Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 9

  ருணின் திருமண வேலைகளால் அசந்து போன வருண் தாமதமாகவே உறங்க சென்றான். வருண் ஆழ்ந்த நித்திரையில் இருந்த நேரம் திடீரென அவன் அறைக்கதவு டமடமவென தட்டப்பட்டது. பதறி எழுந்து கதவை திறந்திட அங்கே இந்து முறைத்து கொண்டு நின்றிருந்தாள்.

 

     “என்ன ஆச்சு இந்து? ஏன் இப்டி நடு ராத்திரியில வந்து கதவ தட்ற?”

 

    “ஏது, நடு ராத்திரியா? மணி ஆறடிச்சு அஞ்சு நிமிஷமாச்சு எரும”

 

    “அதுக்கு?”

 

    “ஜாக்கிங் போலாம் வா…” என்று வருணின் காதை பிடித்து இழுத்து கொண்டு சென்றாள்.

 

    “அம்மா.. வலிக்குது… டேய் அண்ணா எங்க இருக்க? அம்மா…” வழியெங்கும் அலறி கொண்டே வந்தான் வருண். கீழே ஹாலில் அருண் சோபாவில் சரிந்து படுத்து, மப்ளரை மாட்டிய குரங்கை போல கொட்டாவி விட்டு கொண்டிருந்தான்.

 

    “அதுக்குள்ள என்ன தூக்கம், எழுந்திரிங்க அத்தான்” என்று அவனுக்கும் ஒரு அடி விழ துள்ளி எழுந்தான் அருண்.

 

    அருண், “ஏம்மா எங்கள இப்டி கொடும படுத்துற”

 

   “எதுவா இருந்தாலும் ஜாக்கிங் முடிச்சுட்டு வாங்க பேசிக்கலாம். டேய் எரும இந்தா மப்ளர்” என்று வருணுக்கும் ஒன்றை தூக்கி எறிந்தாள்.

 

    வருண், “எல்லாம் உன்னால வந்தது” என்று அண்ணனும் தம்பியும் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டும் இடித்து கொண்டும் வெளியேறினார்கள். அவர்கள் இவ்வளவு ஆர்பாட்டம் செய்வது கார்டனில் ஜாக்கிங் செய்யத்தான், அரை கிலோ மீட்டருக்கு மேல் சுற்றளவுடைய அந்த கார்டனை சில முறை சுற்றி வந்தாலே போதும், இருந்தும் கொஞ்சம் சோம்பேறித்தனம். அதற்கு ஒரேயடியாக வேட்டு வைக்கத்தான் இந்துவின் இத்தனை கண்டிப்பு. நீண்ட நாட்களுக்கு பிறகு இவ்வளவு காலையில் வெளியே வருவது அத்தனை புத்துணர்ச்சியாய் இருந்தது அவர்கள் இருவருக்கும்.

 

     “டேய் அண்ணா வாடா ரேஸ் வச்சுக்கலாம்”

 

     “வேணான்டா ரொம்ப நாள் கழிச்சு ஓடுறதால ஸ்லோவாத்தான் ஓடனும்னு உங்க அண்ணி சொல்லி அனுப்பிருக்கா. அதுவும் அஞ்சாறு ரவுண்ட் ஓடினா போதுமாம்.”

 

     “அடப்பாவி உனக்கு கல்யாணமாகி ஒரு நாள் தானடா ஆகுது, அதுக்குள்ள பொண்டாட்டி பேச்சுக்கு இப்டி தலையாட்ட ஆரம்பிச்சிட்ட… பட் அந்த அர லூசு என்னையும் சேர்த்து கன்ட்ரோல் பண்றது டூ மச், எல்லா நேரமும் நான் இப்டியே இருக்க மாட்டேன் சொல்லி வை”

 

    அவர்கள் இந்து சொன்னபடியே ஆறு ரவுண்ட் முடித்துவிட்டு உள்ளே வர வீடே மாறி இருந்தது. இத்தனை நாட்களுக்கு பிறகு காபி கப்போடு அப்பா முன்ஹாலில் அமர்ந்திருந்தார், எங்கோ மெல்லிய குரலில் சுப்ரபாதம் ஒலிக்க வீடு முழுவதும் சாம்பிராணி வாசனை, வேலையாட்கள் வழக்கத்தை விட இன்று அதீத சிரத்தையோடு வேலை பார்த்து கொண்டிருந்தார்கள். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே எனும் வார்த்தைக்கு அர்த்தம் அன்றுதான் அவர்களுக்கு புரிந்தது. அன்னையின் மறைவால் ஒளியிழந்த இல்லம் இன்று அண்ணியின் வரவால் புத்தொளி கண்டிருந்தது.

 

   வருண், “என்னப்பா உங்களையும் விட்டு வைக்கலயா அந்த லூசு?”

 

    “ஷ்ஷ்ஷ்… சத்தமா பேசாதடா. நான் இனிமே சும்மாவாச்சும் வெளியில வந்து உக்காரனுமாம், உள்ளயே அடஞ்சு கிடக்க கூடாதாம், எஜமானியம்மா உத்தரவு”

 

    “ஐயய்ய… நீங்க ரெண்டு பேரும் வேணும்னா அந்த லூசுக்கு பயப்படுங்க, நான் எதுக்கு பயப்படனும்”

 

     “கொழுந்தனாரே…” என்று பின்னால் சாம்பிராணி கரண்டியோடு வந்து நின்றாள் இந்து.

 

     “கால் மீ வருண். கொழுந்து கிழுந்து எல்லாம் வேண்டாம்.”

 

     “லைக் தேட், கால் மீ இந்து. லூசு கீசு எல்லாம் வேண்டாம். இன்னும் ஹால்ப் அன் அவர்க்குள்ள(half an hour) டைனிங் டேபிள்க்கு வரலன்னா ரெண்டு பேருக்கும் டிபன் கட், களிதான் தருவேன்.”

 

     “என்னது? களியா உவ்வே, அத இவனுக்கு கொட்டு. நான் காலேஜ் கேன்டீன்க்கு போய் பொங்கலும் சாம்பாரும் சாப்ட்டுக்குவேன்.”

 

    “அதுசரி எரும, உன்னோட பர்ஸ்ல இருந்த அத்தை போட்டோ இதுவான்னு பாரு?” என்று நீட்ட, தன் பர்ஸ் அவள் கையில் மாட்டியிருப்பது வருணுக்கு புரிந்தது.

 

    “அப்பா… இந்த லூசு என் பர்ஸ சுட்டுட்டா, நீங்க என்னன்னு கேளுங்கப்பா…”

 

    “மாமா எப்பவும் எனக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாரு, இது கூட தெரியாம அவருகிட்ட போய் ஹெல்ப் கேக்குற, நிஜம்மாவே நீ எரும தான்டா”

 

    “போடி லூசு”

 

    “போடா எரும”

 

    அவர்கள் சண்டை முற்றிடும் முன் மறுவீடு அழைப்பிற்கு மாப்பிள்ளை குடும்பத்தை அழைக்க பிரபாகரன் குடும்பத்தோடு உள்ளே வர, இந்து நல்ல பிள்ளையாக ஒதுங்கி நின்றாள். பெற்ற பெண்ணை பிரிந்த துயரை அவரின் உறக்கமிழந்த சிவந்த கண்களே அருணுக்கு காட்டி தந்தது.

 

   பிரபாகரனை கண்டதுமே வருண் ஓடிப்போய் அவர் தோள்களை கட்டி கொண்டு, “மாமா.. மாமா.. என்ன காப்பாத்துங்க மாமா, இனிமே டெய்லி நான் ஜாக்கிங் & எக்ஸர்சைஸ் பண்ணனுமாம், காலைல டிபனுக்கு களி திங்கனுமாம், தப்பிச்சு போய் வெளியில சாப்பிட காசும் தர மாட்டாங்களாம். இந்த வீட்ல அல்லி ராணி ராஜ்ஜியம் ஆரம்பிச்சிடுச்சு, பேசாம இப்பவே என்னை நீங்க தத்தெடுத்திடுங்க மாமா” என்று பெரிதாய் சீன் கிரியேட் பண்ணினான்.

 

    பிரபாகரன், “என்னம்மா இது?” என்றார் கோபமாக.

 

   “அப்பா இது என்னோட குடும்ப விஷயம், நீங்க தலையிடாதீங்க” என்ற ஒற்றை வார்த்தையில் அவர் மொத்தமாக நொறுங்கி போனார். அருண், வருணுக்கே அவள் அப்படி சொன்னது ஒருமாதிரி ஆகி விட்டது.

 

    அருண், “இந்து மாமாக்கு எதாவது குடிக்க கொண்டுவா, மாமா நீங்க வாங்க, அத்தை வாங்க வந்து உக்காருங்க. நீங்க தப்பா நினச்சுக்காதீங்க மாமா. நேத்து நீங்க புக்ஸ் தந்துட்டு போனீங்கள்ள அதான் அவ கோவத்துக்கு காரணம். நைட் நான் எக்ஸாம்க்காக கட்டாய படுத்தி அவள ரெண்டு சாப்டர் படிக்க வச்சிட்டேன், அதான் நாம ஏதோ ப்ளான் பண்ணி பண்ணிட்டோம்னு நம்ம ரெண்டுபேர் மேலயும் கோவமா இருக்கா. அதுவும் போக நாங்க ஹெல்த்த கவனிச்சுக்கிறதே இல்லன்னு எங்களுக்காக தான் இந்த கல்யாணம் வேணும்னு சொல்லி அடம்புடிச்சிருக்கா, இப்ப கூட இந்த சண்டையே வருண் வீட்ல பிரேக் பாஸ்ட் சாப்பிடுறத பத்தித்தான். உங்களுக்கே தெரியும்ல மாமா வருணும் அவளும் எப்பவும் எலியும் பூனையும் தான்.” அருண் ஏதேதோ சொல்லியும் பிரபாகரன் தெளியாமல் இருந்தார். வருண் வேறு தான் அதிகபிரசங்கி தனம் செய்து விட்டதாக நினைத்து உம்மென்று இருந்தான்.

 

   லதா, “அட பரவாயில்ல மாப்ள அவ நம்ம பொண்ணுதான் விடுங்க. நீங்க ரெண்டு பேரும் இப்பத்தான் ஜாக்கிங் முடிச்சுட்டு வந்திருக்கீங்க போல, போங்க போய் குளிச்சிட்டு வாங்க” என்றதும் அங்கிருந்து இருவரும் மனமின்றி நகன்றார்கள்.

 

    லதா கணவரிடம் ரகசியமாய், “ஏங்க இதுக்கு போய் இப்டி வருத்த படுறீங்க? கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாருங்க, முதல் ராத்திரி அதுவுமா அருண் அவள பரீட்சைக்கி படிக்க விட்ருக்கான். காலங்காத்தால உங்க மக அருணையும் வருணையும் ஜாக்கிங் எக்ஸர்சைஸ் செய்ய ஆர்டர் போட்ருக்கா அவனுங்களும் அவ சொன்னத செஞ்சிட்டு வந்து நிக்கிறானுங்க. எல்லாத்துக்கும் மேல அருண், நீங்க வருத்தபடுறத பாத்ததும் நம்ம பொண்ண விட்டு குடுக்காம தப்பு என்மேலன்னு சொல்லிட்டு போறான். இவ்ளோ நல்ல குடும்பத்துல நம்ம பொண்ணு வாழ குடுத்து வச்சிருக்கனும்ங்க. அதுவுமில்லாம இனிமே இதுதான் அவ குடும்பம், நாமதான் அத ஏத்துக்க பழகிக்கனும்.”

 

   மனைவியின் பேச்சில் இருந்த உண்மை புரிந்தாலும் மகளின் திடீர் பாராமுகம் அவரை வருத்தத்தான் செய்தது. லதா கணவனுக்காய் மகளை சரிக்கட்டி சமாதானமாய் பேசச்சொல்லலாம் என்று எண்ணி கிச்சனுக்கு சென்றார். லதா சென்றதும் இங்கே சோம சுந்தரம் தன் மருமகளுக்காக பிரபாகரனிடம் சமாதானம் பேச தொடங்கினார்.

 

   லதா, “ஏன்டி எல்லார் முன்னாடியும் அப்பாவ பாத்து இப்டி ஒரு வார்த்த சொல்லிட்ட? அப்பா எவ்ளோ சங்கடபடுறாரு தெரியுமா. வா வந்து அப்பாகிட்ட கொஞ்ச நேரம் உக்காந்து பேசு.”

 

     அவளோ அதை கவனிக்காதது போல, “சாந்தி பொங்கல் ரெடியா?”

 

     “இதோ ஆச்சும்மா…”

 

    “இந்தா சட்னி அரைச்சிட்டேன், நீ தாளிச்சு மட்டும் வை. வடைக்கு மாவு ரெடியா?”

 

     “ரெடியா இருக்குதும்மா”

 

    லதா, “அடியே என்ன கொழுப்பா? நான் கேட்டதுக்கு பதிலே காணும்”

 

    “ம்க்கும்.. நான் எத்தன தடவ கேட்டேன், ஒரு தடவ அத்தை வீட்டுக்கு போய் பாத்துட்டு வர்றேன், அவங்க மூணு பேரும் ஒழுங்காவே சாப்பிடுறதில்ல, மாமாவோட ஹெல்த் ரொம்ப மோசமாயிடுச்சு, வாரத்துக்கு ஒரே ஒரு நாள் பர்மிஷன் குடுங்கன்னு எவ்ளோ கெஞ்சினேன், கேட்டாரா? அதான் மொத்தமா இங்கயே தங்க வந்துட்டேன். கல்யாணமான பொண்ணுன்னு கூட பாக்காம இங்கயும் வந்து பழைய ஞாபகத்திலயே திட்றாரு, எனக்கு ஒண்ணுன்னா என் புருஷனும் கொழுந்தனும் சும்மா விட மாட்டாங்க பாத்துக்கோங்க. அப்புறம் பிரச்சன வந்த பின்னால என்னை குத்தம் சொல்லி எந்த ப்ரயோஜனமும் இல்லப்பா. பை த வே இப்ப எனக்கு நிறைய வேல இருக்குதுமா அவரு கூட உக்காந்து அரட்டை அடிக்கலாம் டைம் இல்ல. நான் டிபன் பண்ற வேலைய சீக்கிரமா முடிக்கனும், ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கிதான் அருணும் வருணும் வீட்ல மாமாவோட சேர்ந்து சாப்பிட போறாங்க. ஸோ நான் இப்ப பிஸி…”

 

    “அடிக்கழுத, புதுவீட்டுக்கு வந்ததுமே நாங்க உனக்கு கிள்ளுக்கீரையா ஆயிட்டோமா?”

 

    “ஆமாம்மா.. இனிமேயாவது அப்பாவ எங்கிட்ட இருந்த மாதிரியே எப்பபாரு உர்ருன்னு இருக்காம, சிந்துகிட்டயாவது கொஞ்சம் சிரிச்ச முகமா இருக்க சொல்லுங்க. அப்புறம் அவளும் என்ன மாதிரி மாறிட போறா.”

 

   கார்டனில் மறந்து விட்டு சென்ற போனை எடுக்க வந்த வருணுக்கு அவர்கள் பேசிய அனைத்தும் கிச்சன் ஜன்னலின் வழியே தெளிவாய் கேட்டது. இந்த குடும்பத்திற்காக அவள் சொந்த குடும்பத்தையே பகைத்து கொண்டு வந்திருக்கிறாள் என்று புரிய, ‘எங்கமேல இவ்ளோ பாசமா இந்து உனக்கு! அம்மா ஏன் உன்ன தலையில தூக்கி வச்சு கொண்டாடுனாங்கன்னு இப்பத்தான் புரியுது. இனிமே கடைசி வரைக்கும் உன்ன கண் கலங்காம பாத்துக்குறது எங்களோட கடமை’ என்று முடிவு செய்து கொண்டான்.

 

    அருணுக்காக இந்து இறங்கி வர மறுவீடு சம்பிரதாயம் மகிழ்ச்சியாக கழிந்தது. அடுத்த நாள் முதலே அனைவரும் தத்தமது வேலைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள். அடுத்த மூன்று நாட்களுக்குள் இந்து வகுத்து கொடுத்த புதிய வாழ்க்கை முறை அவர்கள் மூவருக்கும் செட் ஆகிவிட, அதன் பின் இந்து உத்தரவிடுவதை குறைத்து கொண்டாள். அருணுக்கும் வருணுக்கும் உணவை பார்த்து பார்த்து செய்தாள், மாமாவிற்கு ஒரு ரிமோட் வீல் சேர் வாங்கி தந்து ஒரு இடத்தில் அடைந்து கிடக்காமல் பார்த்து கொண்டாள். விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு சின்னதாய் பிக்னிக் போக ஏற்பாடு செய்தாள். அம்மா வருந்தி அழைத்தும் கோவில் பக்கம் செல்லாத இருவரையும் இந்து காதை திருகி இழுத்து சென்றாள்.

 

   ஊரான் வீட்டு பெண்ணாய் இருந்தும் எப்போதும் தங்கள் மூவருக்குமாய் யோசிப்பவளை வருண் தன் மனதில் தன்னை பெற்ற அம்மாவிற்கு தந்த இடத்தை விட இன்னும் ஒரு படி உயரத்தில் தூக்கி வைத்தான். அடுத்து வந்த நாட்களில் அவன் இந்துவின் கைப்பாவையாக மாறி விட்டான், கண்ணை மூடிக்கொண்டு அண்ணி சொல்வதையெல்லாம் செய்தான். வருணுக்கு பாக்ஸிங்கும் படிப்பும் கை வந்த கலை, எனவே செமஸ்டர் எக்ஸாம் நெருங்கியதும் தினமும் மாலையில் அக்கறை கொண்டு இந்துவை படிக்க வைத்து, விட்டுப்போன அரியர்ஸ் எல்லாம் ஒரே அட்டம்ப்ட்டில் பாஸ் பண்ண செய்தான். அவர்களுக்கு சொந்தமான மலையில் வாழும் பழங்குடி மக்கள் வனதேவிக்கு கொண்டாடும் வருடாந்திர திருவிழாவிற்கு அழைக்க, தம்பதி சகிதமாய் அருணும் இந்துவும் மலைக்கோயில் திருவிழாவிற்கு சென்று வந்தார்கள். அந்த அழைப்பு வருணுக்கும் சேர்த்தே வந்திருந்தது, இருந்தும் அண்ணனுக்கும் அண்ணிக்கும் தனிமை தர வேண்டி நாகரீகமாய் ஒதுங்கி கொண்டான். அதே யுக்தியை அடுத்து சில இடங்களுக்கு போவதற்கும் அவன் பயன்படுத்த அருணும் இந்துவும் வருண் அன்பினை புரிந்து கொண்டார்கள்.

 

    இல்லறம் சங்கீதமானதும் அழகிய கவிதையை போல அவர்கள் நாட்கள் நகர்ந்தது, இந்துவிற்கு படிப்பு முடிய இன்னும் மூன்று மாதம்தான் இருக்கிறது. வருண் இந்துவிற்கு ஒவ்வொரு பரீட்சையிலும் துணை நிற்கிறான் இனி அவள் படிப்பை பற்றி கவலை கொள்ள தேவையில்லை, என்று அருண் மனம் இந்துவின் பால் தடம்புறள தொடங்கியது. அவனும் ஆசை உணர்ச்சிகளுக்கு உட்பட கூடிய சாதாரண மனிதன்தானே. ஆனால் அந்த ஆசையின் விளைவு அடுத்த மாதமே தன் வரவை பகிரங்கமாக வெளிப்படுத்தியது. திடீரென ஒருநாள் இந்து வகுப்பில் மயங்கி விழுந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: