Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 10

 ந்து மயக்கம் தெளிந்து எழுந்ததும், அதன் காரணம் புரிந்த வருண் வகுப்பறை என்றும் பாராது தலைகால் புரியாமல் குதிக்க தொடங்கினான். அடுத்த அரை மணி நேரத்தில் அருணும் வந்துவிட, இந்து விடுமுறை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டாள். சேதி தெரிந்ததும் பிரபாகரன் குடும்பமும் வந்துவிட அன்றைய நாளே அவர்களுக்கு திருவிழாவாகி போனது. ஒவ்வொரு வரும் இந்துவிற்கு விதவிதமான பரிசு பொருட்களை வாங்கி குவித்தார்கள். அன்று மாலை வருண் பெரிய சைஸ் கேக் ஒன்றை அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஆர்டர் செய்தான், அடுத்த நாள் தன் நண்பர்களுக்கு பார்ட்டி தந்தான். அருணோ வீடு பேக்டரி என அத்தனை பணியாளர்களுக்கும் அந்த மாதம் திடீர் போனஸ் அறிவித்தான், சோம சுந்தரம் தனக்கு தெரிந்த அத்தனை கோயில்களிலும் இந்துவின் பெயருக்கு அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்தார்.

 

   அருணுக்கும் வருணுக்கும் பிறந்த பிறகு கிடைத்த அத்தனை பெருமையும் தருணுக்கு தன் தாய் வயிற்றில் உதித்த உடனே கிடைத்து விட்டது. பல்வாள் தேவனும் பாகுபலியும் சேர்ந்து தேவசேனைக்கு பாதுகாப்பு அளித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவர்கள் கவனிப்பு. காலை நேரம் வீட்டில் அவளுக்கு பிரஷ்ல் பேஸ்ட் வைப்பதிலிருந்து லஞ்ச்சை அவள் பேகில் வைப்பது வரை அருண் கவனித்து கொள்வான். அதன் பின் கல்லூரியில் அவளுக்கு சுமை இருக்க கூடாதென போகும் இடங்களுக்கெல்லாம் வருண் இருவர் பேக்கையும் தூக்கி கொண்டு திரிந்தான். மாலையில் அருண் பிக்கப்க்கு வந்துவிடுவான், கிட்டத்தட்ட ஊர்வலம் போவது போல கார் மெதுமெதுவாய் போவதில் அவளுக்கு சில முறை தூக்கமே வந்திருக்கிறது. செக்கப்பிற்கு தங்கள் உறவு முறை டாக்டர் வித்யா அத்தையிடம் சென்றார்கள், அங்கும் அவளுக்கு ஏக போக மரியாதைதான். அருணும் வருணும் டாக்டரிடம் டவுட் கேக்கிறோம் என்று ஐம்பது வயதை நெருங்கிய வித்யா அத்தையை பாடாய் படுத்தி எடுத்தார்கள்.

 

    இந்து, “டேய் ஏன்டா இப்டி போற இடத்துக்கெல்லாம் கூடவே வந்து என் மானத்த வாங்குறீங்க? என்ன விட்ருங்கடா எனக்கு ஒண்ணுமில்ல, என் வேலைய நானே செஞ்சுக்குவேன்”

 

   அருண், “மானம் போனா போவுது, நீ மட்டும் வீட்டுக்குள்ள கூட எங்கயும் தனியா போயிடாத”

 

    வருண், “ஆமா.. ஆமா..” என்று அண்ணனுக்கு கோரஸ் பாடினான்.

 

   வேலையையும் நண்பர்களையும் புறம் தள்ளி அருணும் வருணும் இந்துவின் பின்னாலேயே சுற்றியதை மற்றவர்கள் கேலி செய்தாலும் அதை அவர்கள் காதிலேயே போட்டுக்கொள்ள வில்லை, மாறாக அவர்களின் கவனிப்பு இன்னுமே கூடியது. மூன்றாம் மாதம் அடிக்கடி வாந்தி வந்ததால், மதிய உணவினை சூடாக அருணே வீட்டிலிருந்து கொண்டு வந்து தந்தான். அதுபோக வருண் வேறு வேளாவேளைக்கு ஜூஸ் பாட்டிலை கொண்டு வந்து நீட்டினான். இதுவரை கிண்டல் செய்தவர்களே அவளை பார்த்து பொறாமை படும்படி இருந்தது அவளுக்கு கிடைத்த கவனிப்பு. ஒருவழியாக மூன்றாம் மாத இறுதியில் வருணும் இந்துவும் படிப்பை முடித்து விட்டார்கள். மற்றவர்களுக்கு எப்படியோ, ஆனால் இந்துவுக்கு ‘ஷப்ப்பாடா… இனிமே இவங்க தொல்ல கொஞ்சம் குறையும்’ என்றிருந்தது.

 

     ஐந்தாம் மாதம் இந்துவிற்கு வளைகாப்பை நடத்திய கையோடு தாய்வீடு சென்றுவிட்டாள். வருணையும் கட்டாயப்படுத்தி சென்னையில் இருக்கும் ஒரு கல்லூரியில் முதுகலை படிப்பிற்கு சேர்த்தாகிற்று. இப்போது இருவரும் இல்லாத அந்த மாளிகை பறவைகள் இல்லாத கூடுபோல் ஆனது. காலம் யாரை பற்றியும் கவலையின்றி வேகமாக நகர்ந்தது. வருணுக்கு எக்ஸாம் நடந்து கொண்டிருந்ததால் முதல் வெட்டிங் ஆனிவர்சரிக்காக, அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஒரே நிறத்தில் டிரஸ் வாங்கி சர்ப்ரைஸாக அதை கொரியரில் அனுப்பினான். பரிசாக மொத்தம் நான்கு செட் ஆடை வந்தபோதும் அருணும் இந்துவும் வருண் தந்ததையே விரும்பி அணிந்து கொண்டார்கள்.

 

   திடீரென ஒருநாள் நள்ளிரவில் வருணுக்கு போன் வந்தது. அருண் வலி நிறைந்த குரலில், “டேய் வருண் இந்துக்கு பெய்ன் வந்திடுச்சுடா, ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்திருக்கோம். நைட்டே குழந்தை பொறந்திடும்னு வித்யா அத்தை சொல்றாங்க, ஆனா இந்து வலிக்குதுன்னு ரொம்ப அழுறாடா, என்னால தாங்க முடியலடா. எனக்காக நீ கொஞ்சம் இங்க வர்றியா” என்றான் அழுது கொண்டே.

 

    வருணுக்கு அண்ணனின் நிலை நன்றாகவே புரிந்தது. “டேய் பயப்படாத இன்னும் கொஞ்ச நேரம்தான், இப்ப சரி ஆகிடும், நீயே அழுதா அப்பா என்னடா ஆவாரு. நான் சீக்கிரம் வந்திடுறேன், நீ தைரியமா இரு.”

 

   வருண் அடுத்த நிமிடமே கிடைத்த ப்ளைட்டை பிடித்து கிளம்பிவிட்டான். வழியெல்லாம் அடிக்கடி அண்ணனுக்கு தைரியம் சொல்லி கொண்டே வந்தான். அதி காலையில் ஹாஸ்பிடல் வாசலில் வந்து நின்றவனை அருண் வந்து சந்தோஷமாய் அணைத்து கொண்டான்.

 

    “பையன்டா, இப்பத்தான் ஒரு ஒன் ஹவர் முன்னாடி பொறந்துச்சு” என்று அறைக்கு அழைத்து சென்று காண்பித்தான். அங்கே ஏற்கனவே சிந்து அதன் அழகில் தன்னை மறந்து ரசித்து கொண்டு நின்றிருந்தாள். வருணும் போய் எட்டி பார்த்தான், தங்க நிறத்தில் உயிருள்ள சின்ன பொம்மை ஒன்று வெள்ளை துணிகளுக்கு இடையே உறங்கி கொண்டிருந்தது. பிங்க் நிறத்தில் இருந்த உதடுகளும் செந்நிற பாதங்களும் அத்தனை அழகாய் இருக்க, தொடலாமா கூடாதா என்ற சந்தேகத்தோடு அந்த சின்ன பாதத்தை தொட்டான் வருண். உடனே அந்த சின்ன சின்ன கால் விரல்கள் லேசாக அசைந்து தன் உணர்ச்சியை காட்டியதும் வருணுக்குள் அத்தனை பெரிய ஆச்சரியம். சுகப்பிரசவம் ஆதலால் இரண்டாம் நாளே இந்து நார்மலாகி விட்டாள். மூன்றாவது நாள் இந்து டிஸ்சார்ஜ் ஆகி தாய் வீட்டிற்கு வந்ததும், அவளோடு சேர்ந்து அவர்கள் மூவரும் பிரபாகரன் வீட்டிற்கு குடி வந்து விட்டார்கள். அன்றிரவு சிந்துவும் வருணும் குழந்தைக்கு பேர் வைப்பதில் பெரிய யுத்தமே நடத்தினார்கள்.

 

    சிந்து, “கண்டிப்பா மாடர்ன் நேம் தான் வைக்கனும்.”

 

    வருண், “தருண் நல்லா இருக்கா?”

 

    சிந்து, “மறுபடியும் ரைமிங்கா வச்சா பிச்சிடுவேன் பிச்சு. ஹர்ஷா, சர்வேஷ், ஹரித்ரன் இப்டி எதாவது க்யூட்டா செலக்ட் பண்ணுங்க என் பையனுக்கு”

 

    “ஓய்.. அது எங்க பையன், எங்களுக்கு தான் முன்னுரிமை”

 

    “கஷ்டப்பட்டு பெத்தது எங்க அக்கா”

 

    “ஆனா இப்ப அவ எங்க அண்ணி” என்று சிரித்து கொண்டே வக்கனைத்தான்.

 

    “டேய்…. ப்ளீஸ்டா வேற பேரு வைடா”

 

    இந்து, “ஹேய் சண்ட போடாதீங்க. தருணே இருக்கட்டும்” என்றதும் வருண் வீட்டின் சீலிங் வரை குதித்து இறங்கினான். அவள் தன் கணவனுக்காய் பரிதாப பட்டு இந்த பேரை ஒத்து கொண்டது பாவம் வருணுக்கு தெரியாது, நீங்களும் சொல்லி விடாதீர்கள். குழந்தையின் அழு குரலை போனில் பதிந்து கொண்டு சென்னைக்கு திரும்பி சென்றான், அதுவே பல நாட்கள் வரை வருணின் ரிங் டோனாக இருந்தது. தருணுக்கு மூன்று மாதம் ஆனதும் அருண் தன் வீட்டிற்கு மனைவி மகனை அழைத்து சென்றான்.

 

    குழந்தைக்கு ஏழு மாதம் ஆனது முதலே வருண் தினம் இரவு வீடியோ சாட் செய்தான். ஒற்றை பல்லை காட்டி தருண் சிரிக்கும் அழகில் வருணுக்கு உலகமே மறந்து விடும். ஒவ்வொரு முறையும் விடுமுறைக்கு வீடு திரும்பையில் தருணுக்கு விதவிதமான டாய்ஸ் வாங்கி வந்து குவித்தான். வருண் படிப்பை முடித்ததும், அண்ணனுடன் சேர்ந்து பிஸினஸ் கற்று கொள்ள தொடங்கினான். வளர வளர வருணும் தருணும் அவ்வளவு நெருக்கமாய் இருந்தார்கள். அருணை அழைப்பது போலவே தன்னையும் ‘ப்பா..’ என்று மழலையில் அழைக்கும் தருணை, வருண்  தன் மகனாகவே பாவித்து வளர்த்தான்.

 

   ஏதோ நேத்திகடன் இருப்பதாய் சொல்லி இந்து வாராவாரம் சனிக்கிழமையானால் பெருமாள் கோவிலுக்கு கிளம்பி விடுவாள், அவளுக்கு உதவியாக தருணை தூக்கி கொண்டு வரும் வேலை அருணுக்கோ வருணுக்கோ விதிக்கபடும். அம்மா கெஞ்சி கேட்டும் கோவில் பக்கம் வராமல் போக்கு காட்டியவர்கள், இப்போது ஒப்பந்த முறையில் ஒருவன் கோவிலுக்கும் ஒருவன் பேக்டரிக்கும் வாரம் ஒருமுறை மாறி மாறி செல்வதென பிரித்து கொண்டு செய்கிறார்கள். வருண் உடன் வருவானே தவிர ஒழுங்காய் சாமி கும்பிடவே மாட்டான், இந்து ஒவ்வொரு சந்நிதியாய் நின்று குடும்பத்தில் உள்ள அத்தனை பேருக்கும் அர்ச்சனை செய்து கொண்டிருப்பாள். வருணோ மூல சந்நிதியில் ஒரு பெரிய கோவிந்தாவை போட்டுவிட்டு தருணை தூக்கி கொண்டு விளையாட ஓடிவிடுவான். பிரகாரத்தில் கால் கொலுசு ஜதியோடு முன் பல்லை காட்டி சிரித்து கொண்டே மூன்று வயது தருண் ஓடி வருவது அவ்வளவு அழகாய் இருக்கும். இன்றும் அதைத்தான் செய்ய ஆரம்பித்தார்கள் இருவரும்.

 

     தருணை இறக்கி விட்டு “அப்பாவ புடி கண்ணா” என்று ஓட தொடங்க தருண் குண்டு கன்னத்தில் குழிவிழ சிரித்து கொண்டே முதல் காலை எடுத்து வைத்த நேரம்,

 

  சின்ன சின்ன பதம் வைத்து

  கண்ணா நீ வா-வா-வா

  மணிவண்ணா நீ வா-வா-வா

 

  வண்ண வண்ண உடை உடுத்தி

  கண்ணா நீ வா-வா-வா

  மணிவண்ணா நீ வா-வா-வா 

 

  கண்ணில் தெரியும் காட்சி எல்லாம்

  கமலக் கண்ணா உன் தோற்றம்

  கட்டழகா மதியழகா

  கண்ணா நீ வா-வா-வா 

 

     பாடல் பாடப்படுவது இறைவனுக்கன்றி தன் மகனுக்கென்றே எண்ணுமளவு குழந்தையின் கால் வேகத்தோடு பாடல் சிலீரென்ற குரலில் அவன் காதில் வந்து மோதியது. இத்தனை காந்த குரலை கேட்டிராத அவன் மனம் தானாக கால்களை குரல் வந்த திசையில் போக சொன்னது. குழந்தையை தூக்கி கொண்டு குரலை கேட்டுக்கொண்டே திக்கு தெரியாமல் நடந்து கொண்டிருந்தவனை, இந்து வந்து தலையில் கொட்டி இழுத்து சென்றுவிட்டாள். அன்று முழுவதும் ஏனோ அந்த பாடல் அவன் காதில் ஒலித்து கொண்டே இருப்பதை போன்ற ஒரு உணர்வு. இன்டர்நெட்டில் டவுன்லோட் செய்து பார்த்தான், இருந்தும் அது அந்த கோவிலில் கேட்ட குரலுக்கு நிகராகவில்லை. அடுத்த வாரம் இந்து கோவிலுக்கு செல்லவில்லை அவளுக்கு முடியவில்லையாம், அதற்கு அடுத்த வாரம் அண்ணன் மீட்டிங் அட்டர்ன் செய்ய ஆர்டர் போட்டுவிட்டான், அதற்கு பின் நண்பன் ஒருவன் வருணை காண வந்துவிட்டான், அதற்கு பிறகு இந்து அவள் அம்மாவுடன் கோவிலுக்கு போக ஆரம்பித்து விட்டாள். இத்தனை நாட்களில் வருணுக்கு அந்த குரலின் மேல் ஆரம்பத்தில் இருந்த ஈடுபாடு குறைந்துவிட்டது. இருந்தும் எப்போதாவது ஞாபகம் வந்தால் திரும்ப இன்டர்நெட்டில் கேட்டு ரசிக்க முயற்சித்தான், ஆனால் அது கோவிலில் கேட்ட குரலை போல திருப்தியாக இல்லை.

 

     சில நாட்களுக்கு பிறகு: இந்து தேடிப்பிடித்து ஒரு பள்ளியில் அட்மிஷன் வாங்கி வர, முதல் நாள் தருண் ஸ்கூல் போக மாட்டேன் என ஒரே அடம். தருணின் அழுகை அதிகமாக வருண் தன் மகனை காப்பாற்ற எண்ணி ஓடி வந்தான்.

 

     “எதுக்கு இந்து அவன இந்த பாடு படுத்துற? அவனுக்கு போக பிடிக்கலன்னா விட்ர வேண்டியதுதான, இன்னிக்கே ஸ்கூல்க்கு போய் படிச்சாத்தான் ஆகுமா? அடுத்த வாரம் போனா ஆகாதா? உள்ளயே உக்காந்து வேடிக்க பாத்துட்டு இருக்க நீயெல்லாம் அப்பனாடா?” என்றதும் வருண் தலைக்குமேல் இந்து சில பரிசுகள் தந்தாள்.

 

     தலையை தேய்த்து கொண்டே போய் அண்ணனின் அருகில் அமர்ந்ததும் அருண், “ஒய் ப்ளட் சேம் ப்ளட்” என்றான்.

 

    அவர்களை விட்டுவிட்டு இந்து மீண்டும் மகனோடு மல்லுக்கட்ட, இப்போது சோம சுந்தரம் உள்ளே வந்து, “ஏம்மா இந்து புள்ளய அழ வைக்கிற, பாவம் இப்ப மூணு வயசுதான ஆகுது. வேணும்னா நாம அடுத்த வருஷம் அனுப்பிக்கலாமே. ஏன்டா நீங்களாவது சொல்ல கூடாதாடா” என்றதும் அருணும் வருணும் வாயை மூடிக்கொண்டு சிரித்தார்கள்.

 

     ஆரம்பத்தில் அழுதாலும் சில நாட்களில் தருண் பள்ளியையும் நண்பர்களையும் விரும்ப தொடங்கினான். காலையில் பள்ளியில் விடுவது அருண் வேலை, மாலையில் பள்ளியிலிருந்து அழைத்து வருவது வருண் வேலை. தினமும் மாலையில் மொத்த குடும்பமும் அவனிடம் ஸ்கூலில் நடந்த கதையை கேட்க கூடிவிடும். மழலை மொழியில் ரைம்ஸ் பாட சொல்லி அதை தனது ரிங் டோனாக வருண் வைத்து கொண்டான். இந்து இரண்டாவது ரவுண்டுக்காக ரெடியாகி வாந்தி எடுக்க தொடங்கினாள். இந்த முறையும் வித்யா அத்தையிடமே செக்கப்பிற்கு அழைத்து சென்றார்கள்.

 

    ஐந்தாம் மாத செக்கப்பில் வருண், “அத்த இந்த தடவ பொண்ணு தான?”

 

    வித்யா, “மருமகனே, சட்டப்படி என்ன குழந்தைனு நான் சொல்ல கூடாதுடா”

 

    அருண், “என் செல்ல அத்தைல ப்ளீஸ் சொல்லுங்க” என்று கன்னம் கிள்ளி கெஞ்சி கேட்டான்.

 

    இந்து, “பையன்தான்னு பெட் கட்டிருக்கேன் சித்தி, ப்ளீஸ் என் கால வாரி விட்ராதீங்க”

 

    வருண், “போ இந்து, எங்களுக்கு பொண்ணுதான் வேணும்”

 

     வித்யா அத்தை, “மருமகனுங்களா நீங்கதான் ஜெயிச்சீங்க, சாரிம்மா இந்து”

 

    “ஹைய்யா…. தேங்க்ஸ் அத்தை” என்று வருண் அவர் தோள்களை கட்டி கொண்டான்.

 

    ஆறாம் மாதம் முதலே தருணை இந்துவால் சரியாக கவனிக்க முடியாமல் போனதால் வருண் அந்த பொறுப்பை எடுத்து கொண்டான். குட்டி கரணமடித்தல், பெட்டில் ஏறி குதித்தல், மரத்தின் மேல் ஏறுதல், மற்றும் வீடியோ கேம் ஆடுதல் என்று தனக்கு தெரிந்த அத்தனை குரங்கு சேட்டையையும் தருணுக்கும் கற்று தர குழந்தை அன்னையை மறந்து இருக்க கற்று கொண்டது. இந்து எத்தனை முறை திட்டினாலும் ரெண்டும் காதில் வாங்காததால், ‘எக்கேடோ கெட்டு போங்க’ என அவர்களை விட்டு ஓய்ந்து போய் ஒதுங்கிட, அருண் முன் வந்து அக்கறையோடு கவனித்து கொண்டான். இப்போதெல்லாம் வருண் தருணை தன் மார்பில் போட்டு தன்னுடனேயே தூங்க வைக்கிறான், சிந்தி சிதறி உணவூட்டுகிறான், யாருக்கும் தெரியாமல் ஹோம் வொர்க்கை எழுதி தருகிறான், மூக்கினை மூடிக்கொண்டு கழுவியும் விடுகிறான்.

 

     நிறை மாதம் நெருங்க நெருங்க இந்துவால் எதுவும் முடியவில்லை. மகளுக்காய் லதாவும் உடன் வந்து தங்கி உதவி செய்தார். இந்துவிற்கு உடலில் சத்து குறைவாக இருப்பதால் டாக்டர் சிசேரியன் செய்துவிட முடிவு செய்து நாள் குறித்து தந்தார். நாள் நெருங்கியதும் வித்யா அத்தை ஹாஸ்பிடலிலேயே தனி அறை ஒதுக்கி தந்துவிட்டார். இந்துவிற்கு இன்று மாலை பிரசவம், அவளுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் முன்னாலேயே கொண்டு போய் வைத்தாயிற்று.

 

   ஒரு காரில் பிறந்த வீட்டு உறவுகளும், மற்றொரு காரில் புகுந்த வீட்டு உறவுகளும் காத்திருக்க இந்துவோ, “ரெண்டு பேரும் ஒழுங்கா இருக்கனும்டா, வருண் நீ அவனுக்கு ஐஸ்கிரீம் சாக்லேட்லாம் வாங்கி தரவே கூடாது. தருண் நீ ரொம்ப சேட்ட பண்ண கூடாது, அடம்பிடிக்க கூடாது, வருணவிட்டு தனியா எங்கயும் போக கூடாது, அம்மா வீட்ல இருந்தாலும் இல்லனாலும் உன்னோட ஹோம்வொர்க்க ஒழுங்கா செய்யனும் புரிஞ்சதா” என வருணுக்கும் தருணுக்கும் மூச்சுவாங்க ஆயிரம் அறிவுரை சொல்லி விட்டு காரில் ஏறினாள்.

 

    அவளைப்போலே மளமளவென தலையாட்டிய தருண் அவர்கள் சென்றதும் செய்த முதல் வேலை ஓடிப்போய் ப்ரிட்ஜில் ஒளித்து வைத்திருந்த ஐஸ்கிரீமை எடுத்து தின்பதுதான். வருணும் தருணும் மதிய உணவை முடித்துவிட்டு வீடியோ கேம் ஆடிக்கொண்டு இருந்த போது சிந்து வந்தாள். விளையாட்டிலேயே கண் இருந்ததால் அவள் முகத்தை சரியாக கவனிக்காத வருண், “என்ன சிந்து உன்னயும் விரட்டி விட்டுட்டாங்களா?” என்றான்.

 

    “வருண், உன்ன உடனே ஹாஸ்பிடலுக்கு வர சொன்னாங்க, நான் தருண் கூட இருக்குறேன். நீ போயிட்டு வா” குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்து திரும்பி பார்த்தான், அவள் முகம் அழுதழுது வீங்கி இருந்தது.

 

    “என்ன ஆச்சு? டெலிவரில எதாச்சும் பிரச்சனையா? இந்துக்கு ஒண்ணுமில்லையே…”

 

    அவளிடம் பதிலில்லை, உதட்டை கடித்து கண்ணீரை கட்டுப்படுத்தி கொண்டு நின்றாள்.

 

    அது அவனுக்கு மேலும் பயத்தை தர கோபமாக, “கேக்குறேன்ல சொல்லுடி, இந்துக்கு என்ன ஆச்சு?” கத்தினான்.

 

   கண்ணீர் துளிகள் தழும்பிட, “வெளியில டிரைவர் வெய்ட் பண்றாரு போ” என்றாள்.

 

    இதற்கு மேல் தாமதிக்க கூடாதென விரைவாக போய் காரில் ஏறினான். டிரைவரும் கூட அழுதிருப்பார் போல, அவருடைய கண்ணும் சிவந்திருக்க வருணுக்கு இதயம் ஏனோ வேகமாக துடிக்க தொடங்கியது. ஹாஸ்பிடல் அருகில் வரும் நேரம் ஒரு இடத்தில் சில போலீஸ்காரர்கள் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி கொண்டிருந்தார்கள். டிரைவர் காரை வேகமாக ஓட்ட தொடங்கியதும், வருண் சந்தேகபட்டு அந்த இடத்தை கூர்ந்து கவனித்தான். அங்கே சாலையோர சரிவில் அருண் ஓட்டி சென்ற கார் நிறைய அடி வாங்கி ரத்தம் சொட்ட குப்புற கவிழ்ந்து கிடந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: