கபாடபுரம் – 27

27. பெரியபாண்டியரின் சோதனை

 

    • கண்ணுக்கினியாளின் நெய்தற்பண்ணைப் பற்றிச் சாரகுமாரன் வியந்து கூறியதைக் கேட்டுச் சிகண்டியாசிரியரும் அதனைக் கேட்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். அவருடைய விருப்பத்தைச் சாரகுமாரனால் மறுக்க இயலவில்லை. மறுநாள் வைகறையில் சிகண்டியாசிரியரையும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்றான் அவன். ஆனால் முன் தினம் சென்றது போல் ஆசிரியரையும் உடன் அழைத்துக் கொண்டு அவனால் புரவியில் செல்ல முடியவில்லை.

 

    • எனவே அரண்மனை இரதம் ஒன்றில் ஆசிரியரை அழைத்துச் சென்றிருந்தான் அவன். விடிந்ததும் அரசக்கிருகத்து இரதங்களைச் சுற்றிப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த வெண்தேர்ச்செழியர் ஓர் இரதம் குறைவதைக் கண்டு முடிநாகனிடம் வினாவினார். முடிநாகனும், இளையபாண்டியனும், சிகண்டியாசிரியரும் கடற்கரைப் புன்னைத் தோட்டத்துக்கு இரதத்தில் சென்றிருக்கும் செய்தியை அவரிடம் தெரிவிக்கும்படி ஆயிற்று. தவிர்க்க முடியவில்லை. ஏற்கனவே கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் ஒரு பாண்மகளின் இசைக்கூத்தை இளையபாண்டியன் இரசித்து வியந்ததை மாறுவேடத்தில் சென்று கண்டிருந்த பெரியபாண்டியர் அதனால் சினமுற்றிருந்தார். இன்று சிகண்டியாசிரியரும் இளையபாண்டியனோடு சென்றிருப்பதை அறிந்து அவருடைய ஐயப்பாடு அதிகமாயிற்று.

 

    • “இவ்வைகறை வேளையில் சிகண்டியாசிரியரையும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு எதற்காகச் சென்றான் சாரகுமாரன்?” என்று அவர் கடுகடுப்போடு வினாவியபோது முடிநாகன் தயங்கித் தயங்கி மறுமொழி கூறினான். ஆயினும் பெரியபாண்டியர் சந்தேகத்தோடுதான் திரும்பினார்.

 

    • “சிகண்டியாசிரியர் திரும்பியதும் அவரை நான் காணவேண்டும் என்று சொல்” எனக் கூறிவிட்டுத்தான் திரும்பினார் அவர். என்ன நேருமோ என்ற பயத்தில் முடிநாகனுக்கு நெஞ்சு படபடத்தது. இளையபாண்டியரையே கூப்பிட்டு விசாரணை செய்தாலும் ஏதாவது கூறித் தப்பித்துக் கொள்வார். சிகண்டியாசிரியரைக் கூப்பிட்டு விசாரித்தால் அவர் பெரியபாண்டியரிடம் பொய் சொல்ல மாட்டார். அவர் பொய் சொல்லாவிட்டால் இளையபாண்டியரின் மேல் பாட்டனாருக்குத் தாங்க முடியாத சினம் மூளுமே என்று எண்ணி அஞ்சினான் முடிநாகன். இளையபாண்டியர் அதைப் பெரியவரிடம் தான் சொன்னதற்காகத் தன்மேற் சினந்து கொள்வாரோ என்ற பயம் கூட முடிநாகனுக்கு இருந்தது. தேரில் கடற்கரைக்குச் சென்றிருந்த சிகண்டியாரும், சாரகுமாரனும் திரும்பி வருகிறவரையில் அரசகிருகத்து தேர்கள் நிறுத்தப்படுகிற இடத்திலேயே அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தான் முடிநாகன்.

 

    • நன்றாக விடிந்து சில நாழிகைகள் கழிந்த பின்பே அவர்கள் சென்றிருந்த தேர் திரும்பி வந்தது. உடனே முடிநாகன் இளையபாண்டியனை மட்டும் ஒரு கணம் தனியே அழைத்துப் பெரியவர் தேர்களைப் பார்க்க வந்திருந்ததையும், நடந்த பிற விவரங்களையும் கூறினான். இளையபாண்டியனால் முடிநாகனிடம் கோபித்துக் கொள்ள முடியவில்லை. சிகண்டியாசிரியரிடம் பெரியவர் வினாவினால் அவருக்குச் சந்தேகம் வராதபடி மறுமொழி கூறுமாறு சொல்லிவிட முடிவு செய்தான் அவன். தேரை அரசகிருகத்தின் தேர்ச்சாலையில் விட்டு விட்டு இருவரும் அரண்மனைக்குள்ளே செல்ல இருந்த நிலையில் முடிநாகன் “பெரியபாண்டியர் தங்களைக் கண்டு பேச விரும்பினார்” என்று சிகண்டியாசிரியரிடம் தெரிவித்தான். சிகண்டியாசிரியரும் அதைக் கேட்டுத் தாமே பெரியபாண்டியரைக் காண்பதாக அவனிடம் கூறிச் சென்றார். அப்படிச் செல்லும்போது குறிப்பறிந்த சாரகுமாரன் அவருடன் செல்லவில்லை. சிகண்டியாசிரியரைக் கண்ணுக்கினியாளின் தெய்வீக இசையைக் கேட்கச் செய்துவிட்ட பெருமையில் இருந்தான் இளையபாண்டியன். பாட்டனாரிடம் சிகண்டியார் விபரீதமாக எதுவும் கூறிவிட முடியாது என்பதில் அவனுக்கு நல்ல நம்பிக்கையும் இருந்தது.

 

    • சிகண்டியார் பெரியபாண்டியரைச் சந்திக்கச் சென்ற போது பெரியபாண்டியர் எதற்காகவுமே சிறப்பான காரணத்திற்காக அவரைக் காண விரும்பியது போல் பேசாமல் பொதுவான பல செய்திகள் பற்றிப் பேசினார். இசை நூல்கள், இளையபாண்டியனின் இசைப் பயிற்சி, குருகுலவாசத்தை முடித்து அவனுக்கு அரசியல் அனுபவங்களை உணர்த்த, எல்லாவற்றையும் பற்றிக் கூறிக் கொண்டே வந்தவர் இறுதியில் இளையபாண்டியனும் அவரும் தேரில் போயிருந்ததைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டுச் சிகண்டியாரின் முகத்தைக் கூர்ந்து நோக்கினார்.

 

    • “ஓ! அதுவா? நெய்தற் பண்ணைப் புதுப்புது நுணுக்கங்களுடன் பாடும் பாண்மகள் ஒருத்தி கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் இருப்பதாக அறிந்து காண்பதற்குச் சென்றோம். அந்தப் பாண்மகளின் குரல் இலக்கணங்களை மீறிய அழகுடையதாயிருந்தது. அந்தக் குரலுக்கே ஓர் இலக்கணத்தைப் படைக்கலாம் போல அத்தனை அழகுடையதாயிருந்தது” என்று வியந்தவாறே பெரியபாண்டியருக்கு மறுமொழி கூறினார் அவர்.

 

    • “உங்களுக்கு முன்பே தெரிந்த அவளைக் காண இளையபாண்டியனை நீங்கள் அழைத்துச் சென்றீர்களா? அல்லது அவளை முன்பே அறிந்த இளையபாண்டியன் அவளைக் காண உங்களை அழைத்துச் சென்றானா?”

 

    • இதற்குச் சில கணங்கள் மறுமொழி சொல்லத் தயங்கினார் சிகண்டியார்.

 

    • “சிறப்பான காரணம் எதற்காகவும் இதை வினவவில்லை சிகண்டியாசிரியரே! அறிவதற்காகவே வினாவுகிறேன்” என்று அவரை மேலும் தூண்டினார் பெரியவர். “இளைய பாண்டியர் முன்பே பலமுறை அந்த அபூர்வ இசையைக் கேட்டு என்னிடம் பெருமையாகக் கூறியதால் தான் நானும் சென்றேன். நான் படைத்துவரும் இசை நுணுக்க நூலுக்குப் பெரிதும் பயன்படும் அனுபவம் அது” என்று நிர்விகல்பமாக மறுமொழி கூறிவிட்டார் அவர்.

 

    • “அப்படியானால் நானும் அந்தப் பாண்மகளின் இசையைக் கேட்க ஆசைப்படுகிறேன். நாளை என்னை அழைத்துச் செல்வீரா?” – என்று உள்ளடக்கமான குரலில் சிகண்டியாரைக் கேட்டார் பெரியபாண்டியர்.

 

    • சிகண்டியார் தயங்கினார். “வேறொன்றுமில்லை! நல்ல இசையை நானும் பாராட்டலாமே என்றுதான்” என மேலும் வேண்டினார் பெரியவர்.

 

    இசைபோன்ற நுண்கலைகளில் விருப்பமே அதிகமில்லாத பெரியபாண்டியர் திடுமென்று இப்படிக் கேட்டதில் ஏதோ விபரீதமிருப்பதாக அப்போதுதான் சிகண்டியாருக்குப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் தட்டிக் கழிக்க முயன்றார். பெரியபாண்டியரோ பிடிவாதமாக அந்தப் பாண்மகளைத் தானும் பார்த்தே தீரவேண்டுமென்றார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 1கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 1

வணக்கம் தோழமைகளே! ‘காதல் யுத்தம்’ என்ற புதினத்தின் மூலம் நமது தளத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் திரு.கணபதி அவர்களை வரவேற்கிறோம்.  கதையின் கதாநாயகன் விஷ்ணுவை வெறித்தனமாக விரும்பும் கவிதா, ஆனால் தான் கனவில் மட்டுமே தோன்றிக் கண்ணாமூச்சி காட்டும் கனவுக்கன்னியைத் தூரிகையில் சிறைபிடித்துக்

வார்த்தை தவறிவிட்டாய் – 1வார்த்தை தவறிவிட்டாய் – 1

ஹலோ பிரெண்ட்ஸ், எல்லாருக்கும் தசரா வாழ்த்துக்கள். உங்களது வரவேற்புக்கு நன்றி நன்றி நன்றி. முடிந்த அளவுக்கு சீக்கிரம் அப்டேட்ஸ் தர முயல்கிறேன். வித்யாசமான கதைகளுக்கு வரவேற்ப்பு தரும் உங்களது ரசனையில் நம்பிக்கை வைத்து இந்தக் கதைக்களத்தை முயன்றுள்ளேன். நமது கதாநாயகி பானுப்ரியாவை