Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 7’

டுத்த திங்கள்கிழமை வம்சிகிருஷ்ணாவை சந்திப்பதற்குள் கிட்டத்தட்ட பாதியாக இளைத்துவிட்டாள் காதம்பரி. அவள்தான் தங்களது வேலையை செய்து தரவேண்டும் என்று அடம்பிடித்தவர்களிடம் வாய்தா வாங்கி, சிலருக்கு தங்கள் டீம் மிகச் சிறப்பாகவே செய்துதரும் என்று சூடம் கொளுத்தி சத்தியம் செய்து, மற்றவர்களிடம் ஜானின் கம்பனியும் இதில் உதவும் என்று சால்ஜாப்பு சொல்லி, இத்துடன் வம்சியின் எதிர்பார்ப்பை யோசித்து அதற்குத் தகுந்தாற்போல் ப்ளான் போட்டு… இத்தனையும் செய்து முடித்ததில் உண்ண, உறங்கக் கூட சரிவர நேரமில்லாது போயிற்று.

இரண்டு வகையான டாக்குமெண்டுகளை காதம்பரியின் லாப்டாப்பில் பதிவு செய்தபடியே வினவினாள் கல்பனா

“எதுக்கு ரெண்டு விதமான நேரக்கணக்கில் ப்ராஜெக்ட் ப்ளான் போட்டிருக்க. இதனால நமக்குத்தான ரெட்டை வேலை”

“அநேகமா முதல்ல தர டைம்லைனுக்கு வம்சி ஒத்துக்க மாட்டான். இன்னும் சீக்கிரம் வேணும்னு கேட்பான். அதுக்குத்தான்”

“அம்மாடி அவன் ஒரு விடாக்கண்டன் நீ ஒரு கொடாக்கண்டி”

“இதென்ன புது பழமொழி”

“அதாவது வம்சி அவனோட விஷயத்தை சாதிச்சுக்கிறதில் பிடிவாதமா நிப்பான். நீயோ  உன் விஷயத்தில் கொஞ்சம் கூட கீழ இறங்க மாட்ட…. ஆக மொத்தம் இந்த ப்ராஜெக்ட் முடியுறதுக்குள்ள உங்க ரெண்டு பேரு டீம்ல வேலை பாக்குறவங்க எல்லாரும் புட்பாலா உதைபடப் போறோம்”

கல்பனாவிடம் “நாளைக்கு பார்க்கலாம் புட்பால்” என்றவாறு கிளம்பினாள் காதம்பரி.

மறுநாள் அவளது சோர்வை முகம் பிரதிபலித்தது. கண்களுக்கு கீழ் சிறிதாய் கருவளையம். மேக்அப் போட்டு அதனை மறைத்தாள். அழுத்தமான நிறத்தில் லிப்ஸ்டிக் தீட்டிக் கொண்டாள். ஆனால் அணிந்த உடைகள் அனைத்தும் திடீரென தொளதொளவென தொங்கினார்போல் பட்டது. ‘இது பூட்லெக் மாடல் கொஞ்சம் லூஸாத்தான் இருக்கும்’ என்று தனக்குள்ளே சமாதனம் சொல்லிக் கொண்டாள்.

பிரிட்ஜில் இருந்த ஸ்ட்ராபெரி மில்க் பாட்டிலையும், ப்ரேக்பாஸ்ட் பாரையும் எடுத்துக் கைப்பையில் போட்டுக் கொண்டு  சீக்கிரமே கிளம்பிவிட்டாள். ஒன்பது மணிக்கு ரூபியில் இருந்தால் போதும். ஆனால் மும்பை ட்ராபிக் எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிடலாம். தாமாதமாக சென்று வம்சியின் ருத்ரமூர்த்தி அவதாரத்தைக் காண அவள் தயாரில்லை. எட்டரைக்கு ரூபிக்கு அருகே வந்துவிட்டாள். சற்று தள்ளி  ஒதுக்குப்புறமாய் நிறுத்தி ப்ரேக்பாஸ்ட் பாரைத் தின்று, ஸ்ட்ராபெரி மில்க்கை குடித்தாள். இதை அவன் அலுவலகத்திலேயே செய்திருக்கலாம். சொல்லப்போனால் அங்கு ஒரு கேபிடேரியா கூட உண்டு. சூடான மசால்தோசையும், சூப்பரான காபியும் எப்பொழுதும் கிடைக்கும். ஆனால் அந்த இம்சி இவள் சீக்கிரம் வந்ததை அறிந்து மீட்டிங் நேரத்தை காலை எட்டுக்கே மாற்றினாலும் மாற்றுவான். எதற்கு வம்பு.

எட்டேமுக்காலுக்கு ரூபி அலுவலகத்துக்கு சென்றாள். அவள் வந்து ஐந்து நிமிடங்களில் வம்சிகிருஷ்ணாவும் தனது ட்ரேட்மார்க் வேக நடையுடன் அவளை அழைக்க வந்துவிட்டான். இன்று வெள்ளை நிற கேஸுவல் சட்டை. அதில் முதல் பட்டனை திறந்து விட்டிருந்தான். ‘டார்க் காக்கி’ நிற சினோ பான்ட்டும் ப்ரவுன் பெல்ட்டும் அணிந்திருந்தான்.

“ஹாய் காதம்பரி… “ என்றபடி மேல்நாட்டுப் பாணியில் ஒரு சிறிதாய் அணைத்து விட்டு, அணைத்த கையை விலக்காமல் தோளில் போட்டுக் கொண்டு

“வா மீட்டிங் ரூம் போகலாம்” என்று அழைத்து சென்றான். லிப்ட்டில் ஏறியதும்

“என்ன காதம்பரி உடம்பு சரியில்லையா” என்று அக்கறையோடு கேட்டான்.

“இல்லையே… நான் நல்லாவே இருக்கேன்” என்று அவன் அறியாதபடி அவன் கையணைப்பிலிருந்து விடுவித்துக் கொள்ள முயன்றாள். அதற்குள் அவர்கள் செல்லவேண்டிய தளத்தை லிப்ட் அடைந்திருந்தது. அவள் முதலில் செல்ல வழிவிட்டான். முன்னால் வேகமாய் ஓடிச் சென்று அறையை அடைந்தாள் இல்லாவிட்டால் அவள் என்னவோ காதலியை அழைத்து செல்வது மாதிரி தோளில் கை போடுவானே.

அறையில் நுழைந்ததும் அவள் கையைப் பிடித்து நிறுத்தி முகத்தத்தை உற்று நோக்கினான். அவனது வலது கை ஆட்காட்டி விரல்கள் கண்களை சுட்டிக் காட்டின.

“நல்லாருக்க மாதிரி தோணலையே. போனவாரம் பார்த்த காதம்பரியோட பாதி உருவம்தான் இருக்கு. கண்ணில் கருவளையம். லூஸான ட்ரெஸ்” என்று அடுக்கிக் கொண்டே போனான்.

“இந்த அளவுக்கு பெண்களை கவனிப்பது அவங்களுக்கு சந்தோசம் தரும் விஷயம் வம்சி. ஆனால் போனவாரத்திலிருந்து இப்ப உங்களை சந்திக்கும் நிமிடம் வரை எனக்கு ஏகப்பட்ட வேலைகள். பகல் நேரம் போதாமல் ராத்திரியும் முழிச்சேன். சரியான தூக்கம் இல்லாததால சாப்பிடவும் முடியல”

“ம்… எதுக்காக அப்படி கடினமா வேலை பாக்கணும்”

“என்னோட  புது கிளையன்ட் வெரி டிமாண்டிங் வித் வெரி வெரி ஹை எக்ஸ்பக்டேஷன்ஸ். அவரைக் கோபப்படுத்தி ஒரு ருத்ரமூர்த்தியை பாக்க நான் தயாரில்லப்பா”

“இந்த காலத்தில் உழைச்சுப் பிழைக்கிற ஆட்களைவிட ஏமாத்திப் பிழைக்கும் ஆட்கள்தான் அதிகம். ஸோ… உன்னுடைய கடின உழைப்புக்கு ஹாட்ஸ் ஆப். ஆனா உன் உடம்பை கவனிக்கலைன்னா எப்படி என் ப்ராஜெக்ட்டை டெலிவர் பண்ணுவ? உன் ஹார்ட் வொர்க் எல்லாம் வீணாயிடுமே”

கடைசியில் அவனது அக்கறை எல்லாம் அவன் காரியம் கெட்டுப்போகக் கூடாது என்பதற்குத்தானா… மனமே கசத்தது காதம்பரிக்கு.

“உங்க அக்கறைக்கு நன்றி வம்சி. இனிமே ஒழுங்கா சாப்பிட்டுக்குறேன். உங்க ப்ராஜெக்ட் அபக்ட் ஆற மாதிரி ஒரு நாளும் நடந்துக்க மாட்டேன்”

என்றதும் அவளைக் கூர்மையாகப் பார்த்தான்.

“சரி இன்னைக்கு எனக்கு என்ன தரப்போற”

“ப்ராஜெக்ட் ஃபேசஸ், டைம்லைன், கீ டேட்ஸ், மைல்ஸ்டோன் செட் பண்ணிடலாம். நம்ம ஸ்ட்ரடஜியை எப்படி ஒவ்வொரு ஃபேஸும் மீட் பண்ணும் என்பதைப் பத்தி ஒரு ஐடியா தரேன். அப்பறம்…. “ என்று தனது திட்டத்தைப் பற்றி சொன்னாள். வம்சியும் கவனமாகக் கேட்கத் தொடங்கினான்.

அன்று அவர்கள் கலந்துரையாடியது வழக்கமான மீட்டிங் அறை போலில்லை. லெதர் கவுச்சுகள், சென்டர் டேபிள், சிறிய பிரிட்ஜ், பெரிய பிளாட் ஸ்க்ரீன் டிவி என்று ஒரு வீட்டின் வரவேற்பறைக்குள் வந்தாற்போல ஒரு பிரமை.

அவ்வப்போது கொண்டு வந்த பேக் செய்து சூடாக வந்த குக்கீஸ் உண்டபடியும், பழச்சாறுகளைப் பருகியபடியும் விவாதம் தொடர்ந்தது.

நேரம் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. பன்னிரண்டு மணிக்கு வம்சியின் காரியதரசி வந்து நினைவூட்டியதும்தான் மதியமாகிவிட்டதை இருவரும் உணர்ந்தார்கள்.

“பாருங்க வம்சி… வேலையில் மூழ்கிட்டா நேரம் போறதே தெரியாது. உங்க பிஏ சொல்லலைன்னா சாப்பாட்டைக் கூட மறந்துட்டு மத்தியானமும் தொடர்ந்திருப்போம். இப்படித்தான் எனக்கும் ஆச்சு”

“அதனால்தான் ஒரு மணி நேரத்துக்கு ஒருதடவை பிரெஷ் ஜூஸும், குக்கீசும் வைக்க சொல்லிருந்தேன். காலி வயிறா இல்லாம கொஞ்சமாவது சாப்பிடுவோமே..” என்று சொல்லிக் கண்ணை சிமிட்டினான்.

“அப்பறம்… காதம்பரி, நான் மார்னிங் ஏழு மணிக்கே ஆபிஸ் வந்துடுவேன். நீ இனிமே ப்ரேக்பாஸ்ட்டுக்கு என்னோட ஜாயின் பண்ணிக்கோ” உறுதியாய் சொன்னது ஆணையிடுவது போல் பட்டது காதம்பரிக்கு.

“இல்ல… அவ்வளவு சீக்கிரம் என்னால் வர முடியாது” உடனே மறுத்தாள்.

ரெண்டெட்டில் வேகமாய் அவளருகே வந்து அவளது இதழ்களை தனது வலதுகை ஆள்காட்டி விரலால் வருடியவன்

“இந்த செர்ரி லிப்ஸ் என்னம்மா பொய் சொல்லுது. எட்டுமணிக்குத் தெரு முனையில் நின்னு குடிக்கிற ஸ்ட்ராபெரி மில்க்கை என்னோட சேர்ந்து குடி”

இவன் எங்கே என்னைப் பார்த்தான் திகைத்தவளிடம்

“என்னால… என் ப்ராஜெக்டால… நீ சாப்பிடாம, தூங்காம உடம்பு கெட்டுப்  போறதை அனுமதிக்க மாட்டேன். இனிமே காலைல எட்டரைக்கு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே பிரேக்பாஸ்ட் சாப்பிடுறோம்….. பை செர்ரி.  ” என்று உறுதியான குரலில் சொல்லிவிட்டு, அவளது கன்னத்தில் தட்டிவிட்டு நகர்ந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: