Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 14

காலை ஐந்து மணிக்கே இயலின் வீட்டு கதவு தட்ட பட்டது. கதவை திறந்து எட்டி பார்த்தாள், வாச் மேன் தாத்தா அடுத்தடுத்த வீட்டு கதவுகளை தட்டிவிட்டு சென்று கொண்டிருந்தார். சந்தேகமாய் பார்த்து கொண்டே நின்றவளிடம் பக்கத்து வீட்டு வாசலில் கோலமிட்டு கொண்டிருந்த சாந்தி புன்னகையுடன், “டெய்லி அஞ்சு மணிக்கே நாங்க எல்லாரும் எந்திச்சிடுவோம், எந்திக்கலன்னா இவரு கதவ தட்டி எழுப்பிட்டு போவாரு. சீக்கிரமா குளிச்சுட்டு ரெடியாகி வாம்மா” என்றாள் . ராட்சஷர்கள் நிறைந்திருக்கும் ராவணனின் அரண்மனையில் தனியாளாய் மாட்டி கொண்டதாய் நினைத்திருந்தவளுக்கு இந்த சாந்தி மட்டும் மனித பிறவியாய் தெரிந்தாள். சாந்தியின் வீட்டிற்குள் இருந்து சின்ன குழந்தையின் அழு குரலும் அதனை தொடர்ந்து அவள் கணவன் அதை சமாதானம் செய்யும் சத்தமும் கேட்க, அவர்கள் குடும்பமாய் தங்கி இருப்பதை புரிந்து கொண்டாள்.

 

      ஒற்றை ஹாலும் ஒரு அட்டாச்சிடு பாத்ரூம் மட்டுமே கொண்ட அந்த அனைத்து வீடுகளுக்கும் ஹீட்டர் வசதி இருந்ததால் வேகமாக குளித்து சுடிதார் அணிந்து வந்தாள். பத்து வீடுகள் கொண்ட அந்த இடத்தில் வீட்டிற்கு இருவர் என மொத்தமாய் ஐந்து குடும்பங்கள் வசிக்கின்றது. சாந்தியின் குடும்பத்தை தவிர மற்றவர்கள் எல்லாம் கொஞ்சம் வயதானவர்கள். ஆண்கள் தோட்ட வேலை, வாச் மேன் வேலை, டிரைவர் என்றும் பெண்கள் சமையலுக்கு, துவைப்பதற்கு, வீட்டை கூட்டி துடைப்பதென்றும் தங்களுக்குள் பிரித்து செய்கிறார்கள். மற்றவர்கள் தயாரானதும் தத்தமது தினசரி வேலைகளை ஆரம்பிக்க, இயலுக்கு எந்த பக்கம் செல்வதென்று தெரியவில்லை. யாருமே அவளுடன் ஒட்டாமல் உர்ரென்று இருந்ததால் சாந்தியுடனே சமையலறைக்கு சென்று நின்று கொண்டாள். அங்கே வேலைக்காரர்கள் அனைவருக்குமான காலை நேர சாப்பாடு தயாராகி கொண்டிருந்தது.

 

     சாந்தி, “சமையலுக்கு ஏற்கனவே நிறைய பேரு இருக்கோம். நீங்க வேணும்னா தோட்டத்துக்கு போய் எதாவது வேலையிருந்தா பாருங்களேன்.”

 

     தோட்டத்தை பார்த்ததுமே இயலுக்கு தலை சுற்றியது, பொட்டனிக்கல் கார்டனில் பாதியளவு இருக்கும் போல, அத்தனை பெரிதாய் இருந்தது. செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த தாத்தாவிடம் போய் நின்றாள், அவளை கண்டதுமே கோபமாய் மீசையை முறுக்கிவிட்டு “என்ன?” என்றார்.

 

    “எனக்கு எதாச்சும் வேல குடுங்க” என்றாள் அவளும் அவரை முறைத்து கொண்டே.

 

    கையிலிருந்த பைப்பை அவளிடம் கொடுத்து, “அளவா தண்ணி ஊத்தனும், பூச்சி அரிச்ச இலை பழுத்த இலையெல்லாம் பறிச்சு தனியா வைக்கனும், வாரத்துக்கு ஒரு நாள் மெசின வச்சு புல்லு வெட்டனும்” என்று அத்தனைக்கும் செய்முறை விளக்கம் கொடுத்து விட்டு செல்ல, ஒவ்வொரு செடிக்கும் நின்று நிதானமாய் தண்ணீர் விட தொடங்கினாள். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் ஆகி இருக்கும், வேலை இன்னும் முடியவில்லை, கைகள் வேறு வலிக்க ஆரம்பித்து விட்டது. ஒரே நாளில் தன் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய மாற்றம் வந்ததால், நடப்பது கனவா நினைவா என்று புரியாமல் இயந்திர கதியாய் வேலை செய்து கொண்டிருந்தாள். திடீரென அவள் முன்னால் அவனின் நிழல் விழுந்து விரிய தொடங்க, பயத்தில் கைகளில் இருந்த பைப்பை இறுக்கமாக பற்றி கொண்டாள்.

 

   இத்தனை நேரம் தைரியமாக இருந்தவள், தன் அருகாமையை உணர்ந்ததுமே உதறல் கொள்வதை கண்டு புன்னகைத்த வருண், “நான் சொல்லாமலே வேலைய ஆரம்பிச்சிட்ட நாட் பேட். உன்னோட இடத்துல வேற யாராவது இருந்தா உயிர காப்பாத்திக்க, ராத்திரியோட ராத்திரியா தப்பிச்சு ஓடிருப்பாங்க. ஆனா நீ அப்டி பண்ணலயே, ஏன்?”

 

    “ம்க்கும்… நீங்க என்னை அவ்ளோ ஈசியா தப்பிச்சு போக விட்ருவீங்களா என்ன?” அவள் வார்த்தைகளில் துணிவு இருந்தாலும் குரல் என்னவோ லேசாய் நடுங்கத்தான் செய்தது.

 

    அவளின் பதில் வருணுக்கே சற்று அதிர்ச்சிதான், காரணம் ஒரே நாளில் மிகச்சரியாக அவனை புரிந்து கொண்டாள். உண்மைதான், நேற்றிரவு அவள் தப்பி செல்ல முயலுவாள் என்று நினைத்து வீட்டு வாசலிலும் தெரு முனையிலும் காவலுக்கு ஆட்களை நிறுத்தி இருந்தான். ஆனால் அவளோ அவனை ஆச்சரிய படுத்தும் வகையில் இரவு பூட்டிய கதவை காலை வரை திறக்கவில்லை.

 

    “ஸோ அண்ணனுக்காக உன்னோட உயிரையே குடுக்க முடிவு பண்ணிட்ட… அண்ணன்னா உனக்கு அவ்ளோ இஷ்டமா, இல்ல என்னை ஏமாத்த வேற ஏதாவது ப்ளான் போட்ருக்கியா?”

 

   “எனக்கு உங்கள மாதிரி ப்ளான்லாம் போட தெரியாது. ஆனா ஒண்ணு மட்டும் கன்பார்ம்மா தெரியும், உங்களால என்னை கொல்ல முடியாது”

 

    “ஏன் முடியாது?”

 

    “வேணும்னா ட்ரை பண்ணி பாருங்களேன்”

 

    அவனோ அவள் சொன்னதை நேற்று போனில் கேட்ட உரையாடலுடன் சம்பந்தபடுத்தி தவறாக நினைத்து கொண்டு, “இந்த நிலமையிலயும் உனக்கு கொழுப்பு குறையலைல, இரு குறைக்கிறேன்” என்று பொறிந்து விட்டு சென்றான்.

