Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 11

   டிரைவர் சமயோஜிதமாய் ஏற்கனவே அத்தனை கதவையும் ஆட்டோ லாக் செய்திருக்க, வருணால் தன் பக்க கதவை திறக்க முடியவில்லை. அழுதான், அரற்றினான், அடிக்க கூட செய்தான் இருந்தும் டிரைவர் காரை நிறுத்தாமல் ஹாஸ்பிடல்க்கு கொண்டு வந்து விட்டார். வருணை எதிர்பார்த்து ஹாஸ்பிடல் வாசலில் ஆடை முழுவதும் ரத்த கரையோடு பிரபாகரன் நின்றிருந்தார். வருண், கார் கதவை திறந்து கொண்டு வந்தானா உடைத்து கொண்டு வந்தானா என்று தெரியவில்லை. அத்தனை பதற்றமாய் ஓடி வந்து, “மாமா…அங்க… நம்ம கார்… இந்து எங்க? குழந்தைக்கு எதும் ஆகலைல…”

 

    அவருக்கு அழுததில் தொண்டையே கட்டிவிட்டது போல, “மாப்ள நீ முதல்ல போய் அருண பாத்துட்டு வாடா” என்றார்.

 

    “முடியாது, எனக்கு இந்துவ முதல்ல பாக்கனும், பயம்மா இருக்கு மாமா…”என்று அவர் தோள்களை கட்டி கொண்டான்.

 

     “நான்தான் சொல்றேன்ல வாடா, அருண பாத்துட்டு வரலாம்” என்று மிரட்டி இழுத்து கொண்டு சென்றார். எதிர் வருபவர்கள் எல்லாம் வருணை பரிதாபமாக பார்த்து செல்ல, பிரபாகரன் கையை இறுக்கமாக பற்றி கொண்டான்.

 

     ஒரு அறை வாசலில் வந்து நின்று, “உள்ள போ” என்றார். கண்ணீர் நிறைந்த கண்களோடு வருண் மெதுவாய் உள்ளே நுழைய, பெட்டின் மீதிருந்த அருண் உருவம் அவனுக்கு மங்கலாய் தெரிந்தது. அருண் அருகிலேயே வித்யா அத்தையும் இன்னொரு டாக்டரும் அமர்ந்து இருந்தார்கள். வருண் கண்ணை துடைத்து விட்டு மீண்டும் பார்த்தான், அருண் முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க்கோடு, உடல் முழுவதும் கட்டுகள், இடது கையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டு இருக்க ஒரு காலை காணவில்லை.

 

    வருணால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாத அளவு கால்கள் நடுங்கிட, அப்படியே கீழே விழுந்து, “அருண்… அருண்…” என்று கதற தொடங்கினான். யாரோ இருவர் அவனை தூக்கி பெட் அருகில் நிறுத்த முயன்றிட, அதை உணர்ந்திட இயலாது மீண்டும் கீழே விழுந்தான். அருணை இந்த நிலையில் காண முடியாமல் தன் கண்ணை மூடிக்கொண்டு வாய்விட்டு கத்தி அழுதான்.

 

    அவன் சத்தத்தில் மெல்ல கண்விழித்த அருண் வலிநிறைந்த ரத்த கைகளால் வருணை அருகே அழைத்தான். வருண் தத்தி தத்தி அருகே வர, அருண் கண்ணீர் வழிய வருணின் தலையை மெதுவாய் தடவி விட்டு கண்களை மூடிக்கொண்டான்.

 

    “அருண்… அருண்… என்ன பாருடா… டேய் அருண்…”

 

   பதிலில்லை, மீண்டும் மயங்கி விட்டான்.

 

    “அருண்… அருண்… பேசுடா” என்று கதறியவனை பிரபாகரன் வந்து அழுது கொண்டே அழைத்து சென்றார். வேறு அறைக்கு அழைத்து செல்வதாய் நினைத்தபடி நடந்துவர, அவரோ ஹாஸ்பிடலின் பின் பக்கத்திற்கு அவனை கூட்டி வந்திருந்தார். அங்கு லதா புடவை தலைப்பை வைத்து வாய்மூடி அழுது கொண்டிருக்க வருண் பதட்டம் அதிகமானது. வெள்ளை நிற ஆடை அணிந்திருந்து ஹாஸ்பிடல் வேலையாட்கள் நான்கு பேர் ஒரு அறை கதவை திறந்து இரண்டு ஸ்ட்ரெக்சரை இழுத்து வர அதில் வெள்ளை துணியால் முழுவதுமாக சுருட்ட பட்டு இரண்டு உடல்கள் இருந்தது. வருண் பயந்து போய் பிரபாகரன் தோளை கட்டி கொண்டு, “மாமா… நான் பாக்க மாட்டேன்… இது யாரோ தான… இந்துவும் அப்பாவும் ஹாஸ்பிடல் உள்ள தான இருக்காங்க… எனக்கு தெரியும், இது யாரோதான். நான் பாக்க மாட்டேன்” என்று உளற லதா, “சாகுற வயசா எம் பொண்ணுக்கு” என வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டு அழுதார்.

 

   பிரபாகரன் ஓய்ந்து போய் அமர்ந்து விட, வருண் தன்னந்தனியே நின்று, “இது யாரோ மாமா… நம்ம இந்து இல்ல..” என்று தலையை பிடித்து கொண்டு உளறினான்.

 

    அவசர அவசரமாக வெளியே வந்த வித்யா அத்தை, “வருண்… வருண்… அங்க அருணுக்கு மூச்சுவிட முடியல, வாடா கடைசியா ஒருதடவ பாத்துடு” என்று அழைக்க, “வரமாட்டேன்… வரமாட்டேன்” என்று கட்டுப்பாடின்றி வெறியோடு கத்தி கொண்டிருந்தான்.

 

    வித்யா, “அடிச்சேன்னா பாத்துக்க, அருண் கடைசியா எதுவும் சொல்ல நினைச்சிருந்தா, மரியாதயா வாடா” என்று அவரும் வருணை இழுத்து சென்றார்.

 

     அங்கே அருண் முகமே விகாரமாக கண்களை அகல விரித்து, மூச்சை விடாமல் இருக்க முயற்சித்து வேகவேகமாக மூச்சை இழுத்தபடி இருக்க ஒரு டாக்டர் ஊசி போட்டு அவன் வலியை குறைக்க முயன்றிருந்தார். உயிர் உயர பறக்க துடிப்பதை உணர்த்தும் வகையில் நெஞ்சு எழுந்து எழுந்து விழுந்திட வருணை பார்த்ததும் கைகள் நீட்டி அருகே அழைத்தான்.

 

  வருண், “அருண்…. நீயில்லாம நா எப்டிடா… வந்திடுண்ணா…” என்று அழுது புரண்டவனின் கைகளை இறுக பற்றிய அருண், “தருண பாத்துக்க” என்று சொல்லி விட்டு தன் மூச்சை நிறுத்தி கொண்டான்.

 

    “அருண்… அருண்… டேய்…” என்று தன் கையிலிருந்த அவன் கையை உலுக்கி எழுப்ப முயன்று அது முடியாததால் துவண்டு போய் அவன் மார்பிலேயே விழுந்து அழுது அரற்றினான். எழுந்து வர விருப்பமின்றி அவன் மேலேயே இருந்த வருணை யாரோ சிலர் தூக்கி செல்ல அனிச்சையாக உடன் சென்றான். நாம் இறக்கும்போது வலிப்பதை விட, நமக்கு விருப்பமானவரை இழக்கும் போதுதான் அதிகமாக வலித்து தொலைக்கிறது இந்த வாழ்க்கை.

 

    இந்துவும் அப்பாவும் இருந்த இடத்திற்கு மீண்டும் வந்திருப்பதை கண்டு, தன்னிச்சையாக அந்த ஸ்ட்ரெக்சரின் அருகில் சென்றான். அப்பாவின் உடலை முகம் கூட தெரியாத அளவிற்கு சுருட்டி மூடி வைத்திருந்தார்கள். இந்துவின் முகம் தவிர மற்ற பாகங்கள் எல்லாம் மூடி வைக்கப்பட்டு இருந்தது. தலை பக்கத்தில் வெள்ளை துணிகளை தாண்டியும் ரத்தம் படிந்து இருந்ததை பார்த்து, அவளுக்கு வலித்துவிட கூடாதே என்று மெதுவாக தொட்டு தடவியவனை கண்டு லதா மீண்டும் அழ தொடங்கினார். வருணுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் உடனிருக்கும் தோழி அவளை அன்னை என்றோ அண்ணி என்றோ ஒற்றை சொல்லுக்குள் அவனால் அடக்கிட முடியுமா? எங்கு சென்றாலும் அப்பாவினை உடன் அழைத்து செல்பவள், இப்போதும் தன் கூடவே அழைத்து சென்று விட்டாளே பாவி… ஏதோ தோன்றியவனாய் அவள் வயிற்றை பார்க்க அது மேடின்றி இருந்தது.

 

    “மாமா பாப்பா எங்க?” என்றான் விசும்பலாய்,

 

    லதா தன் மடிக்குள் முந்தானையை கொண்டு மூடி வைத்திருந்த ஒரு மூட்டையை எடுத்து நீட்டிட, வருண் கைகள் நடுங்க அதை வாங்கி பிரித்தான். உள்ளே தொப்புள் கொடி கூட முழுதாய் வெட்ட படாமல் சுருண்டு கிடந்தது குழந்தை.

 

    லதா, “புள்ள வயித்துக்குள்ளயே செத்திடுச்சாம்டா” என்று மீண்டும் நெஞ்சில் அடித்து கொண்டு அழ ஆரம்பிக்க, பிரபாகரனும் சத்தம் போட்டு அழ தொடங்கினார்.

 

   வருண் நிற்க திராணியின்றி கால்கள் தள்ளாட இந்துவிடம் போனான், ‘இந்து… இங்க பாரேன் நம்ம பாப்பா, நம்ம குடும்பத்தோட புது இளவரசி, கண்ண தொற இந்து… எப்ப பாரு தருண் உன்ன மாதிரி இல்லன்னு சொல்லிட்டே இருப்பல்ல, இங்க பாரு நம்ம காருண்யா பாப்பா உன்ன மாதிரியே இருக்கா…’ என்று பிதற்றியவனின் பின்னால் வந்த வித்யா அத்தை,

 

    “டேய்… என்னடா பெனாத்திட்டு இருக்க, எல்லாரும் உன்னையே பாக்குறாங்க பாரு…” என்று குழந்தையின் உடலை வாங்கிவிட்டு அவனை தட்டி எழுப்பி சுய நினைவடைய வைத்தார்.

 

   அருணின் உடலும் வெள்ளை துணி மூடப்பட்டு ஸ்ட்ரெக்சரில் அந்த இடத்திற்கு வந்ததும், நிதர்சனம் புரிய வருண் மீண்டும் கண்ணீரை கொட்ட தொடங்கினான். எப்படி நடந்தான், எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்பதெல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்.

 

    பார்மாலிட்டிஸ் முடிந்து மூவர் உடலும் மாலையில் வீடு வந்து சேர்ந்தது. பிரபாகரனே முன் நின்று அனைத்தையும் கவனித்து கொண்டிருக்க, வருண் கண்ணீர் வற்றிப்போய் அருணின் உடலருகே அமர்ந்து விட்டான். இந்துவின் அருகே இறந்த குழந்தையின் உடல், இன்று சந்தோஷமா இந்த உலகத்த பாத்திருக்க வேண்டிய குழந்தை பொட்டலமாய், நினைக்கையிலேயே வருண் உள்ளம் குமுறியது. தருணை தப்பி தவறி கூட சிந்து மாடியிலிருந்து கீழே இறங்க விடவில்லை. உறவு முறைகளெல்லாம் வரிசையாய் வந்து மரியாதை செலுத்தி முடிய இறுதியாய் இருள் படரும் முன் உடல்கள் மயானத்திற்கு எடுத்து செல்ல பட்டது.

 

    கனவுலகில் நகர்வதை போல அனைத்தும் நிகழ்ந்திட, வருண் கையில் வாய்க்கரிசையை தந்ததும் சுதாரித்தவன் பதறிப்போய் பார்த்தான், மூவரின் உடலும் வரிசையாக பள்ளத்தில் துணிகளால் மூடப்பட்டு இருந்தது.

 

    “இல்ல… இது எதுவுமே உண்மையில்ல, அரிசி போட மாட்டேன். டேய் அருண் சொல்லுடா, இந்து இங்க பாருடி, அப்பா வாங்கப்பா வீட்டுக்கு போயிடலாம்” என்று பிதற்றியவனின் கைகளை பிடித்து பிரபாகரன் வலுக்கட்டாயமாக அரிசியை போட வைத்து விட்டு ஒரு மூலையில் அமர்ந்து அழ ஆரம்பித்தார். உடல்கள் மூட மூட இனி அவர்கள் இல்லை என்ற உண்மை அவனுக்கு புரிய தொடங்கியது. விழுந்து புரண்டு அழுதவனை சமாதான படுத்த யாரும் முன்வரவில்லை, திடீரென தனி மரமாக்கப்பட்ட கொடுமையை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை.

 

     வருண் இதுவரை வாழ்வில் அழுததே இல்லை, அம்மா இறந்த போது அப்பாவும் அருணும் வருணை கண்கலங்காது காத்து நின்றார்கள். வகுப்பிலும் சில நாட்களுக்கு இந்து உடனிருந்து பேசி பேசி வலியை மறக்க வைத்ததால், அவனுக்கு அன்னையின் இழப்பு பெரிதாய் வலிக்கவில்லை. இருந்தும் அன்னையின் அருமையை நான்கு வருடங்கள் முன்பே நன்கு புரிந்து கொண்டதால், அன்னையாய் வந்த அண்ணியை தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்கினான். இவள் ஒருத்தி போதும் இந்த குடும்பம் விருக்ஷமாய் வளரும் என்றெண்ணி அவள் எது சொன்னாலும் தலையாட்ட பழகி இருந்தான். தன்னை கட்டு படுத்துவதற்கான அத்தனை அதிகாரத்தையும் அவள் கையில் கொடுத்திருந்தான். அவளை இனி வீட்டில் பார்க்க முடியாது என்ற பயமே அவனை திரும்பி வீட்டிற்கு செல்ல விடாமல் பயமுறுத்தியது. பந்த பாசம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாத இறைவன் பாசக்கயிற்றை வயது வரம்பு பார்க்காது வீசிவிட்டானே என்று வருணுக்கு இறைவன் மீதே கடும் கோபம் வந்தது.

 

     பிரபாகரன் ஓரளவு தன்னிலை அடைந்ததும் கேட்பாரின்றி துவண்டு கிடந்த வருணை அழைத்து கொண்டு வீடு வந்து சேர, எங்கிருந்தோ ஓடி வந்து தருண் வருணின் தோளில் ஏறி கொண்டு, “எங்க போனப்பா? நான் உன்ன ரொம்ப நேரமா தேடிட்டு இருக்கேன். அம்மா சொன்னாங்கள்ள நம்ம ரெண்டு பேரும் எப்பவும் ஒண்ணா இருக்கனும் தனியா போக கூடாதுன்னு, அப்புறம் ஏன் என்ன விட்டுட்டு போனப்பா? அம்மா வந்து அடிச்சாங்கன்னா எனக்கும் சேத்து நீதான் வாங்கிக்கனும்” என்று நிலவரம் புரியாமல் பேசிக்கொண்டு இருந்தான்.

 

    “ஏம்ப்பா, அம்மா காருண்யா பாப்பாவ வாங்கிட்டு வீட்டுக்கு வர இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?” என்பவனிடம் வருண் என்ன பதில் சொல்ல…

 

    வருணின் தடுமாற்றத்தை உணர்ந்து சிந்து வந்து தருணை வாங்கி சென்றாள். எப்போதும் கலகலவென இருந்த இந்த வீடு இப்போது ஊசி விழுந்தாலும் கேட்குமளவு நிசப்தமாய் இருப்பது வருணுக்கு உள்ளுக்குள் எதையோ பிசைவதை போல் வலித்தது. தனக்கே ஆறுதல் தேடி தவிப்பவன் விவரமில்லாத குழந்தைக்கு நடந்து முடிந்ததை எங்ஙனம் புரியவைக்க?

 

    அடுத்த இரண்டு நாட்கள் கழித்து பிரபாகரன் வீட்டிற்கே வருணும் தருணும் சென்று இருந்து கொண்டார்கள். துக்கம் விசாரிக்க வருபவர்களை எல்லாம் வருணை நெருங்காமல் லதா அத்தை பார்த்து கொள்ள, சிந்து தருணை கவனித்து கொண்டாள். பிரபாகரன் வெளி வேலைகள் அத்தனையும் கவனித்து கொண்டார்.

 

    நாட்கள் நகர்ந்திட சிந்து கல்லூரிக்கும், தருண் பள்ளிக்கும் செல்ல ஆரம்பிக்க, வருணுக்கும் பாக்டரிக்கு செல்ல வேண்டிய கட்டாயம். பேக்டரிக்கு வந்துவிட்டானே தவிர வேலை எதுவும் ஓடவில்லை. மேனேஜர் கையெழுத்திற்காய் ஏதாவது பைலை கொண்டு வந்து நீட்டும் போதெல்லாம், ‘அருண்கிட்ட காட்டிட்டீங்களா?’ என்று பழைய ஞாபகத்தில் வாய் தவறி கேட்டுவிட்டு தன்னை தானே நொந்து கொள்கிறான். போனில் லதாவிடம் தருணை பற்றி பேசும் போதெல்லாம் மறந்து போய், ‘இந்து என்ன பண்றா?’ என்கிறான். அவர்கள் இந்த உலகத்தில் இல்லை என்று அவன் உணரவே ஒரு வாரத்திற்கும் மேல் ஆனது. ஆக்ஸிடென்ட் கேஸ் என்பதால் பார்மாலிட்டிஸ் முடிய வருணின் கையெழுத்து தேவை என்று இன்ஸ்பெக்டர் பேக்டரிக்கு வந்தார். முடிந்து போன பத்து நாட்களில் வருண் புதிய வாழ்க்கைக்கு பழக்க பட்டுவிட்டதால் இப்போது சம்பவத்திற்கான காரணம் தெரிந்து கொள்ள நினைத்தான்.

 

   இன்ஸ்பெக்டர், “உங்க அண்ணன் மேல தப்பே இல்ல சார். ஒரு குடிகார பய ஓட்ட தெரியாம பைக்க ஓட்டிட்டு வந்து நம்ம கார் மேல விழுந்துட்டான் சார். அவன காப்பாத்த நினைச்சு அருண் சார் கார திருப்ப, கிரிப் கிடைக்காம பிரேக் போட முடியாம வண்டி கவுந்திடுச்சு சார். அந்த குடிகாரனுக்கும் தலையில நல்ல அடி, இப்ப கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல கோமாவுல கிடக்குறான்.”

 

    வருண் கண்களில் கொலை வெறி தாண்டவமாட, “அவன நான் பாக்கனும்” என்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: