப்பாடு இருந்தால் என்ன; எவ்வளவு செல்வாக்கு இருந்தால் என்ன?”

 

    • “உன் கேள்வியிலுள்ள நியாயம் கூட புரியாத வன்கண் மறவர் அவர். அவருடைய சக மறவர்கள் அவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள். ஆகவே அவருக்கு ஆள்கட்டு அதிகம். ஒரு பாவமும் அறியாத அந்நிய நாட்டுக் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் கூட அவருடைய கொடுமைக்குத் தப்ப முடியவில்லை மகனே!”

 

    • “சொந்த நாட்டு நண்பர்களிடமே விசுவாசமாயில்லாத ஒருவர் அந்நிய நாட்டுப் பாதிரிமார்களிடம் கருணை காட்டுவார் என்று எப்படி அம்மா நீங்கள் எதிர்பார்க்க முடியும்?”

 

    • “உன் கொள்ளுப் பாட்டனார் திருமலை நாயக்கரும், தந்தையாரும் கிறிஸ்தவப் பாதிரிமார்களையும் அவர்களைப் பின்பற்றியவர்களையும்கூட அன்போடும் ஆதரவோடும் பெருந்தன்மையாக நடத்தினார்களே?…”

 

    • “என் கொள்ளுப் பாட்டானாருக்கு இருந்த பெருந்தன்மையும் தந்தைக்கு இருந்த தாராள மனமும் கிழவன் சேதுபதிக்கு இல்லையானால் அதற்கு யார் என்ன செய்ய முடியும் அம்மா?”

 

    • “கிழவன் சேதுபதியால் கொல்லப்பட்ட குமாரப்ப பிள்ளை கூடக் கிறிஸ்தவ வெறுப்பில் கிழவன் சேதுபதியை மிஞ்சியவராக இருந்திருக்கிறார். பாதிரிமார்களையும், உபதேசியார்களையும் பலாத்காரமாகச் சிவலிங்கத்தை வழிபடும்படி வற்புறுத்துகிறார் அவர்” என்றார் இராயசம் அச்சையா.

 

    • “அது அக்கிரமம் ஐயா! பாதுஷாவின் பழைய செருப்பைக் கும்பிடும்படி நம்மை வற்புறுத்தியவர்களுக்கும் குமாரப்ப பிள்ளைக்கும் என்ன வேறுபாடு?”

 

    • “நாகரிகமடைந்த நல்லவர்களுக்குத் தான் உன் கேள்வியும் அதன் நியாயமும் புரியும். துவேஷமும் வெறுப்பும் குரோதமும் நிரம்பியவர்களுக்கு நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாது முத்துவீரப்பா.”

 

    • “போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து வந்த ஜான்டிபிரிட்டோ பாதிரியாரைத் தடுத்து மறவர் நாட்டு எல்லைக்குள் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப முயன்றால், தோலை உரித்து மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டுவிடப் போவதாகப் பயமுறுத்துகிற அளவு கிழவன் சேதுபதி கடுமையானவராயிருந்திருக்கிறார் என்று கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன் ஐயா!”

 

    • “சிலரைத் தோலை உரித்துத் தலைகீழாக மரங்களில் கட்டித் தொங்கவிட்ட கொடுமையும் நடந்திருக்கிறது முத்துவீரப்பா!”

 

    • “கேட்பதற்கே அருவருப்பாயிருக்கிறது ஐயா! குமாரப்ப பிள்ளை நம் அரண்மனையிலிருந்து சேதுபதிக்கு உதவியாக அனுப்பப்பட்டவர். அவரைக் கொன்றதே தாங்கமுடியாத கொடுமை; அவர் குடும்பத்தினரையும் கொன்றது பயங்கரமான பாவம். கிறிஸ்தவப் பாதிரிமார்களைத் துன்புறுத்துவது பொறுத்துக் கொள்ள இயலாதது. நாம் எப்படியும் அவரை அடக்கியே ஆகவேண்டும்.”

 

    • “ஒரு விநாடி கூடக் காலந்தாழ்த்தக்கூடாது மகனே! பாதுஷாவுக்காகத் திருச்சியில் கூட்டிய படை வீரர்களோடு உடனே மறவர் சீமையின்மீது போர் தொடுத்தாக வேண்டும். தனது தூதரைக் கொல்லும் அந்நிய அரசனைப் படையெடுத்துத் தாக்கும் நியாயம் ஒவ்வொரு நல்ல அரசனுக்கும் உண்டு அப்பா! குமாரப்ப பிள்ளை நம்மால் அங்கு அனுப்பப்பட்டவர். அவரைக் கூண்டோடு அழித்தது நம்மை அவமானப்படுத்தியது போல் தான்! நீ உடனே போருக்கு ஆயத்தமாக வேண்டும் என்பதைச் சொல்லவே உன்னை நானும் இராயசமும் இங்கே அழைத்தோம்.”

 

    • இராயசம் எழுந்து நின்றார். கம்பீரமும் அழகும் வசீகரமும் நிறைந்த அவரது தோற்றத்தைப் பார்த்து ராணியே ஒரு கணம் யாரோ புதியவர் ஒருவரைக் காண்பதுபோல் உணர்ந்தாள்.

 

    • “இந்த மறவர் சீமைப் படையெடுப்புக்கு உங்கள் இருவர் ஆசியும் வேண்டும்” என்று வணங்கினான் முத்து வீரப்பன்.

 

    • “மிகப் பெரிய படிப்பாளியாகிய நம் இராயசம் உன்னை வாழ்த்தினாலே போதுமானது மகனே!” என்றாள் மங்கம்மாள். இராயசம் அச்சையா ராணியை நோக்கிப் புன்முறுவல் பூத்தார்.

 

    • முத்துவீரப்பன், ஆஜானுபாகுவாக எழுந்து நின்ற இராயசம் அச்சையாவையும் அன்னை ராணி மங்கம்மாளையும் வணங்கி விடைபெற்றான். அவன் வணங்கித் தலைநிமிரவும் அரண்மனை வீரன் ஒருவன் பரபரப்பாக அங்கு உள்ளே நுழையவும் சரியாயிருந்தது. வந்த வீரன் வணங்கிவிட்டு மூவரையும் பார்த்துச் சொல்லலனான்.

 

    • “இராமநாதபுரத்திலிருந்து இரகுநாத சேதுபதியின் தூதன் ஒருவன் தேடி வந்திருக்கிறான்.”

 

    • மூவரும் தங்களுக்குள் வியப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆவலும் பரபரப்பும் முந்திய மனநிலையோடு, “உடனே அவனை இங்கே அழைத்துக் கொண்டு வா!” என்று சேதி கொண்டு வந்தவனுக்கு மறுமொழி கூறினான் முத்துவீரப்பன்.

 

    • “வருகிற தகவலில் நாம் மகிழ்ச்சியடையவோ, நமது முடிவை மாற்றிக் கொள்ளவோ காரணமான எதுவும் இருக்கப்போவதில்லை” என்று பதறாத குரலில் நிதானமாகச் சொல்லிவிட்டு மீண்டும் இருக்கையில் அமர்ந்தார் அச்சையா. ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனும், ராணி மங்கம்மாளும் சேதுபதியின் தூதன் வரவேண்டிய நுழைவாயிலையே பார்த்த வண்ணமிருந்தனர்.

 

    • ———–

 


 

5. பக்கத்து வீட்டுப் பகைமை 

    • கட்டுமஸ்தான உடலமைப்பும் அந்த வலிமையை மிகைப்படுத்தி எடுத்துக் காட்டும் கரிய நிறமும் கொண்ட மறவர்சீமை வீரன் ஒருவன் கையில் ஓலையோடு நுழைவாயிலருகே தென்பட்டான்.

 

    • மின்னலைப் போல் சரேலேன்று உள்ளே நுழைந்த அவன், “மறவர் நாட்டு மாமன்னர் ரகுநாத சேதுபதியின் தூதன் நான். இது அவர் அனுப்பிய ஓலை” என்று இராயசம் அச்சையாவிடம் நீட்டிவிட்டு, மூன்று பேருமே எதிர்பாராத வகையில் பதிலை எதிர்பாராமலே விருட்டென்றுத் திரும்பிச் செல்லத் தொடங்கினான். சம்பிராதாயத்துக்குப் புறம்பாகவும், பண்பாடின்றியும் இருந்தது அவனது செயல்.

 

    • உடனே அதைக் கண்டு ஆத்திரமடைந்த ரங்ககிருஷ்ணன் பின் தொடர்ந்து அவனைப் பாய்ந்து கைப்பற்ற முயன்றபோது சைகையால் இராயசம் அவனைத் தடுத்துவிட்டார். ஆத்திரத்தோடு ரங்ககிருஷ்ணன் கேட்டான்;

 

    • “வழக்கமில்லாத புதுமையாக நமக்கு அடங்கிய சிற்றரசன் ‘மறவர் நாட்டு மாமன்னர் ரகுநாத சேதுபதி’ என்றான். அனுப்பிய ஓலையைப் படிப்பதற்கு முன்பே திரும்பிப் போகிறான். இதெல்லாம் என்ன? இதைவிட அதிகமாக நம்மை வேறெப்படி அவமானபடுத்த முடியும்? இந்த முறைக்கேட்டையும், அவமானத்தையும் நாம் ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்?”

 

    • “பொறுத்துக் கொள்ள வேண்டாம் தான்! எய்தவனிருக்க அம்பை நொந்து பயனென்ன ரங்ககிருஷ்ணா? சேதுபதியிடம் தொடுக்க வேண்டிய போரை அவனுடைய தூதனிடமே தொடுக்க வேண்டாம் என்று தான் உன்னைத் தடுத்தேன்” என்று ரங்ககிருஷ்ணனுக்கு மறுமொழி கூறிவிட்டு இரகுநாத சேதுபதியின் ஓலையைப் படிக்கத் தொடங்கினார் அச்சையா. முதலில் மெல்லத் தமக்குள் படிக்கத் தொடங்கியவர், பின்பு, இரைந்தே வாய் விட்டுப் படிக்கத் தொடங்கினார்.

 

    • “இன்று இவ்வோலை எழுதும் போது தொடங்கி மறவர் நாடு இனி யார் தலைமைக்கும் கீழ்ப்பணிந்து சிற்றரசாக இராது என்பதை இதன் மூலம் மறவர் நாட்டு மாமன்னர் ரகுநாத சேதுபதி, சம்பந்தப்பட்ட சகலருக்கும் பிரகடனம் செய்து கொள்கிறார்.”

 

    • “குமாரப்ப பிள்ளையும் அவர் குடும்பத்தையும் கொன்றது போதாதென்று சுயாதீனப் பிரகடனம் வேறா?”

 

    • ராணி மங்கம்மாள் இவ்வாறு வினவியவுடன் “எவ்வளவு திமிர் இருந்தால் அதை நமக்கே ஓலையனுப்பித் தெரிவித்து விட்டு நம்முடைய மறுமொழியை எதிர்பாராமலே தூதுவனைத் திரும்பியும் வரச்சொல்லிப் பணித்திருக்க வேண்டும்? குமாரப்ப பிள்ளையை அவர்கள் கொன்றது நியாயமென்றால் இப்போது இங்கு வந்து சென்ற இந்தத் தூதுவனை நாம் மட்டும் ஏன் தப்பிப் போகவிட வேண்டும்?” என்று கொதிப்போடு கேட்டான் ரங்ககிருஷ்ணன். கிழவன் சேதுபதி என்னும் பட்டப்பெயரை உடைய ரகுநாத சேதுபதியிடமிருந்து வந்திருந்த ஓலையைப் படித்துச் சொல்லிவிட்டு மேலே எதுவும் கூறாமல் இருந்த அச்சையா இப்போது வாய் திறந்தார்.

 

    • “ஒரு தவற்றை இன்னொரு தவற்றால் நியாயப்படுத்தி விடமுடியாது ரங்ககிருஷ்ணா!”

 

    • “பல தவறுகள் நடந்துவிட்ட பின்பும் இப்படிப் பொறுமையாக இருந்தால் எப்படி?”

 

    • “எதிரிகளை அழிப்பதில் பல ராஜதந்திர முறைகள் உண்டு அப்பா! அதில் ஒன்று அவர்களை அதிகத் தவறுகள் செய்ய அனுமதிப்பது. கோழை பின்வாங்கித் தயங்குவதற்கும், வீரன் பின்வாங்கி நிதானிப்பதற்கும், நிறைய வித்தியாசங்கள் உண்டு. கோழை பயத்தினால் பின்வாங்குவான். வீரன் எதிரியை முன்பை விட அதிக வேகமாகப் பாய்ந்து தாக்குவதற்குப் பின்வாங்குவான். நமது நிதானம் இதில் இரண்டாவது வகையைச் சேர்ந்ததாக இருக்கட்டும்.”

 

    • “டில்லி பாதுஷாவின் ஆட்கள் பழைய செருப்புடன் ஊர்வலம் வந்த போது அம்மா சொல்லிய அதே அறிவுரையைத்தான் இப்போது நீங்களும் கூறுகிறீர்கள் ஐயா!”

 

    • “சொல்லுகிற மனிதர்கள் வேறுபட்டாலும் அறிவும், அறிவுரையும் வேறுபடுவதில்லை! மறவர் நாட்டின் மேல் படையெடுத்தாக வேண்டுமென்ற நமது முந்திய முடிவுக்கும் இந்த அறிவுரைக்கும் தொடர்பு இல்லை. உனது முன் கோபத்தையும் ஆத்திரத்தையும் தணித்துச் செயலில் ஈடுபாடு கொள்ளச் செய்வதற்குத்தான் இந்த அறிவுரை.”

 

    • “ஆமாம் ரங்ககிருஷ்ணா! இராயசம் சொல்வதெல்லாம் உன் நன்மைக்குத் தான் அப்பா! எதிரியை விட்டுவிட்டு அவனுடைய தூதுவனை அழிப்பதால் என்ன பயன் விளையப்போகிறது? கிழவன் சேதுபதியை இப்படியே விட்டுவிட்டால் அவர் மற்றவர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு படையெடுத்து நமது மதுரைச் சீமையைக் கைப்பற்ற முயலுவார்” என்றாள் மங்கம்மாள்.

 

    • “இன்றே நமது படைகளோடு மறவர் சீமைக்குப் புறப்படுகிறேன் அம்மா!”

 

    • “உனது வீரத்தில் நிதானமும் நிதானத்தில் வீரமும் கலந்திருக்கட்டும் அப்பா! கிழவன் சேதுபதி மிகவும் சிக்கலான எதிரி. தெளிவான எதிரியில்லை. சிக்கலான எதிரிகளிடம் எப்போதுமே அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.”

 

    • “உங்கள் அறிவுரை எனக்கு எப்போதும் ஞாபகம் இருக்கும் அம்மா!”

 

    • திரிசிரபுரம் கோட்டையின் முகப்பில் படைகள் திரண்டன. போர்முரசு முழங்கியது. குதிரைகளும், யானைகளும் தரையைத் துவைத்துக் கிளரச் செய்த புழுதிப்படலம் விண்ணை மறைத்தது. தாயும், இராயசம் அச்சையாவும் வாழ்த்த, சின்ன முத்தம்மாள் நெற்றியில் வீரத் திலகமிட்டு வழியனுப்ப, ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன் படையோடு புறப்பட்டான். ரங்ககிருஷ்ணனுக்கும் படைவீரர்களுக்கும் திரிசிரபுரத்து மக்கள் மலர்மாரி பொழிந்து விடைகொடுத்தனர். பழைய செருப்போடு வந்த டில்லி பாதுஷாவின் ஆட்களை எதிர்க்கும் அவசியத்துக்காக அங்கங்கே சேர்த்து வைத்த படைவீரர்களையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு ரங்ககிருஷ்ணன் மறவர் சீமை மேல் படையெடுத்திருந்தான்.

 

    • தனக்கு மாலை சூட்டி வீரத்திலகமிட்டு வழியனுப்பும்போது சின்ன முத்தம்மாளின் கண்களில் நீர் திரண்டு பிரிவுத்துயரம் பொங்கியதை அத்தனை அவசரத்திலும் அத்தனை பரபரப்பிலும் அவன் கவனிக்கத் தவறியிருக்கவில்லை. உலகின் மிகப்பல பாமர மக்களில் கணவனும் மனைவியுமாக மாலை மாற்றிக் கொள்கிறவர்களுக்கு இருக்கும் உரிமையும் இன்பமும் சுகமும் நிம்மதியும் கூட அரச குடும்பத்தினரான மற்றவர்களுக்கு இல்லையே! என்று எண்ணிச் சின்ன முத்தம்மாள் ஏங்கியிருக்கக் கூடும். திருமணமான உடனேயே போருக்காகப் படையோடு புறப்பட்டுவிட்ட கணவனை வீரமங்கையாகத் திலகமிட்டு வழியனுப்பினாலும், பிரிவு பிரிவு தானே? படைகளை நடத்திச் செல்லும் போது இதை எல்லாம் எண்ணிப்பார்த்தான் ரங்ககிருஷ்ணன்.

 

    • முதல்நாள் பகல் பொழுது முடிந்து அந்தி சாய்ந்ததும் காடாரம்பமான ஓரிடத்தில் இரண்டு மூன்று பெரிய ஆலமரங்கள் இருந்த பகுதியில் படைகள் பாசறை அமைத்துத் தங்க நேர்ந்தது. இன்னும் மறவர் சீமை எல்லைக்குப் போய் சேரவில்லை என்றாலும், வீரர்களிடம் போர் உணர்ச்சி இப்போதே வந்திருந்தது. மறவர் சீமையை அடைந்த உடனேயே போர் நிகழலாம் என்ற பிரக்ஞையும் எல்லாருக்கும் வந்திருந்தது. ரங்ககிருஷ்ணனைப் பொறுத்தவரை இதுதான் அவனது முதற் படையெடுப்பு என்று சொல்ல வேண்டும். அவசர அவசரமாக நிகழ்ந்த திருமணம். அவசர அவசரமாக நிகழ்ந்த முடிசூட்டு விழா இப்போது அவசர அவசரமாக வாய்த்துவிட்ட இந்தப் படையெடுப்பு எல்லாமே நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் நேர்ந்திருந்தன.

 

    • நள்ளிரவாகியும் பாசறைக் கூடாரத்தில் உறக்கமின்றித் தவித்தான் ரங்ககிருஷ்ணன். பல்வேறு வகைப் படைவீரர்கள் தங்கியிருந்த பகுதிகளில் கூத்துகளும், களியாட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சில வீரர்கள் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் பொழுது போக்கான விளையாட்டுக்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். வேறு சிலர் ஒரு வீரனுக்கு ரதி வேடம் போட்டுக் காமன் பண்டிகைக் கூத்தாக இருபிரிவாய் பிரிந்து எரிந்த கட்சிக்கும், எரியாத கட்சிக்கும் பாடிக் கொண்டிருந்தார்கள்.

 

    • தனது படைவீரர்கள் இந்தப் போரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் எப்படி உணர்ந்திருக்கிறார்கள் என்று காணவும் விரும்பினான் ரங்ககிருஷ்ணன். மாறுவேடத்தில் நகர பரிசோதனை செய்யச் செல்லும் மன்னர்கள் போல முற்றிலும் தன் தோற்றத்தை மாற்றிக் கொள்ளாவிட்டாலும், தன்னை யாரும் அடையாளம் காண முடியாத விதத்தில் ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு புறப்பட்டான் அவன். உடன் துணை வர முயன்ற மெய்க் காப்பாளனைக் கூடத் தடுத்துவிட்டான். இது முதற் படையெடுப்பு என்பதால் மட்டும் அவன் மனதில் ஆவலும் பரபரப்பும் நிரம்பியிருக்கவில்லை. படையெடுப்பவராகிய கிழவன் சேதுபதியைப் பொறுத்தே பல மடங்கு அதிகரித்திருந்தன.

 

    • ‘கிழவன்’ என்ற தமிழ்ச்சொல்லுக்கு ‘உரியவன்’ என்று பொருள். இரகுநாத சேதுபதி மறவர் நாட்டுக்கு உரியவர் மட்டுமில்லை. மறவர் அனைவரின் நம்பிக்கைக்கும் உரியவர். பயபக்திக்கு உரியவர். அத்தகையவரோடு தான் போர் புரிவதற்கும் முரண்படுவதற்கும் அரசியல் காரணங்களிருந்தன என்றாலும் தன்னைச் சுற்றியுள்ள மக்களின் நம்பிக்கைக்கும் நாணயத்திற்கும், மதிப்புக்கும் உரிய ஒருவரை வெறும் அரசியல் காரணங்களுக்காக வெல்வது சிரமமான காரியமாயிருக்கும். மறவர் சீமையின் முரட்டுச் சிங்கத்தோடு விரோதத்தைத் தவிர்த்திருப்பது தான் இராஜ தந்திரமாயிருந்திருக்கும். சில விரோதங்களைத் தவிர்ப்பது தான் விவேகம். வேறு சில விரோதங்களை எதிர்கொண்டு ஏற்றாக வேண்டும். இதில் கிழவன் சேதுபதியோடு ஏற்பட்டு விட்ட விரோதம் முந்தின வகையினது. அது தவிர்க்கப்படவேண்டியது. ஆனால் தவிர்க்க முடியாதபடி சேதுபதியே அதை வலிந்து ஏற்படுத்திக் கொண்டு விட்ட பின் தன் தரப்பிலிருந்து பணிந்து போவது என்பது பிறர் எள்ளி நகையாடக் காரணமாகி விடலாம். குமாரப்ப பிள்ளையைக் குடும்பத்தோடு கொன்றது போதாதென்று மறவர் சீமையைச் சுயாதீனமுள்ள நாடாகப் பிரகடனம் செய்ததும் சேர்ந்து, தவிர்த்திருக்க வேண்டிய இந்தப் படையெடுப்பை அவசியமும் அவசரமும் உள்ளதாக்கிவிட்டன. அநாவசியமான விரோதத்தைத் தேடுவது எப்படி ராஜ தந்திரமில்லையோ, அப்படியே அவசியமாக வந்து வாயிற் கதவைத் தட்டி அழைக்கும் விரோதத்தைத் தவிர்ப்பதும் ராஜ தந்திரமில்லை. சேதுபதியைக் கண்டு ராணி மங்கம்மாளும் அவள் மகனும் பயப்படுகிறார்கள் என்று பிறர் பேசவும் இடம் கொடுத்துவிடக் கூடாது.

 

    • கிழவன் சேதுபதியைப் பொறுத்தவரை இந்த விரோதத்தை உடனடியாகத் தேடுவதில் பயன் இருந்தது. இந்த விரோதத்தால் அவருக்கு ராஜ தந்திர பயன்களும் ஊதியமும் இருந்தன. ஆகவே இவர் இதைத் தேடியதில் அவரளவுக்குக் காரணம் சரியாயிருந்தது. அவரளவுக்கு அரசியல் நோக்கமும் சரியாக இருந்தது.

 

    • தன் கூடாரத்தை விட்டு வெளியேறி வீரர்களின் மனநிலையைக் கண்டறிய இருளில் புறப்பட்ட போது ரங்ககிருஷ்ணனின் மனதில் இவ்வளவு சிந்தனைகளும் இழையோடின. அடுத்திருந்து கெடுதல் செய்பவனின் விரோதத்தை விலை கொடுத்தாவது பெற்றாக வேண்டும் என்றாலும் கொடுக்கவேண்டிய விலை என்னவாக இருக்கும் என்பது இந்த விநாடி வரை புரியாமல் இருந்தது. சிந்தனை வயப்பட்டவனாக ஆல மரத்தடியில் சில வீரர்கள் கூடிப் பேசிக் கொண்டிருந்த பகுதிக்கு வந்திருந்தான் அவன். அவர்களுடைய பேச்சும் கிழவன் சேதுபதியைப் பற்றியதாயிருக்கவே, ஆலம் விழுது ஒன்றின் மறைவில் ஒதுங்கி நின்று அதை ஒட்டுக் கேட்கலானான்.

 

    • “நமக்குச் சோறு போட்டு வளர்ப்பது நாயக்கவம்சம். நாம் எதிர்த்துக் கொள்ள முடியாத சுயஜாதி மனிதர்களில் மிகவும் பெரியவர் இரகுநாத சேதுபதி. இந்த யுத்தம் தர்மசங்கடமானது. சோறு போடுபவர்களுக்கு விசுவாசமாக இருப்பதா? இனத்துக்கு விசுவாசமாக இருப்பதா? நமது மதிப்பிற்குரிய சேதுபதிக்கு எதிராக நாமே ஆயுதம் ஏந்தும் நிலையை இந்தப் போர் உண்டாக்கிவிட்டது அண்ணே!”

 

    • “சேதுபதிகள் இராமபிரானுக்கே தோழனாக இருந்த குகனின் வம்சம். தெய்வாம்சம் பொருந்தியவர்கள். நம்மைப் போல் மற்ற மறவர்கள் கைகூப்பித் தொழ வேண்டிய நிலையிலிருப்பவர் இரகுநாத சேதுபதி. அவருக்கு எதிராக நின்று போர் புரிவதில் மனப்பூர்வமான ஈடுபாடு நம்மைப் போன்ற ஜாதி மறவர்களுக்கு இருக்க முடியாது. வேண்டுமானால் உண்ட உணவுக்குச் செஞ்சோற்றுக் கடன் கழிக்கலாம்.”

 

    • “ஆமாம்! நீ சொல்வது தான் சரி அண்ணே! அரசர்கள் இன்றைக்குச் சண்டை போட்டுக் கொள்வார்கள். நாளைக்கு ஒன்று சேர்ந்து விடுவார்கள். அதற்காக நாம் ஏன் நடுவில் ஜாதி அபிமானத்தைக் கெடுத்துக் கொண்டு குலத்தை வேரறுக்கும் கோடரிக் காம்புகளாகத் தலை எடுக்க வேண்டும்?”

 

    • “சேதுபதியை எதிரே பார்த்தாலே எனக்குக் கைநடுக்கம் வந்துவிடும் அண்ணே! வாளைக் கீழே போட்டுவிட்டு நெடுஞ்சாண் கிடையாக வணங்கத் தோன்றுகிற மனிதருக்கு எதிராக எப்படி அண்ணே நான் துணிந்து வாளை ஓங்க முடியும்?”

 

    • “அதுதான் முதலிலேயே சொன்னேனே? நமக்கு இது ஒரு தர்மசங்கடமான போர் அண்ணே!”

 

    • “இன்றைக்குச் சேதுபதிக்கு எதிராக வாளை உயர்த்திவிட்டு நாளைக்குப் போர் முடிந்ததும் மானாமதுரைக்கோ மங்கலத்துக்கோ போய் நின்றால் சுயஜாதிக்காரன் நம்மை முகத்திலே காறித் துப்புவான்.”

 

    • “துப்புறதாவது…? நம்மை கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.”

 

    • “இன்றைக்கு சண்டை வரும். போகும். ஜாதிக் கட்டுப்பாடு நமக்கு என்றைக்கும் வேணும் பாட்டையா! எங்கள் ஊர் எல்லையிலே சேதுபது வாராருன்னா ஊருக்குள்ளாற ஒருத்தன் மார் மேலே துணியோ, கால்லே செருப்போ போட்டுகிட்டு நடமாட மாட்டான் அண்ணே! அத்தனை மருவாதி (மரியாதை) அவருக்கு உண்டு.”

 

    • இருளில் அங்கு உரையாடிக் கொண்டிருந்த படைவீரர்களனைவரும் மறவர் இனத்தினர் என்பதை ரங்ககிருஷ்ணனால் மிக எளிதாகவே அநுமானம் செய்து கொள்ள முடிந்தது. தன்னை அவர்கள் பார்த்து விடாதபடி மெல்ல அங்கிருந்து விலகிச் சென்றான் ரங்ககிருஷ்ணன். டில்லி பாதுஷாவை எதிர்க்க ஆவேசத்தோடு ஒன்று திரண்ட படை, சேதுபதி விஷயத்தில் அப்படி ஒன்றாக இல்லை என்று புரிந்தது.

 

    • துணிவும், தன்னம்பிக்கையும் கொண்டிருந்த ரங்ககிருஷ்ணனின் உறுதியான் உள்ளத்திலும் மெல்ல எழுந்தது ஒரு சிறு தயக்கம். இந்தப் போரிலுள்ள பகை பக்கத்து வீட்டுப்பகை என்பதால் ஏற்படும் படை வீரர்களின் விசுவாசத் தயக்கங்களையும், இடம் மாறிய முறை மாறிய விசுவாசங்களையும் எல்லை மாறக்கூடிய சந்தேகத்துக்கிடமான நம்பிக்கைகளையும் பற்றிய கலக்கம் அவன் மனத்தில் இப்போது இந்நள்ளிரவில் புதிதாக ஏற்பட்டது. வெளியே சூழ்ந்திருந்த இருள் தன் மனத்துக்குள்ளும் கொஞ்சம் புக முயல்வதைப் போல உணர்ந்தான் ரங்ககிருஷ்ணன். கடவுள் மனிதர்களைப் படைத்த போது உலகைப் பற்றி வைத்திருந்த சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் மனிதர்கள் ஜாதிகளையும் சமயங்களையும் உண்டாக்கிக் கெடுத்துக் கொண்டு விட்டார்களோ? என்று அந்தக் கணத்தில் அவனுக்குத் தோன்றியது.

 

    • அபிமானம், அன்பு, விசுவாசம், நன்றிக்கடமை ஆகிய ஜாதி சமயம் கடந்த உயரிய மனித குணங்களைக்கூட ஜாதி சமயங்கள் பாதிக்க முடியும் என்பது இப்போது அவனுக்குப் புரிந்தது. அவன் சிந்தனை வயப்பட்டான். அன்றிரவு பாசறையில் அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.

 

    • ———-

 


 

6. கிழவன் சேதுபதியின் கீர்த்தி 

    • ரங்ககிருஷ்ணன் முற்றிலும் எதிர்பாராத பகுதியிலிருந்து சலனமும் தயக்கமும் ஏற்பட்டிருந்தன. திரிசிரபுரம் கோட்டையிலும், மதுரைக்கோட்டையிலும் இருந்த படைவீரர்களில் பெரும் பகுதியினர் மறவர் சீமையைச் சேர்ந்தவர்கள். வெகு தொலைவில் இருந்து வந்து ஒரு புதிய நிலப்பரப்பில் சாம்ராஜ்யத்தை நிறுவ நேர்கிற அனைவருக்கும் இது ஏற்படக்கூடியது தான் என்று தோன்றியது. அரசு என்கிற மாளிகையைத் தாங்கும் நான்கு இன்றியமையாத தூண்களில் ஒன்றாகிய படை உள்நாட்டு மக்களைக் கொண்டதாகத்தான் அமைய முடியும். அமைந்திருந்தது.

 

    • ஒரு படையில் உட்பகை உண்டாகிவிட்டாலோ, உண்டாவது போலத் தோன்றினாலோ, அது எள்ளை இரண்டாகப் பிளந்தது போலச் சிறியதானாலும் கூடப் பெரிதும் ஆபத்தானது. அப்படி ஆபத்தின் அடையாளங்கள் இப்போது தெரியத் தொடங்கியிருந்தன. வெளிப்படையாக அது தனக்குத் தெரிந்ததை ரங்ககிருஷ்ணன் யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் மனதில் அந்தச் சலனம் ஏற்பட்டுவிட்டது. இதைக் கருத்திற் கொண்டுதான் தாய் ராணி மங்கம்மாளும், இராயசம் அச்சையாவும் கிழவன் சேதுபதியைச் சிக்கலான எதிரி என்று வர்ணித்தார்களோ என்று கூட இப்போது அந்தத் தொடருக்குப் புது விளக்கமே தோன்றியது அவனுக்கு.

 

    • தன்னுடைய உள்நாட்டு மக்களிடமும் தன் நாட்டிலும் முழுநம்பிக்கைக்குரியவராகக் கீர்த்தி பெற்றிருக்கும் ஒருவரை வெளியேயிருந்து படையெடுத்து வந்து செல்வது எத்தனை சிரமமான காரியமாயிருக்கும் என்பது மெல்ல மெல்லப் புரிந்தது. தீர்க்க தரிசனம் பிடிபடாத வரை அரசியல் பொறுப்புகள் சிரம சாத்தியமானவையாகவே இருக்குமென்று தோன்றியது. அரசியலுக்குத் தீர்க்க தரிசனம் மிகமிக முக்கியமென்றும் புரிந்தது.

 

    • மறுநாள் அதிகாலையில் படைகள் பயணத்தைத் தொடர்ந்தன. திட்டமிட்டபடி எல்லாமே நடந்தன. ஆனால் பெரிய அதிசயம் என்னவென்றால் மறவர் சீமை எல்லைக்குள் நுழைந்ததும் அங்கே இவர்களை எதிர்த்து யாரும் சீறிப்பாயவில்லை. இலட்சியம் செய்யவுமில்லை. “புதிதாகப் பட்டமேற்றுள்ள சின்ன நாயக்கர் படை பரிவாரங்களோடு தரிசனத்துக்காகவும் தீர்த்தமாடிப் புண்ணியம் அடைவதற்காகவும் இராமேஸ்வரம் போகிறார் போலிருக்கிறது” என்பதுபோல் பேசிக் கொள்ளவும் செய்தார்கள். ரங்ககிருஷ்ணன் மனதை இது மிகவும் உறுத்திற்று.

 

    • தங்கள் சீமைக்குள் தங்களை யாரும் எதுவும் செய்து விடமுடியாது என்ற மிதப்பில் அவர்கள் இருப்பதாகப்பட்டது. ஆள்கட்டும் ஒற்றுமையும், அந்நியருக்கு விட்டுக் கொடுத்துத் தளர்ந்துவிடாத உறுதியும், எதற்காகவும் தங்களைச் சேர்ந்தவரை அந்நியரிடமோ, வெளியாரிடமோ காட்டிக் கொடுத்துவிடாத இயல்பும், மறவர் சீமையின் தனித்தன்மைகள் என்பதை ரங்ககிருஷ்ணன் அறிந்திருந்தான். எவ்வளவு பெரிய எதிர்ப்பையும் பகையையும் சமாளிக்கக்கூடிய நிலைமையை இந்த ஆள்கட்டும் ஒற்றுமையுமே அவர்களுக்கு அளித்திருந்தன என்பதும் அவனுக்குப் புரிந்திருந்தது. ஒரு முறை இராமேஸ்வரத்தில் தரிசனம் செய்ய வந்திருந்த சேர அரசன் ஒருவன் திரும்பும் போது சேதுபதியைக் காண இராமநாதபுரம் வந்து ஏழுநாள் காத்திருக்க வேண்டியதாயிற்று. பேரரசனாகிய சேரனே சிற்றரசனாகிய சேதுபதியைச் சந்திக்க ஏழுநாள் காத்திருக்க நேர்ந்தது. இராமேஸ்வர தரிசனத்தின் பயன் சேதுபதியையும் கண்டு முடித்தாலொழியப் பூர்த்தியாகாது என்ற ஐதீகத்தால் சேரன் பொறுமையாக ஏழுநாள் தங்கிக் காத்திருந்து, சேதுபதியையும் பார்த்துவிட்டுத் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றான் என்பதைத் தனது தாய் சொல்லிக் கேள்விபட்டிருந்தான் ரங்ககிருஷ்ணன்.

 

    • சிவகங்கையைக் கடந்து மானாமதுரை ஊர் எல்லைக்குள் புகுந்த பின்னும் ரங்ககிருஷ்ணனையோ, அவனது படைகளையோ, யாரும் பொருட்படுத்தவில்லை. ‘ஊர் எல்லையிலோ, எதிர்பார்த்த இடங்களிலோ சேதுபதியின் படை வீரர்கள் எதிர்ப்பதற்குத் திரண்டு நிற்கவில்லை. எங்கும் வாழ்க்கை எப்போதும் போல் சகஜமாயிருந்த்து.

 

    • எதிரியின் பகைமை அல்லது கோபத்தைக் கூடப் பொறுத்துக் கொண்டு விடலாம். ஆனால் அலட்சியத்தையோ அவமதிப்பையோ பொறுத்துக் கொள்வதென்பது முடியாத காரியம். கிழவன் சேதுபதி குமாரப்ப பிள்ளையைக் குடும்பத்தோடு கொன்றதாகவும், மறவர் நாட்டைச் சுவாதீனப் பிரகடனம் செய்ததற்காகவும் தன்னைக் கண்டித்து யாரேனும் படையெடுத்து வரமுடியும் என்று எதிர்பார்த்து ஆயத்தமாயிருப்பதாகவே தெரியவில்லை. ஒரு படையெடுப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போர்க்கால ஆயத்தங்களோ அவசரங்களோ பரபரப்புகளோ எங்கும் இம்மியளவுகூடத் தென்படவில்லை என்பது ஏமாற்றமளித்ததோடு போகாமல் எரிச்சலும் ஊட்டியது.

 

    • ரங்ககிருஷ்ணன், ‘முத்துராமலிங்க பூபதி’ என்னும் தனது முன்னணிப் படைத்தலைவன் ஒருவனை அழைத்துப் பேசிப் பார்த்தான். அந்தப் படைத்தலைவனும் மறவர் சீமையைச் சேர்ந்தவன் தான்.

 

    • “ஒரு பாவமும் அறியாத மக்களை நாமாக வலிந்து தாக்கக் கூடாது! எங்கே நம்மை எதிர்கொண்டு மோதி எதிர்க்கிறார்களோ, அங்கேதான் நாம் போரைத் தொடங்கவேண்டும் மகாராஜா! இல்லாவிட்டால் தீவட்டிக் கொள்ளைக்காரர்களுக்கும் நமக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்” என்றான் முத்துராமலிங்க பூபதி. ரங்ககிருஷ்ணன் அவனைக் கேட்டான்.

 

    • “எங்கேயும் யாரும் நாம் படையெடுத்து வந்திருப்பதைப் பற்றிய பிரக்ஞையோ, கவலையோ, அக்கறையோ, காட்டுவதாகத் தெரியவில்லையே! வயல்களில் உழவர்கள் நிர்ப்பயமாக உழுது கொண்டிருக்கிறார்கள். வீடுகளில் குழந்தைகளைத் தாய்மார்கள் தாலாட்டும் பாடல்கள் இனிதாக ஒலிக்கின்றன. ஏற்றம் இறைப்பவர்கள் பாடும் ஏற்றப்பாட்டு நம் செவிகளில் ஒலித்த வண்ணமாயிருந்தன. வயல்களில் களை எடுக்கும் பெண்களின் குரவை ஒலி விண்ணை எட்டுகிறது. களத்து மேடுகளில் நெற்குவிப்போர் உல்லாசமாகப் பாடியபடி வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். தெருக்களில் போவோர் வருவோரும், சாவடிகளில் அமர்ந்து வம்புபேசுவோரும் கவலையின்றி உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். மரத்தடிகளிலும் வீட்டு முற்றங்களிலும் தாளலயத்தோடு உரலில் நெல் குத்தும் பெண்கள் வள்ளைப்பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்கள். பயத்தையும் போர் வந்திருப்பதையும் இவர்களுக்கு நான் எப்படித்தான் உணர்த்துவது?”

 

    • “யாரோ சொல்லித் தூண்டி இப்படி இருக்கச் சொல்லியதால் இவர்கள் இப்படி இருக்கவில்லை மகாராஜா! இது இம்மக்களின் இயல்புகளில் ஒன்று”.

 

    • முத்துராமலிங்க பூபதியின் இந்த பதிலைக் கேட்டுச் சந்தேகப்பட்டு அவன் முகத்தை ஊடுருவிப்பார்த்தான் ரங்ககிருஷ்ணன். தனது சந்தேகத்தைக் கூட அந்த முரட்டு மறவன் புரிந்து கொள்ளவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரங்ககிருஷ்ணன் தன் மனத்தில் அப்போது பெருகும் தாழ்வு மனப்பான்மையைத் தவிர்க்க முடியாமல் தவித்தான். போரைத் தொடங்குவதற்கு முன்பே எதிரில் கூட வராமலே தன் எதிரியின் மனத்தில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிட்ட அந்தக் கிழட்டுச்சிங்கம் இரகுநாத சேதுபதியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவனுக்கு. அவன் மனநிலை புரியாமல் “இந்த இராமநாதபுரம் சீமைக்காரர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும் பயமும் கலக்கமும் என்னவென்று புரியவைப்பது சிரமம் மகாராஜா!” என்றான் முத்துராமலிங்க பூபதி. நிஷ்களங்கமாக அவன் இப்படிக் கூறியவுடன், ‘நீ இந்தச் சீமையைச் சேர்ந்தவன் என்ற திமிரில் பேசுகிற பேச்சா இது?’ என்று சுடச்சுடக் கேட்க வேண்டும் போலிருந்தது ரங்ககிருஷ்ணனுக்கு. வாய் நுனி வரை வேகமாக வந்துவிட்ட அந்த வார்த்தைகளைக் கேட்டுவிடாமல் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.

 

    • இன்னும் பொழுது சாயவில்லை என்றாலும் மானா மதுரையிலேயே அவர்கள் தங்கினார்கள். மறவர் நாட்டு எல்லைப்பகுதிக்கு அப்பால் நள்ளிரவுத் தங்கலை வைத்துக் கொள்வதற்குப் பதில் மானாமதுரையிலேயே தங்கிக் கொண்டு, தான் படையோடு வந்திருப்பதை ஒரு குதிரை வீரன் மூலம் இராமநாதபுரத்திலுள்ள சேதுபதிக்கு முன் தகவலாகச் சொல்லி வர அனுப்பலாமென்று தீர்மானித்து அதன்படி செய்திருந்தான் ரங்ககிருஷ்ணன்.

 

    • போய் வருகிற வீரன் திரும்பி, என்ன தகவல் கொண்டு வருகிறானோ அதற்கேற்ப மறுநாள் முடிவு செய்யலாமென்று ரங்ககிருஷ்ணன் அபிப்பிராயம் கொண்டிருந்தான். எதிர்ப்பே இல்லாத பிரதேசத்திற்குள் படை நடப்பைத் தொடருவதா கூடாதா என்று குழம்பியிருந்தது அவனுக்கு.

 

    • நிலவுகிற இந்த அமைதி சகஜமானதா, தந்திரமானதா என்று வேறு புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. ஓர் எதிர்ப்பும் எங்கும் இராதென்று நினைத்துப் படையெடுத்து வருபவர்களை நாட்டுக்கு உள்ளே வெகுதூரம் வரவிட்டுக் கொண்டு பாதியில் மடக்கித் தாக்குவதற்குச் சேதுபதி சதி செய்கிறாரோ? என்று அவனுக்குச் சந்தேகமாயிருந்தது. நிலைமை கிணற்றில் கல்லைப் போட்டதுபோல் இருந்தது. எதுவுமே புரியவில்லை. இராமநாதபுரத்துக்கு நேரில் போயிருக்கும் குதிரை வீரன் திரும்பினால் ஒரு வேளை ஏதாவது விவரம் புரியலாம். அவன் திரும்புகிற வரை மேற்கொண்டு எதுவும் செய்வதில்லை என்று அந்தரங்கமாக முடிவு செய்து கொண்டு ரங்ககிருஷ்ணன் மானாமதுரையிலேயேத் தங்கி இருந்தான்.

 

    • அன்று பொழுது சாயும் நேரத்துக்கு முன் ஊர் மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாமல் தானே அறிந்து வரச் சென்றான் அவன். ஊரிலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக இருந்த மறவர் சாவடி ஒன்றருகே ஒரு மரத்தடியில் இரண்டு மறவர்குலப் பெண்கள் நெல்லுக்குத்திக் கொண்டிருந்தார்கள்.

 

      • “ரகுநாத சேதுபதி

 

      •       மகராசன் சீமையிலே

 

      • மாதமும்மாரி பெய்யுதுன்னு

 

      •       சுகபோக வாழ்க்கையைச்

 

      • சொல்லுங்கடி பெண்டுகளா!

 

      •       இகபர சௌக்கியத்துக்கு

 

      • ரகுநாத சேதுபதி

 

      •       ஏதும் கவலை இல்லாத

 

      • ராஜ்யத்தின் கீர்த்திகளை

 

      •       இதமாகப் பாடுங்கடி இந்த

 

      • சுகபோக வாழ்க்கையைச்

 

      •       சொல்லிக் குத்துங்கடி”.

 

    • என்று அவர்கள் பாடிக் கொண்டிருந்த இனிய குரலில் ரங்ககிருஷ்ணனனே ஓரிரு கணம் தன்னை மறந்து சொக்கிப் போய் விட்டான். வைரம் பாய்ந்த கருந்தேக்கில் இழைத்து இழைத்து மெருகேறியது போன்ற அந்தப் பெண்களின் கட்டான உடலழகும் ஒன்றோடொன்று போட்டியிட்டன. அவர்களது வள்ளைப் பாட்டில் இருந்த கிழவன் சேதுபதியின் கீர்த்தியைக் கேட்டபோது ஐந்தாறு வயதுச் சிறுவனாக இருந்த காலை, தாய் ராணி மங்கம்மாளுடன் தான் இராமேஸ்வரம் சென்றிருக்கையில் பார்த்திருந்த அந்தச் சிங்கம் போன்ற தோற்றத்தை உடைய கம்பீரமான ஆகிருதியை நினைவில் ஒன்று கூட்டிப் பார்க்க முயன்றான் ரங்ககிருஷ்ணன்.

 

    • அந்த நினைப்பே ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தது. மலை உயர்ந்து எதிரே வந்து நின்றது போன்ற அந்தத் தோற்றமும் வீரகம்பீரத்தை எடுத்துக் காட்டிய வளமான மீசைகளும், கூரிய விழிப்பார்வையும் பாறை போல் பரந்த மார்பும் வலிய பருத்த தோள்களுமாகக் கிழவன் சேதுபதியின் காட்சி மனக்கண்ணில் படர்ந்தது. ‘மறவர் சீமை அவரை வீரவணக்கம் செய்து கொண்டிருந்தது. மறவர் சீமையின் ஏழைப் பெண்களுக்கெல்லாம் அரண்மனைச் செலவில் திருமணம் செய்து உதவியதன் மூலமாகத் தெற்கத்திச் சீமையில் கன்னியாகுமரி அம்மனைத் தவிர வேறு குமரிப்பெண்ணே இனிமேல் கல்யாணத்திற்கு மீதமில்லை என்கிறார்போலச் செய்து விட்டார் சேதுபதி என நாட்டில் அவருக்கு ஒரு புகழும் ஏற்பட்டிருந்தது. அந்த மரத்தடியில் உலக்கையால் நெல் குத்தும் பெண்கள் மேலும் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்டான் ரங்ககிருஷ்ணன்.

 

    • “எந்த ராசா எந்தப் பட்டணம் போனா என்னடி அம்மா? நம்ம சேதுபதி மகராசன் தயவுலே நமக்கு ஒரு கொறையும் வராதுடீ வேலம்மா.”

 

    • “அது மட்டுமாடீ? தெற்கத்திச் சீமையிலே எல்லா ராசாமாரும் நம்ம சேதுபதி பேரைச் சொன்னாலே நடுங்கறாகளாம்டீ! மங்கம்மா ராணி கூட ‘நீங்க கப்பம் கட்டாட்டியும் போகுது எங்க ராச்சியத்தோட சிநேகிதமா இருந்தாலே போதும்’னு நம்ம சேதுபதி ராசாகிட்டச் சொல்றாளாம். உனக்குத் தெரியுமாடீ சேதி?”

 

    • ரங்ககிருஷ்ணன் அங்கிருந்து தற்செயலாகப் புறப்படுவது போல் மெல்ல மெல்ல மேலே நகர்ந்தான். சேதுபதியை எதிர்க்கவும் எதிர்க்க நினைக்கவுமே ஈரேழு பதினாங்கு புவனங்களிலும் ஆட்கள் இல்லை இருக்கமுடியாது என்கிற அசைக்க முடியாத தன்னம்பிக்கையோடு அந்த மறவர் சீமை மக்கள் இருக்கிற நிலைமையை அவ்வுரையாடலிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. இப்படித் திடமனமும் நம்பிக்கையும், எதற்கும் கலங்காத துணிவும் உள்ள மக்களே அவர்களை ஆள்கிறவனுக்கு ஒரு வரப்பிரசாதம் அல்லவா? கிழவன் சேதுபதிக்கு அப்படி மக்கள் வாய்த்திருந்தார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கியது.

 

    • அந்தி மாலை வந்தது. இரவும் வந்தது. நள்ளிரவும் கழிந்தது. இராமநாதபுரம் போன குதிரைவீரன் இன்னும் திரும்ப வரவில்லை. ரங்ககிருஷ்ணனின் குழப்பம் அதிகமாகியது. போன தூதனைச் சேதுபதியோ சேதுபதியின் ஆட்களோ பிடித்து வைத்துக் கொண்டு இருப்பார்களோ என்று கூடத் தோன்றியது. முந்திய இரவைப் போலவே அன்றும் ரங்ககிருஷ்ணனால் உறங்க முடியவில்லை. தூதனைப் பிடித்து வைத்துக் கொண்டதுமின்றி எந்த நேரத்திலும் எந்த திசையிலிருந்தும் சேதுபதியும் மறவர் சீமைப் படைகளும் அந்த நள்ளிரவில் தங்களைத் தேடி வந்து தாக்கக்கூடும் என்ற பயமும் ரங்ககிருஷ்ணனுக்கு இருந்தது. ஆனால் அவன் பயந்தபடி எதுவுமே நடக்கவில்லை.

 

    • பொழுது விடிவதற்குச் சில நாழிகைகள் இருக்கும்போது தொலைவிலிருந்து பாசறையை நெருங்கிவரும் ஒற்றைக் குதிரையின் குளம்பொலி கேட்டது. போனவன் திரும்பி வந்திருந்தான்.

 

    • ரங்ககிருஷ்ணனே ஆவல் மிகுதியினால் பாசறைக் கூடாரத்திலிருந்து வெளியே வந்து அந்த வீரனை எதிர்கொண்டு நின்றான்.

 

    • “சேதுபதியைப் பார்த்தாயா? என்ன சொன்னார்?”

 

    • “ஆன மட்டும் முயன்றேன். அவரைப் பார்க்க முடியவில்லை. ஊரில் இருக்கிறாரா, இல்லையா என்பதைக் கூட அறிய முடியவில்லை. சிலர் திருப்புல்லாணி போயிருக்கிறார் என்றார்கள். சிலர் உத்திரகோசமங்கை போயிருப்பதாகச் சொன்னார்கள். வேறு சிலர் இராமேஸ்வரம் போயிருக்கிறார் என்றார்கள்.”

 

    • “நீ நம்மிடமிருந்து வந்திருக்கும் தூதன் என்பதைக் கூறிய பின்புமா அந்த நிலை?”

 

    • “ஆம் அரசே! இந்த ஊர் எப்படி அமைதியாகப் போர்க் கவலையின்றி இருக்கின்றதோ இதே போல் தான் இராமநாதபுரமும் இருக்கின்றது. யாருமே போரைப் பற்றிக் கவலைப் படவில்லை.”

 

    • “நான் படையெடுத்து மானாமதுரை வந்து தங்கியிருக்கிறேன் என்பதையாவது அவர்களுக்குத் தெரிவித்தாயா?”

 

    • “சேதுபதியின் மாபெரும் அரண்மனையில் என்னிடம் அதைப் பொருட்படுத்திக் கேட்க யாருமில்லை.”

 

    • “திமிர் அதை ஒடுக்கியே ஆக வேண்டும். வேறு வழியில்லை.”

 

    • “இந்தப் படையெடுப்பால் எதுவும் பாதிக்கப்பட்டு விடமாட்டோம் என்பது போல் ஜனங்களும், அரண்மனையிலுள்ளவர்களும் மிதப்பாக இருக்கிறார்கள், அரசே! அவர்கள் நம்மை எதிர்ப்பதற்குத் தங்கள் படைகளைக் கூட ஆயத்தம் செய்யவில்லை.”

 

    • “சேதுபதி நம்மைத் தமது எதிரியாகக் கூட அங்கீகரிக்க மாட்டார் போலிருக்கிறதே?” என்று கண்களில் சிவப்பேறிச் சினம் ஜொலிக்கத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் ரங்ககிருஷ்ணன்.

 

    • கடுமையான மல்யுத்தத்தில் அந்த யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஜனங்களுக்குப் புரியாதபடி அடித்தவனுக்கும் அடி வாங்கியவனுக்கும் மட்டுமே புரியக்கூடிய மர்மமான அடியைப் பட்டுக் கொண்டு விட்டாற் போன்று அந்தரங்க வலியோடு அந்தக் கணத்தில் தனக்குள் நொந்து தவித்தான் ரங்ககிருஷ்ணன்.

 

    • ————-

 


 

7. வஞ்சப் புகழ்ச்சி வலை 

    • இரகுநாத சேதுபதி தாம் மிகவும் சிக்கலான எதிரிதான் என்பதை நிரூபித்திருந்தார். மானாமதுரையிலேயே படைகளைத் தங்க வைத்துக் கொண்டு ரங்ககிருஷ்ணன் இராமநாதபுரத்துக்கு தூது அனுப்பியும் பயனில்ல்லை. போய் வந்த தூதுவன் இராமநாதபுரத்தில் பொறுப்புள்ள யாரையும் சந்திக்கவும் முடியாமல் மேல் விவரம் எதையும் தெரிந்து கொள்ளவும் முடியாமல் திரும்பியிருக்கிறான். அவன் போனதாலும் பயனில்லை. திரும்பி வந்தும் பயனில்லை.

 

    • ஒரு படையெடுப்பைப் பொருட்படுத்தி எதிர்ப்பதற்கு முன் வராத எதிரியின் நாட்டையோ, ஊர்களையோ, பொது மக்களையோ வலிந்து தாக்கினால் வீணாகத் தன் பெயரும் தாயின் பெயரும் தான் கெடும் என்பது ரங்ககிருஷ்ணனுக்குப் புரிந்தது. மறவர் சீமையையே தாய்நிலமாகக் கொண்ட தன் படை வீரர்களிலே எவ்வளவு பேர் அந்தத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பார்கள் என்பதையும் அவனால் சரியாக கணிக்க முடியாமல் இருந்தது. ‘மதில் மேல் பூனை’ நிலையிலிருந்தான் அவன்.

 

    • தங்கியிருந்த மானாமதுரையிலிருந்து அப்படியே படைகளைத் திருப்பிக் கொண்டு திரிசிரபுரம் போகவும் அவனால் முடியாது. பொழுது விடிகிற வரை ஒரே மனக்குழப்பமாயிருந்தது அவனுக்கு. விடிந்ததும் ஒரு முடிவு கிடைத்தது அவனுக்கு. எப்படியும் இராமநாதபுரம் சென்று சேதுபதியை நேருக்கு நேர் சந்திக்காமல் எதையும் முடிவு செய்வதற்கில்லை என்ற எண்ணத்துடன் படைகளோடு இராமநாதபுரம் நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தான் அவன். தாய்க்கும் ஒரு தூதுவன் மூலம் நிலைமையைச் சொல்லி அனுப்பினான்.

 

    • கோடையின் பகல் நேரம். பயணத்தில் வெப்பம் அதிகமாயிருந்தது. இந்தப் படைகள் மறவர் சீமைக்குள் நுழைந்து தலைநகரை நோக்கி விரைந்தது அந்தச் சீமையின் சிற்றூர்களையும், பேரூர்களையும், மக்களையும், எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று தெரிந்தது. அந்த அலட்சியமும் தற்செருக்கும் ரங்ககிருஷ்ணனின் மனதில் அந்தரங்கமாக உறுத்தின. கண்மூடித் தனமாகத் தன்னை ஏற்று வழிபடும் மக்களை நம்பித்தான் சேதுபதி இத்தனை இறுமாப்போடு இருக்கிறார் என்பது புரிந்தது. பொது மக்களோ படை வீரர்களின் கட்டுப்பாட்டோடும், உறுதியோடும், ஒழுக்கத்தோடும் இருக்கிற தேசத்தில், அந்நியர்கள் புகுந்து தொல்லைப்படுத்தவே முடியாது தான். மறவர் சீமையின் தலைநகரான இராமநாதபுரத்தை நெருங்க நெருங்க இந்தக் கட்டுப்பாடு வெளிப்படையாகவே புரிந்தது. சேதுபதியின் வலிமையே இந்தக் கட்டுப்பாடுதான் என்று விளங்கியது.

 

    • அப்போது தானும் தன் படைவீரர்களும் மறவர் சீமை மேல் படையெடுத்து வந்திருப்பதும், தனக்கும் தன் தாய்க்கும் குமாரப்ப பிள்ளையைக் கொன்ற விஷயமாகவும், மறவர் நாட்டைச் சுயாதீனப் பிரகடனம் செய்ததன் மூலமாகவும் ஏற்பட்டிருக்கும் மனத்தாங்கல்கள், இவை எல்லாம் சேதுபதிக்குப் புரியாமல் இருக்கும் என்று ரங்ககிருஷ்ணன் நினைக்கவில்லை. திரிசிரபுரத்துக்குச் சுயாதீனப் பிரகடனம் செய்து மறவர் சீமையிலிருந்து தூதன் அனுப்பப்பட்ட விதம், இப்போது இந்தப் படையெடுப்பை எதிர்கொள்ளும் பாணி எல்லாவற்றிலுமே சேதுபதியின் அலட்சியப்போக்கு தெரிவதை ரங்ககிருஷ்ணனால் உய்த்துணர முடிந்தது.

 

    • ‘தன் தாய் கையாலாகாதவள். தான் சிறுபிள்ளை’ என்ற எண்ணத்தில் தான் சேதுபதி இவ்வளவும் செய்கிறார் என்று அவனுக்குப் பட்டது.

 

    • தனது படைத்தலைவர்களில் ஒருவனாகிய முத்து ராமலிங்க பூபதியைக் கூப்பிட்டு ரங்ககிருஷ்ணன் மறுபடியும் பேசிப்பார்த்தான்.

 

    • “சேதுபதியின் படைகள் நம்மை எதிர்க்க வரவில்லை. மறவர் சீமைக்குள் வெகுதூரம் ஊடுருவி நாம் முன்னேறி விட்டோம். நாம் கடந்து வந்துவிட்ட பகுதிகளை நாமே வென்று கைப்பற்றி விட்டதாக் கருதலாமா?”

 

    • “தர்ம சங்கடமான நிலை அரசே! இப்போது நாம் வென்றதாகவும் சொல்ல முடியாது. தோற்றதாகவும் சொல்லி விடமுடியாது! சிங்கம் அயர்ந்து உறங்கும் போது அதன் குகைக்குள் தெரிந்தோ, தெரியாமலோ நுழைந்து விட்ட புள்ளிமான் அதைத் தன் வெற்றியாகச் சொல்லி கொண்டு விட முடியுமா? நம் நிலையும் அதுதான்…”

 

    • “சேதுபதி சிங்கம்… நாம் மான்… இல்லையா?”

 

    • “நம்மைக் குறைத்துச் சொல்லவில்லை அரசே! போரில் நாம் எதிரியை மதிப்பது தவறாகாது.”

 

    • “வெற்றியும் தோல்வியும் தெரியாமலே எவ்வளவு தூரம்தான் படைகளோடு முன்னேறுவது?”

 

    • “இராமநாதபுரம் போய்ச் சேதுபதியைச் சந்தித்துவிட்டால் இரண்டில் ஒன்று தெரிந்துவிடும் அரசே!”

 

    • “போர்க்களத்தில் சந்திக்க வேண்டிய எதிரியை அரண்மனையிலா போய்ச் சந்திப்பது?”

 

    • “அரசியலில் நிரந்தரமான எதிரியுமில்லை. நிரந்தரமான நண்பனுமில்லை. சந்தர்ப்பங்கள் தான் நட்பையும், பகையையையும் உருவாக்குகின்றன என்று அமரராகிவிட்ட தங்கள் தந்தையார் அடிக்கடி சொல்வது உண்டு அரசே!”

 

    • தனக்கு மறுமொழி கூறுகிறவனுடைய வார்த்தைகளை அணுஅணுவாகக் கவனித்து அதில் எந்தச் சிறு தொனியிலும் கூட சேதுபதியைக் குறைத்துப் பேசவோ விட்டுக் கொடுக்கவோ செய்யாத உறுதி இருப்பதைப் புரிந்து கொண்டான் ரங்ககிருஷ்ணன். இப்படிப்பட்ட படை வீரர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்ற மலைப்பு அவனுக்கு ஏற்பட்டது. அமைதியாகவும் இயல்பாகவும் இருக்கிற மக்களை எதிர்த்துத் தாக்குவதும் பொருத்தமாகப் படவில்லை. மறவர் சீமையைச் சேராத விஜயநகர வாரிசுகளாகிய இரண்டொரு சுயஜாதிப் படைத்தலைவர்களையும் நடுநடுவே அழைத்துத் தன் சந்தேகத்தைத் தெரிவித்து யோசனை கேட்டபோது அவர்கள் அனைவரும் ரங்ககிருஷ்ணனின் சந்தேகத்தை உறுதிப் படுத்தினார்கள்.

 

    • சேதுபதி வேண்டுமென்றே நாடகமாடுகிறார். அவருடைய நாடகத்தையும், பாசாங்கையும் கலைத்து அவரை உண்மையான கோபத்தோடு வெளிவரச் செய்ய எந்தத் தீவிரமான செயலில் இறங்குவது என்றுதான் புரியாமலிருந்தது. முன்னுக்குப் போனாலும் இடித்தது. பின்னால் நகர்ந்தாலும் உரசியது.

 

    • உண்மைப் போரைத் தொடங்குவதற்கு முன்பே தன் எதிரியைச் சொந்த மனப் போராட்டங்களிலேயே சிக்கித் தவித்துத் திணறும்படிச் செய்துவிட்ட கிழவன் சேதுபதியின் அரசியல் முதிர்ச்சியும், பக்குவமும், பிரமிக்கும்படி இருந்தன.

 

    • ரங்ககிருஷ்ணனின் படைவீரர்களும் அவனும் இராமநாதபுரத்தை அடைவதற்குள் திரிசிரபுரத்திலிருந்து ஒரு தூதுவனைத் தாய் மங்கம்மாள் அனுப்பியிருந்தாள். வந்து சந்தித்த அந்த தூதுவன் ஓர் ஓலையை அளித்திருந்தான்.

 

    • ரகுநாத சேதுபதி கிழச்சிங்கம் மிகவும் சிக்கலான எதிரி. ஆத்திரமோ, பரபரப்போ அடையாமல் நிதானமாக நடந்து வெற்றி கொள்ள முயல்க! என்பது போல் தாயும், இராயசம் அச்சையாவும் அந்த ஓலையில் ரங்ககிருஷ்ணனை எச்சரித்திருந்தார்கள். ‘தங்கள் அறிவுரையை மதித்து அதன்படியே நடப்பேன் கவலை வேண்டாம்’ என்று தாய்க்கு மறுமொழி அனுப்பிவிட்டு, மேலே பயணத்தைத் தொடர்ந்தான் ரங்ககிருஷ்ணன்.

 

    • ரங்ககிருஷ்ணனும் படைவீரர்களும் மறுநாள் முற்பகல் வேளையில் இராமநாதபுர எல்லையை அடைந்தபோது, புறக்கோட்டையாகிய வெளிப்பட்டணத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்கள். மிகவும் சாதுரியமான முறையில் அந்தத் தடை செய்யப்பட்டிருந்தது. இராமநாதபுரம் அரண்மனைச் சேர்ந்த வீரர்கள், வெயில் நேரத்துக்கு இதமான குளிர்ந்த பானகமும், வெள்ளரிப் பிஞ்சுமாக எதிர் கொண்டு ரங்ககிருஷ்ணனின் படைவீரர்களை உபசரித்தார்கள்.

 

    • கோடை வெயிலில் அலைந்து வந்த களைப்பாலும், தாகத்தாலும் ரங்ககிருஷ்ணனின் படைவீரர்களாலும் அதை ஏற்காமல் இருக்க முடியவில்லை. ரங்ககிருஷ்ணனோ, படைத் தலைவர்களோ ‘அந்த உபசரணையை ஏற்கக்கூடாது’ என்று தங்கள் படைவீரர்களைத் தடுக்கவும் இயலாமற் போயிற்று. ரங்ககிருஷ்ணன் யோசித்துக் கொண்டிருந்தபோதே, இராமநாதபுரம் அரண்மனைச் சேர்ந்த மந்திரி பிரதானிகள் அவனை எதிர்கொண்டு வந்து, “சேதுபதி சபையில் கொலுவீற்றிருக்கிறார்! சபை நடந்து கொண்டிருக்கிறது. புலவர்களும், கலைஞர்களும் தங்கள் கவித்திறனையும், கலைத்திறனையும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பாதியில் எழுந்து வந்தால் புலவர்களையும், கவிஞர்களையும் அவமதித்ததுபோல் ஆகிவிடுமே என்று தயங்கி எங்களைக் கூப்பிட்டு உரிய ராஜ மரியாதையோடு தங்களை எதிர்கொண்டு அழைத்து வருமாறு அனுப்பினார்” என்றார்கள். அவர்கள் குரலில் பயபக்தி கனிந்திருந்தது.

 

    • அவர்கள் அழைப்பை ஏற்று உள்ளே போவதா, வேண்டாமா என்று ஓரிரு கணங்கள் தயங்கினான் ரங்ககிருஷ்ணன்.

 

    • ஒரு பெரிய விருந்தினரைச் சகல அந்தஸ்துகளுடன் வரவேற்பது போல்தான் அவனை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள் அவர்கள். ஆனால் ஒரு வித்தியாசத்தை ரங்ககிருஷ்ணன் அத்தனை பரபரப்பிலும் கூர்ந்து கவனிக்கத் தவறவில்லை.

 

    • ஒரு பேரரசனை அவனுக்குக் கீழ்படியும் ஒரு சிற்றரசன் வரவேற்பதுபோல் சேதுபதி தானே எதிர்கொண்டு வந்து வரவேற்காமல் ஒரு சுயாதீனமான நாட்டின் அரசன் மற்றொருவனை வரவேற்பது போல் மந்திரி பிரதானிகள் வந்து வரவேற்றுக் கொண்டிருந்தனர். புலவர்களையும், கலைஞர்களையும் சாக்குச் சொல்லிவிட்டுச் சேதுபதி சாமர்த்தியமாகக் கொலு மண்டபத்துக்குள்ளேயே இருந்து கொண்ட சாதுரியம் அவனுக்குப் புரிந்தது. புரிந்து என்ன செய்ய? அதற்குள்ளேயே அவனது சொந்தப் படைவீரர்களில் பெரும்பாலோர் சேதுபதியின் வீரர்கள் அளித்த சுக்கு மணம் கமழும் இனிய குளிர்ந்த பானகத்தையும், இளம் வெள்ளரிப் பிஞ்சுகளையும் இரசித்துச் சுவைக்க தொடங்கியிருந்தனர். எங்கும் உறவும் இணக்கமும் தெரிந்தனவே தவிரப் பகைமையோ, குரோதமோ தெரியவில்லை.

 

    • வேறுவழியின்றித் தன் நம்பிக்கைக்குரிய இரண்டொரு சுயஜாதிப் படைத் தலைவர்களோடு சேதுபதியின் ஆட்கள் வழிகாட்டி அழைத்துச் செல்ல அவர்களோடு கொலு மண்டபத்திற்குச் சென்றான் ரங்ககிருஷ்ணன்.

 

    • கொலு மண்டபத்தைச் சுற்றிலும், உட்கோட்டையிலும் மல்யுத்தம் புரிபவர்கள் போல் கட்டுமஸ்தான மறவர் சீமைவீரர்கள் நிறைந்திருந்தனர். உட்கோட்டையும், அரண்மனையும் ஆயிரக்கணக்கான வீரர்கள் நிறைந்து தென்பட்டன. எல்லாம் இயல்பாகவும் சகஜமாகவும் தெரிந்தாலும் கோட்டைக்குள் வந்திருக்கும் மரியாதைக்குரிய எதிரி முரண்டினால் அடுத்த விநாடியே, அடக்கிவிட ஏற்பாடுகள் ஆயத்தாமாயிருப்பது நன்கு புரிந்தது. விசாலமான அந்த அரண்மனையின் கொலு மண்டபத்தில் ரங்ககிருஷ்ணன் உள்ளே நுழைந்தபோது மயில் நடனம் எனப்படும் மயில் ஆட்டம் ஆடி முடித்திருந்த அதே மயில் ஆட்டத்திற்குரிய கோலத்திலிருந்த ஓர் அழகிய இளம் பெண்ணுக்கும் கரக ஆட்டம் ஆடி முடித்திருந்த ஒரு இளம் பெண்ணுக்கும் பரிசுகள் அளித்துக் கொண்டிருந்தார் கிழவன் சேதுபதி.

 

    • சேதுபதி, ரங்ககிருஷ்ணனும் அவனுடைய படைத் தலைவர்களும் உள்ளே நுழைந்ததை முதற் சில கணங்கள் தாம் கவனித்தாகவே காட்டிக் கொள்ளவில்லை. கலைஞர்களுக்கும், புலவர்களும் சன்மானம் அளிக்கிற சாக்கில் ரங்ககிருஷ்ணனைக் கொஞ்சம் அலட்சியப்படுத்த முடிந்தது அவரால். மிகவும் தற்செயலாக நேர்வதுபோல அதைச் செய்தார் அவர்.

 

    • ஆனால், அடுத்த சில கணங்களிலேயே சேதுபதி சமாளித்துக் கொண்டுவிட்டார்.

 

    • “வரவேண்டும்! வரவேண்டும்! சின்ன நாயக்கரை வரவேற்க இந்தச் சேதுபதியின் ஏழை ராஜசபை கொடுத்து வைத்திருக்கிறது. பட்ட மகிஷியுடன் வருவீர்கள் என்று விருந்தளிக்கக் காத்திருக்கிறேன் நான். தனியாக வந்திருக்கிறீர்களே?” என்று எதிர்கொண்டு நடந்து ஓடிவந்து ரங்ககிருஷ்ணனை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டார் அவர். கிழச்சிங்கம் ஒன்று ஓடிப் பாய்ந்து வந்து ஓர் இளைஞனைக் கட்டித் தழுவுவது போலிருந்தது அந்தக் காட்சி. ரங்ககிருஷ்ணன் அந்தத் தழுவுதலைத் தவிர்க்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் திணறினான். அடுத்து அவர் செய்த காரியம் அவனை இன்னும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது.

 

    • தன் சபைக்குள் திடீரென்று நுழைந்துவிட்ட ரங்ககிருஷ்ணன் முதலியவர்களை முறையாக வரவேற்பது போல் சபையினரை நோக்கிச் சேதுபதி கூறலானார்.

 

    • “சபையோர்களே! நம் சின்ன நாயக்கர் பதவியேற்று முடிசூடிக் கொண்டு படைகளுடன் இறைவன் அருளையும் ஆசியையும் பெற இராமேஸ்வர யாத்திரை மேற்கொண்டு இப்போது வந்திருக்கிறார். நமது மறவர் சீமை மேலும், என்மேலுமுள்ள அன்பைத் தெரிவிக்கவே நடுவழியில் இங்கு நமது விருந்தினராகத் தங்கப் போகிறார். ஐதீகப்படி இராமேஸ்வர யாத்திரை திரும்பும்போதும் மறுபடி இங்கு வருவார். இவருடைய இராமேஸ்வர யாத்திரை ஒரு குறையுமின்றிப் பூரணமாக நிறைவேற நாமும், நமது மறவர் சீமை மக்களும் சகல உதவிகளையும் செய்ய வேண்டும்” என்று உருக்கமான குரலில் சபையோர் கேட்கும் படி பகிரங்கமாகக் கணீரென்று முழக்கமிட்டு அறிவித்தார் சேதுபதி. ரங்ககிருஷ்ணனுக்கு இதைக் கேட்டு ஒரே திகைப்பு.

 

    • அப்போது அந்தச் சூழலில் அதை மறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் திணறினான் ரங்ககிருஷ்ணன். மறுத்தால் இராமேஸ்வரத்தை மதிக்காதவன் என்ற கெட்ட பெயர தனக்கு ஏற்படும். ஆதரித்தால் தான் படையெடுத்து வந்திருப்பதே யாருக்கும் தெரியாது போய்விடும். சேதுபதியின் சாதுரியத்தைக் கண்டு வியப்பு மட்டுமின்றி அதிர்ச்சியும் அடைந்தான் ரங்ககிருஷ்ணன். தன்னை அரசன் என்றோ! பேரரசன் என்றோ ஏற்பதை அறிவிக்கும் எந்தச் சொல்லாலும் அழைக்காமல் தந்திரமாக, ‘சின்ன நாயக்கரே’ என்று மட்டும் அழைத்துச் சமாளிக்கும் சேதுபதியின் தந்திரமும் அவனுக்குப் புரியத்தான் செய்தது. ‘பரராச கேசரி’ என்று சேதுபதிக்குப் பட்டமளித்துப் பாராட்டிய தன் தந்தை சொக்கநாத நாயக்கரையே “பெரிய நாயக்கர்” என்றுதான் அவர் அழைப்பது வழக்கமென்று ரங்ககிருஷ்ணன் கேள்விப்பட்டிருந்தான்.

 

    • உயரமும் பருமனுமாக உயர்ந்து நின்று பிடரி மயிரோடு சிலிர்த்துக் கொண்டு நிற்கும் சிங்கம் போன்ற சேதுபதியின் பார்வையைக் கண்டு என்ன சொல்லிச் சமாளிப்பதென்று புரியாமல் தயங்கினான் ரங்ககிருஷ்ணன். அதற்குள் அவனை அமரச் செய்தார் சேதுபதி.

 

    • “எங்கே? நம்முடைய புகழ்பெற்ற சேதுநாட்டு அவைப் புலவர்கள்? சின்ன நாயக்கரின் இராமேஸ்வர யாத்திரையைப் புகழ்ந்து பாடுங்கள்! பார்க்கலாம்” என்று கிழவன் சேதுபதி அதற்குள் முந்திக் கொண்டு சேதுநாட்டுத் தமிழ்ப் புலவர்களை அழைத்து ரங்ககிருஷ்ணனை மேலும் திணற அடித்தார்.

 

    • புலவர்களில் முதன்மையான ஒருவர் அவையில் முன்வந்து சேதுபதியையும், ரங்ககிருஷ்ணனையும் வணங்கி விட்டுப் பாடத் தொடங்கினார்.

 

      • “கத்துக்கடல்சூழும் ராமேசர்க் காண்பதற்காய்

 

      •       எத்தனையோ காதம் வழிநடந்த – பக்திமிகு

 

      • சத்புருடன் நாயக்க சாம்ராஜ்ய மாமன்னன்

 

      •       முத்துவீரப்பன் முகம்.”

 

    • பாட்டிலும் ரங்ககிருஷ்ணன் இராமேஸ்வர தரிசனத்துக்காகவே பல காததூரம் வழி நடந்து வந்திருப்பதாகவே பாடியிருந்தார் புலவர்.

 

    • ரங்ககிருஷ்ணனுக்கு அருகே அமர்ந்திருந்த அவனுடைய சொந்தத் தளபதிகளில் ஒருவர் சற்றே அதிகமான தமிழ் ஞானமுடையவர். அவர் இந்த வெண்பாவைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்துவிட்டு மெல்லத்திரும்பி ரங்ககிருஷ்ணனின் காதருகே குனிந்து, “பாட்டில் மோசம் இருக்கிறது அரசே! மேலோட்டமாக உங்களைப் புகழ்வதுபோல் பாடப்பட்டிருந்தாலும் உள்ளே பயங்கரமாகப் பொடி வைக்கப்பட்டிருக்கிறது” என்றார். ரங்ககிருஷ்ணன் அதைக் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தான். அந்தப் பாடலில் அப்படி என்ன பொடி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அங்கேயே அரசவையில் விரிவாகக் கேட்டறிய முடியாமல் இருந்தது. சூழ்நிலை அதற்கு இசைவாக இல்லை. சேதுபதியின் சாதுரியங்களும், சாமர்த்தியங்களும் வேறு ரங்ககிருஷ்ணனை அயர்ந்து போகச் செய்திருந்தன. சபையில் மேலும் பல புலவர்கள் ரங்ககிருஷ்ணனை வாழ்த்தினர். ஓரிரு கணங்கள் அந்தச் சீமையின் மேல் படையெடுத்து வந்திருக்கிறோம் என்பதைக்கூட ரங்ககிருஷ்ணனை மறந்து போகச் செய்திருந்தனர்.

 

    • ‘இப்படியும் சாதுரியமாக நடிக்க முடியுமா?’ என்று சேதுபதியைப் பற்றி வியந்து மலைத்துக் கொண்டிருந்த அதே சமயம் தன் படையெடுப்பு பயன்படாமல் தளர்ந்து போனதை எண்ணி ரங்ககிருஷ்ணனுக்கு வருத்தமாகவும் இருந்தது. அவனோடு வந்திருந்த படைவீரர்கள் வெளிக் கோட்டையில் சேதுநாட்டு விருந்துபசாரத்தை ஏற்று மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் இருந்தார்கள். அவனைத் தனியே பிரித்து அழைத்து வந்து உற்சாகமான புகழ் வார்த்தைகளால் சிறைப்படுத்த முயலவது போலிருந்தது சேதுபதியின் செய்கை.

 

    • ஓர் எதிரியை மெய்யான சிறைச்சாலையில் அடைப்பதைக் கூடப் புரிந்துகொண்டு விடலாம். புகழ் வார்த்தைகள் என்ற சிறைச் சாலையைப் பின்னி அதிலடைப்பது மிகவும் அபாயகரமானது. ‘கெட்டிக்காரர்கள் தங்களுக்கு வேண்டாத எதிரிகளைச் சிறையிலடைக்க மாட்டார்கள்; முகஸ்துதி செய்தே வீழ்த்திவிடுவார்கள்’ என்று தாய் அடிக்கடி தன்னிடம் கூறியிருப்பதை இப்போது நினைத்தான் ரங்ககிருஷ்ணன்.

 

    • கொழுந்து விட்டு எரியும் தீயில் தண்ணீரைக் கொட்டுவது போல் அவன் மனத்திலிருந்த பகைமை வெப்பத்தை அணையச் செய்து உபசரித்துக் கொண்டிருந்தார் சேதுபதி. படீரென்று பேச்சை நடுவிலே முறித்து எல்லா ராஜதந்திரத் திரைகளையும் களைந்தெறிந்துவிட்டு, “நீங்கள் எங்கள் மனிதராகிய குமாரப்பபிள்ளையைக் குடும்பத்தோடு கொன்று விட்டீர்கள்! சேது நாட்டைச் சுயாதீனப் பிரகடனம் செய்து கொண்டீர்கள்! இக்காரணங்களுக்காக உங்கள்மேல் நான் படையெடுத்து வந்திருக்கிறேன்” என்று முகத்துக்கு முகம் நேருக்கு நேர் சுடச்சுடச் சொல்லிவிட வேண்டும் என்று துடிதுடித்தான் ரங்ககிருஷ்ணன். ஆனால் அதுவும் அவனால் முடியவில்லை.

 

    • சேதுபதி சாமர்த்தியமாக அவனைப் பேசவிடாமல் சமாளித்தார். அவரே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

 

    • “நம்முடைய நட்பு உங்கள் தந்தையார் காலத்தில் இருந்து வளர்ந்து வருவது. பெரியநாயக்கர் அரசியல் விஷயங்களில் என்னைத் தமது வலக்கையாக நம்பி வந்திருக்கிறார் என்பதை உங்கள் அன்னையார் உங்களுக்குச் சொல்லியிருக்கலாம்…”

 

    • “அதெல்லாம் சரி!… இப்போது நான் வந்த காரியம்….”

 

    • “அதற்கென்ன அவசரம் சின்ன நாயக்கரே! வந்த காரியத்தைப் பேசாமல் நீங்களும் திரும்பிப் போய் விடப் போவதில்லை. கேட்டுக் கொள்ளாமல் நானும் விட்டுவிடப் போவதில்லை.”

 

    • “ஒத்திப் போடாமல் அதைப் பேசிவிடுவது நம் இருவருக்குமே நல்லது! நீங்களும் என்னைப் புரிந்து கொள்ளலாம். நானும் உங்களைப் புரிந்து கொள்ளலாம்.”

 

    • “நாமிருவரும் இனிமேல்தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டுமா சின்ன நாயக்கரே?” என்று கேட்டு விட்டு அர்த்த புஷ்டியோடு ரங்ககிருஷ்ணனின் முகத்தை ஏறிட்டு நோக்கிப் புன்னகை புரிந்தார் சேதுபதி. அந்தப் புன்னகை வெறும் புன்னகையா நமட்டுச் சிரிப்பா என்று வகைப்படுத்த முடியாதபடி இருந்தது. ரங்ககிருஷ்ணன் தொடர்ந்தான்.

 

    • “புரிந்து கொள்ளாமலே புரிந்து கொண்டு விட்டதாக நினைப்பதும் புரிந்து கொண்டு விட்டும் புரியமுடியாத சூழ்நிலைகளில் தவிப்பதும் இரு தரப்புக்குமே நல்லதில்லை…”

 

    • “அத்தகைய இரண்டுங்கெட்டான் நிலைமை என்றும் எதிலும் எனக்கு இன்றுவரை ஏற்பட்டதில்லை சின்ன நாயக்கரே!”

 

    • “இங்கே சபையில் பேச முடியாது! தனியே போய் நாம் பேசியாக வேண்டும்.”

 

    • “இப்படிப் பதற்றமும், பரபரப்பும், வாலிப வயதுக்குரியவை சின்ன நாயக்கரே! பதற்றமும், பரபரப்பும் நீங்கி உணர்ச்சிகள் பக்குவப்பட அநுபவ முதிர்ச்சி தான் உதவமுடியும்.”

 

    • “அறிவுரை கேட்டுக் கொள்ள நான் இங்கு வரவில்லை.”

 

    • “ஆத்திரப்பட்டுப் பயனில்லை, சின்ன நாயக்கரே! இன்னும் சிறிது நேரத்தில் என்னோடு விருந்துண்ணப் போகிறீர்கள். அப்போது தனியாக அந்தரங்கமாக நாம் இருவர் மட்டும் இருப்போம். எல்லாம் பேசிக் கொள்ளலாம். பொதுவாகச் செயலில் காட்டமுடியாத ஆத்திரத்தை வார்த்தைகளில் காட்டி வீணாக்குபவர்களைப் பற்றி நான் அதிகம் கவலைப்படுவதில்லை. ஆனால் உங்களைப் பற்றி மட்டும் கொஞ்சம் கவலைப்படுகிறேன், சின்னநாயக்கரே!”

 

    • “இதற்கு என்ன அர்த்தம்?”

 

    • “புரிந்து கொள்ள வேண்டிய அர்த்தங்களைச் சொல்லிக் கொடுத்தா விளக்குவது சின்ன நாயக்கரே!”

 

    • “வார்த்தைகளையே ஆயுதங்களாகப் பயன்படுத்தி எதிரிகளை மர்மமாகத் தாக்கும் கலை எனக்குப் புதியது புரியாதது.”

 

    • சேதுபதி இதைக் கேட்டுச் சிரித்தார். பின்பு நிதானமாகச் சொல்லலானார்.

 

    • “அஜாத சத்ரு என்று சமஸ்கிருதத்தில் ஒரு தொடர் கேள்விப் பட்டிருப்பீர்கள் சின்ன நாயக்கரே!”

 

    • “அதற்கென்ன இப்போது? ‘தனக்கு இன்னும் எதிரியே பிறக்கவில்லை’ என்று துணிந்திருக்கிற தீரனைப் பற்றிய தொடர் அது.”

 

    • “அந்தத் தொடர் வாழ்வில் எனக்கு மிகவும் விருப்பமானது, சின்ன நாயக்கரே!”

 

    • இதைக் கேட்டு ரங்ககிருஷ்ணன் சேதுபதியின் முகத்தைக் கூர்ந்து நோக்கினான். அவருடைய முகமே அவருக்கு ஒரு முகமூடியாயிருந்தது. அவனால் அவரது உள்ளே ஓடும் எண்ணங்களை அப்போது நிறுத்துப் பார்க்க முடியவில்லை.

 

    • அரசவை கலைந்தது. ரங்ககிருஷ்ணனோடு உடன் வந்திருந்தவர்களை, விருந்தினர்கள் பொதுவாக உணவருந்தும் அரண்மனைப் போஜனைசாலைக்கு உரியவர்களோடு அனுப்பி விட்டு அவனை மட்டும் தன்னோடு தனியே அழைத்துக் கொண்டு சென்றார் சேதுபதி.

 

    • அவர்களுக்குச் சேதுபதியின் குடும்பப் பெண்டிரே பரிமாறினார்கள். அந்த அலங்கார அறையில் சிறப்பான சூழ்நிலையில் நெய் மணம் கமழும் அதிரசங்களையும், தேனில் பிசைந்த தினைமாவையும் உண்ணும்போதும் ரங்ககிருஷ்ணனின் மனம் என்னவோ கசப்பாகத்தானிருந்தது. சேதுபதி அவனை விழுந்து விழுந்து உபசரித்தார். உளுந்து அரிசியோடு வெந்தயமும் சேர்த்து அரைத்து மிருதுவாகவும் பத்தியமாகவும் வார்க்கப் பட்ட மெத்தென்ற தோசைகளும், நாசிக்கு இதமான கொத்தமல்லி வாசனையோடு கூடிய துவையலும் உண்ண ருசியாயிருந்தன. விருந்தோம்பலிலும் பிற உபசரணைகளிலும் அவனை மிகமிகக் கவனமாகவும், மரியாதையோடும் நடத்தினார் சேதுபதி.

 

    • “சின்ன நாயக்கரே! அரசர்கள் என்பதற்காகவோ, பேரரசர்கள் என்பதற்காகவோ நான் மயங்கிப் பயந்து மதிப்பதில்லை. இந்த அரண்மனையில் மிகவும் வேண்டியவர்களை மட்டும் தான் இப்படி என் குடும்பப் பெண்களே முன் வந்து உபசரிப்பார்கள்”.

 

    • “மிகவும் வேண்டியவர்களுக்கு வேண்டியவர்களைக் கொன்று விடுவதும் கூட ஒருவகை உபசரணைதானோ?”

 

    • சேதுபதி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு கலத்தில்லிருந்த பார்வையை நிமிர்த்தி அவனைப் பார்த்தார்.

 

    • “சுவையான இனிய உணவை அருந்தியபடி கசப்பான விஷயங்களைப் பேசுகிறீர்கள் சின்ன நாயக்கரே!”

 

    • “கசப்பும் அறுசுவைகளில் ஒன்றுதானே?”

 

    • “இருக்கலாம்! ஆனால் எல்லா நேரத்திலும் அது உவப்பதில்லை. விருந்தினரைக் கசப்புக்கு உள்ளாக்குவது இந்த அரண்மனையில் வழக்கமில்லை.”

 

    • “குமாரப்ப பிள்ளை…” என்று தான் தொடங்கிய வாக்கியத்தை ரங்ககிருஷ்ணன் முடிப்பதற்குள்ளேயே சேதுபதி குறுக்கிட்டு, “நல்ல மனிதராயிருந்தார். படிப்பாளியாயிருந்தார். ஆனால் அவருடைய விசுவாசமெல்லாம் புறப்பட்ட இடமாகிய சொக்கநாத நாயக்கரின் வம்சத்தில் தான் குவிந்திருந்ததே தவிர, வந்து சேர்ந்த இடமாகிய சேது நாட்டின் மேல் எள்ளளவும் இல்லை” என்றார்.

 

    • “உண்மையாக ஒரு தரப்புக்கு மட்டும் விசுவாசமாகயிருப்பது பாவம் என்று விசுவாசத்துக்கு புது விளக்கம் இப்போதுதான் புரிகிறது. எல்லாருக்கும் விசுவாசமாயிருப்பது இங்கிதமேயன்றி விசுவாசமாகாது.”

 

    • “சின்ன நாயக்கர் சன்மார்க்க பாஷையில் விசுவாசத்தைப் பற்றி விளக்குகிறார் போலிருக்கிறது! எனக்கு அரசியல் நிகண்டின்படிதான் அதற்கு அர்த்தம் தெரியும் சின்ன நாயக்கரே!”

 

    • “சேதுநாட்டில் சன்மார்க்கத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லாதபடிதான் ஆட்சியும் நடக்குமென்று இதுவரை புரிந்துகொள்ளாதது என் தவறென்று இப்போதுதான் தெரிகிறது.”

 

    • “சன்மார்க்கத்தைப் பற்றிச் சின்ன நாயக்கரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய அளவுக்குத் தமிழ்ப்புலமைக்குப் பெயர்பெற்ற சேது நாட்டில் இன்னும் அத்தனை அறிவுப் பஞ்சம் ஏற்பட்டுவிடவில்லை.”

 

    • “துரதிர்ஷ்டவசமாகச் சோற்றுப் பஞ்சத்தைப் போல் அறிவுப் பஞ்சம் கண்களுக்குத் தெரிவதில்லை.”

 

    • “இந்த விருந்திலே இல்லாத கசப்புச்சுவையை உண்டாக்கி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பது என்று சின்ன நாயக்கர் கங்கணம் கட்டிக்கொண்டு வந்து இங்கே உட்கார்ந்திருப்பது போல் தோன்றுகிறது.”

 

    • சேதுபதி அதிராமல், அயராமல், பதற்றமின்றிச் சிரித்தபடிதான் உரையாடினார். விஷயங்களால் பாதிக்கப்பட்ட பரபரப்பும், பதற்றமும், ஆத்திரமும் ரங்ககிருஷ்ணனின் குரலிலும் வார்த்தைகளிலும் உண்டாக்கியிருந்த சூட்டைப் போன்றதொரு சூட்டை, சேதுபதியின் குரலிலோ, வார்த்தைகளிலோ காணமுடியவில்லை.

 

    • உடனே கோபமும், ஆத்திரமும் பட்டுவிடாத இந்த ராஜதந்திர அடக்கத்தைத்தான் ‘பொள்ளெனப்புறம் வேர்க்காதிருத்தல்’ எனத் தன் தாய் அடிக்கடி கூறுகிறாள் என்பது இப்போது ரங்ககிருஷ்ணனுக்குத் தோன்றியது.

 

    • சேதுபதியின் உரையாடல் இப்படி ரங்ககிருஷ்ணனுக்குத் தன் தாய் அடிக்கடி கூறும் வாசகம் ஒன்றை நினைவுபடுத்தியது. தொடர்ந்து சேதுபதியிடம் சொல்லிக் கொண்டே போனான் அவன்.

 

    • “சொல்லாமல் கொள்ளாமல் மற்றவர்களுக்குக் கப்பம் கட்டும் ஒரு நாடு திடீரென்று தனக்குத்தானே சுயாதினமாவது கூட அறிவுப் பஞ்சமில்லாததால் தான் நடக்கிறது போலும்.”

 

    • “இதற்கு ஆமென்றும் பதில் சொல்லலாம். இல்லையென்றும் பதில் சொல்லலாம். ஆனால் இல்லையென்று பதில் சொல்லத் தன்மானம் தடையாயிருக்கிறது. ஆம் என்று பதில் சொல்லத் தன்னடக்கம் தடையாயிருக்கிறது சின்ன நாயக்கரே.”

 

    • ரங்ககிருஷ்ணனிடம் அப்போது வார்த்தைகளையே கூராகத் தீட்டிப் பிரயோகித்து ஒரு ராஜதந்திரப் போரை நடத்தினார் சேதுபதி. அந்தப் போரிலும் கூட அவர் கைதான் ஓங்கியிருந்தது. தான் ஆத்திரப்படாமல் எதிரியை முதலில் உணர்ச்சிவசப்பட்டு ஆத்திரம் கொள்ளச் செய்கிறவன் அந்தக் கணமே எதிரியும் அறியாமலே அவனை இரகசியமாக வெற்றி கொண்டு விடுகிறான். ரங்ககிருஷ்ணனைப் பொறுத்தவரை அப்படி ஒரு மனோதத்துவ வெற்றியை ரகுநாத சேதுபதி அடைந்திருந்தார்.

 

    • உணவருந்தி முடித்துவிட்டுப் பெண்கள் அலங்காரத் தாம்பாளங்களில் கொணர்ந்து வைத்த கனிவகைகளையும் தாம்பூலத்தையும் தரித்துக் கொள்ள இருந்தபோது, ரங்ககிருஷ்ணன் மறுபடி அவரிடம் வகையாக மாட்டிக் கொண்டான். வாழைப்பழச் சீப்பிலிருந்து ஒரு பழத்தைத் தனியே எடுத்துக் கொண்டு “நன்றாகக் கனியவில்லை” என்றான் ரங்ககிருஷ்ணன்.

 

    • “நன்றாகக் கனியாத எதுவுமே இங்கே வராது. உரியுங்கள். கனிந்திருப்பது தெரியும். சில கனிகளைக் கனிந்திருக்கிறதா, இல்லையா என்று கண்டுபிடிக்கக்கூட நமக்கே ஒரு கனிவு தேவைப்படுவதுண்டு சின்ன நாயக்கரே!”

 

    • சிரித்தபடியே நகைச்சுவைக்குப் பேசுவதுபோல் பேசினாலும் தனக்கு அரசியல் விஷயங்களைப் பேசும் கனிவு போதாது என்பதைப் பொடி வைத்துச் சொல்லுகிற அவரது அங்கதப் பேச்சு ரங்ககிருஷ்ணனுக்குப் புரிந்து உறைத்தது.

 

    • “வாழைத் தாராக அரண்மனைக்கு வரும்போது இவை கனியாமல்தான் வரும். எப்படியும் நாங்கள் இவற்றைக் கனிய வைத்துவிடுவோம்.”

 

    • “எப்படியும் கனியவைப்பது என்பது தர்மமாகாது. ஒவ்வொன்றைக் கனிய வைப்பதற்கும் ஒரு முறை இருக்குமே?”

 

    • “சில வேளையில் கனிகளைக் கனிய வைப்பதற்கான முறைகளும், தர்மங்களும், மனிதர்களைக் கனிய வைக்கப் போதுமானவையாகவோ பொருத்தமானவையாகவோ இருப்பதில்லை, சின்ன நாயக்கரே!”

 

    • அப்போது வாதத்தில் தன் பக்கம் தான் மெல்ல வலுவிழந்து போய்க் கொண்டிருக்கிறோம் என்பது ரங்ககிருஷ்ணனுக்கே நன்றாகப் புரிந்தது!

 

    • ————–

 


 

8. பாதிரியார் வந்தார் 

    • இரகுநாத சேதுபதியின் அந்த வார்த்தை வித்தகம் ரங்ககிருஷ்ணனை மெல்லத் தளரச் செய்திருந்தது. பேச்சிலேயே எதிரியை வீழ்ச்சியடையச் செய்யும் அந்தக் கிழச் சிங்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினான் அவன். போரிலும் வெல்ல முடியாமல், பேச்சிலும் வெல்ல முடியாமல் சேதுபதியிடம் சிக்கித் திகைத்துக் கொண்டிருந்தான் ரங்ககிருஷ்ணன். சிக்கல்கள் இப்போது மேலும் சிக்கலாயிருந்தன.

 

    • ஆத்திரத்தோடு படையெடுத்து வந்த தன்னை விருந்தினனாக்கி இராமேஸ்வரத்துக்குத் தீர்த்த யாத்திரை வந்தவன் போல மாற்றிக் காட்டி நாடகமாடிய அந்தச் சாமர்த்தியம் அவனை மருட்டியது. திகைத்து மிரளச் செய்தது.

 

    • மறுநாள் வைகறையில் ரங்ககிருஷ்ணனின் ராமேஸ்வர யாத்திரைக்கு ஏற்பாடு செய்யத் தொடங்கியிருந்தார் சேதுபதி. அவனாலேயே அதைத் தடுக்க முடியவில்லை; ராமேஸ்வர தரிசனத்தைப் புறக்கணிக்கவும் முடியவில்லை.

 

    • சேதுபதியின் விருந்துபசாரம் முடிந்ததும் உடன் வந்திருந்த படைத்தலைவர்களும் ரங்ககிருஷ்ணனும் மறுபடி சந்தித்துக் கொள்ள முடிந்தது. இரவில் அவர்கள் தங்கிய விருந்தினர் மாளிகையில் ஓரளவு தனிமையில் உரையாட வாய்ப்புக் கிடைத்தது.

 

    • அதுவரை தன் மனத்தில் ஆவலோடு அடக்கிக் கொண்டிருந்த ஒரு சந்தேகத்தை அப்போது தான் ரங்ககிருஷ்ணன் தன்னுடன் வந்திருந்த படைத்தலைவர்களில் ஒருவனிடம் கேட்டான்.

 

    • “என்னைப் புகழ்ந்து சேதுபதியின் சபையில் பாடப்பட்ட அந்தப் பாட்டில் ஏதோ மோசம் இருப்பதாகச் சொன்னாயே அது என்ன?”

 

    • “சொல்கிறேன் அரசே! மேலோட்டமாகப் பார்த்தால் அப்படி எதுவும் மோசம் இருப்பது போல் தெரியாது. ஆனால் தமிழ் யாப்பு இலக்கண மரபு தெரிந்தவர்களால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும்.”

 

    • “எங்கே? எனக்குப் புரியும்படியாக அதை விளக்கிச் சொல். பார்க்கலாம்!”

 

    • “வெண்பாவில் ‘வகையுளி’ என்று ஒன்று உண்டு! நல்லெண்ணத்தோடு வாழ்த்திப் பாடுகிற பாடல்களில் அந்த வாழ்த்துக்கு உரியவரின் பெயரில் வகையுளி செய்து இரண்டு பிரிவாகப் பெயரைப் பிளக்கக்கூடாது.”

 

    • “பெயரைப் பிளந்தால்?”

 

    • “அப்படிப் பிளப்பது மிகவும் அமங்கலமானது. மரபும் ஆகாது!… முத்து வீரப்பர் என்ற தங்கள் பெயரைப் பிளந்து வகையுளி செய்து வாழ்த்தியிருக்கிறார்கள்.”

 

    • “புரிகிறது சந்தேகப்பட வேண்டிய காரியந்தான்” என்றான் ரங்ககிருஷ்ணன். மேலும் சில நாட்கள் இராமநாதபுரத்தில் சேதுபதியின் விருந்தினராகத் தங்கிய பின்னர் இராமேசுவர யாத்திரையையும் நிறைவு செய்து விட்டு முறைப்படித் திரும்பும் காலையில் மீண்டும் இராமநாதபுரம் வந்தபோது திரிசிரபுரத்திலிருந்து தூதன் வந்து காத்திருந்தான். வந்த தூதனிடம் இருந்து ரங்ககிருஷ்ணனுக்குப் பல விவரங்கள் தெரிந்தன.

 

    • தான் படைகளோடு புகுந்தபோது மறவர் சீமையிலிருந்த சூழ்நிலையை விவரித்துத் தாய்க்கு ரங்ககிருஷ்ணன் ஏற்கெனவே அனுப்பியிருந்த தகவல்களுக்கு அவளிடமிருந்து மறுமொழி இப்போது கிடைத்திருந்தது. “நிலைமையை மேலும் சிக்கலாக்க முயல வேண்டாம். போரிட ஏற்ற நிலைமையில்லாவிட்டால் பேசாமல் திரும்பி விடவும்” என்று மறுமொழி வந்திருந்தது. ரங்ககிருஷ்ணன் உள்ளடக்கிய ஆத்திரத்தோடும் படைகளோடும் வந்த வழியே திரும்ப நேர்ந்தது. வெற்றியா தோல்வியா என்று புரியாமலே போர் முடிந்திருந்தது.

 

    • முதலில் திரிசிரபுரத்திலிருந்து புறப்படும் போதிருந்த உற்சாகம் திரும்பும் போதில்லை. பட்டமேற்று முடிசூடிக் கொண்டதும் தொடங்கிய கன்னிப்போரே இப்படிக் காரிய சித்தி அடையாததாகி விட்டதே என்று மனம் கலங்கியது. ரங்ககிருஷ்ணனின் இரண்டு குற்றச்சாட்டுகளையுமே சேதுபதி ஏற்கவில்லை… மறுக்கவுமில்லை. இலட்சியமும் செய்யவில்லை. அலட்சியமும் செய்யவில்லை.

 

    • குமாரப்ப பிள்ளையின் கொலையைப் பற்றி மிக எளிதாகத் தட்டிக் கழித்துப் பதில் சொல்லிவிட்டார் அவர். முதலில் ஜாடைமாடையாக பதில்கள் இருந்தாலும், பின்னால் தொடர்ந்து தங்கியிருந்த சில நாட்களிலும் அப்பேச்சு நிகழ்ந்த போது நேரடியாகவே ரங்ககிருஷ்ணனும் கேட்டான். நேரடியாகவே சேதுபதியும் பதில் சொல்லியிருந்தார். பதிலில் பணிவோ பயமோ இருக்கவில்லை.

 

    • “குமாரப்ப பிள்ளை நாயக்க சாம்ராஜ்யத்தின் கௌரவத் தூதராக இங்கு வந்திருந்தது உண்மைதான். அவரது சாவைத் தடுப்பது ஒன்றே சேதுநாட்டின் இலட்சியமில்லை. சேது நாட்டில் வாழ்ந்த போது அவர் கொல்லப்பட்டார் என்பதற்காக நானும் வருந்துகிறேன்.”

 

    • “வருந்தினால் மட்டும் போதாது! இதற்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்.”

 

    • “கூற்றுவனாகிய யமதர்மராஜன் பதில் சொல்ல வேண்டிய விஷயங்களுக்கு எல்லாம் நான் எப்படிப் பதில் சொல்ல முடியும் சின்னநாயக்கரே!”

 

    • “குமாரப்ப பிள்ளையின் கொலைக்கும் சேது நாட்டு சுயாதீனம் கொண்டாடுவதற்கும் தொடர்ந்து சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இரண்டும் அடுத்தடுத்து நிகழ்ந்திருக்கின்றன.”

 

    • “நீங்கள் என்னென்ன நினைக்கிறீர்கள் என்றெல்லாம் அநுமானம் செய்துபார்த்துப் பதில் சொல்லிக் கொண்டிருக்க நான் கடமைப்பட்டிருக்கவில்லை சின்னநாயக்கரே!” என்று அந்த உரையாடலை முடித்துவிட்டார் சேதுபதி. அவரது முடிவான பதிலே சுயாதீன உரிமையை நிரூபிக்கும் விதத்தில் தான் அமைந்திருந்தது. சம்பிரதாயப்படி இராமேஸ்வர யாத்திரை என்று வந்தால் அதில் பகைமைக்கோ சச்சரவு சண்டைகளுக்கோ இடமில்லை. சமய ரீதியான சம்பிரதாயமும் அரசியல் பகைமையும் ஒன்றோடொன்று ஒத்துப் போவதில்லை. ரங்ககிருஷ்ணன் படையெடுத்து வந்த நோக்கத்தை மறைத்து இராமேஸ்வரத்துக்குத் தீர்த்தயாத்திரை வந்திருப்பதாக மாற்றி நாடகமாடியதிலேயே ஒரு போரை நாசூக்காகத் தவிர்த்து விட்டார் சேதுபதி. அதே சமயத்தில் பயந்தோ, பதறியோ, தவிர்த்ததாகவும் காண்பித்துக் கொள்ளவில்லை. தன் தந்தையார் காலத்திலிருந்தே நாயக்க சாம்ராஜ்யத்துக்குப் பெரிய தலைவலியாக இருந்து வந்திருக்கும் கிழச்சிங்கத்தைத் தானும் அதன் குகைக்குள்ளே போய்ப் பார்த்து விட்டு ஒன்றும் செய்ய முடியாமலே திரும்பிக் கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தான் ரங்ககிருஷ்ணன். ஏமாற்றம், சிறிது விரக்தி, உள்ளூற மனவேதனை எல்லாவற்றோடும் திரும்பிக் கொண்டிருந்தான் அவன். இந்த விதமான துயர நிலைமைகளால் தலைநகரத்துக்குத் திரும்புகிற தொலைவு நீண்டு வளர்வது போலிருந்தது அவனுக்கு.

 

    • அவனும் அவனுடன் வந்திருந்த படைகளும் மறவர் சீமை எல்லையைக் கடந்து வெளியேறுவதற்குள்ளேயே இன்னும் அதிர்ச்சியூட்டக் கூடிய ஒரு செய்தியும் பரவியிருப்பது தெரிந்தது.

 

    • ரங்ககிருஷ்ணன் போரிடும் நோக்கத்தோடு வந்து, முடியாது என்ற பயத்தோடு தோற்றுத் திரும்பிக் கொண்டிருப்பதாகச் சேதுபதியே மறவர் சீமை முழுவதும் பரவும்படி ஒரு செவிவழித் தகவலை அவிழ்த்து விட்டிருந்தார். மறவர் சீமையின் மூலை முடுக்குகளிலெல்லாம் அச்செய்தி பரவியிருந்தது. படை திரும்புகிற வழியிலுள்ள பல சிற்றூர்களில் தானே மாறு வேடத்தில் சென்று அதைத் தன் செவிகளாலேயே ரங்ககிருஷ்ணன் கேட்க நேர்ந்திருந்தது. அதைக் கேட்டுக் கையாலாகாத வீண் கோபப் படுவதைத் தவிர அவன் வேறெதுவும் செய்ய முடியவில்லை.

 

    • மானாமதுரைக்கு அருகே நள்ளிரவில் ஒரு தெருக்கூத்து நாடகத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று ஒட்டுக்கேட்டு இதை அவன் அறிய முடிந்திருந்தது.

 

    • அது இராமாயண தெருக்கூத்து. பல நாட்களாக அவ்வூரில் தொடர்ந்து நடந்து வந்த அந்தத் தெருக்கூத்தில் அன்று அசோகவனத்தில் திரிசடை முதலிய அரக்கியர் புடைசூழச் சிறை வைக்கப்பட்டிருக்கும் சீதையிடம் இராவணன் வந்து கெஞ்சும் பகுதி நடந்து கொண்டிருந்தது. கனமானத் தோலில் சொந்தத் தலையைத் தவிர மற்ற ஒன்பது தலைகளையும் எழுதிக் கட்டிக் கொண்டு இராவணன் சீதையிடம் அட்டகாசமாகச் சிரித்துப் பேசித் தன் வீரதீரப் பிரதாபங்களை அளந்தான். நடுநடுவே நாடகத்தின் சூத்திரதாரி குறுக்கிட்டு மறவர் நாட்டை ஆளும் சேதுபதியின் பெருமைகளைச் சொன்னான். அப்படிக் கூறும் ஒரு சந்தர்ப்பத்தில்தான் ‘ரங்ககிருஷ்ணன் படையெடுத்து வந்து தோற்றுத் திரும்பிக் கொண்டிருப்பதாக’ ஒரு செய்தியும் தோற்பாவைக் கூத்தின் நடுவே கூறப்பட்டது. வேறு சில ஊர்களிலும் இதே தகவலை ரங்ககிருஷ்ணன் தன் செவிகளாலேயே கேள்விப்பட்டான். மிகவும் வேண்டிய படைத் தலைவர்களும் அறிந்து கொண்டு வந்து இதைத் தெரிவித்தனர்.

 

    • நாட்டின் தெருகூத்துகள், நாடகங்கள் மூலமாகக் கூட ஓர் அரசியல் தகவலை மக்கள் நம்பும்படியாகப் பரப்பும் சேதுபதியின் தந்திரம் அவனுக்குப் புரிந்தது. அதே சமயம் தெருக்கூத்து மூலமாகப் பரப்பப்படும் ஒன்றை அதிகாரப் பூர்வமான தகவலாக தான் கிளப்பிப் பிரச்சினையாக்கவும் முடியாது.

 

    • ‘சிக்கல் நிறைந்த எதிரி’ என்ற மிகமிகப் பொருத்தமான வார்த்தையால் சேதுபதியை வர்ணித்த இராயசம் அச்சையாவின் சொற்கள் அட்சர லட்சம் பெறக்கூடியவை என்பதை இப்போது ரங்ககிருஷ்ணன் பரிபூரணமாக உணர்ந்து அந்த மதியூகி, சேதுபதியை மிகமிகச் சரியான முறையில் எடை போட்டு நிறுத்தியிருப்பதைத் தன் மனத்திற்குள் பாராட்டிக் கொண்டான். பாம்பென்று அடிக்கவும் முடியாமல் பழுதை என்று தாண்டவும் முடியாமல் அவனைத் திணற அடித்தார் சேதுபதி.

 

    • ஒரு திங்கள் காலம், படையெடுத்து இராமநாதபுரம் சென்றதிலும் படைகளை வழிநடத்திக் கொண்டு மறுபடி திரிசிரபுரம் திரும்பியதிலுமே கழிந்துவிட்டது. ரங்ககிருஷ்ணனின் பயன் தராத இந்தப் படையெடுப்பைப் பற்றித் தாய் மங்கம்மாளோ, இராயசம் அச்சையாவோ அவனிடம் சிறிதும் வருத்தப்படவில்லை என்றாலும் அவன் சற்றே மனம் தளர்ந்து போயிருந்தான்.

 

    • அவன் மனைவி சின்ன முத்தம்மாள் மட்டும் படையெடுப்பின் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவன் திரும்பி வந்து தன் எதிரே முகமலர்ச்சியோடு ஆருயிர்க் கணவனாக அன்பு செலுத்தியதையே ஒரு வெற்றியாகக் கருதினாள். ரங்ககிருஷ்ணன் அவளைக் கேட்டான்.

 

    • “வெற்றி வாகை சூடி வராத நிலையில் கூட இவ்வளவு பிரியமாக வரவேற்கிறாயே? இன்னும் நான் வெற்றியோடு வந்திருந்தால் எப்படிச் சிறப்பான வரவேற்பு இருக்குமோ?”

 

    • “எனக்கு உங்களை விட எதுவும் முக்கியமில்லை! நீங்கள் தான் என் வெற்றி! நீண்ட பிரிவுக்குப் பின் மறுபடி உங்களைச் சந்திப்பதே என் வெற்றிதான்!”

 

    • “அரசர்களின் பட்டத்தரசிகள் அவர்களின் பிற வெற்றி தோல்விகளைப் பற்றியும் கவலைப்படத்தான் வேண்டும்.”

 

    • “என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் அரசர் என்பதை விட என் ஆருயிர்க் காதலர் கணவர் என்பது தான் முக்கியம்” என்று பதில் கூறிய படி ரங்ககிருஷ்ணனின் கழுத்தில் மணம் கமழும் மல்லிகை மாலையை அணிவித்துத் தோள்களில் சந்தனக் குழம்பைப் பூசினாள் சின்ன முத்தம்மாள். ஆறுதலாக அவன் கால்களை நீவி விட்டாள். சின்ன முத்தம்மாளின் இந்தப் பிரியம் அவனைக் கவலைகளிலிருந்து மீட்டது. மகிழ்ச்சியிலும், களிப்பிலும் ஆழ்த்தியது. படை நடத்தி மீண்ட களைப்பை எல்லாம் களைந்தது. மணவாழ்க்கையின் சுகங்களைத் தடுப்பது போல் குறுக்கிட்ட படையெடுப்பைச் சின்ன முத்தம்மாள் தன் உள்ளத்தில் அந்தரங்கமாகச் சபித்திருக்கலாம். இப்போது அந்தச் சாபம் நீங்கியது போல் இருவரும் மகிழ்ச்சிக் கடலில் திளைக்க முடிந்தது. மண வாழ்வின் இன்பங்களை முழுமையாக நுகர முடிந்தது.

 

    • ரங்ககிருஷ்ணன் மறவர் சீமையின் மேல் படையெடுத்துத் திரும்பி வந்த பின் சில மாதங்களுக்குத் திரிசிரபுரத்தில் எல்லாம் அமைதியாயிருந்தன. எந்த அரசியல் பிரச்சினையும் பெரிதாக உருவாகவில்லை. ஒருநாள் பிற்பகலில் ராணி மங்கம்மாளும், ரங்ககிருஷ்ணனும், இராயசம் அச்சையாவும் ஆலோசனை மண்டபத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று தாய் அவனை நோக்கிக் கூறலானாள்.

 

    • “நாட்டை ஆள்வது என்ற பொறுப்புக்கு வந்து விட்டால் எல்லா மக்களையும் நம் குழந்தைகள் போல் பாவித்து அன்பு செலுத்த வேண்டும். ஒரு கண்ணுக்கு வெண்ணெய் ஒரு கண்ணுக்குச் சுண்ணாம்பு என்று நடத்தக்கூடாது. பொறுப்பில் இருப்பவர்களுக்கு விருப்பு வெறுப்பு உண்டு என்று தெரிந்து விட்டால் அப்புறம் மக்களே விருப்பு வெறுப்புகளைத் தூண்டுவார்கள். விருப்பு வெறுப்புகள் என்ற வலைகளை நம்மைச் சுற்றிலும் பின்னிவிடுவார்கள். நாம் அப்புறம் அந்த வலைகளுக்குள்ளிருந்து வெளியேற முடியாமலே போய்விடும்.”

 

    • திடீரென்று தன் தாய் ஏன் இதை இப்படிக் குறிப்பிடுகிறாள் என்று ரங்ககிருஷ்ணனுக்குப் புரியாமல் இருந்தது. அவன் இப்படி யோசித்துத் திகைத்துக் கொண்டிருக்கும் போதே இராயசம் அச்சையாவும் அந்த உரையாடலில் கலந்து கொண்டு,

 

    • “காய்தல், உவத்தல் அகற்றி ஒரு பொருளை ஆய்தல் தான் அறிவுடையார் செயலாகும்! விருப்பு வெறுப்புகள் அப்படி ஆராயும் நற்பண்பைப் போக்கிவிடும்” என்றார். உடனே தன் தாயை நோக்கி, “எப்போது எதில் நான் விருப்பு வெறுப்புகளோடு செயல் பட்டிருக்கிறேன் என்று நீங்கள் என் குறையைச் சுட்டிக் காட்டினால் நான் என்னைத் திருத்திக் கொள்ள வசதியாயிருக்கும் அம்மா!” என்றான் ரங்ககிருஷ்ணன்.

 

    • “நீ இதுவரை அப்படி எதுவும் செய்துவிட்டாய் என்று நாங்கள் சொல்ல வரவில்லை மகனே! இப்போது ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது. அதில் நீ எப்படித் தீர்வு காண்கிறாய் என்பதை வைத்தே உன்னைப் புரிந்து கொள்ள முடியும்.”

 

    • “சொல்லுங்கள் அம்மா!” அவன் இப்படிக் கூறியதும் சற்றுத் தொலைவில் நின்ற அரண்மனைச் சேவகன் ஒருவனைக் கைதட்டி அருகே அழைத்து,

 

    • “நீ போய் வெளியே காத்திருக்கும் அந்தக் கிறிஸ்தவப் பாதிரியாரை இங்கே அழைத்து வா அப்பா” என்றாள் ராணி மங்கம்மாள்.

 

    • சேவகன் சென்று உயர்ந்த தோற்றமுடைய வெள்ளை அங்கியணிந்த பாதிரியார் ஒருவரை மிகவும் மரியாதையாக உடன் அழைத்து வந்தான். அவரை வரவேற்று அமரச் செய்து விட்டு, “ரங்ககிருஷ்ணா! இவருடைய குறை என்னவென்று விசாரித்து உடனே அதைத் தீர்த்து வைப்பது உன் பொறுப்பு” என்று அவனிடம் தெரிவித்த பின் தாயும், இராயசம் அச்சையாவும் அங்கிருந்து பாதிரியாரிடமும் அவனிடமும் விடை பெற்றுக் கொண்டு வெளியேறி விட்டார்கள்.

 

    • ரங்ககிருஷ்ணன் அந்தக் கிறிஸ்தவப் பாதிரியாரைக் கூர்ந்து கவனித்தான். அலைந்து திரிந்து களைத்த சோர்வு அவர் முகத்தில் தெரிந்தது. அவரது தூய வெள்ளை அங்கி கூட இரண்டோர் இடங்களில் கிழிந்திருந்தது. அவருடைய கண்களில் கலக்கமும் பயமும் பதற்றமும் தெரிந்தன.

 

    • ————

 


 

9. சகலருக்கும் சமநீதி 

    • பாதிரியாரை மிகவும் மரியாதையாக வணங்கி வரவேற்றான் ரங்ககிருஷ்ணன். அதிகச் சிரமப்பட்டு அலைந்து திரிந்து வந்திருப்பது போல் களைப்போடும் கவலையோடும் தென்பட்ட அந்தப் பாதிரியாரைப் பரிவோடும் அனுதாபதோடும் விசாரித்தான் அவன்:

 

    • “பெரியவரே! நாடு எங்கும் நன்கு வாழக் கேடு ஒன்றும் இல்லை என்பது தான் எமது கொள்கை. எல்லாச் சமயங்களும் எல்லா வாழ்க்கை நெறிகளும் செழிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடுதான் எங்கள் பாட்டனார் திருமலை நாயக்கர் காலம் முதல் இந்த நாயக்கர் மரபின் நல்லாட்சி இங்கு தொடர்ந்து நடந்து வருகிறது.”

 

    • “அந்த நல்லெண்ணத்தை நாங்களும் அறிவோம் அரசே! நோக்கம் நன்றாகவே இருந்தாலும் கவனக் குறைவால் சில செயல்கள் பழுதுபட்டுப் போகலாம்.”

 

    • “செயல் எங்காவது பழுதுபட்டுப் போயிருந்தால் அதை உடனே எங்கள் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டியது தங்களைப் போன்ற சான்றோர்களின் கடமை அல்லவா?”

 

    • “தாங்கள் கூறும் கடமையைக் கருதியே இப்போது தங்களைக் காண வந்திருக்கிறேன் அரசே!”

 

    • – புதிதாகத் தமிழ்க் கற்று அதைக் கற்ற சுவட்டோடு உடனே பேசும் கொச்சையும் திருத்தமும் மாறி மாறி விரவிய தமிழ் நடையில் பேசினார் பாதிரியார். வடிவில் முழுமையும் எழுத்தொலி உச்சரிப்பில் கொச்சையுமாக அது இருந்தது. ஆயினும் அவர் தேவையை உணர்ந்து தமிழ்க் கற்றிருக்கும் விரைவையும் விவேகத்தையும் மனத்துக்குள்ளேயே பாராட்டிக் கொண்டான் ரங்ககிருஷ்ணன். எந்தப் பிரதேசத்துக்குப் போகிறோமோ அந்தப் பிரதேசத்து மொழியைக் கற்காமல் அப்பகுதி மக்களின் நம்பிக்கையைப் பெறமுடியாது என்னும் மனோதத்துவம் அவருக்கும் அவரைப் போல் வந்தவர்களுக்கும், வருகிறவர்களுக்கும் புரிந்திருப்பதை அவன் உணர்ந்தான்.

 

    • “அரசே! தங்கள் பாட்டனார் புகழ்பெற்ற திருமலை நாயக்கரின் காலத்திலிருந்து நாங்கள் அடைந்து வரும் நியாயங்களும் சலுகைகளும் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது தான் இப்போதும் எங்கள் பிரார்த்தனையாயிருக்கிறது.”

 

    • “பிரார்த்தனைகளைத் தெய்வங்களும் அரசர்களும் ஒருபோதும் ஒருவருக்கும் புறக்கணிப்பதில்லை.”

 

    • “உண்மை! ஆனால் தெய்வங்களையும் அரசர்களையும் தவிரப் பெருவாரியாக இருக்கும் மக்கள் சில சமயங்களில் வெறுப்பையும், புறக்கணிப்பையும் காட்டிவிடுகிறார்களே!”

 

    • “நல்லது! அப்படி ஏதாவது என் ஆட்சிக்கு உட்பட்ட எல்லையில் நடந்திருந்தால் சொல்லுங்கள்! உடனே கவனித்து நியாயம் வழங்குகிறேன். என் பாட்டனார் காலத்தில் கிடைத்த அதே நியாயங்களையும் சலுகைகளையும் நீங்கள் இப்போதும் அடைய முடியும். அதற்கு எந்தத் தடையுமில்லை.”

 

    • “அரசும், ஆட்சியும், தாங்களும் தடுக்காமல் இருக்கலாம். ஆனால் பெருவாரியான மக்கள் சில சமயங்களில் நியாயங்களுக்கும் சலுகைகளுக்கும் குறுக்கே நிற்கிறார்களே…”

 

    • “கவலை வேண்டாம் பாதிரியாரே! கோடிக்கணக்கான மக்களே குறுக்கே நின்றாலும் நியாயத்தை நிலைநாட்டுவதில் உறுதியாயிருப்பேன்.”

 

    • “அப்படியானால் இரட்டை மகிழ்ச்சி அரசே! இனிமேல் நான் முறையிட வேண்டியவற்றைக் கவலையோ தயக்கமோ இல்லாமல் தங்களிடம் முறையிடலாம். அரசே! பாரபட்சம் இல்லாமல் தாங்கள் நியாயம் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. தங்கள் தந்தையார் சொக்கநாத நாயக்கர் காலத்தில் நிகழ்ந்த படையெடுப்புகள் – அந்நிய ஆக்கிரமிப்புகளுக்குப் பயந்து இந்நகரிலிருந்த கிறிஸ்தவர்கள் சிலர் தங்கள் வீடு வாசல் நிலங்கரைகளை அப்படி அப்படியே விட்டு விட்டு வேறு இடங்களுக்குக் குடி பெயர நேர்ந்தது. மறுபடி திரிசிரபுரத்தில் அமைதி ஏற்பட்டு அவர்கள் எல்லாரும் திரும்பி வந்து பார்த்த போது அவர்களுடைய நிலங்களில் சில பகுதிகளில் இந்துக்கள் கோயில்களைக் கட்டித் திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கியிருப்பது தெரிந்தது. எவ்வளவோ முயன்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் நிலங்கரைகளைத் திரும்ப அடைய முடியவில்லை. திரிசிரபுரத்துக்குத் திரும்ப வந்த கிறிஸ்தவ மக்கள் நியாயம் கிடைக்காமல் அநாதைகளாக நடுத்தெருவில் நிற்க நேர்ந்திருக்கிறது…”

 

    • “நீங்கள் சொல்லுவதற்கு என்ன ஆதாரம் பாதிரியாரே?”

 

    • “எழுத்துப் பூர்வமான ஆதாரங்களும் இருக்கின்றன. தாங்களே விரும்பினாலும் நேரில் வந்து காணலாம் அரசே! அழைத்துச் செல்ல தயாராயிருக்கிறேன்.”

 

    • “நீங்கள் சொல்கிறபடி இருந்தால் கட்டாயம் விசாரித்து நியாயம் வழங்கப்படும்.”

 

    • “தங்கள் வாக்குறுதி எனக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது அரசே!”

 

    • “ஒருவருக்குரிய உடைமையை இன்னொருவர் ஆக்கிரமித்துச் சொந்தங் கொண்டாடுவது முறையில்லை. முறைகேடு எங்கே யாரால் நடந்திருந்தாலும் விசாரித்து நீதி வழங்குவேன் பாதிரியாரே!”

 

    • பாதிரியாருடைய முகத்தில் மலர்ச்சியும் சந்தேகமும் ஒளியும் நிழலும் போல் மாறி மாறித் தெரிந்தது. ரங்ககிருஷ்ணன் அவருடைய முகத்தைக் கூர்ந்து கவனித்து அவருக்கு இன்னும் முழு நம்பிக்கை வரவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

 

    • இவ்வளவிற்கு மனம் விட்டுப் பேசியும் அவருக்கு முழு நம்பிக்கை வராதது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவருக்கு உறுதி மொழிகள் கூறி ஆவன செய்வதாக வாக்களித்து அவரை அனுப்பி வைத்து விட்டு உடனே மாறு வேடத்தில் அந்தக் கிறிஸ்தவர்களின் நிலங்களாக அவர் குறிப்பிட்டிருந்தப் பகுதிக்குச் சென்றான் ரங்ககிருஷ்ணன்.

 

    • தன் பாட்டனார் திருமலை நாயக்கரும் தந்தை சொக்கநாத நாயக்கரும், தாய் ராணி மங்கம்மாளும் சமயக் காழ்ப்புகளையும், மதமாற்சரியங்களையும், பூசல்களையும் தவிர்க்க எவ்வளவோ பாடுபட்டிருந்தும் அத்தகைய சண்டைகளும், பூசல்களும் மறுபடி எழுவதைத் தவிர்க்க முடியாமல் இருப்பதை இப்போது அவனே உணர்ந்தான்.

 

    • பெரும்பாலும் தவறுகள் ஒரு தரப்பில் மட்டுமில்லை. இரு தரப்பிலும் இருந்தன. இவர்கள் அடங்கினால் அவர்கள் பூசல்களைக் கிளப்புவதும் அவர்கள் அடங்கினால் இவர்கள் பூசல்களைக் கிளப்புவதும் வழக்கமாகி இருந்தது. தெய்வங்களுக்கே பொறுக்காததும் பிடிக்காததுமாகிய சண்டை சச்சரவுகளைத் தெய்வங்களின் பெயரால் தெய்வங்களுக்காகச் செய்வதாகக் கருதி மனிதர்கள் செய்தார்கள். பரந்த மனப்பான்மையும் சமரச நினைவுகளும் வருவது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது.

 

    • மன வேதனையுடன் அந்த இடங்களைச் சுற்றிப் பார்த்த போது அங்கே புதிய புதிய கோயில்களைச் சுற்றிலும் அவற்றைச் சார்ந்து மக்கள் குடியேறியிருப்பதையும் ரங்ககிருஷ்ணனால் காண முடிந்தது. கோயில்களில் தெய்வத்திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆகம முறைப்படி பூஜைகளும் வழிபாடுகளும் நடந்து கொண்டிருந்தன.

 

    • உண்மை நிலைமையை அறிவதற்காக அங்கேயிருந்த பரமபக்தர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான் அவன்.

 

    • “ஐயா பரம பக்தரே! நான் நீண்ட காலம் வட தேசங்களில் தீர்த்த யாத்திரை போய்விட்டு இப்போது தான் மீண்டும் திரிசிரபுரம் திரும்பினேன். முன்பு நான் இந்த இடத்தில் கோயில்களைக் கண்டதில்லை. இப்போது காண்கிறேன். மக்களின் பக்தி உணர்வைப் பாராட்ட வேண்டும். எப்போது இங்கே புதிதாகக் கோயில்களைக் கட்டினார்கள்?”

 

    • “அப்படிக் கேளுங்கள் சொல்கிறேன். இந்த நிலங்கள் கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமானவை. யுத்த காலங்களில் கலவரங்களுக்கும், மதப் பூசல்களுக்கும் பயந்து அவர்கள் எங்கெங்கோ சிதறி ஓடிவிட்டார்கள். அவர்கள் திரும்பி வருவதற்குள் இங்கே கோயில்களைக் கட்டிவிட்டதால் இனிமேல் அப்புறம் யாரும் நம்மை அசைக்க முடியாது ஐயா!”

 

    • “இன்னொருவருக்குச் சொந்தமான நிலத்தை நாம் ஆக்கிரமிப்பது பாவமில்லை?”

 

    • “ஒரு புண்ணிய காரியத்தை நிறைவேற்றுவதற்காகத்தானே அவசர அவசரமாக இந்தப் பாவத்தைச் செய்திருக்கிறோம்!”

 

    • “புண்ணியத்துக்காகச் செய்யப்படும் பாவ காரியங்கள் தவறில்லை என்பது தங்கள் கருத்து போலிருக்கிறது?”

 

    • ‘”பொய்ம்மையும் வாய்மை இடத்தை புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்’ என்று வள்ளுவர் பெருமானே கூறியிருக்கிறாரே? சர்வேசுவரனைக் குடியேற்றும் கைங்கர்யத்தில் பாவம் ஏது? பரிகாரம் ஏது?” –

 

    • இதற்கு பதிலாக ஏதும் கூறாமல் அங்கிருந்து மெல்ல நகர்ந்தான் மாறுவேடத்திலிருந்த ரங்ககிருஷ்ணன். ‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்கிற பாணியில் பெருவாரியான மக்கள், நியாயத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டிருப்பது நிதர்சனமாகத் தெரிந்தது.

 

    • தாயிடம் விவரங்களைத் தெரிவித்தான். “தீர விசாரித்து எது நியாயமோ அதைச் செய்” என்றாள் அவள். நில உடைமைக் கணக்குகளையும், விவரங்களையும் கவனிக்கும் ஆவண அதிகாரிகளை அழைத்து அப்படிக் கோயில்கள் கட்டப்பட்டிருக்கும் நிலங்களின் உரிமைச் சாஸனங்களைப் பார்த்து விவரம் கூறுமாறு கட்டளையிட்டதில் அவர்கள் கூறிய விவரம் கிறிஸ்தவர்களுக்குச் சாதகமாயிருந்தது.

 

    • கிழவன் சேதுபதியின் மறவர் சீமையில் கிறிஸ்தவப் பாதிரியார்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் இழைக்கப்படும் கொடுமைகள் பற்றித்தான் முன்பு கேள்விப்பட்டிருந்தவை ரங்ககிருஷ்ணனுக்கு நினைவு வந்தன. நாயக்கர் வம்சத்துக்கு நல்ல பெயர் கிடைக்கும்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவன் எண்ணினான். பாதிரியார் மூலம் நிலங்களை இழந்து பாதிக்கப்பட்ட ஏழை கிறிஸ்தவ மக்களைக் கூப்பிட்டுச் சந்தித்தான். அவர்கள் இப்போது அநாதைகளாகத் தெருவில் நிற்பது புரிந்தது. இன்னொரு கவலையும் அவனுக்குள்ளே இருக்கத் தான் செய்தது. கட்டிய கோயில்களையும், பூஜையிலுள்ள விக்கிரகங்களையும் ஓரிடத்தை விட்டு அப்புறப்படுத்துவது என்பது மிகவும் சிரமமான காரியம். அதைச் செய்ய முயன்றால் பெருவாரியான மக்களின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ள நேரிடும் என்பதையும் அவன் உணர்ந்து தான் இருந்தான்.

 

    • இதில் யாருக்கு நியாயம் வழங்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருந்தாலும் தேவாலயங்களைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து நிர்வகித்து வருபவர்களையும் கூப்பிட்டு விசாரித்து விட எண்ணினான் ரங்ககிருஷ்ணன். அவர்களைக் கூப்பிட்டனுப்பினான்.

 

    • மாறுவேடத்தில் அவன் அந்த தேவாலயங்கள் இருந்த பகுதிக்குப் போயிருந்த போது அவனோடு உரையாடியிருந்த அந்தப் பரமபக்தர் உட்படப் பலர் வந்திருந்தார்கள். அவர்களில் யாரும் தாங்கள் செய்தது தான் நியாயம் என்பதற்காக வாதிடுவதற்குப் பதில், “தெய்வ கைங்கரியம் நடந்து முடிந்து விட்டது! இனிமேல் எதுவும் செய்ய முடியாது. பிரதிஷ்டை செய்த மூர்த்திகளை இடம் பெயர்த்துக் கொண்டு போவது என்பது சாத்தியமில்லை! வேண்டுமானால் அந்தக் கிறிஸ்துவர்களுக்கு வேறு இடங்களில் நிலம் ஒதுக்கிவிடுங்கள்” – என்றார்கள். இனிமேல் தங்களை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்ற இறுமாப்பு அவர்களிடம் இருப்பதைக் கண்டான் அவன்.

 

    • —————

 


 

10. ராஜதந்திரச் சிக்கல் 

    • “கிறிஸ்துவர்களுக்கு வேறு இடங்களில் நிலம் ஒதுக்கிவிடுங்கள்” என்றே தொடர்ந்து வாதிட்டனர் கோயில்களை நிர்வகித்து வருபவர்கள். இனிமேல் தங்களை யாரும் எதுவும் செய்து விடமுடியாது என்ற இறுமாப்பு அவர்களிடம் இருப்பதைக் கண்டுணர்ந்த ரங்ககிருஷ்ணன், அவர்களைக் கேட்டான்:

 

    • “இதே நிலங்கள் உங்களுக்குச் சொந்தாமாயிருந்து நீங்கள் எங்காவது வெளியேறிச் சென்றிருக்கும் போது அவர்கள் தங்கள் சிலுவைக் கோயில்களை அங்கே கட்டியிருந்தால் நீங்கள் திரும்பி வந்ததும் என்ன செய்வீர்கள்?”

 

    • தனது இந்தக் கேள்விக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதை அவன் கூர்ந்து கவனித்தான். ஆனால் அவர்களது பதில் அவனுக்கு ஏமாற்றமளிப்பதாயிருந்தது. “அரசே! நாங்கள் வெளியேறிச் சென்றிருந்தாலும் எங்கள் நிலங்களை அவர்கள் அவ்வளவு சுலபமாகக் கைப்பற்றி அவற்றின் மேல் சிலுவைக் கோயில் கட்டி விடலாம் என்று நினைக்கக்கூட முடியாது.”

 

    • “ஏன் முடியாது?”

 

    • “அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் தடுக்காமல் சும்மா விட மாட்டார்கள்.”

 

    • “மிக்வும் சரி! அதே போல் அவர்களுடைய நிலத்தில் நீங்கள் ஆலயங்கள் கட்டும்போது அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் ஏன் தடுக்கவில்லை?”

 

    • “தடுப்பதற்கு அக்கம்பக்கத்திலே அப்போது அவர்களில் யாருமேயில்லையே?”

 

    • “ஓகோ? ஓர் அநியாயத்தைத் தடுக்க முடிந்தவர்கள் நேரில் இருந்தால் ஒரு நீதி. இல்லாவிட்டால் வேறொரு நீதியா? வேடிக்கையாயிருக்கிறதே நீங்கள் சொல்லுவது?”

 

    • “நீதியோ அநீதியோ கட்டிய கோயிலை இனிமேல் என்ன செய்ய முடியும்? சாஸ்திர சம்மதமாகிவிட்ட ஒரு நிறைவேறிய காரியத்தைக் குறை சொல்லிப் பயனில்லை.”

 

    • “நியாயமும், சாஸ்திரமும் வேறு வேறானவை என்று நான் நினைக்கவில்லை பெருமக்களே!”

 

    • “சாஸ்திரம் என்ன சொல்லுகிறதோ அதற்கு நியாயமும் கட்டுப்பட்டாக வேண்டும்.”

 

    • “நியாயத்துக்குப் புறம்பான ஒன்றை சாஸ்திர அங்கீகாரம் பெற்றதென்று நீங்கள் கட்டிப் பிரதிஷ்டை செய்து வழிபடுகிற தேவாலயங்களில் உள்ள சர்வ சக்தியும் வாய்ந்த தெய்வங்கள் கூட ஒப்புக்கொள்ளப் போவதில்லை…”

 

    • – அரசர் தங்களுக்குச் சாதகமாக இல்லை என்பது வந்தவர்களுக்கு மெல்ல மெல்லப் புரிந்தது. உடனே வாதிடுவதை விடுத்து, அவனைத் தன்னைக் கட்டிக்கொண்டு காரியத்தைச் சாதிக்க முயன்றார்கள் அவர்கள்.

 

    • “எப்படியோ கட்டிய கோயிலை ஒன்றும் செய்ய முடியாது அரசே!”

 

    • இதற்கு ரங்ககிருஷ்ணன் மறுமொழி எதுவும் கூறவில்லை. அவர்களை உறுத்துப் பார்த்தான். முகபாவத்திலிருந்து அவன் உறுதியானதொரு முடிவுக்கு வந்துவிட்டான் என்று புரிந்தது.

 

    • “தயை கூர்ந்து அரசர் கருணை காட்ட வேண்டும். அரசராகிய தாங்களும் மக்களாகிய நாங்களும் எந்தத் தெய்வங்களை வழிபட்டு அருள் வேண்டுகிறோமோ அதே தெய்வங்களுக்குத் தான் நாங்கள் கோயில் கட்டியிருக்கிறோம்.”

 

    • மறுபடியும் அவர்களைக் கடுமையாக உறுத்துப் பார்த்தான் அவன்.

 

    • “கும்பாபிஷேகம் செய்து முறைப்படி குடியேறிவிட்ட மூர்த்திகளை இனி எங்கே கொண்டு போக முடியும் அரசே?”

 

    • – இதற்கு அப்போது ரங்ககிருஷ்ணன் கூறிய மறுமொழி அங்கிருந்த அனைவரையுமே துணுக்குறச் செய்தது. திகைத்துப் போய் நின்றார்கள் அவர்கள்.

 

    • சமயப்பற்றும் பக்தியும் மிக்கவனான ரங்ககிருஷ்ணனின் மனதில் ‘நியாயத்தைக் காட்டிலும் உயர்ந்த தெய்வமில்லை’ என்ற உணர்வு மட்டுமே அப்போது ஓங்கியிருந்தது. ஆகவே அவர்களிடம் அவன் தார்மிகக் கோபத்தோடு கேட்டான்.

 

    • “விக்கிரகங்களைக் கொண்டு போய் வைக்க வேறு இடமில்லை என்றால் காவேரியில் போடுவதுதானே?”

 

    • இந்த வார்த்தைகளிலிருந்த சூடும் கடுமையும் உறைத்து, ‘இனி இதில் இவனுடைய முடிவு வேறுவிதமாக இராது’ என்று வந்திருந்தவர்களுக்குப் புரிந்ததும் தயங்கி நின்றனர் அவர்கள்.

 

    • அவர்களிடம் மேலும் ரங்ககிருஷ்ணனே தொடர்ந்தான்.

 

    • “ஏதடா அபசாரமான வார்த்தைகளை பேசுகிறானே என்று நினைக்க வேண்டாம். உண்மையைவிட உயர்ந்த தெய்வமில்லை என்பது எல்லாச் சமயங்களும் ஏற்கிற உண்மை. பெரும்பாலனவர்கள் ஒன்று சேர்ந்து செய்திருக்கிறார்கள் என்பதனால் ஒரு தப்பான காரியம் நியாயமாகிவிடாது. சிறுபான்மையோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதனால் ஒரு நியாயத்தை புறக்கணித்து விடமுடியாது.”

 

    • “ஆனால் அரசரின் இந்த முடிவால் பெரும்பாலான பக்தர்களின் மனஸ்தாபத்தைத்தான் எதிர்பார்க்க முடியும்” என்றே சற்றே துணிவுடன் ஆரம்பித்தார் வந்தவர்களில் ஒருவர். துணிந்து வாய் திறந்து விட்டாலும் பயந்து கொண்டே தான் பேசினார் அவர்.

 

    • “நீதி நியாயங்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு விதம், சிறுபான்மையினருக்கு மற்றொரு விதம் என்று பார்க்க முடியாது.”

 

    • தீர்மானமாக இப்படி அவர்களுக்கு மறுமொழி கூறி அனுப்பினான் ரங்ககிருஷ்ணன். அவனுடைய தீர்ப்பின் நடுநிலைமைப் பண்பையும், நியாயத்தையும் தாய் மங்கம்மாள் பாராட்டினாள். தொடர்ந்து இப்படியே நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமென்று அவனை மேலும் வாழ்த்தினாள்.

 

    • மிகச் சில தினங்களிலேயே கிறிஸ்துவர்களுகு உரிய இடங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பாதிரியாரும் கிறிஸ்தவ மக்களும் ரங்ககிருஷ்ணனைச் சந்தித்து அவனுக்குத் தங்கள் விசுவாசத்தைத் தெரிவித்தனர்.

 

    • இவை எல்லாம் முடிந்த பின் பட்டத்தரசி சின்ன முத்தம்மாள் மட்டும் ஒருநாள் இதைப்பற்றி ரங்ககிருஷ்ணனிடம் பேசிய போது சிறிது வருத்தப்பட்டாள்.

 

    • “விக்கிரங்களைத் தூக்கி ஆற்றில் எறியச் சொன்னீர்களென்று நம் குடிமக்களின் சிலர் உங்கள் மீது கோபமாயிருக்கிறார்கள். நீங்கள் அத்தனை கடுமையாகச் சொல்லியிருக்கக் கூடாது.”

 

    • “மெய்யாகவே ‘ஆற்றில் கொண்டு போய் எறியுங்கள்’ என்ற அர்த்தத்தில் நான் அப்படிச் சொல்லவில்லை. நியாயத்தைப் பாராமல் ‘தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால்’ என்று அவர்கள் பிடிவாதமாகப் பேசினார்கள். அதனால் தான் நானும் அப்படிப் பதி பேச வேண்டியதாயிற்று.”

 

    • ‘”ஒரு சொல் வெல்லும், மற்றொரு சொல் கொல்லும்’ என்பார்கள். நீங்கள் நினைத்ததையே இன்னும் இதமாகச் சொல்லியிருக்கலாம்.”

 

    • “அவர்களது முரண்டும் பிடிவாதமும் மட்டுமே என்னை அப்படிப் பேசவைத்தன. தவிர இன்னொரு காரணமும் இருக்கலாம் முத்தம்மா! அவ்வப்போது நமது நண்பராகவும், எதிரியாகவும், சில வேளைகளில் நண்பரா எதிரியா என்று கண்டுபிடிக்க முடியாத நிலையிலும் இருக்கும் இரகுநாத சேதுபதி இந்தப் பிரச்சனையில் எப்படி நடந்து கொள்கிறாரோ அப்படி நாமும் நடந்து கொண்டு நமது பேரைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பது என்னுடைய கருத்து.”

 

    • “நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே! கொஞ்சம் புரியும்படியாகத் தான் சொல்லுங்களேன்.”

 

    • “ஒரு பிரச்சனையில் நமது எதிரியின் முடிவு சரியில்லையானால் அதே பிரச்சனையில் நாம் சரியான முடிவெடுத்து மற்றவர்களின் அன்பையும் அநுதாபத்தையும் நம் பக்கம் திரட்ட வேண்டும். இப்பிரச்சனையை இப்படி ஒரு நோக்கிலும் நான் கவனித்திருக்கிறேன் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இது ராஜ தந்திரப் போக்கான காரியம். மறவர் நாட்டிலும் கிழவன் சேதுபதியின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளிலும் விதேசிகளும், கிறிஸ்துவர்களும் மிக அதிகமாக கொடுமைப்படுத்தப் பெற்றிருக்கிறார்கள். ‘மங்கலம்’ என்னும் மறவர் நாட்டு ஊரில் பிரிட்டோ பாதிரியாரும் அவருடன் வந்த ஆட்களும் பலவந்தமாகச் சிவலிங்க வழிபாடு செய்யும்படி வற்புறுத்தப் பட்டிருக்கிறார்கள்.”

 

    • “அதற்குக் காரணம் அவர்களில் சிலர் சிவலிங்க வழிபாட்டை எள்ளி நகையாடிப் சேசியதால் நேர்ந்தது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒவ்வொருவரும் பிறருடைய உணர்வுகளைப் புண்படுத்தாமல் இருக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள் அல்லவா? பிறரால் நாம் புண்படுகிற போது வருந்துவதும், பிறரை நாம் புண்படுத்துகிறபோது மகிழ்வதும் சரியில்லையே?”

 

    • “நியாயம் தான்! தவறு செய்யும் ஒரு சிலர் எல்லாத் தரப்புகளிலும் இருப்பார்கள். அதற்காக எல்லா தரப்புகளுமே தவறானவை என்று முடிவு செய்து விடலாமா? சிவலிங்க வழிபாடு செய்ய மறுத்தார்கள் என்பதற்காகப் பிற மதத்தினரை மரங்களில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்ட கொடுமை சேது நாட்டில் நடந்திருக்கிறது. அதனால் தான் பிற சமய நிந்தனையைத் தவிர்க்க வேண்டும் என்பதில் நான் தீவிரமாக இருக்கிறேன்.”

 

    • “சேது நாட்டில் மட்டும் தானா இப்படி நடந்தது? விதேசிகள் மேல் வெறுப்புள்ள இடங்களில் எல்லாம் இப்படித்தானே நடப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள்?”

 

    • “இல்லை முத்தம்மா! நீ சொல்வது தவறு! வெறுப்பு வந்து விட்டால் அப்புறம் அது விதேசி சுதேசி என்றெல்லாம் வித்தியாசம் பாராது. இங்கே நம் திரிசிரபுரத்தில் புதிதாகக் கோயில்கள் கட்டப்பட்ட இடம் விதேசிக் கிறிஸ்துவர்களுடையதென்றோ அவர்களை வெறுத்தார்கள் நம்மவர்கள்? உதாரணத்திற்கு மறவர் சீமை ஆட்சியில் அடங்காத நமது ‘வடுகர் பட்டி’ ஊரில் என்ன நடந்தது என்று இப்போது சொல்கிறேன். கேள்! வடுகர் பட்டியில் தலைக்கட்டாக இருக்கும் லிங்கரெட்டியார் வீரசைவராக இருந்தும் தம்முடைய பிரதேசத்தில் கிறிஸ்துவ மதப் பிரச்சாரத்துக்கு வந்த பாதிரிகளை வெறுக்காமல் அவர்களுக்கு வசதிகள் செய்து கொடுத்திருக்கிறார். லிங்கரெட்டியாரின் குருவாகிய வீர சைவ சமயத் தலைவரே ஒரு சமயம் ரெட்டியாரை அழைத்து, ‘லிங்க வழிபாட்டை ஏளனம் செய்யும் கிறிஸ்தவப் பாதிரிமார்களை உன் ஊரில் நுழைய விடாதே’ என்று தடுத்தும் ரெட்டியார் அதைக் கேட்கவில்லை. தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் எவ்வளவு கிறிஸ்துவர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கு எடுத்துக் கொண்டு அவர்களை முன் போலவே சகல உரிமைகளுடனும் வாழும்படி பார்த்துக் கொண்டார் ரெட்டியார். மறவர் நாட்டு எல்லையிலேயே மறவர் சீமை ஆட்சிக்குட்படாத பகுதியில் தான் இந்த நிலை. மறவர் சீமை எல்லைக்குள் மட்டும் இந்தச் சமரசநிலை நிலவ முடியவில்லை.”

 

    • “நீங்கள் பிறரிடம் எவ்வளவு தான் சுமுகமாக நடந்து கொண்டாலும் உங்களால் சேதுபதியின் குணம் மாறி விடப் போவதில்லை.”

 

    • “அது எனக்கும் தெரியும் முத்தம்மா! சேதுபதி வல்லாள கண்டர்! அவருடைய அஞ்சாமையும், பிடிவாதமும் எதனாலும் மாறிவிடப் போவதில்லைதான்.”

 

    • “பின் நீங்கள் செய்கிற இதெல்லாம் எந்தவிதத்தில் அவரை பாதிக்கும்?”

 

    • “இதன் மூலம் சேதுபதிக்கு ஒரு ராஜ தந்திரச் சிக்கலை உருவாக்கிவிட முடிந்தாலே எனக்கு ஓரளவு வெற்றிதான் முத்தம்மா!”

 

    • “மனிதர்களைப் புரிகிற அளவு இந்த ராஜ தந்திரங்கள் எனக்கு எப்போதுமே புரிவதில்லை.”

 

    • “மிகவும் நல்லது. அவை புரியாத ஒரே காரணத்தால் நீயாவது நிம்மதியாக இரு” என்று அவளை நோக்கிக் குறும்பு புன்னகை பூத்தான் ரங்ககிருஷ்ணன்.

 

    • ————

 


 

11. உதயத்தில் நேர்ந்த அஸ்தமனம் 

    • சின்ன முத்தம்மாளும், ரங்ககிருஷ்ணனும் அரசியற் கவலைகள் ஏதுமின்றிச் சிறிது நிம்மதியாக வாழ முடிந்தது. எந்தப் பிரச்சனையும் ரங்ககிருஷ்ணனைச் சின்ன முத்தம்மாளிடமிருந்து பிரிக்கவில்லை. கிழவன் சேதுபதியை அவன் வெற்றி கொள்ள முடியாமலே திரும்பியதில்கூட ராணி மங்கம்மாளுக்கு வருத்தம் எதுவும் இல்லை. ரங்ககிருஷ்ணன் போகாமல் தானே ஏற்பாடு செய்து படைகளை அனுப்பியிருந்தால் கூட அந்த மறவர் சீமைப் படையெடுப்பு அப்படித் தான் பயனற்றுப் போயிருக்க முடியும் என்பது அவளுக்குத் தெரியும். அதனால் அவள் அதிகம் மனவருத்தப்படவில்லை.

 

    • ‘இளைஞன். அரசியல் முதிர்ச்சி அதிகம் இல்லாதவன். தந்தையால் பயிற்சியளிக்கப்படும் வாய்ப்பைக்கூட இழந்தவன்’ என்றெல்லாம் ரங்ககிருஷ்ணனைப் பற்றிச் சில குறைகள் இருந்தாலும் அவனைப் பற்றிய திருப்தி என்னவோ அவற்றை விட அதிகமாக இருந்தது. நிம்மதியாக ஆளும் பொறுப்புகளை அவனிடம் விட்டுவிட்டு அவ்வப்போது அறிவுரை கூறும் அளவுக்கு ஒதுங்கி நிற்கலாம் என்று கூட அவளுக்குத் தோன்றியது. மகன் முழுநம்பிக்கைக்குரியவனாக இருந்தான்.

 

    • ரங்ககிருஷ்ணன் பொதுமக்களின் குறைகளை அறிவதில் சமநோக்கு உடையவனாக இருக்கிறான். மக்கள் குறைகளை அறிய அடிக்கடி மாறு வேடத்தில் சகல பகுதிகளுக்கும் நகர பரிசோதனைக்குச் சென்று வருகிறான். கர்வமில்லாமல் மக்களோடு பழகுகிறான். எளிமையாக இருக்கிறான்.

 

    • நீதி வழங்கும் இன்றியமையாத நேர்மையும் ஒழுக்கமும் இருபுறமும் சீர்தூக்கிப் பார்க்கும் குணமும் அவனிடம் உள்ளன.

 

    • நாயக்க வம்சத்திலும் அக்கம்பக்கத்திலுள்ள பிற ராஜ வம்சங்களிலும் பட்டமகிஷியைத் தவிரவும் பல பெண்களை மணந்து கொள்வது வழக்கமாக இருந்தும் ரங்ககிருஷ்ணன் ஏகபத்தினி விரதமுள்ளவனாக வாழ்கிறான். தெய்வபக்தி உள்ளவனாகவும் தர்மசீலனாகவும் இருக்கிறான்.

 

    • என்றெல்லாம் அவனைப் பற்றி எண்ணி எண்ணிப் பெருமைப்பட்டாள் அவனுடைய தாய் ராணி மங்கம்மாள்.

 

    • ஆண்டுகள் ஓடின. ரங்ககிருஷ்ணனின் ஆட்சித்திறமையால் தந்தை சொக்கநாத நாயக்கர் இழந்திருந்த சில பகுதிகள் மீட்கப்பட்டிருந்தன. ஆட்சி அமைதியாக நடைபெற்றது. மங்கம்மாள் எதிர்பார்த்ததுபோல் ரங்ககிருஷ்ணன் மக்களிடம் நல்ல பெயர் வாங்கினான். ஆட்சி முறையின் ஒழுங்குகளால் அவன் புகழ் எங்கும் பரவிற்று.

 

    • பொது வாழ்விலும் தனி வாழ்விலும் அவன் மிகவும் மகிழ்ச்சியாயிருந்தான். அவனும் சின்ன முத்தம்மாளும் உயிருக்குயிராக ஒருவரை ஒருவர் நேசித்தார்கள். அந்த இணைப் பிரியாக் காதலைப் பார்த்து ராணி மங்கம்மாள் பெருமகிழ்ச்சியடைந்தாலும் உள்ளூற ஒரு மனகுறையும் இருந்தது. இவர்களுக்கு மணமாகி இத்தனை ஆண்டுகளின் பின்னும் மக்கட்செல்வம் இல்லையே என்ற குறைதான் அது. ஆறு ஆண்டுகள் நீடித்த அந்தக் குறை ஏழாவது ஆண்டில் தீர்ந்தது.

 

    • சின்ன முத்தம்மாள் கருவுற்றிருந்தாள். இச்செய்தி எல்லாருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. அரண்மனை வட்டாரத்தில் திருவிழாக் கொண்டாட்டம் போல ஓர் உவகையைப் பரப்பியது, இந்த நல்ல செய்தி. மங்கம்மாள் இந்த நல்ல செய்தியறிந்ததும் நிறையத் தான தர்மங்களைச் செய்தாள். சாந்திகள், ஹோமங்களையும் செய்வித்தாள்.

 

    • அந்த ஆண்டின் வசந்த காலமும் வந்தது. சித்திரா பௌர்ணமிக்கு மங்கம்மாளும், ரங்ககிருஷ்ணனும், சின்ன முத்தம்மாளும் மதுரைக்குப் போய் ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தைத் தரிசித்துவிட்டு வந்தார்கள்.

 

    • அந்த ஆண்டு கோடை வெயில் எல்லா ஆண்டுகளையும் விட மிகவும் கடுமையாக இருந்தது. திரிசிரபுரத்திலும் சுற்றுப் புறங்களிலும் அனல் பறந்தது.

 

    • அரண்மனை வளையல்காரர் ஒருவர் நல்ல மங்கலவேளை பார்த்துச் சின்ன முத்தம்மாளுக்கு விசேஷமான வளையல்களை அணிவித்தார். வளைகாப்பு வைபவத்தின் போது ரங்ககிருஷ்ணனும், ராணி மங்கம்மாளும் உடனிருந்தனர். சின்ன முத்தம்மாளின் தோழிகளும் அரண்மனைப் பெண்களும் மகிழ்ச்சியோடு கூட்டமாகக் கூடி நின்று வளைகாப்பு அணிவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் மங்கலமான பாடல்களை இனிய குரலில் பாடினார்கள்.

 

    • “ரங்ககிருஷ்ணா! உனக்கு ஒரு மகன் பிறந்து அவன் பெரியவனாகி வளர்ந்த பின்பாவது இந்தக் கிழவன் சேதுபதியை எதிர்த்து ஒடுக்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும்?” என்றாள் மங்கம்மாள்.

 

    • “இதற்கு அவசியமே இராதம்மா! உலகம் உள்ளவரை கிழவன் சேதுபதியும் நித்யஜீவியாக இருப்பார் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறீர்கள் நீங்கள்!”

 

    • “வாஸ்தவம்தான்! இங்கு யாரும் சாசுவதமில்லையப்பா. ஆனால் கிழவன் சேதுபதி எமனே வந்தாலும் அவனுக்குப் பிடி கொடுக்காமல் சாக்குப் போக்குச் சொல்லி அவனைத் திருப்பி அனுப்பிவிடுவார்.”

 

    • “அவர் அப்படிச் செய்யக் கூடியவர் தான் அம்மா! ஆனால் காலம் வந்துவிட்டால் யாரும் தப்பமுடியாது. சேதுபதி மட்டுமில்லை; நீ நான் எல்லாரும்தான்.”

 

    • “என்னைச் சொல். ஒப்புக் கொள்கிறேன். உனக்கு என்ன வந்தது? நீ வாலிபப் பிள்ளை. இன்னும் நீண்ட காலம் சிரஞ்சீவியாயிருந்து வாழ வேண்டும். ஆள வேண்டும். உன்னை ஏன் இதில் சேர்த்துக் கொள்கிறாய் மகனே?”

 

    • “வாலிபன். வயோதிகன் என்ற வேறுபாடுகள் எல்லாம் கூற்றுவனுக்குக் கிடையாதம்மா! புயலில் சில சமயம் நன்றாக முற்றி உதிரக்கூடிய நிலையிலுள்ள கனிகள் எல்லாம் அப்படியே காம்பில் தங்கிவிடப் பூவும், பிஞ்சும், காயும், தரையில் உதிர்ந்து அழிந்து விடவும் நேரலாம் அம்மா!”

 

    • இதைக் கேட்டு அவன் தாய் மங்கம்மாள் அவசரமாக அவனருகே நெருங்கி வந்து விரைந்து அவனது வாயைப் பொத்தினாள்.

 

    • “மங்கலமான வேளையில் இந்த அமங்கலமான பேச்சுகள் போதும் ரங்ககிருஷ்ணா!”

 

    • வளைகாப்பு பாடல்களின் மகிழ்ச்சி ஒலியில் ராணி மங்கம்மாளும், ரங்ககிருஷ்ணனும் பேசிய இந்தப் பேச்சுகளை மற்றவர்கள் கேட்கவில்லை.

 

    • ரங்ககிருஷ்ணன் தற்செயலாகத் தான் இந்த வார்த்தைகளைச் சொல்லியிருந்தான். ஆனாலும் அவனுடைய தாய் அந்த அமங்கலமான வார்த்தைகள் அச்சான்யமாக நினைத்தாள். அபசகுனமாக எண்ணினாள். அதை எண்ணி மனத்திற்குள் அஞ்சினாள். பரிகாரங்கள் செய்தாள்.

 

    • திரிசிரபுரம் அரண்மனை கலகலப்பாக இருந்தது. சின்ன முத்தம்மாள் மகிழ்ச்சியாயிருந்தாள். அவள் வயிற்றைப் போலவே மனமும் நிறைந்து பூரித்துக் கொண்டிருந்தது. ஒரு மாலை வேளையில் அவளும் ரங்ககிருஷ்ணனும் அரண்மனை நந்தவனத்தில் காற்று வாங்கியபடியே பேசிக் கொண்டிருந்தார்கள்,

 

    • “பிறக்கப் போகிற குழந்தை ஆண்தான் என்று எனக்குத் தோன்றுகிறது! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

 

    • “இது வரை நான் எதுவும் நினைக்கவில்லை சின்ன முத்தம்மாள்! இப்போது தான் நினைக்கத் தொடங்குகிறேன்! அதுவும் நீ ஆண் ஆக இருக்க வேண்டும் என்று சொல்வதால் நான் ‘பெண்’ ணாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படலாம் அல்லவா?”

 

    • “அதுவும் பெண்ணாகப் பிற்ந்து என்னைப் போல் கஷ்டப்பட வேண்டுமா?”

 

    • “நீ இப்போது என்ன கஷ்டப்படுகிறாயாம்?”

 

    • “என்ன கஷ்டப்படவில்லையாம்?”

 

    • “பட்டத்தரசியாயிருப்பது கஷ்டமா? அரண்மனை வாசம் கஷ்டமா? புகழ்பெற்ற ராணி மங்கம்மாளின் மருமகளாக இருப்பது கஷ்டமா!”

 

    • “உங்கள் கேள்விக்குப் பதில் சொல்வது தான் இப்போது கஷ்டம்!” என்று சொல்லி புன்னகை பூத்தாள் சின்ன முத்தம்மாள்.

 

    • “ஒரு நாளும் ஒரு விதத்திலும் உனக்குக் கஷ்டம் வராமல் நான் பார்த்துக் கொள்வேன் முத்தம்மா! கவலைப் படாதே!”

 

    • என்று அவளுக்கு பதில் கூறி ஆதரவாக அணைத்தபடி அவளை உள்ளே அழைத்துச் சென்றான் ரங்ககிருஷ்ணன். “பெண்கள் எல்லோரும் ஆண் குழந்தைக்கு ஆசைப் படுகிறார்கள். ஆண்கள் எல்லோரும் பெண் குழந்தைக்கு ஆசைப் படுகிறார்கள்” என்று போகிற போது சிரித்தபடி அவனிடம் கூறினாள் முத்தம்மாள்.

 

    • மறுநாள் காலை பொழுது விடிந்தது முதல் ரங்ககிருஷ்ணனுக்குக் காய்ச்சல் போல உடல் சூடேறிக் கொதித்தது. முதலில் கழுத்தில் வீங்கினாற்போல் ஓர் ஊற்றம் தெரிந்தது. ‘பொன்னுக்கு வீங்கி’ என்றார்கள். கண்களில் எரிச்சல் தாங்கமுடியவில்லை. உணவு செல்லவில்லை. எல்லாமே கசந்து வழிந்தன. வந்திருக்கும் நோய் என்னவென்று யாருக்கும் புரிந்து கொள்ள முடியாமலிருந்தது.

 

    • முகத்திலும் உடம்பிலும் முத்து முத்தாக வெடித்த பின்பே அவனுக்குப் பெரியம்மை போட்டிருப்பது புரிந்தது. முதலில் இலேசாகத் தென்பட்ட அம்மை முத்துகள் அடுத்த நாள் அருநெல்லிக்காயாக உடல் முழுவதும் அப்பி மொய்த்திருந்தன.

 

    • உடல் வலி கொன்றது. உறக்கமும் வரவில்லை. உண்பன பருகுவன எல்லாமே கசந்து வழிந்தன. எதுவும் வேண்டியிருக்கவில்லை.

 

    • மஞ்சளையும் வேப்பிலையையும் உடலில் அரைத்துப் பூசச் சொன்னார்கள் அரண்மனை வைத்தியர்கள். ராணி மங்கம்மாள் தான் ராணி என்பதை மறந்து ரங்ககிருஷ்ணனின் தாயாக மட்டுமே மாறி அவனருகே இருந்து கவனித்தான். பணிவிடைகள் செய்ய ஓடியாடும் உடல் நிலையில் இல்லாவிட்டாலும் சின்ன முத்தம்மாளும் அருகே இருந்தாள்.

 

    • வலி தெரியாமல் இருக்க மிகப்பெரிய தலைவாழைக்குருத்து இலையில் விளக்கெண்ணெயைத் தடவி அதில் ரங்ககிருஷ்ணனைக் கிடந்த நேர்ந்தது. அவனுக்கு தன் நினைவே இல்லை.

 

    • “வைத்தியம் செய்வதைவிட விரைவில் இறங்கித் தணிந்து அருள் செய்யும் படி மாரியம்மனை வேண்டிக் கொள்வது தான் பயன்படும் மகாராணி!” என்று வைத்தியர்கள் எல்லாரும் கூறினார்கள். ராணி மங்கம்மாளும் சின்ன முத்தம்மாளும் அரண்மனையிலுள்ளவர்களும் மக்களும் “எங்கள் மன்னரைக் காப்பாற்று தாயே!” என்று அம்மனைப் பிரார்த்தித்தார்கள். அரண்மனையில் கட்டிய வேப்பிலைக் கொத்துகளைப் போல் மனிதர்களின் முகங்களும் வாடித் தொங்கின. களையிழந்தன.

 

    • இன்னும் சில நாட்களில் தாயாகப் போகும் சின்ன முத்தம்மாள் ஓயாமல் கண்ணீர் சிந்தினாள். கலங்கினாள். கணவனின் உடல் ரணத்தையும் வலியையும் தான் ஏற்றுக் கொண்டு அவனை வலியிலிருந்தும் ரணத்திலிருந்தும் மீட்க முடியவில்லையே என்று மனமுருகினாள் அவள்.

 

    • இராப்பகலாக மகனின் அருகிலேயே இருந்த மங்கம்மாள் அரையுடலாகத் தேய்ந்து போனாள். கோயில்களில் விசேஷ அர்ச்சனைகள் செய்யப்பட்டன. அம்மை இறங்கவும் தணியவும் எல்லா அம்மன் கோயில்களுக்கும் வேண்டுதல்களும், காணிக்கைகளும் நேர்ந்து கொண்டாள். ராணி மங்கம்மாள் தன் வாழ் நாளிலேயே கணவன் இறந்த போது தவிர வேறெந்தக் காலத்திலும் இவ்வளவு பெரிய துயர வெள்ளத்தில் மூழ்கியதில்லை. வருந்தியதில்லை.

 

    • ரங்ககிருஷ்ணன் முதல் சில தினங்களில் அனலிடைப் பட்ட புழுப்போலத் துடித்தான். பின்னால் தன் நினைவின்றிக் கட்டைப்போல மயங்கிக் கிடந்தான். அவனுடைய வளமான பொன்னிற உடலில் அம்மை கோரமாக விளையாடியிருந்தது. கண்கள் கறுத்து வறண்டு தூர்த்த கிணறுகள் போல் விகாரமாகத் தென்பட்டன. ரங்ககிருஷ்ணனைப் பார்த்து அவன் மனைவி சின்ன முத்தம்மாள் கதறிய கதறலையும் பட்ட வேதனையையும் கண்டு கர்ப்பவதியான் அவளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே என்று கவலையாயிருந்தது மங்கம்மாளுக்கு.

 

    • அதனால் சின்ன முத்தம்மாளை ரங்ககிருஷ்ணனின் அறைக்குள் வராமல் அவளே தடுக்கவும் தடுத்தாள்.

 

    • “நீ கர்ப்பிணி! பூவும் வாசனையும் அலங்காரமுமாக அம்மை போட்டிருக்கிற இடத்துக்கெல்லாம் வரக்கூடாதம்மா” என்று சின்ன முத்தம்மாளைக் கடிந்து கண்டித்துக் கொண்டிருந்தாள் ராணி மங்கம்மாள்.

 

    • மாமியாரோ கணவனைப் பார்க்க வரக்கூடாதென்றாள். கணவனைப் பார்க்காமல் இருப்பதற்குச் சின்ன முத்தம்மாளால் முடியவில்லை. இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்தாள் அவள். திரிசிரபுரம் அரண்மனையில் கடும் சோதனை நிறைந்த நாட்கள் தொடங்கின. அரண்மனையில் பகலிலும் இருள் சூழ்ந்தது. ஒருவர் முகத்திலும் களையில்லை. துயரம் சூழ்ந்த மௌனம் எங்கும் கனத்துத் தேங்கியிருந்தது. எங்கும் எந்தச் செயலும் நடைபெறாமல் அரண்மனைக்குள் எல்லாம் ஸ்தம்பித்துப் போய்விட்டன.

 

    • நாலாவது நாள் மாலை ரங்ககிருஷ்ணனுக்கு இலேசாக நினைவு வந்தது. பேச முடியாமல் கழுத்திலும் கன்னத்திலும் கொப்பளங்கள். தாயை நோக்கி கண்ணீர் சிந்தியபடி மௌனமாக இருந்தான் அவன். வாயைத் திறந்து உதட்டை அசைத்தாலே வலி கொன்றது.

 

    • “கவலை வேண்டாம் மகனே! சீக்கிரம் தணிந்துவிடும். தலைக்குத் தண்ணீர் விட்டுவிடலாம் மகனே! அதுவரை பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாயிரு” என்று அழுகைக்கிடையே அவனுக்குச் சொன்னாள் ராணி மங்கம்மாள்.

 

    • கணவன் இறந்து போன பின் அரசியல் பொறுப்புகள் அவளைக் கல்நெஞ்சக்காரியோ என்று பிறர் நினைக்குமளவுக்கு மாற்றியிருந்தன. அவள் எதற்குமே கலங்கிக் கண்ணீர் சிந்தியதில்லை. இன்று மகன் மேலிருந்த பாசத்தால் அவனை ‘அழாதே! மகனே!’ என்று ஆறுதல் கூறிவிட்டுத் தான் சிறு குழந்தைபோல் தேம்பித் தேம்பி அழுதாள் மங்கம்மாள்.

 

    • ஒவ்வொரு வார்த்தையாக சிரமப்பட்டு உச்சரித்து ரங்ககிருஷ்ணன் பேசினான். குரல் கிணற்றுக்குள்ளிருந்து வருவது போல் நலிந்து ஒலித்தது.

 

    • “அம்மா…! அன்று உலகின் நிலையாமையைப் பற்றி உங்களிடம் பேசிக்….கொண்டிருந்த போது…யாரும் சாஸ்வதமில்லை..என்று சொன்னது நினைவிருக்கிறதா…?”

 

    • “போதுமடா மகனே! இப்போது எதற்கு அந்த அமங்கலப் பேச்சு?…”

 

    • “நன்றாகப் பழுத்து நெகிழ்ந்து காம்பிலிருந்து தானே உதிரக்கூடிய நிலையிலுள்ள… பழங்கள் உதிராமல் மரத்திலேயே தங்கிவிடுவதும்; பூ, பிஞ்சு, காய் என்று இளமையானவை உதிந்து விடுவதும் சகஜமானது என்று…”

 

    • “போதும்! நிறுத்து!” என்று அவன் வாயைப் பொத்தினாள் ராணி மங்கம்மாள். மகன் நினைவூட்டிப் பேசிய வார்த்தைகள் அவளை மேலும் கலக்கின. மனதைத் தேற்றிக் கொள்ளுவது மிகவும் சிரம்மாக இருந்தது. உள்ளே அந்தரங்கத்தில் அவளே தடுக்க முயன்றும் கேளாமல் ஏதோ இடைவிடாத படி அழுது கொண்டிருந்தது. இரவு முழுவதும் அவள் மனத்தில் அதே இடைவிடாத அழுகை நீடித்தது.

 

    • மறுநாள் அதிகாலையில் விடிவதற்கு இன்னும் நாலைந்து நாழிகைகள் இருக்கும் போது இருள் பிரியாத வைகறையில் ரங்ககிருஷ்ணனுக்கு மீண்டும் நினைவு வந்தது. அப்போது ராணி மங்கம்மாள் அருகிலிருந்தாள்.

 

    • அறையில் இருந்த திவ்யப் பிரபந்த ஏடுகளைச் சுட்டிக் காட்டி யாராவது சுவாமிகளை வரவழைத்துப் பிரபந்தம் சேவிக்கச் சொல்லுமாறு தாய்க்கு ஜாடை காட்டினான் அவன்.

 

    • உடனே திருவரங்கத்திற்குப் பல்லக்கை அனுப்பிப் பரம வைஷ்ணவரான ஒரு வைதீகரை அழைத்து வரச் செய்தாள் மங்கம்மாள். பன்னிரண்டு திருமண்காப்பும் ஒளி திகழும் முக மண்டலமுமாகச் சாட்சாத் பெரியாழ்வாரே நேரில் எழுந்தருளியது போல ஒரு பரம வைஷ்ணவர் அங்கே எழுந்தருளினார். பிரபந்தம் சேவித்தார்.

 

      • துளங்கு நீள்முடி அரசர்தம் குரிசில்

 

      •       தொண்டை மன்னவன் திண்திறல் ஒருவர்க்கு

 

      • உளம்கொள் அன்பினோடு இன்னருள் சுரத்தங்

 

      •       கோடு நாழிகை ஏழுடன் இருப்ப

 

      • விளங்கொள் மற்று அவற்கு அருளிச்செய்த

 

      •       வாறு அடியேன் அறிந்து உலகம்

 

      • அளந்த பொன்னடியே அடைந்து,

 

      •       உய்த்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே!

 

    • கணீரென்ற குரலில் பாடல் ஒலித்தது. அந்தத் திவ்ய சப்தம் செவிகளில் ரீங்காரமிட்டு தெய்வீகமாக முரலும்போது ரங்ககிருஷ்ணன் உலகம் அளந்தவனின் பொன்னடியைச் சென்று சேர்ந்திருந்தான்.

 

    • வைகறைப் புள்ளினம் ஆர்ப்பரிக்க, காவிரி நீர் சலசலக்க, பூபாளராக ஒலிகள் பூரிக்க, இளங்குளிர்க் காற்று எழில் வீச உலகில் பொழுது புலர்ந்து கொண்டிருந்தபோது திரிசிரபுரம் அரண்மனையில் அதே பொழுது அஸ்தமித்து விட்டது. அரண்மனை அழுகுரலில் மூழ்கியது. மனிதர்கள் துயர வெள்ளத்தில் மூழ்கினார்கள். உணர்வுகளில் குருதி கசிந்தது.

 

    • மகனின் மரணம் என்ற ஒரு பேரதிர்ச்சியில் வீழ்ந்து விட்ட ராணி மங்கம்மாளின் கண்முன் எதிர்காலம், எதிர்கால அரசியல் பொறுப்புகள் என்ற வேறு இரண்டு பெரிய அதிர்ச்சிகளும் மிக அருகில் தெரிந்தன.

 

    • “ரங்கா! எனக்கு ஏன் இத்தனை பெரிய சோதனை?” என்று மகன் சரணமடைந்து அர்ப்பணமாகிவிட்ட அதே உலகளந்த பொன்னடிகளைக் கண் கலங்கிப்போய் அப்போது உள்ளம் உருகித் தியானித்தாள் அவள்.

 

    • —————-

 


 

12. பேரன் பிறந்தான் 

    • பேரிடிப் போன்ற இந்தச் செய்தியை அறிந்ததும் கர்ப்பிணியாக இருந்த சின்ன முத்தம்மாள் நிலை குலைந்து போனாள். வளைகாப்பணிந்த சமயத்தில் தன்னிடம் “உனக்கு ஒரு கஷ்டமும் வராமல் பார்த்துக் கொள்வேன்” என்று உறுதி கூறியிருந்த ஆருயிர்க் கண்வன் இன்று எல்லாக் கஷ்டங்களையுமே தன் தலையில் சுமத்தி இப்படி அமங்கலியாகவும் அநாதையாகவும் அழவைத்து விட்டுப் போனதை எண்ணி மனம் நைந்து வருந்தினாள். அவளது மங்கலக் கழுத்து மூளிக் கழுத்தாகிப் பொலிவிழந்தது.

 

    • “நான் இனிமேல் உயிர் வாழ்வதற்கே ஆசைப்படவில்லை! என்னைக் கணவனோடு வைத்து எரித்து விடுங்கள். எனக்கு இந்த உலகமும் வேண்டாம், வாழ்க்கையும் வேண்டாம்” என்று ராணி மங்கம்மாளிடம் கதறினாள் அவள். வயிறும் பிள்ளையுமாக இருந்த அவளுக்கு ஆறுதல் கூறித் தேற்றுவது யாராலும் முடியாதிருந்தது. துயரங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் வேதனைகளுக்கும் ஈடு கொடுத்துப் பழகியிருந்த ராணி மங்கம்மாளே உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்தாள். மனம் மறுகி அலமந்தாள்; அயர்ந்து போனாள். அப்போது சின்ன முத்தம்மாளின் துயர வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவாவது தான் தனது உணர்வுகளை முதலில் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என்று எண்ணினாள். எல்லாரையும் போலத் தானும் அழுது புலம்பித் திகைத்து நிற்பது தன் எதிரிகளுக்கு மகிழ்வூட்டக் கூடிய காரியம் என்று அவளுக்கே தோன்றியது. ஆனாலும் தாய்ப் பாசம் அவ்வளவு சுலபமாக அடங்கிவிடக் கூடியதாயில்லை.

 

    • எதிர் காலத்தில் நாயக்க வம்சத்தின் நம்பிக்கைகளை எல்லாம் கொன்றுவிட்டு மாண்டு போயிருந்தான் ரங்ககிருஷ்ணன். தன்னுடைய ஆட்சிக்கும், அரசியலுக்கும் இனிமேல் தான் சோதனைக்காலம் தொடங்குகிறது என்பது ராணி மங்கம்மாளுக்குப் புரிந்தது.

 

    • விரோதங்களும், பொறாமைகளும் ஒரு பக்கம் இருந்தாலும், கிழவன் சேதுபதி உட்பட எல்லா அக்கம் பக்கத்து அரசர்களும் துக்கம் விசாரிக்க வந்து போனார்கள். துக்கம் விசாரிக்கத்தான் வந்தார்களா அல்லது தான் எந்த அளவு சோக மிகுதியால் பலவீனப்பட்டு போயிருக்கிறோம் என்று நேரில் பார்த்து விட்டுப் போக அவர்கள் வந்தார்களா என்னும் அந்தரங்கமான சந்தேகம் கூட ராணி மங்கம்மாளுக்கு இருந்தது. அந்தச் சந்தேகத்தில் ஓரளவு உண்மை இல்லாமலும் போகவில்லை.

 

    • ரங்ககிருஷ்ணன் சடலத்தை அரண்மனை எல்லையிலிருந்து மயானத்திற்காக எடுப்பதற்கு முன் முத்தம்மாளின் பிடிவாதம் எல்லை மீறியது. அவன் உடல் மீது விழுந்து புரண்டு கதறியழுது தன்னையும் அவனோடு சேர்த்து எரித்து விடும்படி மீண்டும் முரண்டு பிடித்தாள் சின்ன முத்தம்மாள். பணிப் பெண்களின் உதவியோடு ராணி மங்கம்மாள் சின்ன முத்தம்மாளைத் தனியே பிரித்து அழைத்துச் சென்று அவளிடம் பேசினாள்;

 

    • “உன் துயரத்தைவிட என் துயரம் பலமடங்கு பெரியது முத்தம்மா! மகன் இறந்த உடனேயே என் உயிரும் போயிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் பல்லைக் கடித்துக் கொண்டாவது நான் உயிர் வாழ வேண்டியிருக்கிறது. கணவனை இழந்த உன் துயரத்தைக் காட்டிலும் ஏற்கெனவே கணவனையும் இழந்து இன்று மகனையும் இழந்து தவிக்கும் என் துயரம் எவ்வளவு பெரியது என்று நினைத்துப் பார்…”

 

    • “நியாயம் தான்! உங்களால் துயரத்தைத் தாங்க முடிகிறது. தாங்குகிறீர்கள். என்னால் முடியவில்லை. துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் பக்குவமும் எனக்கு இல்லை. எனக்கு நீங்கள் ஏதாவது உதவ முடியுமானால் அது இப்போது என்னைச் சாக விடுவதுதான்.”

 

    • “சாவதும், வாழ்வதும் நம் கையில் மட்டும் இல்லையம்மா! அளவற்ற துயரம் வரும்போது சாகவேண்டுமென்று நினைப்பதும், மகிழ்ச்சி வரும்போது வாழவேண்டும் என்று திட்டமிடுவதும் மனத்தின் ஆசாபாசங்களால் நிகழ்பவை! உன் வயிற்றில் ஒரு சிசு வளர்கிறது. அது இந்த வம்சத்தின் எதிர் காலத்திற்கு மிகவும் அவசியமானது. உன் கணவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமானால் இறப்பது தான் ஒரே வழி என்று நீ நினைப்பது தவறு அம்மா! அவனுடைய கருவை வளர்த்துப் பெற்றெடுப்பது தான் அவனுக்கு விசுவாசமான காரியம்…! உன்னைக் கொன்று கொள்ள வேண்டுமானால் உனக்கு உரிமையிருக்கலாம்! ஆனால் உன்னுள் வளரும் குழந்தையைக் கொல்லும் உரிமை உனக்கில்லை!” என்று கண்டித்துக் கூறி அவளை நிர்பந்தமாக ஓர் அறையில் அடைத்துச் சில பணிப் பெண்களையும் அவளோடு காவலுக்கு வைத்து விட்டுச் சென்றாள் ராணி மங்கம்மாள்.

 

    • மகன் ரங்ககிருஷ்ணனின் சடலத்துக்கான அந்திமக் கிரியைகள் நடந்தன. அதன் பின் சில நாட்கள் தொடர்ந்து அந்த அரண்மனையும் அதிலிருந்த மனிதர்களும் கலகலப்பற்றிருந்தார்கள். சின்ன முத்தம்மாளுக்கு ஆறுதல் தேறுதல் கூறி அவளைப் பாதுகாப்பதே ராணி மங்கம்மாளுக்குப் பெரிய பொறுப்பாக இருந்தது. அரசியல் பொறுப்புகள் எதையுமே அவள் கவனிக்க முடியவில்லை. இராயசம் கவனித்து வந்தார். அரண்மனையில் நடந்துவிட்ட துக்கச் சம்பவத்தின் காரணமாகக் கோயில்களில் தரிசனத்துக்குக் கூடச் செல்ல முடியாமல் இருந்தது. தங்களைத் தாங்களே சிறை வைத்துக் கொண்டது போல் திரிசிரபுரம் அரண்மனையில் நாட்களைக் கடத்தினார்கள் அவர்கள்.

 

    • சின்ன முத்தம்மாளின் அர்த்தமற்ற பிடிவாதமாகிய கணவனோடு உடன்கட்டை ஏறுவது என்பதைத் தடுத்து நிறுத்தி விட்டாலும் கர்ப்பிணியாகிய அவள் தற்கொலை செய்து கொண்டு விடுவாளோ என்ற பயம் இன்னும் ராணி மங்கம்மாளுக்கு இருந்தது. தொடர்ந்து சின்ன முத்தம்மாள் விரக்தியோடுதானிருந்தாள். அவளுடைய வேதனை ஒரு சிறிதும் தணிந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில் வயிரும் பிள்ளையுமாக இருக்கும் அவளை அரண்மனையில் ஒரு கணமும் தனியே விடாமல் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது. சோக மிகுதியில் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவள் எதுவும் செய்து கொண்டு விடக் கூடாதே என்று பயந்தாள் ராணி மங்கம்மாள்.

 

    • அம்மை கண்டு இறப்பதற்கு முன் மகன் ஆட்சி நடத்திய ஏழாண்டுக்கால வாழ்வை மீண்டும் நினைத்தாள். அவனுடைய அருங்குணங்கள் ஒவ்வொன்றாக நினைவு வந்தன. இப்படி ஒரு பெரிய பொறுப்பில் இல்லாமல் ஒரு நாட்டுப்புறத் தாயாக இருந்தாலாவது ஒப்பாரி வைத்து அழுது துயரைத் தணித்துக் கொள்ள முடியும் என்று தோன்றியது ராணி மங்கம்மாளுக்கு. ரங்ககிருஷ்ணன் செய்திருந்த தான தர்மங்களும், கட்டிய கோயில்களும் நினைவுக்கு வந்தன. அந்தணர்களுக்குத் தானமாக அளித்த சிற்றூர்களும், மக்கள் பசிப்பிணி தீர அங்கங்கே கட்டிய சத்திரம் சாவடிகளும் ஞாபகம் வந்தன. எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அரண்மனையிலேயே வளர்ந்த சின்ன முத்தம்மாளை மணந்து அவளோடு ஏக பத்தினி விரதனாக அவன் வாழ்ந்த வாழ்க்கை நினைவுக்கு வந்தது. விருப்பு வெறுப்பில்லாமல் திரிசிரபுரத்தில் கிறிஸ்துவர்களின் நிலங்களை அவர்களுக்கு அளிக்குமாறு அவன் நீதி வழங்கியது நினைவுக்கு வந்தது.

 

    • பதவியேற்று முடிசூடிய புதிதில் மறவர் சீமையின் மேல் படையெடுத்துச் சென்று வெற்றி பெறாமல் திரும்பியிருந்தாலும் பின்னர் தன் தந்தை சொக்கநாத நாயக்கர் காலத்தில் இழந்த பகுதிகளை எல்லாம் மீட்டு வெற்றி பெற்ற மகனின் பெருமை நினைவுக்கு வந்தது.

 

    • குறிப்பாக ரங்ககிருஷ்ணன் தலையெடுத்த பின்பே மதுரை வள நாட்டுப் பகுதிகள் ஒவ்வொன்றாக நாயக்க மரபினரின் ஆட்சிக் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் வந்திருந்தன. வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்தது போல ரங்ககிருஷ்ணன் மாண்டு போயிருந்தான். அவன் உயிரோடிருந்து மீட்ட பகுதிகளை அவனுக்குத் தோற்ற ஒவ்வொரு சிற்றரசனும், இப்போது அவனில்லாத நிலைமையில் என்னென்ன நினைப்பான் என்று சிந்தித்தாள் ராணி மங்கம்மாள். நாயக்க மரபின் இந்த இழப்புகளும், சோகங்களும், பலவீனமான நிலைகளும் எதிரிகள் மனத்தில் என்னென்ன எண்ணங்களை ஏற்படுத்தும் என்று அநுமானம் செய்து பார்க்க முயன்றாள்.

 

    • மனிதர்களின் சாமர்த்தியங்கள் சில சந்தர்ப்பங்களில் நேர்கின்றன. வேறு சில சந்தர்ப்பங்களோ சாமர்த்தியங்களைத் தேடி அடைய வைக்கின்றன. கடலில் இறங்காமல் நீந்த முடியாது; மங்கம்மாளுக்கு அவள் இளமையிலிருந்தே நேர்ந்த ஒவ்வோர் அதிர்ச்சியும் சாமர்த்தியங்களில் ஒரு படி அவளை உயர்த்தக் கூடியதாகவே அமைந்திருக்கிறது. அவளுக்கு ஏற்பட்ட துயரங்களின் ஆழமே அவளை அவற்றில் நீந்திக் கரைகடக்க முடிந்தவளாகச் செய்திருக்கிறது. பலவீனமானவளாகவும், எந்த அதிர்ச்சியிலும் உடனே தளர்ந்து வீழ்ந்துவிடக் கூடியவளாகவும் அவள் ஒருபோதும் இருந்ததில்லை. அவள் தந்தை இளமையில் பயமறியாதவளாக அவளை வளர்த்திருந்தது தான் காரணம்.

 

    • “உன்னை நான் சிறிதும் அடக்கவோ, ஒடுக்கவோ கட்டுப்படுத்தவோ விரும்பவில்லை மகளே! நீ சுதந்திரமாகக் காட்டு மல்லிகைபோல் இஷ்டப்படி வளரலாம். சுதந்திரமாக வளர்பவர்கள் எதிர்காலத்தில் விரும்பத் தகுந்த நல்ல கட்டுப்பாடுள்ளவர்களாக மாறுவதும் கட்டுப்பாடாக வளர்பவர்கள் எதிர்காலத்தில் விரும்பத் தகாதபடி தாறு மாறாகத் திரிவதும் சகஜம். காடு மலைகளில் அலைகிற தண்ணீர் ஒரு நாள் ஓரிடத்தில் கரைகளுள்ள நதியாக மாறிப் பேரும் புகழும் பெற்றுக் கடலை அடையும் தகுதியைப் பெறும் என்பது தான் நியதி” என்று சிறுவயதில் தன் தந்தை தன்னிடம் கூறிய சொற்களை இப்போது மறுபடி எண்ணிப் பார்த்தாள் ராணி மங்கம்மாள்.

 

    • சின்ன முத்தம்மாளுக்குப் பிறக்கப் போகிற குழந்தை ஆணாக இருக்குமா பெண்ணாக இருக்குமா? என்று சிந்தித்தாள் அவள். நாயக்க வம்சம் தொடர்ந்து நிலைத்து நீடிக்குமா? என்பதே சின்ன முத்தம்மாளுக்குப் பிறக்கப் போகிற குழந்தையைப் பொறுத்து இருந்தது. பிறக்கப் போகிற குழந்தை ஆணாக இருந்தால் கூட இன்னும் பல ஆண்டுகளுக்கு அதாவது அந்த ஆண் குழந்தை வளர்ந்து பெரிதாகிறவரை தான் ஆட்சிச் சுமையைக் கட்டிக் காக்க வேண்டியிருக்கும் என்பது அவளுக்குப் புரிந்திருந்தது. பிறக்கப் போகிற குழந்தையும் பெண்ணாக இருந்து விட்டாலோ அப்புறம் நெடுநாட்களுக்கு விடிவே இல்லை என்று தோன்றியது.

 

    • “ரங்கா! என்னையும் என் வம்சத்தையும் ஏமாற்றி விடாதே! எங்கள் குலம் விளங்க ஒரு செல்வனை அளித்துக் காப்பாற்று” என்று பெருமாளை அவள் வேண்டிக்கொள்ளாத நாளில்லை. விரக்தியில் பைத்தியக்காரத்தனமாக ஏதாவது செய்து கொண்டு விடப்போகிறாளோ என்ற பயத்தில் சின்ன முத்தம்மாளைக் கட்டுக் காவலில் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போதும் யாராவது பணிப்பெண்கள் அவளுடன் கூடவே இருந்தார்கள். துணைக்கு இருப்பது போல் உடனிருந்து அவளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார்கள். கணவன் இறக்கும் போதே அவள் நிறைமாதக் கர்ப்பிணி. மனக்கவலைகள், குழப்பங்களில் நாட்கள் நகர்ந்தன.

 

    • ராணி மங்கம்மாள் அரங்கநாதப் பெருமாளை வேண்டிக் கொண்டது வீண் போகவில்லை. சில நாட்களிலேயே சின்ன முத்தம்மாள் அழகிய ஆண்மகவு ஒன்றைப் பெற்றெடுத்தாள். ராணி மங்கம்மாளுக்குப் பேரன் பிறந்தான். வம்சம் விளங்கி வளர வழி பிறந்தது என்று தெய்வங்களுக்கு நன்றி விசுவாசத்தோடு வணக்கம் செலுத்தினாள் அவள்.

 

    • பாட்டனாராகிய சொக்கநாத நாயக்கரின் பெயரைக் குழந்தைக்கு வைக்க விரும்பினாள். மகனின் ஞாபகமும் எழுந்தது. பாட்டனாரின் அரசியல் தோல்வியும் மகன் ரங்ககிருஷ்ணனின் வாழ்க்கைத் தோல்வியும் இந்தக் குழந்தைக்கும் ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற தயக்கம் எழவே இருவர் பெயரோடும் ‘விஜய்’ என்ற அடைமொழியையும் சேர்த்து ‘விஜயரங்க சொக்கநாதன்’ என்ற புதுப் பெயரைச் சூட்ட முடிவு செய்தாள். குழந்தை பெரியவனாகி எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நினைப்புக்கும் முன்னடையாளமாக ‘விஜய்’ என்பதைப் பேரில் முதலில் இணைத்திருந்தாள்.

 

    • அந்தக் குழந்தை பிறந்த தினத்தன்றே இந்தப் பெயரைத் தன் மருமகளும், குழந்தையின் தாயுமான சின்ன முத்தம்மாளிடம் கூறிப் பெயர் அவளுக்குப் பிடித்திருக்கிறதா என்று அபிப்ராயம் கேட்டாள். பெயர் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாச் சின்ன முத்தம்மாள் மறுமொழி கூறினாள். குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ஆருயிர்க் கணவனை இழந்த துயரத்தை அவள் முற்றிலும் மறந்து தேறிவிடுவாள் என்று ராணி மங்கம்மாள் கருதினாள். அவளுக்கு நியமித்திருந்த கட்டுக்காவல்களையும் படிப்படியாகத் தளர்த்தினாள்.

 

    • “சின்ன முத்தம்மா! இனி உனக்கு ஒரு கவலையும் இல்லை! உன் கணவன் ஆளக் கொடுத்து வைக்காத சாம்ராஜ்யத்தை மகன் ஆளுவான். மகனை வளர்த்துப் பெரியவனாக்கும் பொறுப்பு உனக்கு இருக்கிறது. நீ தைரியமாகவும், கவலையில்லாமலும் இருந்தால் தான் குழந்தையை நன்றாக வளர்க்க முடியும்” என்று அவளை உற்சாகப்படுத்த முயன்றாள் ராணி மங்கம்மாள்.

 

    • இதனால் எதிர்பார்த்த உற்சாகம் சின்ன முத்தம்மாளிடம் விளையவில்லை என்பது மங்கம்மாளுக்கு வியப்பளித்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியை விடக் கணவனை இழந்துவிட்ட கவலையிலேயே அவள் மனம் குமைந்து கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது.

 

    • “உன் மகன் பெரியவனாகி முடிசூடி இந்த நாட்டை ஆளும்போது கவலையெல்லாம் பறந்து போகும்டீ பெண்ணே!”

 

    • “அதற்குள் என் கவலைகளே என்னைக் கொன்று தின்றுவிடும் போலிருக்கிறது மகாராணீ!”

 

    • “நீ கவலைப்பட்டு கண்ணீர் சிந்துவதால் போனவன் திரும்பிவந்து விடப் போவதில்லை பெண்ணே! போனவனுக்குக் கவலைபட்டு உருகுவதைவிட வந்து பிறந்திருப்பவனுக்காக மகிழ்ச்சிப்படுவதற்குப் பழகிக் கொள் அம்மா!”

 

    • “எவ்வளவோ முயன்றும் என்னால் அது முடியவில்லை மகாராணி. என்னை மன்னித்துவிடுங்கள்.”

 

    • “உன் மகனின் பச்சிளம் முகத்தைப் பார்! உனது கவலைகள் தானே பறந்து போகும்.”

 

    • சின்ன முத்தம்மாள் இதற்கு மறுமொழி கூறவில்லை. அவளுக்குக் குழந்தை பிறந்த இரண்டாம் நாளும் இதே நிலையில் தான் இருந்தாள். மூன்றாம் நாள் சரியாகிவிடும் என்று ராணி மங்கம்மாள் நினைத்தாள். மூன்றாம் நாளும் சின்ன முத்தம்மாளிடம் எந்த உற்சாகமான மாறுதலும் நிகழவில்லை.

 

    • —————-

 


 

13 . கண்கலங்கி நின்றாள் 

    • மருமகளான சின்ன முத்தம்மாளின் உற்சாகமற்ற போக்கு ராணி மங்கம்மாளுக்குக் கவலையளித்தது. அவள் மனம் குழம்பித் திகைப்பு அடைந்தாள். கணவனை இழந்த துயரத்தை மகன் பிறந்த மகிழ்ச்சியில் மறந்து விடுவாள் என்று எதிர்பார்த்து வீணாயிற்று.

 

    • சின்ன முத்தம்மாளை எப்படி மனம் மாறச் செய்வது என்று ஓயாமல் சிந்தித்தாள் ராணி மங்கம்மாள். அவளது எந்த முயற்சியாலும் மருமகளை மாற்ற முடியவில்லை. மருமகள் தைரியமாகவும் உற்சாகமாகவும் இராவிடில் பிறந்த குழந்தையை வளர்த்துக் காப்பாற்றுவது சிரமமாயிற்றே என்று தனக்குள் சிந்தித்து ஒரு முடிவும் புலப்படாமல் தவித்தாள் ராணி மங்கம்மாள்.

 

    • எதிர்பாராமல் நேர்ந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்ட ரங்ககிருஷ்ணனின் மரணத்தால் மூத்தவர்களின் விசும்பல்களும் கண்ணீரும் அழுகுரல்களுமே நிரம்பிவிட்ட அரண்மனையில் அதன்பின் தொடர்ந்து நீடித்து துயர மௌனத்தின் கனத்தையும் இறுக்கத்தையும் கரைப்பது போல் இப்போது தான் ஓர் இளம் குழந்தையின் இனிய அழுகுரல் ஒலிக்கத் தொடங்கியிருந்தது.

 

    • ஆனால் எல்லாருடைய சோகத்தையும் போக்கிய அந்த மங்கலமான இளம் அழுகுரல் அந்தக் குரலுக்குரியவனைப் பெற்றெடுத்தவளின் சோகத்தை மட்டும் போக்கவில்லை.

 

    • சின்ன முத்தம்மாள் மகன் பிறந்த பின்பும் சித்தப்பிரமை பிடித்தவள் போல் அர்த்தமின்றிப் பார்த்த திசையிலேயே வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். அவளது கவனத்தைத் திருப்புவதற்காகப் பணிப்பெண்கள் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. சிரிப்பதற்கும், முகம் மலர்வதற்கும் முடியாதவளாகி விட்டாளோ என நினைக்கும் அளவுக்குப் பரிதாபமாயிருந்தது அவள் நிலைமை. சின்ன முத்தம்மாளின் இந்தத் துயரத்தைப் போக்க முடியாமலும் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்துக் கலங்கினாள் ராணி மங்கம்மாள்.

 

    • சிரிப்பூட்டுவதிலும் நகைச்சுவையாகப் பேசி மகிழ்விப்பதிலும் கெட்டிக்காரிகளான இளம் பெண்களைச் சதா காலமும் சின்ன முத்தம்மாளின் அருகே சூழ்ந்திருக்கச் செய்து பார்த்தாள். அவளுக்குப் பிறந்திருக்கும் ஆண் குழந்தையைப் பற்றி அவளிடமே நிறையப் பேசச் செய்து கலகலப்பூட்ட முயன்றாள். எதுவுமே எதிர்பார்த்த நல்ல விளைவுகளை உண்டாக்கவில்லை.

 

    • நாயக்க வம்சத்தை ஆள்வதற்குப் பேரன் பிறந்த மகிழ்ச்சியும் கோலாகலமும் குறையாமல் வந்தவர்களுக்கெல்லாம் பரிசில்களும் தான தர்மங்களும் வழங்கப்பட்டன. அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும் ராணி மங்கம்மாளுக்குப் பேரன் பிறந்ததைக் கொண்டாடினார்கள்.

 

    • சித்த பிரமை பிடித்தாற் போலிருந்த சின்ன முத்தம்மாளுக்கு எல்லா ஏற்பாடுகளும் கண்ணும் கருத்துமாகச் செய்யப்பட்டிருந்தன. பணிப்பெண்கள் தாய்மைப் பேற்றுக்குப் பின்வரும் முதல் நீராடலுக்காக அண்டா நிறையப் பன்னீரை நிரப்பி வைத்திருந்தார்கள்.

 

    • பெரு முயற்சிக்குப் பின் ராணி மங்கம்மாளே ஒருநாள் பிற்பகலில் தனியாகச் சின்ன முத்தம்மாளைச் சந்தித்தாள். அவளிடம் மனம் விட்டுப் பேசினாள்.

 

    • “நீ இப்படி இருப்பது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. சின்ன முத்தம்மா! உன் கவலைகளை நீ மறக்க வேண்டும். உன்னைத் தேற்றிக் கொண்டு உன் மகனைச் சீராட்டி வளர்க்க வேண்டும்.”

 

    • இதற்கு எதுவும் மறுமொழி கூறாமல் கண்ணீர் சிந்தியபடியே மோட்டு வளைவை வெறித்து நோக்கியபடி இருந்தாள் சின்ன முத்தம்மாள். அவளிடம் எந்த விளைவும் ஏற்படவில்லை. ராணி மங்கம்மாள் நீண்ட நேரம் மன்றாடிய பின்னர் சின்ன முத்தம்மாள் மறுமொழி கூறினாள்.

 

    • “நாயக்க வம்சம் தழைக்க ஒரு வாரிசு தேவை என்றீர்கள்! இதோ வாரிசு கிடைத்து விட்டது. எடுத்துக் கொள்ளுங்கள்! குலை போட்டு ஈன்றபின் தாய் வாழைக்கு அப்புறம் இங்கு என்ன வேலை?” – என்று கூறிய படியே தன் அருகில் கிடந்த குழந்தையை இருகைகளாலும் எடுத்து ராணி மங்கம்மாளிடம் நீட்டினாள். ராணி மங்கம்மாள் குழந்தையை மருமகள் கைகளிலிருந்து வாங்கத் தயங்கவில்லை. ஆனால் அதே சமயம் மருமகளின் பேச்சைக் கடிந்து கொண்டாள்.

 

    • “உனக்கு என்ன வந்துவிட்டது இப்போது? ஏன் இப்படிப் பேசுகிறாய்? வாரிசு தேவை என்றால் அதை வளர்த்துப் பெரிதாக்கத் தாயும் தேவை என்பது நான் சொல்லித்தானா உனக்குத் தெரியவேண்டும்?”

 

    • “நான் வாழவேண்டும் என்று நீங்கள் ஆசைப்படலாம். ஆனால் எனக்கு அந்த ஆசையில்லை! அவர் இல்லாத உலகம் எனக்கும் வேண்டியதில்லை. என்னைத் தீயில் தள்ளிக் கொன்று விடுங்கள்! அல்லது கொன்று கொள்ள உதவுங்கள்.”

 

    • “என்னைப் போன்றவர்கள் வாழ்வதற்கு உதவுவது தான் வழக்கம் முத்தம்மா! சாவதற்கு உதவு செய்து எனக்குப் பழக்கமில்லை.”

 

    • “எது உபகாரம் எது உபகாரமில்லை என்பதை அதைப் பெறுகிறவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் மகாராணி! இந்த நிலைமையில் என்னை வாழவிடுவது எனக்கு உதவியா, சாகவிடுவது உதவியா என்பதை உங்களைவிட அதிகமாக நான் தான் உணரமுடியும். வாழ்ந்து கொண்டே அணு அணுவாகச் சாவதைவிட, ஒரேயடியாகச் செத்துவிடுவது எவ்வள்வோ மேல்.”

 

    • “நீ சித்தபிரமை பிடித்து ஏதேதோ அர்த்தமில்லாமல் உளறுகிறாய் முத்தம்மா! இந்த மனப் போக்கை வளர விடாதே! இது உனக்கும் உன் குழந்தைக்கும் நல்லதில்லை…”

 

    • என்று கூறி அவளைச் சமாதானப் படுத்திவிட்டு பணிப் பெண்களைத் தனியே அழைத்து ஒரு விநாடி கூடத் தாயையும் குழந்தையையும் தனியே விட்டுவிடாமல் அருகேயே இருந்து கண்காணித்துக் கொள்ளுமாறு அவர்களுக்கு மீண்டும் கடுமையான உத்தரவு போட்டாள் ராணி மங்கம்மாள்.

 

    • அன்று பிற்பகலில் ஏதோ கைத் தவறுதலாகச் சின்ன முத்தம்மாள் தன் அறையில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பன்னீரை ஒரு குவளையில் எடுத்துக் குடிக்க முயன்றபோது அருகே இருந்த தாதிப்பெண்,

 

    • “அம்மா! அம்மா! அது பன்னீர். பிரசவித்த வயிற்றோடு பன்னீரைக் குடித்தால் உடனே ஜன்னி கண்டு விடும்!” என்று எச்சரித்து விட்டு உடனே பன்னீரை வாங்கி அதைத் திரும்ப ஊற்றினாள். பணிப்பெண் இதைச் செய்த போது சின்ன முத்தம்மாள் அடம் பிடிக்கவில்லை. தன்னைத் தடுத்த பணிப்பெண்ணின் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள். பின்னர் ஏதோ யோசனையிலாழ்ந்து பேசாமல் இருந்தாள். சிறிது நேரம் கழித்து சின்ன முத்தம்மாளே அந்தப் பணிப்பெண்ணிடம் மீண்டும் தானே பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள். பணிப் பெண்ணுக்கு இப்படிச் சின்ன முத்தம்மாள் வலுவில் பேச முன் வந்தது வியப்பை அளித்தாலும் அதை அடக்கிக் கொண்டாள்.

 

    • “குடிக்கக் கூடாதென்றால் பின் எதற்காக இந்தப் பன்னீரை இங்கே நிரப்பி வைத்திருக்கிறீர்களாம்?”

 

    • “தலை நீராடலுக்காக இதை நிரப்பி வைத்திருக்கிறார்கள் அம்மா! உள்ளுக்குப் பருகினால் தான் கெடுதலேயன்றித் தாய்மைப் பேற்றுக்குப் பின் பன்னீரில் நீராடினால் இதமாக இருக்கும்.”

 

    • “உள்ளுக்குப் பருகினால் ஒரு கெடுதலும் இருக்காது. சும்மா நீயாக என்னைப் பயமுறுத்துகிறாய்!”

 

    • “ஐயையோ! நீங்கள் அப்படி நினைக்காதீர்கள் உள்ளுக்குப் பருகினால் மோசம் போய்விடும்…”

 

    • “அடி போடி! நீங்களும் உங்கள் வைத்திய முறைகளும் விநோதமாகத்தான் இருக்கின்றன. சாக வேண்டியவர்களை எதையாவது மருந்து கொடுத்து வாழ வைக்கிறீர்கள்! வாழ வேண்டியவர்களை எதையாவது கொடுத்துச் சாகவிட்டு விடுகிறீர்கள். உங்களுக்குச் சாக வைக்கவும் சரியாகத் தெரியாது. வாழ வைக்கவும் துப்பில்லை! வைத்தியமாம் வைத்தியம்!”

 

    • பணிப்பெண் இதற்கு மறுமொழி கூறாமல் சிரித்துக் கொண்டு பேசாமல் இருந்து விட்டாள். எதற்காகச் சின்ன முத்தம்மாள் இப்படியெல்லாம் பேசுகிறாள் என்பதையும் அந்தப் பணிப் பெண்ணால் அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை.

 

    • அன்றிரவு முதல் யாமம். சின்ன முத்தம்மாளின் அறை நிசப்தமாயிருந்தது. பணிப் பெண்கள் கூடப் பகலெல்லாம் உழைத்த அலுப்பில் களைத்து உறங்கிப் போயிருந்தார்கள். மங்கலாகவும் தணிவாகவும் எரிந்த குத்து விளக்கை மேலும் தணிவாக்கி இருள் சூழச் செய்த பின் சின்ன முத்தம்மாள் தன்னருகே பிஞ்சுக் கைகால்களை உதைத்துக் கொண்டிருந்த குழந்தையை எடுத்து மார்பில் அணைத்துப் பால் கொடுத்தாள். உச்சி மோந்தாள். மாறி மாறி முத்தமிட்டாள்.

 

    • அவள் கண்களில் ஈரம் பளபளத்தது. ஓசைப் பட்டுவிடாமல் மௌனமாக அழுது கண்ணீர் சிந்தியபடி மங்கலமாக தீப ஒளியில் குழந்தையை வைத்த கண் வாங்காமல் பருகி விடுவது போல் பார்த்தாள். மறுபடி வெறி பிடித்தது போல் மாறி மாறி முத்தமிட்டுக் கொஞ்சினாள்.

 

    • பின்பு தன் கட்டிலுக்கு அருகேயிருந்த மற்றொரு சிறு கட்டிலில் பட்டுத் துணியை விரித்துக் குழந்தையைக் கிடத்தினாள். அதன் அழகை இரசித்துவிட்டுத் தன் கைகளாலேயே அதற்குத் திருஷ்டியும் கழித்தாள். திருவரங்கன் இருந்த திசைநோக்கித் தியானித்துக் கைகளைக் கூப்பினாள்.

 

    • “தெய்வமே! இந்தப் பச்சிளம் குருத்து வளர்ந்து வாழத் துணையாக இரு” என்று மனத்தில் நினைத்தாள்.

 

    • அதன்பின் ஏதோ திடமான முடிவுக்கு வந்துவிட்ட முகபாவத்துடன் பன்னீர் அண்டாவின் அருகே சென்றாள். வெறிப்பிடித்தவள் போல் குவளை குவளையாகப் பன்னீரை வாரிப் பருகினாள். எத்தனை குவளைகள் என்று எண்ண முடியாத படி பன்னீர் உள்ளே போயிற்று. விறுவிறுவென்று உடம்பில் குளிர்ச்சி ஏறிற்று.

 

    • இனி உள்ளே இடமில்லை என்று கூறும் அளவு பன்னீரைப் பருகி முடித்ததும் தள்ளாடித் தள்ளாடி நடந்து குழந்தையின் கட்டிலருகே சென்று மறுபடி அதைப் பார்த்தாள். கடைசி முறையாக அந்த உயிருள்ள பச்சை மண்ணை முத்தமிட்டு உச்சி மோந்தாள். கண்கலங்கி அப்படியே நின்றாள்.

 

    • ———–

 


 

14. இடமாற்ற எண்ணம் 

    • அப்போது சின்ன முத்தம்மாளின் இதயத்தில் தாய்ப் பாசத்துக்கும் விரக்திக்கும் இடையே ஒரு போராட்டம் மூண்டது. துணிவதும், தயங்குவதுமாக ஊசலாடிக் கொண்டிருந்த மனம் துணிந்து முடிவெடுத்திருந்தாலும் மறுபடியும் பாசமும், பிரியமும், அஞ்ஞானமும் குழம்பின. சிரமப்பட்டு வலிந்து முயன்று இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டாள் அவள்.

 

    • மறுபடியும் திரும்பி வந்து தன் கட்டிலில் படுத்தாள். சில விநாடிகளில் விழித்துக் கொண்ட பணிப்பெண் ஒருத்தி, “அம்மா! ஏதாவது வேண்டுமா?” என்று கேட்ட போது “ஒன்றும் வேண்டாம்! நன்றாகத் தூங்கவேண்டும். தூங்கப் போகிறேன் என்றாள் சின்ன முத்தம்மாள். பணிப்பெண் இந்த வார்த்தைகளில் எந்த வேறுபாடான அர்த்தத்தையும் காணவில்லை. சகஜமாக ஏற்று சகஜமாகவே புரிந்து கொண்டாள்.

 

    • பொழுது விடிந்தது. அரண்மனையில் ஒரே பரபரப்பு. சின்ன முத்தம்மாளுக்குப் பயங்கரமாக ஜன்னி கண்டிருந்தது. மரணத்தின் பிடியிலிருந்து அவளை மீட்க வைத்தியர்கள் போட்டி போட்டுக் கொண்டு முயன்றனர். பலிக்கவில்லை. ஜன்னி வேகத்தினைத் தாங்க முடியாமல் உயிர் நீத்தாள் சின்ன முத்தம்மாள்!

 

    • ராணி மங்கம்மாள் பேரக் குழந்தையை அப்போது கையிலெடுத்தாள். மறுபடி அக்குழந்தையை அதன் தாயிடம் விட முடியாமல் தானே வளர்க்க வேண்டியதாயிற்று. தாயாகவும், பாட்டியாகவும் இருந்து அக்குழந்தையை வளர்த்தாக வேண்டிய பொறுப்பு அவளிடம் வந்தது.

 

    • மறுபடியும் அந்த அரண்மனையில் தற்காலிகமானதோர் இருள் சூழ்ந்தது. இரண்டு பெரிய துக்க சம்பவங்கள் நேர்ந்து விட்ட திரிசிரபுரம் அரண்மனையில் இருப்புக் கொள்ளாமல் தவித்தாள் மங்கம்மாள். எங்கே திரும்பினாலும் மகன் ரங்ககிருஷ்ணனின் ஞாபகமும், மருமகள் சின்ன முத்தம்மாளின் நினைவும் வந்து வேதனைப்படுத்தின. மகனையும், மருமகளையும் நினைத்து உருகாமல் அவள் அந்தப் பெரிய அரண்மனையில் ஒரு விநாடி கூட நிம்மதியாய் இருக்க முடியவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் மகன் ரங்ககிருஷ்ணனின் சிரிப்பொலி கேட்பது போல் பிரமையாயிருந்தது. அந்த அரண்மனை முழுவதும் மறைந்து போன அவ்விருவரின் நினைவுகளே எங்கும் நிரம்பிக் கிடந்தன. அரசியல் அநுபவங்களும், ஆட்சிப் பொறுப்புகளும் ஓரளவு அவள் மனத்தைக் கல்லாக்கியிருந்தன. இல்லாவிடில் அவளும் ஒரு பேதையைப் போல் இக்கொடுமைகளிலிருந்து விடுபடத் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும். பயந்து ஓடியிருக்கக்கூடும்.

 

    • புகழ் பெற்ற நாயக்க வம்சத்துக்கு ஒரு வாரிசை உருவாக்குகிறோம் என்ற நம்பிக்கையும் உள்ளார்ந்த திருப்தியுமே அவளை அப்படி எல்லாம் செய்யவிடாமல் அப்போது வாழ வைத்திருந்தன. நீறுபூத்த நெருப்பாக உள்ளே கனன்று கொண்டிருந்த துயரம் வெளியே தெரியவிடாமல் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள் ராணி மங்கம்மாள். மக்கள் அவளை வீராங்கனை என்றும், எவ்வளவு துயரங்களையும் தாங்கிக் கொண்டு ஆட்சிக் கடமைகளை ஆற்றக்கூடிய திடசித்தமுள்ளவள் என்றும் வானளாவப் புகழ்ந்தனர்.

 

    • ஆனால் அவளது மனம் எவ்வளவுக்குக் கவலையில் சிக்கித் தவிக்கிறது என்பது இராயசம் போன்ற இரண்டோர் அரண்மனை முக்கியஸ்தர்களுக்குத் தெரிந்துதான் இருந்தது. அவர்களிடம் அவளால் அதை மறைக்க முடியவில்லை.

 

    • ஒரு நாள் மாலை அரண்மனை மந்திராலோசனை மண்டபத்தில் ராணி மங்கம்மாளுடன் பேசிக் கொண்டிருந்த போது இராயசம் ஒரு யோசனையைக் கூறினார்.

 

    • அவள் கையிலிருந்த பேரன் விஜயரங்க சொக்கநாதனை சுட்டிக்காட்டி, “இவனுடைய நலனுக்காவது இதை நீங்கள் செய்தாக வேண்டும்” என்றார் அவர். அவர் கூறிய அந்த யோசனை ராணி மங்கம்மாளைச் சிந்திக்க வைத்தது.

 

    • “இந்த அரண்மனையில் இரண்டு சாவுகளுக்கு மேல் நேர்ந்து விட்டன. தொடர்ந்து இங்கே இருப்பது உங்கள் மனவேதனையை அதிகப்படுத்தலாம். நடந்த துயரங்களை நினைவுபடுத்தி உங்களை இந்தச் சூழலே கலக்கப்படுத்தலாம். தயவு செய்து நீங்களும், குழந்தையும் இடம் மாற வேண்டும்” என்றார் இராயசம்.

 

    • ராணி மங்கம்மாள் அவரைக் கேட்டாள்:

 

    • “உங்கள் யோசனையை ஏற்கிறேன். ஆனால் எங்கே இடம் மாறுவது என்று தான் எனக்குப் புரியவில்லை.”

 

    • “நம்மைப் பொறுத்தவரை திரிசிரபுரத்தை விட்டுவிட்டால் மதுரை தான் சிறந்த இடம். மதுரைக்குப் போகலாம்.”

 

    • “அங்கே போனாலும் ரங்ககிருஷ்ணனின் நினைவு என்னைக் கொல்லத்தான் செய்யும். அவனோடு சித்திரா பௌர்ணமிக்கும் மற்ற காரியங்களுக்கும் அங்கே நான் போனதெல்லாம் ஞாபகம் வரும்.”

 

    • “வரலாம்! ஆனால் இங்கே திரிசிரபுரத்தில் இருப்பது போல அவ்வளவு கொடுமையாக அது இராது. மதுரை மாநகரம் இதைவிடப் பெரியது. இப்போதேகூட உங்கள் அரசியல் தலைநகரமாக இது இருந்தாலும் மதுரையே உங்களுடைய கலாசாரத் தலைநகரமாக விளங்கி வருகிறது. கோலாகலமும், கலகலப்பும், பரபரப்பும் நிறைந்த மதுரை மாநகருக்குப் போவது உங்கள் மனப்புண்களை ஆற்றக்கூடும். குழந்தையையும் நன்றாக வளர்க்கலாம்.”

 

    • “மதுரையிலும் ரங்ககிருஷ்ணனின் பாட்டனார் கட்டிய பழைய மகால் அரண்மனை எனக்கு எப்போதுமே பிடிக்காது. தமுக்கம் ராஜமாளிகையில் தான் தங்கியாக வேண்டும். தமுக்க ராஜ மாளிகையின் ஒவ்வொரு தூணும் சுவரும் கூட ரங்ககிருஷ்ணனை எனக்கு நினைவூட்டாமல் விடப்போவதில்லை.”

 

    • “நினைவுகள் எல்லாமே நிழலைப் போன்றவை மகாராணீ! நாம் எங்கெல்லாம் நடந்து போகிறோமோ, அங்கெல்லாம் அவை நம்மைத் தொடரவே செய்யும். கொஞ்சம் அடர்ந்த வெயில் வரமுடியாத பகுதிக்குப் போனால் ஒரு வேளை நம் நிழல்கள் நமக்கே தெரியாமல் இருக்கலாம்.”

 

    • “துயர நிழல்கள் என்னைப் பயமுறுத்தி வீழ்த்திவிட முடியாது! நான் அவற்றுக்கு அஞ்சவில்லை. ஆனால் அவை என்னை வருத்தமுடியும். வருந்துவேன்.”

 

    • “நீங்களும் உள்ளூர வருந்தலாம். கலங்கலாம். ஆனால் நீங்கள் வருந்திக் கலங்கி ஆற்றலற்றுப் போயிருக்கிறீர்கள் என்று உங்கள் எதிரிகள் அறியும்படி மட்டும் விட்டுவிடக் கூடாது.”

 

    • “ஒரு நாளும் அப்படி நடக்காது.”

 

    • “அப்படி ஒருபோதும் நடக்க விடக்கூடாது என்பதற்காகத் தான் இந்த யோசனையைக் கூறுகிறேன் மகாராணீ!”

 

    • “உங்கள் யோசனையை நான் மறுக்கவில்லை! குழந்தை விஜயரங்கனும் நானும் மதுரைக்குப் புறப்பட அரண்மனை ஜோதிடர்களைக் கலந்து பேசி ஒரு நல்ல நாள் பார்த்து ஏற்பாடு செய்யுங்கள்” என்றாள் ராணி மங்கம்மாள்.

 

    • “நீங்கள் இப்போது திரிசிரபுரத்திலிருந்து மதுரைக்குச் செல்வது உங்களுக்கு மன ஆறுதல் அளிக்கும் என்பதைத் தவிர வேறொரு வகையிலும் பயன்படும்.”

 

    • “என்ன அது?”

 

    • “மகனை இழந்து மருமகளை இழந்து துயரத்திலிருக்கும் உங்களைப் பலவீனமான நிலையிலிருப்பதாகக் கருதிக் கிழவன் சேதுபதி பல தொல்லைகள் கொடுக்கலாம்.”

 

    • “எனக்கும் உள்ளூற அப்படி ஒரு சந்தேகம் உண்டு!”

 

    • “சந்தேகம் மட்டுமில்லை! அது ஒரு சரியான அநுமானமும் ஆகும்! நீங்கள் தொடர்ந்து திரிசிரபுரத்திலேயே இருந்தால் மதுரையைக் கைப்பற்ற முயல்வார் சேதுபதி!”

 

    • “அது நடக்காது! நடக்க விடமாட்டேன்.”

 

    • “அதை நடக்க விடாமல் தடுக்க நீங்கள் திரிசிரபுரத்தில் இருப்பதைவிட மதுரையிலிருப்பது பயன்படும்.”

 

    • “நான் ஆயத்தமாயிருக்கிறேன். மதுரைக்குப் புறப்பட உடனே நாள் பார்த்து ஏற்பாடு செய்யுங்கள்” என்று மீண்டும் முன்னைவிட உறுதியான குரலிலே கட்டளையிட்டாள் ராணி மங்கம்மாள். அவள் குரலில் இப்போது புதிய உறுதியும், புதிய கண்டிப்பும் ஒலித்தன.

 

    • —————

 


 

15. சாதுரியமும் சாகஸமும் 

    • ‘கிழவன் சேதுபதி’ என்ற பெயரைக் கேட்டவுடனே தன் சொந்தத் துயரங்களைக்கூட மறந்து உறுதியும் கண்டிப்பும் திடமான முடிவும் உடையவளாக மாறியிருந்தாள் ராணி மங்கம்மாள்.

 

    • அரசியலில் ஏற்க வேண்டியதை ஓரிரு கணங்கள் தாமதித்து ஏற்பதும், எதிர்க்க வேண்டியதை ஓரிரு கணங்கள் தாமதித்து எதிர்ப்பதும் கூட விரும்பத் தகாத விளைவுகளை உண்டாக்கி விடலாம் என்பதைக் கடந்த கால அனுபவங்களிலிருந்து அவள் நன்கு உணர்ந்திருந்தாள். புரிந்து கொண்டிருந்தாள். கணித்தும் வைத்திருந்தாள்.

 

    • ‘தான் ஒரு பெண் – அதனால் பலவீனமானவள்’ என்று தன்னைப்பற்றி யார் எண்ணினாலும் அவர்களது எண்ணத்தைப் பொய் என்று உடனே நிரூபித்துக் காட்டும் துணிவோடு செயற்படுவது எப்போதுமே அவளுடைய வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.

 

    • மகனையும், மருமகளையும் இழந்து தான் பலவீனமாக இருந்தாலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல எதிரிகள் நடந்து கொள்ளத் தயங்கமாட்டார்கள் என்றுதான் அவளுக்குத் தோன்றியது. ராஜதந்திரிகளும் அரசாங்க அதிகாரிகளும் கூறிய யோசனைகளை மட்டுமே நம்பிவிடாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சுயமாகவும் சிந்தித்தாள் அவள்.

 

    • விஜயரங்க சொக்கநாதன் குழந்தையாக இருக்கும்வரை மறைமுகமாக ஆட்சிப் பொறுப்பின் பாரத்தைத் தாங்குவது என்று தனக்குள் முடிவு செய்து கொண்டிருந்தாள் அவள்.

 

    • ராணி மங்கம்மாள் குழந்தையோடு நல்ல நாள் பார்த்து மதுரைக்குச் சென்றாள். ராணியின் பரிவாரங்களும் சுற்றமும் உடன் சென்றன. அக்கம் பக்கத்துப் பகையரசர்களை உத்தேசித்துத் திரிசிரபுரத்திலும் மதுரையிலும் மாறி மாறி இருப்பது போல் காட்டிக் கொள்வது நல்லதென்றுகூடச் சில ராஜ தந்திரிகள் அபிப்பிராயப்பட்டார்கள். ராணியும் அதைப் பற்றிச் சிந்தித்தாள். அக்கம் பக்கத்து எதிரிகளை தற்காலிகமான நண்பர்களாக்கிக் கொள்ளவும் அவள் முயல வேண்டியிருந்தது. எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்கிற சாணக்கியத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

 

    • தன் கையில் பேரக் குழந்தையோடும், மனத்தில் அரசியல் பொறுப்புகள் என்னும் சுமைகளோடும் ராணி மங்கம்மாள் மதுரைக்கு வந்த போது சுற்றுப்புற அரசியல் சூழ்நிலைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. சிலரது மறைவால் வேறு சிலருக்கு தைரியம் வந்தது. சிலர் தலையெடுத்த காரணத்தால் வேறு சிலர் தைரியத்தை மறைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

 

    • மராத்திய சிங்கம் வீரசிவாஜி மறைந்து விட்டதனால் அதுவரை அந்தப் பெருவீரனுக்குப் பயந்து சில ஆக்கிரமிப்புகளைச் செய்யாமல் இருந்தவர்கள் ஆக்கிரமிப்புகளுக்குத் துணிந்தார்கள்.

 

    • விரைந்து அப்படித் துணிந்தவர்களில் டில்லி பாதுஷாவும் ஒருவர். டில்லி பாதுஷாவின் கவனம் தெற்கே சிறிது சிறிதாகச் சிதறியிருந்த நாடுகள் மேல் விழுந்தது. அவற்றின் வளத்தையும் வாழ்வையும் ஏதோ ஒரு வகையில் தனக்கு அடிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் அவன் மனத்தில் எழுந்தது.

 

    • சூரியோதயத்தில் சிறிய சிறிய நட்சத்திரங்கள் ஒளியிழந்து போவதைப்போல் வலிமை வாய்ந்த டில்லி பாதுஷாவின் எழுச்சியில் தென்னாட்டு அரசர்கள் ஒவ்வொருவராக வலுவிழந்தனர்.

 

    • அதுவரை மிகப் பெரிய பராக்கிரமசாலியாயிருந்த மைசூர் மாமன்னன் சிக்கதேவராயன் டில்லி பாதுஷாவை எதிர்க்க விரும்பாமலும் முடியாமலும் சமரசம் செய்து கொண்டு கப்பம் கட்ட இணங்கிவிட்டான். தஞ்சையை ஆண்டுவந்த மராத்திய மன்னனும் டில்லி பாதுஷா அவுரங்கசீப்புக்குக் கப்பம் கட்டத் தொடங்கிவிட்டான். இந்தச் சூழ்நிலையில், ‘தான் என்ன செய்வது’ என்று சிந்திக்கத் தொடங்கினாள் ராணி மங்கம்மாள். அவசரமாக அவள் முடிவு எடுக்க வேண்டியிருந்தது.

 

    • முன்பு தன் மகன் ரங்ககிருஷ்ணன் பட்டத்துக்கு வந்த புதிதில் பாதுஷாவின் மிதியடிகளை வணங்கக்கோரி வந்த பிரதிநிதிகளுடன் ஏற்பட்ட சச்சரவும் அதே சமயம் அந்த சச்சரவோடு சச்சரவாக மறுக்காமல் அவர்களுக்கு, தான் செலுத்த வேண்டிய திறையைச் செலுத்தியிருந்ததும் ராணி மங்கம்மாளுக்கு நினைவு வந்தன. அன்று தொடங்கிய சச்சரவைத் தொடர்வதா அல்லது சமரசம் செய்து கொள்வதா என்கிற பிரச்சனை எழுந்தது.

 

    • சுற்றி இருக்கிற எல்லாரும் விட்டுக் கொடுத்து அல்லது ஒத்துப் போகிற சமயத்தில் தான் மட்டும் முரண்பட்டு எதிர்த்துக் கொள்வதற்குச் சூழ்நிலை சரியாயிருக்கிறதா இல்லையா என்பதைச் சிந்தித்தாள் அவள்.

 

    • பாய்வதற்காகப் பின்வாங்கிப் பதுங்குவதும் பதுங்குவதற்காகப் பாய்வது போல் சீறுவதும் அரசியலில் மிகவும் இயல்பானவை என்று அவள் அறிவாள். புதிய சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ளலாம் என்று ராஜ தந்திரிகளையும் அரண்மனை இராயசத்தையும் கலந்து பேசினாள். இராயசம் சொல்லலானார்.

 

    • “எதிர் கொள்கிற காரியத்தையும் அந்தக் காரியத்தின் வலிமையையும், அதை எதிர்கொள்கிற தனது வலிமையையும், எதிரிகளின் வலிமையையும், எதிரிகளுக்குத் துணையாக வரப் போகிறவர்களின் வலிமையையும் சீர் தூக்கிப் பார்த்த பின்பே இதில் ஒரு முடிவுக்கு வரவேண்டியிருக்கும்.”

 

    • “சுருக்கமாகச் சொன்னால் பெரும்பாலான அரசியல் முடிவுகள் சமயோசிதமாயிருக்க வேண்டும்.”

 

    • “அரசியல் வெற்றி தோல்விகளே சமயோசித முடிவுகளாலும், சமயோசிதமில்லாத முடிவுகளாலும் தான் வருகின்றன.”

 

    • “இன்றுள்ள சூழ்நிலையில் டில்லி பாதுஷாவை எதிர்த்துக் கொள்ளாமல் கொஞ்சம் தணிந்து போவதே நல்லது.”

 

    • “இப்போது நாம் டில்லி பாதுஷாவை எதிர்த்துக் கொள்ள முற்பட்டால் இங்கே யார் யார் பாதுஷாவை ஆதரிக்கிறார்களோ அவர்களெல்லாரும் கூட உடனே நம் எதிரிகளாக மாறிவிடுவார்கள். அக்கம் பக்கத்திலுள்ளவர்களையும் விரோதித்துக் கொண்டு தொலை தூரத்தில் இருக்கின்ற வலுவான எதிரிகளையும் விரோதித்துக் கொள்வது சாதுரியமல்ல.”

 

    • “நம்முடைய ராஜதந்திரம் என்பது நமக்கும் நம் மக்களுக்குக்கும், நம் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களுக்கும் நன்மை செய்யக் கூடியதாயிருக்க வேண்டும்.”

 

    • “ஆம்! ராஜ தந்திரத்தில் சுயநன்மைதான் முக்கியமேயன்றிப் பரோபகாரம் முக்கியமில்லை.”

 

    • “தர்மங்களைப் போல் ராஜ தந்திரங்கள் நிரந்தரமாயிருக்க வேண்டிய அவசியதில்லை. எல்லா ராஜ தந்திரங்களுமே சமயோசிதமானவை, தற்காலிகமானவை.”

 

    • “இந்த அளவுகோலின் படி தான் நம்முடைய இன்றைய முடிவும் இருக்கவேண்டும்” என்று தனது தீர்மானத்தை அறிவித்தாள் ராணி மங்கம்மாள். டில்லி பாதுஷாவைத் தன்னைக் கட்டிக் கொண்டு மதுரைப் பெருநாட்டையும் சுற்றுப்புறங்களையும் ஆளுவதற்காக அவனுக்குத் திறைப் பணமும் செலுத்தினாள் அவள்.

 

    • டில்லி பாதுஷாவுக்குக் கப்பம் செலுத்தி அவனுடைய நட்பையும் பாதுகாப்பையும், விரோதமின்மையையும் அநுசரணையையும் பெற்றதன் மூலம் சில தற்செயலான பெரிய ராஜ தந்திர வெற்றிகள் அவளுக்குக் கிடைத்தன. மங்கம்மாளுக்குச் சொந்தமான மதுரைப் பெருநாட்டுப் பகுதிகளில் எல்லையோரத்து ஊர்களில் சிலவற்றைத் தஞ்சை வேந்தன் கைப்பற்றித் தனக்கே சொந்தமான இடங்கள் போலப் பாவித்து ஆண்டு கொண்டிருந்தான்.

 

    • டில்லி பாதுஷாவை விட்டே அவன் உதவியால் தஞ்சை மன்னனிடமிருந்து மதுரைப் பெருநாட்டுக்குரிய தனக்குச் சொந்தமான ஊர்களை மீட்டாள் ராணி மங்கம்மாள். அவளுக்கு இந்த ஊர்களின் ஆட்சியுரிமையைத் திருப்பித் தராவிட்டால் டில்லி பாதுஷாவின் விரோதம் ஏற்படும் என்று பயந்து தானே வலிந்து ராணி மங்கம்மாளிடம் ஒப்படைத்தனர். கத்தியின்றி இரத்தமின்றிப் போரின்றி போர்க்களமின்றி இப்படி ஒரு ராஜ தந்திர வெற்றி இதனால் அவளுக்குக் கிடைத்தது. டில்லி பாதுஷாவுக்கு அடங்கிய பெரும்படைத் தலைவனான கல்பீர்கான் தென் திசைக்குப் படைகளோடு வந்தபோது சமயோசிதமான முறையில் அவனுக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு அளித்து விலை மதிப்பற்ற பல பரிசுகளை வழங்கச் செய்தாள் ராணி மங்கம்மாள். அதைப் பெற்ற பின் அந்தப் படைத் தலைவன் ராணி மங்கம்மாளுக்குப் பெரிதும் உதவி செய்யக் கூடியவனாக மாறினான்.

 

    • தஞ்சை மன்னன் போன்ற அக்கம் பக்கத்து அரசர்கள் எல்லாரிடமும், “ராணி மங்கம்மாளின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் ஒரு கடுகளவு ஆக்கிரமிக்க முற்பட்டாலும் டில்லிப் பேரரசுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்” என்று அந்தப் படைத் தலைவன் கடுமையாக எச்சரித்து விட்டுச் சென்றான்.

 

    • போருக்குத் தலைமை ஏற்றுப் படையெடுத்துச் சென்று எதிர்க்கவும் எதிர்த்து வந்தவர்களைத் தாக்கவும் முடியாத பெண்ணாக இருந்ததனால் ராஜ தந்திர முறைகளிலேயே தன் எதிரிகளைச் சமாளித்து வந்தாள் அவள்.

 

    • ‘ராணி மங்கம்மாள் விரோதித்துக் கொள்வது டில்லி பாதுஷாவுக்கு கோபமுண்டாக்கும் காரியம்’ என்று தென்னாட்டுச் சிற்றரசர்கள் பேரரசர்கள் எல்லாரும் தயங்கும்படி நம்பகமான பிரமை ஒன்றை வெகு விரைவில் அவளால் உருவாக்கி விட முடிந்தது. திரிசிரபுரத்தில் எந்த பாதுஷாவின் பிரதிநிதியோடு தன் மகன் தன்மானப் போரைக் கிளப்பிக் குமுறி எழுந்தானோ அந்தப் பாதுஷாவின் பிரதிநிதிகள், படைத் தலைவர்கள் அனைவரும் டில்லிக்குத் திரும்பிப் போய் “தெற்கே நமக்குத் திறை செலுத்தும் அரசுகளில் ராணி மங்கம்மாளின் அரசைப் போல் நல்ல அரசு எதுவுமே இல்லை. பாதுஷாவையும் பாதுஷாவின் பிரதிநிதிகளையும் வரவேற்று உபசரிப்பதிலும் விருந்தோம்புவதிலும் ராணி மங்கம்மாளுக்கு நிகரில்லை! உத்தமமான விசுவாசமுள்ள பெண்மணி” என்று வாய் ஓயாமல் தன்னை அவர்கள் புகழும்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கியிருந்தாள். இந்தச் சூழ்நிலை அவளையும் அவளுடைய ஆட்சியையும் கவசம் போல் பாதுகாக்கத் தொடங்கியிருந்தது.

 

    • இதைப்பற்றி உரையாடும் போது அவளே ஒரு நாள் இராயசத்திடம், “ஆண்களே சில சமயங்களில் மற்ற ஆண்களை முட்டாளாக்கிவிடலாம். ஆனால் என்னைப்போல் பெண்கள் எங்கள் முழுத் திறமையையும் சாதுரியத்தையும் பயன்படுத்தி முட்டாளாக்குவது என்று புறப்பட்டுவிட்டால் எங்களை யாரும் வெல்ல முடியாது” என்று சிரித்தபடியே சொல்லியிருந்தாள். அதைக் கேட்டு இராயசமும் பதிலுக்குச் சிரித்தார்.

 

    • “எப்படியோ ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தாயிற்று! டில்லி பாதுஷாவின் விரோதம் தீர்ந்தது. அக்கம் பக்கத்து அரசர்கள் விரோதிகள் ஆக முடியாத படி அவர்களைத் தடுத்தும் ஆயிற்று” என்றார் இராயசம். அதற்கு மங்கம்மாள் பதிலுரைத்தாள்.

 

    • “குழந்தை விஜயரங்கன் பெரியவனாகி முழு ஆட்சிப் பொறுப்பையும் ஏற்கிற வரை இப்படியெல்லாம் தான் இந்த ஆட்சியையும் நாட்டையும் நான் காப்பாற்றியாக வேண்டும்! வேறு வழியில்லை.”

 

    • வெறுத்துத் தற்கொலை செய்துகொண்டு விடவேண்டிய அளவு துயரங்களை அடுத்தடுத்து அநுபவித்து வாழ்க்கையே கசந்துபோன பின்னும் பேரன் எங்கிற வம்சத்தளிர் வளர்ந்து தழைக்கின்ற வரை எல்லாக் கசப்புகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுமை அவளுக்கு வந்திருந்தது.

 

    • இப்போது வாழ்வா சாவா என்பது அவளையும் அவளுடைய அருமைப் பேரனும் தாயில்லாக் குழந்தையுமான விஜயரங்க சொக்கநாதனையும் பொறுத்த கேள்வியாக மட்டும் இல்லை. ஓர் அரச வம்சம் மேலும் தொடர்ந்து வாழப் போகிறதா அல்லது இதோடு அழிந்து விடப்போகிறதா என்று கேள்வியாக இருந்தது. அதனால் தான் அவள் இந்த விஷயத்தில் இத்தனை பொறுமைகளையும் பிடிவாதத்தையும் சாகஸங்களையும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. முற்ற முற்ற அடியிலேயும் உள்ளேயும் வைரம் பாயும் தேக்க மரத்தைப்போல, அரசியலிலும் வைரம் பாய்ந்த முயற்சியும் பிரச்சனைகளை தயங்காமல் எதிர்கொள்ளும் திறனும் அவளுள் இப்போது நன்றாக வளர்ந்திருந்தன.

 

    • அதிக சிரமமும் பிரயத்தனமும் இல்லாமல் ராஜ தந்திர சலனங்களைச் சிக்கல்களையும் ஏற்படுத்தியே தன் எதிரிகளைச் சமாளித்தாள் அவள். டில்லி பாதுஷாவிடம் நம்பிக்கையும் மதிப்பையும் சம்பாதித்து அதன் மூலம் அந்தப் பாதுஷாவுக்குக் கீழ்ப்படிந்து அடங்கிய மற்ற அரசர்கள் எல்லாரும் தன்னிடம் எந்த வம்புக்கும் வராமல் மரியாதைக்குரிய எல்லைகளில் அவர்கள் ஒதுங்கி விலகியே நிற்கும்படி அவள் கவனித்துக் கொண்டாள்.

 

    • இப்படி அரண்மனை அந்தப்புரத்திலிருந்து அதிகம் வெளியேறாமலே பெரிய பெரிய அரசியல் சாதனைகளை எல்லாம் அவள் நிறைவேற்றிக் கொள்ள முடிந்ததென்றால் அதற்கெல்லாம் காரணமாக சாகஸத்திலும் சாதுரியத்திலும் அவள் தேர்ந்திருந்தது தான் காரணம்.

 

    • அரண்மனையில் பேரனை வளர்த்தபடியே வெளியில் தன் ஆட்சியையும் அதன் எல்லைகளையும் கூட வளர்த்துப் பெருக்க முடிந்தது அவளால். தென்னாட்டின் ஒரே பெண்ணரசி என்ற முறையில் அவள் டில்லி பாதுஷாவின் இரக்கத்தையும் கருணையையும் சலுகைகளையும் அடைந்திருந்தாள். அதே சமயத்தில் தான் யார் மேலும் ஏமாளித்தனமான கருணையையும் தகுதியில்லாத இரக்கத்தையும் காட்டி விடாமல் திடமாக இருந்தாள். ஔரங்கசீப்பின் அரசியல் பிரதிநிதிகளாகவோ, படைத் தலைவர்களாகவோ யார் தெற்கே புறப்பட்டு வந்தாலும் அவர்களைத் தன்மேல் அதிகமான மரியாதை உள்ளவர்களாகவும் தான் சொன்னபடி கேட்கக் கூடியவர்களாகவும் மாற்ற முடிந்த வித்தை அவளுக்குத் தெரிந்திருந்தது. பாதுஷாவின் பிரதிநிதிகளும் படைத் தலைவர்களும் அவளிடம் பொன்னையும் பொருளையும் அவற்றை விட அதிக சக்தியுள்ள உபசார வார்த்தைகளையும், உபகாரத்தையும் அடைந்தார்கள். வசப்பட்டார்கள். மதித்தார்கள். சாகஸத்தால் யாருக்குப் பணிந்து கப்பம் கட்டினாளோ அவர்களையே வேறொரு விதத்தில் தன் விருப்பப்படி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தாள். தன் விருப்பப்படியே எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருந்தாள்.

 

    • எல்லாம் இப்படிச் சுமூகமாகப் போய்க் கொண்டிருந்தாலும் உள்ளூர அவளுக்கும் கவலைகள் இருந்தன. வருத்தங்கள் இருந்தன. வெளியே சொல்ல முடியாதபடி உள்ளார்ந்த ஊமைத் துயரங்கள் இருந்தன.

 

    • டில்லி பாதுஷாவை அவள் சரிபடுத்தி விட்டாலும் மராத்தியர்களிடமிருந்தும், மராத்தியப் படைத் தலைவர்களிடமிருந்தும் அவளுக்கு அடிக்கடி தொல்லைகள் இருந்தன. அவர்களை அடக்கி வசப்படுத்த அவர்களுக்கும் அடிக்கடி பொருளை வாரியிறைக்க வேண்டியிருந்தது. அவர்களில் சிலர் எவ்வளவு தான் கொடுத்தாலும் திருப்தி படாதவர்களாக இருந்தனர். அடிக்கடி பொருளுக்காக ராணி மங்கம்மாவைத் தேடி வந்தனர். ராணி மங்கம்மாள் மராத்தியர்கள் விஷயத்தில் பாம்பென்று தாண்டவும் முடியாமல் பழுதை என்று மிதிக்கவும் முடியாமல் திணறினாள். சிந்தித்துச் சிந்தித்து முடிவு தோன்றாமல் அந்த விஷயத்தில் திகைத்தாள்.

 

    • ———–

 


 

16. ஒரு மாலை வேளையில்… 

    • மராத்தியப் படைத்தலைவர்களும் ராணி மங்கம்மாளிடம் அடிக்கடி பணம் பறித்தனர். மதுரைப் பெருநாட்டின் ஆட்சிக்கு ஊரு நேராமலிருக்கவும் எல்லைகளைப் பாதுகாக்கவும் மராத்தியர்களை அடிக்கடி தன்னைக் கட்டிக் கொண்டு போக வேண்டியிருந்தது. படை பலத்தைக் காட்டுவதிலும், நேரடிப் போரில் இறங்குவதிலும் இருந்து தன்னை தவிர்த்துக் கொண்டு ராஜ தந்திர முறைகளாலும், சாதுரியங்கள் சாகஸங்களாலும் ஆள்வதில் கூட ராணி மங்கம்மாளுக்கு இப்படிச் சில சிக்கல்கள் ஏற்படத் தான் செய்தன. பெண் ஆளும் நாட்டின் எல்லைப் புறப் பகுதிகளை ஆக்கிரமித்து ஆளுவது சுலபம் என்று அக்கம் பக்கத்து அரசர்கள் துணிந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டி அவர்களை மிரட்டி வைக்க வேண்டியிருந்தது.

 

    • மிகவும் தொலைதூரத்தில் இருந்தாலும் அடிக்கடி தெற்கே படைகளை அனுப்புவதிலுள்ள சிரமங்களாலும் டில்லி பாதுஷாவின் உதவிகள் கிடைப்பதிலும் சில இடையூறுகள் விளைந்தன.

 

    • திரிசிரபுரத்தின் எல்லைப் பகுதியில் சில சிற்றூர்களை உடையார்பாளையம் சிற்றரசன் கைப்பற்றி ஆண்டு வந்தான். அவனிடமிருந்து அந்த ஊர்களை மீட்பதற்காகப் பாதுஷாவின் படைத்தளபதி டாட்கானுக்கு நிறையப் பொருள் கொடுத்து முயன்றாள் அவள். அவ்வளவு பொருள் உதவி செய்தும் டாட்கானே நேரில் வரமுடியவில்லை. மங்கம்மாள் இழந்த பகுதிகளை மீட்பதற்குப் படை வீரர்களை மட்டுமே அனுப்பி வைத்தான் அவன்.

 

    • ரங்ககிருஷ்ணனின் மகன் விஜயசொக்கநாதன் குழந்தையாயிருந்தாலும் அவனுக்கே முறையாக முடிசூட்டிவிட விரும்பினாள் அவள். அந்தக் குழந்தைக்கு முடிசூட்டி ஆட்சியுரிமையை அளித்துவிட்டு அவனுடைய பிரதிநிதியாக இருந்து தான் ஆட்சிக் காரியங்களை நடத்தலாம் என்பது அவள் எண்ணமாயிருந்தது.

 

    • “தாய் தந்தையை இழந்து பாட்டியின் ஆதரவில் வளரும் சிறுவனை எதிர்த்துப் போர் புரிவது அப்படி ஒன்றும் வீரதீரப் பிரதாபத்துக்குரிய செயல் இல்லை” என்ற எண்ணத்தில் எதிரிகள் குறைவாகவே தொல்லை கொடுப்பார்கள் என்பது அவளது கணிப்பாயிருந்தது.

 

    • தன்னையும் தன் நாட்டையும் அதன் எதிர்கால வாரிசான குழந்தை விஜய ரங்க சொக்கநாதனையும் சுற்றிப் பிறருடைய இரக்கமும் அநுதாப உணர்வுமே சூழ்ந்திருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணினாள் அவள்.

 

    • ஒரு நல்ல நாள் பார்த்து நல்ல வேளை பார்த்துக் குழந்தை விஜய ரங்க சொக்கநாதனுக்கு முடிசூட்டச் செய்தாள். தன் தலையில் சுமத்தப்படுவது எத்தகைய பாரம் என்பது அவனுக்கு ஒரு சிறிதும் புரியாத பாலப் பருவத்திலேயே அந்தப் பாரத்தைச் சுமந்தான் குழந்தை விஜய ரங்க சொக்கநாதன்.

 

    • “குருவி தலையில் பனங்காயை வைப்பது போல் என்பார்கள்! இந்த முடிசூட்டு விழாவும் அப்படித் தான் நடக்கிறது” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் இராயசம். மங்கம்மாள் அதை மறுத்தாள்.

 

    • “குருவி எந்த நாளும் பனங்காயை சுமக்க முடியாது! இவன் அப்படியில்லை. வளர்ச்சியும் பொறுப்பைத் தாங்கும் பக்குவமும் இவனுக்கு வரும்.

 

    • “வரவேண்டும் என்று தான் நானும் ஆசைப்படுகிறேன். தாயையும் இழந்து தந்தையையும் இழந்து வளரும் இவனை உருவாக்குவதற்கு மகாராணியார் அரும்பாடு பட வேண்டியிருக்கும்! மகனறிவு தந்தையறிவு என்பார்கள். தந்தை கண்காணத் தந்தையின் பராமரிப்பில் வளர்ந்தால் தான் அது முடியும். இவனோ இந்த மண்ணில் பிறப்பதற்கு முன்பே தந்தையை இழந்துவிட்டான். பிறந்தபின் உடனே தாயையும் இழந்து விட்டான்.”

 

    • “இவன் மட்டும் பிறந்திருக்காவிட்டால் இங்கு நான் இன்னும் உயிர் வாழ்வதற்கு அவசியமே இருந்திராது.”

 

    • “இவன் பிறந்திருந்தும்கூடச் சமயா சமயங்களில் இப்படி விரக்தியடைந்தது போல் பேசுகிறீர்கள். இப்படி ஒரு பேரன் பிறவாமலே இருந்திருந்தால் மகாராணியாரின் விரக்தி எவ்வளவாயிருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை….”

 

    • “திரிசிரபுரத்தை விட்டு நீங்கி மதுரைக்கு மாறி வந்ததில் என் துயரங்கள் அதிக அளவு குறைந்துள்ளன. ஆனாலும் பழைய துயரங்களும் இழப்புகளும் நினைவுவரும்போது எங்கிருந்தாலும் மனத்தை ஆற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கிறேன்.”

 

    • “இந்தக் குழந்தை பெரியவனாகிப் பொறுப்புகளை ஏற்றபின் ஒருவேளை உங்கள் துயரங்கள் குறையலாம்! சில வேளைகளில் சிந்தித்துப் பார்க்கும்போது எனக்கே உங்கள் மேல் பரிதாபமாகவும் இரக்கமாகவும் இருக்கிறது. உங்கள் ஆருயிர்க் கணவர் சொக்கநாத நாயக்கர் இறந்த போதும், நிராதரவாக விடப்பட்டீர்கள்! ரங்ககிருஷ்ணனைப் பெற்றுக் குழந்தையாக வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வாரிசு இன்றிச் சிரமப்பட்டீர்கள். ரங்ககிருஷ்ணன் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்பாவது உங்கள் வேதனைகள் குறையுமென்று நினைத்தேன். ரங்ககிருஷ்ணன் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னும் உங்கள் நிம்மதியும் திருப்தியும் நீடிக்காமல் அற்பாயுளில் போய்விட்டன். மறுபடியும் பொறுமையாக ஒரு வாரிசை வளர்த்து உருவாக்கத் தொடங்கிவிட்டீர்கள்.”

 

    • “என்ன செய்யலாம்? என் வாழ்க்கையே இப்படி அவலக் கதையாகி விட்டது. என்றைக்குத் தான் இதிலிருந்தெல்லாம் விடுபட்டு ஆண்டாளையும் ஸ்ரீ ரங்கநாதனையும் சேவித்து அருட்பயன் பெற முடியபோகிறதோ?”

 

    • “உங்கள் ஜாதக லட்சணம் நீங்கள் நிம்மதியாக விடுபட முயலும் போதெல்லாம் அதிகமாகப் பிணிக்கப்படுகிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதி அப்படிக் கழிந்துவிட்டது.”

 

    • இந்தப் பேச்சிலிருந்து தன்மேல் இராயசத்திற்கு இருக்கும் கருணையும் அநுதாபமும் அவள் மனத்தை நெகிழ்த்தியது. நெகிழ்ந்த மனத்தோடும், விழிகளோடும் அவரை ஏறிட்டுப் பார்த்தாள் அவள். அந்த ஆஜானுபாகுவான அறிவொளி வீசும் திருவுருவம் அப்போது அவளுக்கு ஆறுதளித்தது. நினைத்துப் பார்த்தபோது இவ்வளவு துயரங்களையும் தாங்கிக்கொண்டா இவ்வளவு நாள் கடத்தியிருக்கிறோம் என்று எண்ணி மலைப்பு வந்தது. கணவன் தொடங்கி அருமை மகன் ரங்ககிருஷ்ணன் வரை எல்லாருமே நாயக்க சாம்ராஜ்யப் பொறுப்புகளை நீத்து அநாதையாக அதை விட்டுவிட்டுப் போயிருப்பது போல் தோன்றியது. மனம் கலங்கியது.

 

    • பிஞ்சுக் கைகளை உதைத்துக் கொண்டு தொட்டிலில் கிடந்த நினைவு தெரியாப் பருவத்துக் குழந்தை விஜயரங்க சொக்கநாதனுக்கு முடிசூட்டிய தினத்தன்று இரவில் ராணி மங்கம்மாள் ஒரு சொப்பனம் கண்டாள். அந்தச் சொப்பனம் அவளைச் சிறிது குழப்பமுறச் செய்தது என்றாலும் மனம் தளர்ந்துவிடாமல் உறுதியாக இருந்தாள் அவள்.

 

    • அரண்மனையில் எப்போதும் அவளுக்குத் துணையாக இருக்கும் ‘அலர்மேலம்மா’ என்ற வயது மூத்த தாதிப்பெண் வந்து எழுப்பிய பின் தான் சொப்பனம் கண்டு அலறியபடி தான் கட்டிலிலிருந்து கீழே விழ இருந்ததே அவளுக்குத் தெரிந்திருந்தது. சொப்பனத்தில் ராணி மங்கம்மாள் போட்ட கூப்பாடு பயங்கரமாயிருந்ததால் துணைக்காக அதே அறையில் படுத்திருந்த ‘அலர்மேலம்மா’ விழித்தெழுந்து ராணியை எழுப்பி,

 

    • “என்னம்மா இது? எதற்காக இப்படிப் பயங்கரமாக அலறுகிறீர்கள்? கெட்ட சொப்பனம் ஏதாவது கண்டீர்களா? முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவிவிட்டு ஒரு குவளை தண்ணீர் பருகிய பிறகு தூங்குங்கள்! மறுபடி துர்ச் சொப்பனம் எதுவும் வராது” என்று கூறினாள்.

 

    • எழுந்து முகம் கழுவிக் கொண்டு நீர் பருகிவிட்டு வந்தாலும் கண்ட கனவை எண்ணியபோது மறுபடி உறக்கமே வரவில்லை. நேரம் நள்ளிரவு கடந்துபோய் விடிவதற்கு இன்னும் சில நாழிகைகளே இருந்ததாலும் தூக்கம் அறவே கலைந்து போய்விட்டதாலும் அவள் மேற்கொண்டு உறங்க முயலவும் இல்லை.

 

    • விடிவதற்குச் சில நாழிகைகளுக்கு முன் காணும் கனவு பலிக்காமல் போகாது என்ற நெடுநாளைய நம்பிக்கை வேறு ராணி மங்கம்மாளின் மனத்தை மருட்டியது.

 

    • கனவை நினைத்தாள்! அங்கே அதே பள்ளியறையில் அலர்மேலம்மாளுக்கு அருகே தொட்டிலில் நிம்மதியாக உறங்கும் குழந்தை விஜயரங்கனைப் பார்த்தாள். கனவை நம்புவதா, குழந்தையின் கள்ளங்கபடமில்லாத முகத்தை நம்புவதா என்று அவளுக்குப் புரியவில்லை. மனம் பலவாறாக எண்ணியது. கலங்கும் மனத்தோடு அந்தக் கனவை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்த்தாள் ராணி மங்கம்மாள்.

 

    • மாரிக் காலத்திற்குப் பின் ஒரு நல்ல மாலை வேளை. வண்டியூர்த் தெப்பக்குளம் கரைகள் வழிய நிரம்பியிருக்கிறது. அலைகளைக் காற்றுத் தழுவி அசைத்துப் படிகட்டுகளில் மோதவிட்டு விளையாடுகிறது. தரையில் கிடத்திய பெரும் கண்ணாடிப் பாளம் போலக் குளம் மின்னுகிறது.

 

    • வண்டியூர்த் தெப்பக் குளத்தின் மைய மண்டபமும் தோட்டமும் பச்சைப் பசேலென்று மழைக் காலத்தின் முடிவிற் காட்டும் செழிப்பைக் காண்பிக்கின்றன. பறவைகள் கூட்டடையும் நேரமாகையினால் மைய மண்டபத்தில் ஒரே குரல்கள் மயமாகப் பறவை வகைகளின் சப்தங்கள் கிறீச்சிட்டுக் கொண்டிருந்தன.

 

    • கரையிலிருந்து ஓர் அலங்காரப் படகில் ராணி மங்கம்மாள், இளைஞனான விஜயரங்க சொக்கநாதன், அலர்மேலம்மா, வேறு சில பணிப்பெண்கள் ஆகியோர் ஓர் உல்லாசப் பயணமாக மைய மண்டபத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். போது மிகவும் மனனோரம்மியமாயிருந்தது.

 

    • அன்று அரச குடும்பத்தினர் காற்று வாங்கவும் பொழுதைச் சுகமாகக் கழிக்கவும், வந்திருப்பதையறிந்து படகோட்டியும் படகை மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தான்.

 

    • நீரில் துள்ளும் வெள்ளிநிற மீன்களைக் கண்டு திடீரென்று இருந்தாற் போலிருந்து,

 

    • “பாட்டீ! இந்த மீன்களைத் தண்ணீரிலிருந்து கரையிலெடுத்து எறிந்தால், சிறிது நேரத்தில் துள்ளித் துடித்துச் செத்துப் போய்விடும் இல்லையா?”

 

    • என்று குரூரமாகச் சிரித்துக் கொண்டே கேட்டான் விஜயரங்கன்.

 

    • அவன் கேள்வி அசட்டுத்தனமாகவும் அபத்தமாகவும் தோன்றியது அவளுக்கு.

 

    • “இந்தச் சுகமான மாலை வேளையில் யாரையாவது வாழ வைப்பதைப் பற்றிப் பேசு விஜயரங்கா! கொல்வதையும் துடித்துச் செத்துப் போவதையும் பற்றி ஏன் பேசுகிறாய்? இதெல்லாம் உனக்கு எப்போது தெரியப்போகிறது? நீ பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் அப்பா! இப்படியெல்லாம் பேசக்கூடாது.”

 

    • “அப்படியில்லை பாட்டி! நாம் வாழ வேண்டுமானால் நமக்கு இடையூராக இருக்கும் எல்லாவற்றையும் கொன்று தொலைத்தாக வேண்டும்.”

 

    • “தங்களுக்குச் சொந்தமான தண்ணீரில் சுதந்திரமாகத் துள்ளித் திரியும் இந்த மீன்கள் உனக்கு என்னப்பா இடையூறு செய்கின்றன?”

 

    • “இவை துள்ளிக் குதிப்பதால் என் மேல் தண்ணீர் தெறித்து என் பட்டுப் பீதாம்பரங்கள் நனைகின்றன. எனக்குக் கோபமூட்டுகின்றன…”

 

    • “போதும்! பைத்தியக்காரனைப்போலப் பேசாதே! இந்த மீன்கள் உனக்கு இடையூறாயிருக்கின்றன என்றால் கேட்பவர்கள் கைகொட்டிச் சிரிப்பார்கள்!”

 

    • “அப்படிச் சிரிப்பவர்களை உடனே சிரசாக்கினை செய்து கொல்வேன்…!”

 

    • “கொல்வதையும் அழிப்பதையும் தவிர வேறு எதையாவது பேசு.”

 

    • படகு மைய மண்டபக் கரையில் போய் நிற்கிறது. கிளி கொஞ்சும் மைய மண்டபத் தோட்டத்திற்குள்ளே படியேறிப் போகிறார்கள் அவர்கள். வானில் பிறைச் சந்திரன் பவனி வருகிறான். பொழுது சாய்கிறது.

 

    • “பாட்டி! இந்த மைய மண்டபக் கோபுரத்தில் உச்சி வரை ஏறிப் பார்க்க வேண்டும். ஆசையாயிருக்கிறது!”

 

    • “இந்த இருட்டுகிற நேரத்தில் கோபுரத்தில் ஏறித்தான் ஆகவேண்டுமா?”

 

    • “நான் சொன்னால் சொன்னது தான். கட்டாயம் ஏறிப் பார்த்தே ஆக வேண்டும்.”

 

    • “வாதத்துக்கு மருந்துண்டு! பிடிவாதத்துக்கு மருந்து இல்லை. உன் இஷ்டப்படி செய்! பத்திரமாக ஏறிப்போய்ப் பார்த்துவிட்டு விரைவில் இறங்கி வந்துவிடு.”

 

    • “என்னோடு நீயும் வரவேண்டும் பாட்டி! நாம் இரண்டு பேரும் சேர்ந்தே போகலாம்.”

 

    • “நானா? என்னால் எப்படி முடியும்? இந்த வயதான் காலத்தில் இத்தனை பெரிய கோபுரத்தில் நான் எப்படியப்பா ஏற முடியும்?”

 

    • “வந்துதானாக வேண்டும். பேரன் மேல் பிரியமிருந்தால் வா. வராவிட்டால் பிரியமில்லை என்று அர்த்தம். ‘அருமைப் பேரன்’ என்று நீ சொல்வதெல்லாம் பொய்யா பாட்டி?”

 

    • ராணி மங்கம்மாள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். பேரனின் விருப்பத்தைத் தட்டிக்கழிக்க முடியாமல் கோபுரத்தில் ஏற இசைந்தாள் அவள்.

 

    • ————-

 


 

17. கெட்ட சொப்பனமும் குழப்பமும் 

    • பேரன் விஜயரங்கனின் ஆசையை மறுக்க முடியாத காரணத்தால் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் கோபுரத்தில் ஏறிக்கொண்டிருந்தாலும் ராணி மங்கம்மாளுக்குப் படியேறி மேலே செல்வது களைப்பாகத்தான் இருந்தது.

 

    • பாதிக் கோபுரம் ஏறிக் கொண்டிருக்கும் போதே “இங்கிருந்து ஒருவரைக் கீழே தள்ளினால் உயிர் பிழைக்க முடியுமா பாட்டி?” என்று முன்போலவே சிரித்தபடி கேட்டான் பேரன்.

 

    • ராணி மங்கம்மாள் மூச்சு இறைக்க நின்று ஆசுவாசப் படுத்திக் கொண்டபடி அவனுக்குப் புத்திமதி சொன்னாள்:

 

    • “மேலே போகப்போக எண்ணங்கள் உயர்ந்தனவாக அமைய வேண்டும் அப்பா! மேலேயிருந்து யாரைக் கீழே தள்ளி விடலாம் என்று நினைப்பதைவிடக் கீழே இருக்கிற யாரை மேலே அழைத்து உயர்த்திக் கொள்ளலாம் என்று நினைக்கப் பழகவேண்டும்.”

 

    • “அப்படிப் பழகலாம் பாட்டி! ஆனால் கீழேயிருக்கிற ஒருவரை மேலே வரவழைக்க் நேரமும் சிரமமும் அதிகம். மேலே இருக்கிற ஒருவரைக் கீழே தள்ளிவிட அரைநொடிகூடப் போதுமானது….”

 

    • “அற்பர்களுக்குத்தான் அப்படித் தோன்றும் விஜயரங்கா! நீ அற்பனாகிவிடக் கூடாது. பெருந்தன்மையானவனாக வளர்ந்து உருவாக வேண்டும். பெருந்தன்மை உள்ளவன் கீழே இருந்து சிரமப்படுகிறவனை மேலே கொண்டு வருவதற்கு முயலுவானேயன்றி, மேலேயிருப்பவனைக் கீழே தள்ளிவிட்டு மகிழ ஒருபோதும் முயலமாட்டான்.”

 

    • “பாட்டி! எனக்குப் பெருந்தன்மை கிடையாது. வேண்டவும் வேண்டாம்.”

 

    • அவன் இதைச் சொல்லும்போது அவர்கள் கோபுரத்தின் உச்சிக்கு வந்திருந்தார்கள். மேலே நீலவானின் விதானத்தில் பிறைநிலவு தெரிந்தது. நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. காற்று இதமாக வீசியது. மெல்ல மெல்ல இருட்டிக் கொண்டு வந்தது.

 

    • குபீரென்று அவள் மேல் பாய்ந்து கீழே தள்ளிவிட முயன்றான் விஜயரங்கன்.

 

    • “விளையாடாதே விஜயரங்கா! விளையாட்டு வினையாகிவிடும்.”

 

    • “இது விளையாட்டு இல்லை பாட்டி! உங்களை இங்கு அழைத்து வந்ததே இதற்குத்தான்” என்று சொல்லியபடியே பலங்கொண்ட மட்டும் முயன்று மறுபடி அவளைக் கீழே தள்ள முயன்றான் விஜயரங்கன்.

 

    • அவன் முகத்திலிருந்த குரூரத்தையும் கொலை வெறியையும் பார்த்துத் திடுக்கிட்ட ராணி மங்கம்மாள் பதறிப் போனாள். அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா அல்லது திடீரென்று ஏதேனும் பேய், பிசாசு பிடித்து ஆட்டுகிறதா என்று அவளுக்குப் பயமாகப் போய்விட்டது. அவள் பரிதாபமாகக் கேட்டாள்:

 

    • “ஏண்டா இந்தக் கெட்டபுத்தி? உன்னை வளர்த்து ஆளாக்கிய பாவத்திற்கு இதுவா நீ எனக்குத் தருகிற பரிசு?”

 

    • “உன்னிடமிருந்து எனக்கு விடுதலை வேண்டும் பாட்டி! உனக்கும் வயதாகிவிட்டது.”

 

    • “துரோகி! நிஜமாகவே என்னைக் கீழே பிடித்துத் தள்ளுகிறாயே பாவி! நான் உனக்கு என்னடா கெடுதல் செய்தேன்? வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் இப்படி…?”

 

    • அவள் அலறிக் கத்தினாள். விஜயரங்கன் அந்த உயரமான கோபுரத்திலிருந்து அவளைக் கீழே தள்ளியே விட்டான்.

 

    • அவள் வீறிட்டுக் கூக்குரல் எழுப்பியபடி தலைகுப்புற விழுந்து விட்டாள்.

 

    • கண்ட கனவை அலர்மேலம்மாவிடம் கூடச் சொல்வதற்குத் துணிவு வரவில்லை அவளுக்கு. கட்டிலில் இருந்து புரண்டு விழுந்ததில் உடம்பு வேறு வலித்தது. தூக்கக் கிறக்கத்தில் கட்டிலிலிருந்து புரண்டு விழுகிற அளவு அவள் ஒருநாளும் அவ்வளவு அயர்ந்து உறங்கினதே இல்லை. இன்று அந்த அளவு அயர்ந்து விட்டோம் என்ற நினைப்பே கூட அவளுக்கு நாணத்தை அளித்தது.

 

    • விடிவதற்கு இன்னும் சில நாழிகைகளே இருந்தன. அவளுக்கு உறக்கம் கலைந்து விட்டது. மறுபடியும் உறங்கினால் எங்கே கெட்ட கனவு தொடருமோ என்ற அச்சமும் தயக்கமும் வேறு தடுத்தன.

 

    • ராணியே உறங்காமலிருந்ததால் அலர்மேலம்மாளும் அவள் காலடியில் குத்த வைத்து உட்கார்ந்து கொண்டாள். அதிகாலையில் கண்ட கனவு பலிக்குமா, இல்லையா என்பதைப் பற்றி ராணியும் அவளும் அப்போது பேசிக்கொண்டார்கள்.

 

    • சிறுவயதிலிருந்தே ராணி மங்கம்மாளுடன் தோழியாகவும், பணிப்பெண்ணாகவும் இருந்து வரும் அநுபவத்திலும் உரிமையிலும் கனவுகளின் இயல்பையும், அவை பலிக்கும் விதத்தையும் விளக்கிக் கொண்டிருந்தாள் அலர்மேலம்மா. தன் வாழ்க்கை அநுபவத்திலும், கேள்விஞானத்திலும் அதிகாலையில் கண்ட கனவு பலித்திருக்கும் சந்தர்ப்பங்களை ஒவ்வொன்றாக அப்போது மங்கம்மாளுக்கு விவரித்தாள் அலர்மேலம்மா.

 

    • வேண்டுமென்றே ஒரு பிடிவாதத்துக்காகவும், வம்புக்காகவும் தன் வாழ்வில் அதிகாலையில் கண்ட கனவு ஒன்று கூடப் பலிக்கவில்லை என்பது போல அவளிடம் வாதாடிக் கொண்டிருந்தாள் ராணி மங்கம்மாள். அதிகாலையில் கண்ட கனவு எந்த அளவு நிச்சயமாகப் பலிக்கும் என்று உறுதியாக அறியவே இந்த எதிர்பாராத வாதத்தை அவள் மேற்கொண்டிருந்தாள்.

 

    • மூத்தவளும், அனுபவசாலியும், லௌகிக ஞானம் மிக்கவளும் ஆகிய அலர்மேலம்மாவிடம் தான் கண்ட கனவைப் பற்றி மட்டும் மூச்சுவிடாமல் மற்றெல்லாவற்றையும் பேசிக் கொண்டிருந்தாள் ராணி.

 

    • மனத்தில் பயமும் தற்காப்பு உணர்ச்சியும் மூளவே ராணி மங்கம்மாள் அவசர அவசரமாக நீராடி உடை மாற்றிக் கொண்டு திருவாலவாயுடையார் திருக்கோயிலுக்குச் செல்ல எண்ணினாள். பணிப்பெண் அலர்மேலம்மாளும் அந்த யோசனையை வரவேற்றாள். அலர்மேலம்மாளும் அவசர அவசரமாக நீராடி உடைமாற்றி நெற்றியில் சிவப்புக் கீற்றாக ஸ்ரீ சுவர்ணக் கோடு இழுத்துக்கொண்டு ராணியோடு புறப்பட்டாள்.

 

    • “போகிறது தான் போகிறோம்… கூடலழகர் கோயிலுக்கும் போய்த் தரிசித்து விட்டு வந்துவிடலாம் அம்மா!” என்றாள் அலர்மேலம்மா.

 

    • “வெறும் சிவன்கோயிலுக்கு மட்டும் போவானேன்? பெருமாள் கோயிலுக்கும் சேர்த்தே போய்விட்டு வந்து விடலாம் என்கிறாயா?”

 

    • “அதற்கில்லையம்மா! சிவன் அழிக்கிற கடவுள், நமக்கு வருகிற தீமைகளை எல்லாம் அவர் அழிக்கட்டும். பெருமாள் காக்கிற கடவுள். நம்முடைய நன்மைகளை எல்லாம் அவர் காக்கட்டும். இரண்டு பேரையும் தரிசிப்பதுதான் நல்லதம்மா” என்று சிரித்தபடியே சொன்னாள் அலர்மேலம்மா.

 

    • இருள் பிரிவதற்குள் அத்தனை வைகறையிலேயே ராணி பல்லக்கில் கோயிலுக்குப் புறப்பட்ட போது அரண்மனை வட்டாரத்தில் ஆச்சரியத்தை உண்டாக்கியது அந்த நிகழ்ச்சி.

 

    • அவர்கள் கோயிலுக்குப் புறப்படும்போதுகூட, குழந்தை விஜயரங்கன் அயர்ந்து தூங்கிக் கொண்டுதான் இருந்தான். குழந்தையைக் கவனித்துக் கொள்ள வேறொரு பணிப்பெண்ணை ஏற்பாடு செய்துவிட்டு அவர்கள் புறப்பட்டிருந்தார்கள். குழந்தை விஜயரங்கனுக்கு முறைப்படி முடிசூட்டிய பின்னர் இப்படி ஒரு சொப்பனம் நேர்ந்ததே என்பதுதான் அவள் கலக்கத்துக்குக் காரணமாயிருந்தது. அவனுக்கு முடிசூடியதற்கும் இந்தக் கெட்ட சொப்பனத்திற்கும் சம்பந்தம் இருக்குமோ என்று தன் மனம் நினைப்பதை அவளால் தடுக்க முடியவில்லை.

 

    • கோயில்களில் அர்ச்சனைகள், வழிபாடுகளை முடித்துக் கொண்டு அரண்மனை திரும்பிய பின்னும் நீண்ட நேரம் விடிவதற்கு முன் கண்ட சொப்பனமே மனத்தின் எல்லை நிறைய ஆக்ரமித்துக் கொண்டு அவளை அலைக்கழித்தது. அது பற்றிய எண்ணங்களே மனத்தில் கிளைத்தன.

 

    • தனது அரண்மனை அலுவலர்களிடமோ, மந்திரி பிரதானிகள், இராயசம் போன்றவர்களிடமோ இந்தக் கனவைப் பற்றிப் பேசவில்லை அவள். பலரிடம் மனம்விட்டுப் பேச இயலாமலும், முடியாமலும் இருந்ததாலேயே இந்தக் கனவு அவளை உள்ளூர அதிகம் அலைக்கழித்தது; அதிகம் பாதித்தது.

 

    • கனவுகள், ஜோதிடம், சகுன சாஸ்திரம் சம்பந்தமான பண்டிதர்களை வரவழைத்து அவர்களிடம் ‘தன் கனவு இது’ என்று நேரடியாகச் சொல்லாமல் அதிகாலையில் ஒருவர் கிணற்றில் பிடித்துத் தள்ளுவதுபோலவும் இன்னொருவர் விழுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன் நேரக்கூடும் என்பதை மட்டும் சூசகமாக விசாரித்தாள்.

 

    • அவர்கள் கூறிய விளக்கங்களும் விவரங்களும், பலன்களும் அவளை மேலும் குழப்பத்தில் தான் ஆழ்த்தின. பயமும் நிம்மதியுன்மையும், கவலையும் தான் அதிகரித்தன.

 

    • தொடர்ந்து சில நாட்கள் எவ்வளவோ முயன்றும் அவள் யாரிடமும் கலகலப்பாகப் பேச முடியவில்லை. சுபாவமாக இருக்க முடியவில்லை. மனத்தில் எதைஎதை எல்லாம் தவிர்க்க முயன்றாளோ அவையே மீண்டும் மீண்டும் தலை தூக்கின. நினைக்க வேண்டாம் – நினைக்கக் கூடாது என்று ஒதுக்க முயன்றவை அனைத்தும் நினைவில் வந்தன. நினைக்க வேண்டும், நினைக்கக் கூடும் என்று முயன்றவை அனைத்தும் நினைவில் வராமலே விலகிப் போயின.

 

    • சில நாட்களுக்குப் பின், ஒரு தினம் மாலை வேளையில் தற்செயலாகவே அவளும் குழந்தை விஜயரங்கனும், தாதி அலர்மேலம்மாவும் வண்டியூர்த் தெப்பக்குள மைய மண்டபத்திற்குப் படகில் செல்ல வேண்டியிருந்தது.

 

    • அந்தச் சிறிது நேரப் படகுப் பயணத்தின் போதும்கூட ராணி மங்கம்மாள் ஏனோ மன நிம்மதியற்றிருந்தாள். அவளால் உடனிருந்த அலர்மேலம்மாளுடனோ மற்றவர்களுடனோ கலகலப்பாகப் பேசமுடியவில்லை. கனவில் கண்டதே நிஜமாக நடந்து கொண்டிருப்பதைப் போன்று பிரமை உணர்வில் தட்டுவதைத் தவிர்க்கவும் முடியவில்லை.

 

    • நடுத் தெப்பக்குளத்தில் படகு போய்க் கொண்டிருந்தபோது கொஞ்சம் ஆட்டம் அதிகமாயிருந்த சமயத்தில்,

 

    • “அலர்மேலம்மா! ஜாக்கிரதை… குழந்தையைத் தள்ளிவிடப் போகிறாய்… படகில், ஓரமாக வேறு உட்கார்ந்திருக்கிறாய்” என்று ராணி மங்கம்மாள் எச்சரித்தாள். அப்போது பதிலுக்கு வேடிக்கையாகச் சொல்லுவதாய் நினைத்துக் கொண்டு,

 

    • “உங்கள் பேரனை அவ்வளவு சுலபமாகத் தள்ளி மூழ்கச் செய்து விடமுடியாது அம்மா! அவன் மற்றவர்களைத் தள்ளிக் கவிழ்த்து விடாமல் இருந்தாலே பெரிய காரியம்” என்று விளையாட்டாகப் பதில் பேசினாள் அலர்மேலம்மாள். அதைக் கேட்ட மங்கம்மாளுக்குத் துணுக்கென்றது. அலர்மேலம்மாள் இயல்பான நகைச்சுவையோடு பேசியிருந்தாலும் அதில் தீய நிமித்தம் இருப்பது போல் ராணி மங்கம்மாளுக்குத் தோன்றியது. சில விநாடிகள் அப்படியே பிரமை பிடித்தது போல் பேசாமலிருந்து விட்டாள் அவள். மற்றவர்கள் ஏதோ கேட்பதற்குப் பதில்கூட அவளால் சொல்ல முடியவில்லை. மைய மண்டபக் கரைக்காக இறங்க வேண்டிய படிக்கட்டு வந்ததும் படகு நின்றது. அப்படி நின்று சிறிது நேரமான பின்னரும் கூட அவளுக்கு மற்றவர்கள் நினைவூட்டிய பின்தான் கரையை அடைந்திருப்பது கவனத்தில் பதிந்தது.

 

    • படகிலிருந்து இறங்கி மைய மண்டபத் தீவில் கால் வைப்பதற்கே பதறியது ராணி மங்கம்மாளுக்கு. “குழந்தையைக் கீழேயே வைத்துக் கொண்டிருந்து சுற்றிக் காட்டு! போதும்.. மைய மண்டபக் கோபுரத்துக்கெல்லாம் கொண்டு போக வேண்டாம்” என்று மங்கம்மாள் அலர்மேலம்மாளை எச்சரித்து வைத்தாள்.

 

    • என்ன காரணத்தால் ராணி அன்று அவ்வளவு அதிக எச்சரிக்கை எடுத்துக் கொள்கிறாள் என்பதை அறிய முடியாமல் அலர்மேலம்மாளும், மற்றவர்களும் வியப்படைந்தார்கள்.

 

    • வழக்கமாக அந்தக் தெப்பக் குளத்திற்கு வரும் போதெல்லாம் மைய மண்டபக் கோபுரத்தில் உச்சி வரை ஏறி, மதுரை நகரையும் கோயில்களையும் கோபுரங்களையும் ஒரு சேரக் காண முடிந்த வாய்ப்பையும் வசதியையும் இழக்காத ராணி இம்முறை ஏன் கோபுரத்தில் கண்டிப்பாக ஏறக்கூடாது என்கிறாள் என்பது அவர்களுக்குப் புரியாத மர்மமாகவே இருந்தது.

 

    • பொழுது சாய்ந்து இருட்டுகிற வரை அவர்கள் தெப்பக் குளத்தின் மைய மண்டபத்திலேயே இருந்துவிட்டுத் திரும்பியிருந்தார்கள். அந்த அழகிய நீராழி மண்டபத்திற்கு வருவதற்கும், அது அமைந்த தீவிலிருந்து சுகமான மாலைக் காற்றை அனுபவிப்பதற்கும் எப்போதுமே அதிக ஆர்வம் காட்டும் ராணி ஏன் இம்முறை நிம்மதியற்றுப் போய் அங்கு நேரத்தைக் கழித்தாள் என்பதையும் யாராலும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. எல்லாரும் அரண்மனைக்குத் திரும்பிய பின்னரும் கூட அந்த நிலையே நீடித்தது. திடீரென்று ராணியின் மனத்தில் என்ன நேர்ந்து விட்டது என்பது யாருக்குமே புரியாத புதிராக இருந்தது. தெப்பக்குளத்திலிருந்து திரும்பிய பின் இராப்போஜனத்திற்காக அவள் செல்வதற்கு முன் முற்றிலும் எதிர்பாராத விதமாக இராயசமும் பிற பிரதானிகளும் அவசர அவசரமாக ராணி மங்கம்மாளைச் சந்திக்க வந்தனர். காரியம் ஏதோ மிகமிக அவசரமானதாகவும் முக்கியமானதாகவும் இருக்க வேண்டுமென்று தோன்றியது அவளுக்கு.

 

    • சில நாட்களுக்கு முன் ஒரிரவு வைகறை வேளையில் கண்ட கெட்ட சொப்பனத்தின் விளைவாக ஏதேனும் கெடுதல் புதிதாக வந்திருக்குமோ என்ற தயக்கத்துடனேயே அவள் அவர்களை எதிர்கொண்டாள். இராயசத்தைக் கேட்டாள்:

 

    • “விளக்கு வைக்கிற நேரத்துக்குத் தேடி வந்திருக்கிறீர்கள்! காரியம் மிக மிக அவசரமானதாகவும், முக்கியமானதாகவும் இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.”

 

    • “உங்கள் அநுமானம் ஒரு சிறிதும் தவறில்லை மகாராணி!”

 

    • “காரியம் என்னவென்று இன்னும் நீங்கள் வாய்விட்டுச் சொல்லவில்லையே?”

 

    • “சொல்லத்தானே வந்திருக்கிறோம் மகாராணீ! நாடு பிடிக்கும் பேராசையால் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் மோசம் செய்து விட்டான்.”

 

    • “என்ன நடந்து விட்டது?”

 

    • வந்தவர்கள் பதில் சொல்வதற்கு ஓரிரு கணங்கள் தயங்கினாற் போலப் பட்டது. அதற்குள் ராணி மங்கம்மாளின் மனத்தில் இருந்த குழப்பம் அதிகமாகி வளர்ந்தது.

 

    • ————

 


 

18. சேதுபதியின் சந்திப்பு 

    • மதுரைப் பெருநாட்டைச் சேர்ந்தவையும் அப்போது ராணி மங்கம்மாளின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தவையுமான சேலம், கோயமுத்தூர்ப் பகுதிகளைக் கவனித்துக் கொண்டிருந்த சிற்றரசர்களை மெல்ல மெல்ல அடக்கித் தன் வசப்படுத்திக் கொண்டு அப்பகுதிகளின் மூலமாகப் படை எடுத்துத் திரிசிரபுரத்தை முற்றுகையிட்டிருந்தன மைசூர்ப்படைகள். எதிர்பாராத அபாயமாக இது நேர்ந்திருந்தது.

 

    • அப்போது மைசூர் அரசன் சிக்க் தேவராயனின் படைத் தலைவர்களில் மிகவும் சாமர்த்தியசாலியான குமரய்யாவின் தலைமையில் இந்தப் படையெடுப்பு நடந்திருக்கிறது.

 

    • வடக்கே மைசூரிலிருந்து வழி நெடுகிலுமுள்ள சிற்றரசர்களின் ஒத்துழைப்போடு படையெடுப்பு நடந்ததன் காரணமாக மிகவும் இரகசியமாகவே எல்லாக் காரியங்களும் முடிந்திருந்தன.

 

    • குமரய்யாவும், அவனது படைகளும் திரிசிரபுரம் வந்து கோட்டையை வளைத்துக் கொண்டு முற்றுகையிடுகிறவரை அந்தப் படையெடுப்புத் தகவல் பரம இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

 

    • இராயசமும் மற்றவர்களும் அந்தத் தகவலைத் தன்னிடம் வந்து கூறியபோது ராணி மங்கம்மாளுக்கு ஓரிரு கணங்கள் அதிர்ச்சியாகத் தானிருந்தது. மங்கம்மாள் அவர்களை வினவினாள்:

 

    • “இப்படிப் பலகாத தூரம் படை நடத்தி வந்து குமரய்யாவும் அவன் படைவீரர்களும் திரிசிரபுரத்தைப் பிடிக்கிறவரை நம் ஒற்றர்களும் ராஜ தந்திரிகளும் தூங்கிக் கொண்டா இருந்தார்கள்?”

 

    • “வழி நெடுகிலும் உள்ள சிற்றரசர்களின் ஒத்துழைப்போடு குமரய்யாவும் அவனுடைய ஆட்களும் திவ்ய தேசயாத்திரை செல்லும் தேசாந்திரிகளைப் போல முன்னேறி வந்து விட்டார்கள். இளவரசரும் சின்னராணி முத்தம்மாளும் அடுத்தடுத்துக் காலமான துயரத்தினாலும் கவலையாலும் நாம் தளர்ந்திருந்தோம். திரிசிரபுரத்திலிருந்து மதுரைக்கு வேறு வந்து விட்டோம்.”

 

    • “இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.”

 

    • “சில சமயங்களில் எதிர்பார்த்தபடி நடப்பதில்லை. எதிர்பாராதபடி ஏதாவது நடந்து விடுகிறது மகாராணீ!”

 

    • “எதிர்பார்க்க முடிந்த அபாயங்களுக்கு ஆயத்தமாக இருக்க வேண்டியதோடு எதிர்பாராத அபாயங்களுக்கும் ஆயத்தமாக இருக்க வேண்டியது என் கடமை.”

 

    • “உண்மைதான் மகாராணீ! ‘திரிசிரபுரம் கோட்டையை வளைத்து வெற்றி கொள்ளாமல் மைசூருக்குத் திரும்ப மாட்டேன்’ என்று சிக்க தேவராயனிடம் சூளுரை கூறிய பின்பே குமரய்யா படைகளோடு புறப்பட்டிருக்கிறான் என்கிறார்கள். எப்படியோ இது நேர்ந்துவிட்டது. சமாளித்தாக வேண்டும்.”

 

    • “பேசிக் கொண்டிருக்கவோ திட்டமிட்டுக் கொண்டிருக்கவோ நேரமில்லை. உடன் முற்றுகையை எதிர்த்துப் போரிட வேண்டும்” என்றாள் ராணி மங்கம்மாள்.

 

    • மதுரையிலிருந்தும் மற்ற இடங்களிலிருந்தும் படைகள் ஆயத்தமாயின. படைத் தலைவர்கள் போர்க்கோலம் பூண்டனர். படைகள் திரிசிரபுரம் நோக்கி விரைந்தன.

 

    • நல்ல வேளையாக ராணி மங்கம்மாளின் நல்வினைவயத்தால் மலைபோல வந்த துயரம் பனிபோல் நீங்கிற்று.

 

    • குமரய்யா படைகளுடன் திரிசிரபுரத்தைப் பிடிக்க வந்த சமயத்தில் மைசூரை மராத்தியர்கள் எதிர்பாராத விதமாகத் தாக்கவே, குமரய்யாவும் அவனுடன் வந்த பெரும் படையினரும் உடனே மைசூருக்குத் திரும்ப வேண்டியிருந்தது. மைசூருக்குத் திரும்பாத எஞ்சிய வீரர்களைத் திரிசிரபுரம் கோட்டையிலிருந்தவர்களே அடித்துத் துரத்தி விட்டார்கள். இந்தத் தகவல் தெரியச் சில நாட்கள் ஆயின. அதுவரை கவலையோடு இருந்த ராணி மங்கம்மாள் இது தெரிந்ததும் நிம்மதியடைந்தாள்.

 

    • திரிசிரபுரத்திற்கு அனுப்பிய பெரும்படையை வீணாக்காமல் எந்தப் படையெடுப்பிற்காவது பயன்படுத்தியாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. மைசூர்ப் படைத்தலைவன் குமரய்யாவும், அவனது வீரர்களும் இப்படித் திடீரென்று திரும்பி ஓடுவார்கள் என்று எதிர்பார்க்காததால் பெரும் படையைப் பல திசைகளிலிருந்தும் திரட்டியிருந்த ராணி மங்கம்மாளின் தளபதிகள் அந்தப் படை வீரர்களின் உத்வேகத்தை அப்படியே முடக்கிவிடாமல் உடனே எதற்காவது உபயோகப்படுத்தியாக வேண்டும் என்பது உணரப்பட்டதைத் தெரிவித்தார்கள்.

 

    • படைகள் திரிசிரபுரத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போதே இங்கே தமுக்கம் ராஜ மாளிகையில் ஆலோசனை நிகழ்ந்தது.

 

    • “அவசரமாக நாலுகால் பாய்ச்சலில் ஓடப் புறப்பட்ட குதிரையைத் தடுத்து நிறுத்தியது போல் ஆகிவிட்டது மகாராணீ! குமரய்யாவின் முற்றுகையைத் தகர்க்க வேண்டுமென்று திரிசிரபுரத்துக்குத் திரட்டி அனுப்பிய படைகள் குமரய்யா மைசூருக்கு ஓட்டமெடுத்து விட்டதால் ஏமாற்றத்தோடு திரும்பி வருகின்றன! திரும்பி வருகிற படைகளுக்கு வேலை கொடுத்தாக வேண்டும்” என்றார் இராயசம்.

 

    • ராணி மங்கம்மாள் யோசித்தாள். இராயசமும் பிரதானிகளும் ராணி என்ன சொல்லப் போகிறாளோ என்று காத்திருந்தனர். ராணி மங்கம்மாள் பேச ஆரம்பித்தாள்.

 

    • “மராத்தியர்கள் மைசூரைத் தாக்கத் தொடங்கியது நல்லதாயிற்று. மைசூருக்கு ஆபத்து வந்திருக்கவில்லையானால் குமரய்யா படைகளோடு திருச்சி முற்றுகையை விட்டுவிட்டு ஓடியிருக்க மாட்டான். குமரய்யா ஓடியதால் இப்போது இந்தப் படைகளுக்கு வேறு ஒரு பொன்னான வாய்ப்புக் கிடைக்கப் போகிறது.”

 

    • “அது என்ன வாய்ப்பு என்பதை மகாராணியார் சொல்லியருள வேண்டும்.”

 

    • “சொல்கிறேன். முன்னோர்களின் காலத்திலேயே திருவாங்கூர் மன்னன் வேண்டாவெறுப்பாக நமக்குத் திறை செலுத்தி வந்தான். இப்போது அதுவும் நின்று போயிற்று. இங்கு இன்று நிலவுகின்ற வலிமையற்ற அரசியல் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமானதாகக் கருதிக்கொண்டு நமக்குச் செலுத்திக் கொண்டிருந்த திறைப் பணத்தை நிறுத்திவிட்டான். பெண் ஆள்வதால் மதுரைச் சீமையை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்ற நினைப்பைப் பொறுத்துக் கொள்வதற்கில்லை! திருவாங்கூர் மேல் படையெடுத்தாவது திறை வாங்கியாக வேண்டும்.”

 

    • “அருமையான யோசனை. ரவிவர்மன் மேல் படையெடுத்துச் சென்று அவனுக்குப் பாடம் புகட்டுவதன் மூலம் நம்மை வலிமை குறைந்தவர்களாக நினைக்கும் மற்றவர்களுக்கும் எச்சரிக்கை செய்தது போலிருக்கும்! இந்தப் படையெடுப்பு யோசனை சமயோசிதமானது.”

 

    • “சமயோசிதமானது மட்டும் இல்லை! இராஜதந்திரம் நிறைந்தது. இதைப் பார்த்த பின்பாவது மைசூரை ஆளும் சிக்க தேவராயனுக்குத் திரிசிரபுரம் கோட்டையைப் பிடிக்கும் பேராசை தோன்றாமல் இருக்கட்டும். நம்மைக் குறைத்து மதிப்பிடுகிறவர்களுக்கு நாம் யாரென்பது புரியட்டும்.”

 

    • – ராணி மங்கம்மாளின் கட்டளைப்படியே திரிசிரபுரத்திலிருந்து திரும்பிய படைகள் நேராகத் திருவாங்கூரை நோக்கித் திசை திரும்பின.

 

    • உடனே திரிசிரபுரம் கோட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டன. வீரர்களின் எண்ணிக்கை அதிகமாயிற்று.

 

    • மதுரைப் பெருநாட்டின் ஆட்சி வலிமையும், ஆளும் திறமையும் அக்கம் பக்கத்து அரசர்களுக்கும், நாடுகளுக்கும் நன்றாகப் புரியும்படி செய்யப்பட்டது. எல்லாப் பெருமைகளும் ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு பின்னிரவில் கண்ட அந்தக் கெட்டச் சொப்பனம் முறிந்த முள்ளாக ராணியின் மனத்திற்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. சோதிடர்களையும் பெரியவர்களையும் கூப்பிட்டுக் கனவை அதிகமாக விவரிக்காமல் பரிகாரம் செய்ய மட்டும் வழிகளைக் கேட்டறிந்தாள். பரிகாரங்களைச் செய்தாள் மங்கம்மாள்.

 

    • சில மாதங்களில் தெற்கே சென்ற படை பெருந்திறைப் பொருளுடனும், வெற்றியுடனும் திரும்பியது. “மகாராணீ! இம்முறை ரவிவர்மனுக்கும், அவனுடைய அமைச்சர் முறையினரான எட்டு வீட்டுப் பிள்ளைமார்களுக்கும் ஒற்றுமை இல்லை. அதனால் நமது வெற்றி மிகவும் எளிதாகிவிட்டது. எட்டு வீட்டுப் பிள்ளைமார்களின் விரோதம் நீடிக்கிறவரை நம் திறைப்பணம் ஒழுங்காகக் கிடைக்கும். எட்டு வீட்டுப் பிள்ளைமார்களை அழித்து ரவிவர்மன் கை ஓங்கினாலோ, எட்டு வீட்டுப் பிள்ளைமார்களும் அவனும் ஒற்றுமை அடைந்து விட்டாலோ ஒரு வேளை மறுபடி நம்மைப் புறக்கணிக்கும் துணிவு அவர்களுக்கு வரலாம்!” என்று படைத் தளபதி திருவாங்கூர் நிலைமையை விவரித்தான்.

 

    • மங்கம்மாள் தன் காலத்தில் மதுரைப் பெருநாட்டுக்குத் திறைப்பணம் செலுத்தாத மறவர்களைப் பற்றி நினைத்த போது கிழவன் சேதுபதி முதலில் நினைவிற்கு வந்தார். மறவர் நாட்டைச் சுயாதீனமாக ஆளத் தொடங்கியிருந்தார் அவர்.

 

    • சேதுபதி மேல் படையெடுப்பதைவிட முதலில் ஓர் எச்சரிக்கை ஓலை அனுப்பிப் பார்க்கலாம் என்று ராணி மங்கம்மாள் நினைத்தாள்.

 

    • இராயசத்தையும், பிரதானியையும் கலந்து பேசி ஓர் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பினாள். சேதுபதியிடமிருந்த சில நாட்களில் ஒரு தூதன் மூலம் வாய் வார்த்தையாகப் பதில் கிடைத்தது.

 

    • “மன்னர் சேதுபதி விரைவில் கூடல்மாநகருக்கு வருவார். அப்போது தங்களைக் கண்டு பேசுவார்.”

 

    • தான் எழுதி அனுப்பிய ஓலையை மதித்துப் பதில் ஓலைகூட எழுதியனுப்பாமல் சேதுபதி தட்டிக்கழிப்பது புரிந்தது. சேதுபதி மதுரை நாட்டையோ, மங்கம்மாளின் ஆட்சியையோ இலட்சியம் செய்ததாகவே தெரியவில்லை.

 

    • படையெடுக்கலாம் என்றால், ‘சேதுபதி விஷயத்தில் சிறிதும் அவசரப்படக்கூடாது!’ என்று இராயசமும் பிரதானிகளும் எச்சரித்தனர். பழைய உதாரணங்களை எடுத்துக் காட்டினர்.

 

    • சொல்லியனுப்பியபடி சில நாட்களில் சேதுபதி மதுரைக்கு வந்தார். லவாயண்ணலையும் அங்கயற்கண்ணம்மையையும் தரிசனம் செய்து மகிழ்ந்தார். பின்பு தன் பரிவாரங்கள் புடைசூழ ஒரு பேரரசன் மற்றொரு பேரரசியைச் சந்திப்பதுபோல வந்து ராணி மங்கம்மாளைச் சந்தித்தார்.

 

    • அப்போது ராணி மங்கம்மாளோடு இராயசமும், பிரதானிகளும் உடனிருந்தனர். சேதுபதி வழக்கம் போல் பழகினார் எனினும் அதில் ராஜ தந்திரம் இருந்தது. அழுத்தம் இருந்தது. பணிவது போல் பணியாமை இருந்தது.

 

    • மதுரை நாட்டுக்குத் தான் எந்த விதத்திலும் கட்டுப் பட்டிருப்பதாகவோ, திறைப்பணம் செலுத்த வேண்டிய கடமை இருப்பதாகவோ காட்டிக் கொள்ளாமல் உரையாடினார் அவர்.

 

    • “மீனாட்சியையும், சொக்கரையும் தரிசித்து அதிக நாளாயிற்று அம்மா! தரிசித்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்.”

 

    • “இந்த வயதான காலத்தில் இப்படிப் பிரயாணங்கள் உங்களுக்கு ஒத்துக் கொள்கிறதா?”

 

    • “உங்களைப் போல் யாராவது இப்படி நினைவூட்டிப் பேசினால்தான் எனக்கு வயதாகியிருப்பதே தெரிகிறது. என்னைப் பொறுத்தவரை என் வயதே எனக்கு நினைவிருப்பதில்லை.”

 

    • “வயது ஒன்றுதானா? உங்களுக்குப் பல விஷயங்கள் மறந்து விடுகின்றன. நினைவிருப்பதில்லை…”

 

    • “எனக்கா? நான் சிலவற்றை மறப்பதில்லை; சிலவற்றை நினைப்பதே இல்லை. நினைப்பதும் மறப்பதும் என்னை மீறி எனக்குள் நடக்காது.”

 

    • கிழவன் சேதுபதியின் பதிலில் உறுதியும் உரமும் உள்ளடங்கிய ஆத்திரமும் ஒலித்தன். எப்படி முயன்றும் தன் மனத்தாங்கலை அந்தக் கிழட்டுச் சிங்கத்திடம் தெரிவிக்க முடியவில்லையே என்று தவித்தாள் அவள். ராணி மங்கம்மாள் திறைப்பணத்தை நினைவூட்டி ஜாடைமாடையாகப் பேசிய எந்தப் பேச்சுக்குமே பிடிகொடுக்காமல் பேசினார் சேதுபதி. புரிந்து கொண்டே அதைச் சாதுர்யமாகத் தவிர்த்தார்.

 

    • “உங்கள் மனத்தில் பல குழப்பங்கள் இருப்பது தெரிகிறது. ஒரு முறை புறப்பட்டு வந்து சேதுஸ்நானம் செய்து இராமேஸ்வர தரிசனம் பண்ணினால் எல்லாம் சரியாகிவிடும்! சேதுநாட்டின் அரசன் என்ற முறையில் உங்களை அழைப்பதில் மகிழ்கிறேன்” என்று தன்னுடைய சுயாதீனத்தை மறைமுகமாக வற்புறுத்தியே பேசிக் கொண்டிருந்தார் சேதுபதி.

 

    • ஆயிரம் இருந்தாலும் விருந்தினராக வந்திருக்கும் ஒரு முதியவரிடம் எப்படிக் கண்டிப்பாகக் கடிந்து பேசுவது என்று புரியாமல் திணறினார்கள் மங்கம்மாளும் இராயசமும்.

 

    • ஆனால் சேதுபதி எதற்கும் திணறவோ திகைக்கவோ செய்யாமல் நிதானமாகவே பேசினார், பழகினார். திறை கேட்கும் நாட்டு மகாராணியிடம் திறை தரமறுக்கும் உறுதியுடன், அதை இனிமையான உபசாரம் பூசிய மாற்று வார்த்தைகளால் மெல்ல மெல்லச் சொல்லிக் கொண்டிருந்தார் கிழவன் சேதுபதி.

 

    • ———–

 


 

19. நம்பிக்கைத் துரோகம் 

    • ராணி மங்கம்மாளால் சேதுபதியை எதுவும் செய்ய முடியவில்லை. அசைக்க முடியாத கருங்கல்லாக இருந்து விட்டார் அவர். ராணி மங்கம்மாளிடம் அடங்கிக் கப்பம் கட்டாததால் தான் தவறு செய்கிறோம் என்ற உணர்வே சேதுபதியிடம் இல்லை. இயல்பாகத் தான் இருக்க வேண்டிய நிலையே கப்பம் கட்டாமல் இருப்பது தான் என்பது போல் வாளா இருந்தார் அவர். அவரை நிர்ப்பந்தப்படுத்தவோ ராணி மங்கம்மாளின் ஆட்சிக்குத் தாம் கடமைப்பட்டிருப்பதாக உணர்த்தவோ முடியவில்லை.

 

    • கட்டுப்பட்டிருக்கிறோம் என்பதே புரியாத ஒருவரை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று அறியாமல் திணறினாள் அவள். மங்கம்மாளின் கணவர் சொக்கநாத நாயக்கரின் இறுதிக் காலத்திலேயே ஏறக்குறைய அந்த மனநிலைக்கு வந்திருந்தார் அவர். ஆட்சி மங்கம்மாளிடமும், ரங்ககிருஷ்ணனிடமும் வந்த போது கிழவன் சேதுபதியிடமும் அந்த உணர்வு உறுதிப்பட்டிருந்தது. ரங்ககிருஷ்ணனும் மறைந்த பின்னர் எதற்கும் யாருக்கும் கட்டுப்படாத சுதந்திரத் திளைப்பில் இருந்தார் அவர்.

 

    • ராணி மங்கம்மாள் கூப்பிட்டு அனுப்பிக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வந்தவர்போல் அல்லாமல் அரச குடும்பத்து விருந்தினர் போல சில தினங்கள் வந்து மதுரையில் தங்கிவிட்டு அப்புறம் புறப்பட்டுச் சென்றார் கிழவன் சேதுபதி. அவரை யாராலும் அப்போது எதுவும் செய்ய முடியவில்லை.

 

    • மங்கம்மாள் மதுரை மாநகரில் தங்கியிருந்த ஆண்டுகளில் புதிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. மறவர் சீமையைத் தனி நாடாக்கிக் கொண்டதைத் தவிர வேறுவகை அத்து மீறல்களைச் சேதுபதி செய்யவில்லை என்பதே திருப்தியாக இருந்தது. திருவாங்கூர் மன்னன் ரவிவர்மன்கூட ஆண்டுதோறும் மதுரையிலிருந்து படைகளை அனுப்பிக் கொள்ளையிடப் போவது போல மிரட்டினால்தான் திறைப்பணம் கட்டுவதென்று வைத்துக் கொண்டிருந்தான். அவன் தானாக முன்வந்து கட்டவில்லை என்பதே ராணி மங்கம்மாளுக்கு எரிச்சலூட்டியது. மதுரைப் படைகளைக்கூட அவன் மதிப்பதற்கும் கண்டு மிரளுவதற்கும் வேறு ஒரு காரணம் இருப்பதாகத் தோன்றியது.

 

    • ரவிவர்மனது ஆட்சிக்கு அமைச்சர் முறையுடையவர்களாகிய எட்டு வீட்டுப் பிள்ளைமார்களின் ஓயாத விரோதத்தால் அவன் மதுரைப் படைகளை எதிர்க்கும் ஆற்றலின்றி இருந்தான். உள்நாட்டுக் கலகமும், அருகிலேயே உடனிருக்கும் தொல்லைகளுமே அவனை அவனது எதிரிகள் முன் வலுவிழக்கச் செய்திருந்தன.

 

    • இந்தச் சூழ்நிலை மங்கம்மாளுக்குச் சாதகமாயிருந்தது. எட்டுவீட்டுப் பிள்ளைமார்கள் அமைச்சர்கள் என்ற முறையில் தங்களுக்குள் ஒற்றுமையின்றி இருந்தனர். ரவிவர்மனை எதிர்க்கும்போது மட்டும் ஒருவிதச் செயற்கையான ஒற்றுமை நிலவியது அவர்களிடையே. அரசனும் வலுவிழந்து போயிருந்தான். அவனை ஆட்டிப் படைத்த அமைச்சர்களும் ஒற்றுமை குலைந்து திரிந்தனர். இதனால் ‘பாண்டிப்படை’ என அவர்களால் அழைக்கப்பட்ட மதுரைப்படை எப்போது படை எடுத்து வந்தாலும் அதற்குக் கொண்டாட்டமாயிருந்தது. திருவாங்கூர் மக்களைக் கொள்ளையடிக்கவும் சூறையாடவும் முடிந்தது.

 

    • பாண்டிப்படை வீரர்கள் ராணி மங்கம்மாளுக்குக் கிடைக்க வேண்டிய திறைப்பணத்தையும் வாங்கினர். தங்களுக்கு வேண்டியதையும் அபகரித்து மகிழ்ந்தனர். நீண்ட காலமாக இப்படியே நடந்து வந்தது. திருவாங்கூருக்குப் படை எடுப்பு என்றாலே வீரர்கள் மகிழ்ச்சியால் துள்ளினர்.

 

    • இப்படி ஆட்சிச் சூழ்நிலையினாலும் எல்லைப்புறச் சிக்கல்களாலும் ராணி மங்கம்மாள் மதுரைநகரிலும், திரிசிரபுரத்திலுமாக மாறி மாறி இருந்து வந்தாள்.

 

    • சில ஆண்டுகளுக்குப்பின் இதே போலத் திருவாங்கூருக்கு அனுப்பிய மதுரைப் படைகள் முற்றிலும் எதிர்பார்த்திராத ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ள நேர்ந்து விட்டது. பாண்டிப் படை வீரர்கள் திருவாங்கூருக்குப் போகிறார்கள் என்றால் எந்த விதமான தொல்லையுமில்லாமல் வெற்றியோடும் திறைப் பணத்தோடும் திரும்புகிறார்கள் என்றிருந்த நிலைமை திடீரென்று மாறியது. மதுரைப் படைகள் கல்குளம் என்னும் தலைநகர எல்லையை அடைகிற வரை எந்தத் திருவாங்கூர் படை வீரனும் எதிர்க்க வரவில்லை. ஒவ்வொரு முறையும் பேருக்காவது சிறிது எதிர்ப்பு இருக்கும். அந்த எதிர்ப்பும் திருவாங்கூர் அரசின் எல்லையைப் படைகள் அடைந்தவுடனேயே இருக்கும். இந்தத் தடவை ராஜதானியின் பிரதான வாயில் வரை எதுவும் கேள்வி முறையில்லாமல் போகவே சந்தேகமாயிருந்தது.

 

    • கல்குளம் கோட்டை வாயில் கதவுகள் கூட அகலத்திறந்து வைக்கப்பட்டிருந்தன. மதுரைப் படைத்தலைவனும் வீரர்களும் தயங்கினர்.

 

    • “தயக்கம் எதற்கு? வருக! வருக! மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். மலர்ச்சியோடு வரவேற்கிறோம்.”

 

    • இப்படி இந்தக் குரலைக் கேட்டுத் திகைப்புடன் பார்த்த போது கோட்டைக் கதவருகே மன்னன் ரவிவர்மனே புன்னகையோடு நின்று கொண்டிருந்தான். விருந்தாட வந்த உறவினர்களை வரவேற்பது போல மதுரைப் படைத் தலைவனையும் படைவீரர்களையும் இருகரம் நீட்டி அன்பாகவும் ஆதரவாகவும் வரவேற்றான் ரவிவர்மன். படை வீரர்களுக்கு நடந்து வந்த களைப்புத்தீர உபசாரங்கள் நடந்தன. படை வீரர்கள் கோட்டைக்குள்ளேயே தங்க வைத்துக் கொள்ளப் பட்டார்கள்.

 

    • படைத் தலைவனை இரவிவர்மனே உடனழைத்துச் சென்று ராஜோபசாரம் செய்தான். பெரிதாகப் பீடிகை போட்டுக் கொண்டு ஆரம்பித்தான்:

 

    • “இம்முறை நீங்கள் மதுரைப் பெருநாட்டுக்குச் சேர வேண்டிய திறைப் பொருளைப் பெற்று, செல்ல வந்ததாக மட்டும் நினைக்காதீர்கள்! மதுரைப் பெருநாட்டின் மேலாதிக்கத்தையும் என்னையும் பிடிக்காத சிலரை ஒழித்துக் கட்டவும் உங்கள் உதவி எனக்குத் தேவை. என்னுடைய ஜன்ம எதிரிகளான எட்டுவீட்டுப் பிள்ளைமார்களைத் தொலைத்தாக வேண்டும். மதுரைப் படைத் தலைவராகிய நீங்கள் வருஷந்தவறாமல் இங்கு என்னைத் தேடி வந்து திறைப்பணம் வாங்கிச் செல்கிறீர்கள். இப்படி நேராமல் ஆண்டு தோறும் திறைப் பணமே உங்கள் இருப்பிடத்திற்குத் தேடி வந்து விடும்படியாகச் செய்ய என்னால் முடியும். என்னைத் தலையெடுக்கவே விடாமல் இடையூறுகள் செய்து கொண்டிருக்கும் எட்டு வீட்டுப் பிள்ளைமார்களை அழிப்பதற்கு ஒத்துழைத்தீர்களானால் நான் அதைச் செய்து விடுவேன்.”

 

    • “கப்பம் கட்டுகிறேன் என்று வார்த்தையையே காப்பாற்றாத நீங்கள், இந்த வார்த்தையை மட்டும் காப்பாற்றுவீர்க்ள் என்பது என்ன உறுதி? உங்களை எப்படி நம்புவது?”

 

    • “மதுரை நாட்டுக்குக் கப்பம் கட்டுவது மட்டுமில்லை! நான் சொல்கிறபடி நீங்கள் ஒத்துழைத்தால் என்னுடைய அரசாட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சரிபாதிப் பகுதியையே மதுரைப் பெருநாட்டுக்கு வழங்குவேன்.”

 

    • “உங்கள் வாக்குறுதியை நான் நம்புகிறேன் என்றே வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான உங்கள் நிபந்தனையை எப்படி நிறைவேற்றுவது? உங்கள் உதவியும் யோசனையும் இன்றி எட்டு வீட்டுப் பிள்ளைமார்களை நாங்கள் எப்படி ஒழிக்கமுடியும்?”

 

    • “கவலை வேண்டாம்! அந்தப் பாவிகளை எப்படி ஒழித்துக்கட்டுவது என்பதற்காக நீண்ட யோசனைக்குப் பின் ஒரு திட்டமே போட்டு வைத்திருக்கிறேன்.”

 

    • திருவாங்கூர் மன்னன் – ரவிவர்மனின் வேண்டுகோளுக்குச் செவி சாய்ப்பதா? தவிர்ப்பதா? என்று சிந்தித்துத் தயங்கினான் மதுரைப் படைத் தலைவன். வெறும் திறைப் பொருளைக் கொண்டு போய்ச் சேர்த்தாலே மகிழக்கூடிய ராணிக்குத் திருவாங்கூர் ராஜ்யத்தில் பாதியையும் ஆளும் உரிமையைக் கொண்டு போய்க் கொடுக்கிற நிலை வந்தால் தன் பெருமை உயரும் என்று படைத் தலைவனுக்கு ஆவலாகவும் இருந்தது. முயற்சி தோற்று வம்பிலே சிக்கிக் கொண்டால் ராணியிடம் தன் பெயர் கெட்டு விடுமே என்று தயக்கமாகவும் இருந்தது. தன்னுடைய பங்காளிகளை அழிப்பதற்கு எதிரியின் உதவியை வேண்டும் ரவிவர்மனின் இந்த மனப் பான்மையை வியந்தான் மதுரைப் படைத் தலைவன். அவனால் உடனடியாக ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. சிந்தித்துத் தயங்கினான்.

 

    • சிந்தனையின் முடிவில் ஆசைதான் வெற்றி பெற்றது. திறைப் பொருளோடு, திருவாங்கூர் ராஜீயத்தில் பாதியை ஆளும் உரிமையையும் பெற்றுக் கொண்டு போய் மகாராணியை மகிழ்ச்சிகரமான திகைப்பில் ஆழ்த்த வேண்டும் என்று முடிவு செய்தான் படைத்தலைவன். ரவிவர்மன் தன் திட்டத்தை விளக்கமாகக் கூறலானான்.

 

    • “கோட்டையை உங்கள் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு போகிறாற் போல நான் ஒதுங்கிப் போய்க் கொண்டு எட்டு வீட்டுப் பிள்ளைமார்களைத் தந்திரமாக உள்ளே வரச் செய்கிறேன். அவர்களை உள்ளே வரவழைப்பதற்கு ஒரு கவர்ச்சியாக ஆட்சியையும், கோட்டையையும் அவர்கள் பாதுகாப்பில் விட்டு விடுவது போல பாவனை காண்பித்து ஏமாற்றப் போகிறேன். அவர்கள் அதை நம்பி உள்ளே வந்ததும் மறைந்திருக்கிற நீங்களும் உங்கள் படைகளும் அவர்களைத் திடீரென்று தாக்கிக் கொன்று தீர்த்துவிடலாம்….”

 

    • “அதெல்லாம் சரி! அவர்கள் உங்களை நம்பிக் கோட்டைக்குள் வருவார்களா?”

 

    • “பதவியும் ராஜ்யமும் கோட்டைப் பொறுப்பும் கிடைக்கிறதென்றால் விழுந்தடித்துக் கொண்டு உள்ளே வரத் தயங்கமாட்டார்கள்!”

 

    • “நாங்கள் திறைப்பணத்தைப் பெற்று முடித்துக் கொண்டு படைகளுடன் இரவோடிரவாக மதுரைக்குத் திரும்பி விட்டதாக எட்டு வீட்டுப் பிள்ளைமார்களிடம் முதலில் அவர்கள் நம்பும்படியாக ஒரு பொய்யை நீங்கள் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் எங்களை நினைத்துப் பயந்து அவர்கள் கோட்டைக்குள் வரத் தயங்கிவிடக் கூடும். ஜாக்கிரதை!”

 

    • “அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். எட்டு வீட்டுப் பிள்ளைமார்களைக் கூண்டோடு கோட்டைக்குள் அனுப்ப வேண்டியது என் பொறுப்பு! அவர்கள் மறுபடி கோட்டைக்குள்ளேயிருந்து வெளியே உயிரோடு வராமல் கூண்டோடு அழித்துவிட வேண்டியது உங்கள் பொறுப்பு” என்றான் ரவிவர்மன். மதுரைப் படைத்தலைவன் சம்மதித்தான்.

 

    • திட்டமிட்டபடி எல்லாம் நடந்தன. இருளில் எட்டு வீட்டுப் பிள்ளைமார்கள் கல்குளம் அரண்மனையைக் கைப்பற்றி ஆளும் ஆசையுடன் கோட்டைக்குள் நுழைந்த போது மறைந்திருந்த மதுரைப் படை திடீரென்று பாய்ந்து அவர்களைத் தாக்கியது. எதிர்பாராத அந்தத் தாக்குதலினால் அவர்கள் பதறி நிலைகுலைந்தனர். எதிர்த்துத் தாக்குவதற்கு அவர்களிடம் ஆட்கட்டோ ஆயுத பலமோ இல்லை. மதுரைப் படைவீரர்கள் எட்டு வீட்டுப் பிள்ளைமார்களின் ஆட்களில் பலரைக் கொன்றுவிட்டார்கள். எஞ்சிய மிகச் சிலர் தப்பி ஓடிவிட்டார்கள். மந்திரம் போட்டு அடக்கியது போல எட்டு வீட்டுப் பிள்ளைமார்களின் கொட்டம் இரவோடிரவாக ஒடுங்கி விட்டது. பிழைத்தவர்கள் தப்பி ஓடிவிட்டார்கள். மதுரைப் படை வீரர்களும் தலைவனும் வெற்றி ஆரவாரத்துடனும், மகிழ்ச்சியுடனும் கோட்டைக்குள் ரவிவர்மனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர்.

 

    • ஆனால் பொழுது விடிவதற்குள் எதிர்பார்த்தது நடக்க வில்லை. எதிர்பாராத்து நடந்துவிட்டது. கோட்டைக்குள் மதுரைப்படை வீரர்களை வைத்துவிட்டு வெளியேறியிருந்த ரவிவர்மன் வெளியே போய்த் தன் ஆட்களை அதிக அளவில் திரட்டியிருந்தான். வேறு விதமான ஆசை அவனுக்கு உண்டாயிற்று. தன்னிடம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி மதுரைப் படைத் தலைவனும் படைகளும் எட்டு வீட்டுப் பிள்ளைமார்களை அழித்துத் துரத்திய பின் ரவிவர்மன் மதுரைப் படையையும் தொலைத்துவிட்டு ஏமாற்ற எண்ணினான். மதுரைப் படைத் தலைவனுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதியைக் காற்றிலே பறக்க விட்டான். ஆயத்த நிலையில் இல்லாதிருந்த மதுரைப் படைகளைப் பின்னிரவில் தன் ஆட்களோடு திடீரென்று கோட்டைக்குள் புகுந்து தாக்கத் தொடங்கினான் ரவிவர்மன்.

 

    • இதை முற்றிலும் எதிர்பாராத மதுரை நாட்டுப் படைவீரர்களும் அவர்கள் தலைவனும் திணறிப் போனார்கள். தீட்டிய மரத்திலேயே பதம் பார்த்த கதையாக முடிந்துவிட்டது. தனது நிரந்தர எதிரியாகிய எட்டு வீட்டுப் பிள்ளைமார்களைத் தொலைத்தவுடன் அதற்குப் பேருதவி புரிந்தவர்களாகிய பாண்டிப் படைகளையும் தொலைத்து விடத் துணிந்திருந்தான் ரவிவர்மன்.

 

    • உடனே மதுரைப் படைகளை அழிக்காவிட்டால் கொடுத்த வாக்கின்படி அவர்களுக்கும் பாதி ராஜ்யத்தைத் தர நேருமோ? என்று பயந்தே ரவிவர்மன் இப்படிச் செய்திருந்தான். ‘எட்டு வீட்டுப் பிள்ளைமார்களை அழித்த கையோடு இனி உடனே ஆயுதமேந்திப் போர் புரியும் அளவு எதிரிகள் இல்லை’ – என்ற நம்பிக்கையோடு உறங்க முற்பட்டிருந்த மதுரைப் படைகள் இரவிவர்மனின் திடீர்த் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் புறமுதுகிட்டு ஓட நேர்ந்தது. ஓடியவர்களையும் துரத்திக் கொல்லுமளவு கருணையற்றிருந்தான் ரவிவர்மன். பலரை ஈவு இரக்கமின்றிக் கொன்றும் விட்டான். ரவிவர்மனின் இந்தப் பச்சையான நம்பிக்கைத் துரோகம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

    • கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் புறமுதுகிட்டு ஓடிய மதுரைப் படையில் சிலரே மதுரை வரை உயிரோடு திரும்பித் தப்ப முடிந்தது.

 

    • தப்பியவர்கள் மதுரை நகரை அடைந்ததும் ராணி மங்கம்மாள் அப்போது மதுரையில் இல்லை என்பது தெரிந்தது. ராணி விஜயரங்கனோடும் பரிவாரங்களோடும் திரிசிரபுரம் போயிருந்தாள். செய்தியின் அவசரமும் அவசியமும் கருதித் திரிசிரபுரத்திற்குத் தூதர்கள் விரைந்தனர். ரவிவர்மனின் நம்பிக்கைத் துரோகம் ராணி மங்கம்மாளிடம் தெரிவிக்கப்பட்டது.

 

    • ரவிவர்மனின் துரோகம் பற்றிய இச்செய்தி அவளை அடிபட்ட புலியாக்கியது. செய்தியை அவளறிந்த போது நள்ளிரவு. நேரத்தைப் பொருட்படுத்தாமல் உடனே இராயசத்தையும் பிரதானிகளையும் வரவழைத்து ஆலோசனை செய்தாள். தொடர்ந்து என்ன நடவடிக்கை எடுத்து ரவிவர்மனை ஒடுக்குவது என்று அவளும் இராயசம் முதலிய பிரதானிகளும் ஒரு நிச்சயமான முடிவுக்கு வந்தனர்.

 

    • அதிவீர பராக்கிரமசாலியான தளவாய் நரசப்பய்யாவின் தலைமையில் மற்றொரு மாபெரும் படையைத் திருவாங்கூருக்கு அனுப்ப ஏற்பாடாயிற்று.

 

    • “பிறர் செய்யும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளலாம். துரோகத்தைப் பொறுத்துக் கொள்ளமுடியாது – கூடாது” என்று படைகளை அனுப்புமுன் நரசப்பய்யாவிடம் வீர முழக்கமிட்டாள் ராணி மங்கம்மாள். படைகள் நரசப்பய்யாவின் தலைமையில் திரிசிரபுரத்திலிருந்து தெற்கே புயலெனப் பாய்ந்து புறப்பட்டன.

 

    • நம்பிக்கைத் துரோகத்தை எதிர்த்து இரவு பகல் பாராது ராணி மங்கம்மாள் நடத்திய ஆலோசனையால் எதிர்பாராத அபவாதம் ஒன்று மெல்ல மெல்லப் புகைந்தது. ராணி அதைப் பொருட்படுத்தவோ பெரிதுபடுத்தவோ விரும்பவில்லை. ஆனால் வாய்ப்புக் கிடைக்கும்போது உலகம் எப்படிப் பட்டவரை வேண்டுமானாலும் அபவாதத்தில் சிக்க வைத்து விடும் என்பது மட்டும் அதனால் அப்போது அவளுக்கு நன்றாகப் புரிந்தது.

 

    • ———–

 


 

20. அபவாதமும் ஆக்கிரமிப்பும் 

    • கணவனை இழந்து பல நாட்கள் வரை தன்மேல் படராமலிருந்த ஓர் அபவாதம் இப்போது படரத் தொடங்கிவிட்டதை எண்ணி ராணி மங்கம்மாள் மனம் வருந்தினாள். ஊர் வாயை மூட முடியாது. மூடுவதற்குச் சரியான உலை மூடியும் இல்லை என்பதை அவள் இப்போது தான் நன்றாகப் புரிந்து கொண்டாள்.

 

    • மிகவும் அழகாகவும் ஆஜானுபாகுவாகவும் கம்பீரமாகவும் இருந்தது இராயசம் அச்சையாவின் தவறு இல்லை. அவள் கணவனை இழந்த நடுத்தர வயதுப் பெண்ணாக இருந்தாள். பரந்த மார்பும் திரண்ட தோள்களும் அழகிய முகமண்டலமும் உடைய சுந்தர புருஷனாக இருந்தார் அவர்.

 

    • மதுரையில் போய்த் தங்கியிருந்த நாட்களில் தவிர்க்க முடியாத அரசியல் யோசனைகளுக்காக அவர் உடனிருக்க நேரிடும் என்று கருதி அவரையும் அழைத்துச் சென்றிருந்தாள் அவள்.

 

    • மதுரையிலிருந்து திரிசிரபுரம் திரும்பிய பின்பும் திருவாங்கூர் மன்னன் ரவிவர்மன் செய்த நம்பிக்கைத் துரோகத்தை முறியடிப்பதற்காக அவள் இரண்டொரு நள்ளிரவுகளில் இராயசத்தை அரண்மனைக்கு வரவழைக்க நேரிட்டது. அதில் ஒரு நள்ளிரவில் பல்லக்கில்கூடத் திரும்பிச் செல்ல முடியாத அளவு புயலும் அடைமழையும் பிடித்துக் கொண்டுவிட்ட காரணத்தால் இராயசம் அரண்மனையிலேயே தங்கி விடியற்காலையில் சென்றார்.

 

    • ரங்ககிருஷ்ணனும், சின்ன முத்தம்மாளும் உயிரோடிருந்த காலத்தில் கூட இப்படிச் சில தவிர்க்க முடியாத இரவுகளில் இராயசம் அரண்மனையில் தங்க நேரிட்டிருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் இப்படி ஓர் அபவாதமும் வம்பும் கிளம்பியதில்லை.

 

    • இப்போது ராணி மங்கம்மாள் அரண்மனையில் தனியாயிருந்தாள். மகனும் இல்லை. மருமகளும் இல்லை. அபவாதம் உண்டாக வசதியாகப் போயிற்று. நரசப்பய்யாவும் படைகளும் தெற்கே திருவாங்கூரை நோக்கிப் புறப்பட்டுப் போன மறுநாள் காலை ராணி மங்கம்மாள் அரண்மனை நந்தவனத்தில் தன் செவிகளாலேயே அதைக் கேட்டாள். வைகறையில் எழுந்து நீராடி நந்தவனத்தில் திருத்துழாயும் பூக்களும் கொய்யச் சென்ற ராணி மங்கம்மாள் தான் அங்கு வரப்போவது தெரியாமல் தனக்காகப் பூக்கொய்ய வந்திருந்த பணிப்பெண்கள் அங்கு ஏதோ பேசிக்கொண்டு நிற்கவே செடி மறைவில் நின்று அதைக் கேட்கத் தொடங்கினாள். பேச்சு தன்னைப் பற்றியதாகத் தோன்றவே அவள் ஆவல் மேலும் அதிகமாயிற்று.

 

    • “இவ்வளவு அவசரமாகப் பூக்கொய்ய வந்திருக்க வேண்டாமேடீ! இராயசம் இப்போது தான் அரண்மனையை விட்டுப் போகிறார்….”

 

    • கூறி முடித்து விட்டு சிரித்தாள் முதல்பெண்.

 

    • “இந்த இராயசம் அடிக்கொருதரம் எதற்கு இப்படி வந்து வந்து போகிறார்? இங்கேயே தங்கிவிட வேண்டியது தானே. அலர்மேலம்மாள் ராணிக்குக் கட்டுப்பட்டவள். அவளால் எந்த இடையூரும் வரப்போவதில்லை.”

 

    • மறைந்து நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ராணி மங்கம்மாளுக்குத் தீயை மிதித்தது போலாகிவிட்டது. தான் இவ்வளவு அதிகாலையில் எழுந்து நீராடி நந்தவனத்துக்கு வரக்கூடும் என்று ஒரு சிறிதும் எதிர்பாராதபடி அவர்கள் சுதந்திரமாகத் தங்கள் போக்கில் பேசிக் கொண்டிருப்பதாகப்பட்டது அவளுக்கு. அவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்டு அவள் மனம் பதறியது.

 

    • பெரும்பாலான மனிதர்கள் சரியான அல்லது தவறான அனுமானங்களிலேயே வாழ்கிறார்கள் என்பது புரிந்தது. பலர் திரும்பத் திரும்பப் பேசி வதந்தியைப் பரப்புவதாலேயே சில தவறான அனுமானங்கள் கூட மெய்போலப் பரவ முடிகிறது. யாரும் பரப்பாத காரணத்தால் சரியான அனுமானங்கள் பரவாமலே போய்விட முடிகிறது.

 

    • அப்போது தன் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் தனக்குத் தானே அந்தப் பணிப்பெண்கள் பேசியதைப் பற்றி நினைத்துப் பார்த்தாள் ராணி மங்கம்மாள். இராயசம் அச்சையாவின் ஆஜானுபாகுவான நெடிதுயர்ந்த பொன்னிறத் திருமேனியையும், கம்பீரமும் அறிவு ஒளியும் தேஜஸும் நிறைந்த திருமுக மண்டலத்தையும் கண்டு அவள் தன் மனத்திற்குள் அவ்வப்போது மயங்கியதுண்டு. மனத்தளவில் ஈடுபட்டது உண்டு. மனத்தளவில் ஈடுபடுவது என்பது எத்தகைய கட்டுப்பாடுள்ள பெண்ணாலும் தவிர்க்க முடியாதது தான். வெளி உலகில் வீரதீரப் பிரதாபங்கள் மிகுந்த ராஜதந்திரி – சாதுரியக்காரி என்றெல்லாம் பேர் வாங்கி இருந்தாலும் முடிவாக அவள் ஒரு பெண்தான். பெண் மனத்திற்கு இயல்பான சலனங்களும் சபலங்களும் அவளிடமும் இருக்கத்தான் செய்தன. பெண்ணும் தனிமையும் சேருவது என்பது பஞ்சும் நெருப்பும் சேருவதைப் போன்றது. வதந்தி என்ற நெருப்புப் பற்றிக் கொள்வது அப்போது பெரும்பாலும் நேர்ந்துவிடுகிறது.

 

    • பேசிக் கொண்டிருந்த பணிப் பெண்கள் மேல் கோபப் படுவதோ, அவர்களைத் தண்டிப்பதோ சரியில்லை என்று அவள் மனத்தில் பட்டது. அப்படி ஆத்திரப்பட்டுச் செயலில் இறங்குவதனாலே அவர்கள் என்ன பேசிக் கொண்டிருந்தார்களோ அதைத்தானே தன் ஆத்திரத்தின் மூலம் மெய்ப்பிப்பதாய் ஆகிவிடும்!

 

    • நந்தவனத்தில் கேட்டது மனதைப் பாதித்தாலும் அவள் பொறுமையாக இருக்க முயன்றாள். மனித இயல்பை எண்ணி வியப்பதைத் தவிர அவளால் அப்போது வேறெதுவும் செய்ய இயலவில்லை.

 

    • உலகில் மிக உன்னதமான கற்பனை உணர்ச்சியுள்ளவர்கள் மகாகவிகளாகிறார்கள். மிகக் கொச்சையான கற்பனை உணர்ச்சியுள்ளவர்கள் தங்களைத் தவிர மற்றவர்களைப் பற்றியே வம்புகளையும் வதந்திகளையும் கற்பித்து மகிழ்கிறார்கள்.

 

    • மிக உயர்ந்த கற்பனை கவிதையாகிறது. அரைவேக்காட்டுக் கற்பனை வதந்தியாகிறது. அறிவும் காரணமும் அழகும் அமைப்பும் கலவாத தான்தோன்றிக் கற்பனைதான் வதந்தி. அறிவின் அழகும் அடக்கத்தின் மெருகும் கலந்த வதந்தி தான் கற்பனையாகிறது. பணிப் பெண்களின் நிலைமைக்கு அவர்கள் இந்தப் போக்கில் இப்படித்தான் கற்பனை செய்ய முடியும் என்று ராணி மங்கம்மாளுக்குத் தோன்றியது. அப்போது அவர்களுடைய பரபரப்பையும் பதற்றத்தையும் அதிகப்படுத்தும் என்றெண்ணி ஓசைப்படாமல் திருத்துழாய் மட்டுமே பறித்துக் கொண்டு மெல்லத் திரும்பிவிட்டாள் அவள்.

 

    • “அரங்கேசா! இதுவும் உன் சோதனையா? வெளியே எல்லைகளில் ஏற்பட்டிருக்கும் அரசியல் விரோதங்களும் ஆக்கிரமிப்பு எண்ணங்களும் போதாதென்று இப்படி மனத்திற்குள்ளேயே குழம்பித் தவிக்கவும் ஓர் அபவாதத்தைத் தந்துவிட்டாயே!” என்று வைகறை வழிபாட்டை முடித்து விட்டு இறைவனுக்கு அர்ச்சித்த திருத்துழாயைக் கண்களில் ஒற்றிக் கொள்ளும் போது தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் அவள். மனம் சிறிது கலக்கமுற்றாலும் தேற்றிக் கொண்டாள். கூரிய முள்ளிலிருந்து ஆடையை எடுப்பது போல் ஆடையும் கிழியாமல், முள்ளும் குத்தாமல் அந்த அபவாதத்தைப் பொறுத்த வரையில் நடந்துகொள்ள முயன்றாள். சில சிறிய அபவாதங்களைத் தடுத்துத்தெறியும் முயற்சிகளின் மூலமாகவே அவை பெரிய அபவாதங்களாக உரு எடுத்துவிடும். சில அபவாதங்களை அவற்றின் வெளியே தெரியாத அடிமண் வேரை அறுத்து மேற்கிளைகள் வாடி அழியச் செய்யவேண்டும். வேறு சில அபவாதங்களை நாமாக அழிக்கவே முயலாமல் அது தானே ஓடியாடி அலுத்துப் போய் இயல்பாகச் சாகும்படி விட்டுவிட வேண்டும். தானே சாகிற அபவாதங்களை உயிர்ப்பிக்கும் முயற்சியிலோ, உடனே கொன்றுவிட வேண்டிய அபவாதங்களைத் தொடரவிடுகிற முயற்சியிலோ இறங்கிவிடக்கூடாது என்ற ராணி மங்கம்மாள் வழக்கமான ராஜதந்திர உணர்வு அவளை எச்சரித்தது.

 

    • எதிர்பாராமல் இப்போது தன் மேல் ஏற்பட்டிருக்கும் இந்த அபவாதத்தை அவள் பெரிது படுத்த விரும்பவில்லை. ‘இயல்பாக மூத்துப்போய் தானே அழியட்டும்’ என்று விட்டுவிட விரும்பினாள். அச்சையாவிடமும் வித்தியாசம் காண்பிக்காமல் எப்போதும் போலப் பழகினாள். குழந்தை விஜயரங்கன் பெரியவனானால் தனக்கு ஒரு நல்ல துணையும் பாதுகாப்பும் கிடைத்துவிடும். இத்தகைய வீண் அபவாதங்களெல்லாம் வராது என்று நம்பிக்கையோடு இருந்தாள். அரசியல் காரியங்களில் கவனம் செலுத்தினாள்.

 

    • நாட்கள் சென்றன. ரவிவர்மனின் நம்பிக்கைத் துரோகத்திற்குப் பதிலடி கொடுக்கச் சென்ற படைகளின் நிலையைப் பற்றித் தகவல் அறிய ஆவலாயிருந்தாள் மங்கம்மாள்.

 

    • மிகச் சில நாட்களில் நல்ல செய்தி கிடைத்தது. நம்பிக்கைத் துரோகம் செய்த இரவிவர்மனுக்குப் பாடம் கற்பிக்கத் தளபதி நரசப்பய்யாவின் தலைமையில் சென்ற படைகள் வெற்றிமேல் வெற்றி பெற்று கற்குளம் கோட்டையையே நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இறுதியில் கற்குளம் கோட்டையைப் பிடித்துத் திருவாங்கூர் மன்னனை வென்று அவன் அதுவரை செலுத்தாதிருந்த திறைப்பணம் முழுவதையும் பெற்று வெற்றி வாகை சூடிய புகழுடன் திரும்புவதாகத் தளவாய் நரசப்பய்யாவின் தூதன் வந்து தெரிவித்த போது ராணி மங்கம்மாளுக்கு நிம்மதியாயிருந்தது. அவள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள். நரசப்பய்யாவின் திறமையை வியந்தாள்.

 

    • ஆனால் அவளது மகிழ்ச்சி இரண்டு முழுநாட்கள் கூட நீடிக்கவில்லை. படைகளும் படைத் தலைவர்களும் தளபதி நரசப்பய்யாவும் ஊரில் இல்லாத நிலையை அறிந்து தஞ்சையை ஆண்டுவந்த ஷாஜி மதுரைப் பெருநாட்டுக்குச் சொந்தமான நகரங்களையும், சில ஊர்களையும் தனது சிறுபடைகளை ஏவிக் கைப்பற்றிவிட்டான். எதிர்பாராதபடி திடீரென்று அந்த ஆக்கிரமிப்பு நடந்துவிட்டது.

 

    • கவனக் குறைவாக அயர்ந்திருந்த சமயம் பார்த்து அவன் செய்த ஆக்கிரமிப்பு மங்கம்மாளுக்கு ஆத்திரமூட்டியது. முன்பெல்லாம் இப்படிப்பட்ட அண்டை வீட்டார் ஆக்கிரமிப்புகளைச் சமாளிக்கப் பாதுஷாவின் படையுதவியையும், படைத் தலைவர்களின் உதவியையும் நாடுவது அவள் வழக்கமாயிருந்தது. இப்போது அந்த வழக்கத்தையும் அவள் கைவிட்டிருந்தாள். பக்கத்து வீட்டுப் பகைமைகளை ஒழிக்கத் தொலைதூரத்து அந்நியர்களின் படையுதவியை நாடுவது ஏளனமாகப் பார்க்கப்பட்டது. சொந்தத்தில் எதுவும் செய்யத் திராணியற்ற கையாலாகாதவள் என்ற அபிப்பிராயம் தன்னைப்பற்றி மற்றவர்களிடம் ஏற்பட்டுவிட அது காரணமாகி விடுமோ என்று அவளே அதை மறுபரிசீலனை செய்திருந்தாள். தஞ்சை நாட்டை ஆண்ட செங்கமலதாசனை வென்று அடித்துத் துரத்திய பின் மராத்திய மன்னனான ஏகோஜி சிறிது காலத்தில் எதிர்பாராத விதமாக இறந்துபோய் விட்டான். ஏகோஜியின் புதல்வனாக ஷாஜி பட்டத்துக்கு வந்திருந்தான். இந்த ஷாஜி பட்டத்துக்கு வந்த புதிதில் மங்கம்மாளுடைய நாட்டின் சில பகுதிகளை ஆக்கிரமித்த போது பாதுஷாவின் படைத் தலைவன் சுல்பீர்கானின் உதவியால் தான் அந்த ஆக்கிரமிப்பை முறியடித்திருந்தாள் அவள். அப்போது அப்படித்தான் செய்ய முடிந்திருந்தது.

 

    • இப்போது அதே ஷாஜி மறுபடியும் வாலட்டினான். இம்முறை பாதுஷாவின் ஆட்களையோ, பிறர் உதவியையோ நாடாமல், தன் படைகளையும், தளபதி நரசப்பய்யாவையும் வைத்தே அவனை அடக்க விரும்பினாள் ராணி மங்கம்மாள். தளபதி நரசப்பய்யா திருவாங்கூரில் வென்ற திறைப் பணத்தோடு திரும்பிக் கொண்டிருக்கும் செய்தி தெரிந்திருந்தது.

 

    • தஞ்சை மன்னன் ஷாஜியைக் கொஞ்ச நாட்கள் அயரவிட்டு விட்டு அப்புறம் நரசப்பய்யாவை விட்டு விரட்டச் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள் ராணி மங்கம்மாள். தான் திடீரென்று ஆக்கிரமித்த மதுரை நாட்டுப் பகுதிகள் தனக்கே உரிமையாகி விட்டாற் போன்ற அயர்ச்சியிலும் மிதப்பிலும் ஷாஜி ஆழ்ந்திருக்க அவகாசம் கொடுத்துவிட்டுப் பின்னர் அவற்றை அவனே எதிர்பாராத சமயத்தில் திடீரென்று மீட்க வேண்டுமென்று மங்கம்மாள் தன் மனத்திற்குள் முடிவு செய்து கொண்டிருந்தாள். ஆனால் அந்த முடிவை யாரிடமும் அவள் தெரிவிக்கவில்லை.

 

    • தெற்கே திருவாங்கூர் மன்னனை வெற்றி கொண்டு நரசப்பய்யா கோலாகலமாகத் திரிசிரபுரத்திற்குத் திரும்பி வந்தார். ராணியும், இராயசமும், அமைச்சர் பிரதானிகளும், திரிசிரபுரம் நகரமக்களும் நரசப்பய்யாவையும் படை வீரர்களையும் ஆரவாரமாக வரவேற்றனர். நரசப்பய்யா திரும்பி வந்து, ராணி மங்கம்ம்மாள் அவரிடம் தஞ்சை மன்னன் ஷாஜியின் அடாத செயலைக்கூறிப் படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பே ஷாஜி மங்கம்மாளின் பொறுமையையும் அடக்கத்தையும் கையாலாகாத்தனமாகப் புரிந்து கொண்டு காவிரிக்கரையைக் கடந்து திருச்சி நகருக்குள் புகுந்து இரவு நேரங்களில் கொள்ளையடிக்க ஆரம்பித்தான்.

 

    • கரையோரத்து ஊர்கள் ஷாஜி படைவீரர்களால் அலைக்கழிப்புக்கு ஆளாயின. பீதியும், நடுக்கமும் பரவின. பாதுகாப்பற்ற நிலை உருவாயிற்று.

 

    • எப்படியும் இந்தக் கொள்ளையை முதலில் தடுத்தாக வேண்டுமென்று கொள்ளிடத்தின் வடக்குக் கரை நெடுகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து பாசறை அமைத்துப் படைகளுடன் தங்கினார் தளபதி நரசப்பய்யா.

 

    • பாசறை அமைத்த பிறகு ஷாஜியின் கொள்ளை, கொலைகள் தொடர்ந்தன. நரித்தனமாகவும், நயவஞ்சகமாகவும் உள்ளே ஊடுருவி நுழைந்து கொள்ளையடிப்பதில் தேர்ந்த தஞ்சைக் குதிரைப் படை வீரர்கள் திரிசிரபுரம் வடபகுதியில் காவிரிக்கரை ஊர்களைக் கொள்ளையடித்துத் தொல்லை கொடுப்பதைத் தொடர்ந்தனர்.

 

    • ராணி மங்கம்மாளிடம் காவிரிக்கரை ஊர்களின் மக்கள் முறையிட்டனர். தேர்ந்த தளபதி நரசப்பய்யாவினாலேயே இந்தத் தஞ்சைக் கொள்ளைக்காரர்களின் கொட்டத்தை ஒடுக்க முடியாது போகவே ராணி கவலையில் மூழ்கினாள். நரசப்பய்யாவைக் கூப்பிட்டு மறுபடி ஆலோசனை செய்தாள். அவர் கூறினார்;

 

    • “நம் ஊர்களைக் கொள்ளையிடும் ஆசையில் தங்கள் தலைநகரான தஞ்சையைக்கூடப் பாதுகாப்பு இல்லாமல் விட்டுவிட்டு இங்கே வந்து தொல்லை கொடுக்கிறார்கள் ஷாஜியின் ஆட்கள். அவர்களைத் தந்திரத்தால் தான் முறியடிக்க வேண்டும். நம் படைவீரர்களில் சிலரை அவர்கள் தலைநகராகிய தஞ்சைக்கு அனுப்பி அங்கே பதிலுக்குக் கொள்ளையிடச் செய்தால் தான் வழிக்கு வருவார்கள்.”

 

    • “கொள்ளிடத்தைக் கடந்து படை தஞ்சைக்குப் போக முடியுமா தளபதி?”

 

    • “சில நாட்களில் கொள்ளிடத்தில் நீர் ஆழம் குறைகிற ஒரு நேரம் பார்த்து நாம் கரையைக் கடந்து தஞ்சைக்குள் நுழைந்து விடலாம்.”

 

    • “எப்படியோ இது ஒரு மானப்பிரச்சினை! நம்மை விடச் சிறிய மன்னன் ஒருவன் நமக்குத் தலைவலியாயிருக்கிறான்; இதை நாம் இப்படியே அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது.”

 

    • “கவலைப்படாதீர்கள் மகாராணீ! அவர்கள் நம் காவிரிக் கரை ஊர்களில் கொள்ளையிட்டதற்குப் பதில் வட்டியும் முதலுமாகத் திருப்பிப் பெற்றுத் தருகிறேன். இது என் சபதம்” என்றான் வீரத் தளபதி நரசப்பய்யா.

 

    • “ரவி வர்மனுக்குப் புத்தி புகட்டியது போல் ஷாஜிக்குப் புத்தி புகட்டியாக வேண்டிய காலம் வந்து விட்டது! வெற்றியோடு திரும்பி வருக!” என்று நரசப்பய்யாவை வாழ்த்தி வீரவிடை கொடுத்தாள் ராணி மங்கம்மாள்.

 

    • ————

 


 

21. இஸ்லாமியருக்கு உதவி 

    • தஞ்சைப் படைகளையும், ஷாஜியையும் ஒடுக்குவதற்கு நரசப்பய்யா புறப்பட்டுச் சென்ற தினத்தன்று நல்ல நிமித்தம் என்று நினைக்கத் தக்க வேறொரு நிகழ்ச்சியும் திரிசிரபுரம் அரண்மனையில் நடைபெற்றது.

 

    • தஞ்சைக்குப் புறப்பட்டுச் சென்ற ராணி மங்கம்மாளிடம் அரண்மனைச் சேவகன் ஒருவன் பவ்யமாக வந்து ஏதோ சொல்லும் குறிப்போடு வணங்கி நின்றான். தயங்கி நின்ற ராணி என்ன என்று வினவும் குறிப்போடு அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் குறிப்பறிந்து சொல்லலானான்.

 

    • “கிழிந்த ஆடையும் அழுக்கடைந்த தோற்றமுமாகப் பக்கிரி போல் தோற்றமளிக்கும் இஸ்லாமியர் ஒருவர் தங்களைக் காண வேண்டுமென்று வந்திருக்கிறார்.”

 

    • “என்னக் காரியமாகக் காண வேண்டுமாம்?”

 

    • “காரியம் என்னவென்று அவர் சொல்லவில்லை. தாங்கள் விரும்பினால் சந்திக்கலாம். இல்லாவிட்டால் அவரைத் திருப்பி அனுப்பி விடுகிறோம்.”

 

    • “திருப்பி அனுப்ப வேண்டாம் உடனே வரச் சொல் பார்க்கலாம்! பாவம் அவருக்கு என்ன சிரமமோ?”

 

    • மிகவும் ஏழையாகவும் எளியவராகவும் தென்பட்ட அந்தப் பக்கிரியை அப்போதிருந்த போர் அவசரத்தில் ராணி மங்கம்மாள் சந்திக்க மாட்டாள் என்றுதான் அரண்மனைக் காவலர்கள் நினைத்தார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக அவள் உடனே அவரைச் சந்திக்க இணங்கியது ஆச்சரியத்தை அளித்தது. அந்தப் பக்கிரியை அழைத்து வந்து காவலர்கள் ராணியின் முன்னே நிறுத்தினார்கள்.

 

    • “உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?”

 

    • “மகாராணீ! நீங்கள் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பின்பு சொல்லுகிறேன். உங்களுக்குக் கிடைக்க இருக்கும் கீர்த்தியையும் வெற்றியையும் இப்போது சொல்கிறேன். கேட்டுக் கொள்ளுங்கள். இந்தப் போரில் நீங்கள் மகத்தான வெற்றி பெறப் போகிறீர்கள்.”

 

    • “உங்கள் ஆருடத்திற்கு நன்றி! இப்போது உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்? உங்கள் கஷ்டம் என்னவானாலும் தயங்காமல் என்னிடம் சொல்லலாம்.”

 

    • “என் காரியத்துக்கு அவ்வளவு அவசரமில்லை மகாராணீ! உங்களுக்கு இந்தப் போரில் வெற்றி கிடைத்த பின்னர் வந்து மகிழ்ச்சியோடு என் கோரிக்கையைச் சொல்வேன்.”

 

    • “போரில் நான் வெற்றி பெற வேண்டுமென்று வாழ்த்துகிறீர்கள்! வாழ்த்துகிறவர்களை வெறுங்கையோடு அனுப்புவது இந்த அரண்மனை வழக்கமில்லை.”

 

    • “மன்னிக்க வேண்டும் மகாராணீ! எனக்கு வேண்டியதை எப்போது வந்து பெற்றுச் செல்ல வேணுமோ அப்போது கட்டாயம் தேடி வருவேன்.”

 

    • என்று கூறி வணங்கிவிட்டுப் பதிலையே எதிர்பாராமல் விருட்டென்று திரும்பிச் சென்றுவிட்டார் அந்தப் பக்கிரி.

 

    • ராணிக்கு இது பெரிய ஆச்சரியமாயிருந்தது. தேடி வந்து மின்னலைப்போல் எதிர் நின்று வாழ்த்திவிட்டு உடனே விரைந்து சென்றுவிட்ட அந்த மனிதர் ராணிக்கு ஒரு புதுமையாகத் தோன்றினார்.

 

    • வியப்புடன் உள்ளே சென்றாள் ராணி. இந்த இஸ்லாமியர் வந்தது, சொல்லியது, திரும்பியது எல்லாமே புதுமையாக இருந்தன.

 

    • திட்டமிட்டபடி தளபதி நரசப்பய்யா மிகவும் இரகசியமாகப் படைகளுடன் தஞ்சையை நோக்கி முன்னேறினார்.

 

    • கொள்ளிடத்தில் நீர்ப்பெருக்குக் குறைவாக இருந்த சமயத்தில் ஆழம் குறைவாக இருந்த இடம் பார்த்துப் படைகளுடன் ஆற்றைக் கடந்து அக்கரை சென்றிருந்தார் அவர்.

 

    • தளபதி நரசப்பய்யாவின் படைகள் தஞ்சை செல்வதை அறியாத தஞ்சைப் படைவீரர்கள் திரிசிரபுரத்தின் கரையோரக் கிராமங்களில் கொள்ளையடிப்பதில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார்கள்.

 

    • நரசப்பய்யாவின் தலைமையில் சென்றிருக்கும் மங்கம்மாளின் படைவீரர்கள் தஞ்சைப் பகுதியில் சூறையாடுகின்றனர் என்று தஞ்சை வீரர்களுக்குத் தகவல் எட்டியபோது, பதறிப் போனார்கள். பதற்றத்தில் ஊரைக்காக்க விரையும் எண்ணத்தோடு கொள்ளிடத்தில் மிகவும் ஆழமான இடத்திலே இறங்கி ஆற்றைக் கடக்கத் தொடங்கினார்கள்.

 

    • கெடுவான் – கேடு நினைப்பான் என்பதுபோல் அவர்கள் ஆற்றைக் கடக்கிற நேரத்தில் மேற்கே எங்கோ பெருமழை பெய்திருந்த காரணத்தினால் கொள்ளிடத்தில் வெள்ளம் வேறு வந்துவிட்டது. பெரிய பெரிய மரங்களை எல்லாம் வேருடன் அடித்துக் கொண்டு வருகிற அளவு வெள்ளம் பயங்கரமாயிருந்தது. காட்டாற்றில் சிக்கிக் கொண்ட தஞ்சை வீரர்கள் வெள்ளத்தோடு அடித்துக் கொண்டு போகப் பட்டுவிட்டார்கள்.

 

    • படைகளும், குதிரைகளும், ஆயிதங்களும் திரிசிரபுரத்துக் கரையோரப் பகுதிகளில் கொள்ளையிட்ட பொருள்களும் ஆற்றோடு போய்விட்டன. மிகக் குறைந்த எண்ணிக்கையுள்ள தஞ்சைப் படை வீரர்களே உயிர் பிழைத்துக் கரையேறினர். அவர்களும் அப்போதிருந்த நிலையில் எவரையும் எதிர்த்துப் போரிடுகிற வலிமையோடில்லை.

 

    • கரையேறிய தஞ்சைப் படைவீரர்களைத் தளபதி நரசப்பய்யா நிர்மூலமாக்கி விட்டார். எதிர்ப்பே இல்லாமல் மங்கம்மாளின் படைவீரர்கள் தஞ்சையையும் சுற்றுப்புறத்து ஊர்களையும் சூறையாடத் தொடங்கினார்கள். ஏறக்குறைய தஞ்சை நாடு ஸ்தம்பித்துப் போய்விட்டது.

 

    • தோல்வியிலும், விரக்தியிலும் மிகவும் ஆத்திரம் அடைந்த தஞ்சை மன்னன் இந்த விளைவுகளுக்கு எல்லாம் காரணம் தன் பிரதான அமைச்சன் பாலோஜி பண்டிதனே என்றிண்ணினான். அவனது யோசனைகளால் தான் இவ்வளவு கெடுதலும் ஏற்பட்டதென்று தோன்றவே ஷாஜியின் இந்த மனநிலையைப் புரிந்து கொண்டு பாலோஜிபண்டிதனின் எதிரிகள் வேறு இதற்குத் தூபம் போட்டனர். பாலோஜியை எப்படியும் தொலைத்தாக வேண்டுமென்று ஷாஜிக்கு யோசனை கூறினார்கள்.

 

    • அமைச்சன் பாலோஜி நிலைமையை அறிந்தான். தந்திரத்தால் தான் அரசன் மனத்தை மாற்ற வேண்டுமென்று தீர்மானித்தான். நேரே அரசன் ஷாஜியிடம் போய், “அரசே! கோபப்படாதீர்கள். தயவு செய்து எனக்கு மட்டும் ஒரு வார காலம் தவணை கொடுங்கள்! திரிசிரபுரத்து வீரர்களுக்கும் நமக்கும் ஏற்பட்ட பகையைச் சரி செய்து எல்லாவற்றையும் சமாதானமாக முடித்துத் தருகிறேன்” என்று மன்றாடினான். ஷாஜியும் அதற்கு ஒருவாறு சம்மதித்தான்.

 

    • தஞ்சையில் நிலைமை இவ்வாறு இருக்கத் திரிசிரபுரம் நகரம் வெற்றிக் களிப்பில் திளைத்திருந்தது. திருவிதாங்கூர் ரவிவர்மனின் கொட்டத்தை ஒடுக்கிவிட்டுத் திரும்பிய சுவட்டோடு தஞ்சையையும் வெற்றி கொண்டிருந்தார் நரசப்பய்யா.

 

    • படைகள் தஞ்சைக்குப் புறப்பட்டபோதே இந்த வெற்றியைப் பற்றி ஆரூடம் கூறிய இஸ்லாமியரை இப்போது நினைத்தாள் ராணி மங்கம்மாள். அப்போது வாயிற் காவலர்கள் வந்து கூறினார்கள்.

 

    • “அரண்மனை வாயிலில் யாரோ தங்களைக் காணத் தேடி வந்திருக்கிறார்! இப்போதுள்ள பரபரப்பில் தங்களைக் காண முடியாதென்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் கேட்பதில்லை! தாங்கள் ஏற்கனவே தஞ்சைப் போர் முடிந்ததும் அவரைச் சந்திப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறீர்களாம்.”

 

    • அந்தப் பக்கிரியாகத்தான் இருக்கவேண்டுமென்று நினைத்தாள் ராணி மங்கம்மாள். “அவருக்கு ஆயுள் நூறாண்டு” என்று மனத்துக்குள் அவரை வாழ்த்தினாள்.

 

    • “வந்திருப்பவரை இப்போதே உள்ளே அழைத்து வா!” என்று காவலருக்கு உத்தரவு இட்டாள். தேடி வந்திருப்பவர் மேல் ராணிக்கு இருந்த அக்கறை காவலருக்கே எதிர்பாராத ஆச்சரியத்தை உண்டாக்கியக்க வேண்டும். காவலர்கள் உடனே விரைந்தோடிச் சென்று அந்த இஸ்லாமியரை அழைத்து வந்தனர்.

 

    • அரண்மனைக்குள்ளே வந்ததும் ராணியை வணங்கினார் அவர். ராணி மங்கம்மாள் அவரைப் பிரியத்தோடும் மரியாதையோடும் வரவேற்றாள்.

 

    • “ஐயா! நீங்கள் கூறியபடி தஞ்சையில் எங்களுக்குப் பெருவெற்றி கிடைத்திருக்கிறது. முதலிலேயே நீங்கள் தான் நல்வாக்குக் கூறினீர்கள்! இதோ இந்தப் பரிசுப் பொருள்களை என் அன்பின் அடையாளமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.”

 

    • “நான் ஏழைதான். ஆனால் பரிசுகள் எதுவும் எனக்குத் தேவையில்லை மகாராணீ! என் வார்த்தைகள் பலித்து நீங்கள் வெற்றி பெற்றதில் நானடைந்திருக்கும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கவே வந்தேன்.”

 

    • “பரிசுகள் வேண்டாம் என்கிறீர்! வேறு ஏதேனும் உதவியை நான் செய்ய முடியுமானால் சொல்லுங்கள். உடனே செய்கிறேன்.”

 

    • “எனக்குச் சொந்தமாக எதுவும் வேண்டாம் மகாராணீ! தெய்வபக்தி மிகுந்த மக்களுக்குப் பொதுவாக ஓர் உதவி நீங்கள் செய்ய வேண்டும். இன்று நிராதரவாகவும் ஏழையாகவும் ஆகிவிட்ட என்னிடம் பெனுகொண்டா நகரின் ‘தர்க்கா’ ஒன்றைக் கவனித்து நிர்வகிக்கும் பொறுப்பு இருக்கிறது. அடிக்கடி நடக்கும் போர்களால் தர்க்காவின் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை. தர்க்காவுக்கென்று இருக்கும் பரம்பரைச் சொத்துகளிலிருந்தும் வருமானம் சரியாகக் கிடைக்கவில்லை.”

 

    • “நான் என்ன செய்யவேண்டுமோ சொல்லுங்கள்! உடனே செய்ய உத்தரவிடுகிறேன்.”

 

    • “அந்தத் தர்க்கா நிர்வாகமும் அதில் வழிபாடும் சரியாக நடைபெற உதவினால் இந்த ஏழையின் மனம் மகிழ்ச்சி அடையும் மகாராணீ!”

 

    • உடனே அதிகாரிகளை அழைத்துத் திரிசிரபுரத்துக்கு அருகிலுள்ள சில காவிரிக்கரை சிற்றூர்களை அந்தத் தர்க்காவுக்கு மானியமாக வழங்க உத்தரவிட்டாள் ராணி மங்கம்மாள்.

 

    • இஸ்லாமியத் துறவி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

 

    • “ஆண்டவன் உங்களுக்குப் பரந்த மனத்தைக் கொடுத்திருக்கிறான் அம்மா! நீங்கள் ஒரு குறையும் வராமல் நீடூழி வாழ வேண்டும்.”

 

    • “ஸ்ரீ ரங்கநாதன் மேல் எனக்கு எவ்வளவு பக்தி உண்டோ அவ்வளவு நல்லெண்ணமும் பக்தியும் என் ஆட்சியில் வாழும் எல்லாப் பிரிவு மக்கள் மேலும் உண்டு ஐயா!” என்றாள் ராணி மங்கம்மாள். பக்கிரி விடைபெற்று வாழ்த்திவிட்டுச் சென்றார்.

 

    • ராணி மங்கம்மாள் விரைந்து அரண்மனையின் உட்பகுதிக்குச் செல்ல இருந்தாள். அப்போது மீண்டும் வாயிற் காவலன் ஒருவன் அவளெதிரே தோன்றி, “காவிரிக்கரையில் வேளாண் தொழில் செய்து உழுதுண்டு வாழும் உழவர்கள் சிலர் தங்களைக் காண அவசரமாக வந்திருக்கிறார்கள் மகாராணீ!” என்று பவ்யமாக வணங்கியபடி தெரிவித்தான்.

 

    • —————

 


 

22. காவிரி வறண்டது! 

    • அப்போதிருந்த பரபரப்பில் காவிரிக்கரை உழவர்களைப் பார்க்க முடியாது போலிருந்தது. தேடி வந்திருக்கும் அந்த உழவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு மறுபடி சில நாள் கழித்து வந்து தன்னைச் சந்திக்கச் சொல்லலாமே என்று தான் முதலில் ராணி மங்கம்மாளுக்குத் தோன்றியது. ஆனால் அடுத்த கணமே அந்த அபிப்ராயத்தை அவள் மாற்றிக் கொண்டாள்.

 

    • தேடி வந்திருப்பவர்கள் ஏழைகள் உழவர்கள் என்பதனால் அவர்களை அலைக்கழிக்காமலும், இழுத்தடிக்காமலும் உடனே பார்ப்பதுதான் முறை என்று எண்ணி அவர்களை அப்போதே தன்னைச் சந்திக்க அனுமதிக்குமாறு காவலர்களிடம் கூறி அனுப்பினாள்.

 

    • சிறிது நேரத்தில் உழவர்கள் கூட்டமாக அவளைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் முகங்களில் எல்லாம் பயமும் கவலையும் அணைகட்டித் தேக்கினாற் போலிருந்தன. அவர்களுக்கு ஏதோ தீராத பிரச்சினை இருக்கவேண்டும் என்று ராணி மங்கம்மாளால் பார்த்த அளவிலேயே அனுமானிக்க முடிந்தது.

 

    • அவள் அவர்களை அன்போடு கேட்டாள்;

 

    • “உழவர் பெருமக்களே! உங்கள் கவலை என்ன? என்னால் முடியுமானால் உங்கள் கவலையைக் களைவேன். தயங்காமல் சொல்லுங்கள்.”

 

    • “மகாராணீ! திடீரென்று காவிரியில் நீர் வற்றி வறண்டு விட்டது. மேல்மழை பெய்ததும் சரியாகும் என்று நினைத்துக் காத்திருந்தோம். அப்படியும் சரியாகவில்லை. சோழ நாட்டின் பெரும்பகுதி நிலங்களும் எங்களை ஒத்த விவசாயிகளும் காவிரியை நம்பித்தான் இருக்கிறோம் என்பது தாங்கள் அறியாததில்லை. மைசூர் மன்னன் சிக்கதேவராயனுக்கும், தங்களுக்கும் உள்ள பகையினால் தங்களுக்கும் தங்களது நாட்டு மக்களுக்கும் தொல்லைக் கொடுக்கக் கருதி மைசூரார் காவிரியை அணை எடுத்துக் தேக்கிவிட்டார்கள் என்று கேள்விப் படுகிறோம். காவிரி வறண்டிருப்பதால் உழவர்களாகிய எங்கள் வாழ்வும் வறண்டுவிட்டது.”

 

    • சிக்கதேவராயன் காவிரியை அணை கட்டித் தடுத்து நிறுத்திவிட்டான் என்று கேள்விப்பட்டு ராணி மங்கம்மாள் ஆச்சரியப்படவில்லை. அவன் அப்படித்தான் செய்திருக்கக் கூடும் என்பதில் அவளுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. திரிசிரபுரத்தை முற்றுகையிட்ட சிக்கதேவராயரின் படைகளையும், தளபதி குமரய்யாவையும் தாங்கள் மைசூருக்குத் துரத்திய பின்பே இப்படிப் பழிவாங்கும் எண்ணம் அவனுக்கு ஏற்பட்டிருக்கவேண்டுமென்று தோன்றியது.

 

    • இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பதற்காக உழவர்களுக்கு ஆறுதலும் மறுமொழியும் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு இராயசத்தையும், பிரதானிகளையும் படைத்தலைவர் நரசப்பய்யாவையும் உடனே அது பற்றிக் கலந்து ஆலோசித்தாள் அவள்.

 

    • “இந்தக் காவிரி நீர்ப் பிரச்சினையால் நாம் மட்டும் பாதிக்கப்படவில்லை. அண்டை நாடாகிய தஞ்சை நாட்டுக்கு நம்மைவிட அதிகப் பாதிப்பு ஏற்படும்” என்றார் இராயசம்.

 

    • அவர் இப்படிக் கூறி முடிக்கவும் வாயிற்காவலன் உள்ளே வந்து தஞ்சையின் மன்னர் ஷாஜியின் பிரதிநிதியாக அமைச்சர் பாலோஜி சந்திக்க வந்திருப்பதாகத் தெரிவிக்கவும் சரியாயிருந்தது. ஏற்கனவே தஞ்சை அரசன் ஷாஜியின் கோபத்துக்கு ஆளாகியிருந்த பாலோஜி தன் ஆள்கள் மூலம் தஞ்சை நாட்டின் பெரு வணிகர்களையும், செல்வர்களையும் தன் உறவினர்களையும் வற்புறுத்திப் பெரும் பொருள் திரட்டியதோடு அரசாங்கக் கருவூலத்திலிருந்து ஒரு பெருந்தொகையையும் எடுத்துக்கொண்டு திரிசிரபுரத்துக்கு வந்திருந்தான். திரட்டிய பொருளைத் திறைப்பணமாக அளித்து, ராணிமங்கம்மாளோடு சமாதானம் செய்துகொண்டு, அந்த சமாதானத்தைச் செய்து வந்தவன் என்ற பெருமையில் தன் அரசனான ஷாஜியின் கோபத்தைத் தணிக்க முயலவேண்டும் என்பது பாலோஜியின் திட்டமாக அப்போது இருந்தது.

 

    • திடீரென்று திரிசிரபுரம், தஞ்சை இருபகுதி ஆட்சிக்கும் நிர்ப்பந்தத்தை உண்டாக்கும் பொருட்டு மைசூர் மன்னன் ஏற்படுத்திவிட்ட காவிரிநீர்த் தடுப்பு பிரச்சனை பாலோஜிக்கு இப்படி ஓர் இராஜதந்திர லாபத்தை உண்டாக்கித் தந்தது.

 

    • மைசூர் மன்னன் சிக்கதேவராயன் என்கிற பொது எதிரியைத் தொலைக்கும் முகாந்திரத்தை முன்வைத்து ராணி மங்கம்மாளையும், தஞ்சை மன்னன் ஷாஜியையும் சமாதானப்படுத்த முடியும் என்ற புது ஞானோதயம் பாலோஜிக்கு உண்டாயிற்று. அதை வெறும் சமாதானமாக மட்டும் நிறுத்திவிடாமல் சிநேகிதமாக மாற்றித் திரிசிரபுரம், தஞ்சை இரண்டையும் நட்பு நாடுகளாக்கிவிடத் திட்டமிட்டான் அவன். காற்று அவனுக்குச் சாதகமாக அவனது பக்கம் வீசியது.

 

    • அவன் திரிசிரபுரத்துக்கு வந்த போது கையில் பெரிய அளவு திறைப்பொருளோடும் காவிரி நீரைப் பற்றிய பிரச்சனையோடும் வந்து சேர்ந்திருந்தான்.

 

    • ஒரு வலுவான பொது எதிரி ஏற்பட்ட பின் உதிரியாகத் தங்களுக்குள் விரோதிகளாக இருந்த பலர் அந்தப் பொது எதிரியைக் கருதித் தங்கள் சிறிய விரோதங்களைத் தவிர்த்து விட்டு நண்பர்களாகி விடுவதும், ஒரு வலுவான பொது நண்பனை அடையும் முயற்சியில் தங்களுக்குள் நண்பர்களாக இருந்த பலர் அந்தப் பொது நண்பனின் சிநேகிதத்தைப் பெறும் போட்டியில் தங்கள் நட்பை இழந்து விரோதிகளாகிவிட நேர்வதும் இராஜ தந்திரத்தில் தவிர்க்க முடியாதவை என்பதைப் பாலோஜி அறிந்திருந்தான். மைசூர்ச் சிக்கதேவராயன் காவிரியை மட்டும் தடுத்திராவிட்டால் பாலோஜி இந்த இராஜதந்திர லாபத்தை அடைந்தே இருக்க முடியாது. சந்தர்ப்பத்தைத் தனக்கு ஏற்படுத்தித் தந்த தெய்வத்துக்கு இதயபூர்வமாக நன்றி தெரிவித்துக் கொண்டே திரிசிரபுரத்துக்கு வந்து காத்திருந்தான் அவன். இந்த ராஜதந்திர லாபத்தை வைத்து ஷாஜியிடம் தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று எண்ணினான் அவன்.

 

    • ராணி மங்கம்மாளும் அவளுடைய இராயசமும், பிரதானிகளும், தளபதியும், தஞ்சை மன்னனின் அமைச்சனான பாலோஜியைச் சந்திக்க இணங்கினார்கள். பாலோஜி அவர்களைச் சந்தித்து மிகவும் பவ்யமாக நடந்து கொண்டான். சிரமப்பட்டுத் திரட்டியிருந்த பெரும்பொருளை ராணி மங்கம்மாளிடம் காணிக்கையாகச் செலுத்தினான்.

 

    • “மகாராணீ! நடந்துவிட்ட சில தவறுகளுக்காகவும், முறைகேடுகளுக்காகவும் தஞ்சை நாட்டின் சார்பில் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமக்குள் ஒற்றுமையும், பரஸ்பர உதவியும் வேண்டும். நாம் ஒற்றுமையாயில்லாதிருந்த காரணத்தினால்தான் காவிரியை அணையிட்டுத் தடுத்துக்கொள்ளும் துணிவு மைசூர் அரசர் சிக்கதேவராயனுக்கு வந்தது. நம் இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் ஒற்றமையே நமது பொது எதிரியைத் தயங்கச் செய்யும். முடிந்தால் காவிரி நீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே நாம் ஒன்று சேர்த்து மைசூர் மேல் படையெடுக்க முடியும் மகாராணீ!”

 

    • “நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் அமைச்சரே! ஆனால் முதலில் ஒற்றுமையின்மைக்கு வித்திட்டது யார் என்று சிந்தித்துப் பாருங்கள். திரிசிரபுரத்தைச் சேர்ந்த காவிரிக்கரைக் கிராமங்களைக் கொள்ளியிடும்போது உங்கள் அரசருக்கு இந்த ஒற்றுமை யோசனை ஏன் தோன்றவில்லை? சிலருக்கு மனத் தெளிவினால் புத்தி வருகிறது. இன்னும் சிலருக்குப் பட்டால்தான் புத்தி வருகிறது.”

 

    • “உண்மைதான் மகாராணீ! தவறு யார் மேலிருந்தாலும் இனி அந்தத் தவறுகள் நேர வேண்டாமென்று நினைக்கிறேன். இதோ இங்கு நம்மிடையே இருக்கும் வீரத்தளபதி நரசப்பய்யாவின் தலைமையில் உடனே மைசூர் மன்னனுக்குப் பாடம் கற்பிக்க நமது படைகள் இணைந்து புறப்படட்டும். நமது ஒற்றுமை அவனுக்குப் புரியட்டும்.”

 

    • “நம்மிலிருந்து வெகு தொலைவிலிருக்கும் அந்நியனுக்குப் புரிவதற்கு முன் முதலில் நமது ஒற்றுமை நமக்கே சரியாகப் புரியவேண்டும். நட்புக்கு அது அவசியம். நமக்கே புரியாத ஒற்றுமைகளை நாம் பிறருக்குப் புரிய வைக்கமுடியாது.”

 

    • இராயசம் இப்படிக் கூறியது தன்னையும் தன் நாட்டையும் குத்திக் காட்டுவது போலிருந்தாலும், காரியம் கெட்டுப் போகக்கூடாதென்ற கருத்தில் அதை எதிர்த்துப் பேசாமல் பொறுத்துக் கொண்டான் பாலோஜி.

 

    • அதே தொனியில் மறுமொழியும் கூறினான்; “ஒற்றுமையை முதலில் நாமே புரிந்து அங்கீகரித்துக் கொண்டதற்கு அடையாளமாக இன்று முதல் நம்மிரு நாடுகளும் ஒருவர் எல்லையில் இன்னொருவர் அத்துமீறுவதில்லை, ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும் என்பதை இருவருமே ஏற்போம்.”

 

    • “இந்த வார்த்தைகளை நம்பிக் காவிரி நீர்ப் பிரச்சினையில் நாம் நமது பொது எதிரியைச் சந்திக்கிறோம். தஞ்சைப் படைகளை உடனே திரட்டித் திரிசிரபுரத்துக்கு அனுப்பி வையுங்கள்” என்றாள் ராணி மங்கம்மாள். திரிசிரபுரத்துக்கு அந்தப் படைகள் வந்ததும் அங்குள்ள படைகளையும் சேர்த்துக் கொண்டு தளபதி நரசப்பய்யாவை மைசூருக்குப் புறப்படச் செய்யலாம் என்பது ராணியின் எண்ணமாயிருந்தது.

 

    • பாலோஜிக்கு இதைக்கேட்டு உச்சிகுளிர்ந்து போயிற்று. நேரே தஞ்சைக்குப் புறப்பட்டுச் சென்று தன்னால்தான் ராணி மங்கம்மாளுடன் இந்தச் சமாதான ஏற்பாடு சாத்தியமாயிற்று என்பதை மன்னன் ஷாஜியிடம் விளக்கிக் கூறி அவனது நல்லபிமானத்தை மீண்டும் பெறலாம் என்று எண்ணினான் அவன்.

 

    • நரசப்பய்யா தஞ்சையை வளைத்துக் கொள்ளையடித்த பின், தன் எதிரிகளின் தூண்டுதலால் மன்னன் ஷாஜி தன்னைத் தண்டிக்க விரும்பிச் சீற்றம் அடைந்ததை மாற்ற இதுவே தக்க தருணம் என்பதை உணர்ந்திருந்தான் பாலோஜி. ஷாஜியின் நிலை அவனுக்கு நன்கு புரிந்திருந்தது.

 

    • தஞ்சை சென்று மன்னன் ஷாஜியைச் சந்தித்து, மங்கம்மாளுடன் சமாதானம் ஏற்பட்டதைத் தெரிவித்துக் காவிரி நீர் தடுக்கப்பட்டதை எதிர்த்து மைசூர் மன்னன் சிக்க தேவராயனைக் கண்டித்து திரிசிரபுரம் படைகளும், தஞ்சைப் படைகளும் சேர்ந்து போரிட ஏற்பாடாகியிருப்பதையும் விளக்கிச் சொன்னான் பாலோஜி. சிக்க தேவராயன் காவிரி நீரைத் தடுத்ததால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தவன் தஞ்சை மன்னன் ஷாஜிதான். ஆகவே ஷாஜி இந்த ஏற்பாட்டைக் கேட்டதும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

 

    • இந்த சமாதான ஏற்பாட்டைக் கேட்டதும் பாலோஜியின் மேல் வேறு காரணங்களுக்காக ஏற்கெனவே அவனுக்கு ஏற்பட்டிருந்த சீற்றமெல்லாம் பஞ்சாய் பறந்துவிட்டது. பாலோஜியின் ராஜதந்திரத்தை மெச்சிப் புகழ்ந்தான் அவன்.

 

    • “நான் மட்டும் தனியே மைசூரின் மேல் படையெடுத்து அவனை வழிக்குக் கொண்டு வருவதென்பது நடவாத காரியம். அவ்வளவு வலிமையும் படை பலமும் என்னிடம் இல்லை. இந்த இக்கட்டான சமயத்தில் தஞ்சை நாட்டைக் காப்பாற்ற ராணி மங்கம்மாளோடு சமாதான உடன்பாடு செய்த உன் சாதுரியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும் அப்பா! முன்பு உன்னைப் பற்றி நான் தவறாக நினைத்திருந்ததற்காக இப்போது நீ என்னை மன்னித்து விடவேண்டும்” என்று மனமுருகிப் பாலோஜியை வேண்டினான் ஷாஜி.

 

    • உடன் தஞ்சைப் படைகள் திரிசிரபுரத்துக்கு விரைந்தன. அங்கு ஏற்கனவே மைசூருக்குப் புறப்பட ஆயத்தமாக இருந்த ஒரு பெரும் படையுடன் தளபதி நரசப்பய்யா காத்திருந்தார்.

 

    • சோழ நாட்டின் உழவர் வாழ்வுக்கு உயிரோட்டமாயிருந்த காவிரி நீர்ப்பெருக்கு வறண்டதால் விளைந்த சீற்றம் அந்தப் படைவீரர்களின் வெப்பம் கலந்த மூச்சுக்காற்றில் மேலும் சூடேற்றியிருந்தது. எப்படியும் மைசூரின் மேல் படையெடுத்துக் காவிரி நீரைத் தடுக்கும் அணையை உடைத்தே ஆகவேண்டும் என்ற வேகத்தோடு படைகள் இருந்தன. தஞ்சை நாட்டுக்கும், மதுரைப் பெரு நாட்டுக்கும் ஒற்றுமை ஊற்றுச் சுரப்பதற்குக் காவிரி வறண்டு போக வேண்டியிருந்தது.

 

    • காவிரி வறண்டிருக்காவிட்டால் அந்த ஒற்றுமையே ஏற்பட்டிராது. அந்த அசாத்தியமான் ஒற்றுமையைக் காவிரியின் வறட்சிதான் அவர்களிடையே ஏற்படுத்தியிருந்ததென்று சொல்ல வேண்டும்.

 

    • தஞ்சைப் படைகளும், திரிசிரபுரம் படைகளும் மைசூரை நோக்கிப் பாயத் துணிந்து நின்றன. படைகளின் தளபதி நரசப்பய்யா மைசூரை வெல்லும் மன உறுதியோடு நிமிர்ந்து நின்றார்.

 

    • ஆனால் முற்றிலும் யாரும் எதிர்பாராத அதிசயமாக அந்தச் சமயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி அப்படையெடுப்புக்கே அப்போது அவசியம் இல்லாமல் போகும்படிச் செய்துவிட்டது.

 

    • ————-

 


 

23. சேதுபதியின் மூலபலம் 

    • மேற்கே மலைப்பகுதிகளில் இடையறாது அடைமழை பெய்ததால் நீர்ப்பெருக்கு அதிகமாகி சிக்க தேவராயன் காவிரியின் குறுக்கே எடுத்திருந்த அணை தானே நலிந்து நகர்ந்து போய்விட்டது. அப்போதிருந்த பயங்கரமான வெள்ளப் பெருக்கில் சிக்க தேவராயன் மறுபடி காவிரியை வழிமறித்து நிறுத்தலாம் என்று நினைக்கக்கூட முடியவில்லை. காவிரி மீண்டும் தன் இஷ்டப்படி ஓடினாள்.

 

    • திரிசிரபுரம் தஞ்சைப் பகுதிகளில் காவிரியில் வெள்ளம் இருகரையும் நிமிர ஓடியது. வறட்சி தவிர்ந்தது. உழவர்களின் துயரம் ஒழிந்தது. இதனால் மைசூரின் மேல் படை எடுப்பது என்ற திட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் காவிரி நீர்ப் பிரச்சினை காரணமாகத் திரிசிரபுரத்துக்கும், தஞ்சைக்கும் ஏற்பட்ட ஒற்றுமை மட்டும் தொடர்ந்து நீடித்தது. அந்த நட்பு வேறொரு படையெடுப்புக்குப் பயன்பட்டது. வேறொரு படையெடுப்புக்கு அவசியமும் ஏற்பட்டது.

 

    • இங்கே ராணி மங்கம்மாள் திரிசிரபுரத்திலிருந்து கொண்டு தஞ்சையிலும், மைசூரிலும் கவனம் செலுத்தி வந்த சமயத்தில் கிழவன் சேதுபதி பெரும்படையோடு படையெடுத்துச் சென்று மதுரையையும் சுற்றுப்புற நகரங்களையும் கைப்பற்றிக் கொண்டிருந்தார். இப்படி நடக்கும் என்று ராணி மங்கம்மாள் முற்றிலும் எதிர் பார்த்திருக்கவில்லை. சேதுபதி தந்திரமாக மதுரையைக் கைப்பற்றியிருந்தார்.

 

    • ஏற்கெனவே மதுரைப் பெருநாட்டுக்குப் பணிந்து திறை செலுத்த மறுத்ததோடு மேலே எதுவும் செய்யாமல் இருந்து விடுவார் என்றுதான் சேதுபதியைப் பற்றி ராணி மங்கம்மாள் நினைத்திருந்தாள். புதிதாக விரோதங்கள் எதையும் வளர்க்கமாட்டார் என்று அவள் எண்ணியிருந்ததற்கு மாறாக அவர் மதுரை நகரையும், சுற்றுப்புறங்களையும் மறவர் படையோடு வந்து ஆக்கிரமித்தது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது.

 

    • காவிரி நீர்ப்பிரச்சினையை ஒட்டி நட்பு ஏற்படுவதற்கு முன்னர் சேதுபதியே ஒருமுறை மங்கம்மாளுக்கு எதிரணியில் தஞ்சை மன்னர் ஷாஜியோடு இணைந்து மங்கம்மாளுக்குத் தொல்லை கொடுத்திருக்கிறார். இப்போது அதே சேதுபதியை எதிர்த்து ஷாஜியைத் தன் அணியில் திரட்ட வேண்டிய கட்டாயமும் நிர்ப்பந்தமும் மங்கம்மாளுக்கு ஏற்பட்டன.

 

    • இதற்கு முன்னால் ஒருமுறை சேதுபதி மதுரை நகரைக் கைப்பற்றி ஆள முயன்ற போது ஷாஜியின் துணையின்றியே தளவாய் நரசப்பய்யா மதுரைக்குப் படை எடுத்துச் சென்று தனியே வென்றிருக்கிறார். இப்போது தஞ்சைப் படைகளும் உதவிக்குக் கிடைக்கிற காரணத்தால் தளவாய் நரசப்பய்யா சேதுபதியை ஓட ஓட விரட்டிவிடலாம் என்றே எண்ணினார்.

 

    • முன்பு தன் மகன் ரங்ககிருஷ்ணன் சேதுபதியை அடக்கி வெற்றி கொள்ள முடியாமல் திரும்பியதிலிருந்து தொடர்ந்து அவர் அடங்க மறுத்து வந்திருக்கிறார் என்பதை நினைவு கூர்ந்த ராணி மங்கம்மாள் மதுரையைக் கைப்பற்றிய நிகழ்ச்சியை அவரது அடங்காமையின் அதிக எல்லையாகக் கருதினாள். திமிர் நிறைந்த காரியமாக எண்ணினாள்.

 

    • பேரன் விஜயரங்கன் வளர்ந்து பெரியவனாகிப் பொறுப்பை ஏற்கும் நாள்வரை நாட்டின் எல்லைகள் பறிபோகாமல் கட்டிக் காக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இருந்தது. விஜயரங்கன் அவனுடைய தந்தை ரங்ககிருஷ்ணனைப் போல் இளம் பருவத்திலேயே அரசியல் பொறுப்புகளை ஏற்கக்கூடிய பக்குவமுள்ளவனாக இல்லை. சின்னஞ்சிறு வயதில் அவனை நம்பி முடிசூட்டுவது அவனையும் நாட்டையும் அபாயத்தில் கொண்டு போய் விட்டுவிடக்கூடும் என்பது ராணி மங்கம்மாளுக்கே தெளிவாகப் புரிந்திருந்தது. விளையாட்டுப் பிள்ளையாகவும் விடலையாகவும் அவன் இருந்தான்.

 

    • அதனால் அரசியல் காரியங்களில் விஜயரங்கனை அவள் சம்பந்தப்படுத்தவேயில்லை. சேதுபதி மதுரை நகரையும் சுற்றுப் புறங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு ஆளும் தகவல் தெரிந்ததும் இராயசம் முதலியவர்களோடு மந்திராலோசனை செய்தபின் தளவாய் நரசப்பய்யாவிடம் தான் அவள் மனம் திறந்து பேசினாள்.

 

    • “உங்களுக்கு இது பெரிய காரியமில்லை! இதே கிழவன் சேதுபதியை முன்பு மதுரையிலிருந்து மானாமதுரை வரை ஓட ஓட விரட்டியிருக்கிறீர்கள் நீங்கள். அந்த நம்பிக்கையில் இந்தப் பொறுப்பை இப்போது உங்களிடம் மீண்டும் ஒப்படைக்கிறேன்…”

 

    • “ஒருமுறை நம்மிடம் தோற்றிருப்பதால் சேதுபதியும் இப்போது அத்தனை அலட்சியமாக இருக்க மாட்டார் முன்னை விட படைபலத்தைப் பெருக்கியிருப்பார்! ஆனாலும் கவலை வேண்டாம் மகாராணீ! மதுரையை சேதுபதியிடமிருந்து மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!.”

 

    • “இந்தச் சமயத்தில் சேதுபதியை அடக்க வேண்டிய அரசியல் அவசியம் உண்டு! போனால் போகிறதென்று விட்டால் அவர் இதோடு நிற்க மாட்டார். நமது ஆட்சிக்கு உட்பட்ட வேறு பிரதேசங்களையும் கைப்பற்றத் துணிவார். பிறருடைய செருக்கைவிடத் தமது செருக்கு ஒருபடி அதிகம் என்று நிரூபிப்பதில் எப்போதுமே அவருக்கு ஆவல் உண்டு. ‘இராமபிரானுக்கு உதவிய குகனின் வம்சத்தினர் நாங்கள்! பிறரைச் சென்று தரிசிப்பவர்களில்லை. பிறரால் தரிசித்து வணங்கப்பட வேண்டியவர்கள்’ என்று என்னைச் சந்திக்கும் போதெல்லாம் குத்தலாகவும் ஆணவத்தோடும் என்னிடம் அவர் சொல்லியிருக்கிறார். இப்போது அவருக்கு நாம் பாடம் புகட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது.”

 

    • “உங்கள் விருப்பத்தைக் கட்டாயமாக நிறைவேற்ற முயல்வேன் மகாராணீ!” என்ற மங்கம்மாளிடம் உறுதியளித்து விட்டு காவிரி நீர்ப் பிரச்சினைக்காக உதவிபுரிய வந்திருந்த தஞ்சைப் படைவீரர்களையும் சேர்த்துக் கொண்டு படையெடுப்பைத் தொடங்கினார் தளவாய் நரசப்பய்யா. பெரும்படை மதுரையை நோக்கி விரைந்தது. கிழவன் சேதுபதி இந்தப் படையெடுப்பை எதிர்பார்த்து ஆயத்தமாக இருந்தார். இவருடைய மறவர் சீமைப் படைகள் முன்னேற்பாட்டுடனும், கட்டுப்பாடாகவும் இருந்தன. விரைந்து சென்று குறிப்பிட்ட குறுகிய காலத்தில் கொள்ளையடித்து முடித்துக் கொண்டு திரும்பிவிடுகிறாற் போன்ற ஒரு சுறுசுறுப்பு மறவர் சீமைப் படைகளிடம் இருந்தன. முன்னைவிட எண்ணிக்கையில் அதிகமான மறவர் சீமைப் படையை ஆயத்தமாக வைத்திருந்தார் அவர்.

 

    • “ஒருவேளை திரிசிரபுரத்திலிருந்த ராணி மங்கம்மாளின் படை மதுரையை நோக்கி வருமானால்” என்று அதை முன் ஏற்பாடாக எதிர்பார்த்து வருகிற படையை எங்கெங்கே எதிர்கொண்டு எப்படி எப்படித் தாக்குவது என்றெல்லாம் தீர்மானமாகத் திட்டமிட்டு வைத்திருந்தார் சேதுபதி. இராஜதந்திரத்திலும் உபாயங்களிலும் எதிரிகளை எப்படி எப்படி எல்லாம் மடக்கி அழிக்கலாம் என்ற சாதுரியத்திலும் தேர்ந்தவரான கிழவன் சேதுபதி தீர்க்க தரிசனத்தோடு எல்லாத் தற்காப்பு ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொண்டிருப்பதை நரசப்பய்யா எதிர்பார்க்கவில்லை.

 

    • தான் முன்பு ஒருமுறை வென்றது போல் இம்முறையும் கிழவன் சேதுபதியைச் சுலபமாக வென்று வெற்றிவாகை சூடிவிடலாம் என்ற நம்பிக்கையோடு திரிசிரபுரத்திலிருந்து மிகவும் அலட்சியமான எண்ணத்தோடு படைகளோடு புறப்பட்டிருந்தார் நரசப்பய்யா.

 

    • சேதுபதியின் திட்டமும் ஏற்பாடுகளும் வேறுவிதமாக இருந்தன. நரசப்பய்யாவின் படைகள் மதுரையை அடைவதற்கு முன்பே களைத்து சோர்ந்து போய் விடும்படி நடுவழிகளிலேயே அவர்களை மறித்துத் தாக்குவதற்கான மறவர் சீமைப் படைகளை எதிர்பார்க்கவோ அனுமானிக்கவோ இயலாத நரசப்பய்யா படைகளோடு முன்னேறிக் கொண்டிருந்தார். நரசப்பய்யாவின் அலட்சியப் போக்கு ஆபத்தாக முடியுமென்று யாருக்குமே முதலில் தெரிந்திருக்கவில்லை.

 

    • பேரன் விஜயரங்கனுக்கு ஒரு குறையுமில்லாத முழுப்பேரரசை அப்படியே கட்டிக்காத்து அளித்து முடிசூட்ட வேண்டுமென்ற ஆசையில் ராணி மங்கம்மாளுக்கு தளவாய் நரசப்பய்யாவைப் படைகளுடன் மதுரைக்கு அனுப்பிவிட்டுக் காத்திருந்தாள்.

 

    • படைகள் மதுரை எல்லையை அடையுமுன்னே குழப்பமான செய்திகள் ஒவ்வொன்றாக வந்தன. ராணி மங்கம்மாளின் நம்பிக்கை தளர்ந்தது. மறவர் சீமையைக் கடந்து மதுரைப் பகுதிக்குள் நுழைவதற்கு முன்னதாகவே மங்கம்மாளின் படைத்தலைவர் நரசப்பய்யா கொலையுண்டு இறந்து போனார்.

 

    • தளபதியை இழந்த படைகள் அதிர்ச்சியில் சிதறிப் பிரிந்தன. படைகளைப் பகுதி பகுதியாகப் பிரித்துத் திடீர் திடீரென்று மறைந்திருந்து தாக்கினர் மறவர் சீமை வீரர்கள். படைகள் புறமுதுகிட்டன. சேதுபதியை அழிக்க முடியவில்லை. தஞ்சைப் படைகளும் அறந்தாங்கி வழியாகத் திரும்பி ஓட்டமெடுத்தன.

 

    • கிழவன் சேதுபதியிடம் தோற்ற இந்தத் தோல்வி ராணி மங்கம்மாளுக்குப் பேரிடி ஆயிற்று. பல ஆண்டுகள் மதுரைச் சீமையைப் பற்றி நினைப்பதுகூடக் கெட்டகனவாக இருந்தது. கிழவன் சேதுபதி என்ற பெயரே சிம்மசொப்பனமாகிவிட்டது. அவரை அவளால் அசைக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் சேதுபதி மடங்காமல் நிமிர்ந்து நின்று தன்னிச்சையாக ஆட்சிநடத்த முற்பட்டுவிட்டார்.

 

    • சில ஆண்டுகளில் மறவர் சீமைப் பகுதிகளிலும், இராமநாதபுரத்திலும் ஒரு கடும் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டன. அதே நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ராணி மங்கம்மாளின் ஒத்துழைப்போடு தஞ்சை மன்னன் ஷாஜி மறவர் சீமையின் மேல் படையெடுத்தான்.

 

    • ராணி மங்கம்மாள் தான் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் ஷாஜியைக் கொண்டு சேதுபதியை இம்முறை ஒடுக்கிவிடும் நோக்குடன் அவனுக்கு எல்லா உதவிகளையும் மறைவாகச் செய்திருந்தாள்.

 

    • ஷாஜியின் படையெடுப்பு மார்க்கம் இம்முறை மாற்றப்பட்டிருந்தது. தஞ்சையிலிருந்து படைகள் அறந்தாங்கி வழியாக நாட்டிற்குள் நுழைந்தன.

 

    • சோற்றுப் பஞ்சமும் தண்ணீர்ப் பஞ்சமும் மறவர் சீமை வீரர்களை நலியச் செய்திருக்கும் என்று ஷாஜியும் மங்கம்மாளும் போட்டிருந்த கணக்குத் தப்பாகிவிட்டது.

 

    • கடுமையான பஞ்சத்தினால் பீடிக்கப்பட்டிருந்த போதிலும் மறவர் சீமை வீரர்கள் அடிபட்ட புலிபோல் சீறியெழுந்தனர். வயிற்றுப் பசியை விட நாட்டைக் காக்கும் தன்மானம் பெரிதெனப் போரில் இறங்கினர் மறவர்கள். அந்தச் சிரமதசையிலும் சேதுபதியின் கட்டளையைத் தெய்வ வாக்காக மதித்து அதற்குக் கீழ்ப்பணிந்து போரிட்டனர். பஞ்சமும், பசியும் அவர்களது வீரத்தையும் விசுவாசத்தையும் ஒரு சிறிதும் பாதிக்கவில்லை. பசியைவிட நாட்டைக் காக்கும் உணர்வு அவர்களிடம் பெரிதாக இருந்தது. அதன் விளைவாகத் தஞ்சை அரசன் ஷாஜியின் முயற்சி பலிக்கவில்லை. தஞ்சைப் படைகளையும், ஷாஜியையும் ஓட ஓட விரட்டினார்கள் மறவர் சீமை வீரர்கள். தஞ்சைப் படைகளும் ஷாஜியும் அறந்தாங்கி வரை பின்வாங்கி ஓட நேரிட்டது. சேதுபதி அறந்தாங்கியை வென்று அறந்தாங்கிக் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டு விட்டார்.

 

    • தனக்கு ஓயாத தொல்லை கொடுத்து வந்த பல எதிரிகளை வெல்ல முடிந்தாலும் கிழவன் சேதுபதி என்ற மூத்த சிங்கத்திடம் மட்டும் ராணி மங்கம்மாளின் முயற்சிகள் பலிக்கவில்லை. சேதுபதி அஜாதசத்ருவாக இருந்தார். ராஜ தந்திரத்திலும் சரி, வீரத்திலும் சரி, போர் முறைகளிலும் சரி, அவரை வெல்வது மிகவும் அரிதாக இருந்தது.

 

    • அவருடைய சுட்டுவிரல் எந்தத் திசையில் எப்படி அசைகிறதோ அப்படி நடந்து கொள்ள மறவர் நாடு முழுதும் ஆயத்தமாக இருந்தது. மறவர் நாட்டிலிருந்த இந்தக் கட்டுப்பாடும் விசுவாசமும் சேதுபதியின் வலிமைகளாக அமைந்திருந்தன. அவரை யாரும் எதுவும் செய்து வீழ்த்த முடியாத மூலபலம் மறவர் சீமையில் அவருக்கிருந்த செல்வாக்கில் குவிந்திருந்தது.

 

    • கிழவன் சேதுபதி விஷயத்தில், இனி எதுவும் நம்மால் முடியாது என்ற முடிவுக்கு வந்தாள் ராணி மங்கம்மாள். தோல்வியை அவள் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. கிழவன் சேதுபதியை தானோ மற்றவர்களோ வெல்ல முடியாது என்பதற்காகக் கவலைப்பட்டதைவிட வேறொன்றிற்காக அவள் அதிகம் கவலைப்பட வேண்டியிருந்தது. சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்க முடியவில்லையே என்று கவலைப்படாவிட்டாலும் இருப்பதைப் படிப்படியாக இழந்துவிடக் கூடாதே என்ற கவலை முதன்முதலாக அவள் மனத்தில் இப்பொழுது மேலெழுந்து வாட்டத் தொடங்கியது.

 

    • பேரன் விஜயரங்கனின் வளர்ச்சியில் எந்தத் தனித் திறமையையும் காணமுடியாமல் இருந்தது வேறு அவள் மனவாட்டத்துக்குக் காரணமாயிற்று.

 

    • இராயசம் அச்சையாவே தளவாயானார். மறவர் நாடு தனி நாடாகச் சுயாதீனம் பெற்று நிமிர்ந்து நிற்பதை அவர்கள் சிரமத்தோடு ஜீரணித்துக் கொண்டு வாளா இருக்க வேண்டியதாயிற்று.

 

    • வயதாக வயதாகக் கிழவன் சேதுபதியின் வீரமும் பிடிவாதமும் அதிகமாயிற்றேயன்றிக் குறையவில்லை. நினைத்ததை முடிக்க முயலும்போது சேதுபதியின் விழிகளில் வீரக்கனல் தெறித்தது.

 

    • இந்தச் சமயத்தில் கிழவன் சேதுபதியின் பங்காளி ஒருவரைப் பிரிட்டோ பாதிரியார் மதம் மாற்றிக் கிறிஸ்துவராக்கியதால் மறவர் சீமையில் பெரும் புயல் வீசியது. சேதுபதி சீறி எழுந்தார். அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருந்தன.

 

    • ————-

 


 

24. பிரிட்டோ பாதிரியார் கொலையும் பின் விளைவுகளும் 

    • கிழவன் சேதுபதியைப் போலவே அரசுரிமை வாரிசுகளில் ஒருவராக இருந்த தடியத்தேவர் என்பவரை ஜான்டி பிரிட்டோ பாதிரியார் முயன்று கிறிஸ்தவராக மதம் மாற்றி விட்டார்.

 

    • போர்ச்சுகலுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தவுடன் அவர் செய்த மதமாற்றங்களில் இது மிகவும் பெரியதாகவும், சர்ச்சையைக் கிளப்பக் கூடியதாகவும் அமைந்தது. இம்முறை பிரிட்டோ பாதிரியாரும் தாம் இதற்கு முன்பு செய்தது போல் தயக்கமோ பயமோ இல்லாமல் தமது உயிரையே இழந்தாலும் பரவாயில்லை என்கிற அளவு துணிச்சலுடன் மதமாற்ற முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார். இராமநாதபுரத்து மறவர் சீமையைச் சேர்ந்த இந்துக்களின் எதிர்ப்பைக்கூட அவர் பொருட்படுத்தவில்லை.

 

    • கிழவன் சேதுபதிக்குப் பிறகு அல்லது அவர் உயிருடன் இருக்கும்போதே ஆட்சி தடியத்தேவருக்குக் கிடைக்கும்படிச் செய்யப்படும் என்ற ஆசை வார்த்தைகளும் கிழவன் சேதுபதி மேலிருந்த வெறுப்புமே தடியத் தேவர் கிறிஸ்தவத்தை விரும்பி ஏற்கச் செய்திருந்தன.

 

    • இராமநாதபுரம் மன்னர்களுக்குப் பல மனைவியர் இருந்ததினால் அரசுரிமை வாரிசுகள் என்று சிலரே தகுதி பெற்றனர். அந்தச் சிலரில் கிழவன் சேதுபதி பட்டம் ஏற்றிருக்காவிட்டால் தடியத்தேவர் தான் பட்ட மேற்றிருப்பார் என்கிற அளவிற்கு நெருக்கமாக இருந்தும் அவரது வாய்ப்புத் தவறிப் போயிருந்தது. தடியத்தேவர் விரக்தியோடிருந்தார். அத்தகையவரைத் தேடிப் பிடித்துக் கிறிஸ்தவராக்கிய ஜான்டி பிரிட்டோவின் செயல்கள் கிழவன் சேதுபதிக்குப் பலத்த சந்தேகங்களை உண்டாக்கின. ஆட்சியை அபகரிப்பதற்கான சதியோ என்றுகூட இதனைப் பற்றிக் கிழவன் சேதுபதி நினைத்தார்.

 

    • இந்தச் சந்தேகத்துக்குக் காரணம் இல்லாது போகவில்லை. கிழவன் சேதுபதி மறவர் சீமையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்காவிட்டால் தடியத்தேவர் தான் அதை ஏற்றிருப்பார் என்கிற அளவு நெருக்கமான வாரிசாக இருந்தார் அவர். தடியத்தேவரை மதம் மாற்றியது கிழவன் சேதுபதியைச் சீறி எழ்ச் செய்தது. இதற்கு மற்றொரு காரணமும் இருந்தது.

 

    • தடியத்தேவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்முன் தமக்கிருந்த ஐந்து மனைவிமார்களில் நான்கு பேரை விலக்கிவிட்டு ஒரே ஒருத்தியை மட்டும் மனைவியாக ஏற்க வேண்டியதாயிற்று. மற்ற நால்வரையும் தள்ளி வைப்பது தவிர்க்க முடியாது போயிற்று. அப்படி அவர் நீக்கி வைத்த நான்கு மனைவிமார்களில் ஒருத்தி கிழவன் சேதுபதியின் சகோதரி மகளாக இருந்தாள். மணவாழ்வில் சுகங்களை அதிகம் அடையாத இளம் பெண்ணாக இருந்த அவள் தன் கணவன் தடியத்தேவரிடம் போய்த் ‘தன்னைத் தொடர்ந்து மனைவியாக ஏற்றுக்கொள்ளும்படி’ கெஞ்சிப் பார்த்தாள். தடியத்தேவர் பிடிவாதமாக அதற்கு மறுத்துவிட்டார்.

 

    • கணவன் மறுத்தவுடன் நேரே தன்னுடைய தாய் மாமனான கிழவன் சேதுபதியிடம் போய் நடந்த விவரங்களைத் தெரிவித்தாள் அந்தப் பெண். கூடப் பிறந்தவளின் மகள் தன்னிடம் வந்து கதறியழுது கண்ணீர் சிந்தியதைக் கண்டு மனம் கொதித்தார் சேதுபதி.

 

    • தடியத்தேவர் மேல் எழுந்த ஆத்திரம் அவர் மாறிய மதத்தின் மேலும் அவரை அப்படி மாற்றியவர்கள் மேலும் பாய்ந்தது. தடியத் தேவரின் மத மாற்றத்தைப் பெரிய அரசியல் சதியாகக் கருதினார் சேதுபதி. தடியத் தேவரைக் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியதன் மூலம் நமது அரசையும், ஆட்சியையும் கவிழ்ப்பதற்கு ஏற்பாடு நடப்பதாக சேதுபதியும் அவருடை நெருங்கிய நண்பர்களும் நினைத்தார்கள். பெருவாரியான மறவர் சீமை வீரர்களும் அப்படியே எண்ணினார்கள். அதன் விளைவாக மறவர் சீமையில் பெரும் புயல் எழ்ந்தது. சேதுபதியின் கட்டளைப்படி மறவர் நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. பாதிரியார்கள் பலத்த கொடுமைக்கு ஆளாயினர்.

 

    • “என் சகோதரி மகளை வாழாவெட்டியாக்கி என் ஆட்சியையும் அழிப்பதற்கு ஏற்பாடு நடக்கிறது! இதை நான் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது” என்று குமுறி எழுந்த சேதுபதி பிரிட்டோ பாதிரியாரையும் ஏனைய பாதிரிமார்களையும் சிறைச்சாலையில் பிடித்து அடைக்கும்படி உத்தரவிட்டார்.

 

    • வெளியூரில் சிறைப்படிக்கப்பட்ட பிரிட்டோ பாதிரியார் இராமநாதபுரம் கொண்டு வரப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

 

    • பிரிட்டோ பாதிரியார் சிறைவைக்கப்பட்ட சமயம் தடியத்தேவரும் இராமநாதபுரத்தில் தான் இருந்தார். பாதிரியாரை எதுவும் செய்தால் தடியத்தேவர் கலவரம் விளைவிக்கக்கூடும் என்று தயங்கினார் கிழவன் சேதுபதி. தடியத்தேவர் இராமநாதபுரத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தது பிரிட்டோ பாதிரியார் விஷயத்தில் ஒரு முடிவெடுக்க முடியாமல் சேதுபதியைத் தயங்க வைத்தது.

 

    • இராமநாதபுரத்தில் வெடித்த இந்தக் கிறிஸ்தவ எதிர்ப்பு உணர்ச்சி மெல்ல மெல்ல தஞ்சைக்கும் பரவியது. தஞ்சை மன்னன் உடையார் பாளையம் குறுநில மன்னனுக்கும், திரிசிரபுரத்திலிருந்த ராணி மங்கம்மாளுக்கும் அவரவர்கள் நாட்டிலிருந்த கிறிஸ்தவர்களை உடனே வெளியேற்றுமாறு தன் கைப்பட எழுதியனுப்பினான். வேறு காரணங்களுக்காகத் தஞ்சை நாட்டுடன் ராஜதந்திர நட்பு வைத்துக் கொண்டிருந்தாலும் அந்நாட்டு மன்னனின் கிறிஸ்தவ எதிர்ப்புச் சம்பந்தமான யோசனையை ராணி மங்கம்மாள் ஏற்கவில்லை. சேதுபதியைப் போலவோ, தஞ்சை மன்னனைப் போலவோ நடந்து கொள்ளாமல் நேர்மாறாகத் தன் ஆட்சி எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பில் கிறிஸ்தவர்கள் எப்போதும் போல் அமைதியாகவும், நலமாகவும் வாழுமாறு பார்த்துக் கொண்டாள் அவள். எல்லா மக்களிடமும் காட்டிய அன்பையும் ஆதரவையும், பரிவையும், கிறிஸ்தவர்கள் மேலும் காட்டினாள். அவர்கள் பாதுகாப்பாக வாழுமாறு பார்த்துக் கொண்டாள்.

 

    • “கிறிஸ்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்றாவிட்டால் இந்து சமயத்துக்கும், இந்துக் கோயிலுக்கும், இந்துக்களால் ஆளப்படும் அரசாட்சிக்கும் உடனடியாக ஆபத்து ஏற்படும்” என்று தஞ்சை மன்னன் ராணி மங்கம்மாளுக்கு மிகவும் வற்புறுத்தி எழுதியிருந்தான்.

 

    • “இறைச்சி உண்பவர்கள் எல்லாரும் அருகில் வாழ்ந்தாலே அரிசிச் சாதம் உண்பவர்கள் அனைவருக்கும் உடனடியாக ஆபத்து என்பது போலிருக்கிறது உங்கள் கூற்று. அதை நான் ஏற்பதில்லை. காய்கறி, அரிசிச் சோறு உண்பவர்களையும், இறைச்சி, மீன் உண்பவர்களையும் எப்படி ஒரே ஆட்சியின் கீழ் சம உரிமைகளோடு மக்களாக வாழ விடுகிறோமோ அப்படித்தான் இந்தப் பிரச்சனையையும் நான் பார்க்கிறேன். ஓர் ஆட்சியின் கீழ் வாழும் மக்களில் யார் எந்த எந்த மதநெறியை ஏற்றுக்கொண்டு அநுசரித்து வாழ விரும்பினாலும் அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அதுதான் தர்மம். இதை அரசாட்சி வற்புறுத்தித் திணிக்க முடியாது என்று நினைக்கிறேன்” என்று தஞ்சை மன்னனுக்கு மிக விளக்கமாக மறுமொழி அனுப்பியிருந்தாள் ராணி மங்கம்மாள்.

 

    • சேதுபதி கிறிஸ்தவர்களை எவ்வளவுக்கு எவ்வளவு வெறுத்தாரோ அவ்வளவுக்கு அவ்வளவு ராணி மங்கம்மாள் அவர்கள் மேல் அன்பும் ஆதரவும் காட்டினாள்.

 

    • பங்காளித் தடியத்தேவருக்குத் தெரியாமலே பாம்பாற்றங்கரையில் இருந்த ஓரியூருக்குப் பிரிட்டோ பாதிரியாரை அனுப்பி அங்கு அவரைக் காவலில் வைக்க ஏற்பாடு செய்தார் கிழவன் சேதுபதி. ஓரியூர் சேதுபதியின் ஆட்சிக்கு அடங்கிய சிறு தலைக்கட்டி ஒருவரால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. சேதுபதிக்கு மிகவும் வேண்டியவர் அந்த ஓரியூர்த் தலைக்கட்டுத் தேவர். அந்தத் தேவருக்கு எழுதியனுப்பிய அந்தரங்கக் கடிதத்தில் பாதிரியாரைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்று விடுமாறு உத்தரவு இட்டிருந்தார் கிழவன் சேதுபதி.

 

    • ஓரியூர்த் தலைக்கட்டு பாதிரியாரைக் கொல்லத் தயங்கினார். ஆனால் அவருடைய பிரதானியாயிருந்த முருகப்பப் பிள்ளை என்பவர் துணிந்து சேதுபதியின் கட்டளைப்படி பாதிரியாரை உடனே கொன்றுவிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சேதுபதியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் தேவரை வற்புறுத்தி நிர்ப்பந்தப்படுத்தினார்.

 

    • கிழவன் சேதுபதியின் கடுங்கோபத்துக்கு ஆளாகிச் சிரமப்படுவதைவிடப் பாதிரியாரைக் கொன்று விடுவது நல்லது என்ற முடிவுக்கு வந்தார் ஓரியூர்த் தலைக்கட்டுத் தேவர்.

 

    • இம்முடிவின் விளைவாக ஜான்டி பிரிட்டோ பாதிரியார் கொல்லப்பட்டார். அவர்களுடைய உடல் சின்னாபின்னப்படுத்தப் பெற்றுக் கழுகுகளுக்கு உணவாக இடப்பட்டது.

 

    • நீண்ட நாள்களுக்கு இந்தக் கொலை இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மறவர் சீமையில் எழுந்த புயலும் ஓயவில்லை. தொடர்ந்து கிறிஸ்தவ சமய அன்பர்களும், மதகுருமார்களும் தொல்லைக்கு ஆளானார்கள்.

 

    • பெர்னார்டு பாதிரியார் என்ற மற்றொரு குரு முப்பத்திரண்டு பற்களும் நொறுங்கி உதிருமாறு தாக்கப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெர்னார்டு பாதிரியாரின் சீடர்கள் பிரக்ஞை மங்கித் தரையில் விழுகிற வரை சவுக்கடி பெற்றார்கள். இவற்றை எல்லாம் கேள்விப்பட்டு ராணி மங்கம்மாள் மனம் வருந்தினாள். மறவர் நாட்டிலும், தஞ்சையிலும் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ மத குருக்களும் கொடுமைப்படுத்தப்பட்டது போல் தன் ஆட்சியில் எதுவும் நடைபெற்றுவிடாமல் பொது நோக்கோடு கவனித்துக் கொண்டாள் அவள். தன் சொந்தமதமாகிய இந்து மதத்தின் மேலுள்ள பற்றை விட்டு விடாமல் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பேருதவிகளைச் செய்து மிகவும் பரிவுடன் நடந்து கொண்டாள் அவள்.

 

    • கிழவன் சேதுபதி பிடிவாதத்தாலும், கோபத்தாலும் தொடர்ந்து சிறைவாசத்தை அநுபவித்துச் சாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மெல்லோ பாதிரியார் உயிர் பிழைத்துச் சிறையிலிருந்து விடுதலை பெறவும் மங்கம்மாள் உதவி செய்தாள். இப்போதும் இதற்கு முன்பும் இப்படிப் பல உதவிகளைச் செய்து, புகழ்பெறுவது அவளது இயல்பாக இருந்து வந்திருக்கிறது.

 

    • இதற்கு முன்பு ஒருமுறை மதுரையில் புச்சட் என்னும் பாதிரியாருக்கும் அவருக்குக் கீழே பணிபுரிந்த உபதேசியார்களுக்கும் ஏற்பட்ட சர்ச்சையைத் தளவாய் நரசப்பய்யா உயிரோடிருந்த காலத்தில் அவர் மூலம் சுமூகமாகத் தீர்த்து வைத்து நல்ல பெயரெடுத்திருந்தாள். பள்ளி வாசலுக்கும், தர்க்காக்களுக்கும், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் நிறைய மானியங்களும், நிலங்களும் அளித்துப் பெயர் பெற்றிருந்தாள். அதே சமயத்தில் இந்துக் கோயில்களுக்கும் எண்ணற்ற அறங்களைச் செய்திருந்தாள்.

 

    • மங்கம்மாள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு நன்மை செய்வதைப் போலவே இந்துக்களில் ஒரு பிரிவினராகிய சௌராஷ்டிரர்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்கினாள். சௌராஷ்டிரர்கள் முப்புரி நூலணிந்து அந்தணர் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கலாமா? என்பது பற்றி எழுந்த சர்ச்சைக்குத் தக்க அறிஞர்கள் மூலம் தீர்வு கண்டு நியாயம் வழங்கினாள் ராணி மங்கம்மாள். அது அவள் புகழை உயர்த்தி வளர்த்தது.

 

    • இது சம்பந்தமான சர்ச்சை எழுந்ததுமே தன் பிரதானிகளையும், காரியஸ்தர்களையும், வித்வான்களையும், ஆசாரியர்களும் மேதைகளும் நிறைந்த திருவரங்கத்திற்கு அனுப்பி அவர்களைக் கலந்தாலோசித்து அறிவுரை பெற்று வரச் செய்தாள் ராணி.

 

    • திருவரங்கத்து மகான்கள் கூறிய யோசனைப்படியே சௌராஷ்டிரர்களுக்குச் சாதகமாக இராயசம் கோடீஸ்வரய்யா மூலம் உத்தரவு பிறப்பித்திருந்தாள். சௌராஷ்டிரர்கள் மனம் மகிழ்ந்து ராணி மங்கம்மாளை வாழ்த்தினர். நன்றி செலுத்தினர்.

 

    • இவ்வளவு நன்மைகளுக்கும் நடுவே மங்கம்மாளுக்குக் கவலையளித்த செய்தி ஒன்றிருந்தது. பேரன் விஜயரங்கனின் நிலையில் எந்த வளர்ச்சியும் இல்லை. வெறும் வயதுதான் வளர்ந்ததேயன்றி அறிவு வளர்ச்சியில் அவன் பின்தங்கி இருந்தான். இளைஞனான பின்னரும்கூட அவன் அப்படியே இருந்ததைப் பற்றி அவள் கவலைப்பட்டு உருகினாள்.

 

    • சில சமயங்களில் அவளையே எதிர்த்துப் பேசவும் அவன் தயங்கவில்லை. முரட்டுத்தனமாகப் பழகினான். அவன் சிறு குழந்தையாயிருந்தபோது வண்டியூர்த் தெப்பக் குளத்தின் மைய மண்டபக் கோப்புரத்திலிருந்து தன்னைக் கீழே பிடித்துத் தலைக்குப்புறத் தள்ளுவதுபோல தான் கண்டிருந்த கெட்ட சொப்பனம் இப்போது அடிக்கடி அவளுக்கு நினைவு வந்தது.

 

    • இராயசம் பொறுப்பைக் கோடீசுவரய்யாவிடம் ஒப்படைத்து விட்டுத் தளவாய் ஆகியிருந்த அச்சையாவும் ராணி மங்கம்மாளும் அரசியல் விஷயமாகத் தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு சமயம் விஜயரங்கன் அந்தப் பக்கமாக வந்தான்.

 

    • அநுமதியின்றித் திடும் பிரவேசமாக அவன் அப்படி மந்திராலோசனை மண்டபத்துக்குள் நுழைந்ததே அவர்கள் இருவருக்கும் பிடிக்கவில்லை. குதிரை குப்புறக்கீழே தள்ளியதுமன்றிக் குழியையும் பறித்ததாம் என்பதுபோல அவன் அவர்களை கேட்ட கேள்வி எரிச்சலும் அருவருப்பும் உண்டாக்கக் கூடியதாயிருந்தது. ராணி மங்கம்மாள் தன் அருமைப் பேரன் இப்படி இந்தச் சிறிய வயதில் அப்படி ஒரு விஷத்தைத் தன்முன் கக்கமுடியும் என்று எதிர்பார்த்திராத காரணத்தால் அதிர்ச்சியடைந்தாள். அச்சையா அவன் கூற்றைக் கேட்டுக் கூச்சமும் அருவருப்பும் அடைந்தார்.

 

    • ————-

 


 

25. பாவமும் பரிகாரங்களும் 

    • அன்றொரு நாள் அரண்மனை நந்தவனத்தின் அதிகாலை இருளில் பணிப் பெண்கள் தங்களுக்குள் ஒட்டுப் பேசியதை இன்று வெளிப்படையாகவே தனக்கும் அச்சையாவுக்கும் முன்னால் விஜயரங்கன் பேசக் கண்டாள் ராணி மங்கம்மாள்.

 

    • முதலில் பணிப்பெண்கள் மத்தியில் முளைவிட்ட ஓர் அபவாதம் இப்போது தன் பேரன் வரை பரவியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள் அவள். பனைமரத்தின் கீழே நின்று ஒரு கலயத்தில் பசுவின் பாலைக் குடித்தாலும் உலகம் அதை நம்பாது என்பது மெல்லப் புரிந்தது. இராயசம் அச்சையா ஆஜானுபாகுவாகவும், அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தது தான் காரணம் என்று தோன்றினாலும் மனம் அதை நினைத்துப் பார்க்கவே கூசியது. பேரன் விஜயரங்கன் அப்பாவி என்ற நினைப்பு மாறி அவனுக்குள்ளும் விஷம் இருப்பது புரியத் தொடங்கியது அவளுக்கு.

 

    • மிகவும் பெரிய பெரிய ராஜ தந்திரப் பிரச்சனைகளுக்குக் கூடப் பதறாமல் இருந்த ராணி மங்கம்மாள் இந்தச் சொந்த அபவாதத்துக்காகப் பதறிக் கலங்கினாள். அவள் மனம் சஞ்சலப்படத் தொடங்கியது. சொந்தப் பேரனே முளைத்து மூன்று இலைவிடாத சிறு வயதில் இப்படி அபவாதங்களையும் வதந்திகளையும் நம்பித் தன்னை எதிர்த்துக் கேட்கும்படி ஆகிவிட்டதே என்று வருந்தினாள். யாராவது அவனுடைய மனத்தை அப்படிக் கெடுத்திருப்பார்களோ? என்றுகூட எண்ணிக் கவலைப்பட்டாள்.

 

    • அப்படியே ஒருவர் தவறாகச் சொல்லிக் கொடுத்திருந்தாலும் சிறிதுகூட இங்கிதமும் நாசூக்கும் இல்லாமல் அவன் நடந்துகொண்டவிதம் அவளை ஆழமாகப் புண்படுத்திப் பாதித்திருந்தது. பேரன் விஜயரங்கன் இப்படி நடந்து கொண்டதைப் பார்த்து மதிப்பும் கௌரவமும் நிறைந்த அச்சையா தன்னைப் பற்றி என்ன எண்ணியிருப்பார் என்று நினைத்து மனம் குன்றிப் போயிருந்தாள் அவள்.

 

    • தான் எத்தனையோ பெரிய காரியங்களைச் செய்த போது தனக்கு வந்த புகழை விடச் செய்யாத தவறு ஒன்றிற்காக ஏற்படும் அபவாதம் பெரிதாக எழுவது கண்டு மனம் நலிந்தாள். தான் செய்தவற்றில் பெரிய காரியங்கள் எனத் தோன்றியவற்றை மீண்டும் அவள் நினைவு கூர்ந்தாள். பலவீனமான மனநிலையில் பழைய சாதனைகளை நினைத்து ஆறுதலடையும் மனநலிவு அப்போது அவளையும் விட்டபாடில்லை.

 

    • முன்பு கணவர் சொக்கநாத நாயக்கர் காலமாகி ரங்ககிருஷ்ணன் கைக்குழந்தையாக இருந்தபோது ஆட்சி அவள் பொறுப்பில் இருந்தது. அப்போது நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றை இன்று அவள் நினைத்தாள்.

 

    • வடக்கே சந்திரகிரியிலிருந்து வந்து திரிசிரபுரம் அரண்மனையில் தங்கியிருந்தவனும் மகாராணி மங்கம்மாளுக்கு இளைய சகோதரன் முறையுள்ளவனுமாகிய ஓர் அரச குடும்பத்து மனிதன் பெரிய தவறு ஒன்றைச் செய்துவிட்டான். அவன் செய்திருந்தது பழிபாவத்துக்கு அஞ்சாத படுபாதகமான செயல்.

 

    • அதற்காக மரண தண்டனையே வழங்கபட்டிருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றமும், நீதிவழங்கவேண்டி நீதிபதியும், குற்றவாளி ராணிக்கு உடன் பிறந்தான் முறையினன் ஆயிற்றே என்று தீர்ப்புக் கூறாமலே விட்டுவிட்டார்கள். குற்றவாளி தன் சகோதரன் முறையினன் என்பதற்காக ஏதாவது சலுகை காண்பிக்கிறார்களா என்பதை முதலில் இருந்தே ஒற்றர்கள் வைத்துக் கண்காணித்து வந்த ராணி மங்கம்மாள் துணிந்து தானே நீதி வழங்க முன் வந்தாள்.

 

    • ‘ராணிக்குச் சகோதரன் முறை என்பதனால்தான் குற்றவாளிக்குத் தண்டனை எதுவும் கொடுக்கவில்லை’ என்று ஊரெல்லாம் வேறு பேச்சுக் கிளம்பிவிட்டது. ராணி மங்கம்மாள் தானே நீதிமன்றத்தைக் கூட்டினாள். “தங்கள் சகோதரனுக்கு எப்படி மரண தண்டனை அளிப்பது என்பதே எங்கள் தயக்கம் என்றுதான் நாங்கள் தீர்ப்புக் கூறவில்லை” என்று நியாயாதிபதிகள் அவளிடமே தயக்கத்தோடு கூறினார்கள். “வேண்டியவர்கள் வேண்டாதவர் என்றெல்லாம் பார்ப்பது நியாயத்திற்கு அழகில்லை. குற்றவாளிக்கு, அரசியாகிய நானே மரணதண்டனை விதிக்கிறேன்” என்று சிறிதும் கலங்காத குரலில் தீர்ப்பளித்தாள் ராணி மங்கம்மாள். அந்த நேர்மையைக் கண்ட அன்று நீதிபதிகள் வியந்தனர்.

 

    • அப்படி வியப்பைச் சம்பாதித்த தனது நேர்மைக்கா இன்று இப்படி ஓர் அபவாதம் என்றெண்ணும் போது அவள் கண்களில் நீர் சுரந்தது.

 

    • இன்னொரு முறை அவள் பழனி மலையிலுள்ள முருகப் பெருமாளை வணங்குவதற்குச் சென்றிருந்தாள். அடிவாரத்திலிருந்து மலைக்குச் செல்லும்போது உரிய காவலர்கள், பரிவாரம் மெய்க்காப்பாளர்கள் எல்லாரும் உடனிருந்தும்கூட ஒரு சிறிய அசம்பாவிதம் நேர்ந்துவிட்டது.

 

    • ராணி தரிசனத்துக்காக மலைமேல் ஏறிக் கொண்டிருக்கும்போது தரிசனத்தை முடித்துவிட்டுப் பக்தி பரவசச் சிலிர்ப்போடு தன்னை மறந்த இலயிப்பில், மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த வாலிபன் ஒருவன் அவள்மேல் மோதிவிடுவது போல் மிக அருகே வந்துவிட்டான்.

 

    • மங்கம்மாளின் மெய்க்காப்பாளர்கள் அந்த வாலிபனைப் பிடித்துத் தண்டிக்க ஆயத்தமாகி விட்டார்கள். ராணியோ மெய்க்காப்பாளர்கள் அவ்விதம் அவனைத் தண்டித்து விடாமல் தடுத்ததுடன் மன்னித்து அனுப்பினாள்.

 

    • “இந்த இளைஞன் வேண்டுமென்று தவறு செய்யவில்லை. பக்திப் பரவசத்தில் இவன் தன்னை மறந்து கீழே இறங்கி வரும்போது எதிரே நான் வருவதைக் கவனிக்கத் தவறிவிட்டான். இறைவனாகிய முருகனுக்கு முன்னால் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. அனைவரும் சமமான பக்தர்களே! இவனை இவன் வழியில் போகவிடுங்கள்” என்று கூறிப் பெருந்தன்மையோடு நடந்துகொண்டாள் ராணி மங்கம்மாள்.

 

    • அன்று அந்தப் பெருந்தன்மை நாடு முழுவதும் பரவிப் புகழாக மலர்ந்ததே, அது இன்று எங்கே போயிற்று?

 

    • முன்பொரு முறை கொள்ளிடத்தில் பெரிய வெள்ளம் வந்து சில கரையோரத்துச் சிற்றூர்களும், அவற்றின் கோயில்களும் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தன்று மறுநாள் இரவு இங்கே அரண்மனையில் உறங்கிக் கொண்டிருந்த ராணி மங்கம்மாளின் கனவிலே திருமால் தோன்றி, ‘ராணி! நான் கொள்ளிடக்கரை மணலில் கேட்பாரற்று அநாதையாக ஒதுங்கிக் கிடக்கிறேன். என்னை வந்து காப்பாற்றுவாயாக’ என்பது போல் கட்டளையிட்டார். முதலில் வெள்ளத்தில் சீரழிந்த மக்களுக்கு உணவு, உடை, உறையுள் உதவிகள் செய்ய உத்தரவுகளைப் பிறப்பித்தாள். பின்பு தன் கனவில் வந்த இடத்தை அடையாளம் கண்டு தேடிச் சென்று விக்ரகங்களை எடுத்துக் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்ததோடு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கரையோரத்துச் சிற்றூர்களையும் புனர் நிர்மாணம் செய்ய உடன் உத்தரவிட்டாள் ராணி மங்கம்மாள்.

 

    • அப்போது மக்கள் அவளைக் கொண்டாடி வாயார வாழ்த்தினார்களே, அந்த வாழ்த்து இப்போதும் இருக்கிறதா, இல்லை மங்கிப் போய்விட்டதா? தன் புகழும் பெருமையும் மங்குவதுபோல் அவளுக்குள் ஒரு பிரமை ஏற்பட்டது. எல்லாத் திசைகளிலும் தனக்கு எதிர்ப்பும் அபவாதமும், பெருகுவது போல் ஒரு நினைவு மனதில் மேலெழுந்தது. அவளால் அப்போது அப்படி நினைவுகள் எழுவதைத் தடுக்கவும் முடியவில்லை. பேரன் விஜயரங்கன் தன்மேல் பரிவுடன் இல்லாததோடு வெறுக்கிறான் என்பதும் புரிந்தது. அவனாகக் கெட்டுப் போனானா அல்லது அவன் மனத்தை யாராவது வலிந்து முயன்று கெடுத்தார்களா? என்பது அவளுக்குப் புரியவில்லை. அவள் மனம் அலை பாய்ந்தது. அமைதி இழந்தது. தன்னை வளர்த்து ஆளாக்கியவள் என்று பாட்டியாகிய ராணி மங்கம்மாளின் மேல் விசுவாசம் கொள்வதற்குப் பதில் ஆத்திரமும் எரிச்சலும் கொண்டிருந்தான் விஜயரங்கன். இந்த நிலையைக் கண்டு அவள் திகைத்தாள். மனம் தளர்ந்தாள்.

 

    • தான் செய்த எல்லா நல்ல செயல்களையும் புண்ணியங்களையும் நினைத்து மனம் குமுறினாள். கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பேதமின்றி நலங்களைப் புரிந்ததையும் வேண்டியபோதெல்லாம் விரைந்து சென்று உதவியதையும் எண்ணித் தனக்கா இப்படி அபவாதங்களும் விசுவாசத் துரோகங்களும் ஏற்படுகின்றன என்று மனமுறுகி அலமந்து போனாள்.

 

    • பேரனின் போக்கும் மற்ற நிகழ்ச்சிகளும் அவளை நடைப் பிணமாக்கியிருந்தன. ஒருநாள் பகலில் உணவுக்குப் பின்னர் அந்தப்புரத்தில் அரண்மனைப் பணிப் பெண்கள் சூழத் தாம்பூலம் தரிப்பதற்கு அமர்ந்தாள் ராணி மங்கம்மாள். மனம் வேறு எதையோ பற்றி நினைத்தபடி இருந்தது. உண்ணும்போது உணவிலும் மனம் செல்லவில்லை. கடனைக் கழிப்பது போல் உண்டு முடித்திருந்தாள். தாம்பூலம் தரிக்கும்போதும் அவளுடைய கைகள் ஏதோ இயங்கிச் செயல்பட்டனவேயன்றி மனம் அதில் இல்லை. அவள் விரும்பியிருந்தால் பணிப்பெண்களே பவ்யமாக அவளுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்திருப்பார்கள். ஆனால் அவள் அவர்கள் யாரையும் நாடாமல் தானே வெற்றிலை நரம்பு கிள்ளிச் சுண்ணாம்பு தடவி மடித்து உண்டு கொண்டிருந்தாள்.

 

    • திடீரென்று ஒரு வயது முதிர்ந்த பணிப்பெண் ராணி மங்கம்மாளை நோக்கி கூப்பாடு போட்டாள்.

 

    • “அம்மா! உங்களை அறியாமலே ஆகாத காரியம் பண்ணிக் கொண்டிருக்கிறீர்களே! இடக் கையால் வெற்றிலை மடித்துப் போட்டுக் கொள்கிறீர்களே? எல்லாம் தெரிந்த உங்களுக்கு இதுகூடவா மறந்துவிட்டது? கேடுகாலம் வந்தால்தான் இடக்கையால் தாம்பூலம் போட நேரிடும் என்பார்கள்.”

 

    • தன் நினைவு வந்து தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நிதானித்துப் பார்த்தபோதுதான் மங்கம்மாளுக்குப் பகீரென்றது. ஏதோ யோசனைப் போக்கில் தான் மாபெரும் தவறு செய்திருப்பது அவளுக்குப் புரிந்தது. கைத் தவறுதலாக நடந்திருந்தாலும் என்னவோ அபசகுனம் போல மனதில் உறைத்தது. அது நடக்கப் போகிற பெரிய அமங்கலம் ஒன்றின் சிறிய அமங்கல முன்னோடியாகவும் அது தோன்றியது. மனம் சஞ்சலம் அடைந்தது. கைதவறிக்கூட அமங்கலமான காரியத்தையோ பிழையான செயலையோ செய்துவிடாமல் விழிப்பாயிருக்கும் தானா இப்படி நடந்து கொண்டோம் என்றெண்ணிக் கூறினாள் அவள்.

 

    • இடக்கையால் தாம்பூலம் தரித்துக்கொள்வது மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. சாஸ்திர விற்பன்னர்களும், அரண்மனை புரோகிதர்களும் உடனே வரவழைக்கப்பட்டார்கள். தான் செய்த தவற்றைக் கூறி, “அதற்கு என்ன பரிகாரம்?” என்று அவர்களைக் கேட்டாள் மங்கம்மாள்.

 

    • அவர்கள் தங்களுக்குள் கலந்து பேசி நூல்களையும் ஆராய்ந்து பார்த்தார்கள். ராணி மங்கம்மாள் அவர்களைப் பணிவாக வேண்டிக் கொண்டாள்.

 

    • “இந்தப் பாவத்திற்கு என்ன பரிகாரங்களை நீங்கள் கூறினாலும் செய்யத் தயாராயிருக்கிறேன்! உடனே சொல்லுங்கள்.”

 

    • அவர்கள் விவரிக்கத் தொடங்கினார்கள். “மகாராணீ! இதற்குப் பரிகாரமாக நீங்கள் எண்ணற்ற விதங்களில் பல தான தருமங்களைச் செய்ய வேண்டும். அன்னதானம், சாலைகள், சத்திரங்கள் அமைத்தல், சுமங்கலிகளுக்கு வஸ்திரதானமும் தீபதானமும் செய்தல், கோயில்களுக்கு மானியங்கள் அளித்தல் ஆகியவை அவசியம் செய்யப்பட வேண்டிய தான தருமங்களில் சில ஆகும்.”

 

    • “பெரியோர்களே! மிகவும் நன்றி! உங்கள் அறிவுரைப்படி இன்றுமுதல் ஏராளமான தான தர்மங்களைச் செய்ய உத்தரவிடுகிறேன்” என்று கூறி அவர்களுக்கு உரிய சன்மானங்களை அளித்து விடை கொடுத்து அனுப்பி வைத்தாள் ராணி மங்கம்மாள். ஆனால் அரண்மனையிலிருந்து தான தருமங்கள் தொடங்கிய போது பேரன் விஜயரங்கன் அதற்குக் குறுக்கே நின்று தடுத்தான்.

 

    • “பாட்டீ! ராஜ்யத்தை என்னிடம் ஒப்படைப்பதற்குள் அரண்மனைக் கருவூலத்தை வெற்றிடமாக்கி என்னை நடுத்தெருவில் பிச்சையெடுக்க வைக்கவேண்டுமென்று சதி செய்கிறீர்களா? உங்கள் பாவத்துக்கு அரண்மனைச் சொத்தா பிணை?” என்று கடுமையாக ராணி மங்கம்மாளை எதிர்த்து வினவினான் விஜயரங்கன்.

 

    • ராணி மங்கம்மாள் முதலில் அவனது எதிர்ப்பைப் பொருட்படுத்தவில்லை. பற்பல அன்னசத்திரங்களைக் கட்டித்திறக்கும்படி உத்தரவிட்டிருந்தாள். ஏற்கெனவே மதுரையில் ஒரு பெரிய அன்ன சத்திரத்தைக் அவள் கட்டியிருந்தாள். புதிய சாலைகள் அமைக்கச் சொன்னாள். குதிரைகள், பசுக்கள், காளைகள் நீர் அருந்துவதற்கு வசதியாக சாலை ஓரங்களில் தண்ணீர்த் தொட்டிகளைத் திறக்கச் சொல்லி உத்தரவிட்டாள். பொது மக்களுக்காகக் குடிநீர் குளங்கள், ஊருணிகள், கிணறுகளைத் தோண்டச் செய்தாள். கோயில்களுக்கு மானியங்களை அளித்தாள். இன்னும் பற்பல தான தருமங்களை அயராமல் செய்தாள்.

 

    • இந்த தான தருமங்களுக்காக மக்கள் எல்லாரும் அவளைக் கொண்டாடினாலும் பேரன் மட்டும் விரோதியாகி விட்டான். ஆட்சியைத் தன்னிடம் ஒப்படைக்கப் பாட்டி தாமதப் படுத்துவதாகப் புரிந்து கொண்டு கலகம் செய்யவும் எதிர்ப்புக் குரல் கொடுக்கவும் தயங்கவில்லை அவன். அதற்காக அவனை யார் தூண்டி விட்டிருக்கிறார்கள் என்பதையும் ராணி மங்கம்மாளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அரண்மனையிலேயே சில உட்பகைப் பேர்வழிகளும், கலகக்காரர்களும் அவனைத் தூண்டுவதாகத் தெரியவந்தது. அவர்களை மங்கம்மாளால் உடனடியாகக் கண்டுபிடித்துத் தண்டிக்கவும் முடியவில்லை. குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக்காம்பு போல் பேரன் நடந்து கொள்ளத் தலைப்பட்டது அவளை மீளாக் கவலையில் வீழ்த்தியது. விஜயரங்க சொக்கநாதனுக்கு அந்த பால்ய வயதிலேயே தன்னைப் பற்றித் துர்ப்போதனை செய்கிறவர்கள் யார் யாரென்று அறிந்து அவர்களை உடன் முளையிலேயே கிள்ளி எறிய முயற்சி எடுத்துக் கொண்டாள் அவள்.

 

    • ஆனால் அம்முயற்சி பலிக்கவில்லை. அவர்கள் மிக இரகசியமாகச் செயல்பட்டார்கள். “இப்படியே இன்னும் சிறிது காலம் நீ கோட்டை விட்டுக் கொண்டிருந்தால் உனக்கு ஆட்சியைத் தராமலே உன் பாட்டி உன்னை ஏமாற்றிவிடுவாள்! தானதருமங்கள் செய்தே அரண்மனை கஜானாவையெல்லாம் காலியாக்கிவிடுவாள்” என்ற துர்ப்போதனை விஜயரங்கனுக்கு இடைவிடாது அளிக்கப்பட்டு வந்தது.

 

    • அவன் அடிக்கடி பாட்டியிடம் வந்து சீறினான். எதிர்த்துப் பேசினான். தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டான். தனக்கு உடனே முடிசூட்டுமாறு வற்புறுத்தினான். வசைபாடினான். பாசத்துக்கும் ஆத்திரத்திற்கும் நடுவே சிக்கித் திணறினாள் ராணி மங்கம்மாள். அவளுடைய மனநிம்மதி இப்போது அறவே பறிபோய்விட்டது.

 

    • ————–

 


 

26. பேரனின் ஆத்திரம் 

    • விஜயரங்க சொக்கநாதனுக்கு அப்போது இரண்டுங்கெட்டான் வயது. கைக்குழந்தையாக இருந்தபோதே அவனுக்கு முடிசூட்டியாயிற்று என்று பேர் செய்திருந்தாலும் அவனுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்பதை அறிந்து அவன் சார்பில் தானே ஆட்சி நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்து வந்தாள் ராணி மங்கம்மாள்.

 

    • பேரனின் நன்மைக்காக அவனைப் பற்றிய நல்லெண்ணத்தோடு அவள் செய்து வந்த இக்காரியம் அவனாலேயே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டபோதுதான் அவளுக்கு ஆச்சரியமும் ஆத்திரமும் ஏற்பட்டது. ஊர் உலகமெல்லாம் தன்னை மெச்சிப் புகழும்படி தான் ஆட்சி நடத்திவந்த போது தன் சொந்தப் பேரனே தனக்குத் தலைவலியாக உருவாகித் தொல்லை கொடுக்கத் தொடங்கியது அவள் மனத்தைப் பெரிதும் பாதித்தது.

 

    • அருமைத் தந்தையையும் ஆருயிர்த் தாயையும் அடுத்தடுத்து இழந்த குழந்தையைப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்து ஆளாக்கிய தனக்கா இந்தக்கதி என்று எண்ணியபோது அவள் மனம் நலிந்தது. மைசூர் மன்னனையும், இராமநாதபுரம் கிழவன் சேதுபதியையும் போன்ற புறப்பகைவர்களைப் பற்றிக் கவலைப் படுவதைவிட அதிகமாக இந்த உட்பகைமையையும், இதற்குக் காரணமான பேரன் விஜயரங்கனையும் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தாள் அவள். பேரனின் மனதைக் கெடுத்துத் துர்ப்போதனை செய்யும் கலக்க்காரர்களும் கெடுமதியாளர்களும் உள்ளேயே இருக்கிறார்கள் என்று தெரிந்தது. ஆனால் அவர்கள் கையும் களவுமாகச் சிக்கவில்லை.

 

    • பேரன் விஜயரங்கனுக்கு அப்போது பதினெட்டு வயது. அரண்மனையைச் சேர்ந்த சில துர்ப்போதனையாளர்கள் அவனைத் தோப்புத் துரவுகளுக்குத் தனியே அழைத்துச் சென்று மங்கம்மாளைப் பற்றித் தொடர்ந்து கோள் மூட்டினார்கள்.

 

    • இயல்பிலேயே விஜயரங்கன் இரண்டுங்கெட்டானாகவும் நைப்பாசைக்காரனாகவும் இருந்தான். பாட்டியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு அரசனாக வேண்டும் என்கிற ஆசை உள்ளவனாக இருந்த அவனை மற்றவர்கள் மேலும் கலைத்தனர்.

 

    • “உன் தந்தை ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கரின் காலத்திலும் இப்படித்தான் நடந்தது. அவருடைய இளமைப் பருவத்தில் பேருக்கு அவருக்கு முடிசூட்டிவிட்டு இவளே ஆட்சியை நடத்தினாள். இவளுக்குப் பதவி வெறியைத் தவிர வேறெதுவும் இல்லை. இவள் உயிரோடிருக்கிறவரை உன்னை ஆட்சி பீடத்தில் ஏற்கவே விடமாட்டாள். நீ இப்படியே வெறும் இளவரசு பட்டத்தைச் சுமந்து கொண்டு திரிய வேண்டியது தான். கடைசிவரை உன்னிடம் ஆட்சியை ஒப்படைக்காமலே உன்னை ஏமாற்றி விடுவாள் இவள். போதாக்குறைக்குத் தளவாய் அச்சையா வேறு இப்போது உன் பாட்டியோடு நெருக்கமாக இருக்கிறார். உன்னை எப்படி ஏமாற்றுவது என்பதற்கு அவர் வேறு யோசனைகளைக் கூறுவார்! அச்சையாவும் பாட்டியும் இந்த ஜன்மத்தில் உன்னை ஆளவிடப் போவதில்லை” என்று அவர்கள் விஜயரங்கனிடம் இடைவிடாமல் உருவேற்றிக் கொண்டிருந்தார்கள்.

 

    • இளவரசன் விஜயரங்கன் அவர்களுக்குச் செவி சாய்த்தான். அவர்கள் கூறுவதெல்லாம் சரியாயிருக்கும் என்றே அவனுக்குத் தோன்றியது. பாட்டி தன்னைப் பிரியமாக அரவணைத்து ஆளாக்கி வளர்த்ததெல்லாம் அவனுக்கு மறந்துவிட்டது. ஆசை பாசத்தை மறைத்துவிட்டது. பாட்டி மங்கம்மாள் தான் தன்னுடைய முதல் எதிரி என்று எப்படியோ அவனுடைய மனத்தில் ஒரு தப்பான அபிப்ராயம் ஏற்பட்டுவிட்டது. அவனைச் சுற்றியிருந்தவர்களில் ஒருவர்கூட அந்தத் தப்பான அபிப்ராயத்தை மாற்ற முற்படவில்லை. மாறாக அதற்கு உரமேற்றி அதை மேலும் மேலும் அவன் உள்ளத்தில் வளர்க்கவே முயற்சி செய்தார்கள்.

 

    • இராயசம் அச்சையாவுக்கும் தன் பாட்டிக்கும் தகாத முறையில் உறவு இருப்பதாகத் தன்னிடம் கோள் மூட்டியவர்களின் கூற்றை அவன் நம்பினான். ‘கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது’ என்ற பழமொழி விஜயரங்கனின் விஷயத்தில் உண்மையாயிருந்தது. கலகக்காரர்களின் போதனையே அவன் மனத்தினுள்ளே உருவேறிற்று. தான் அரசாட்சியை அடையாமல் இருக்கப் பாட்டி சதி செய்கிறாள் என்றே நம்பினான் அவன்.

 

    • போதாக்குறைக்கு அவனைக் கெடுத்த வந்தவர்கள் அவன் மனத்தில் பதியும்படி ஒன்றைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை. அவர்கள் சுட்டிக் காட்டியது அப்போது பொருத்தமாக இருந்தது. உடனே நம்பி ஏற்கும்படியாகவும்கூட இருந்தது.

 

    • இடக்கையால் தாம்பூலம் தரித்துவிட்ட பாவத்திற்காக மங்கம்மாள் ஏதேதோ தான தருமங்களைச் செய்யப்போக அதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விஜயரங்கனிடம் சொல்லித் தூற்றுவதற்கு இடம் கிடைத்தது.

 

    • “அருமை இளவரசே! உங்கள் பாட்டியார் மகாராணி மங்கம்மாள் போகிற போக்கைப் பார்த்தால் காற்றையும் காவிரித் தண்ணீரையும் தவிர உங்களுக்கு வேறு எதையும் மீதம் வைத்து விட்டுப் போகமாட்டார்கள் போலிருக்கிறது. அரண்மனைச் சொத்துகள் எல்லாம் தான தருமங்களுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. கோயில் குளங்களுக்கும், தர்ம சத்திரங்களுக்கும் போவதற்கு இது என்ன பிள்ளையில்லாத சொத்தா? இந்தச் சொத்து ஏன் இப்படிப் பாழ் போகிறது? ஏற்கெனவே பாதி ராஜ்யத்தைக் கிழவன் சேதுபதி பறித்துக் கொண்டாயிற்று. மீதி இருப்பதையும் எவனாவது பறித்துக் கொள்வதற்குள்ளாவது ஆட்சியை நீங்கள் கைப்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் காலம் இப்படியே இளவரசுப் பட்டத்தோடு கழியவேண்டியது தான். இளவரசுப் பட்டத்தால் என்ன லாபம்? ஆட்சி மட்டும் பாட்டியிடம். வெறும் இளவரசுப் பட்டம் மட்டும் உங்களிடம். நீங்கள் உடனே தட்டிக் கேட்காவிட்டால் உங்களுக்கு எதுவும் கிடைக்காது” என்று தூபம் போட்டார்கள் கலகக்காரர்கள். விஜயரங்கன் அதைக் கேட்டு ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்காமல் புத்தி பேதலித்துப் போனான். தன் நன்மைக்காகவே அவர்கள் அந்த யோசனைகளைச் சொல்வதாக நம்பினான். அவர்களுடைய சுயநன்மைக்காகவே ஆட்சி தன் கையில் வரவேண்டுமென அவர்கள் நினைத்துத் தன்னைத் தூண்டுகிறார்கள் என்பது அப்போது அவனுக்குப் புரியவில்லை.

 

    • பாட்டி ராணி மங்கம்மாளிடம் நேரில் போய் இரண்டில் ஒன்று கேட்டுவிடுவது என்று பிடிவாதமான முடிவுக்கு வந்தான் விஜயரங்கன். அரசாட்சி தொடர்பாகத் தன்னை எதுவுமே கலந்தாலோசியாமல் ஒதுக்கி வைக்கும் பாட்டியிடம் ஏதோ பெரிய சூழ்ச்சியும் சூனியக்கார எண்ணமும் இருப்பதாக அவன் நம்பத்தொடங்கிவிட்டான். ஆனால் ஒரு சிறு சந்தேகமும் இருந்தது. அந்தச் சந்தேகத்தைத் தனக்குப் போதனை செய்த நண்பர்களிடமே அவன் கேட்டுவிட்டான்.

 

    • “ஒருவேளை என் கோரிக்கையைப் பாட்டி மறுத்து விட்டாலோ, கண்டிப்பாக முடியாது என்று பதில் சொல்லி விட்டாலோ, அப்புறம் என்ன செய்வது?”

 

    • “அவள் மட்டும் முடியாதென்று சொல்லட்டும். அதன் பிறகு நாங்கள் அடுத்த யோசனையைச் சொல்கிறாம். முதலில் நீங்கள் அவளிடம் போய்க் கேட்பதைக் கேட்டுவிட்டு வாருங்கள்.”

 

    • “நான் ஒன்றும் ஏமாளியில்லை. இதோ இப்போதே கேட்டு விட்டு வந்துவிடுகிறேன்” என்று ஆவேசத்தோடு புறப்பட்டான் விஜயரங்கன். அவன் முகம் சினத்தால் சிவப்பேறியிருந்தது. பார்வையில் கோபக்கனல் தெறித்தது. நெஞ்சில் பதற்றமும் படபடப்பும் நிறைந்திருந்தன.

 

    • அவன் தேடிச் சென்ற சமயம் அந்தப்புரத்தில் சில மூத்த தோழிப் பெண்களோடு அமர்ந்து தாயம் விளையாடிக் கொண்டிருந்தாள் ராணி மங்கம்மாள். விஜயரங்கன் புயல் போல் நேரே உள்ளே பாய்ந்தான். அவன் வந்த நிலைமையைப் பார்த்து மங்கம்மாளே தோழிப் பெண்களை விலகிச் செல்லுமாறு சைகை செய்தாள். அவர்கள் சென்றனர். அவனைத் தன் அருகே அமரச் சொல்லிப் பாசத்தோடும் பரிவோடும் அவள் அழைத்தாள். அவன் அமரவில்லை. வெறுப்போடு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

 

    • “என்ன வேண்டும் விஜயரங்கா? பாட்டியின் மேல் இன்று உனக்கு ஏன் இத்தனை கோபம்?”

 

    • “உங்கள் பக்கத்தில் அமர்ந்து அத்தைப் பாட்டிக் கதைகளைக் கேட்டுக் கொண்டிருப்பதற்கு நான் இன்னும் பச்சைக் குழந்தையில்லை பாட்டி!”

 

    • “உண்மைதான்! உனக்கு வயதாகிவிட்டது. ஒப்புக் கொள்கிறேன்.”

 

    • “நீங்கள் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அது உண்மையே பாட்டி! உங்களுக்கு எதுதான் நினைவிருக்கிறது?

 

    • “உங்களுக்கு மற்றவர்கள் வயதும் நினைவிருப்பதில்லை; உங்கள் வயதும் நினைவிருப்பதில்லை.”

 

    • அவன் இந்த வார்த்தைகளைச் சொல்லுகிறவரை விளையாட்டாக ஏதோ பேசுகிறான் என்று நினைத்துக் கொண்டிருந்த ராணி மங்கம்மாளின் முகபாவம் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் இறுகியது. நெகிழ்ச்சி தவிர்ந்து கடுமையாக மாறியது. அவள் தலைநிமிர்ந்து விஜயரங்கனைக் கூர்ந்து பார்த்தாள். அவன் மெய்யாகவே அடக்க முடியாத ஆத்திரத்தோடு தன்னிடம் வந்திருப்பது புரிந்தது.

 

    • “ஆத்திரத்தில் வார்த்தைகளை அள்ளிக் கொட்டி விடாதே விஜயரங்கா! கொட்டிய வார்த்தைகளைத் திருப்பி மறுபடி எடுத்துக்கொள்ள முடியாது. யாரிடம் பேசுகிறாம் என்ன பேசுகிறோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பேசு!”

 

    • “நல்ல ஞாபகத்தோடு தான் பேசுகிறேன் பாட்டீ! வயதாகி மூத்த பின்னும் ஆள வேண்டும் என்கிற பதவி ஆசையையும் வேறு ஆசைகளையும் விடமுடியாத மகாராணி மங்கம்மாளிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு ஞாபகமில்லாமற் போகவில்லை! நன்றாக ஞாபகமிருக்கிறது.”

 

    • “நாக்கை அடக்கிப் பேசக் கற்றுக்கொள்.”

 

    • “முதலில் உங்கள் வயதுக்குத் தகுந்த அடக்கத்தை நீங்கள் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.”

 

    • “இப்படிப் பொய்ப் புலம்பல் புலம்பியே என்னை இனி மேலும் நீங்கள் ஏமாற்றிவிட முடியாது பாட்டி!”

 

    • “என்னை ஏமாற்றினால் தானே நீங்கள் தொடர்ந்து ஆளமுடியும்? என் தந்தையார் காலத்திலும் அவரை ஏமாற்றிக் கைப் பொம்மையாக வைத்துக்கொண்டு நீங்களே ஆட்சி நடத்தினீர்கள் இப்போதும் அதையே தான் செய்கிறீர்கள்.”

 

    • “உன் நன்மைக்காகத்தான் அதைச் செய்கிறேன். உனக்குப் பக்குவம் வந்ததும் நீயே ஆளலாம். அந்த நல்ல நாளை எதிர்ப்பார்த்துத்தான் நானும் காத்திருக்கிறேன். உன்னிடம் ஆட்சியை ஒப்படைப்பதைவிட மகிழ்ச்சியான சம்பவம் என் வாழ்வில் வேறொன்றும் வரப்போவதில்லை அப்பா!”

 

    • “வீணாக நாடகமாடிப் பயனில்லை! இப்படிச் சொல்லிச் சொல்லியே எனக்குக் குழிபறிக்க வேண்டாம் பாட்டீ!”

 

    • “உன் மனதை யாரோ கெடுத்திருக்கிறார்கள். அதனால் தான் நீ இப்படி எல்லாம் உளறுகிறாய்.”

 

    • “உளறுவது யார்? நானா? நீங்களா?”

 

    • “உன் மேல் பிரியமில்லாமலா நீ மூன்று மாதத்துப் பாலகனாக இருக்கும்போதே உனக்கு முடி சூட்டினேன்.”

 

    • “நல்லதற்காகவும், பிரியத்துக்காகவுமா அப்படிச் செய்தீர்கள்? என்னை ஏமாற்றிவிட்டு நீங்களும் தளவாய் அச்சையாவும் உல்லாச வாழ்க்கை வாழலாமென்று…” அவன் முடிக்கவில்லை. அதற்குள் அவள் குறுக்கிட்டாள்.

 

    • “விஜயரங்கா! வாயை மூடு…” அந்த மாளிகையின் நான்கு சுவர்களிலும் எதிரொலிக்கும்படி கூப்பாடு போட்டாள் ராணி மங்கம்மாள். பேரன் வாயிலிருந்து வெளிப்பட்ட சொற்களைக் கேட்டு தீயை மிதித்தவள்போல் ஆனாள் அவள்.

 

    • “இந்த அதிகாரமும் அடக்குமுறையும் இனிமேல் பலிக்காது பாட்டி! நீங்களாக அடங்காவிட்டால் நானே உங்களையும் அடக்க வேண்டி வரும்…”

 

    • இதைக் கேட்டு ஆத்திரத்தை அடக்க முடியாமல் சீறி எழுந்திருந்தாள் ராணி மங்கம்மாள். அவள் முகம் சிவந்து கண்களில் அனல் பறந்தது! ஒரு விஷமக்காரக் குழந்தையை இரண்டு குட்டுக் குட்டினால்தான் அடங்கும் என்ற எரிச்சலுடன் அவள் அவனை எட்டிப் பிடிக்க முயன்றபோது அவன் விருட்டென்று அங்கிருந்து வெளியேறிச் சென்று விட்டான்.

 

    • காவற்காரர்களை அழைத்து அவனைச் சிறைப்படுத்திக் கொண்டுவந்து தன்முன் நிறுத்தித் தண்டித்திருக்க அவளால் முடியும். அந்த அளவுக்குப் பேரன் அவளை அவமானப்படுத்தியிருந்தான் என்றாலும் நிதானமாக யோசித்து அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். அவனை மற்றவர்கள் முன்னிலையில் பதிலுக்கு அவமானப்படுத்தவும் தண்டிக்கவும் அவள் தயங்கினாள். திருந்தி விடுவான் அல்லது தானே முயன்று திருத்தி விடலாம் என்று அவள் இன்னமும் நம்பினாள்.

 

    • ஆத்திரத்தில் பேரன் பேசியிருந்த ஒவ்வொரு சொல்லும் அவள் செவிகளில் நெருப்புக் கங்குகளாகச் சுழன்று கொண்டிருந்தன.

 

    • இவ்வளவு கடுமையான வார்த்தைகளை, பெற்ற தந்தையோ, தாயோ காலஞ்சென்ற ஆருயிர்க் கணவரோ கூட அவளிடம் பேசியதில்லை. பெற்றோரிடம் செல்லமாக வளர்ந்து கணவனிடம் மதிப்போடு வாழ்ந்து நாட்டு மக்களிடம் செல்வாக்கோடு வளர்ந்து பிரியமாக எடுத்து வளர்த்த சின்னஞ்சிறு பேரனிடம் இப்படி அவமானப்பட நேர்ந்ததே என்ற நினைப்பு ராணி மங்கம்மாளின் மனதை வலி உண்டாகும்படி இப்போது மிகவும் அழுத்தி உறுத்தியது.

 

    • ————

 


 

27. விஜயரங்கன் தப்பி விட்டான் 

    • ராணி மங்கம்மாளின் மனம் நிம்மதியிழந்து தவித்தது. பேரன் விஜயரங்க சொக்கநாதன் பேசிவிட்டுச் சென்ற சொற்களை அவளால் மறக்கவே முடியவில்லை.

 

    • பேரன் வலுவில் வந்து தன்னிடம் ஏறுமாறாகப் பேசி இப்படியெல்லாம் வற்புறுத்தியிராவிட்டால், அவளே ஒருவேளை அவனைக் கூப்பிட்டுச் சில நாட்களில் ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கவேண்டும் என்றுகூட எண்ணியிருக்கலாம். ஆனால் அவனே வற்புறுத்தி நிர்ப்பந்தப்படுத்தியதால் அவளது சந்தேகம் அதிகமாயிற்று. அதில் ஏதோ பிறர் தூண்டுதல் அல்லது சதியிருக்க வேண்டும் என்று அவள் சந்தேகப்பட்டாள்; கலங்கினாள்.

 

    • அரச பதவியை அடைய அவன் பறந்ததும் அவசரப்பட்டதும் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றியது. இவ்வளவு நாட்களாகத் தான் கட்டிக் காத்த பொறுப்புகளை அவன் சீரழித்து விடுவானோ என்று அஞ்சினாள் அவள்.

 

    • ‘அநுபவமோ, பக்குவமோ இல்லாமல் அவன் வயதுக்கு மீறி ஆசைப்படுகிறான்’ என்பது அவளுக்குப் புரிந்தது. அதைப்பற்றிக் கலந்து ஆலோசிக்க வேண்டுமென்று கருதி உடனே தளவாய் அச்சையாவைக் கூப்பிட்டனுப்பினாள் அவள்.

 

    • அச்சையா வந்தார். எல்லா விவரங்களையும் ராணி மங்கம்மாள் அவரிடம் கூறினாள். அவர் மிகவும் சிந்தனை வயப்பட்டவராகச் சிறிதுநேரம் மௌனமாய் ஏதும் கூறாமல் இருந்தார். இந்த அதிர்ச்சி நிறைந்த செய்தியை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று தோன்றியது. பின்பு நிதானமாகக் கூறினார்:

 

    • “இப்படி ஒன்று நடந்தது என்பதை யாரிடமும் கூற வேண்டாம்! இது மிகவும் இரகசியமாக இருக்கட்டும். ‘ராணி மங்கம்மாளுக்கும் அவள் பேரனுக்கும் ஆகவில்லை, விரோதம் மூண்டுவிட்டது’ என்ற செய்தி அவ்வளவு நல்ல விளைவுகளைத் தராது. உங்கள் எதிரிகளை மனம் மகிழச் செய்யும். அதனால் இப்படி ஒன்று நடந்தது என்பதையே மறந்து விட்டுப் பேசாமல் இருப்பதுதான் உத்தமம்.”

 

    • “‘எரியும் நெருப்பைப் பஞ்சால் மூடிவிட்டு அப்புறம் பேசாமல் இரு’ என்பது போலிருக்கிறது நீங்கள் சொல்வது.”

 

    • “விஜயன், தானே ஓய்ந்து போய் விடுவான் என்று எனக்குத் தோன்றிகிறது.”

 

    • “எனக்கு அப்படித் தோன்றவில்லை! இந்தக் கலகம் தொடர்ந்து நடக்கும் என்றே படுகிறது.”

 

    • “சிறுபிள்ளைகளுக்கு அவ்வப்போது ஏதேனும் புதிய விளையாட்டு விளையாடிப் பார்க்க வேண்டும் என்று ஆசையாயிருக்கும். இரண்டு நாள் ஒன்றும் பேசாமல் இருந்தால் பின்பு மூன்றாவது நாள் அவர்களுக்கே அது மறந்து போய் விடும்.”

 

    • “அவன் வந்து நின்ற விதம், மிகவும் ஆத்திரப்பட்ட தோரணை, பேசிய சீற்றம், எல்லாவற்றையும் சேர்த்து நினைத்துப் பார்த்தால் அப்படி இது அவனுக்கு மறந்து போய்விடும் என்று தோன்றவில்லை.

 

    • “இருக்கட்டுமே! இளங்கன்று. அதனால் தான் பயமறியாமல் துள்ளுகிறது. கொஞ்சம் ஆறப்போட்டால் தானே மறந்து விடும்.”

 

    • தளவாய் அச்சையா கூறியபடி விஜயரங்க சொக்கநாதன் எதையும் மறப்பான் என்று ராணி மங்கம்மாளுக்குத் தோன்றவில்லை.

 

    • இங்கே அரண்மனையில் மற்றவர்களிடமும் மற்றும் வெளியே பிறர் பலரிடமும் விஜயரங்கன் கண்டபடி பேசி வருவதாகத் தெரிந்தது. ராணி மங்கம்மாள் பதவி வெறி பிடித்தவள் என்றும் அவளுக்கும் அச்சையாவுக்கும் கள்ளக்காதல் நிலவுகிறது என்றும் செய்திகளைப் பரப்பினான் விஜயரங்கன். சொந்தப் பாட்டி என்று கூட நினையாமல் அவளை எதிர்த்து ஏறக்குறையப் போர்கொடியே உயர்த்தியிருந்தான் அவன். வதந்திகளாலும் குழப்பமான செய்திகளாலும் அரண்மனை நாறியது; குழம்பியது; கலங்கியது.

 

    • இவற்றையெல்லாம் கேள்விப்பட்டவர்களே இரண்டு விதமாகப் பேசினார்கள். ‘சொந்தப் பாட்டி என்றுகூடப் பாராமல் விஜயரங்கன் விசுவாசத் துரோகம் செய்கிறான்’ என்று அவனைத் தூற்றினார்கள் சிலர்.

 

    • ‘நெருப்பில்லாமல் புகையுமா? இவளும் அச்சையாவுமாகச் சேர்ந்துகொண்டு தாங்கள் உல்லாசமாக இருப்பதற்காகப் பேரப் பிள்ளையாண்டானை முடிசூடி அரசாளவிடாமல் தொல்லை கொடுக்கிறார்கள் போலிருக்கிறது’ என்றும் பேசினார்கள் சிலர். இப்படி வம்புகளும் வதந்திகளும் பொறுமையைச் சோதிக்கிற அளவு வளர்ந்தன. அதை நீடிக்கவிடக்கூடாது என ராணி மங்கம்மாள் நினைத்தாள். விஜயரங்கனைக் கூப்பிட்டு மறுபடியும் கண்டிப்பாகப் பேசிவிட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.

 

    • அவனைக் கூப்பிட்டு அனுப்பினாள். அவளுடைய கட்டளையைப் பொருட்படுத்தி வராமல் முதலில் அவன் அலட்சியப்படுத்தினான். மறுபடியும் கூப்பிட்டு அனுப்பினாள். வேண்டா வெறுப்பாகவும், கோபமாகவும் வந்தான். அவனை ராணி மங்கம்மாள் எதிர்கொள்ளும்போது தளவாய் அச்சையாவும் உடனிருந்தார். சிறிதும் மதிப்போ மரியாதையோ இல்லாமல் அவர்களிருவரையும் அலட்சியமாகவும் ஏளனமாகவும், இகழ்ச்சி தோன்றவும் ஏறிட்டுப் பார்த்தான் அவன்.

 

    • அவர்கள் முன் அவன் எதிர்கொண்டு வந்த விதமும் பார்த்த விதமும் வெறுப்பூட்டக் கூடியவையாக இருந்தன. அந்தப் பார்வையில் எரிச்சலடைந்தாள் ராணி மங்கம்மாள். எனினும் பொறுமையை இழந்து விடாமல், “விஜயா! உன் போக்கு நன்றாக இல்லை! சேர்வதற்குத் தகாத கெட்டவர்களோடு சேர்ந்து நீ வீணாகச் சீரழியப் போகிறாய்! அதற்கு முன் உன்னை எச்சரிக்கலாம் என்றுதான் கூப்பிட்டனுப்பினேன்” என்று அவனுக்கு அறிவுரை கூறினாள் அவள்.

 

    • “எனக்கு யாருடைய எச்சரிக்கையும் தேவையில்லை. என் ஆட்சி உரிமையான நாட்டை என்னிடம் ஒப்படைத்தாலே போதுமானது!”

 

    • “தற்போது அது சாத்தியமில்லை அப்பா! குருவி தலையில் பனங்காயை வைத்தால் தாங்காது.”

 

    • “நீங்கள் எதை எதையோ சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்!”

 

    • இப்படிக் கூறிய அவனை இடைமறித்து அச்சையா ஏதோ சமாதானம் சொன்னார். விஜயரங்கன் உடனே அவரையும் எடுத்தெறிந்து பேசிவிட்டான். ராணி மங்கம்மாள் கடும் கோபத்தோடு அவனை எச்சரித்தாள்.

 

    • “நீ கேட்பார் பேச்சைக் கேட்டு நாசமாய்ப் போகாமல் தடுப்பதற்காகவே உன்னைக் கூப்பிட்டேன். நாயக்க வம்சத்தின் நல்லாட்சியைச் சீரழிக்க விரும்பும் கலகக்காரர்களின் தொடர்பால் தான் நீ அழியப் போகிறாய்.”

 

    • “உண்மையில் அழியப் போவது யார், நீங்களா, நானா என்று பொறுத்திருந்து பாருங்கள்.”

 

    • முகத்திலடித்தாற்போல இப்படிக் கூறிவிட்டு விரைந்து சென்றுவிட்டான் விஜயரங்கன். அவனைத் திருத்த முடியாதென்று அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.

 

    • அவன் சென்றபின் இனி அவனுக்கு அறிவுரைகள் கூறிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த ராணி மங்கம்மாளும் தளவாய் அச்சையாவும் விஜயரங்கனின் நடவடிக்கைகளை இடைவிடாமல் கண்காணிக்க ஒற்றர்களை ஏற்பாடு செய்தார்கள். நேரடியாக முழு ஆட்சிப் பொறுப்பையும் அவனிடம் அளிக்காவிட்டாலும் ஒரு சில பொறுப்புகளை அவனிடம் விட்டுவிடலாம் என்று முதலில் நினைத்தாள் ராணி மங்கம்மாள். ஆனால் தளவாய் அச்சையா அதற்கும் இணங்கவில்லை. அப்படிச் செய்வது விஷப் பரீட்சையாக முடிந்துவிடும் என்று அபிப்பிராயம் தெரிவித்தார் அவர்.

 

    • இவ்வளவுக்கும் பின்புதான் அவன் எங்கெங்கே போகிறான் என்னென்ன செய்கிறான் என்று இரகசியமாகக் கண்காணிக்க ஏற்பாடு செய்தாள் ராணி மங்கம்மாள்.

 

    • சில நாட்கள் கழிந்தன. ஒற்றர்கள் வந்து தெரிவித்த தகவல்கள் ராணி மங்கம்மாள் மேலும் கலக்கமடைவதற்குக் காரணமானவையாக இருந்தன. விஜயரங்க சொக்கநாதன் விஷமிகளும் கலகக்காரர்களுமாகிய பலரது ஒத்துழைப்போடு கலகத்தில் இறங்கிவிடத் தீர்மானம் செய்திருப்பது புரிந்தது. அதிக இடையூறாயிருக்கும் பட்சத்தில் ராணி மங்கம்மாளையும் தளவாய் அச்சையாவையும் ஒழித்துவிடக் கூடத் தயங்காத கல்நெஞ்சம் படைத்தவனாக அவன் இருப்பானென்று தெரிந்தது. ஒற்றர்கள் வந்து கூறிய செய்திகள் பல அச்சையாவையும் ராணியையும் துணுக்குற வைத்தன.

 

    • விஜயரங்கனைத் தூண்டி விடுவதற்கு மிகவும் பலம் வாய்ந்த கூட்டம் ஒன்று பின்னாலிருப்பது அவர்களுக்குப் புரிந்தது.

 

    • தவிர்க்க முடியாத வலிமையுள்ள படை வீரர்கள் போன்ற சதியாளர்கள் அவனோடு ஒத்துழைக்கிறார்கள் என்ற உண்மையும் தெரியவந்தது. வன்முறையில் ஈடுபட்டுத் தாங்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு எதிராக இருப்பவர்களைக் கொன்று குவித்தாவது ஆட்சியைக் கைப்பற்றிவிடுவது என்று விஜயனும் அவனை ஊக்குவிப்பவர்களும் முயன்று கொண்டிருந்தார்கள் என்பதை ஒற்றர்கள் வந்து தெரிவித்தார்கள்.

 

    • வேறு வழியின்றி ராணியும் தளவாயும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். விஜயரங்கன் நினைத்தபடி நினைத்த இடங்களுக்குப் போகவும், வரவும், பேசவும் முடிவதால் தான் இதெல்லாம் சாத்தியமாகிறது. அவனுடைய இயக்கத்தைக் கட்டுப்படுத்தி அவனைக் காவலில் வைத்துக் கண்காணித்து வந்தால் இதெல்லாம் ஓரளவு குறையும் என்று அவர்கள் கருதினார்கள். அவனைத் தூண்டிவிட்டுக் கொண்டிருப்பவர்களை அவனும், அவனை அவர்களும் சந்தித்துக் கொள்ள முடியாத படி செய்து விட்டாலே போதுமென்று இருவரும் எண்ணினார்கள்.

 

    • அரண்மனையில் விஜயரங்கன் தங்கியிருந்த பகுதிக்குள்ளேயே அவனைச் சிறைப்படுத்திவிடத் தந்திரமாக ஏற்பாடாயிற்று. அவனுக்குத் தெரியாமலே அவனைச் சுற்றி இந்த ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. கெட்ட எண்ணத்தோடு அவர்கள் இதைச் செய்யவில்லை. நல்லெண்ணத்தோடுதான் செய்தார்கள். தீயவர்களின் சகவாசத்திலிருந்து அவனை மீட்பதற்காகவே இந்த ஏற்பாடு அவசியம் என்ற எண்ணத்தில்தான் இது செய்யப்பட்டிருந்தது. இந்தக் கட்டுக்காவல் ஏற்பாடு தொடங்கிய பின்னர் முதல் நாலைந்து நாட்கள் அவர்கள் நினைத்த படியே எல்லாம் நடந்தன. விஜயரங்கன் அரண்மனையில் அவன் வசித்துக் கொண்டிருந்த பகுதியை விட்டு எங்குமே வெளியேற முடியவில்லை.

 

    • தாங்கள் நினைத்தபடி விஜயனை ஒடுக்கிவிட்டதில் அவர்களுக்குத் திருப்தியாயிருந்தது. விஜயனுடைய நன்மைக்காகவும் ஆட்சியின் நன்மைக்காகவும் அவர்கள் செய்த இந்தக் காரியம் விஜயனால் மிகமிகத் தவறாகவும் கடுமையாகவும் புரிந்து கொள்ளப்பட்டது. தன் நன்மைக்காக என்று அவன் இதைப் புரிந்து கொள்ளவே இல்லை. பாட்டி தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் விரோதமாக இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகவே உணர்ந்தான். அவன் அப்போதைக்கு ஆட்சியையோ அரச பதவியையோ அடையாமல் தடுக்கும் திட்டத்துடன் பாட்டி தன்னைச் சிறைப்படுத்திவிட்டாள் என்பதே இது பற்றி அவனது அநுமானமாக இருந்தது. வெளியே இருந்த அவனுடைய ஆட்களில் சிலர் ரகசியமாக அவனை வந்து பார்த்தனர். அவர்களுக்கும் இப்படியே செய்தியைத் தெரிவித்துப் பரப்பினான் விஜயரங்கன்.

 

    • அவன் மனநிலை இப்படி இருப்பதை அறியாமல் ராணி மங்கம்மாளும், தளவாய் அச்சையாவும் வேறு விதமாகத் தீர்மானித்துக் கொண்டார்கள்.

 

    • “அரண்மனைக்குள்ளேயே தங்க வைத்துத் தீயவர்களின் சகவாசத்தைத் தடுத்தது நல்லதாகப் போயிற்று! விஜயரங்கன் இதற்குள் கெட்ட எண்ணங்கள் எல்லாம் மாறித் திருந்தியிருக்க வேண்டும். என்னைப்பற்றிக்கூட அவன் நல்லபடி புரிந்து கொண்டிருப்பான். இன்றோ நாளையோ அவனை மறுபடி பார்த்துப் பேசினால் அவன் மனநிலை நமக்குப் புரியலாம்!” என்றாள் ராணி மங்கம்மாள்.

 

    • “இதற்குள் அவன் முற்றிலும் மனம் மாறியிருக்க முடியும் என்று நான் நம்பவில்லை. மாறாமலும் இருக்கலாம் என்பதற்குச் சாத்தியக் கூறுகள் உண்டு. முன்னைவிட உங்கள் மேலும் என் மேலும் விரோதங்கள் அதிகமாகி இருக்கவும் நியாயம் உண்டு. எதற்கும் போய்ப் பார்க்கலாம். எனக்கென்னவோ இதில் நம்பிக்கையில்லை…” என்றார் தளவாய்.

 

    • “நீங்கள் அதிக அவநம்பிக்கைப் படுகிறீர்கள்! என் பேரப் பிள்ளையாண்டான் அவ்வளவு கெட்டவன் இல்லை. கேட்பார் பேச்சைக் கேட்டுத்தான் இவன் கெட்டுப் போயிருக்கிறான். இப்போது திருந்தியிருப்பான்.”

 

    • அச்சையா இதற்கு மறுமொழி எதுவும் கூறவில்லை. ஆனால் அதே சமயம் அவரது மௌனம் ராணி மங்கம்மாள் கூறியதை ஏற்றுக் கொள்கிற மௌனமாகவும் இல்லை.

 

    • அடுத்த நாள் அதிகாலையில் வழக்கத்திற்குச் சிறிது முன்பாகவே எழுந்து நீராடி வழிபாடுகளை எல்லாம் முடித்து, “தெய்வமே! என் பேரனுக்கு இதற்குள் நல்ல புத்தியைக் கொடுத்திருப்பாய் என்று நம்புகிறேன். தொடர்ந்து இனி மேலும் அவனுக்கு நல்ல புத்தியைக் கொடு” என்று பிரார்த்தனையும் செய்துவிட்டுச் சிறிது நேரத்தில் விஜயரங்கனைக் காண்பதற்குச் செல்லவேண்டும் என்றிருந்தாள் ராணி மங்கம்மாள்.

 

    • அப்போது காவலர்கள் பரபரப்பும் பதற்றமுமாக அவளைத் தேடி அங்கே ஓடிவந்தார்கள்.

 

    • “மகாராணீ! இளவரசர் காவலைத் தப்பிச் சென்று விட்டார். இரவோடு இரவாக எங்களுக்குத் தெரியாமலே இது நடந்துவிட்டது. நூலேணி ஒன்றின் உதவியால் மதிலில் ஏறி மதில் துவாரத்தின் வழியே அதே நூலேணியைப் பயன்படுத்தி மறுபக்கம் கீழே இறங்கி வெளியேறியிருப்பதாகத் தெரிகிறது. இதில் எங்கள் தவறு எதுவுமில்லை. எங்களைத் தப்பாக நினைக்கக்கூடாது” என்றார்கள் அவர்கள்.

 

    • அப்போது தன் செவிகள் கேட்டுக் கொண்டிருப்பது மெய்யா பொய்யா என்று முடிவு செய்து கொள்வதற்கே சில விநாடிகள் ஆயின ராணி மங்கம்மாளுக்கு.

 

    • ————

 


 

28. மங்கம்மாள் சிறைப்பட்டாள் 

    • விஜயரங்கனை அரண்மனையிலிருந்து தப்பவிட்டுவிட்ட காவலாளிகளைச் சீறினாள் ராணி மங்கம்மாள். அவர்கள் களைத்துப் போய் உறங்கி விட்ட பிறகு இரவின் பின் யாமத்தில் தான் அவன் சுலபமாக நூலேணி மூலம் வெளியேறித் தப்பியிருக்க முடியும் என்று அவளுக்குத் தோன்றியது. தப்பிச் சென்றுவிட்ட பேரனைப் பற்றிக் கவலையாகவும் இருந்தது கோபமாகவும் இருந்தது.

 

    • தன் வயதுக்கு மீறிய காரியங்களில் அவன் ஈடுபடுவதாக அவள் எண்ணினாள். இந்த வயதில் இத்தனை தீவிரம் அவனுக்கு எப்படி உண்டாகியிருக்க முடியுமென்று அவளால் கற்பனை செய்யக்கூட முடியாமல் இருந்தது. அவனை நல்வழிக்குக் கொண்டுவர முடியும் என்கிற நம்பிக்கை இப்போது அவளுக்கு அறவே இல்லை.

 

    • அரண்மனை வீரர்களை அழைத்து “எங்கே தப்பிச் சென்றிருந்தாலும் விஜயனைத் தேடிப் பிடித்து வாருங்கள்! அவன் உடலுக்கோ உயிருக்கோ சேதமும் ஆபத்தும் இன்றி அழைத்து வாருங்கள்! மற்றவற்றை அப்புறம் நான் பார்த்துக் கொள்கிறேன்” – என்று மங்கம்மாள் கட்டளையிட்டாள்.

 

    • தப்பிச் சென்றுவிட்ட விஜயரங்கனோ யாரும் அறிய முடியாத ஒதுக்குப்புறமான மறைவிடம் ஒன்றில் போய்த் தங்கிக் கொண்டு தன் நண்பர்களையும் தன்னோடு ஒத்துழைத்த கலகக்காரர்களையும் சந்தித்துப் பேசினான். ராணி மங்கம்மாளின் ஆட்சியை எப்படி ஒழிப்பது என்று திட்டமிடலானான். பாட்டியைத் தன் விரோதி என்றே தீர்மானித்திருந்தான் அவன். தன்னைப் பற்றி பாட்டிக்கு நல்லெண்ணம் எதுவும் இருக்க முடியாது என்றே அவன் முடிவு செய்து விட்டான். அவனும் அவனுக்கு வேண்டியவர்களும் சதியாலோசனைகளைத் தொடர்ந்தார்கள்.

 

    • ராணி மங்கம்மாள் விஜயனைத் தேடி அனுப்பிய காவலர்களால் அவன் ஒளிந்திருந்த மறைவான இடத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பேரன் செய்வது விளையாட்டுப் பிடிவாதம் இல்லை. வினைதான் என்பது அவள் மனத்தில் இப்போது மீண்டும் உறுதிப்பட்டது. நாள் நீடிக்க நீடிக்க அவள் கவலை அதிகமாகியது. மேற்கொண்டு என்ன நடக்கும் என்பதை அவளாலேயே அநுமானிக்க முடியாமல் இருந்தது.

 

    • அதே சமயம் மறைந்து சதியாலோசனைகளில் ஈடுபட்டிருந்த விஜயரங்கனின் நிலைமையோ நாளுக்கு உறுதிப்பட்டு வந்தது. தன் ஆட்கள் சிலர் மூலமாக அரண்மனைப் படைத்தலைவர்கள் சிலரையும் பாதுகாப்புப் பொறுப்புகளில் இருந்த சிலரையும்கூடத் தனக்கு உதவுகிறபடி வளைத்திருந்தான் அவன்.

 

    • “எப்படியும் பாட்டிக்குப் பின் நான் தான் ஆளப்போகிறேன்! இப்போது உங்களில் யார் யார் என்னை எதிர்க்கிறீர்களோ அவர்களை நான் அரசனாகியதும் ஒழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன் என்பதை இப்படி இன்று நான் சொல்லித்தானா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்? ஜாக்கிரதை! ஒழுங்காக இப்போதே என்னோடு ஒத்துழைத்து விடுங்கள்! இல்லாவிட்டால் பின்னால் சிரமப்படுவீர்கள்!”

 

    • படைத் தலைவர்கள் பலரிடம் இப்பேச்சு நன்றாக வேலை செய்தது. பலர் அப்போதே விஜயரங்கனோடு ஒத்துழைக்க முன் வந்துவிட்டார்கள். அநேகமாக அரண்மனைப் பாதுகாப்பு ஏற்பாடு முழுவதுமே மெல்ல மெல்ல இரகசியமாக விஜயரங்கனின் பிடியில் வந்துவிட்டது. எல்லாமே தனக்குச் சாதகமாக இருந்தும் விஜயரங்கன் சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ராணி மங்கம்மாளுக்கும் தளவாய் அச்சையாவுக்கும் தெரியாமலே இரகசியமாக அரண்மனையும் படைத்தலைவர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் விஜயரங்கனின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டிருந்தன. மேற்பார்வையில் மட்டும் நாடு ராணி மங்கம்மாளே எல்லாவற்றையும் ஆண்டு வருவது போலிருந்தது. உள்ளேயே சூழ்ச்சிகளும் சதிகளும் நிறைவேறி இருந்தன. முடிவில் ஒரு நாள் தான் மறைந்து தங்கியிருந்த இடத்திலேயே தன் சதிக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் படைத் தலைவர்கள் கூடிய கூட்டத்தில் அவர்கள் முன்னிலையில் நாயக்க சாம்ராஜ்யத்தின் அரசனாக விஜயரங்கன் தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டான்.

 

    • சதிக்கு ஒத்துழைத்த படைத்தலைவர்களையும் நண்பர்களையும் நம்ப வைப்பதற்கு இந்த மகுடாபிஷேக நாடகத்தை அவன் ஆடியே தீர வேண்டியிருந்தது. இரவில் பரம இரகசியமாக இது நடந்தது.

 

    • விஜயரங்கன் காணாமல் போய்த் தலைமறைவாகிச் சில நாட்கள் கழித்து ராணி மங்கம்மாள் அந்தப்புரத்தில் தன் படுக்கை அறையில் அயர்ந்து உறங்கிவிட்ட ஓர் அதிகாலையில் ஏதோ கூப்பாடுகளும் முழக்கங்களும் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தாள்.

 

    • “மாமன்னர் விஜயரங்க சொக்கநாதர் வாழ்க! மதுரைச் சீமையின் மகராசர் விஜயரங்கர் வாழ்க!” – என்ற வாழ்த்தொலிகளால் அரண்மனை கலகலத்துக் கொண்டிருந்தது.

 

    • ‘என்ன நடந்து கொண்டிருக்கிறது. தான் எங்கே இருக்கிறாம்’ – என்று சுதாகரித்துக் கொள்ளவே சில விநாடிகள் ஆகின. படுக்கை அறையிலிருந்து வெளியே வர வாயிலருகே சென்றாள் அவள்.

 

    • அறைக்கதவு வெளிப்புறமாக அடைத்துப் பூட்டப்பட்டிருந்தது. கதவு வரை சென்றுவிட்டு ஏமாற்றத்தோடும் திகைப்போடும் தலை குனிந்தபடி மீண்டும் உள்ளே திரும்பிய ராணி மங்கம்மாள் அறை வாசலில் ஏளனச் சிரிப்பொலி கேட்டு மறுபடி திரும்பிப் பார்த்தாள்.

 

    • விஜயரங்கன் தான் நின்றுகொண்டிருந்தான். அவன் தலையில் முடி சூட்டப்பட்டிருந்தது.

 

    • “விஜயரங்கா! இதெல்லாம் என்னடா கோலம்? யார் அறைக் கதவை வெளிப்புறமாகத் தாழிட்டுப் பூட்டியிருப்பது?”

 

    • “ஒன்றுமில்லை! சில நாட்களுக்கு முன் நீங்கள் எனக்குச் செய்த அதே உபசாரத்தை உங்களுக்கு இப்போது நான் திருப்பிச் செய்திருக்கிறேன். புரியும்படியாகச் சொல்வதனால் இந்த அறைக்குள் நீங்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த வயதான காலத்தில் அதிகச் சிரமம் வைக்கக்கூடாது என்பதற்காகச் சிறைச்சாலை இருக்கும் இடத்துக்கு உங்களை அனுப்பாமல் நீங்கள் இருக்கும் இடத்தையே சிறைச்சாலையாக மாற்றிவிட்டேன் பாட்டீ!”

 

    • “துரோகி! குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! உன்னைப் பச்சிளம் பாலகனாக எடுத்துப் பாலூட்டித் தாலாட்டிச் சீராட்டி வளர்த்ததற்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.”

 

    • “இதே முறையில் நான் இருந்த இடத்திலேயே என்னை நீங்கள் சிறைப்படித்தினீர்களே, அது துரோகமில்லாமல் என்னவாம்?”

 

    • “வார்த்தையை அளந்து பேசு! உன் நாக்கு அழுகிவிடும்.”

 

    • “இனி உங்கள் சாபங்கள்கூடப் பலிக்க வழி இல்லை. அதிகாரம் இப்போது உங்களிடம் இல்லை. தலைவர்கள், படைகள், கோட்டை, கொத்தளம், ஆட்சி அத்தனையும் என்னிடம் இருக்கிறது என்பதை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொண்டு பேசினால் நன்றாயிருக்கும் பாட்டி!”

 

    • “அற்பனுக்கு வாழ்வு வந்தால் இப்படித்தானடா சொந்தப் பாட்டியிடம் கூடப் பேசமுடியும்.”

 

    • “நான் அற்பனா வீரதீரனா என்பது போகப் போகப்புரியும் பாட்டி! இன்றைக்குத் தான் எனக்கு விடிந்தது. இனி உங்களுக்குப் பொழுது விடியாது! விடிய விடமாட்டேன்.”

 

    • “இது அக்கிரமம்! நீ உருப்படமாட்டாய்.”

 

    • “இதில் எதுவும் அக்கிரமமில்லை பாட்டீ! இந்த வயதான காலத்தில் உங்களைத் தொல்லைப்படுத்த வேண்டாமென்று நானே முடி சூட்டிக் கொண்டுவிட்டேன்; இதிலென்ன தவறு?”

 

    • ராணி மங்கம்மாள் அவனுக்கு மறுமொழி கூறவில்லை. சேற்றில் கல்லை வீசியெறிந்தால் பதிலுக்கு அது தன் மீது தான் தெறிக்கும் என்றெண்ணி அவனோடு பேசுவதைத் தவிர்த்தாள் அவள். விழிகளில் கண்ணீர் பெருக அவள் மீண்டும் தான் சிறை வைக்கப்பட்டிருந்த படுக்கை அறை முலையில் போய் அமர்ந்தாள். அவன் வெளியே எக்காளமிட்டுக் கைகொட்டி நகைத்தான். அந்த வஞ்சக நகைப்பைக் கேட்டு அவளுக்கு அடிவயிறு பற்றி எரிந்தது.

 

    • “பாட்டீ! ஞாபகம் வைத்துக் கொள்! நீ வைத்த கட்டுக்காவலில் இருந்து நான் தப்பி ஓடியது போல் நீ இங்கிருந்து தப்ப முடியாது. தப்ப முயற்சி செய்தாலோ பின் விளைவுகள் மிகவும் விபரீதமாயிருக்கும்…” என்று அவளை உரத்த குரலில் எச்சரித்துவிட்டுப்போய்ச் சேர்ந்தான் விஜயரங்கன்.

 

    • முன்பொரு நாள் இதே விஜயரங்கனின் குழந்தைப் பருவத்தில் இவன் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் கோபுர உச்சியிலிருந்து தன்னைத் தலைகுப்புறப் பிடித்துத் தள்ளுவது போல அதிகாலையில் கண்ட கெட்ட கனவு இப்போது ராணி மங்கம்மாளுக்கு மீண்டும் ஞாபகம் வந்தது.

 

    • சுதந்திரமாக வளர்ந்து பேரரசனுக்கு வாழ்க்கைப் பட்டு அவன் மறைந்த பின்னும் அந்தப் பேரரசைத் தன்னந்தனியே வீராங்கணையாக நின்று கட்டிக்காத்து, முடிவில் சொந்தப் பேரனாலேயே இப்படிச் சிறை வைக்கப்பட்ட கொடுமை அவள் மனத்தைப் பிளந்தது. அவள் மனம் புழுங்கினாள். தவித்தாள். குமைந்தாள். குமுறினாள்.

 

    • தன்மேல் விசுவாசமுள்ள யாராவது பேரனுக்குத் தெரியாமல் தன்னை விடுவிக்க வருவார்கள் என்று நம்பினாள் அவள். அரண்மனையிலும், சுற்றுப்புறங்களிலும் உள்ள யாரும் சுயமாக இயங்கமுடியாதபடி விஜயரங்கனின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிவிட்டதால் அவள் எண்ணியபடி எதுவும் நடக்கவில்லை. வெளியே என்ன நடக்கிறது என்று அவளுக்கு யாரும் வந்து சொல்லக்கூட முடியவில்லை. இந்தத் தனிமையும் நிராதரவுமே பேரனின் துரோகத்தைவிட அதிகமாக அவளைக் கொடுமைப்படுத்தின. அவள் மனம் ஒடுங்கி உணர்வுகள் செத்து நடைப் பிணமாகச் சிறையில் இருந்தாள். அவள் மான உணர்வு அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சித்திரவதை செய்தது. இப்படியே இன்னும் சில நாட்கள் தனிமையில் அடைபட்டுக் கிடந்தால் சித்தப்பிரமை ஏற்பட்டுப் புத்தி சுவாதீனமே போய்விடும் போலிருந்தது.

 

    • “வாழ்க்கையில் இவ்வளவு தான தர்மங்களைச் செய்தும் எனக்கு இந்த கதியா? கடவுளே! நான் என்ன பாவம் செய்தேன்? என்னை ஏன் இத்தனை பயங்கரமான சோதனைகளுக்கு ஆளாக்குகிறாய்? நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைத்ததில்லையே! என் பேரனுக்குப் பக்குவமும் வயதும் வந்ததும் ஆட்சியை அவனிடம் ஒப்படைக்கலாம் என்றுதானே நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன்? எனக்கா இந்தத் தண்டனை?” என்று எண்ணி எண்ணி மனம் நைந்தாள் ராணி மங்கம்மாள்.

 

    • அவள் அந்தச் சிறைச்சாலையில் கவனிப்பாரற்றுக் கிடந்தாள். வேளா வேளைக்கு அன்ன ஆகாரமும் பரும் நீரும்கூடத் தருவாரில்லை. இதுவரை தன் பகையரசர்களிடம் கூடப் படாத அவமானத்தைச் சொந்தப் பேரப்பிள்ளையாண்டானிடம் படுகிறோமே என்ற எண்ணம் அவளை அணு அணுவாகச் சிதைத்து நலிய வைத்தது. பேரன் இத்தனை பெரிய கிராதகனாக இந்த வயதிலேயே உருவெடுத்து இப்படிக் கெடுதல்கள் செய்வான் என்பது அவள் கனவிலும் எதிர்பாராத அதிர்ச்சியாயிருந்தது. இன்னும் நடந்தவற்றை அவளால் நம்பி ஒப்புக்கொள்ளக்கூட முடியாமலிருந்தது. ஆனால் நடந்ததோ நடந்திருப்பதோ பொய்யில்லை. நிஜம்தான் என்பதும் நிதர்சனமாகப் புரிந்தது. சில நாட்களுக்குப் பின் யாரோ இரக்கப்பட்டு அவளுக்கு உணவும் தண்ணீரும் தர ஏற்பாடு செய்தார்கள். அப்புறம் சில நாட்களில் அதுவும் நிறுத்தப்பட்டது.

 

    • தனது சிறைக்குள் ராணி மங்கம்மாள் எலும்பும் தோலுமாக நலிந்து மெலிந்து போயிருந்தாள். அவளுடைய ராஜ கம்பீரப் பார்வை மங்கியிருந்தது. முகத்தில் கருமை தட்டியிருந்தது. கண்கள் குழி விழிந்திருந்தன. அந்தப்புரத்தின் அந்த ஒதுக்குப்புறமான படுக்கையறையிலேயே அவளுடைய சோக நாட்கள் ஒவ்வொன்றாகக் கழியலாயின. நம்பிக்கை வறண்டது.

 

    • விஜயரங்கனும் சிறையில் வந்து அவளைப் பார்க்கவில்லை. மற்றவர்களும் யார் என்ன ஆனார்கள் என்றே அவளுக்குத் தெரியவில்லை. அநாதரவாக அநாதையாக அவள் விடப்பட்டாள். தான் புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம், தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வே அவளைச் சரிபாதி கொன்று விட்டிருந்தது. இத்தனை கொடுமைகளை அடைய, தான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லையே என்று நினைத்துப் பார்க்கப் பார்க்க அவளுள் அழுகை குமுறியது.

 

    • பேரனோ பாட்டியின் தவிப்புகளையும், வேதனைகளையும் அறியாமல் அவளுக்குப் பருக நீரும், உண்ண உணவும்கூடத் தரலாகாது என்று கொடுமையான உத்தரவுகள் போட்டுக் கொண்டிருந்தான். அவன் நெஞ்சில் ஈவு இரக்கமே இல்லை. பாட்டியைத் தன் முதல் எதிரியாகவே பாவித்து நடத்த ஆரம்பித்திருந்த அவனுக்கு அறிவுரை கூற முதியவர்களும், பெரியவர்களுமாக எவருமே அப்போது அந்த அரண்மனையில் இல்லை. இருந்தவர்கள் அற்பனான அவனுக்கு எதையும் எடுத்துக் கூறவே பயப்பட்டார்கள். இதில் தங்களுக்கு எதற்கு வீண் வம்பு என்று பேசாமல் இருந்தார்கள்.

 

    • ——

 


 

29. பிரக்ஞை நழுவியது! 

    • சிறைக்குள் பசி தாகத்தால் ராணி மங்கம்மாள் நா வறண்டது. நம்பிக்கையும் வறண்டது. பசியுந் தாகமுமாக இப்படித் தவித்துச் சாக விடுவதற்கு பேரனுக்குத் தான் எந்தத் தீமையும் செய்யவில்லையே என்று அவள் எண்ணி எண்ணிக் குமைந்தாள். உள்ளம் புழுங்கி வெந்து நைந்தாள்.

 

    • கிழவன் சேதுபதியோ, மைசூர் மன்னனோ விரோதம் காரணமாகத் தன்னைச் சிறையில் அடைத்திருந்தால்கூட அவள் இவ்வளவு வேதனைப்பட்டிருக்க மாட்டாள். தான் சொந்த அரண்மனையில் சொந்தப் பேரனாலேயே அவமானப்படுத்தப் பட்டு விட்டோமே என்று மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தாள் அவள். வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் மானமிழந்து மரியாதை இழந்து இப்படி அங்கே அடைபட்டுக் கிடந்தாள் மங்கம்மாள்.

 

    • தன் அருமைக் கணவர் சொக்கநாத நாயக்கர் காலமான பின் அந்த மரணத்தின் சோகத்தையும் ராஜ்ய பாரத்தையும் சேர்ந்தே சுமந்து சிரமப்பட்டது எல்லாம் இப்போது இப்படி அவமானப்படவா என்று எண்ணிய போது இதயத்தில் இரத்தம் கொப்பளித்துக் கசிவது போலிருந்தது அவளுக்கு.

 

    • தன் அரண்மனையிலுள்ள விசுவாச ஊழியர்கள் யாராவது தன்னைப் பார்க்கவும், பேசவும் விரும்பாமல் இவ்வளவு உதாசீனமாக இருப்பது சாத்தியமே இல்லை என்று அவளுக்குப்பட்டது. கல்நெஞ்சம் படைத்த கிராதகனான தன் பேரன் விஜயரங்கன் தன்னை யாரும் பார்க்கவோ, பேசவோ முயன்றால் அவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்று உத்தரவு போட்டிருக்க வேண்டும் என்று அநுமானித்தாள் அவள். தன் வம்சத்திலா இப்படி ஒரு கோடரிக்காம்பு என்று சில சமயங்களில் நினைக்கும்போது அவளுக்குத் திகைப்பாகவும் இருந்தது. சினமாகவும் இருந்தது.

 

    • இங்கே அவள் நிலைமை இவ்வாறிருக்க விஜயரங்கனோ மமதையிலும், அகங்காரத்திலும் திளைத்திருந்தான். தான் தந்திரமாகப் பாட்டியிடம் இருந்து கைப்பற்றிய ஆட்சியை எப்படியும் கட்டிக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற பேராசையில் எத்தகைய குரூரமான செயலைச் செய்யவும் துணிந்திருந்தான் அவன். முடிசூட்டிக் கொண்டவுடன் தன்னோடு ஒத்துழைத்த படைத் தலைவர்களிடம், “என் பாட்டியாயிற்றே என்று பார்த்து இரக்கம் காட்ட வேண்டியதில்லை. ராணி மங்கம்மாள் உயிரோடிருக்கிற வரை என் ஆட்சிக்கு அபாயம் உண்டு” என்று ஆக்ரோஷமாகத் தெரிவித்தான் அவன்.

 

    • அப்போது ஒரு படைத்தலைவர், “ராஜ்யத்தைத்தான் பிடித்தாயிற்று! இனி நம் விருப்பத்துக்கோ ஆட்சிக்கோ உங்கள் பாட்டி எந்த வகையிலும் தடை செய்ய முடியாது! பாவம், வயதான காலத்தில் பாட்டியை ஏன் சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்த வேண்டும்? தயவு செய்து பாட்டியை விடுதலை செய்து விடுங்கள். தங்களுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது” என்று பயந்து கொண்டே அறிவுரை கூறினார்.

 

    • விஜயரங்கன் அந்தக் கருணை உள்ளம் படைத்த தளபதியின் அறிவுரையை ஏற்காததோடு ஆத்திரமாக அவருக்கு மறுமொழியும் கூறி அவரைக் கண்டித்துக் கோபித்துக் கொண்டான்.

 

    • “உங்கள் அறிவுரை இது விஷயமாக எனக்குத் தேவையில்லை! பாட்டி இருக்கிறவரை இந்த நாட்டை நான் நிம்மதியாக ஆள முடியாது. ஆனால் அவளை நானாகக் கொல்லப் போவதில்லை. தொடர்ந்து வாழவிடப் போவதுமில்லை. நான் கொன்றுவிட்டேன் என்ற கெட்ட பெயர் வராமல் அவளே செத்தாள் என நாடு நம்பும்படிச் செய்யப் போகிறேன்.”

 

    • “அரசே! என்னைப் பெரிய மனத்தோடு, தாங்கள் கருணை கூர்ந்து மன்னிக்க வேண்டும். தங்களை வளர்த்து ஆளாக்கிய பாட்டியாரைத் தாங்கள் இவ்வளவு கொடுமையாக நடத்தக்கூடாது. இன்று உங்களுக்குப் பயப்பட்டாலும் பின்னாளில் ஊர் உலகம் உங்களைப் பழிக்கும்.”

 

    • “ஊர் உலகம் என்ன சொல்லும் என்பதைப் பற்றி நான் கவலைப் படவில்லை! என் பாட்டி என்னைக் கொடுமைப் படுத்தியதற்கு பதிலாக அணு அணுவாய்ச் சித்ரவதை செய்யப்பட்டுச் சாகவேண்டும். இதற்கு எதிராக யார் நின்று தடுத்தாலும் கேட்க மாட்டேன். உங்கள் கீதோப தேசம் எனக்குத் தேவை இல்லை.”

 

    • இவ்வளவு கடுமையாக அவன் கூறியபின் மௌனம் சாதிப்பதைத் தவிர அந்தப் படைத் தலைவருக்கு வேறு வழியில்லாது போயிற்று. முதல் முதலாக அறிவுரை கூறிய அந்த ஒரு படைத்தலைவருக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பார்த்த பின் வேறு யாரும் அப்புறம் வாய் திறக்கத் துணியவில்லை. அவன் இஷ்டப்பட்டப்படி எப்படி வேண்டுமானாலும் செய்து தொலைக்கட்டும் என்று பேசாமல் இருந்து விட்டார்கள்.

 

    • விஜயரங்கன் ஈவு இரக்கமற்றுக் குரூரமாகவும், கொடூரமாகவும் நடந்து கொண்டான். நாளாக நாளாக அவனது குரூரம் அதிகமாயிற்றேயன்றி ஒரு சிறிதும் குறையவில்லை. பாட்டியைச் சித்ரவதை செய்தே தொலைத்து விடுவது என்னும் வெறி அவனுள் மூண்டிருந்தது.

 

    • பாட்டியைச் சிறை வைத்திருந்த அறைக்குள் உணவு பருகத் தண்ணீர் எதுவும் வழங்கலாகாது என்ற முதலில் தடை விதித்திருந்த விஜயரங்கன் பின்பு அதை விடக் கொடூரமான வேறொரு முறையைக் கையாண்டான். அதைப்பற்றிக் கேள்விப்பட்டவர்கள் கண்டவர்கள் எல்லாரும் மனம் வருந்தினார்கள். அருவருப்பு அடைந்தார்கள்.

 

    • ராணி மங்கம்மாள் சிறைப் படுத்தப்பட்டிருந்த அறை வாசலில் அறுசுவை உணவை அவள் பார்வையில் படும்படி வைக்கச் சொல்லி அவளுக்கு உண்ணக் கொடுக்காமல் தவிக்கவிடச் செய்தான் விஜயரங்கன்.

 

    • பசியையும் தாகத்தையும் விடக் கொடியது பசிக்கும் தாகத்துக்கும் அருமருந்தான உணவையும் நீரையும் எதிரே வைத்துவிட்டு உண்ணவும், பருகவும் விடாமல் தடுப்பது தான். அந்தக் கொடுமையைத் தன் பாட்டிக்குச் செய்து அவள் பசியாலும் தாகத்தாலும் தவித்துத் துடிதுடிப்பதைத் தன் கண்களாலேயே பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான் விஜயரங்கன்.

 

    • “அட பாவி! உனக்கு நான் மனத்தாலும் கெடுதல் நினைத்ததில்லையே? என்னை ஏண்டா இப்படிச் சித்ரவதை செய்கிறாய்! தெய்வந்தான் உன்னைக் கேட்கவேண்டும்” என்று அவனை நோக்கிக் கதறினாள் ராணி மங்கம்மாள். அவனோ அவள் கதறலைக் கேட்ட பின்பும் அட்டகாசமாக ஆணவச் சிரிப்புச் சிரித்தான்.

 

    • “பட்டால்தான் பாட்டி உனக்குப் புத்தி வரும். நன்றாகப் படு! அப்போதுதான் உன் தவறுகளை நீயே உணரமுடியும்” – என்று ஆத்திரத்தோடு கூறினான்.

 

    • மங்கம்மாள் ஈனஸ்வரத்தில் பதில் கூறினாள். “இதெல்லாம் அடுத்த ஜன்மத்தில் நீ அநுபவிப்பாய்! கடவுள் உன்னைச் சும்மா விடமாட்டார்.”

 

    • “இந்த ஜன்மத்தில் நான் சந்தோஷப்படவேண்டும் அதற்கு நீங்கள் இடையூறாக இருந்தீர்கள்! அதனால் தான் உங்களைச் சிறையில் அடைத்திருக்கிறேன். அடுத்த ஜென்மத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி இப்போது நான் கவலைப்படவில்லை.”

 

    • “அன்னமிட்ட கைக்குத் துரோகம் செய்கிற யாரும் உருப்பட்டதில்லை!”

 

    • “பிள்ளைக்கும் பேரனுக்கும் கிடைக்க வேண்டிய ஆட்சியைக் கிடைக்க விடாமல் செய்து, தானே ஆட்சியின் சுகத்தை அநுபவிக்க விரும்புகிறவர்களும் உருப்படமாட்டார்கள். இப்போது நீங்கள் அடைந்திருக்கும் இதே கதியைத் தான் அடைவார்கள்…”

 

    • “அட துரோகி! என்னைப் பற்றி கெட்ட நோக்கம் கற்பித்தால் உன் நாக்கு அழுகிப் போய்விடும். தக்க தருணத்தில் உன்னிடம் ஒப்படைப்பதற்காகத்தான் முள்ளைச் சுமப்பது போல் இந்த ஆட்சியைச் சுமந்து வந்தேன். அதற்குள் நீ அவசரப்பட்டு விட்டாய்!”

 

    • அப்போது அவளுடைய எந்தப் பதிலும் அவனைச் சமாதானம் அடையச் செய்ய முடியவில்லை. அவன் ஆத்திரம் தணியாதவனாக அவள் முன் நின்றான். அவளை ஒரு சிறிதும் பொருட்படுத்தாமலே புறப்பட்டுச் சென்றான். உணவையும், தண்ணீரையும் கண்முன்னால் காண்பித்துவிட்டுக் கொடுக்காமலே அவளை வதைக்கும் சித்திரவதை தொடர்ந்தது. அடையாளம் அறியமுடியாதபடி எலும்பும் தோலுமாகியிருந்தாள் அவள். அப்படியும் பேரப் பிள்ளையாண்டானுக்கு அவள்மேல் இரக்கம் வரவில்லை. விஜயரங்கன் சென்றபின் உணவும் தண்ணீரும் கொண்டு வந்து திரும்ப எடுத்துச் செல்லும் காவலாளி மௌனமாகக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டபடியே எடுத்துச் செல்லுவதைக் கண்டு பேரனுக்கு இல்லாத இரக்கம் அவனுள் இருப்பதைத் தெரிந்து கொண்டாள் ராணி மங்கம்மாள்.

 

    • இப்படியே ஒரு திங்கள் காலத்துக்கு மேல் கழிந்துவிட்டது. ஒரு மாறுதலும் நிகழவில்லை. ராணி மங்கம்மாள் மெல்ல மெல்லத் தேய்ந்து ஒடுங்கியிருந்தாள். இப்போது விஜயரங்கன் அவளைச் சிறை வைத்திருந்த இடத்துக்கு வந்து பார்ப்பதுகூட நின்று போயிருந்தது.

 

    • சுயப் பிரக்ஞை தவறி நினைவிழக்குமுன் வரும் மங்கலான ஞாபகம் போலப் பளீரென்று தனது கடந்த காலம் ஒரு முறை நினைவு வந்தது அவளுக்கு. பல்லாண்டுகளாகக் கட்டிக் காத்த நாயக்க சாம்ராஜ்யம் இனிச் சீரழிய போவதற்கு முன்னடையாளம்தான் பேரன் விஜயரங்கனின் ஆணவமோ என்று எண்ணினாள் அவள். கடந்த காலத்தில் தான் கண்ட துர்ச் சொப்பனங்கள், இடக் கையால் தாம்பூலம் தரித்தது எல்லாம் ஒவ்வொன்றாக நினைவு வந்தன. கண்களில் நீர் கசிந்து மல்கியது.

 

    • அணையப்போகும் விளக்கானது கடைசி கடைசியாகப் பிரகாசமாகச் சுடர்விடுவது போல் அவள் மனத்தில் தன் வாழ்வின் கீர்த்தி நிறைந்த கடந்த காலச் சம்பவங்கள் ஞாபகம் வந்தன.

 

    • ‘இனியும் இந்த அவல நிலை நீடிக்காமல் என்னை அழைத்துத் திருவடியில் இடம் அளியுங்கள்’ என்று திருவரங்கத்துப் பெருமானையும் மதுராபுரி நாயகி மீனாட்சியன்னையையும் உள்ளமுருகப் பிரார்த்தித்துக் கொண்டாள் அவள்.

 

    • ஒவ்வொரு வீர வரலாற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. நாயக்கப் பேரரசின் வீர வரலாற்றுக்கும் முடிவு வந்து விட்டதென்று தோன்றியது. சுயநலமிகளும், அடிவருடிகளும் தான் ஒருவனை அண்டிப் புகழ்ந்து சீரழிப்பவர்களில் முதன்மையானவர்கள். தன் பேரனை அண்டியிருப்பவர்களும் அப்படிப்பட்டவர்கள் தான் என்பதை இந்த நலிந்த நிலையிலும் அவளால் உய்த்துணர முடிந்தது. எதிர்காலத்தில் வரலாறு கூறுகிறவர்கள் பேரன் ஆளும் போது சிறையில் கொடுமைப் படுத்தப்பட்ட பாட்டியாகிய தன்னைப்பற்றி என்ன கூறுவார்கள் எப்படிக் கூறுவார்கள் என்று உள்ளம் உருக எண்ணிப் பார்த்தாள் அவள்.

 

    • அப்போது அவளது வலக் கண் துடித்தது. உடலும் உள்ளமும் சோர்ந்து தளர்ந்து போயிருந்தன. மறுபடியும் பேரனைப் பார்க்க நேர்ந்தால் மறந்து விடாமல் ஞாபகமாக அவனை ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்.

 

    • மெல்ல மெல்ல நினைவு நழுவியது. கிட்டத்தட்ட ஒரு மண்டலம் வரை பட்டினி போடப்பட்ட உடல் நினைவு மங்குவதும், மலர்வதுமாக இருந்தது. தனிமைக் கொடுமை வேறு.

 

    • தான் சிறை வைக்கப்பட்டிருந்த அறையை நோக்கி யாரோ நடந்து வருகிற காலடி ஓசை கிணற்றுக்குள்ளிருந்து கேட்கிறாற் போல் மங்கலாக ஒலித்தது. பேரனாக இருக்குமோ என்று ஒரு சிறிய சந்தேகத்துடன் பிரக்ஞையை எல்லாம் ஒன்றுதிரட்டிக் கொண்டு எழுந்திருக்க முயன்றாள் அவள்.

 

    • பிரக்ஞை நழுவியது. உடல் தள்ளாடி நடுங்கியது. எழுந்திருக்க முடியவில்லை. அரும்பாடுபட்டுப் பேரனிடம் கேட்க விரும்பிய கேள்வியை வலிந்து முயன்று ஞாபகத்தில் கொண்டு வருவதற்கு மீண்டும் தனக்குத்தானே முயற்சி செய்தாள் அவள்.

 

    • —————

 


 

30. இருள் சூழ்ந்தது 

    • உணர்வு மங்கிய அந்த நிலையிலும் கூடப் பேரனுக்குக் கெடுதல் நினைக்கவில்லை ராணி மங்கம்மாள். ‘தனக்குக் கெடுதல் செய்தாலும் நாட்டு மக்களுக்கு அவன் நன்மை செய்து சிறப்பாக ஆட்சி நடத்தி நாயக்க வம்சத்துக்கு நற்பெயர் தேடித்தர வேண்டும்’ என்றே அவள் உள்ளூற எண்ணி அவனை வாழ்த்தினாள்.

 

    • பிரக்ஞை தவறிக்கொண்டிருந்த நிலையில் அரண்மனைக் காவலன் ஒருவன் வந்து அறையின் வெளிப்பக்கமாக நின்றபடியே அவளைக் கவனித்தான். அவளிருந்த நிலை கண்டு அவன் மனம் இளகிப் பாகாய் உருகியது.

 

    • “தான தர்மங்களைத் தாராளமாகச் செய்து சத்திரம் சாவடிகளைத் திறந்து சாலைகள் அமைத்து, குளங்கள் வெட்டி அறம் செய்த மகாராணி மங்கம்மாள் தலையில் கடைசிக் காலத்தில் இப்படியா எழுதியிருக்க வேண்டும்? பாவம்!” என்று அந்தக் காவலன் அனுதாப உணர்வோடு தனக்குத் தானே முணுமுணுத்தது அவள் செவிகளில் விழுந்ததா இல்லையா எனத் தெரியவில்லை.

 

    • ராணி மங்கம்மாளைச் சொந்தப் பேரன் அரண்மனையிலேயே சிறை வைத்துவிட்டான் என்ற செய்தி மெல்ல மெல்ல வெளி உலகில் மக்களிடையே பரவி விட்டது. அப்படிப் பரவுவதைத் தடுக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை.

 

    • ‘இத்தனை தான தர்மங்களைச் செய்த புண்ணியவதிக்கா இந்தக் கதி நேர்ந்தது?’ என்று தனியாகவும் இரகசியமாகவும் தங்களுக்குள் அநுதாபமாகப் பேசிக் கொண்ட மக்கள் கூடத் தங்கள் உள்ளுணர்வை வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்ள அஞ்சித் தயங்கினார்கள். பாட்டியின் மேல் தீராப் பகையும் குரோதமும் கொண்டுவிட்ட பேரன் தங்களை என்னென்ன தண்டனைக்கு உள்ளாக்குவானோ என்று யாவரும் பயந்தார்கள். அநுதாபத்தைப் பயமும் தயக்கமும் வென்றுவிட்டன.

 

    • ராஜ விசுவாசத்துக்குப் பங்கமில்லாதது போன்ற ஒரு வகை அடக்கமும் அமைதியும் நாடு முழுவதும் தென்பட்டாலும் உள்ளூற இந்த அக்கிரமத்தைக் கேட்டு மக்கள் மனம் குமுறிக் கொண்டிருந்தார்கள். வெளிப்படையாகத் தெரியாத ஒருவகை உள்ளடக்கிய வெறுப்பு நாடு முழுவதும் பரவியிருந்தது. நீறுபூத்த் நெருப்பாயிருந்த இந்த வெறுப்புணர்வை விஜயரங்கனோ, அவனுக்குத் துணையாயிருந்த அவனை ஆட்சியில் அமர்த்திய கலகக்காரர்களோ புரிந்து கொள்ளவில்லை. எதையும் தங்களால் அடக்கிவிட முடியும் என்ற திமிரோடு இருந்தார்கள். ஆட்சி கையிலிருந்ததுதான் அதற்குக் காரணம்.

 

    • ஆனால் அரண்மனை முழுவதும் இது அடாத செயல் என்ற எண்ணமே பரவியிருந்தது. விஜயரங்கனை எதிர்த்தும் முரண்பட்டும் கலகம் செய்ய அவர்களால் முடியவில்லையேயன்றி, ‘ராணியை இப்படிச் செய்தது அக்கிரமம்’ என்று அரண்மனை ஊழியர்கள் அனைவரும் உணர்ந்திருந்தார்கள்.

 

    • பிரக்ஞை தவறுகிற நிலையில் ராணி மங்கம்மாளைச் சிறையில் பார்த்த காவலன் பதறி நிலைகுலைந்து ஓடிப் போய் அதை விஜயரங்கனிடம் தெரிவித்தான். பாட்டியார் ஏறக்குறைய மரணப்படுக்கையில் இருப்பதாகப் புரிந்து கொண்ட விஜயரங்கன் உடனே தன் சகாக்களைக் கலந்தாலோசித்தான்.

 

    • “இறக்கும் தறுவாயிலிருக்கிற ராணி மங்கம்மாளை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. பாட்டி சாகும்போதுகூட உங்களுடைய முகத்தில் விழிக்க விரும்பாமல் செத்தாள் என்ற கெட்ட பெயர் உங்களுக்கு வரக்கூடாது” என்றார்கள் அவனுடைய சகாக்களில் சிலர். விஜயனும் பாட்டியின் அந்திக் காலத்தில் ஒரு நாடகமாடித் தீர்த்து விடுவதென்று தீர்மானித்துக் கொண்டான். சிறையிலிருந்து தேடிவந்து செய்தி சொன்ன காவலனையே திரும்பவும் சிறைக்கு அனுப்பி, “முகத்தில் நீர் தெளித்துப் பருகத் தண்ணீர் கொடுத்து பாட்டிக்குத் தெளிவு வரச் செய்!” என்று அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்தான் விஜயரங்க சொக்கநாதன்.

 

    • அந்தக் காவலனும் உடனே ஓடோடிச் சென்று சிறை வைக்கப்பட்டிருந்த ராணி மங்கம்மாளின் அறைக் கதவைத் திறந்து அவள் முகத்தில் நீர் தெளித்தான். மெல்ல மெல்லப் பிரக்ஞை வந்தது. சற்றே தெளிவும் பிறந்தது. “மகாராணீ! உங்களை இக்கதிக்கு ஆளாக்கியவர்கள் நன்றாயிருக்க மாட்டார்கள்” என்று காவலன் ஆத்திர்மாகச் சொன்னபோது கூட, “அவர்களை அப்படிச் சபிக்காதே! எனக்குக் கெடுதல் செய்தவர்களுக்குக்கூட நான் கேடு நினைக்க மாட்டேன்” என்று ஈனஸ்வரத்தில் கருணையோடும் பரிவோடும் பதில் கூறினாள் மங்கம்மாள். அவளுடைய குரல் கிணற்றிற்குள்ளிருந்து வருவது போலிருந்தது.

 

    • அவளுக்குப் பருக நீர் அளித்தான் அவன். ஆனால் அந்த நிலையிலும் அவள் அதைப் பருக மறுத்துவிட்டாள்.

 

    • “ஊழியனே! உன்மேல் எனக்கு எந்தக் கோபமுமில்லை! இதுவரை எனக்குப் பருக நீரோ உண்ண உணவோ தரக்கூடாது என்று உத்தரவு போட்டிருந்த என் பேரன் இன்றாவது தன் உத்தரவை மாற்றினானே என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். பாட்டி நிச்சயமாகப் பிழைக்க மாட்டாள் என்பது தெரிந்த பின்னாவது பேரனுக்குக் கருணை வந்ததே! அந்த மட்டில் நிம்மதிதான். ஆனால் இதுவரை மானத்தோடு வாழ்ந்துவிட்ட நான் இன்று இந்த நீரைப் பருகி அதை இழக்க விரும்பவில்லை. தயவுசெய்து இப்போது என்னை நிம்மதியாகச் சாகவிடு; போதும்.”

 

    • பேசிக் கொண்டிருக்கும்போதே அவள் கண்களில் நீர் மல்கியது. அவள் மேலும் தொடர்ந்தாள்:

 

    • “நான் சாவதற்குள் என் பேரனைப் பார்க்க முடியுமானால் எனக்கு அவனிடம் கடைசியாக ஒரு கேள்வி கேட்க வேண்டும். அது தவிர இப்போது எனக்கு அவன்மேல் கோபமோ ஆத்திரமோ எதுவும் இல்லை.”

 

    • “முதலில் தண்ணீரைப் பருகுங்கள் மகாராணீ! தயைகூர்ந்து மறுக்காதீர்கள்.”

 

    • “என் தாகத்தைத் தணிப்பதற்காக நீ தண்ணீர் தருகிறாய்! அது என் தாகத்தை அதிகமாக்குமேயல்லாமல் குறைக்காது அப்பா! நான் இவ்வளவு அவமானப்பட்டது போதாது, என்னை இன்னும் சிறிது அதிகமாக அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உனக்கு இருந்தால் என்னைத் தண்ணீர் பருகும்படி நீ வற்புறுத்தலாம்.”

 

    • இதைக் கேட்டபின் அந்தக் காவலன் நீர் பருகும்படி அவளை வற்புறுத்தவில்லை. அவள் மனநிலை அவனுக்கு நன்றாகப் புரிந்தது. விஜயரங்கனை அழைத்து வருவதற்காக ஓடினான். காவலன் விஜயரங்கனோடும் மந்திரிகள் பிரதானிகளோடும் அங்கே வந்து சேர்ந்த போது ராணி மங்கம்மாளின் நிலை மேலும் கவலைக்கிடமாகி இருந்தது.

 

    • பேரனைப் பார்த்ததும் கண்களில் நீர் மல்கிப் பளபளக்க அவள் ஏதோ பேச முயன்றாள். ஆனால் குரல் எழவில்லை. தளர்ச்சியும் சோர்வும் பசியும் தாகமும் ஏற்கெனவே அவளை முக்கால்வாசி கொன்றிருந்தன.

 

    • விஜயரங்கன் அவள் அருகே வந்தான். அவனை வாழ்த்த உயர்வதுபோல் மேலெழுந்த அவளுடைய தளர்ந்த வலக்கரம் பாதி எழுவதற்குள்ளேயே சரிந்து கீழே நழுவியது. கண்கள் இருண்டு மூடின. நா உலர்ந்தது. தலை துவண்டு சரிந்து மடங்கியது.

 

    • விஜயரங்கனோடு வந்திருந்த வயது மூத்த பிரதானி ஒருவர், ராணி மங்கம்மாளின் வலக்கரத்தைப் பற்றிப் பரிசோதித்து விட்டு உதட்டைப் பிதுக்கினார். “நாடி பேசவில்லை, குளிர்ந்துவிட்டது” என்றார். விஜயரங்கன் கூட இருந்தவர்களுக்காக ஏதோ அழுது புலம்புவது போலப் போலியாக நடித்தான்.

 

    • புகழ்பெற்ற ராணி மங்கம்மாளின் கதை முடிந்துவிட்டது. பதினெட்டு ஆண்டுக்காலம் மதுரைச் சீமையை ஆண்ட மகாராணி மரணம் அடைந்துவிட்டாள். அன்ன சத்திரங்களையும், ஆலயங்களையும், அறச் சாலைகளையும் வேறு பல தான தர்மங்களையும் செய்த புண்ணியவதி நிம்மதியாக அரங்கநாதப் பெருமானின் திருவடிகளைச் சென்று அடைந்து விட்டாள்.

 

    • பேரனின் சிறையிலிருந்து கிடைக்காத விடுதலையை மரணம் இன்று சுலபமாக அவளுக்கு அளித்துவிட்டது. உடற்சிறையிலிருந்து உயிர்ப்பறவையே விடுதலை பெற்றுப் போனபின், மனிதர்கள் இட்ட வெறும் சிறை அவளை இனிமேல் என்ன செய்ய முடியும்?

 

    • மகாராணி மங்கம்மாள் வரலாறானாள். மனிதர்கள் கேட்கும் கதையானாள். கர்ண பரம்பரையாய் வழங்கும் சுவையான செவிவிழி நிகழ்ச்சிகளின் தலைவியானாள். தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்று புகழ்பெற்றாள். போற்றுதல் அடைந்தாள்.

 

    • தன் வாழ்வின் இறுதியில் பேரனின் சூழ்ச்சியால் அவள் அடைந்த கொடுமைகள் வரலாற்றில் மெல்ல மெல்ல மறைந்து மங்கிப் போயின. ஆனால் அவள் ஆண்டது, புகழ் பரப்பியது, தானதருமங்கள் செய்தது ஆகியவையே வரலாற்றில் நிலைத்தன, நின்று நிலவின; அவள் மரணத்தின் போது அந்த அரண்மனையைச் சூழ்ந்த இருள் மட்டும் அப்புறம் அங்கிருந்து விலகவேயில்லை. விஜயரங்கனின் பக்குவமின்மையாலும், அவசர புத்தியாலும் ஆத்திரத்தாலும் நாயக்க சாம்ராஜ்யம் ஒளிமங்கி அழிய ஆரம்பித்தது. எங்கும் விலக முடியாத இருள் சூழ்ந்தது.

 

    • ————–

முடிவுரை 

    • ராணி மங்கம்மாளின் மரணத்திற்குப் பின் புதிய தளவாய் கஸ்தூரி ரங்கய்யாவும், பிரதானி வெங்கடகிருஷ்ணய்யாவும் கூறிய யோசனைகளின்படி விஜயரங்கசொக்கநாதன் ராஜ்யத்தின் வருவாயைப் பெருக்கக் கருதி கொள்ளையடிப்பது போல் மக்கள் மீது அதிக வரிச்சுமைகளைத் திணித்தான். கொடுமைப் படுத்தினான்.

 

    • அவன் இட்ட புதிய வரிப்பளுவைத் தாங்க இயலாமல் மதுரைச் சீமை மக்கள் அரசுக்கு எதிராகக் கொதித்து எழுந்தார்கள். கிளர்ச்சிகளும் கலகங்களும் மலிந்தன. ஆட்சி அமைதி இழந்தது. முன்பு தானமாகக் கொடுக்கப்பட்ட இறையிலி நிலங்களுக்குக்கூட இப்போது வரி கொடுக்குமாறு அதிகாரிகளால் மக்கள் வற்புறுத்தப்பட்டார்கள்.

 

    • தனது இறையிலி நிலத்துக்கு வரி கொடுக்கச் சொல்லி வற்புறுத்தியது பொறுக்காமல் கோயில் பணியாளர் ஒருவர் கோபுரத்தின் உச்சியில் ஏறிக் கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

 

    • விஜயரங்கனின் ஆட்சித் தொடக்கத்திலேயே நிகழ்ந்த பாட்டி மங்கம்மாளின் மரணமும், கோயில் பணியாளரின் தற்கொலையும் ஆட்சிக்குப் பெரிய அபசகுனங்களாகவும் நேர்ந்துவிட்டன! அந்தக் கெட்ட பெயரே தொடர்ந்து நீடித்தது. பின்பு மனம் மாறித் தளவாயும், பிரதானியும் புதிய வரிகளை நீக்கி மக்களிடம் நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்தபடி மக்களிடமிருந்து எதிர்பார்த்த நல்ல பெயர் மீளவில்லை. இழந்தவை இழந்தவையாகவே போயின. விஜயனின் திறமைக் குறைவால் நாளடைவில் ஆட்சியின் எல்லைகள் சுருங்கின. ராஜதந்திரக் குறைபாடுகளால் எதிரிகள் பெருகினர். கவலைகள் அதிகமாயின. ஒன்றும் செய்ய இயலவில்லை. மங்கம்மாள் பதினெட்டு ஆண்டுகள் கட்டிக்காத்த ஆட்சியைப் பதினெட்டு மாதங்கள் கூட விஜயனால் நன்றாக ஆள முடியவில்லை.

 

    விரக்தியாலும் கவலைகளாலும் திடீரென்று பக்திமானாக மாறிய விஜயரங்கன் தன் ஆட்சியின் வசத்திலிருந்த கொஞ்சம் நஞ்சம் சொத்துக்களையும் தல யாத்திரைகளிலும், கோயில் திருப்பணிகளிலும் எல்லையற்றுச் செலவழித்தான். மடாலயங்களுக்குக் கொடைகள் வழங்கினான். அரசியல் கடமைகளை மறக்கும் போக்கிடமாகப் பக்தியைப் பயன்படுத்தியதால் ஆட்சி மேலும் தேய்ந்தது. எங்கும் அதிருப்தி மலிந்தது. ராணி மங்கம்மாள் மறைந்த தினத்தன்று அவனைச் சூழ்ந்த அந்த இருளிலிருந்து மறுபடி அவனுக்கும் அவன் ஆட்சிக்கும் விடிவு பிறக்கவே இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’

வணக்கம் தோழமைகளே! எழுத்தாளர் யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’ முழு கதையின் பதிவு உங்களுக்காக. இத்தனை நாளும் தனது பதிவுகளின் மூலம் உங்களது மனதைக் கொள்ளை கொண்ட எழுத்தாளருக்கு ஓரிரு நிமிடங்கள் செலவழித்து உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாமே ! [googleapps domain=”drive”