 

     “ஆமா… கொலயே பண்றதுன்னு முடிவு பண்ணிட்டான், இனிமே நான் இவருகிட்ட மரியாதையா பேசினாப்ல விட்ர போறாராக்கும்” என்று அவள் தன் வேலையை தொடர்ந்தாள். வேலையை முடித்து விட்டு வந்தவளுக்கு பேரதிர்ச்சி, மாடி பகுதி முழுவதையும் இயலை துடைக்க சொல்லி வருண் ஐயா உத்தரவிட்டு சென்றாராம். ஒரு ஹால், நாலு ரூம், ரெண்டு பால்கனி அத்தனையையும் சுற்றி பார்த்து முடிக்கவே இயலுக்கு பத்து நிமிடம் ஆனது. துடைக்கிறாள் துடைக்கிறாள், நான்கு மணி நேரமாய் துடைக்கிறாள் இன்னும் பாதி கூட முடிந்த பாடில்லை. உதவிக்கென ஒருவரும் வந்து எட்டிகூட பார்க்கவில்லை, ஆனால் வேளாவேளைக்கு சாப்பாடு மட்டும் சரியாய் வந்துவிட்டது. முதுகு வலியும் கைகால் வலியும் அவளை தளர்வடைய செய்தாலும், கண் முன்னாலேயே இருக்கும் தைலத்தை தொட மனம் வரவில்லை. ‘எதுக்கு வம்பு, யாரகேட்டு என்னோட தைலத்த தொட்டன்னு வந்து கத்தும் அந்த குரங்கு, அதுக்கு இந்த வலியே தேவல’.

 

   வருண் மதியம் தருணை ஸ்கூல் முடிந்து அழைத்து வருகையில், வேர்த்து விருவிருத்திருந்த இயலுக்கு அதீத வலியால் மனம் உளல ஆரம்பித்திருந்தது. “இந்த உலகத்துல நியாயம் தர்மமெல்லாம் பணம் இருக்குறவனுக்கு மட்டும் தான் சொந்தம் போல. பழி வாங்குறேன்னு ஒரு வயசு பொண்ண தன்னோட வீட்ல கொண்டு வந்து வச்சு மாடு மாதிரி வேல வாங்குறானே, இங்க யாராவது அவன ஏன்டா இப்டி பண்றன்னு கேக்குறாங்களா பாரு! அநியாயமும் அராஜகமும் அவன் பண்ணினா சரியாம், நாங்க செஞ்சா தப்பாம். போன ஜென்மத்தில ஹிட்லரா இருந்திருப்பான் போல” என்று வாய்விட்டு புலம்பி கொண்டிருந்தவள் பின்னால் திரும்பிட அங்கே அவன் நின்றிருந்தான்.

 

     “உனக்கு வாய்க்கொழுப்பு இன்னும் குறையல போலிருக்கே, என்ன பண்ணலாம்? ஆன் ப்ரம் டுடே கால் மீ சார்” என்றவன் திமிராய் திரும்பி செல்ல, இயல் அவனை கண்கள் சிவக்க முறைத்து கொண்டு நின்றிருந்தாள்.

 

   அடுத்த நான்கு நாட்களும் வருண் அவளுக்கு அளவுக்கதிகமாய் வேலை கொடுத்தான். இருந்தும் அவள் அவனை எதிர்த்து பேசவும் இல்லை, தன் வீட்டு செலவுக்காக பணத்தை கேட்கவுமில்லை. கட்டிய புடவையோடு வந்த பெண் என்பதால் அவளின் தனிப்பட்ட செலவை கருத்தில் கொண்டு வருணே முன் வந்து, “உனக்கு செலவுக்கு பணம் வேணுமா?” என்றதற்கு, “எங்கிட்ட காசிருக்கு சார், ஆனா மத்தவங்கள மாதிரி எனக்கும் ஒன்னாந்தேதி சேலரி வேணும்” என்றாளே பார்க்கலாம், வருண் ஆடித்தான் போய்விட்டான்.

 

     அடுத்த வந்த நாட்களில் அவன் நினைத்ததிற்கு மாறாக இயல் வீட்டு வேலைகளை விரும்பி செய்ய தொடங்கினாள், தருணுடன் அன்பாக பழக ஆரம்பித்தாள். இதே வீட்டில் முதலாளியாய் இருக்க வேண்டியவள் வேலைக்காரி ஆகிவிட்டோம் என்ற வருத்தம் துளியும் இன்றி புன்னகை முகத்தோடு அவன் கண் முன்னாலேயே சுற்றி திரிந்தாள். வருணுக்கு தெரியாமல் இடையில் மூன்று முறை பிரபாகரன் அவளை பார்க்க வந்திருக்கிறார், அவரிடமும் அவள் எந்த குறையும் சொல்ல வில்லையாம். கோகிலாவிற்கு வாராவாரம் பத்தாயிரம் டிரைவர் மூலமாய் கொடுத்து அனுப்புகிறாளாம். ரவி பேரில் அர்ச்சனை செய்ய தினமும் காலையில் பக்கத்து கோயிலுக்கு செல்கிறாளாம். தினமும் மாலை தருணுக்கு பாடம் சொல்லி கொடுத்து விளையாட வைக்கிறாளாம், என்று வருணிடம் வந்து வேலைக்காரர்கள் எல்லாம் அவளை பாராட்டி பேசுகிறார்கள்.

 

     இப்போதெல்லாம் தருணும் அவள் புகழ் பாட தொடங்கிவிட்டான். தனக்கு சோட்டா பீம் என்றும், அவளுக்கு சுட்கி என்றும், சாந்தியின் மகனுக்கு ராஜூ என்றும் செல்ல பேர் வைத்து கொண்டான். தினம்தினம் விதவிதமான கதைகளை அவளிடமிருந்து கேட்டு வந்து அதை வருணுக்கு சொல்லி காட்டுகிறான். சனி ஞாயிறு விடுமுறை என்பதால் அந்த நாட்களில் தருண் வழக்கமாக  பிரபாகரன் வீட்டிற்கு அழைத்து செல்ல படுவான். கடந்த இரண்டு வாரங்களாக அங்கிருந்து இயலிசைக்கு போன் போட்டு பேசுமளவு இருவரும் இணைந்து கொண்டார்கள்.

 

     நாளடைவில் வருணுக்கே சந்தேகம் வந்துவிட்டது, ‘என்ன இவ, கொஞ்ச நாள்ல நான் அவள கொல்ல போறேன்னு தெரிஞ்சு இருந்தும் கொஞ்சம் கூட கவலையே இல்லாம சந்தோஷமா சுத்திட்டு இருக்கா! அப்போ நிச்சயமா ஏதோ பெருசா ப்ளான் போட்ருக்கா போல’ என்று யோசிக்க தொடங்கிவிட்டான். அன்று முதல் அடிக்கடி அவளறியாமல் அவளை கண்காணிக்க ஆரம்பித்தான். கண்காணித்தவனின் கண்கள், காணுகின்ற காட்சியினால் காலப்போக்கில் கட்டுபாடின்றி கரைந்து தொலைந்து போக தொடங்கியது.

 

     தினமும் காலையில் அவள் செடிகளுக்கு தண்ணீர் விடுகையில், மென் விரல் கொண்டு பூக்களை வருடிவிட்டு செல்லும் சின்ன சின்ன வெண்டைக்காய் விரலின் பால் சிறிது தொலைந்தான். ஒருநாள் அவசர அவசரமாய் கோயிலுக்கு அவள் நடந்து செல்லும் போது அசைந்தாடும் சிற்றிடையிலிருந்து தன் கண்களை நகற்ற முடியாது சிறிது தொலைந்தான். வேலை நேரங்களில் நெற்றி தாண்டி கரை புரண்டு துள்ளும் கார்குழலை ஒதுக்கையில் ரத்தினமாய் ஒளிரும் அந்த நீல விழியகில் சிறிது தொலைந்தான்.

 

    ஆவி பறக்கும் டீ கப்புகளை வாச்மேன் முதல் டிரைவர் வரை ஒவ்வொருவருக்கும் கொண்டு போய் தருகையில் ஒரு வித ஸ்நேக புன்னகையை சூடுகிறாள். குளிரும் பனிக்காற்று துப்பட்டாவை தூக்கி செல்ல முயல்கையில், அதை தன் மார்போடு இழுத்தணைத்து கொண்டு ஒருவித மாய புன்னகையை சூடுகிறாள். சாந்தியின் குழந்தையையும் தருணையும் சேர்த்து கார்டனில் ஓடி பிடித்து விளையாடுகையில் ஒருவித பாச புன்னகையை சூடுகிறாள். முத்து பல் வரிசை தெரிய மூன்று விதமான புன்னகையை கண்டதில் வருண் இன்னும் அவளில் தொலைந்து போனான்.

   

     இயலிடம் முழுதாய் தொலைவதற்குள் சுதாரித்து எழுந்தவனுக்கு இது ஏற்கனவே இயலும் கோகிலாவும் தீட்டிய திட்டத்தின் முதல்படியோ என்றெண்ணி மனம் குழம்பியது. அவளிடமிருந்து விலகி இருக்க நினைத்த போதுதான், திடீரென தருண் வைரஸ் காய்ச்சல் வந்து படுத்துவிட்டான். அந்த இரண்டு நாட்களும் ‘சுட்கி சுட்கி’ என்று அவள் அருகாமையையே ரொம்பவும் விரும்பினான். வேறு வழியின்றி வருண் இயலிசையை பகலெல்லாம் தன் அறையிலேயே இரண்டு நாட்களுக்கு இருக்க வைத்தான். தருண் ஓரளவு குணமான பின்பும் சுட்கி இங்கேயே இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தான்.

 

     வருண், “தருண் இது நம்மளோட ரூம், அவளுக்கு வேற ரூம் இருக்கு, புரிஞ்சுக்கோ”

 

    “மாட்டேன்…. பீம் கூடதான் சுட்கி இருக்கனும்.”

 

    இயல், “கண்ணா இது பாய்ஸ் ரூம், கேர்ல்ஸ் இங்க தங்க முடியாதுப்பா”

 

     “நீ இங்கதான் இருக்கனும்…..” என்று தருண் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தான். நேரம் ஆக ஆக தருண் அழுகை அதிகமானது, அவர்கள் இருவராலும் அவனை சமாதான படுத்த முடியவில்லை. இறுதியில் இருமல் வந்து தருண் மூச்சு முட்டி முகம் சிவந்ததும் வருண், “சரிடா இங்கயே இருக்கட்டும்” என்றான்.

 

     “ஹைய்யா…” என்று கண்ணீரை துடைத்து விட்டு குழந்தை துள்ளி குதித்து ஆடிட, இயல் விழி பிதுங்கி நின்றிருந்தாள். அன்றிரவு இயல் தருணை கதை சொல்லி தூங்க வைத்த பின் மெதுவாக அங்கிருந்து வெளியேற முயல வருண் அவள் வழி மறித்து நின்று கொண்டான்.

 

    “நீதான் தருணுக்கு இப்டி அடம்புடிக்கிறதுக்கு சொல்லி குடுத்தியா?”

 

    “இல்ல சார் நானில்ல. நான் இப்பவே இங்கிருந்து என் ரூமுக்கு போயிடுறேன்” என்றவளின் கைகளை பிடித்து அவன் இழுத்து செல்ல, அவளுடல் தானாகவே பயத்தில் நடுங்க ஆரம்பித்து விட்டது.

 

    வருணோ மிரட்டும் தோரணையில், “அப்புறம் தருண் நடுராத்திரியில உன்ன காணும்னு அழுதிட்டு இருப்பான். இங்க பாரு, என் கண்ணுலயே படாத மாதிரி இங்க ஒரு ஓரத்தில படுத்துக்கோ. அவன் அழுதா மட்டும் எந்திருச்சு வா, புரியுதா” என்றான்.

 

     “ம்ம்….” என்று தலையாட்டி விட்டு கட்டிலின் அருகிலேயே வெறும் தரையில் படுத்து கொண்டாள். குளிர் நடுங்கத்தான் செய்தது, இருந்தும் சோபாவிலோ பெட்ஷீட்டிலோ கை வைக்க மனம் வரவில்லை.

 

   அடுத்த நாளே அவள் ஆடைகளெல்லாம் அந்த அறைக்கு மாற்றி வைக்க பட்டது. காலையில் அவர்கள் எழும் முன்னரே குளித்து முடித்து கீழே இறங்கி விடுவாள், தருண் இருக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அந்த அறைக்கு அவள் வருவதே இல்லை. இரவிலும் தருணுக்கு கதை சொல்லி உறங்க வைக்கும் வரை பெட்டில் அமர்வாள். அவன் உறங்கிய அடுத்த நிமிடமே தன் இடத்திற்கு போய் விடுவாள். அந்த வாரம் சனிக்கிழமை வந்ததும் வழக்கம் போல தருணும் வருணும் பிரபாகரன் வீட்டிற்கு சென்றுவிட்டார்கள். இயலும் சாதாரணமாய் தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள். இரவு நேரம் சமையலின் போது சாந்தி தன் குழந்தையை ஒரு கையில் வைத்து கொண்டு, மற்றொரு கையால் அடுப்பில் வேலை பார்த்து கொண்டிருந்தாள். இசை அருகிலேயே கீழே அமர்ந்து பொறியலுக்காய் காய் நறுக்கி கொண்டிருந்தாள். எதிர்பாராத நொடியில் குழந்தை சடாரென்று சாம்பார் நிறைந்த பாத்திரத்தை பிடித்து இழுத்திட, மொத்தமும் இயலிசை தலையில் விழுந்து கொட்டியது.

 

     சாந்தி, “ஐயோ… இயல்…”என்று அலறிட அவளோ, “பயப்படாதீங்க அக்கா, ரொம்பல்லாம் சுடல, ஆறிடுச்சு. நல்லவேள குழந்தைக்கு ஒண்ணுமில்ல. நீங்க இருங்க, நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன்.”

 

     முடிந்தவரை துப்பட்டாவினால் முகத்தை வழித்து துடைத்து கொண்டு மாடியில் இருக்கும் அறைக்கு வந்தாள். கதவை தாழிட்டதிலே தலையிலிருந்து வழியும் சாம்பார் சிந்தி சிதறியது. இந்த நிலையில் கபோர்டை திறந்தால் கையிலிருக்கும் சாம்பாரெல்லாம் ஒட்டி கொள்ளும் என்றெண்ணி, மாற்றுத்துணி எடுக்காமல் பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டாள். குளித்து முடித்து டவலை மட்டும் கட்டி கொண்டு வெளியே வந்து கபோர்டை திறக்க முற்படுகையில், அதன் கண்ணாடியில் ஏதோ ஒரு உருவம் பின்னால் நிற்பது போல தெரிந்தது. அந்த உருவத்தை கூர்ந்து கவனித்து பார்த்தாள், அங்கே நின்று கொண்டிருந்தது வருண்…..

 

              *****     *****     *****

 

     அதற்கு மேல் சொல்ல முடியாமல் வருண் நகத்தை கடித்து கொண்டு அமர்ந்திருந்தான்.

 

    சித்தார்த், “புரியுதுடா” என்று மனம் வலிக்க துடிப்பவனுக்கு ஆதரவாக தோளை தட்டி கொடுத்தான்.

 

   சில நிமிட அமைதிக்கு பிறகு, “ஸோ, நீ மிஸ் பிகேவ் பண்ணிட்டன்னுதான் இசை உங்கிட்ட கோச்சுகிட்டு இங்க வந்திட்டாளா? இதான் உங்க ப்ளாஷ்பேக்கோட என்ட்டா?”

 

    ஒரு நீண்ட பெருமூச்சோடு வருண், “இல்ல ப்ரோ, இது ப்ளாஷ்பேக்கோட என்டு இல்ல. இட்ஸ் ஜஸ்ட் எ இன்ட்ரவெல், இதுக்கப்புறம் தான் நான் அறிவில்லாம மோசமா பிகேவ் பண்ணி அவள ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்” என்றான்.

 

     “அடப்பாவி” என்று தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான் சித்தார்த்.

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: