Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 3’

ந்தக் கருநீல மீட்டிங் சூட் கேட்டின் உடலைக் கச்சிதமாய் கவ்வியிருந்தது. மிகச் சிறிய வைரத் தோடு, அதே டிசைனில் சிறிய பென்டன்ட் மற்றும் கையில் ரோலக்ஸ் வாட்ச். பார்ப்பவர் கண்ணைக் குத்துவது  போன்ற  லிப்ஸ்டிக்கும் முகப்பூச்சும் அவளுக்கு அறவே பிடிக்காது என்பதால் மிக லேசான பூச்சு. கண் இமைகளில் மை. இயற்கையான ரோஜா இதழ்களை மேலும் எடுத்துக் காட்டும் அதே நிற லிப்ஸ்டிக் பூசிக்  கொண்டாள்.

அலுவலகத்தில் அவர்கள் குழு வம்சிகிருஷ்ணாவை சந்திக்கக் கிளம்பியது.

“இந்த வம்சி இவ்வளவு பெரிய கம்பனி ஆரம்பிக்க நல்ல பின்புலம் வேணுமே” என்று கல்பனா கேட்க, விக்ரம் பதிலளித்தான்.

 

“வம்சி கிருஷ்ணா எடின்பரோ யுனிவர்சிட்டில படிச்சிட்டு, யூரோப்ல டாப் க்ளாஸ் மீடியா கம்பனிஸ்ல வொர்க் பண்ணிருக்கான். அந்த அனுபவத்தில் ஒரு கம்பனி ஆரம்பிச்சு எஸ்டாபளிஷ் பண்ணிருக்கான். இந்தியாவில் ஏற்கனவே சில நிறுவனங்களில் வம்சியின் பங்கு தவிர்க்க முடியாததா இருக்கு. வெளிநாட்டு நிறுவனங்கள் பொறுப்பை பார்ட்னர்ஸ் கிட்ட ஒப்படைச்சுட்டு தன்னோட  காலடியை நேரடியா இந்திய சந்தையில் பதிக்கும் உத்தேசத்தோட ரூபி நெட்வொர்க்சை ஆரம்பிச்சிருக்கான். இன்னும் ஐந்து வருடத்தில் ரூபி ஒரு மிக முக்கியமான இடத்தில் இருக்கும்னு இண்டஸ்ட்ரில நிபுணர்களின் ஆருடம்”

 

அவனைப் பற்றிய செய்திகள் தந்த சுவாரஸ்யத்தில் ரூபி நெட்வொர்க் வந்ததே தெரியவில்லை. மும்பை நகரிலிருந்து சற்று ஒதுக்குப்புறமாய் இருந்தது ஓவல் வடிவத்திலிருந்த அந்த கண்ணாடி மாளிகை, ரூபி நெட்வொர்க்கின் அலுவலகம். ஜிம், கேபிடேரியா, விளையாட டென்னிஸ் கோர்ட், லாண்டரி செய்யுமிடம் என்று சகல வசதிகளும் கொண்ட சின்ன மால் போல் தோன்றியது.

“நாள்கணக்கா இருந்தாலும் வெளியவே போக வேண்டாம் போலிருக்கு. என்ன ஒரு பாஷ்” சிலாகித்தாள் கல்பனா

“கேரட்டைக் காட்டி குதிரையை ஓட வைக்கிறது மாதிரி உனக்குத் தேவையான எல்லாத்தையும் உன் உள்ளங்கை அருகேயே கொண்டுவந்து வேலை வாங்குறது. இப்போதைய பன்னாட்டு நிறுவனங்கள் இந்த வழியைத்தானே பின்பற்றுது”

கண்ணாடி சுவற்றின் வழியே நீலக்கடல் துல்லியமாய் தெரிந்தது. சூரிய வெளிச்சம் கடலின் மேல் பளிச்சிட்டது. என்ன அற்புதமான ஒரு காட்சி. இந்த கட்டிடத்தை வடிவமைத்தவன் மிகுந்த ரசனையுள்ளன்தான். கேட்டின் ரசனையை “ஹஹாங்…” செருமிக் கலைத்தாள் கல்பனா. மிக மெதுவாக திரும்பியவளின் பார்வையில் மாடியிலிருந்து  நீளமான கால்களுடன் கம்பீர நடையுடன் இறங்கிய அந்த இளைஞன் பட்டான்.

அந்த சார்கோல் கிரே நிற சூட் மற்றவர்கள் அணிந்திருக்கும்போது சீருடை போல தோன்றும். ஆனால் பிரத்யோகமான அந்த டிஸைனர் சூட் அதுவும் அந்த நிறம் அவனைத்தவிர வேறு யாருக்கும் அத்தனைக் கச்சிதமாகப் பொருந்த வாய்ப்பில்லை. அவனது பிஏவுடன் உரையாடியபடி நடந்து வந்தவன் கண்டிப்பாக வம்சிகிருஷ்ணாவேதான். வீடியோவில் பார்த்ததை விட பலமடங்கு கம்பீரமாக இருந்தான்.

“கேட்… மிஸ்டர். வம்சிகிருஷ்ணா” என்று அறிமுகப் படலம் நடந்ததும் அவளது கைகளைப் பற்றிக் குலுக்கினான்.

“நைஸ் டு மீட் யூ… “  என்று சம்பிரதாயமான பேச்சுக்கள் முடிந்தது.

“கேட்.. முழு பெயர் கேத்தரீனா?” இதுதான் அவன் முதலில் கேட்ட கேள்வி

“காதம்பரி… ஆனா சின்ன வயதிலிருந்தே கேட்ன்னு தான் எல்லாரும் கூப்பிடுவாங்க“

அவளது பதில் அவன் இதழ்களில் புன்னகையை மலர செய்தது. “காதம்பரியே அழகா இருக்கே. நான் அப்படிதான் கூப்பிடப் போறேன்”

“உங்க விருப்பம்”

“மீட்டிங் ரூம் போலாமா” என்றபடி அவளை அழைத்து சென்றான். அரைமணிக்கு முன்னரே அவளது குழுவினர் ப்ராஜெக்ட்டரை செட் செய்திருந்தனர்.

இவனது ஒவ்வொரு செயலிலும் தான் வேண்டுவதை செய்ய வைக்கும் உறுதி தெரிகிறது. கவர்ச்சியான அழகனாய் வேறு தெரிகிறான். இவன் முன்னாடி ஒரு விஷயத்தையும் மறக்காம ப்ரெசென்ட் பண்ணனும். என்று மனம் ஒரு புறம் பதற, ‘மயங்கி நிக்க நீ என்ன டீன் ஏஜ் பொண்ணா…. கேட் இந்த பிஸினெஸ்க்காக எத்தனையோ நாள் ராப்பகலா உழைச்சிருக்க. கடைசி நேரத்தில் சொதப்பிடாத. இந்த சந்தர்ப்பத்தை விளையாட்டா எடுத்துக்காத. கெட் யுவர் ஹெட் இன் த கேம்’ என்று மறுபுறம் எச்சரித்தது.

கான்பரன்ஸ் ஹாலில் ரூபியின் சார்பில் வம்சி மட்டுமே இருந்தான்.

“மிஸ்டர்.வம்சிகிருஷ்ணா உங்களது குழுவில் மத்தவங்க வரும் வரை காத்திருக்கலாமா?”

“நான் மட்டும்தான் காதம்பரி” என்றதும் கேள்வியில் அவளது புருவம் உயர்ந்தது.

“ரூபி நெட்வொர்க் என்  கம்பனி. அதற்கு என்ன தேவைன்னு  எனக்குத் தெரியும். உன் கம்பனி எந்த வகையில் எனக்கு உதவப் போகிறது என்பதை இன்னும் கொஞ்ச நேரத்தில் கெஸ் பண்ணிடுவேன். இதற்கு நடுவில் மார்க்கெட்டிங் ஆளும், ஆமாம் சாமி கூட்டமும் அவசியமில்லையே” என்று தனது ட்ரேட் மார்க் சிரிப்பை சிந்தினான்.

‘யப்பா… இப்படி அடிக்கடி சிரிக்காதடா, என் பாய்ண்ட்ஸ் எல்லாம் மறந்துடப் போகுது…’ தன் மயக்கத்தைப் புறம் தள்ளிய காதம்பரி உரையை ஆரம்பித்தாள். அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு அவளது குரலையும், க்ளிக் ஓசையையும் தவிர வேறு ஒரு சத்தமும் இல்லை.

வம்சியின் முன்னே செல்போன், ஐபேட், லேப்டாப் என்று எந்த ஒரு எக்ஸ்ட்ரா விஷயங்களும் இல்லை. ஒரு சிறிய பேப்பர் மற்றும் பென்சில். அதில் சில வார்த்தைகள் மட்டும் குறித்துக் கொண்டான். இரண்டு மணி நேரமும் செல்லில் குறுஞ்செய்தி அனுப்புவது, போனில் பேசுவது போன்ற எந்த ஒரு எரிச்சலூட்டும் வேலைகளையும் செய்யாமல். அந்த மீட்டிங்கின் முழு விவரத்தையும் அப்படியே கிரகித்த விதம் காதம்பரியை மிகவும் கவர்ந்தது.

கேட் இதற்கு முன்பே அவன் ஒரு பர்பெக்ஷனிஸ்ட் என்று கேள்விப் பட்டிருக்கிறாள். ஆனால் ஒவ்வொரு வினாடியும் நேரில் கண்டாள்.

“காதம்பரி நான் இன்டர்நெட் பிளாட்பார்மில் தரப்போறேன்னு சொல்லவே இல்லையே. வழக்கமான செட்டாப் பாக்சா கூட இருக்கலாமே”

“சில வாரங்களுக்கு முன்னால் இன்டர்நெட் நிறுவனத்தில் முக்கியமான ஒருத்தர் கூட கோல்ப் விளையாடப் போனிங்கன்னு செய்தி கிடைச்சது. அந்த சந்திப்பு விளையாட மட்டும்தான்னு நான் நம்பல. அதுவுமில்லாம புதுசா ஏதாவது செய்யலைன்னா ரூபி நெட்வொர்க் காணாமப் போயிடும்”

மெச்சுதலாய் புன்னகைத்தான். அதன்பின் அவளது உரையிலேயே அவன் முழு கவனமும் இருந்தது.

செவ்வனவே அனைத்தும் நடந்து முடிந்தது. அவனுக்கு திருப்தியா என்று இன்னமும் கணிக்க முடியவில்லை. இருக்கையை விட்டு வேகமாய் எழுந்தவன்

“நன்றி காதம்பரி. பிரெசென்டேஷனில் உன்  குழுவின் உழைப்பு தெரிஞ்சது. ஆனால் மன்னிக்கவும் இப்பொழுது மிக முக்கியமான வேலை இருக்கிறது. விரைவில் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்” என்று சொல்லி மின்னல் வேகத்தில் அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டான்.

கல்பனாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“கேட்… இவன்.. “ மேலும் என்ன சொல்லி இருப்பாளோ

“ஷ்… கல்பனா… அமைதியா எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு  கிளம்புங்க. இந்த ஆபிசை விட்டு அஞ்சு கிலோமீட்டர் தொலைவு போற வரை ஒரு சத்தமும் வரக்கூடாது. ” என்ற காதம்பரியின் குரல் அனைவரின் சலசலப்பையும் கட்டுப்படுத்தியது.

ரூபி நெட்வொர்க் அலுவலகத்தை காம்பௌன்ட் சுவரைத் தாண்டி சரியாக ஐந்து கிலோமீட்டர் தொலைவு சென்றதும் கோபத்தில் வெடிக்க ஆரம்பித்தாள் கல்பனா.

“எத்தனை நாள் உழைப்பு…. எல்லாம் வீணாயிடுச்சே”

“நமக்கு அடுத்தபடியா ‘ஹச்டி ஆட்’ல ப்ரெசென்ட் பண்ணப் போறாங்க போலிருக்கு. நம்மை விடப் பலமடங்கு பலம் பொருந்திய கம்பனி. எப்படியாவது வாங்குவதில் குறியாயிருப்பாங்க”

“ஆமாம் மாடல் பொண்ணு ஒருத்தியை ப்ரசென்டேஷனுக்குக் கூட்டிட்டு வந்திருக்காங்க. அவ எதுக்கும் தயாரா வந்திருக்கா. வம்சியை எப்படியாவது கவுக்கத் திட்டம்” விரக்தியாய் புன்னகைத்தான் மார்கெடிங் மேனஜேர் ராகவ்.

அலுவலகத்தின் முன் காரை நிறுத்திய காதம்பரி அனைவரும் இறங்கும்வரை காத்திருந்தாள். பின்னர் கல்பனாவிடம் “கல்பனா நான் பௌலிங் போயிட்டு வரேன். எல்லாத்தையும் நீ பார்த்துக்கோ. ஏதாவது ரொம்ப அவசரம்னா கூப்பிடு”

“கேட்… கவலைப்படாதே இந்த ஆட் இல்லைன்னா இன்னொண்ணு.”

“பச்… நான் அதை நினைச்சு வருத்தப்படல. இவ்வளவு நாள் கஷ்டப்பட்டிருக்கோம். ரெண்டு மணி நேரம் ப்ரெசென்ட் பண்ணிருக்கோம். நம்ம யூகிச்சது, வடிவமைச்சது எல்லாம் சரியா தப்பான்னே தெரியல. அவன் எப்படி இருக்குன்னு சுருக்கமாவாவது சொல்லிருக்கலாம். நம்ம அப்ரோச் தப்பா இருந்தால் உடனே திருத்திருப்பேன் ”

“சரி… இன்னைக்கு சாயந்தரம் ஜான்கிட்ட தொடர்பு கொண்டு ஏதாவது விவரம் சேகரிக்க முயற்சி செய்றேன்”

“விடு கல்பனா…. எப்படியும் தன்னால தெரியப் போகுது. ஏன் அனாவசியமா குழப்பிட்டு. சரிப்பா… நான் பௌலிங் விளையாடிட்டு நேரா வீட்டுக்குப்  போறேன். நாளைக்கு ஆபிஸ்ல பார்க்கலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: