கபாடபுரம் – 25

25. மீண்டும் கபாடம் நோக்கி

 

    • தொடர்ந்து ஒரு திங்கள் காலம் தென்பழந்தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து பல தீவுகளையும், பலவிதமான மனிதர்களையும், பலவிதமான பழக்கவழக்கங்களையும் பலவிதமான ஒழுகலாறுகளையும் அறிந்து முடித்த பின்னர் கபாடபுரம் நோக்கிப் பயணம் திரும்ப முடிவு செய்தார்கள் அவர்கள். சில இடங்களில் மகிழ்ச்சியாக வரவேற்றார்கள். சில தீவுகளில் சாதுரியமாகத் தங்களை யாரென்று இனங்காட்டிக் கொள்ளாமலே தப்பிக் கரைசேர வேண்டியிருந்தது. இன்னும் சில தீவுகளில் ஒரு பற்றுமற்ற துறவிகளைப் போல நடிக்க வேண்டியிருந்தது. இப்படிப் பல துறையான அனுபவச் செல்வங்களைப் பெற்று முடிந்த மனநிறைவோடு திரும்பிய போது இளையபாண்டியனும், முடிநாகனும், கப்பல் ஊழியர்களும் கபாடபுரத்தை விரைந்து சென்று காணும் ஆர்வமும், மனவேகமும், பிரிவுணர்ச்சியும் உடையவர்களாயிருந்தனர்.

 

    • எனவே திரும்பும் காலையில் எந்தத் தீவிலும், அதிகமாகத் தங்காமல் அவசியமான சில தீவுகளில் மட்டும் தங்கி விரைந்து ஊர் திரும்பத் தொடங்கியிருந்தனர். ஒரே மூச்சாகப் பயணத்தைத் தொடர முடியாமல் அங்கங்கே அவசியமான சில இடங்களில் நிறுத்தி உணவுப் பொருள் முதலிய தேவைகளை மரக்கலத்தில் நிறைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இல்லையானால் எங்கும் நிறுத்தாமலே பயணத்தைத் தொடர்ந்திருப்பார்கள். ஊழியர்கள் மிகவும் சோர்ந்து களைத்துப் போயிருந்தார்கள். எப்பொழுது கரைசேரப் போகிறோம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள் அவர்கள். முடிநாகனும் இளையபாண்டியனும் ஒருவருக்கொருவர் ஆர்வத்தை மனம் விட்டுக் கூறிக்கொள்ளவில்லை என்றாலும் ஊழியர்களை ஒத்த அதே மனநிலையில் தான் இருந்தனர். தென் பாண்டி நாட்டுக் கரை நெருங்க நெருங்க அவர்கள் ஆர்வம் அதிகமாயிற்று. “யார் யாரிடம் எந்த எந்த அனுபவத்தை விவரித்துச் சொல்ல வேண்டும் என்பதில் இளையபாண்டியருக்கு அதிகக் கவனம் வேண்டும். பாட்டனாரிடம் இசையினால் கொடுந்தீவு மறவர்களின் மனத்தை மாற்றி வெற்றி கொண்ட நிகழ்ச்சியைக் கூறக்கூடாது. எயினர் தீவின் கலஞ்செய் நீர்க்களத்தின் நுணுக்கங்களை அறிய மேற்கொண்ட இராஜதந்திர நிகழ்ச்சிகளைப் பெரியபாண்டியரிடம் கூறினால் நாம் அவர்களை இசையால் மயக்கியது கோழைத்தனம் என்று கருதுவார் அவர். அதனால் தான் கவனமாயிருக்க வேண்டும் என்றேன்” என்றான் முடிநாகன். இளையபாண்டியனும் அவன் கூற்றை மறுக்காமல் ஒப்புக் கொண்டான்.

 

    • பொருநை முகத்துவாரத்தை ஒட்டினாற்போலிருந்த சிறுதுறைமுகத்தை நெருங்கி மரக்கலம் நங்கூரம் பாய்ச்சப்படுகிற நிலையை அடைந்தபோது சொந்த மண்ணில் இறங்கப் போகிறோம் என்ற ஆர்வம் மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. துறையில் இருந்தவர்களும், துறை ஊழியர்களும் ஆர்வத்தோடு இளையபாண்டியரின் மரக்கலத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டனர். செய்தியை அரணமனையிலுள்ளவர்களுக்குத் தெரிவிப்பதற்காக ஒருவன் அரண்மனைக்கு விரைந்தான்.

 

    • துறைமுகம் எங்கும் இளையபாண்டியர் திரும்பி வந்து விட்ட செய்தி ஒரு பரபரப்பையே உண்டாக்கியிருந்தது. துறையிலிருந்த வீரர்கள் ஓடோடிச் சென்று இளையபாண்டியனும், முடிநாகனும் அரண்மனைக்குச் செல்வதற்காக இரண்டு குதிரைகளை ஆயத்தம் செய்து கொண்டு வந்து நிறுத்தினர். அரண்மனை வாயிலில் தாய் திலோத்தமை இளையபாண்டியனுக்கு ஆரத்தி சுற்றித் திலகமிட்டு வரவேற்றாள். முதியபாண்டியர் ஆர்வத்தோடு அவனைத் தழுவிக் கொண்டு சில விநாடிகள் தன் பிடியிலிருந்து விடவே இல்லை. தந்தை அநாகுலனுக்கோ, தாய் திலோத்தமைக்கோ, மகனிடம் அளவளாவிப் பேச நேரமே அளிக்காமல் முதிய பாண்டியரே அவனைத் தம்மோடு அழைத்துக் கொண்டு போய்விட்டார். முடிநாகனும் உடன் சென்றிருந்தான். முதிய பாண்டியருடைய மந்திரக்கிருகத்தில் சிகண்டியாசிரியரும், அவிநயனாரும் கூட இருந்தனர். சிகண்டியாசிரியரைப் பார்த்தவுடனே அந்தக் கொடுந்தீவு அனுபவத்தைக் கூறுவதற்கு நா முந்தியது! ஆனால் பாட்டனாரும் உடனிருப்பதை எண்ணி அந்த உணர்வை அடக்கிக் கொண்டான் இளையபாண்டியன். முதிய பாண்டியருடைய வினாக்களுக்கும், குறுக்கு வினாக்களுக்கும் தடுமாறாமல் மறுமொழி கூறி அவருடைய மனத்திருப்தியைச் சம்பாதிப்பது மிகவும் சிரமமான காரியமாயிருந்தது. நல்ல வேளையாக முடிநாகனும் உடனிருந்தது ஓரளவுக்கு உதவியாக இருந்தது.

 

    • “எந்தத் தீவிலாவது குறிப்பாகத் தென்பாண்டி நாட்டின் மேலும், கபாடபுரத்தின் மேலும் முறுகிய பகை இருக்கிறதா?”

 

    • “பகை என்பதையே வேறு விதமாகவும் சொல்லலாம். நட்பும், விருப்பமும் இல்லை என்பதே பகையின் அடையாளம்தான். அந்தத் தீவிலுள்ளவர்கள் அவரவர்கள் தலைவனையே தங்கள் கடவுளாக வீர வணக்கம் புரிகிறார்கள். ஆடகத் தீவில் எங்களைத் துறையிறங்கவே விடாமல் மறுத்துவிட்டார்கள். எயினர் தீவில் கலங்கட்டும் தளத்தைக் காண்பித்து முடித்தபின் எங்கள் மேல் கடும் சந்தேகமுற்றுப் பல சோதனைகள் வைத்தார்கள். அவர்களை மீறித் தப்பி மேலே செல்ல நாங்கள் அரும்பாடுபட வேண்டியிருந்தது.”

 

    • “நமது கடற்படையை வலிமையுடையதாக்கி எப்போதாவது இந்தத் தென்பழந்தீவுகளை எல்லாம் கைப்பற்றி அடக்கிப் பாண்டி நாட்டினோடு சேர்க்க முயன்றால் வெற்றி கிடைக்குமா? கிடைக்காதா? உன் கருத்து என்ன?” என்று முதியபாண்டியர் கேட்டபோது அதற்கு இளையபாண்டியன் மறுமொழி கூறத் தயங்கி இருந்தான். ஆனால் முடிநாகன் உடனே முன் வந்து, “முதியபாண்டியர் திட்டமிட்டு யோசனை கூறிச் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்” என்று உறுதியான குரலில் கூறினான். மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு முதியபாண்டியர் விடை கொடுத்தார்.

 

    • உடனே சிகண்டியாசிரியர்பால் சென்றான் சாரகுமாரன். சிகண்டியாசிரியரிடம் கொடுந்தீவில் தனக்கு ஏற்பட்ட இசை அனுபவத்தை அவன் கூறியபோது அவர் வியந்தார். இசையின் விந்தைகளில் இது ஒரு புதிய சாதனை என்று கூறி அங்கு நிகழ்ந்ததைப் பற்றி விவரமாகக் கூறச் செய்து மீண்டும் கேட்டார். கேட்டவர் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தார். ஏதோ பெரிய காரியத்துக்கான சிந்தனை அவர் மனத்தில் உருவாகிறது என்பதை முகபாவத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

 

    • “இசைத்துறையில் ஒரு புதிய ஆராய்ச்சி செய்ய இந்த நிகழ்ச்சி ஒரு தொடக்கம்! உன் வாழ்விலும் இதனால் ஒரு புதிய பெரும்பயன் விளையப் போகிறது பார்” என்று சிறிது நேரத்தில் வியந்து கூறினார் சிகண்டியாசிரியர். சாரகுமாரனுக்கு அதைக் கேட்டு மெய்சிலிர்த்தது.

 

    “மந்திரம் என்று அந்தக் கொடுந்தீவு மறவன் உன்னுடைய இசையைப் புகழ்ந்தது ஒருநாளும் வீண்போகாது பார்!” என்று மேலும் சிகண்டியாசிரியர் உற்சாகமாகக் கூறியபோது இளையபாண்டியனுக்கு மறுபடி மெய்சிலிர்த்தது. தன் வாழ்வில் இந்த நிகழ்ச்சி ஏதோ பெரிய மாறுதலை ஏற்படுத்தப்போகிறது என்பது போல் தனக்குத்தானே ஓர் உள்ளுணர்வு அவனுள் விகசித்து மலர்ந்தது. அந்த உணர்வு ஆத்மபூர்வமானதாகவும் இருந்தது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – Finalஉள்ளம் குழையுதடி கிளியே – Final

வணக்கம் பிரெண்ட்ஸ், இன்று ‘உள்ளம் குழையுதடி கிளியே’ இரண்டு அப்டேட்டுகளைத் தந்திருக்கிறேன். படித்துவிட்டு கதையைப் பற்றிய உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன். உள்ளம் குழையுதடி கிளியே – final இந்தக் கதை எதிர்பாராத சில நிகழ்வுகளால் பதிவுகள் தாமதமாகத் தர

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 6’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 6’

ரூபியிலிருந்து மீட்டிங் முடிந்து மதியம் தன் ஏஜென்சிக்கு வரும்போதே மண்டையைப் பிளக்கும் தலைவலியோடுதான் வந்தாள் காதம்பரி. “என்ன கேட்… எப்படி இருந்தது?” “கஷ்டமர் மீட்டிங் மாதிரி இருந்தது… “ என்று கேட் பதில் சொன்னதும் புரிந்து கொண்டாள். “கல்பனா… மதியம் ரெண்டு