Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 8’

றுநாள் சரியாக ஒன்பது மணிக்கு சென்றவள் வம்சி காலை உணவு உண்ணாமல் பிடிவாதமாக தனக்காகக் காத்திருப்பதை அறிந்து, வேறு வழியில்லாமல் அவனுடன் உணவு உண்டாள்.

“வம்சி இனி வீட்டில் கண்டிப்பா சாப்பிட்டுட்டு வந்துடுவேன்”

“உனக்கு ஏற்கனவே சான்ஸ் கொடுத்தாச்சு செர்ரி…. இனி என்கூடத்தான் சாப்பிடுற” என்றதும் மறு பேச்சு பேச வாய்ப்பே இல்லாது போயிற்று.

சாண்ட்விச், பழங்களும் நட்ஸும் நறுக்கிப் போடப்பட்ட யோகர்ட் கப், ஸ்ட்ராங் காப்பி என்று இருவருக்கும் பிடித்தமான சத்தான உணவு வகைகள். அதன்பின் முதல்நாள் செய்த வேலைகள் பற்றிய ப்ராக்ரஸ் ரிப்போர்ட். அடுத்த ஸ்டேஜ் பற்றிய திட்டமிடல் என்று முடித்துவிட்டு அலுவலகத்துக்கு வருவாள். அங்கு வந்து வேலைகளை முடுக்கிவிடுவாள். அவள் முன்பே எதிர்பார்த்ததைப் போல வம்சி அவள் முதலில் டெலிவர் செய்வதாக சொன்ன தேத்திக்கு ஒத்துக் கொள்ளாது ஒரு வாரம் முன்னதாகவே  ப்ராஜெக்ட் முடிய வேண்டும் என்றான். இரண்டாவது தேதியை இரண்டு நாட்களுக்குப் பின் காட்டி அவனை சம்மதிக்க வைத்தாள்.

ஒரு மாதம் சென்றதும் ஒரு நாள் தங்களது மீட்டிங்கை டென்னிஸ் க்ளப்புக்கு மாற்றினான்.

“இந்த வாரம் தர்ஸ்டே, ப்ரைடே நான் ஊரில் இருக்க மாட்டேன்”

“மண்டே மீட்டிங் வச்சுக்கலாம்” சட்டென சொன்னாள்.

“அவ்வளவு நாள் தள்ளி போட முடியாது. சட்டர்டே டென்னிஸ் க்ளப்புக்கு வந்துடு. விளையாட்டு முடிஞ்சதும் அங்கேயே லஞ்ச் முடிச்சுட்டு நம்ம டிஸ்கசனை  வச்சுக்கலாம்”

“ம்ம்… சரி”

“காதம்பரி உன்னை டென்னிஸ் க்ளப்புக்கு வேடிக்கை பார்க்கக் கூப்பிடல. டென்னிஸ் விளையாடத் தெரியும்ல?”

“எனக்கு விளையாடத் தெரியுமா இல்லையான்னு டென்னிஸ் கோர்ட்ல பாருங்க”

வாய்சவடலாய் சொன்னாலும் வம்சி மிக நல்ல ப்ளேயர் என்பதை சிறிது நேரத்திலேயே  புரிந்து கொண்டாள். பின்னர் ஏன் முதல் செட்டில் தன்னை ஜெயிக்க வைத்தான் என்ற கேள்வியுடன் விளையாடினாள்.

“பரவல்ல செர்ரி… முதல் செட்டில்  ஜெய்ச்சிட்ட”

“சொல்லுங்களேன்…. போனால் போகுதுன்னு விட்டுத்தந்தேன்னு…. பெண்கள் ஜெயிச்சா ஆம்பளைங்க இதைத்தானே சொல்லுவிங்க”

“ச்சே… நான் விட்டெல்லாம் தரல. இவ்வளவு நாள் உன்னை பார்மல் ட்ரெஸ்லையே பார்த்து பழகிட்டேனா… டென்னில் டிரஸ்ல தந்தம் மாதிரி காலைப் பார்த்துத் தடுமாறிட்டேன். ஆமாம் நீ ஏன் ரெகுலரா ஸ்கர்ட் போடக் கூடாது”

பதிலே சொல்லாமல் டவலை எடுத்துக் கால்களின் மேல் போட்டுக் கொண்டாள்.

தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின் “வா செர்ரி… விளையாடலாம்”

“வம்சி… யூ ஆர் எ வெரி குட் டென்னிஸ் பிளேயர். நான் வெறும் கத்துக்குட்டி… கொஞ்ச நேரம் விளையாண்டதும் டையர்டாயிடுவேன். இந்த மேட்ச்சில் நீங்களே ஜெயிச்சதா வச்சுக்கலாம். நான் ஷவர் பண்ணிட்டு வேற டிரஸ் மாத்திட்டு வந்துடுறேன்” என்று கட் செய்துவிட்டுப் போகும் காதம்பரியைப் பார்த்து

‘வம்சி கொஞ்சம் வாயை அடக்கக் கூடாதாடா நீ. இனிமே ஜென்மத்துக்கும் உன் கூட டென்னிஸ் விளையாட மாட்டா’ என்று மனது திட்டியது.

நாட்கள் கடகடவென ஓடி அவர்கள் ட்ரிப் செல்லவேண்டிய நாளும் வந்தது. முதலில் பெங்களூரில் முதல் காம்ஃபைன் அதற்கு அடுத்த மாதம்  சென்னையில் அறிமுகம் என்று முடிவு செய்தார்கள். காதம்பரி அதிகாலை ப்ளைட்டில் முதலில் சென்று ஏற்பாடுகள் செய்வதென்றும் மறுநாள் மாலை விழாவுக்கு வம்சி இணைந்து கொள்வதாகவும் என்றும் தீர்மானம் செய்தாயிற்று.

பெங்களூர் கிளம்பும் நாளன்று காலை ஏர்போர்ட்டுக்கு கருப்பு டீஷர்ட்டும் லைட் ப்ளூ ஜீனும் அணிந்து தலையில் முடியை கொண்டையாக சுருட்டி கிளிப் போட்டு இறங்கியவளைப் பார்த்து கையசைத்தது வம்சியேதான். ‘இவனெங்கே இங்கே… யாரையாவது வழியனுப்ப வந்தானா’ என்றெண்ணி விழித்தவளிடம்.

“நானும் இதில்தான் வர்றேன். பிளைட்டில் தனியா வர பயம்மா இருந்துச்சு காதம்பரி… பெங்களூர்ல வழி தெரியாம தொலைஞ்சுட்டேன்னா…”

“சின்ன பாப்பா தொலைஞ்சு போக… ஆமாம் ஆபிஸ விட்டுட்டு வர எப்படி மனசு வந்தது?”

“இன்னைக்கு காலைல முக்கியமான ப்ரோக்ராம் எதுவும் இல்ல. அதுதான் உன்கூடவே கிளம்பி வந்துட்டேன்”

கடைசி நிமிடத்தில் புக் செய்ததால் அவனுக்கு பிஸினெஸ் கிளாசில் சீட் கிடைக்கவில்லை. எகனாமிக்கில் புக் பண்ண சொல்லிவிட்டான்.

“வம்சி இந்தாங்க என்னோட டிக்கெட். நான் தனியா வந்தா எக்கனாமிக் க்ளாஸ்லதான் பயணம் பண்ணுவேன். இது எனக்கு நீங்க புக் செய்த டிக்கெட். நீங்க என் சீட்டில் பயணம் செய்ங்க”

திகைத்து அவளை ஒரு நிமிடம் உறுத்துப் பார்த்தான். மறுப்பாய் தலையசைத்தான்.

“சொன்னாக் கேளுங்க வம்சி. இதில் சீட்டுகளை நெருக்கமா போட்டிருப்பாங்க. லெக்ரூம் கம்மி. உங்க நீளமான காலை மடக்கியே வச்சிருக்கணும். வலிக்கும்”

அவனது கண்களில் மலர்ச்சியுடன் கூடிய புன்னகை தோன்றியது.

“அப்ப உனக்கு எக்கனாமிக் கிளாசில் பயணம் செய்வதில் ஆட்சோபனை இல்லை”

“ம்ஹும்… “

அவளது பயணச்சீட்டை வாங்கியவன் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண்ணில் அவளை அமரச் சொன்னான். பின்னர். எங்கோ சென்றுவிட்டான். காதம்பரி தனது லக்கேஜை மேலே வைத்து லாக் செய்துவிட்டு அந்த ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள். தனது லாப்டாப்பைத் திறந்து அதில் வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். அவளது பக்கத்து இருக்கையில் யாரோ நெருக்கமாக அமர்ந்தார்கள். அது அவளது கவனத்தை சிதறடிக்கவில்லை. சிலநிமிடங்கள் கழித்து உரிமையாய் கை நீட்டி அவளது லாப்டாப்பை மூடிய கரங்களைக் கண்டு எரிச்சலுடன் திரும்பினாள். பக்கத்தில் அமர்ந்திருந்த வம்சியைக் கண்டு அவளது எரிச்சல் மறைந்து பூஞ்சிரிப்பு மலர்ந்தது அவளது முகத்தில். அவளது மடிக்கணினியை  மூடித் தனது பையில் வைத்துக் கொண்டான்.

“இந்தப் பயணத்தில் நீ உன் லாப்டாப்பைத் தொடப் போறதில்லை”

“வம்சி… நீங்க… “

“எஸ் செர்ரி. இந்த சீட்டில் உக்கார வேண்டிய ஆள்கிட்ட பண்டமாற்று செய்துட்டேன்”

“ஆனால் ஏன்? இங்க உக்கார்ந்தா உங்களுக்குக் கால் வலிக்குமே”

“மூணு மணி நேரம்தானே செர்ரி. அப்படியே வலிச்சா என்ன? அமுக்கி விட ஆள் தயாரா இருக்கே” என்றான் கண்ணடித்தபடி.

“உங்க மனைவி அமுக்கி விடுவாங்களா.. “ கிணற்றுக்குள் இருப்பதைப் போல மெதுவாய் வந்தது காதம்பரியின் குரல்.

“நான் உன்னை சொன்னேன் காதம்பரி. என்னை பாத்துக்க மாட்டியா என்ன?”

“ம்ம்… காலில் கல்லைத் தூக்கிப் போடுறேன். கால் நீட்ட இடமில்லைன்னு தானே அங்க உட்கார டிக்கெட் தந்தேன். அதை தானம் பண்ணிட்டு நான் காலை வேற அமுக்கி விடணுமாம்”

“காதம்பரி.. நம்ம முதல் தடவையா பிஸினெஸ் டாக் இல்லாம மற்ற விஷயங்களைப் பத்தி பதினஞ்சு நிமிஷமா பேசிருக்கோம். இந்த அழகான காதம்பரியை அவளோட உலகத்தில் இருந்து விடுவிச்சு என்கிட்டே கொண்டு வர நான் என்ன விலை வேணும்னாலும் தருவேன்”

அவன் சொன்னது புரிந்ததோ இல்லையோ காதம்பரி வெகு நாட்கள் கழித்து மிக சந்தோஷமாக உணர்ந்தாள். ஆனால் விரைவிலேயே அந்த சந்தோஷத்துக்கு வேட்டு வைக்க வந்தாள் ஒருத்தி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: