Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 12’

வம்சியின் முகம் மிக அருகில் அவளை நெருங்கியது கண்டு சுதாரித்தாள் காதம்பரி.

“விளையாட்டு போதும் வம்சி. இந்த கேமை இத்தோட நிறுத்திக்குவோம். இந்த அமரை சகிக்கவே முடியல. இதில் அவன் வீட்டுக்கு வேற வரணுமாம். நீங்க ஆரம்பிச்ச கேம் விபரீதத்தில் கொண்டு விட்டுடும் போலிருக்கு”

 

“நானே உன்னை காப்பாத்தவும் செய்றேன் செர்ரி… ஆனால் என் கூட நீ வரணுமே.. வர்ற, வருவ… இல்லைன்னா அமர் மாதிரி கேட்டுட்டு இருக்க மாட்டேன். தூக்கிடுவேன்…“

 

“வம்சி… வான்னு அழைப்பு விடுக்கலாம். வந்தே ஆகணும்னு என்னைக் கம்பல் பண்றது எனக்குப் பிடிக்காது”

 

“சரி செர்ரி… உன்னைக் கம்பல் பண்ணல ஆனால் நீயே சம்மதிச்சுடேன்”

அமர் அந்தப் பெண்ணிடம் பேசிவிட்டு அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்.

“அவன் இன்னைக்கு உன்னை விடமாட்டான். என் கூட வெளிய வர்றியா காதம்பரி நான் படிச்ச ஸ்கூல், காலேஜ் எல்லாம் காண்பிக்கிறேன்” என்றான் ஆவலுடன்.

“கேட் டின்னர் முடிஞ்சதா… வம்சி கிளம்பினதும் இன்னைக்கு என் பிளாட்டுக்கு உன்னைக் கூட்டிட்டு போயி காண்பிக்கணும்னு ப்ளான் பண்ணிருக்கேன்.” காதம்பரியிடம் அமர் உற்சாகமாய் சொன்னான்.

“ஸாரி அமர். நானும் வம்சியும் வெளிய போறோம்”

விகாரமாய் மாறியது அமரின் முகம். “டிரைவரை அனுப்பிட்டேனே”

“பரவல்ல நான் டிரைவ் பண்றேன்” என்றான் வம்சி.

“காரைக் கூட அனுப்பிட்டேன்”

“இட்ஸ் நாட் எ பிக் ப்ராப்ளம். ரிசப்ஷனில் சொல்லி டாக்சி கூப்பிட்டுக்கிறேன். ஒகே அமர், ஸீ யூ டுமாரோ” என்றபடி அவளை இழுத்துக் கொண்டு நடந்தான்.

அந்த மாலை நேரத்தில் இந்திராநகர் குடியிருப்பில் டாக்ஸியில் சென்று இறங்கினர். இறங்கியதும் வண்டியை போகச் சொல்லிவிட்டான் வம்சி.

“என்ன வம்சி கார் இல்லாம எப்படித் திரும்பப் போறது? ரெண்டு செட் டிரஸ் வேற எடுத்து வைக்க சொல்லிருக்கிங்க”

“ஒரு நாள் முழுசும் என் கூட இருக்க சம்மதிச்சிருக்க. இந்தத் தங்க சிலையை யாரும் தூக்கிட்டு போக விட்டுடமாட்டேன்.  நான் உன்னை பத்திரமா இருப்பிடத்தில் கொண்டு சேர்க்கிறேன் செர்ரி. கவலைப்படாம வா” என்றபடி அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றான்.

அங்கிருந்த ப்ளாட்டை சாவி கொண்டு திறந்தான். மிக அழகான அந்த பென்ட் ஹவுஸ் நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.

“இது உங்க வீடா வம்சி…”

“ஆமா செர்ரி… “

“நீங்க பெங்களூரா… “

“எஸ்..  இங்கதான் படிச்சேன். அப்பறம் மேல்படிப்புக்காக வெளிநாடு போனேன். சம்பாரிச்சேன். இந்தியாவுக்கு மறுபடியும் வந்துட்டேன்”

“நீங்க தனியாவா இருக்கீங்க”

“இல்லையே… நீதான் என் கூடவே இருக்கியே”

“இதென்ன ஒரு பதில்”

“சரி சீக்கிரம் கிளம்பி வா. என்னோட பைக்கில் சுத்திட்டு வரலாம். அப்படியே என்னைப் பத்தி நீயும் உன்னைப் பத்தி நானும் தெரிஞ்சுக்கலாம்”

“பைக்கா… “

“இங்க வரும்போது நான் பைக்கைத்தான் ப்ரிபர் செய்வேன்”

“எனக்கு பைக் பின்னாடி உக்காந்துட்டு கடற்கரை சாலைல காத்தில் முடி பறக்க பறக்க வேகமா போகணும்னு பயங்கர ஆசை”

“இது எப்போதிருந்து”

“காலேஜ் படிக்கும்போது. அப்பறம் இந்த மாதிரி அல்பமான ஆசை எல்லாம் இல்லை”

“இன்னைக்கு நம்ம ரெண்டு பேரோட அல்ப ஆசைகளும் நிறைவேத்திக்கலாம்”

“சோளக்கருது வாங்கி, அதில் உப்பு தடவி சாப்பிடணும்”

“சூடா ஒரு டீ வாங்கி கப் அண்ட் சாசரில் ரெண்டு பேரும் குடிக்கணும்”

“ஒரே பலுடா ஐஸ்க்ரீமை ரெண்டு பேரும் சாப்பிடணும்”

இருவரும் அவனது பைக்கில் பெங்களூரை சுற்றினார்கள். அவன் படித்த பள்ளி, கல்லூரியைக் காண்பித்தான். அதன் எதிரே இருந்த பெஞ்சில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அமர்ந்து கொண்டார்கள். தெருவோர டீக்கடைகளில் கப்பன்ட் சாசரில் டீ வாங்கிப் பகிர்ந்து கொண்டார்கள்.

ஊரு சனம் உறங்கிவிட்ட அந்த நேரத்தில் அங்கிருந்த ஒரு வீட்டை விட்டுத் தள்ளி வண்டியை நிறுத்திவிட்டு அந்த வீட்டை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வம்சி. அந்த இடம் நடுத்தர வசதிக்கும் சற்று கீழானவர்கள் இருக்கும் இடம் போலத் தெரிந்தது.

“இதுதான் உங்க சொந்தக்காரங்க வீடா வம்சி?”

“எங்க மாமா குடியிருந்த வீடு. எங்க வீடு எனக்கு நினைவே இல்லை. எங்க அம்மா அப்பா என் சின்ன வயசில் இறந்துட்டாங்க. என் பாட்டி வீட்டில் வளர்ந்தேன். என் மாமா என்னை வளர்க்க ஒரே காரணம் மாசாமாசம் என் பாதுகாவலருக்குத் தந்த பணம்தான். என் ஒருத்தனுக்கு வந்த பணத்தை வச்சு மாமா, அத்தை, அவங்களோட மூணு குழந்தைகள், பாட்டி எல்லாரும் சாப்பிடணும். வீட்டு வாடகை, ஸ்கூல் பீஸ் எல்லாம் இதில்தான்”

ஆதரவாக அவனது தோளைப் பற்றிக் கொண்டாள். அந்தக் கரங்களை இறுக்கப் பற்றிக் கொண்டான் வம்சி.

“மாமாவுக்கு நிரந்தர வேலை இல்லை. எனக்கு வரும் பணம் பத்து நாள்ல தீர்ந்துரும். அதுக்கு அப்பறம் மூணு வேளை சாப்பாடு ரெண்டு வேளையாகும் அப்பறம் ஒரு வேளையாகும். பாதி நாள் பசியோடவே இருப்பேன். ஸ்கூலில் பாடத்தைக் கூட கவனிக்க முடியாம காதெல்லாம் பசியில் அடைக்கும்”

“அதனால்தான் நான் சரியா சாப்பிடலைன்னா உங்களுக்கு மூக்குக்கு மேல கோபம் வருதா”

“அதுமட்டுமில்லை காதம்பரி உன் மேல எனக்கு என்னவோ ஒரு தனிப்பட்ட அக்கறை”

“எப்படி குழந்தைங்க பெரியவங்க எல்லாரும் சமாளிச்சிங்க”

“என் பாட்டி கெட்டிக்காரங்க. இருக்குற பணத்தில் இழுத்துப் பிடிச்சு சமாளிப்பாங்க. மாசத்தில் இருவத்தி ஒன்பது நாள் ராத்திரி சாப்பாடு ராகிமுத்தேதான்”

“அது என்ன சாப்பாடு?”

“ராகி மாவில் சூடா களி கிண்டி ஆளுக்கு ஒரு உருண்டை வைப்பாங்க.”

“களி உருண்டையா…”

“ஆமாம்… மாசம் ஆரம்பத்தில் நெய் ஊத்திக் களி. அதுக்கு நாலஞ்சு விதமான காய்கறி போட்டுக் குழம்புன்னு ஒரே தடபுடலா இருக்கும். அப்பறம் நெய் எண்ணையாகும். காய்கறிக் குழம்பு கீரைக் குழம்பாகும். மாசக் கடைசியில் மாவு மட்டும் போட்டக் களி. தொட்டுக்க ஊறுகாய்”

“ம்ம்… “

“ஆனால் அந்த சாப்பாட்டில் இருக்கும் டேஸ்ட் இப்ப பைவ் ஸ்டார் உணவகத்தில் சாப்பிட்டாலும் கிடைக்க மாட்டிங்குது”

“அந்த மாதிரி ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்துட்டு எப்படி இவ்வளவு உயரத்துக்கு வந்திங்க வம்சி. பயங்கர ப்ரைனியா நீங்க?”

“பச்… ஸ்கூல்ல படிக்கும்போது நான் ஒரு டல் ஸ்டுடென்ட் செர்ரி”

“நிஜம்மாவா… நம்பவே முடியல ”

“நிஜம்தான்… என் பிரெண்ட்ஸ் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வாங்க. என்னால ஒண்ணு மட்டும்தான் உருப்படியாய் செய்யமுடியும். அது என் பலவீனம். அதையே பலமா மாத்திக்க முயற்சி பண்ணேன். ஒரு நேரத்தில் ஒரே வேலையைத்தான் செய்வேன் அதை நூறு சதவிகிதம் சரியா செய்வேன்னு எனக்குள்ளேயே சொல்லிக்கிட்டேன். சொல்லப் போனால் அந்த முடிவை கடைபிடிக்க ஆரம்பிச்சதுக்கு அப்பறம் தோல்வி என்னை விட்டு ஓடிப் போச்சு”

“அதுதான் மீட்டிங் அப்ப அந்த அளவுக்கு கவனமா இருந்திங்களா”

“ம்ம்… இதையெல்லாம் நான் யார்கிட்டயும் பகிர்ந்துகிட்டதே இல்லை. உன்கிட்ட என்னைப்பத்தின எல்லாத்தையும் சொல்லிடணும் போல இருக்கு”

 

நள்ளிரவில் “பசிக்குது வம்சி” என்றாள்.

“எனக்கும்தான் அந்த ரெஸ்டாரன்ட்ல சாப்பாடே உள்ள இறங்கல…. எனக்கு இட்லி, தோசை, சாம்பார்னு வெளுத்துக்கட்டணும்… உன்னை மாதிரி பிரட் தின்னு உயிர் வாழும் ஆள் நானில்லப்பா”

“எனக்கும் இட்லி, தோசை, சாம்பார் எல்லாம் பிடிக்கும் இதெல்லாம் எங்கம்மா எவ்வளவு டேஸ்டா செய்வாங்க தெரியுமா…. அப்ப சாப்பிட மாட்டேன். இப்ப ஆசைபட்டா கூட கிடைக்காது”

அவளது வருத்தத்தைக் கண்டு தோளைத் தட்டி சமாதனம் செய்தான்.

“நம்ம ரெண்டு பேரும் பக்கா சவுத் இந்தியன் உணவு சாப்பிடலாமா… “

இருவரும் மசால் தோசை, வடை, காப்பி என்று இரவு உணவை ஒரு சிறிய விடுதியில் முடித்துவிட்டு அவனது பிளாட்டுக்கு சென்றனர்.

பால்கனியின் தரையில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்தபடி இருவரின் இளம்பருவத்தைப் பற்றியும் பேசிக் கொண்டார்கள். அவர்கள் கைவிரல்கள் அவர்கள் அறியாமலேயே பின்னிப் பிணைந்திருந்தன.

“எனக்கு மனிதர்கள் மேல நம்பிக்கை வைக்க பயம். அதனால் என் கம்பனிதான் எல்லாமே வம்சி. எனக்கு சாப்பாடு போடுறதும் அதுதான். என் சொந்தமும் அதுதான். என் ஒரே லட்சியம் கேட் அட்வர்டைசிங் ஏஜென்சியை பெரிய அளவுக்குக் கொண்டு போகணும்” தன் கனவுகளைப் பகிர்ந்து கொண்டாள்.

“கண்டிப்பா நீ அதுக்குத் தகுதியானவ செர்ரி” இருட்டில் ஒளிவீசிய அவளது செவ்விதழ்களைப் பார்த்தவாறு சொன்னான்.

“மை ஸ்வீட் செர்ரி… மனசில் இருந்ததை உங்கிட்ட பகிர்ந்துகிட்டத்தில் என் மனசின் பாரமே குறைஞ்சிருச்சு. இன்னைக்கு  நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உன்கிட்ட ஒரே ஒரு வரம் கேட்பேன் தர்றியா?”

“வரமா உங்களுக்குத் தர்ற அளவுக்கு என்கிட்டே என்ன இருக்கு?”

“உன்னாலதான் அது முடியும். இன்னைக்கு மட்டும் கிங் அண்ட் குயினா நம்ம ரெண்டு பேரும் வாழலாமா… “ அவன் கண்களில் இறைஞ்சுவதைப் போல ஏக்கம்

காதம்பரியின் மனம் அவன் பால் ஏற்கனவே இளகியிருந்தது. அவன் கேட்கவும் என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் திகைத்தாள்.

நனைந்து கொள்ளவா மழை இல்லாமலே

இணைந்து கொள்ளவா உடல் இல்லாமலே

என்ற அவனது கேள்வியில் அவளையறியாமலேயே குடையாய்த் தாழ்ந்து அவளது இமைகள் சம்மதம் சொன்னது.

‘ஹுர்ரே’ என்று குதித்தவனின் இரு கைகளிலும் மறுவினாடி காதம்பரி இருந்தாள்.

“காதம்பரி, மை ஸ்வீட் செர்ரி” மயக்கத்துடன் அவனது குரல் ஒலித்தது.

அழுத்தமான அவனது காலடித் தடங்கள் படுக்கை அறையை நெருங்கியது.

மேக வீதியில் பறந்து, புலன்களைக் கடந்து, தனது தொழில், ஈகோ அனைத்தையும் மறந்து புத்தம் புதுவுலகைக் கண்டனர் அந்த ராஜாவும் ராணியும்.

1 Comment »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: