Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 12

வர்ன்மென்ட் ஹாஸ்பிடல், சுத்தம் என்பது பெயரளவிற்கு கூட இல்லாமல் தரையெல்லாம் அழுக்கு படிந்து, சுவரெங்கிலும் பாசி படர்ந்து பாழடைந்த வீடு போல் காட்சி தந்தது. ஹாஸ்பிடலின் முன் பகுதியில் அவுட் பேஷன்ட் கூட்டம் அலை மோதிட, வருண் இறுக்கமான முகத்துடன் இன்ஸ்பெக்டரை பின் தொடர்ந்து சென்றான். இந்த இன்ஸ்பெக்டர் மட்டுமல்ல அந்த ஊரில் 80% பேர் சோம சுந்தரத்தின் தயவில் முன்னேறியவர்கள் என்பதால் அந்த குடும்பத்தின் மீதிருந்த நன்றி கடன் அவர்களை வருண் பக்கம் நிற்க வைத்தது. ஹாஸ்பிடலின் உள் பக்கமிருந்த இரண்டாவது பெரிய பில்டிங்கிற்குள் வருண் நுழைந்தான். தடுப்பு சுவறின்றி ஸ்கிரீனால் தடுப்பு அமைக்கபட்டு, வரிசையாக பேஷன்ட்கள் படுக்க வைக்க பட்டிருந்தார்கள்.

 

இன்ஸ்பெக்டர், “இங்கதான் சார் பத்தாவது நம்பர் பெட், பேரு ரவீந்திரன், வயசு 27, அப்பா இல்ல அம்மாவும் தங்கச்சியும் மட்டும்தான். ஒரு சின்ன கம்பெனில கிளர்க்கா வொர்க் பண்றான். இது வரைக்கும் வேலைல சின்ன பிளாக் மார்க் கூட கிடையாது.”

 

வருண், “நீங்க இங்கயே இருங்க இன்ஸ்பெக்டர், நான் போய் பாத்துட்டு வர்றேன்.”

 

கண்களில் குரோதம் கொப்பளிக்க வருண் பொறுமையாக ஸ்லோ மோஷனில் நடையிட்டு அந்த பெட்டினை சுற்றி வந்தான். அவன் பார்வை இரையினை கண்டதும் பதுங்கி பாய தயாராகும் புலியின் விழிகளை ஒத்திருந்தது. ரவியின் வலது கையில் டிரிப்ஸ் ஏறிட, தலையில் ஒரு பெரிய கட்டு போட்டிருந்தார்கள், அவனுக்கு காயங்கள் அவ்வளவே. அவன் நாளைக்கே கோமாவிலிருந்து எழுந்தாலும் பழைய படி வாழ முடியுமளவு திடமாக இருந்தான். அவனின் அம்மா பெட்டின் அருகில் அமர்ந்து மீளாத உறக்கத்தில் இருப்பவனுக்கு விசிறி கொண்டிருந்தார்.

 

வருணை கண்டதும் அவர் எழுந்து நின்று, “நீங்க ரவி ப்ரன்டா தம்பி, இவன் கூடதான் வேல பாக்குறீங்களா?” என்றார்.

 

உள்ளுக்குள் எரிமலை வெடித்தாலும் முகத்தில் பனிமலை போல குளுமை கொண்டு லேசாக ‘ஆம்’ என்று தலையசைத்தான்.

 

“பாருப்பா எப்டி கெடக்குறான்னு” என்று கோகிலா மூக்கை சிந்தி விட்டு, “டாக்டரு எல்லாம் என்னென்னவோ சொல்றாக, எனக்கு அவுக சொல்றதே ஒண்ணும் புரிய மாட்டிக்குது. இவன இப்புடி வச்சுகிட்டு அடுத்து என்ன செய்ய போறோமுன்னும் தெரியல. ஏன் தம்பி, உங்க ஆபீசுல எதும் பணம் குடுத்து வுட்டாகளா?” என்றார்.

 

வருணுக்கு அவர்களுக்கு அவசரமாக பணம் தேவை என்று புரிந்து விட்டது. இருந்தும் அவர்களின் குடும்ப நிலையை தெளிவாக தெரிந்து கொள்ள கோகிலாவிடம் பேச்சு கொடுத்தான், “ஆபிஸ்லருந்து அமவுன்ட் வர இன்னும் நாள் ஆகும்னு நினைக்கிறேன். நீங்க வெளியில எங்கயும் ஏற்பாடு பண்ண முடியலயா?”

 

“நாங்க இந்த ஊருக்கு வந்து ரெண்டு மூணு வருஷம் தாம்ப்பா ஆவுது, இங்க எனக்கு யாரயும் தெரியாது. இவன நம்பித்தான் எங்க குடும்பமே ஓடுச்சு. இவன் படுத்ததும் வருமானத்துக்கும் வழியில்ல, ஆஸ்பத்திரி செலவும் வேற கூடிக்கிட்டே போகுது. வீட்ல இருந்த நகநட்டெல்லாம் அடகு வச்சாச்சு, இனிமே ஆபீஸ்ல இருந்து எங்களுக்கு எதாவது குடுத்தாத்தான் உண்டு. எல்லாம் அந்த பாவியால வந்தது, வயசுக்கு வந்த பொண்ணுனு புரியாம செல்லம் குடுத்தான், இப்ப சொன்ன பேச்சு கேக்காம திமிறெடுத்து திறியிறா. தங்கச்சி தங்கச்சின்னு அவ வச்ச வரிசைக்கெல்லாம் ஆடி, கடைசில இப்டி வந்து கிடக்குறானே…. இனிமே நடபொணமா கிடக்குற இவனையும் வயசுக்கு வந்த பொண்ணயும் வச்சுகிட்டு நான் என்ன செய்ய போறேன்னே தெரியல. கேக்குறேன்னு தப்பா நினச்சுக்காதீங்க தம்பி, பணத்துக்கு உங்களால எதாச்சும் உதவி செய்ய முடியுமா?”

 

பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக அத்தனை தகவலையும் தானே முன் வந்து தந்துவிட்டார். வருணுக்கு இதில் தேவையான மூன்று தகவல், பணம் தேவை, உதவிக்கு ஆளில்லை, தங்கை என்றால் அவனுக்கு உயிர்.

 

வருண், “நான் உங்ககிட்ட

ஒரு விஷயம் பேசனும், ஆனா இந்த சூழ்நிலைல சரியா இல்லையான்னு தெரியல”

 

“என்ன தம்பி?”

 

“நான் உங்க பொண்ண விரும்புறேன், நீங்க சரின்னு சொன்னா எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரமா கல்யாணத்த வச்சுக்கலாம். ஹாஸ்பிடல் பில் எல்லாத்தையும் நானே பாத்துக்கிறேன்.”

 

“தம்பி ரவி படுத்த படுக்கையா இருக்கான், தவிர எங்களுக்கு வீட்டு செலவுக்கே பணமில்ல, இதுல கல்யாண செலவ நான் எப்டி தாங்குறது?”

 

“நானும் ரவியும் ஏற்கனவே இதபத்தி பேசி இருக்கோம். பணத்த பத்தி நீங்க கவல படாதீங்க அடுத்த முகூர்த்தத்தில ஒரு கோவில்ல சாதாரணமா வச்சுக்கலாம்”

 

“சரிங்க தம்பி”

 

வருணால் சத்தியமாக நம்ப முடியவில்லை, தான் நினைத்தது இத்தனை சுலபமாய் முடியுமென்று. தன் பெயரை கூட தெரியாமல் பணம் என்றதும் தலையாட்டிய கோகிலாவை பார்த்து உள்ளுக்குள் கேலியாக சிரித்து கொண்டான். கோகிலாவின் கைகளில் தற்சமயம் செலவுக்காக சில ஆயிரங்களை தந்துவிட்டு வந்த சுவடின்றி நகர்ந்தான். அன்று மாலையே வருண் வரும் வெள்ளி கிழமை நல்ல முகூர்த்தம் இருப்பதாகவும், ஊருக்கு வெளியே ஒதுக்கு புறமாக இருந்த ஒரு கோவிலில் கல்யாண ஏற்பாடுகளை செய்து விடுவதாகவும் கூறிட, அத்தனைக்கும் கோகிலா சரி சரி என்று பதிலுரைத்தார்.

 

வெள்ளி கிழமை காலை குறிப்பிட்ட கோவிலில் வருண் தயாராக காத்திருக்க, கோகிலா தன் மகளை பட்டு புடவையில் அழைத்து கொண்டு வந்தார், சும்மா சொல்ல கூடாது அந்த பெண் நல்ல அழகிதான். கோவில் அவ்வளவு பெரியதில்லை என்பதால் தூரத்தில் நின்று அவர்களின் செய்கைகளை ஆரம்பித்திலிருந்து வருண் பார்த்து கொண்டே இருந்தான். உள் நுழைந்தவர்கள் சுவாமி சந்நதியில் அர்ச்சனை செய்து முடித்ததும், கோகிலா எதையோ கூறிட அந்த பெண் மறுத்து நின்ற இடத்திலேயே அமர்ந்து அழ தொடங்கினாள். கோகிலா மிரட்டியும் படியாதவள், இறுதியாய் ஏதோ சொல்லவும் கண்ணை துடைத்து கொண்டு எழுந்து நின்றாள். வருணை நோக்கி கோகிலா முன்னால் வர பின்னாலேயே கண்ணீரை அடிக்கடி துடைத்து கொண்டு அந்த பெண் தலை குனிந்து வந்தாள்.

 

அருகில் வந்ததும் தயங்கி நின்றவளை கோகிலாவே அழைத்து வந்து மணவறைக்குள் அமர்த்தி மாலையை அணிவித்தார். அந்த பெண் கண்ணீரை மறைக்க தலையை குனிந்து கொண்டிருக்க, கோகிலாவின் முகத்திலோ சொல்ல முடியாத அளவு சந்தொஷம். அதன்பின் பொறுமையாய் வருண் போய் அவளருகில் அமர்ந்தான். ஐயர் தாலி எடுத்து தந்ததும் அவள் பயந்து நடுங்கிட, வருண் சற்றும் அசராமல் அதை வாங்கி அவள் கழுத்தில் கட்டி விட்டான். அடுத்த நிமிடம் ஒரு பெரிய தொகையை வருண் கோகிலாவிடம் கொடுத்திட, மகளை வழியனுப்ப மறந்து பணத்தை சரிபார்க்க தொடங்கினாள்.

 

வருண், “வா…” என்ற ஒற்றை சொல்லுடன் முன்னால் சென்றிட, விதியே என அவன் பின்னால் ஓடிவந்தாள் இயலிசை. வெளியே வந்தவன் மாலையை கழற்றி கோவிலின் வலதுபுறம் இருந்த குப்பைக்கு நடுவே வீசி விட்டு தன் காரை நோக்கி நடக்க தொடங்கினான். அவன் செய்கையிலேயே பாதி நொறுங்கி இருந்தவள், பல லட்சம் மதிப்பு இருக்கும் அந்த காரை கண்டு இன்னும் நொறுங்கி போனாள்.

 

காரை ஸ்டார்ட் செய்த வருண், கோவில் வாசலில் அரண்டு நிற்கும் இயலிசை அருகில் வந்து காரை நிறுத்தி, “ஏறு…” என்றான். ஏதோ நடக்க தெரியாதவள் போல தத்தி தத்தி நடந்து வந்து உள் ஏறியவளை கண்டு அவன் முகத்தில் அத்தனை இளக்காரம். வேண்டுமென்றே காரை வேகமாக ஸ்டார்ட் செய்திட, இயலிசை பயத்தில் ஒருமுறை துள்ளி விழுந்து, கையில் கிடைத்ததை இறுக்கமாக பற்றி கொண்டு அமர்ந்திருந்தாள். வருண் நேராக பிரபாகரன் வீட்டிற்கு காரை செலுத்தினான்.

 

வீட்டில் பிரபாகரன் போன் பேசி கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தார், லதா அத்தை கிச்சனில் இருந்தார். தருண் ஏற்கனவே பள்ளிக்கு சென்றாகிவிட்டது, சிந்துவும் கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்தாள். வருண் கார் வாசலில் வந்து நின்றதும் வீட்டின் பிரம்மாண்டத்தை கண்டு அசந்து பயந்து கொண்டே இறங்கினாள் இயலிசை. வருணோ உடன் ஒருத்தி வந்ததை பற்றி கொஞ்சமும் நினைக்காமல் உள்ளே சென்று கொண்டு இருந்தான்.

 

தனக்கு உள்ளே என்ன காத்திருக்கிறதோ என்று பயந்து நடுங்கி கொண்டே உள்ளே நுழைந்தாள் இயலிசை. அவளை மாலையும் கழுத்துமாய் கண்டதும் அப்பட்டமான அதிர்ச்சி அவர்கள் மூவர் முகத்திலும்.

 

பிரபாகரன், “வருண் என்னடா பண்ணிட்டு வந்து நிக்கிற?”

 

“கல்யாணம்”

 

“எங்ககிட்ட சொல்லி இருக்க வேண்டியதுதான, ஏன்டா இப்டி அவசரப்பட்ட?”

 

“அவசரம்னு தோணுச்சு அதான்”

 

“இந்த பொண்ணு யாரு?”

 

“ரவீந்திரன் தங்கச்சி”

 

பிரபாகரனுக்கு புரிந்து விட்டது, “சிந்து நீ காலேஜ்க்கு போ, லதா இந்த பொண்ண உள்ள கூட்டிட்டு போய் எதாச்சும் சாப்பிட குடு, வருண் நீ என்னோட ரூமுக்கு வா”

 

லதா வந்து இயலிசையை ஒரு அறைக்கு அழைத்து சென்றார். திருதிருவென முழித்து கொண்டே லதாவின் பின்னால் போனாள், பாவம் அவளுக்கு அவர்கள் மூவரும் வருணுக்கு என்ன உறவென்று கூட தெரியவில்லை, ஆனால் தன்னை சுத்தமாக பிடிக்கவில்லை என்று மட்டும் தெளிவாக புரிந்தது.

 

லதா, “நீ இந்த ரூம் உள்ளயே இரு வெளிய வராத, நான் போய் சாப்பாடு கொண்டு வர்றேன்.”

 

இயல், “வேண்டாங்க, தண்ணி மட்டும் குடுங்க போதும்”

 

லதா அறைக்குள் இருந்த வாட்டர் பாட்டிலை நோக்கி கை நீட்டினார், இயல் முடியும் மட்டும் தண்ணீரால் வயிற்றை நிரப்பியதும் லதா பொறிந்து தள்ளினார், “அவன்தான் அறிவில்லாம கல்யாணம் பண்ணிக்கிறேன்னு தாலிய தூக்கிட்டு வந்தான்னா, உனக்குமா அறிவில்ல? முடியாதுன்னு சொல்லி இருக்கலாம்ல, ரெண்டு பெரும் எப்டி சேர்ந்து வாழ முடியும்னு கொஞ்சமாவது யோசிச்சு பாத்தியா?” என்று அவர் வாய்க்கு வந்ததெல்லாம் திட்டிவிட்டு செல்ல, இயலிசை தலையும் புரியாமல் வாலும் புரியாமல் நின்றிருந்தாள். அவளுக்குத்தான் வருணை பற்றியே தெரியாதே, பிறகெப்படி அவன் வாழ்ந்த வாழ்க்கையை தெரிந்து கொள்ள? இது எதுவரை போகுமென்று தெரியாமல் சோர்ந்து போய் பெட்டின் ஓரத்தில் அமர்ந்து கொண்டாள், அடுத்த அறையில் பிரபாகரனும் வருணும் காரசாரமாக பேசி கொள்வது அரை குறையாய் இங்கு வரை கேட்டது.

 

பிரபாகரன், “என்னடா நினச்சுட்டு இருக்க உன் மனசில? முன்ன பின்ன யோசிக்காம இப்டி பண்ணி வச்சிருக்க?”

 

“இல்ல மாமா, தெளிவா யோசிச்சுதான் செஞ்சிருக்கேன்”

 

“என்னத்த யோசிச்ச? அவள கல்யாணம் பண்ணதால, உன்னோட வாழ்க்கையையும் சேர்த்து பாழாக்கிட்டு வந்து நிக்கிறியேடா. நாங்கெல்லாம் நீ சிந்துவ கல்யாணம் பண்ணிட்டு தருண நல்லா வளத்து ஆளாக்குவன்னு நினச்சிட்டு இருந்தா, நீ இருக்குற நிம்மதியயும் தொலச்சிட்டு வந்து நிக்கிற. இந்து எப்பாரு உன்ன சின்ன புள்ளன்னு சொல்லுவா, அது சரியாத்தான் இருக்கு.”

 

இந்துவின் ஞாபகம் வந்ததும் வருண் முகம் இறுகிட, அவன் மீது பரிதாப பட்டு பிரபாகரன் கொஞ்சம் இலகுவாக, “டேய் வருண், பாவம்டா இந்த பொண்ண பாத்தாலே அப்பாவியா தெரிது. அவங்க அண்ணன் செஞ்ச தப்புக்கு இவளுக்கு போய் தண்டன குடுக்க போறியாடா? “

 

“இவளுக்கு மட்டும் இல்ல… இவளுக்கும் சேத்து”

 

“ஏன்டா புரிஞ்சுக்க மாட்டிக்கிற, நடந்து முடிஞ்சது ஒரு ஆக்ஸிடென்ட். ப்ளான் பண்ணி பண்றதில்ல, நிமிஷத்துல நடந்து முடியிர கோரம். இதுல யாரும் யாரையும் தப்பு சொல்ல முடியாது.”

 

“யார் சொன்னா விபத்துன்னு? இதுவும் கொலை தான். தண்ணி அடிச்சிட்டு தெரிஞ்சே டிரைவ் பண்றவன் ஒவ்வொருத்தனும் ஒரு குற்றவாளிதான். அந்த ரவி உச்சி வெயில்ல மூச்சு முட்ட குடிச்சுட்டு பைக் ஓட்டிருக்கான், அவனயும் அவன அப்டி விட்ட குடும்பத்தையும் நான் பாவம் பாக்கனுமா? அவனால எந்த தப்பும் செய்யாத என்னோட குடும்பமே போச்சே… ஏன் மாமா, அவனுக்கு ஆயுசுக்கும் வேணுங்கிற அளவு சரக்கு தர்றேன், லச்ச கணக்குல பணம் தர்றேன், என் குடும்பத்த அவனால திருப்பி தர முடியுமா? பொறக்க முன்னாடியே செத்து போன எங்க குழந்தைய ஒரே ஒருநாள் இந்த உலகத்துக்கு கொண்டு வர முடியுமா? முடியாதுல்ல…”

 

அவனில் இருந்த வெறியை உணர்ந்த பிரபாகரன் பதற்றமாய், “டேய், எக்குதப்பா எதுவும் செஞ்சு வச்சிடாதடா, உன்ன நம்பிதான் தருண் இருக்கான்…”

 

“கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிடுவேன்னு பயப்படுறீங்களா மாமா? நான் தருணவிட்டு எங்கயும் போக மாட்டேன், எனக்கும் எதுவும் ஆகாது, ஆனா அவங்க மூணு பேருக்கும் இனிமே என்ன வேணாலும் ஆகலாம்”

 

“இது சரியில்ல வருண். அந்த பொண்ணுக்கும் சிந்து வயசுதான இருக்கும், உங்க ரெண்டு பேர் பிரச்சனைல அவள ஏண்டா இழுத்து விடுறீங்க? என்னால மத்தவங்கள மாதிரி இத வேடிக்க பாத்துட்டு இருக்க முடியாது, இப்பவே அவள அவ வீட்டுக்கு கொண்டுபோய் விட்டுட்டு வந்திடுறேன்.”

 

“நான் அவள விடமாட்டேன் மாமா”

 

“வருண்…”

 

“உங்களுக்கு இந்து எப்டியோ தெரியாது, எனக்கு என்னோட இந்து கடவுளுக்கு சமானம், எங்க வீட்டோட மகாராணி அவ. அவளுக்கு அன்னிக்கி எவ்ளோ வலிச்சிருக்கும்? என் கண்ணு முன்னாடியே அருண் துடிதுடுச்சு செத்தானே, அதுக்கு காரணமான அவங்க மூணு பேரையும் நான் சும்மா விடமாட்டேன், இதுனால நீங்க என்ன வெறுத்தாலும் பரவாயில்ல மாமா. இனிமே நான் இங்க இருக்க விரும்பல, தருணயும் அவளையும் கூட்டிட்டு என்னோட வீட்டுக்கு கிளம்புறேன்” என்று சொல்லி கொண்டே தன் லக்கேஜை எடுத்து வைக்க தொடங்கினான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: