Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 17

திங்கட்கிழமை அன்று அதிகாலையிலேயே வருண் தருண் இயல் மூவரும் காரில் எஸ்டேட்டை தாண்டி இருக்கும் மலையை நோக்கி பயணப்பட்டனர். டிரைவர் காரை ஓட்டி வர பின் சீட்டில் இயலுக்கும் வருணுக்கும் இடையில் தருண் அமர்ந்திருந்தான். பயணம் ஆரம்பித்த சில நிமிடங்களில் தருண் உறங்கிவிட, வருண் அவனை தூக்கி தன் மார்பில் போட்டு கொண்டான். இத்தனை நேரம் குழந்தையை ஆதரவாய் பிடித்து கொண்டு வந்தவளுக்கு இப்போது பற்றி கொள்ள எதுவும் கிடைக்காது போனது. அத்தனை குளிரிலும் அவளுக்கு காருக்குள் வேர்த்ததை கண்ட வருண், “இயல் ஏன் இப்டி வேர்க்குது உனக்கு, ஆர் யூ ஆல்ரைட்?” என்றான்.

 

     “ம்… ஒண்ணுமில்ல” என்றவளின் கைகளோ சீட்டை இறுக பற்றி கொண்டிருக்க, பயத்தில் மலங்க மலங்க விழித்ததை பார்த்த வருண், “இயல்… உனக்கு டிராவல்னா பயமா?” என்றான்.

 

     ‘கண்டுபுடிச்சுட்டான், அவனில்ல யாரா இருந்தாலும் என் மூஞ்சிய பாத்ததுமே பயந்திருக்கேன்னு ஈசியா சொல்லிடுவாங்க. இதுக்கு மேல எதுக்கு மறைக்கனும்’ என நினைத்தவள், “எனக்கு பயம் டிராவல்னால இல்ல சார்…. இந்த கார்…”

 

     “ஏன்? இதுக்கு முன்னாடி கார்ல போனதே இல்லையா?”

 

    “ஆக்ஸிடென்ட்…” என்ற ஒற்றை வார்த்தையுடன் திரும்பி அமர்ந்து கொண்டாள். வருணுக்கு முழுதாய் புரியவில்லை என்றாலும், மனது அவளுக்காய் இரக்கம் கொள்வதை நிறுத்த முடியவில்லை. இதுவரை அவள் மேல் உண்டாகி இருந்த சாப்ட் கார்னர் இன்று இன்னும் கொஞ்சம் கூடி அக்கறையாக மாறி நின்றது. எனவே காரை ஆங்காங்கே நிறுத்த செய்து அவளை சில நிமிடங்கள் வெளியே நின்று வர அனுமதித்தான். அவளுக்கும் அது தேவையாய் இருந்ததால் எந்த பிரச்சனையும் செய்யாமல், அந்த நேரத்தை சிறிது இளைப்பாற பயன்படுத்தி கொண்டாள். நான்கைந்து முறை ஓய்வெடுத்து பயணித்ததால் ஒன்றரை மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை இரண்டு மணி நேரமாகியும் வந்தடைய வில்லை. தருண் தூங்கி எழுந்ததும் இயல் தருணை கட்டி பிடித்து கொண்டு அமர்ந்து கொள்ள மீதி தூரத்தை நிற்காமல் கடந்து விட்டார்கள்.

 

    வருண் வந்திறங்கியதுமே சுற்றி இருந்த பழங்குடி மக்கள் முரசு கொட்டி நாயணம் முழங்கிட, அந்த கிராம தலைவர் வந்து வருணுக்கும், அவன் கையிலிருந்த தருணுக்கும் மாலை அணிவித்து அகம்மலர, “வாங்க தம்பி…” என வரவேற்றார். இயல் மெல்லமாய் வருண் பின்னிருந்து எட்டி பார்த்தாள், இந்த வயதிலும் கிராம தலைவருக்கு வாட்ட சாட்டமான உடல்வாகு, பாதி நரைத்த தாடி மீசை, ஒரு ஜான் அளவு நீண்ட அடர்த்தியான கேசம், சட்டையின்றி வேட்டியை மடித்து கட்டி கொண்டு தோளில் துண்டுடன் மலைவாசிகளுக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டு நேராக நிமிர்ந்து நின்றார். மூவரையும் ஒரு பெரிய குடிசைக்குள் அழைத்து சென்று இளநீர், பதநீர் வழங்கி, அவர்கள் ஓய்வெடுக்க தேவையான அனைத்து வசதிகளும் செய்து தந்தார். தருண் சில குழந்தைகளுடன் விளையாட வாசலுக்கு ஓடிட, இயல் தாங்கள் கொண்டு வந்திருந்த லக்கேஜ் எல்லாம் எடுத்து உள் அறைக்குள் வைத்து கொண்டிருந்தாள். தலைவர் மற்ற திருவிழா வேலைகளை கவனிக்க சென்றுவிட, அவரின் மனைவி சொக்கு வந்து வருணின் கால் அடியில் அமர்ந்து கொண்டார். ஜாக்கட் இல்லாத சேலையை வாகாக உடலை சுற்றி கட்டி இருந்த விதமும், எந்த உபகரணமும் இல்லாத கொண்டையும், வித்யாசமான வெள்ளி ஆபரணங்களும், உள்ளிருந்த இயலை இரண்டு முறை எட்டி பார்க்க வைத்தது.

 

     “உன்ன எத்தன தடவ சொல்லி இருக்கேன், மேல உக்காரு பாட்டி” என்று உரிமையாய் பாட்டியின் கை பிடித்து இழுத்தான் வருண்.

 

    “இருக்கட்ம்ய்யா…” என்ற பாட்டி கீழிருக்கவே விரும்பிட, “கேக்க மாட்டில பாட்டி…” என்று சினுங்கி கொண்டே அவனும் கயிற்று கட்டிலில் இருந்து இறங்கி அமர்ந்தான்.

 

    “என்னய்ய்யா…. நீ… மேல போய் உக்காரு ராசா” என்று வருணின் தாவாங்கட்டையை பாசமாய் வருடினார்‌.

 

    இரண்டு மூன்று விதவிதமான இலை வகைகளுடன் உள்ளே ஓடி வரும் தருணை, “வாய்யா… வாய்யா… ஏ சின்ன ராசா…” என்று தன் மடிக்கு அமர அழைத்தார் சொக்கு பாட்டி.

 

     “நா இந்த லீவ்ஸ்ஸ சுட்கிகிட்ட குடுத்துட்டு வர்றேன்…” என்று பதில் சொல்லியபடியே உள் அறைக்குள் புகுந்து கொண்டான்.

 

    “சுட்கி இந்த லீவ்ஸ் எல்லாம் பத்திரமா வச்சுக்கோ, வெனஸ்டே நான் என்னோட ஸ்கூல் பிரன்ட்ஸ்க்கு இத காட்டனும்.”

 

    இயல், “இப்பவே பறிச்சு வச்சீன்னா காஞ்சு போயிடும் கண்ணா, நாம கிளம்பும்போது கொஞ்சமா பறிக்கலாம். இவ்ளோ நிறையா பறிச்சா செடிக்கு வலிக்கும்.”

 

    “வலிக்காது சுட்கி, இங்க நிறைய ட்ரீஸ் பெருசு பெருசா இருக்கு, நான் குட்டியா தான் பிச்சிட்டு வந்திருக்கேன் பாரு. நான் இன்னும் நிறைய பிக்க போறேன்…” என்று வெளியே ஓடியவன், திரும்பி வந்து சொக்கு பாட்டிக்கு ஒரு அவசர முத்தத்தை மட்டும் தந்துவிட்டு நில்லாமல் பறந்துவிட்டான். அவன் பின்னாலேயே பிடிக்க வந்த இயலை வருண் தடுத்துவிட, அறையின் ஒரு ஓரத்தில் இருந்த ஜன்னல் அருகில் போய் நின்று கொண்டாள்.

 

     “யாரு ராசா இந்த புள்ள?”

 

     கேள்வி இயல் காதிலும் விழ, வருண் பதில் சொல்லும் முன் அவளே வந்து, “நான் குழந்தைய பாத்துக்குறதுக்காக புதுசா வேலைக்கு வந்திருக்கேங்க”. அவள் பதிலால் வருணுக்கு ஏதோ ஒரு வலி உள்ளுக்குள் நுழைந்து இதயத்தை உறுத்திட, இயலின் கண்களை காண முடியாமல் வேறு பக்கமாய் தன் பார்வையை திருப்பிக் கொண்டான்.

 

    “அப்புடியாத்தா…”

 

   அவன் சங்கட படுவது தெரிந்ததும் இயல், “சார், நான் தருண் கூட வெளியில இருக்கேன்” என்று வெளியேறி செல்ல இப்போது வருண் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே, ‘இவ அந்த கேரக்டர்லயே பிக்ஸ் ஆயிட்டா போல…’ என நினைத்தான்.

 

   பாட்டி, “அந்த பொண்ணு பாக்க ரொம்ப நிறம்மா வடிவா இருக்கு, கழுத்துல புது தாலி வேற கிடந்துச்சா, அதேன் நானு உம் பொஞ்சாதின்னு நினைச்சுட்டேன் ராசா” என்றார் கள்ளம் கபடமின்றி. அவரின் வார்த்தை வருண் உடலை ஒரு முறை வைப்ரேட் மோடுக்கு மாற்றிவிட, பாட்டி அறிந்திடும் முன் அதை மறைத்து அவருக்கு சிரிப்பை மட்டும் பதிலாக தந்தான்.

 

     வருணுடன் ஆர அமர பேசி முடித்து விட்டு சொக்கு பாட்டி வெளியேறியதும், வருண் மூளைக்குள் அந்த பொஞ்சாதி என்ற வார்த்தையே ரீங்காரமிட்டு கொண்டிருந்தது. வருண் ஏதோ நினைவில் மெதுவாக ஜன்னல் வழியாக எட்டி பார்த்தான், இயல் சில மலைவாழ் பெண்களுடன் ஏதோ சுவாரஸ்யமாக பேசி கொண்டு இருந்தாள், இருந்தும் அவள் அடிக்கடி தருண் இருக்கும் இடத்தை கவனிக்க தவறவில்லை.

 

     அவர்களிடம் இயல் தூர தெரிந்த மலை முகட்டினை சுட்டி காட்டி ஏதோ சொல்லிய நேரம், திடீரென வீசிய காற்றில் துப்பட்டா அவளை விட்டு தப்பி செல்ல துடித்தது. ஒரு கையில் துப்பட்டாவையும் மற்றொரு கையால் காற்றில் தூக்கிடாதபடி சுடிதாரின் பின் பக்கத்தையும் ஒருசேர பற்றி கொள்ள, வருண் கண்கள் அவளின் உடல் வளைவுகளை அளவெடுக்க தொடங்கியது. காற்று நின்றதும், அவள் மற்ற பெண்களுடன் சேர்ந்து படையலுக்காக காய் நறுக்கும் வேலையை ஆரம்பிக்க, வருண் கண்களுக்கு அவளை தவிர வேறேதும் தெரியவில்லை. அந்த பெண்கள் கூட்டத்தில் அவள் மட்டும் அழகிய தேவதையாக தனித்து தோன்றினாள். எங்கிருந்தோ பூக்களை பறித்து கொண்டு வந்த மழலையர் கூட்டம், கையில் இருந்ததை அவரவர் அன்னைக்கு கொடுத்து செல்ல, தருண் தன்பங்கை இயல் கையில் தந்துவிட்டு அவள் தோள்களை இறுக அணைத்து கொண்டான். இயல் தன் மெல்லிதழால் தருண் கன்னத்தில் நச்சென்று ஒரு இச்ச்சை தர, வருண் பார்வை தாபத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மங்க தொடங்கியது. வருணுக்கு வெளி உலகம் மறந்தது, தான் கொண்டிருந்த கட்டுப்பாடு மறந்தது, பழி உணர்ச்சி மறந்தது, இந்த நிமிடம் இந்த உலகம் இந்த புது வாழ்க்கை இது மட்டுமே அவன் நினைவு முழுவதையும் ஆக்கிரமிக்க தொடங்கியது. இதுநாள் வரை இதயத்தை ரணமாக அழுத்தி கொண்டு இருந்த வலிகள் குறைய குறைய மனம் லேசாகி பறக்க தொடங்கியது.

 

     “தம்பி… தம்பி… இங்க பாருங்க தம்பி…” என்று தொட்டு எழுப்பிட, வருண் உறக்கத்தில் இருந்து விழிப்பவனை போல சடாரென திரும்பினான்.

 

   ஊர்த்தலைவர், “சீக்கிரமா மேலுகால அலம்பிட்டு வாங்க தம்பி, படையலெல்லாம் ரெடியாகிடுச்சு, பூஜைய ஆரம்பிச்சிடலாம்.”

 

    “இதோ ரெண்டு நிமிஷத்துல ரெடியாகி வந்திடுறேன்” என்று அவசரமாக அருவி இருக்கும் பக்கம் ஆடைகளோடு சென்றான். நீரில் மூழ்கி எழுகையில் அவளின் நினைவுகளை துடைத்து நீக்கி விட்டு ஆத்மார்த்தமாக இறைவனை நெஞ்சில் நிறைத்து கொண்டான். பட்டினால் ஆன வெள்ளை நிற வேஷ்டி துண்டுடன் ஆன்மீக அவதாரம் பூசி வந்தவன், நான்கு தூண்களையும் ஒற்றை கூரையையும் வீடாக கொண்டிருந்த துர்காதேவி முன் அமர்ந்தான். ஊர் மக்கள் அனைவரும் அந்த இடத்தை சுற்றி நின்றிருக்க, இயலுக்கும் அங்கு போக வேண்டிய கட்டாயம். மற்றவர்கள் எல்லாம் மரியாதைக்காக அவளுக்கு வழிவிட்டு நகர்ந்து இடம் கொடுக்க, வேறு வழியின்றி முன் வரிசையில் வந்து நின்றாள். ஊர் தலைவர் வந்து யாகம் வளர்த்தது பூஜையை ஆரம்பிக்க, வருண் கைகூப்பி கடவுளை விட்டு கண்கள் அகற்றாது அமர்ந்திருந்தான். துர்கையின் இடது புறம், பெரிய பெரிய அண்டாக்கள் நிறைய உணவும், பெரிய டேபிள் நிறைய வேஷ்டி சேலைகளும் வந்து நிறைய தொடங்கியது.

 

    இயல், ‘ஒருத்தன் பணக்காரனா இருந்தா போதும் போல, எவ்ளோ வேணாலும் பாவம் செஞ்சிட்டு அப்புறம் தானதர்மம் பண்ணி ஈசியா நல்லவனாகிக்கலாம். குடுத்து வச்ச வாழ்க்கடா உனக்கு…’ என பொறுமினாள்.

 

    அவளின் குரல் துர்கைக்கு கேட்டதோ இல்லையோ வருணுக்கு கேட்டு விட்டது போல, இயலை அருகே அழைத்து, “போய் தருண கூட்டிட்டு வந்து இங்க உக்காரு” என்று தனக்கு வலது புறத்தில் இடம் தந்தான். அவளும் அவன் சொன்னதை செய்தாள், உடனே கூட்டத்தில் ஆங்காங்கே சில சலசலப்பு ஏற்பட்டது. தலைவர் வருணை கேள்வியாய் பார்க்க, வருண் புன்னகையை அவருக்கு பதிலாய் தந்துவிட்டு கண்களை மூடி கொண்டான். அவளோ ரவிக்காக வேண்டி கொண்டு இருந்ததால் மற்றது எதுவும் அவள் கருத்தை கவரவில்லை. ஒரு மணி நேரத்திற்கு அதிகமாய் பூஜை நடக்க, குழந்தை ஓரு அளவுக்கு மேல் கட்டுப்பட மறுத்தது, இயலுக்கு அதுவே பெரிய பாடாய் இருந்ததால் மற்றவர்கள் பேசுவதை கவனிக்க வில்லை.

 

     ஒருவழியாக பூஜை முடிந்ததும் தேவிக்கு ஆராதனை காட்டி, விபூதி குங்குமம் கொண்டு வந்தார் ஊர் தலைவர். முதலில் வருணுக்கும் இரண்டாவது தருணுக்கும் தந்தார். மூன்றாவது இயலுக்கு தருகையில் பூவுடன் குங்குமம் சேர்த்து தர, இப்போது தான் இயல் சுற்றி நடப்பதையே கவனித்தாள்.

 

      ‘அப்டி நம்ம மூஞ்சில என்ன இருக்கு, ஏன் எல்லாரும் என்னையே பாத்து கமென்ட் பண்ணி சிரிக்குதுங்க’ என்று விழித்திருக்க, சொக்கு பாட்டி வருணிடம் வந்து, “ராசா… தாயிக்கி தாலில குங்குமம் வச்சு விடுய்யா…” என்றார். அதிர்ச்சியாய் அவள் வருண் முகத்தை பார்க்க, அவனோ அசராமல் குங்குமத்தை எடுத்து தயாராக நின்றான். அவளோ உணர்வின்றி சிலையாக உறைந்திருக்க, வருணே தாலியையும் எடுத்து குங்குமத்தை வைத்து விட்டான். திடீரென அத்தனை பேர் முன்னாலும் அவன் தங்கள் இருவரையும் கணவன் மனைவியாக பிரகடன படுத்தி கொண்டதை இயலால் நம்ப முடியவில்லை, ஏன் இப்போது இப்படி செய்தான் என்ற யோசனையில் இருந்தவளிடம்,

 

    சொக்கு பாட்டி, “தாலில குங்குமம் வச்சுகிட்டா, நீ எப்பயும் தீர்க்க சுமங்கலியா இருக்கலாம் தாயி…” என்றுவிட்டு நகர, ‘அதான பாத்தேன், இந்த குரங்கு அதுக்கு ஆயிசு கெட்டியா இருக்கனும்னு குங்குமம் வச்சு விட்ருக்குது போல. என்ன பத்தியோ சுத்தி இருக்கிறவங்கள பத்தியோ இது என்னைக்கி யோசிச்சிருக்கு? அதுக்கு என்ன தோணுதோ அத மட்டும் தான் செய்யும்‌.’என்று மனதிற்குள் வழக்கம் போல அவனை திட்டி தீர்த்தாள். வருணோ இது எதையும் கவனிக்காமல் ஒரு புதிய உலகத்தில் நுழைந்ததை போல சந்தோஷமாக துர்கையை சுற்றி கொண்டு இருந்தான்.

 

    மூன்று சுற்று சுற்றியதும், புதிய ஆடைகளை வைத்திருக்கும் டேபிளுக்கு சென்று விட்டான். இயல் தருணை தூக்கி கொண்டு மற்றவர்களுடன் சேர்ந்து சுற்றி வர, வருண் வேஷ்டி சேலைகளை தானமாக கொடுக்க ஆரம்பித்தான். அந்த சேலைகள் எல்லாம் ஒரே டிசனில் வெவ்வேறு வண்ணத்தில் இருக்க, அதில் ஒரு நிறம் இயலின் கவனத்தை சற்று அதிகமாகவே கவர்ந்தது, இருந்தும் தன்மானத்தை இழந்து அவனிடம் போய் கேட்டு வாங்க மனம் வராமல் தருணுடன் விளையாட சென்றுவிட்டாள். வருண் வரிசையாக வந்தவர்களுக்கு எல்லாம் வழங்கி முடித்ததும் மீதமிருந்த மூன்று செட் ஆடைகள்  எடுத்து துர்கையின் காலடியில் வைத்துவிட்டு சென்றான். எப்போதும் கேட்ட எண்ணிக்கையை விட இரண்டு மூன்று அதிகமாக தருவதுதான் அவர்கள் குடும்ப வழக்கம், ஆதலாலே இப்போதும் சிலது மீதி இருக்கிறது.

 

    புதிய ஆடைகளை அவரவர் மடியில் கட்டி கொள்ள, படையல் உணவை விருந்தாக பரிமாற தொடங்கினார்கள். வருணுக்கு அங்கும் முதல் மரியாதை வழங்கப்பட, இயலையும் தருணையும் சொக்கு பாட்டி தனது குடிசைக்கு அழைத்து சென்றுவிட்டார். வருண் உண்டு முடித்ததுமே அவர்களை தேடி வர, தருண் அசதியில் உறங்கி போயிருந்தான்.

 

    வருண், “தருண் சாப்ட்டானா?”

 

  ‌‌   “ம், புது சாப்பாடுனால சரியா சாப்பிடல கொஞ்சம் தான் சாப்ட்டான், சொக்கு பாட்டி பால் காய்ச்சி தந்தாங்க, அத குடிச்சிட்டு இப்பதான் தூங்குறான்.”

 

    தருணின் தலையை வருடியபடி வருண், “நீ சாப்ட்டியா இயல்?”

 

     இயலுக்கு தன் காதையே நம்ப முடியவில்லை, முதலாளிக்கும் வேலைக்காரிக்குமான இந்த ஒரு மாத உறவில் இன்றுதான் முதல் முறை இந்த கேள்வியை கேட்கிறான். பதில் சொல்லாமல் காதை குடைந்து அதை சரி செய்வதை போல பாசாங்கு செய்தவளை கண்டு வருண், “நைட் தூங்க ரொம்ப லேட் ஆகும் இயல். அடுத்தடுத்த வேலை எல்லாம் நீதான் செய்ய வேண்டி இருக்கும். அதுனால இப்பவே நீயும் தருண் கூட கொஞ்சம் தூங்கிக்க…” என்று வெளியேற, இயல் இம்முறை தன் கைகளை கிள்ளி கனவா நிஜமா என்று பரிசோதித்து பார்த்தாள்.

 

     இயல் சில மணி நேரம் தூங்கி எழுந்து விட்டு தருணுடன் வெளியே வர, அங்கே வாசலெல்லாம் தோரணங்களும், மாக்கோலங்களும் அலங்கரித்து கொண்டிருந்தது. அங்கிருந்த அத்தனை பேரும் வருண் உட்பட மதியம் வாங்கி இருந்த புத்தாடைகளை அணிந்திருக்க, குழந்தைகள் விதவிதமான கிழங்கு வகைகளுடன் உலாவி கொண்டிருந்தார்கள். தருண் அவர்களுடன் இணைந்து கொள்ள இயல் சுற்றிலும் பார்வையை சுழற்றினாள். வெட்டருவா வேல் கம்புக்கு கூட புது துணி சுற்றி இருக்க, தான் மட்டும் அதே பழைய சுடிதாருடன் கிடக்க வேண்டியதை நினைத்து மனது ஏங்கி விட்டாள். வேறு யாராவது இரக்க பட்டு ஏதாவது கேள்வி கேட்டு விடுவார்களோ என வருந்தி, மற்ற பெரியவர்கள் பார்வைக்கு படாமல் தூரமாக குழந்தைகள் விளையாடும் இடத்திற்கு போய் தருணுடன் அமர்ந்து கொண்டாள்.

 

     குழந்தைகளுக்கு பானை நிறைய பானாகாரம் கொண்டு வந்த சொக்கு பாட்டி இயலை பார்த்ததுமே அவளின் முக வாட்டத்தை புரிந்து கொண்டார். குழந்தைகளுக்கு பானாகாரத்தை கொடுத்து முடித்ததும் நேராக போய் வருணிடம், “ராசா, தாயி மூஞ்சியே சரி இல்லய்யா… நீ அந்த புள்ளய என்னமு சொன்னியாய்யா?”

 

     செய்து கொண்டு இருந்த வேலையை அப்படியே போட்டு விட்டு, “இப்ப எங்க இருக்கா பாட்டி?”

 

    “அந்த புங்க மரத்தடியில புள்ளைகளோட தேமேன்னு உக்காந்திருக்காய்யா, என்ன வேணு ஏது வேணுன்னு கேக்கியா ராசா…”

 

     “ம்ம்ம்….” என்று ஓடி வந்து பார்த்தவனுக்கு சொக்கு பாட்டி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்று புரிந்தது. இயல் இதுவரை இல்லாத அசாதாரணமான தோரணையில் அங்கே அமர்ந்து இருந்தாள்.

 

     “இயல்… இயல்… என்ன ஆச்சு? உடம்புக்கு எதும் பண்ணுதா?”

 

    வருணை இந்த நேரத்தில் எதிர் பார்க்காததால், விருட்டென எழுந்து நின்ற இயலின் கசங்கிய சுடிதார் வருண் கவனத்தில் பதிந்தது. ஏதாவது நல்ல சுடிதாரை எடுத்து கொண்டு வா, என்று ஏற்கனவே அவன் முதல் நாள் சொல்லி இருந்தான். இருந்தும் அவள் வழக்கமானதையே கொண்டு வந்திருப்பதை இப்போதுதான் அவன் மூளை அவனுக்கு உணர்த்தியது.

 

    “இயல் நீ இன்னிக்கி சேரி கட்டிக்கிறியா?”

 

    ‘எப்டி கண்டு புடிச்சான்? இந்த தடவ நான் ஒரு வார்த்தையும் பேசவே இல்லையே. போயும் போயும் இவனிட்ட போய் என்னோட முதல் சேரிய வாங்கனுமா? அதுக்கு சும்மாவே இருந்திடலாம்’ என்று நினைத்தவள், “எங்கிட்ட ப்ளவுஸ் இல்ல சார், பரவாயில்ல வேணாம். இந்த சுடிதாரே எனக்கு கம்பர்ட்டபிளா தான் இருக்கு.”

 

    “இங்க பாரு இயல், இந்த சேரி எல்லாம் சாமியோட பிரசாதம், வேண்டாம்னு சொல்ல கூடாது” என்று அவளின் கை பிடித்து இழுத்து சென்று, துர்க்கையின் காலடியில் இருந்த மூன்றில் இரண்டை எடுத்து நீட்டினான்.

 

     “இல்ல சார் வேண்டாம். எங்கிட்ட ப்ளவுஸ் வேற இல்ல” என்று திரும்பி செல்ல முயல,

 

     “இயல்….”

 

     கோபத்தில் அவனின் பார்வை கூர்மையாக, இயலுக்கு பயம் வந்து ஒட்டி கொண்டது. அசையாமல் நின்றவளிடம் அவன் சிகப்பு வண்ண புடவையை நீட்ட அவளோ, “எனக்கு அந்த பர்ப்பிள் கலர் வேணும், தருவீங்களா” என்றாள்‌.

 

    புன்னகையோடு அதை அவளுக்கு தந்தவன், “இப்போ இத கட்டிக்கோ, ஊருக்கு திரும்பி போனதும் நான் உன்ன ஷாப்பிங் கூட்டிட்டு போறேன்” என்றிட மீண்டும் அதிசயமாக இயல் அவன் முகத்தை பார்த்தாள்.

 

    அவள் பின்னாலிருந்து சொக்கு பாட்டி, “தாயி…” என்று குரல் கொடுத்தார். இயல், ‘இதெல்லாமே பாட்டிக்காக தான் செய்து போல இந்த குரங்கு… ஊருக்கு போனதும் இது என்னை ஷாப்பிங் கூட்டிட்டு போகுதாம்… செம காமெடி…’ என்று சிரித்துவிட, சொக்கு பாட்டிக்கு அவர்கள் சமாதானம் ஆனதாக நினைத்து ஏகபோக சந்தோஷம்.

 

     சொக்கு பாட்டி அந்த சேலைக்கு மேச்சாக வேறு பெண்களிடம் ப்ளவுஸ் வாங்கி தந்திட தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடிசைக்கு சென்று ஆடைகளை மாற்ற தொடங்கினாள். அவள் சேலையை கட்டி முடிக்கும் வரை வாசலில் காத்திருந்த வருண், கதவை திறந்ததும் இயலை விழுங்கும் பார்வை பார்த்தான்‌. நேர் வகிடு, தளர்வான பின்னல், கூந்தலை நிறைத்த மல்லிகை, அடுக்கி வைத்த சேலை மடிப்புகள், முன்னும் பின்னும் ஏற்ற இறக்கங்களை இன்னும் தூக்கி காட்டிடும் வகையில் இயல் அப்ஸரஸ்ஸாக இருக்க வருண் மனம் சேலையை கண்டு பிடித்தவனுக்கு ஒரு சலாம் போட்டது.

 

     ‘ஆத்தாடி, என்ன இப்டி பாக்குறான். நாங்கூட ஏதோ பாசமா சேரி கட்ட சொல்றான்னு நினச்சு ஒரு நிமிஷம் ஏமாந்துட்டேனே… இந்த குரங்கு வேற எதுக்கோ அடி போட்டு என்ன சேரி கட்ட வச்சிருக்குது… இருக்கட்டும்.. இருக்கட்டும்.. இன்னிக்கி ராத்திரி கைய கால மேல வச்சா அப்புறம் தெரியும் இயல் யாருன்னு…” என்று அத்தனைக்கும் தவறான பாதையிலேயே அவள் மனம் சிந்தித்தது. அதுசரி, அவள் சரியாக யோசிக்கும் அளவுக்கு வருணும் இதுவரை எதுவும் சரியாக செய்ய வில்லையே. ஆனால் வருண் மனதோ ஏதோ காணாததை கண்டதை போல அவள் பின்னால் துள்ளி திரிந்து கொண்டிருந்தது.

 

     அதன்பின் இயல் புது சேலையின் தாக்கத்தால் வருணை மறந்து விட்டு சந்தோஷமாக உலவ தொடங்கினாள். துர்க்கை அலங்காரம், விளக்கு பூஜை, இரவு விருந்து என்று அடுத்து வந்த அத்தனை வேலைகளையும் இயல் முன் நின்று செய்ய வருண் அவளை வேடிக்கை பார்ப்பதை வேலையாக செய்து கொண்டு இருந்தான். இரவு உணவு முடிந்ததும் இயல் படுக்கையை தயார் செய்ய குடிசைக்கு சென்று விட்டாள். சில நிமிடங்கள் கழித்து வெளியே ஏதோ சலசலப்பு ஏற்பட்டது, இயல் வெளியே வந்து எட்டி பார்க்க பெரிய ராஜ நாகம் ஒன்று தருண் முன்னால் படமெடுத்து நின்றிருந்தது.

Leave a Reply

%d bloggers like this: