Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 13’

ரு சுகமானதொரு கனவு. அதைக் கனவு என்பதை விட, கனவாய் உறைந்துவிட்ட நினைவுகளின் பிம்பம் என்று சொல்லலாம். அந்த நினைவுகளுக்குள் மூழ்கியிருக்கும் காதம்பரியுடன் நாமும் இணைந்து கொள்வோம்.

 

சற்று பூசினாற்போல் தேகம், பாலில் குங்குமப்பூவை லேசாகக் கலந்தால் இருக்குமே அதைப் போன்ற சிவந்த நிறம். எப்பொழுதும் புன்னகையைப் பூசியிருக்கும் ரோஜாப்பூ அதரங்கள், அதற்குப் போட்டியாக சிரிக்கும் கண்கள். அவளிருக்கும் இடத்தில் கலகலப்புக்குப் பஞ்சமே இல்லை. அழகு பணம் அன்பு அனைத்தும் நிறைந்த அந்த பத்தொன்பது வயது பெண்ணைப் பார்த்தாலே மயங்கிவிடுவீர்கள். குண்டு கன்னத்தில் புதிதாக தோன்றிய சிறிய பருவின் மேல் களிம்பைத் தடவிக் கொண்டிருந்தாள். தாய் வைஷ்ணவியும், தந்தை ரங்கராஜனும் கூட தயாராகிக் கொண்டிருந்தனர்.

 

“அம்மா நீ சொன்ன எல்லா ஹெர்பல் க்ரீமும் தடவிட்டேன். இன்னும் போகவே மாட்டிங்குது பாரு… “

 

“என்னென்ன தடவின…”

 

“மஞ்சள், சந்தானம், ஜாதிக்காய், ஏதோ பச்சிலை ஹாங்… அப்பறம் வேப்பிலை”

 

“நேத்துதானம்மா சொன்னேன். அதுக்குள்ளே எப்படி இத்தனையும் தடவின?”

 

“ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மணிநேரம் தடவினேன்”

 

“இப்படி எல்லாத்தையும் ஒரே சமயத்தில் ட்ரை பண்ணால் ஒண்ணு கூட உருப்படியா நடக்காது”

 

“அப்பறம் என்னதான்மா செய்ய சொல்ற…”

 

“காதம்பரி… ஒன் அட் எ டைம். ஒரு சமயத்தில் ஒரு முயற்சியில் மட்டும் முழுசா இறங்கு. அதுதான் நல்ல பிள்ளைக்கு அடையாளம்”

 

“அறுக்காதம்மா…”

 

“டிபன் சாப்டுட்டு கிளம்பு”

 

“மாட்டேன் நானும் உன்கூட வரேன்”

 

“காதம்பரி… அடம் பிடிக்காம ஹாஸ்டலுக்குக் கிளம்பு”

 

“அண்ணன் மட்டும் வீட்டில் இருக்கான்ல.. என்னை ஏன் ஹாஸ்டலில் சேர்த்திங்க”

 

“அவன் உன்னை மாதிரி அறிவாளியா இருந்திருந்தா பரவால்ல. டிகிரியே அஞ்சு வருஷம் படிச்சான். அவனை மாதிரி ஊர் சுத்தாம உனக்குப் படிப்பில் மட்டும் கவனம் வேணும்னுதான் ஹாஸ்டலில் சேர்த்தோம்”

 

“போங்கம்மா…. இப்படி எதையாவது சொல்லி என் வாயை அடைச்சுடுங்க.”

 

“மூணு வருஷம்தானம்மா… ரெண்டரை வருஷம் ஓடிடுச்சு. ஆறு மாசத்தில் வீட்டில் எங்க கூடவே இருக்கப் போற… அடம்பிடிக்காம கிளம்பும்மா”

 

“அப்பாவும் நீயும் ஹாஸ்டல் போற வழியில் ஷாப்பிங் கூட்டிட்டு போகணும்”

“சரி…”

 

“பலூடா ஐஸ்க்ரீம் வாங்கித் தரணும்”

 

“டன்”

 

அவளது அண்ணன் லக்ஷ்மனுக்கு குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பதில் ஆர்வம் இல்லை. மறுத்துவிட்டு நண்பர்களைப் பார்க்கவென  வெளியே சென்றுவிட, அவனை ஏக்கத்துடன் பார்த்தனர் பெற்றோர்.

 

“வளர்ந்துட்டான் இல்லையா… .இருந்தாலும் நம்ம கூட வெளிய வந்தால் நல்லாத்தான் இருக்கும்”

 

“நம்ம ரெண்டு பேரும் முக்கியமான வேலையா ஊருக்குக் கிளம்பணும்னு அவனுக்குத் தெரியும். இவளை ஹாஸ்டலில் கொண்டு போய் விடலாம்ல. எப்படி பட்டும் படாம கிளம்புறான் பாரு…. இவனுக்குக் குடும்பத்து மேலேயே அக்கறை இல்லை. எப்படி நம்ம கம்பனியை நடத்துவான். ஏற்கனவே சில இடங்களில் பணம் வர வேண்டியிருக்கு. இவன் எனக்கு உதவி செஞ்சா நல்லாருக்கும்”

 

“அவனைப் பத்தி தெரியாதாப்பா… நான்தான் உங்க கூட வரேன்ல வாங்க கிளம்பலாம்”

 

அன்னை தந்தையுடன் மும்பையில் ஷாப்பிங் சென்றாள். அவர்களின் மன வருத்தத்தை மாற்ற என்ன செய்யலாம்.

 

“அப்பா எப்படிப்பா அம்மாவை லவ் பண்ணிங்க. உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பாத்தப்ப மனசில் மின்னல் மின்னுச்சா…. “

 

“அதெல்லாம் சினிமாலதான் நடக்கும். என் கம்பனி ஆட் நடிக்க நாலஞ்சு பெண்கள் வந்திருந்தாங்க அதில் உங்கம்மாவும் ஒருத்தி… இத்தனைக்கும் அதில் ஒரே ஒரு டயலாக் பேசுற மாதிரி பிரேம்ல ஒருத்தியாத்தான் உங்கம்மா வருவா. நாங்க வேற அந்த சமயத்தில் வளரும் நிறுவனம். அதனால் நடிக்க வந்தவங்களுக்குப் பெருசா வசதி எதுவும் செஞ்சு தர முடியல. இருந்தாலும் நிறைவா செஞ்சு தந்திருந்தோம். மத்தவங்க எல்லாம் தாட்பூட்ன்னு குதிச்சுட்டு கோச்சுட்டு போய்ட்டாங்க. உங்கம்மா மட்டும் ஒரு குறையும் சொல்லல. கமிட் பண்ணிடதால விட்டுட்டு போகவும் இல்லை.  இவளை எங்க எல்லாருக்கும் பிடிச்சதால அந்த விளம்பரத்தில் இவளுக்கு மெயின் ரோல் தர்றோம் ஷூட்டிங் நின்னா நிறைய நஷ்டமாயிடும். தயவுசெய்து முடிச்சு தாங்கன்னு கேட்டுகிட்டோம்.  ஒத்துகிட்டு அமைதியா எல்லா அசவுகரியங்களையும் பொறுத்துட்டு நடிச்சா… அவ பொறுமையின் காரணம் என்னன்னு  அவ கிளம்பினதும்தான் தெரிஞ்சது”

 

“என்னப்பா…”

 

“அவ விலை மதிக்க முடியாத ஒண்ணைத் திருடிட்டு போய்ட்டா… நானாவிடுவேன்… அவ கிளம்பினதுக்கு அடுத்த நாளே கண்டுபிடிச்சுட்டேன்”

 

“உங்க ஹார்ட்டா…”

 

வெட்கத்துடன் சிரித்தார் அன்னை. “அடுத்தநாள் காலைல ஆறு மணிக்கு  பேப்பர் எடுக்க வீட்டுக் கதவைத் திறக்குறேன் இவர் வீட்டு வாசலில் நிக்கிறார்”

 

“நான் நாலு மணியிலிருந்து அம்மணியை பாக்க தவமிருந்திடிருக்கேன் இவ என்னடான்னா ஆறு மணிக்கு சாவகாசமா கதவைத் திறக்குறா”

 

“ஒரு நைட்டி போட்டுட்டு, பொட்டு கூட வைக்காம, தலை கலைஞ்சு வந்து நின்னா…. வாசலில் இவர். உன்னை விரும்புறேன்னு நினைக்கிறேன் வைஷு. உன்னைப் பாக்காம ஒரு நாள் கூட இருக்க முடியல இனியும் இருக்க முடியும்னு தோணல, என் வீட்டுக்கு வந்துடுறியான்னு கேட்கிறார்”

 

“அப்பறம்…. “

 

“இந்த வார்த்தைக்குக் காத்துட்டு இருந்த மாதிரி தலையாட்டிட்டா. அப்பறம் அடுத்த வாரமே கல்யாணம் பண்ணி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன்”

 

“நீங்களும் அப்பாவை விரும்புனிங்களாம்மா…”

 

“உள்மனசு உங்கப்பாவை விரும்பிருக்கணும்னு நினைக்கிறேன். இந்தப் பெண்கள் மனசு இருக்கே அது நமக்கே சிலசமயம் புரியாத புதிர். உங்கப்பா விளம்பரப் படத்தில் நடிக்கும்போது அறிமுகம். எனக்கோ  அந்தத் துறையில் இருக்க விருப்பமில்லை. இவர் நிறுவன விளம்பரத்தோட மூட்டையைக் கட்டிடலாம்னு நினைச்சேன். அங்க உங்கப்பாவைப் பார்த்ததும் அவர் உழைப்பு மேலயும், கண்ணியமான நடத்தை மேலயும் ஒரு மரியாதை இருந்தது என்னவோ நிஜம். ஆனால் அவர் திருமணமானவரா இல்லையான்னு கூடத் தெரியாது. எந்த அடிப்படையில் காதலை வளர்த்துக்க முடியும். காலையிலிருந்து எனக்காக அவர் காத்திருந்த வினாடி அவர் எந்தப் பெண்ணையும் விரும்பிருக்க வாய்ப்பில்லைன்னு என் மனசுக்கு உணர்த்திருச்சு. அவர் மேல இருந்த அன்பும் நம்பிக்கையும்தான் அவர் மணக்கக் கேட்டதும் சம்மதிக்க வச்சதுன்னு தோணுது”

 

“எப்படிம்மா அவர் சொன்ன உடனே ஒத்துகிட்டிங்க. அப்பா கிரிமினலா கூட இருந்திருக்கலாம்”

 

“பெண்களுக்குன்னு சில உள்ளுணர்வுகள் இருக்கு. அது இவனை நம்பு, இவனை நம்பிடாதேன்னு முன்னாடியே எச்சரிக்கும். அதை கவனமா ஃபாலோ பண்ணாலே நமக்கு ஒரு பிரச்சனையும் வராது”

 

“உள்ளுணர்வா… எனக்கு ஏன்மா இதுவரைக்கும் ஒருத்தனைப் பார்த்தும் ஒரு மண்ணும் வரல”

 

“உதைப்பேன்… ஏண்டி அம்மா அப்பாட்ட பேசுற பேச்சா இது”

 

“நீ மட்டும் உன் காதல் கதையை சொன்னேல்ல… “

 

“அதெல்லாம் வரதுக்குள்ள நாங்க அரேஞ்ட் மேரேஜ் பண்ணி வச்சுடுவோம்”

 

“இது போங்காட்டம்… வேணும்னா அண்ணனுக்கு பண்ணுங்க”

 

“அந்த சான்ஸ் எல்லாம் உங்கண்ணன் எங்களுக்குத் தரலயே…”

 

“நிஜம்மாவா… லவ் பண்றானா என்ன… யாரும்மா அது”

 

“வடநாட்டு பெண் யாரையோ லவ் பண்றான் போலிருக்கு. விசாரிச்சவரைக்கும் பொண்ணு குடும்பத்தைப்  பத்தி நல்லபடியா கேள்விப்படல. பணம் ஒண்ணுதான் குறிக்கோளா இருப்பாங்க போலிருக்கு”

 

“குடும்பம் எப்படி இருந்தா என்ன வைஷு. பொண்ணு அவனுக்குப் பிடிக்கணும். வாழப் போறது அவளோடதானே”

 

“விடுங்க அவனைப் பத்தின கனவுகள் எல்லாம் கலைஞ்சு போச்சு… இப்ப காதம்பரி விஷயத்தில் எனக்கு ஒரு ஆசைங்க”

 

“என்ன ஆசை”

 

“நம்ம காதம்பரிக்காவது சவுத் சைட் மாப்பிள்ளை பாக்கணும்”

 

“சரிம்மா நானும் என் காலேஜ்ல ஆறடி உயரத்தில், மாநிறத்தில், மீசை வச்சிருக்கும் சவுத் இந்தியன் பசங்க விவரத்தை எல்லாம் கேதர் பண்றேன்”

 

“உதை விழும் கழுதை”

 

அன்னை அடிப்பதைப் போலக் கையை உயர்த்த, அப்பாவின் பின்னே வந்து நின்றுக் கொண்டாள்.

 

“நானும் என் ஆபிஸ்ல வேலை பாக்குற சந்தான கிருஷ்ணன், நவநீத கிருஷ்ணன், ராம கிருஷ்ணன் எல்லாரோட ஜாதகத்தையும் வாங்குறேன். எந்த கிருஷ்ணன் என் மாப்பிள்ளையா வரப்போறானோ தெரியலையே”

 

பொருட்களை வாங்கிவிட்டு அவர்கள் வழக்கமாய் டீ பருகும் அந்த சிறிய கடைக்கு சென்றனர்.

 

“ஏன்ப்பா லவ் பண்ணப்ப இங்க டீ குடிச்சிங்க சரி. எப்ப கடைக்கு வந்தாலும் இந்த கடைக்கே டீ குடிக்க வரிங்க?”

 

தனது டீயில் பாதியை சாசரில் ஊற்றி தனது மனைவிக்கு தந்தபடி சொன்னார் காதம்பரியின் தந்தை.

 

“கல்யாணம் பண்ணி கொஞ்ச நாள் வருமானம் கூட ரொம்பவே  கம்மிதான். எங்களால ரெஸ்டாரன்ட் அவுட்டிங்னு செலவு பண்ண முடியாது. அதனால் இந்த கடை வீதியில்தான் ஷாப்பிங். காய்கறி, பழங்கள் எல்லாம் மொத்த விலையில் வாங்கிட்டு வரும் வழியில்  இந்தக் கடையில் பாவ் பாஜியும், மசாலா சாயும் சாப்பிடுவோம். அந்த  நானும் உங்க அம்மாவும் ராஜா ராணி மாதிரி பீல் பண்ணுவோம். அதெல்லாம் அன்பு செய்யும் மாயாஜாலங்கள்”

 

“குழந்தைகிட்ட போயி… அவளுக்கு என்னங்க தெரியும். காதம்பரி…. தன்னோட ராஜாகூட இருக்கும்போது எந்த ஒரு பெண்ணும் தன்னால ராணியா உணருவாள்”

 

“என் காதம்பரியைக் கல்யாணம் பண்ணிக்க நிஜ ராஜாவே வரப் போறான் பாரு”

 

அந்த இளம் மனதின் ஆழத்தில் தன் பெற்றோர் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருக்கும் காதல் கல்வெட்டாய் பதிந்தது.

நானும் ஒரு நாள் என் ராஜா கூட நகர்வலம் போவேன். அவன் என்னைக் கண்ணுக்குக் கண்ணா பார்த்துப்பான். என் அம்மா அப்பா மாதிரி நாங்களும் காதலோட வாழ்வோம்.

 

அவளை விடுதியில் விட்டுவிட்டு அவளது நெற்றியில் முத்தம் தந்தனர் இருவரும்.

 

“உன்னை விட்டுட்டுப் போக மனசே இல்லை. ஆனால் வேற வழியில்லை. போய்த்தான் ஆகணும். இல்லைன்னா ‘கேட் ஆட் ஏஜென்ஸி’ படுத்துடும்”

 

“என்னம்மா ஆச்சு”

 

“நமக்கு ஒரு கிளைன்ட் பெரிய அமௌன்ட் பணம் தர வேண்டியிருக்கும்மா. அந்தப் பணம் இல்லாம பிஸினெஸ் கொஞ்சம் இறங்குமுகமா போயிட்டிருக்கு. அதை வசூல் செய்யத்தான் அப்பா கிளம்பினார். அவரைத் தனியா அனுப்ப மனசில்லாம நானும் கூடப் போறேன்”

 

“பெரிய விளம்பர நிறுவனம் ஒண்ணு நம்ம கம்பனியை விலைக்குக் கேட்டதா சொன்னிங்களேப்பா.. தந்துடலாமே… ”

 

தலையை பிடிவாதமாய் அசைத்து மறுத்தார் “என் கம்பனி எனக்கு சாப்பாடு போடும் தெய்வம். வீடு வசதி மற்ற தொழில்கள் எல்லாம் இந்த நிறுவனத்தை அடிப்படையா வச்சுத்தானே தொடங்குச்சு. ஏன் உங்கம்மாவே கேட் ஆட் ஏஜென்சி விளம்பரத்தின் மூலமாத்தானே அறிமுகமானா… நீங்களும் உங்க அம்மாவும் எப்படி என் வாழ்க்கையில் ஒரு பகுதியோ அதே மாதிரிதான் அதுவும். என்ன இப்ப சில தவறுகளால் கொஞ்சம் சோதனை காலம் அவ்வளவுதானே. மனிதன் தவறே செய்யாம இருக்க முடியாது. ஆனால் செய்த தவறைக் கண்டுபிடிச்சு சரி செய்ய முடியும். நாங்க கண்டுபிடிச்சுட்டோம். சீராக்க முயற்சிகள் எடுத்துட்டிருக்கோம். சீக்கிரம் இதிலிருந்து மீண்டுடுவோம் என்ற நம்பிக்கையிருக்கு. இனி கிளையன்ட் தேர்வில் கவனமா இருக்க சொல்லி கல்பனாகிட்டயும், ஜான் கிட்டயும் சொல்லிருக்கேன். ரெண்டும் சூட்டிகையான பிள்ளைகள். இனி ரொம்ப கவனமா இருப்பாங்க”

 

கம்பனி பற்றியும் அதில் வேலை செய்பவர்களில் யார் நம்பிக்கையானவர்கள் என்றும் மகளுக்குக் குறிப்பு தர எண்ணினார் போலும். விடைபெற்றுச் சென்ற தம்பதியினரை ரத்த சேறாக மூட்டையில் கட்டித்தான் கொண்டுவந்தனர். படு பயங்கரமான விபத்து. ஸ்பாட்டிலேயே  இருவரும் இறந்துவிட்டனர். அழக் கூடத் திராணியின்றி  அதிர்ச்சியில் ஊமையானாள் கேட்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: