Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 4’

காப்பி ஷாப்பில்…

“ஒரு எக்ஸ்பிரஸோ” என்று ஆர்டர் செய்தவுடன் சூடான டபுள் ஸ்ட்ராங் கருப்பு டிகாஷனை சிறிய கோப்பையில் கொடுத்தான் பரிஸ்டா. சர்க்கரை இல்லாத அந்த கடுங்காப்பியைப் பருகி தனது மனதின் கசப்பைக் குறைக்க முயன்றாள் காதம்பரி.

காலையிலேயே டென்சனில் சரியாக உண்ணவில்லை. ஆரஞ்சு பழச்சாறு மட்டுமே பருகியிருந்தாள். இப்போது மதியம் மூன்று மணி. பசியில் கூக்குரலிடும் வயிறுக்கு உணவு தரத் தோன்றவில்லை. இன்னொரு காப்பியை வாங்கி அருந்தினாள். பின் விளையாட்டைத் தொடர்ந்தாள். அவளது மனதின் வேகத்தை பின்னை வீழ்த்துவதில் காட்ட, ஒவ்வொரு முறையும் கணிசமான பின்கள் வீழ்ந்தன. அந்தப் பின்னின் இடத்தில் வம்சி இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியபடி த்ரோவில் வேகத்தைக் கூட்டினாள். பத்தும் வீழ்ந்த சமயம்.

“வாவ், பெர்பெக்ட் ஸ்ட்ரைக்” என்ற குரல் அவள் முதுகுக்குப் பின்னால் ஒலித்தது. காலையிலிருந்து அவளது மனதை சலனப்படுத்திக் கொண்டிருக்கும் அந்தக் குரலின் சொந்தக்காரனின் பாராட்டு எதிர்பாராத நேரத்தில் ஒலித்து அவளைத் திகைக்கச் செய்தது.

எதிர்பக்கம் பதில் வராததைக் கண்டு அவனே தொடர்ந்தான்.

“காதம்பரி நீ இங்கே இருக்கிறதா உன் பிஏ கல்பனா சொன்னாங்க. உன்னுடன் ஜாயின் செய்துக் கொள்ளலாமா?” என்றதும் மறுக்கத் தோன்றவில்லை. ஆனால் சம்மதம் சொல்லவும் இல்லை. ஆனால் அவள் மௌனத்தையே சம்மதமாக எடுத்துக் கொண்ட வம்சி தொடர்ந்தான்

“அப்பப்பா  என்ன வேகம்… ரொம்ப கோபமோ….. நான் அதுக்கு காரணமில்லையே”

“உங்க நம்பிக்கை தவறானதற்கு வருந்துகிறேன்”

பதிலுக்குப் புன்னகைத்தவன் “உன்னை கோபப்படுத்திருந்தா சாரி. நான் எதையும் ரீசன் இல்லாம செய்றதில்லை. ஆனால் காரணத்தை ஒவ்வொருத்தர் கிட்டயும் சொல்றது  என் பழக்கம் இல்லை. இப்போது கூட ஏன் உன்கிட்ட விளக்கம் சொல்றேன்னா நாம் இருவரும் அடுத்த சில மாதங்களுக்கு சேர்ந்து வொர்க் பண்ணனும். அதனால நம்மிடையே  எழும் கருத்து வேற்றுமைகளை  உடனடியாக தீர்த்து கொள்வது நல்லதுன்னு நினைக்கிறேன்”

‘என்னது இருவரும் சேர்ந்து வொர்க் பண்ணனுமா?… அப்படியென்றால்’ மகிழ்ச்சி மின்னலிட்டது காதம்பரியின் மனதில்.

“வம்சி…… அப்படின்னா…. இந்த ப்ராஜெக்ட்டை நாங்கதான் செய்யப் போறோமா”

என்ற கேள்விக்கு கவர்ச்சியாக சிரித்தான். அதே சமயம் அவன் முன்பே ஆர்டர் செய்திருந்த சாக்லேட் கேக் துண்டுகளை இருவருக்கும் வெயிட்டர் பரிமாற,

“என்ன ஒரு பெர்பெக்ட் டைமிங். இந்த நியூசை உன்கிட்ட சொல்லத்தான்  உன் ஆபிஸ்க்கு கால் பண்ணேன். நீ இங்கிருக்குறதா சொன்னாங்க. உன் விளையாட்டில் குறுக்கிடாம கேக் மட்டும் ஆர்டர் பண்ணிட்டு வந்தேன்.”

நம்ப முடியாமல் கேக்கினை ஸ்பூனில் விண்டு சுவைத்தாள் கேட். அந்த டேபிளில் அவள் அருந்தி வைத்திருந்த காலி காப்பிக் கோப்பைகளைப் பார்த்தவன்.

“நீ லஞ்ச் சாப்பிடலயா….”

“மூணு காபி குடிச்சேன். பசி அடங்கிடுச்சு”

அதிருப்தியாகப் பார்த்தவன் “நாட் அக்செப்ட்டபிள் காதம்பரி. வேளாவேளைக்கு சாப்பிடணும். சுவரிருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். ஓகே நம்ம ஜாயின் பண்ணதை ஒண்ணா சாப்பிட்டு கொண்டாடலாம்” அவளுக்கும் சேர்த்து  உணவு வகைகளை  ஆர்டர் செய்தான். அந்த ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி, இருட்டத் தொடங்கியிருந்த அந்த மாலை வேளையில், மும்பையின் அழகை ரசித்தபடி உணவு உண்டது மகிழ்ச்சியாகவே இருந்தது காதம்பரிக்கு.

அவள் தொழிலை நடத்த ஆரம்பித்த இவ்வளவு நாளில் கிடைத்த மிகப் பெரிய ஜாக்பாட் இது.

“நன்றி மிஸ்டர்.வம்சிகிருஷ்ணா”

“நீ வம்சின்னே கூப்பிடலாம்”

“வம்சி, உண்மையை சொன்னா மீட்டிங் முடிந்தவுடன் நீங்க சம்பிரதாயமாக சொன்ன வார்த்தைகள் எங்க டீம்க்கு பத்தல. வெறுப்போடத்தான்  உங்க ஆபிஸ்லேருந்து கிளம்பினோம். உங்களுக்குப் பிடிச்சதை இப்படித்தான் எக்ஸ்பிரஸ் பண்ணுவிங்களா”

மறுப்பாகத் தலையை அசைத்தான். “இரண்டு விஷயங்களை கிளியர் பண்ணிக்கலாம். முதல் விஷயம் இன்னைக்கு நடந்துட்ட மாதிரி நான் இதுக்கு முன்னாடி நடந்துட்டது இல்லை. அதுக்கு அவசரமா கிளம்பினேன்னு உன்கிட்ட கண்டிப்பா சொல்றேன். இரண்டாவது இனிமேல்  எனக்குப் பிடிக்காததை உடனே உன்கிட்ட சொல்லிடுவேன். நீ உன் தப்பை ரியலைஸ் பண்ணிட்டு, உடனே சரி செஞ்சுக்கணும். இல்லைன்னா ஒரு ருத்ரமூர்த்தியை பார்ப்ப. உன்கிட்ட என் கோப முகத்தைக் காண்பிக்க வேண்டாம்னு நினைக்கிறேன்”

பேச்சு கடினமாவதை உணர்ந்தவள் திசை திருப்பும் பொருட்டு “ஸோ…

எங்க ஆட் ப்ளான்ஸ் உங்களுக்கு பிடிச்சிருச்சு”

“பிடிச்சிருச்சா… நீ ஸ்டார்ட் பண்ணதும் உன் ஒவ்வொரு வார்த்தையையும்  பீல் பண்ணேன். என் மனசில என்ன நினைச்சிருந்தேனோ அதை அப்படியே ப்ளானா போட்டிருந்த. அதனால்தான்  மீட்டிங் முடிஞ்சதும்  என் பிஏகிட்ட மத்த ஆட் ஏஜென்ஸி மீட்டிங்க்ஸ் எல்லாம் கான்ஸல் செய்ய சொன்னேன்”

“கான்ஸல் செய்ய சொன்னிங்களா” ஆச்சிரியத்துடன் கேட்டாள்.

“ஏன் அந்த ஏஜென்சி மீட்டிங்கை அட்டென்ட் பண்ணிருக்கணும்னு சொல்றியா? தப்பு பண்ணிட்டேனோ” முகவாயில் கையை வைத்துக் கொண்டு யோசிப்பதைப் போல பாவனை செய்தான்.

வேகமாய் தலையசைத்து மறுத்தாள் “அதுக்கு அவசியமில்லைன்னு நினைக்கிறேன்”

“என் பிசினஸ் டெஸிஷன் சரின்னு ஒத்துக்கிட்டதுக்கு தாங்க்ஸ்” என்றவனின் பேச்சில் குறும்பு தெரிந்தது.

“ஓ காட்…  ரூபி நெட்வொர்க்கின் பிஸினெஸ் முடிவுகளை கமண்ட் பண்ற அளவுக்கு நான் இன்னும் வளரல” சிரிப்புடன் பதிலளித்தாள்.

இருவரும் தங்களது புதிய ப்ராஜெக்டைப் பற்றி விவாதித்தனர்.

“நாளைக்கு காலைல ஒன்பது மணிக்கு என் ஆபிஸ்க்கு வந்துடு. அக்ரீமென்ட், டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன், ப்ராஜெக்ட் ப்ளான்ஸ் எல்லாம் டிஸ்கஸ் பண்ணனும்” என்ற வம்சியின் வார்த்தைக்கு தலையசைத்துக் கிளம்பினாள். அவளது கார்க்கதவைத் திறந்துவிட்டு ஏறும் வரை காத்திருந்தவன் அந்த நிமிடத்தில் கண்ணியமான ஆணாக தோன்றியதில் வியப்பேதுமில்லை.

“காதம்பரி இருட்டிடுச்சு சேஃபா ஓட்டு”

“நான் சின்ன குழந்தையா”

“நான் அப்படி சொல்லலையே….. கண் இருக்குற எல்லாரும் நீ ஒரு மிக அழகான பொண்ணுன்னு   ஒத்துக்குவாங்க” என்றதும் அவளது கன்னங்கள் வெட்கத்தால் அவளையும் அறியாமல் சிவந்தன.

“ஆனாலும் காதம்பரி… அதுதான் எனக்கு பயமே. வீட்டுக்குப் போனதும் என் மொபைலுக்கு மெசேஜ் பண்ணு” என்று சொல்லி கையசைத்து விடை கொடுத்தான்.

‘இவனைக் காலையில்தான் சந்தித்தோம். அதற்குள் எப்படி இத்தனை நெருக்கமாக உணர்கிறேன்’ என்று சிந்தித்தபடி வண்டி ஒட்டியவளுக்கு மறுநாளுக்குத் தேவையான சாமான்கள் இல்லாதது நினைவு வந்தது. வழியில் சூப்பர் மார்கெட்டில் பால், தயிர், பிரட், முட்டை போன்ற அத்யாவசிமான பொருட்களை வாங்கிக்கொண்டு  வீட்டினை வந்தடைந்தாள்.

பொருட்களை பிரிட்ஜில் அடுக்கிவிட்டு, இரவு உடை மாற்றிவிட்டு படுக்கைக்கு வந்ததும் ரூபி நெட்வொர்க் ப்ராஜெக்ட் பற்றிய  தகவலை கல்பனாவிடம் சொல்லலாம் என்ற எண்ணம் உதிக்க, செல்லைக் கைப்பையிலிருந்து எடுத்துப் பார்த்தவள் அதிர்ந்தாள். வம்சியிடமிருந்து ஐந்து மிஸ்டு கால்கள். கடைசியாக ஒரு குறுஞ்செய்தி.

‘நீ கிளம்பி வெகு நேரமாகிவிட்டது. இந்நேரம் வீட்டை அடைத்திருக்க வேண்டும். இந்த செய்தி கிடைத்ததும் உடனடியாக பதில் அனுப்பு’

அவசர அவசரமாக பதில் அனுப்பினாள்.

‘மன்னியுங்கள் வம்சி. நான் பத்திரமாக வீட்டை அடைந்துவிட்டேன்’

அடுத்த நிமிடம் அவனிடமிருந்து பதில் வந்தது.

‘நல்லது.. ஆனால் நான் ஒன்றை செய்ய வேண்டும் என்று சொன்னால் அதைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பேன்’

என்ற அவனது செய்தியைப் படித்ததும் விளங்க முடியாத உணர்வு காதம்பரியிடம்.

‘இவன் என்ன நினைச்சுட்டு இருக்கான். எனக்கு வெனிலா கஸ்டர்ட் கேக்தான் பிடிக்கும். இவன் என்னடான்னா சாக்லேட் கேக் ஆர்டர் செய்திருந்தான். சாப்பாடும் அவன் இஷ்டத்துக்குத்தான். இருந்தாலும் கர்ட்டசிக்காக மறுப்பே  சொல்லாம சாப்பிட்டேன்.  இப்ப என்னடான்னா நான் என்ன செய்யணும் ஏது செய்யணும்னு அவனே டிஸைட் பண்றான். இவன் எப்பயிலிருந்து எனக்கு கார்டியனா மாறினான்’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: