Skip to content
Advertisements

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 16’

குளிக்கும் நேரத்தில் மனதை சமனப் படுத்தியிருந்தாள். வம்சியை விட்டுக்  கொஞ்சம் தள்ளி வந்தால்தான் மூளை கூட ஒழுங்கா வேலை செய்யுது. இவனைக்  கிட்ட நெருங்க விட்டோம் நம்மை அறியாமலேயே அவனுக்கு அடிமையா தலையாட்டி பொம்மையாயிடுவோம். இவனை விட்டு எவ்வளவு சீக்கிரம் விலகுறோமோ அவ்வளவு நல்லது. தண்ணீர் வரத்து திடீரென குறைய ஆரம்பித்தது. ஒரு நிமிடத்தில் சுத்தமாய் நின்றுவிட்டது. டவலை சுற்றியவள் கதவின் அருகில் நின்று கத்தினாள்.

 

“வம்சி தண்ணி நின்னுடுச்சு”

“ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு”

…..

“சாரி காதம்பரி. கீழ இருக்கும் அப்பார்ட்மென்ட் பாத்ரூமில் ப்ளம்பிங் வேலை செய்றாங்களாம். அதனால டெம்ப்ரவரியா பாத்ரூம் சப்ளை கட் பண்ணிருக்காங்க. இன்னும் முப்பது நிமிஷத்தில் திரும்ப தண்ணி வந்துடும். இப்போதைக்கு உனக்கு கிட்சன் சிங்கில் தண்ணி பிடிச்சு வெளிய வாளில வச்சிருக்கேன். உபயோகப் படுத்திக்கோ. இன்னும் வேணும்னா சொல்லு”

 

நல்லவேளை அவள் குளித்து முடித்திருந்தாள். “தாங்க்ஸ் வம்சி. நான் குளிச்சு முடிச்சுட்டேன். ட்ரெஸ் பண்ணிட்டு வந்துடுறேன்”

 

மூடிய கதவைப் பார்த்து விஷமத்துடன் சிரித்த வம்சி. போனில் யாருக்கோ டெக்ஸ்ட் செய்தான் ‘மறக்காமல் இன்னும் முப்பது நிமிடத்தில் தண்ணீர் வால்வை திறந்து விடவும்’.

 

“சாரி செர்ரி…. பாத்ரூம்ல உன்னை ரொம்ப யோசிக்க விடக் கூடாதுன்னுதான் தண்ணியைக் கட் பண்ணேன்” என்று முணுமுணுத்தபடியே சென்ட் மெசேஜை விசிலடித்தபடி அழித்தான்.

சின்ன சின்ன பாவை கொஞ்சி கொஞ்சிப் பேசி

துள்ளிச் செல்லும் என்னழகே

 

தலையைத் துவட்டியபடி வெளியே வந்த காதம்பரி “இந்தத்  தண்ணி  பக்கெட்டை பாத்ரூமில் வச்சுடுறேன். வேணும்னா யூஸ் பண்ணிக்கலாம்”

 

“நீ வெயிட் தூக்காதே. நான் செய்றேன். உன்னால முடிஞ்சால் சீக்கிரமா ஒரு  காபி போடு போ”

 

சமையலறைக்கு சென்றாள். அங்கிருந்த பால் பவுடரைக் கொண்டு இருவருக்கும் காப்பி தயாரித்தாள்.

 

“செர்ரி… தாங்க்ஸ் பார் த காபி“ அவளருகே சுவாதீனமாக அமர்ந்து காப்பியைப் பருகினான் வம்சி.

 

“என் வீட்டில், நீ காப்பி போடுற.. என் கையருகே காதம்பரி…  எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா. ஒரு நாள் என் வீட்டில் இருந்ததே இவ்வளவு சந்தோஷம் தருது நீ என் கூடவே இருந்தால் எவ்வளவு நல்லாருக்கும்”

 

இதன் அடுத்தக் கட்டம் எங்கு செல்லும் என்பதை உணர்ந்த காதம்பரி எழுந்தாள்.

 

“பசிக்குது வம்சி, கிளம்புங்க ஹோட்டல் போகலாம்”

 

“பத்து நிமிஷத்தில் கிளம்பிடுறேன். ஆனால் அதுக்கு முன்ன ஒரு ஆம்லட் போட்டுத்தரட்டுமா”

“போடலாமே… வீட்டில் முட்டை, வெங்காயம் எதுவுமே இல்லை எப்படிப் போடுவிங்க மேஜிக்லயா வரவழைப்பிங்க?”

 

“ஹே அந்த ஷெல்ப் பாக்கலையா”

 

“பாத்தேனே…. என்னமோ டப்பாவா இருக்கு”

 

“டப்பா இல்லை அதுதான் மேஜிக். உனக்கு ஓகேன்னா அரைமணி நேரத்தில் அருமையா சமைச்சுத் தரேன்”

 

“ஓகே.”

 

அலமாரியிலிருந்து ரக ரகமாய் டப்பாக்களை எடுத்து வைத்தான்.

 

ஒரு டப்பாவைப் பிரித்தான். அதில் ரவையுடன் மசாலாவும், காய்ந்த காய்கறிகளும் கலந்திருந்தது.

 

“இது வெஜிடபிள் கிச்சடி மிக்ஸ். இதில் கொஞ்சம் தண்ணி ஊத்தி மைக்ரோவேவில் வச்சால் கால்மணியில் கிச்சடி தயார்”

 

சுடுதண்ணி ஊற்றி மைக்ரோவேவில் வைத்தான்.

“இது எக் பவுடர். இதில் கொஞ்சம் தண்ணி கலந்து கலக்கினால் முட்டை ஆயிடும்”

 

“இது பாரு ப்ரைட் ஆனியன். இதை இந்த முட்டையில் கலந்து, உப்பு, மிளகுத்தூள் போட்டு அருமையானா ஆம்லேட் போடலாம்”

 

“வம்சி பிரமாதமா சமைப்பிங்க போலிருக்கே?”

 

“பிரமாதமான்னு தெரியல… ஆனா நல்லாவே சமைப்பேன். மாமா வீட்டைப் பார்த்தியே…. வீடே சின்னது, அதில் ரொம்ப சின்ன சமையலறை. ஸ்கூல் விட்டு வந்தா சாப்பிட ஒண்ணுமே இருக்காது. என்னவோ எனக்கு சாப்பாடு வேணும்னு  கேட்க ரொம்பத் தயக்கம். அதனால பசியோட எப்படா சாப்பாடு தருவாங்கன்னு பார்த்துட்டே இருப்பேன்.

 

சீக்கிரம் சாப்பாடு வேணும்னா பாட்டிக்குக் காய்கறி அரிஞ்சு தரணும், கிணத்தில் தண்ணி இறைச்சுத் தரணும், அத்தைக்கு பாத்திரம் கழுவித் தரணும். இப்படியே ஒவ்வொரு வேலையா கத்துகிட்டேன்” அவன் பேசிக் கொண்டே சமைத்தான். இந்த விஷயங்களை அவன் யாரிடமும் பகிர்ந்து கொண்டிருக்க மாட்டான் என்று தோன்றியது. அவளை அந்த அளவுக்கு நெருக்கமாய் உணர்ந்தது மகிழ்ச்சியையும் அதே சமயம் பயத்தையும் தந்தது.

காதம்பரி மனக்கண்ணில்  ஒரு பத்து வயது மதிக்கத் தக்க சிறுவன் கஷ்டப்பட்டு, கைகள் சிவக்க சிவக்கக் கிணற்றில் நீர் இறைத்தான்.

 

வம்சியின் கரங்களைப் பற்றியவள் உள்ளங்கைகளைப் பார்த்தாள். வலுவாக உறுதியுடன் இருந்த அதனை வெறித்தவள் “பத்து வயசில் தாம்புக் கயிறை பிடிச்சு இழுக்குற அளவுக்கு வலு இருக்காதில்லை. தண்ணி இறைகிறப்ப கையெல்லாம் ரொம்ப வலிச்சுதா வம்சி. கயிறு அந்த பிஞ்சுக் கைகளைக் காயப்படுத்திருக்கும்ல”

 

“கவலைப்படாதேம்மா சில நாட்களில் பழகிட்டேன்”

 

படித்து முடித்து தன் கால்களில் நிற்கும் பலம் வந்தபின்பும் கூட தாய் தந்தையை மிஸ் செய்கிறேன். அந்த சிறு வயதில் தெரியாத வீட்டில் சாப்பாட்டுக்காகப் பிறரை எதிரபார்த்து நிற்பது எவ்வளவு பெரிய கொடுமை.

 

எந்தன் கண்ணில் உந்தன் கண்ணீர் நான் ஏந்த முயல்கிறேன்

உன் சோகம் என் நெஞ்சில் ஏங்கிப் போகிறேன் அது ஏனடா

நான் ஏன் நீயாகிறேன்

 

வம்சியின் கண்களில் கனிவு. காதம்பரி அவன் மீதான அக்கறையை வெளிப்படுத்திவிட்டாள். அடுத்து அவன் முறை.

 

“உங்கம்மா மட்டுமில்லை நான் கூட உனக்குப் பிடிச்சதை செஞ்சு தருவேன். சொல்லு செர்ரி… தோசை, சாம்பார் செஞ்சு தரட்டுமா”

“ம்ஹூம்…. ராகி முத்தே எப்படி செய்யணும்… கத்து தர்றிங்களா”

 

அவனது முகத்தில் புன்னகை பெரிதானது.

 

“கண்டிப்பா”

 

தண்ணியை பாத்திரத்தில் சூடுபடுத்தியவன் அவளுக்கு செய்முறையை விளக்கினான். பின்,

“உன்னைப் பத்தி சொல்லேன் காதம்பரி”

 

“நான் அம்மா அப்பா இருந்த வரை எந்த கஷ்டமும் பட்டதில்லை. அண்ணன் அவன் குடும்பத்தைப் பார்த்துட்டு போயிட்டான். நான் வேற கம்பனியை பாத்துக்குறேன்னு பொறுப்பை எடுத்துட்டேன். கஷ்டப்பட்டு வேலை செஞ்சுத் தருவேன். விளம்பரத்துக்கு முழு செலவையும் செஞ்சிருப்போம். கடைசில க்ளையன்ட்ஸ் பணமே தராம ஏமாத்திருவாங்க. நம்ம உழைப்பை உறிஞ்சி, விளம்பரத்தை போட்டு பணம் சம்பாரிச்சுட்டு  இதெல்லாம் ஒரு விளம்பரமான்னு ஏளனமா சொல்லுவாங்க பாருங்க. இவன்கிட்டயெல்லாம் பேச்சு வாங்கணுமான்னு தோணும்”

 

“ஈஸி ஹனி…. இந்த உலகம் சப்போர்ட் இல்லாதவங்களை அடிச்சு சாப்பிடத்தான் பார்க்கும். ஆனால் திறமை என்னைக்கும் ஜெயிக்கும்”

“தெரியல வம்சி… ஒருத்தர் வளர யார் ஹெல்ப் பண்றாங்களோ இல்லையோ, வளரும் முன்னமே வேரில் வெந்நீர் ஊற்ற ஒரு கூட்டமே இருக்குன்னு புரிஞ்சுகிட்டேன். எனக்கு நல்லா தெரிஞ்ச அப்பாவின் நண்பர்கள்னு சொல்லும் கூட்டமே ‘உனக்கு எதுக்கு வீண்வேலை கம்பனியை எங்க கைல கொடுத்துட்டு ஒதுங்கிக்கோ…’ன்னு மிதம்மா அட்வைஸ் பண்ணாங்க..”

 

அவள் பெற்றோரைப் பற்றிப் பேசும்போது அவளது கண்களில் ஈரம் தென்பட்டது.

 

அவளது தோளை ஆறுதலாக அணைத்துக் கொண்டவன் “அப்பறம் தொழில் பற்றியே ஐடியா இல்லாத நீ இந்த நிலைக்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டிருப்ப ஹனி”

 

“கஷ்டமே இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனால் நான் நட்டாத்தில் இருந்தப்ப எனக்குப் பற்றுக் கோடாக இருந்தது ஜானும், கல்பனாவும்தான்”

 

“ஹ்ம்ம்… தெரியும் ஜான் கூடத்தானே நீ கிசுகிசுக்கப் படுற… “

 

“ச்சே…. ரிடிகுலஸ்… ஜான் அந்த நிலைமையில் என்னை விட்டுப் போகாம எனக்குப் பாதுகாப்பு அரணா இருந்தான். இல்லைன்னா என்னாயிருக்கும். நல்லவேளை கல்பனா பெண், இல்லைன்னா இன்னொரு கதை வேற கிளம்பியிருக்கும்”

“உன்னைப் பத்தி தப்பா எதுவும் சொல்லல செர்ரி. ஜான் உங்கப்பாட்ட வேலை செஞ்சான். இருவரும் நல்ல நண்பர்கள் நெருங்கிய உறவினர்களாக மாறும் வாய்ப்பு அதிகம்னு தான் சொல்லிருக்காங்க. மத்தபடி நீ ஒரு நெருப்புடா டைப் என்றுதான் சொல்லிருக்காங்க”

 

“எஸ்… கல்பனாவைக் கூட என்கிட்டே நெருங்கவிட்டதில்லை. இப்ப இங்க உட்காந்திருக்கிறது, உங்க கூட பேசுறது எல்லாம் நான்தானான்னு கூட சந்தேகம் வருது”

 

“எந்த உணர்ச்சிக்கும் வடிகால் வேணும். உன்னோட கோபம், கஷ்டம், ஆசைகள்  எல்லாம் மனசில் பூட்டி வச்சிருந்த. அதைக் காது கொடுத்து கேட்கவோ இல்லை மனசார நிறைவேற்றவோ உன் அருகில் யாருமில்லை. அதனால் சொல்லவும் தோணல. என் மேல இருக்கும் க்ளோஸ்னஸ்ல மனதில் புதைந்தது வெளிய வந்திருக்கு. இது தப்பில்லை. ஆனால் இந்த அளவுக்கு தொழில் தொழில்னு கஷ்டப்பட அது மட்டுமே காரணமா இருக்காது. எகனாமிக் கிளாசில்தான் பயணம் செய்வன்னு சொன்னியே. என்னை மாதிரியே நீயும் பணத்துக்கு கஷ்டப்பட்டியா செர்ரி”

 

 

“கஷ்டம்தான்….. ஆனால் வேறு விதமான கஷ்டம். நான் தங்குறதுக்கு வீடு இருக்கு. சாப்பிட காசிருக்கு. ஆனாலும் கையில் பணமே இருக்காது… புரியல இல்ல…. விளக்கமா சொல்றேன்…. ஆழம் தெரியாம ஒரு தொழிலில் இறங்கிட்டேன். க்ளையன்ட்ஸ் வருஷக்கணக்கா காசு தராம இழுத்தடிப்பாங்க. சிலர் சுத்தமா தரவே மாட்டாங்க. இதெல்லாம் நான் பொறுத்துக்கலாம் ஆனால் என்கிட்டே வேலை செய்றவங்களுக்கு மாசாமாசம் சம்பளம் தரணும். கம்பனியோட அன்றாட செலவுகள் அப்பப்பா…. ரொம்ப கஷ்டபட்ட நாட்கள் அது.

 

 

ஓரளவு உயரத்துக்கு  வரும்போது வாய்விட்டு அழக் கூட முடியாது. மனசுவிட்டு நம்ம உணர்வுகளைப் பகிர்ந்துக்க முடியாது. ஆறுதல் சொல்ற மாதிரி பேசிட்டு எப்படி இந்த வீக்கான மொமென்ட்டை பயன்படுத்தி நம்ம ஆதாயம் அடையலாம்னு காத்திருக்கும் கூட்டம் அதிகம். யார்கிட்டயும் உதவின்னு நிக்கல. இதில் இறங்கிட்டோம் முழுசா இறங்கி பாத்துற வேண்டியதுதான்னு ஒரு முடிவோட இருந்தேன்.

 

 

வெளிய தெரியாம, ஜான் உதவியோட என் ப்ளாட்டை அடமானம் வச்சு பணம் புரட்டினேன். பணப் பிரச்சனைகளை சால்வ் பண்ணேன். அந்த பிளாட் கடனுக்கு வட்டி எவ்வளவு கட்டிருப்பேன் தெரியுமா வம்சி. தினமும் சாயந்தரம் ஆறு மணிக்கு வட்டிப் பணத்தை கலெக்ட் பண்ண ஆள் வந்துடுவான். பார்க்க பக்கா பிஸினெஸ்மேன் மாதிரி இருப்பான். நான் ஏதோ அவன்கூட பிஸினெஸ் பேசுறதா எல்லாரும் நினைப்பாங்க. ஆனால் ஜான் ஒத்த பைசா குறையாம கேஷா பணம் எடுத்துட்டு வந்து அவன் கையில் தருவான். எங்க உழைப்பு வட்டியா ஒருத்தன் கைக்கு தினமும் போகும்.

 

என் சோதனையும் பொறுப்பும் அதிகமாயிட்ட காலகட்டம் அது. என் தொழிலோட சேர்த்து என் வீட்டையும் மீட்டெடுக்கணும். பேய்த்தனமா உழைக்க ஆரம்பிச்சேன். நிறைய ப்ராஜெக்ட் எடுத்துப்பேன். பணம் வரும்ன்னு தெரிஞ்சா சின்னதோ பெருசோ எல்லா ப்ராஜெக்ட்ஸயும் ஒத்துக்க ஆரம்பிச்சேன்.

 

பத்தில் ஆறு வேலைக்குத்தான்  ஒழுங்கா பணம் வரும். அதை வச்சு சமாளிப்பேன். ஜான்கிட்ட பணம் வசூல் பண்ணும் பொறுப்பை கொஞ்ச நாள் ஒப்படைஞ்சிருந்தேன். கொஞ்சம் உயரம் போகவும் சில்லரைப் பசங்களை அறவே ஒதுக்கிட்டேன். ஜான் எல்லா கஷ்டத்தில் என் கூடவே இருந்தான். இனிமேல் நான் சமாளிச்சுக்குவேன்னு தெரிஞ்சதும்தான் என்னைவிட்டுப் போனான். அவன் புதிய கம்பனி ஆரம்பிச்சுட்டு போகும்போது கணிசமா பணம்தந்து உதவினேன். அவன் செஞ்ச உதவிக்கு பதில். இலவசமா வாங்குறதோ இல்லை கடன் படுறதோ எனக்குப் பிடிக்காத விஷயம்”

 

இருவரும் பேசிக்கொண்டே சமைத்ததில் பொழுது போனதே தெரியவில்லை.

 

சொன்னதைப் போலவே அரைமணி நேரத்தில் அருமையான உணவு சமைத்து வைத்தான் வம்சி.

“அதனால்தான் இவ்வளவு கடுமையா உழைக்கிறியா காதம்பரி. நான் கம்பனிக்கு சீக்கிரம் வந்துடுவேன். சிலநாள் காலை ஜாகிங் போவேன். அப்பத்தான் நீ தெருமுனையில் காரை நிறுத்திட்டு அவசர அவசரமா சாப்பிட்டுகிட்டே நீ வேலை செய்ததைப் பார்த்தேன். சாப்பிடக் கூட நேரமில்லாம நீ ஓடிட்டு இருந்தது எனக்கு ஒரே வருத்தம். அதனால்தான் ஆபிஸ்ல காலை சாப்பாட்டைக் கஷ்டப்பட்டு என்கூட உன்னை சாப்பிட வச்சேன்.

 

இப்ப தினமும் என் வீட்டில் என்கூடவே நீ உக்கார்ந்து சாப்பிடணும்னு ஆசையா இருக்கு. நீ என்ன சொல்ற காதம்பரி”

 

அந்தக் கேள்விக்கு பதிலளிக்க அவள் விரும்பவில்லை “சாப்பாடு ரொம்ப ருசியா இருக்கு வம்சி”

 

“ருசி சமையலில் இல்லை செர்ரி. அதை செய்து தந்த கைகளில்தான் இருக்கு. அதுக்கு நீ என்ன பதிலுக்குத் தரப்போற”

 

‘திருடன் மயக்கப் பாக்குறான். மயங்கிடாதே காதம்பரி’ மனதினுள் ஒரு குரல் எச்சரித்தது.

 

“நீ தரலைன்னா என்ன… நானே எடுத்துட்டுப் போறேன்” பதிலையும் அவனே சொல்லி முடித்தான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: