Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 18

திருவிழாக்காக ஆங்காங்கே தீப்பந்தம் நட்டு வைக்க பட்டு இருக்க, வெண்ணிலவின் வெளிச்சமும் சில குடிசைகளின் வாசலில் இருந்த லைட் வெளிச்சமும் குழந்தைகள் விளையாட தோதாக இருந்ததால் பெரியவர்கள் யாரும் அவர்களை கண்டு கொள்ளாமல் விட்டிருந்தனர். திடீரென எங்கிருந்தோ பாம்பு வந்ததும் மற்ற குழந்தைகள் தப்பித்து ஓடி விட, தருண் ஓட தெரியாமல் ஓடி அருவி நீர் வழிந்தோடும் கரையில் போய் நின்றான். அவனை விரட்டி வந்த நாகமும் ஒரு அடி இடைவெளியில் படமெடுத்து நின்றிட,  குழந்தைகளின் கூச்சலால் ஓடி வந்த சில பெரியவர்கள் அதிர்ந்து போய் நின்றனர். தப்பிக்க வழியின்றி நீருக்கும் பாம்பிற்கும் இடையில் அழுதுகொண்டே நின்றிருந்தான் தருண். கூச்சல் சத்தம் கேட்டு இயல் தருணை தேடி வர, அவளுக்கு சில அடிகள் பின்னால் வருணும் ஊர் தலைவரும் வந்து கொண்டிருந்தார்கள். பாம்பினை பார்த்து பழக்கமிருந்த மலைவாசிகளே அதன் அளவை கண்டு பயந்து நின்றிருக்க, இயலோ தருணை அந்த நிலையில் கண்டதும் சற்றும் யோசிக்காமல் பாம்பின் வாலை பிடித்து சரேலென இழுத்து நீரினுள் தூக்கி வீசி எறிந்தாள். அரண்டு மிரண்டு நின்றிருந்த தருண் “அம்மா….” என்று ஓடி வந்து இயலை கட்டி கொண்டான்.

 

   “ஒண்ணுமில்ல… ஒண்ணுமில்லடா கண்ணா… அது போயிடுச்சு… அழக்கூடாது…” என்று எதுவுமே நடக்காததை போல தருணை தூக்கி செல்ல, வருணோடு சேர்த்து மொத்த கூட்டமும் அதிர்ந்து போய் நின்றது.

 

     ஊர் தலைவர், “ஓடுற பாம்பயே புடிக்கிறாளே, நல்ல தைரிய சாலிய்யா உம் பொஞ்சாதி. எனக்கும்தான் ஒண்ணு வந்து வாச்சிருக்கே…” என்று சொக்கு பாட்டியை திரும்பி பார்த்திட, பாட்டியோ அவரை வக்கனைத்தபடி, “ம்க்கும்… இத்தன வருசத்துக்கு பொறவு எங்கிட்ட என்ன குறைய கண்டீரு?” என்றுவிட்டு வருண் பக்கம் திரும்பி, “ஐயா… ராசா… நாங்கூட, சின்ன ராசா பெத்தவ இல்லாம என்ன செய்ய போவுதோன்னு கவல பட்டுட்டு இருந்தேன்யா… அந்த புள்ளைக்கு ஒண்ணுன்னதும் யோசிக்காம போய் எந்தாயி நின்னா பாரு… இவதான்யா உம்புள்ளைய கரை சேப்பா… இனிமே எங்கட்ட எந்த கவலயும் இல்லாம வேகும் ராசா…” என்று சொல்லி சென்றார்.

 

     கூடிய கூட்டம் மொத்தமும் கலைந்து செல்ல வருணோ தலையை பிடித்து கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான். சுற்றி நடப்பது எதுவும் விளங்காதபடி அவன் மூளைக்குள் ஆயிரம் கேள்விகள், ‘நா ஏன் தருணுக்காக மட்டும் கவலபடாம அவளுக்கும் எதுவும் ஆகிட கூடாதுன்னு பயந்தேன், அவளுக்காக ஏன் துடிச்சேன், அவ உயிருக்கு ஆபத்தில்லன்னு தெரிஞ்சதும் என் மனசு ஏன் இவ்ளோ நிம்மதியா இருக்குது? காலைல பாட்டி பொண்டாட்டினு சொன்னது எனக்கு ஏன் அவ்ளோ சந்தோஷமா இருந்தது? அவள கொலை செய்யத்தான கல்யாணமே செஞ்சேன், இப்போ எப்டி என்னோட புத்தி தலைகீழா மாறுச்சு? எனக்கு என்ன ஆச்சு?’ என விடை தெரியாத கேள்விகளுடன் நெடு நேரமாய் குழம்பி இருக்க, அங்கே இயல் தருணுக்கு உணவூட்டி தூங்க வைத்து கொண்டு இருந்தாள்.

 

     வருண் வந்து பார்க்கையில் இயலும் தருணும் கட்டி பிடித்து கொண்டு கோரை பாயில் உறங்கி இருக்க, அவனும் சத்தமில்லாமல் கயிற்று கட்டிலில் ஏறி படுத்தான். உறக்கம் வராமல் புரண்டு கொண்டு இருக்கையில் திடீரென தருண் தூக்கத்திலேயே அழ தொடங்கினான். சத்தம் கேட்டு இயலும் வருணும் பதறி எழ குழந்தை பயத்தில் ‘அம்மா வேணும்… அம்மாட்ட போகனும்…’ என அழ வருண் இந்துவின் ஞாபகத்தில் உடைந்து போனான்.

 

    “இல்லப்பா… இல்ல… இங்க பாரு… அழக்கூடாது… கண்ணா… தருண்… அழாதடா உனக்கு கதை சொல்றேன்…” என்று இயல் கெஞ்சியதெல்லாம் வீண். காலையில் பறித்து கொடுத்த இலைகளை எடுத்து வந்து காட்டி ஏமாற்றியதும் கொஞ்சம் அழுகை குறைந்தது, ஆனாலும் விசும்பல் மட்டும் நிற்காமல் இருக்க இயல் மீண்டும் கொஞ்ச தொடங்கினாள்.

 

    “நீ சோட்டா பீம்ல… உனக்கு ஒண்ணும் ஆகாதுடா கண்ணா… சாமி நம்ம பக்கத்துலயே இருக்கும்… உன்ன பாத்துகிட்டே இருக்கும்… வேணும்னா நான் உனக்கு பிடிச்ச கிருஷ்ணன் வெண்ண திருடுன கதை சொல்லட்டுமா?”

 

    “வேணாம்….”

 

    “வேற என்னப்பா வேணும்?”

 

    “கிருஷ்ணா பாட்டு பாடுறியா…”

 

    “ஓ… பாடலாமே. நீ இப்டியே என்னோட மடியில படுத்துக்கோ, நான் பாடுறேன்” என்று உறங்கிட வசதியாக படுக்க வைத்தாள்.

 

    ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவனை அண்ணன் அண்ணியின் ஞாபகங்கள் ஆக்கிரமித்து இருந்ததால் செய்வதறியாது விட்டத்தை பார்த்து கொண்டு படுத்திருந்தவன் காதினில் இயலின் குரல் வந்து சிலீரென்று மோதியது.

 

  சின்ன சின்ன பதம் வைத்து

  கண்ணா நீ வா-வா-வா

  மணிவண்ணா நீ வா-வா-வா

 

   வருண் துள்ளி குதித்து கொண்டு படுக்கையை விட்டு எழுந்து நின்றான்.

 

  வண்ண வண்ண உடை உடுத்தி

  கண்ணா நீ வா-வா-வா

  மணிவண்ணா நீ வா-வா-வா 

 

       காதுகளை குடைந்தும் தலையினை தட்டி பார்த்தும், ‘இது என்னை மயக்கிய அதே குரலா…’ என கிரகிக்க முயன்றான்.

 

  கண்ணில் தெரியும் காட்சி எல்லாம்

  கமலக் கண்ணா உன் தோற்றம்

  கட்டழகா மதியழகா

  கண்ணா நீ வா-வா-வா 

 

       ‘அதேதான்… அதே குரலே தான். ஒரு வருஷமா என்ன டிஸ்டர்ப் பண்ணின அதே குரல் தான்’ என்று புரிந்ததும், மகிழ்ச்சியா அதிர்ச்சியா என இனம் புரியாத உணர்வில் அவன் சிக்கி உளன்றிருந்தான். அது எதையும் அறிய முடியாதபடி அவனுக்கு முதுகை காட்டி அமர்ந்திருந்த இயல், உறங்கிய குழந்தையை படுக்க போட்டு அவளும் படுத்து விட்டாள்‌. ஒரே நாளில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அடைந்த வருணோ இன்னும் இன்னும் குழம்பி போய் உறக்கம் தொலைத்து கிடந்தான்.

 

    அடுத்த நாள் பொழுது விடிந்ததும் அனைவரது வீட்டு வாசலிலும் பொங்கல் வைக்க தேவையான சாமான்கள் அடுக்கி வைக்க பட்டிருந்தது. டீ போட்டு கொண்டு வந்து இயலிடம் தந்த சொக்கு பாட்டி, “தாயி மூணு பேரும் சீக்கிரமா குளிச்சுட்டு வாங்க, வெயிலு ஏற முந்தி நாம உச்சி கோயிலுக்கு போயிட்டு வந்திருவோம்” என்று சொல்லி சென்றார்.

 

     இயல் முதலில் தருணை எழுப்பி, அவனை விட்டு வருணை எழுப்ப செய்தாள். வருணோ இரவு முழுவதும் சரியாக உறங்காததால் இப்போது நன்றாக அசந்து கும்பகர்ண தூக்கத்தை தூங்கி கொண்டிருந்தான்‌. தன் பிஞ்சு கைகளால் தட்டி, அடித்து, உதைத்து, உருண்டு எழுப்பி பார்த்தும் தந்தை எழுந்திரிக்காமல் போனதால், குழந்தை, ‘தூங்கு மூஞ்சி‌ டாடி…  சுட்கி ப்ளீஸ்… டாடிய நீயே எழுப்பிக்கோ, நா பிரன்ட்ஸ் கூட விளையாட போறேன்’ என சினுங்கி கொண்டே வெளியே ஓடி விட்டது. இயலுக்கோ அவனை தொட்டு எழுப்பிட தயக்கமாக இருந்ததால் தூரத்தில் இருந்த ஒரு கம்பை எடுத்து வந்து காலில் அடித்து எழுப்ப முயன்றாள்‌. முதல் மூன்று அடிகள் மெதுவாக அடித்தவள், நான்காவதை சற்று பலமாக அடித்திட, “அம்மா…” என்ற அலறலுடன் துள்ளி எழுந்தான் வருண் .

 

     ‘ஐயயோ….’ என்று கண்கள் மிரள கையில் கம்புடன் நின்றிருந்தவளை அவன் சின்ன புன்னகையோடு கடந்து செல்ல, ‘தப்பிச்சேன்டா சாமி…’ என்று அந்த இடத்தை விட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்‌. அரை மணி நேரத்தில் குழந்தையையும் தயார் செய்து தானும் தயாராகி இயல் வந்திட, பொங்கல் சாமானோடு மங்கள வாத்தியம் முழங்க உச்சி கோயிலுக்கு ஜன கூட்டம் படையெடுத்து செல்ல தொடங்கியது. வருண் கையில் பூ, புடவை, தாலி, மஞ்சள், குங்குமம் அடங்கிய ஒரு தாம்பாளம் தரப்பட்டது. அவன் இயலை பார்த்து ஒரு காதல் புன்னகையை சிந்தி விட்டு தாம்பாளத்தை தூக்கி கொண்டு நடக்க, ‘எதுக்கு என்ன பாத்து நக்கலா சிரிச்சுட்டு போகுது இந்த குரங்கு?’ என இயல் சந்தேகத்தோடு தருணை தூக்கி கொண்டு அவன் பின்னால் நடந்தாள்.

 

      வழி எல்லாம் சொக்கு பாட்டியிடம் அந்த காட்டை பற்றி கேட்டு தெரிந்து கொண்டும், தருணுக்கு விதவிதமான பூக்களை பறித்து தந்து கொண்டும் வந்தவளை வருண் கண்கள் அடிக்கடி தொட்டு வந்தது. அந்த பாதை கொஞ்சம் ஏற்றமாகவே இருக்க குழந்தையின் கணத்தால் அரை மணி நேரத்திலேயே இயலுக்கு மூச்சு வாங்கியது. ‘இதுக்குத்தான் சிரிச்சுட்டு போனானா? முடியலயே… எனக்கே இப்டின்னா, மத்த வேலக்காரங்களால நிச்சயமா ஏற முடிஞ்சிருக்காது’ என வருண் தன்னை அழைத்து கொண்டு வந்ததன் காரணம் இப்போதுதான் புரிந்தது.

 

     உடன் வருபவர்கள் அவ்வப்போது வந்து தருணை தூக்கினாலும், அடுத்த ஐந்து நிமிடத்தில் அடம்பிடித்து மீண்டும் இயலிடமே வந்து விட்டான். இடுப்பிலும் முதுகிலும் மாற்றி மாற்றி அவனை தூக்கி வருவதற்குள் அவளுக்கு போதும் போதும் என்றாகி விட்டது. உச்சி மலையில் இருந்த பழங்கால கற்கோவில் அவர்கள் கண்ணுக்கு தெரிந்ததும் அந்த ஒன்றரை மணி நேர பயணம் முடிவுக்கு வந்தது‌. முன்னாலேயே வந்திருந்த மற்ற பெண்கள் பொங்கல் வேலையில் மும்மரமாய் இருக்க, இயல் இப்போது தான் வந்தே சேர்ந்தாள். முதுகுவலிக்க தருணை சந்நதியில் இறக்கியதுமே வருண் வந்து அவனை தூக்கி சென்றுவிட்டான். இங்கிருந்த துர்கை சிலையும் கீழ் கோவிலில் இருந்த துர்கையின் சாயலில் இருக்க, இயல் ஒரு முறை நமஸ்கரித்து விட்டு வெளியேறிவிட்டாள்.

 

     அடுத்தடுத்து நடந்த பூஜை, பொங்கல் படையல், கெடா வெட்டு என்று அத்தனையிலும் வருணே தருணை தூக்கி இருந்தான். ஏதோ கோவில் மரியாதைக்காக இப்படி செய்வதாக நினைத்திருந்தவள், திரும்பி வரும் போதும் வழியெல்லாம் வருணே தருணை தூக்கி இருப்பதை கண்டதும் இயலுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. அடிக்கடி அவளை ஓரக்கண்ணால் பார்ப்பதும், சின்னதாய் சிரிப்பதுமாய் இருந்திட இயல் இந்த முறையும் சரியாக, அவனை தப்பானவனாக நினைத்தாள். அவனுக்கு தான் அவள் தேவதையாக தெரிந்தாளே தவிர, அவள் மனதில் அவன் இன்னும் ராட்சஷனாய் தானே இருக்கிறான். மலை இறங்கியதும் அனைவருக்கும் கெடா விருந்து பெரிய அண்டாவில் பரிமாற தயாராக இருக்க, இயல் அரக்க பறக்க அதை உண்டு விட்டு வருண் கண்ணில் சிக்காமல் ஓடி ஒழிந்தாள். அந்த நாள் முழுவதும் அவனை சந்தேகப்பட்டு கொண்டு இயல் சொக்கு பாட்டி வீட்டிலே இருந்தது அவனுக்கும் புரியத்தான் செய்தது‌. ஆதலால் அவனும் வீட்டிற்கு கிளம்பும் வரை அவளை தொந்தரவு செய்யாமல் ஒதுங்கியே இருந்து கொண்டான்.

 

    இரவு உணவை சொக்கு பாட்டி வீட்டில் உண்டு முடித்ததும் அவர்களின் பயணம் ஆரம்பிக்க, வருணிடம் சலுகையை எதிர் பார்க்க விருப்பமின்றி காரில் ஏறியதுமே இயல் தருணை மடியில் கட்டி கொண்டு உறங்கி விட்டாள். திடீரென ஒரு ஸ்பீடு பிரேக்கரில் கார் ஏறி இறங்கியதும் தன் தாமரை விழிகளை விழித்தவள், தான்‌ அவனின் தோள் சாய்ந்து கை வளைவுக்குள் இருந்ததை கண்டதும் பதறி போய் தள்ளி அமர்ந்தாள்.

 

    அடிக்கடி கார் வளைவுகளில் திரும்பி திரும்பி சென்றதால் உறங்குபவளின் தலை கார் கதவினில் முட்டி கொண்டே வர, வருண் தன் தோள்களில் அவளை‌ சாய்த்து வைத்து தருணோடு சேர்த்து கட்டி அணைத்திருந்தான். ஒரு இஞ்ச் இடைவெளியில் இருந்த ஆரஞ்சு நிற கன்னங்களும், ரோஜா நிற உதடுகளும், உறக்கத்திலும் தருணை தன் நடு மார்போடு அவள் இறுக்கி அணைத்திருந்த விதமும் வருணின் ஆண்மை உணர்வுகளை அசைத்து பார்த்திட, மனமெனும் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏற தொடங்கியது. வெளியிலிருந்த கும்மிருட்டும்,  தலையில்  சூடி  இருந்த மல்லிகை மணமும், கைகளில் உரசிய பூந்தளிர் தேகமும், அவனின் கண்களை சிறை செய்திருக்கையில் தான் அந்த ஸ்பீடு பிரேக்கர் வந்து தொலைத்தது. நீல விழிகளால் தன்னை முறைத்து பார்த்து விட்டு திரும்பி அமர்ந்தவளை கண்டு அவனுக்கு இன்னும் அவளின் மேல் ஆசை கூடியது.

 

    வீட்டிற்கு வந்ததும் தருணை படுக்கையில் கிடத்தி விட்டு கீழே படுக்க முனைந்தவளை வருண், “நீயும் இனிமே தருண் கூட பெட்ல படுத்துக்கோ இயல்” என்றான்.

 

    “வேணா சார். எனக்கு வேலக்காரின்ற பேரே நல்லாத்தான் இருக்கு, ஒரு தடவ நான் மேல வந்து படுத்தாலும் எனக்கு நீங்க வேற பேர் வைச்சிடுவீங்க. நான் கீழயே இருந்துக்குறேன்” என்று துப்பட்டாவை போர்வையாக்கி படுத்து விட்டாள்.

 

    அருகில் வந்து அமர்ந்து, “கீழ ரொம்ப குளிருதுடி, நீ மேல படுத்துக்கோ நான் வேணும்னா சோபால போய் படுத்துக்குறேன்.”

 

    “தினமும் தரையில தூங்குறேன், எனக்கு இது தெரியாதா? எப்டியும் கொஞ்ச நாள்ல என்னை கொல்ல போறீங்க, நான் தரையில தூங்கினா என்ன தண்ணிக்குள்ள தூங்கினா என்ன? பேசாம போய் படுங்க, எனக்கு தூக்கமா வருது”

 

     “நான் ஒரே ஒரு தடவதான் கொன்றுவேன்னு சொன்னேன், ஆனா நீ ஒரு லச்சம் தடவ சொல்லி காட்டிட்டடி”

 

   “……………”

 

     வருண், “இயல்… இங்க பாரு… இயல்…” என்று கெஞ்சி கொண்டே இருக்க, தருண் தான் விழித்தானே தவிர அவள் கண்ணை திறக்கவே இல்லை. அதுசரி, உறங்குபவரை எழுப்பலாம், உறங்கியதாய் நடிப்பவளை எழுப்ப முடியுமா?

 

    அடுத்த நாள் முழுவதும் வருண் நின்றாலும், நடந்தாலும்,  பேசினாலும், சிரித்தாலும் இயல் கண்களுக்கு தப்பாகவே தெரிந்திட அவனை விட்டு ஓடுவதும் ஒளிவதுமாய் இருந்தாள். அதற்கு அடுத்த நாளும் அவள் இதையே தொடர, வருண் ஒரு முடிவுக்கு வந்து விட்டான். இதுநாள் வரை மூட்டை கட்டி வைத்திருந்த தன் வாலுத்தனத்தை வெள்ளி கிழமை காலையில் எழுந்தது முதலே வருண் கட்டவிழ்த்து விட ஆரம்பித்ததான்.

 

     இயல் கிச்சனில் வேலை பார்த்து கொண்டிருக்க, மாடியிலிருந்து வருண் கத்தும் சத்தம் கேட்டது.

 

    “இயல்… இயல்… சீக்கிரமா மேல வா”

 

     “ம்ச்ச்… என்ன?”

 

     “தருண் உங்கிட்ட என்னமோ சொல்லனுமாம்.”

 

    “சீக்கிரமா சொல்லு கண்ணா, எனக்கு கிச்சன்ல நிறைய வேல இருக்கு”

 

     “நானு இனிமே உன்ன அம்மான்னு கூப்பிடட்டுமா?” என்றதும் அவள் அதிர்ந்து போய் வருண் முகத்தை பார்க்க அவனோ மர்ம புன்னகையோடு புருவம் உயர்த்தி, “இது வெறும் ஆரம்பந்தான், இனிமே பாரு….” என்றான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: