Skip to content
Advertisements

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 8

ருணிடம் பேசி முடித்துவிட்டு போனை வைத்ததும், “லதா.. லதா.. இந்துவ இங்க வரச்சொல்லு” ஹாலில் இருந்து கோபமாக கத்தினார் பிரபாகரன்.

 

“அவ பூஜை ரூம்ல சஷ்டி கவசம் பாடிட்டு இருக்கா என்ன விஷயம்னு சொல்லுங்க…” உள் அறையிலிருந்து அவர் மனைவி லதாவின் குரல் வந்தது.

 

“பூஜைய முடிச்சதும் அவள ஹாலுக்கு வரச்சொல்லு, அவ செஞ்சிருக்குற வேலைக்கு இன்னிக்கி என்ன பண்றேன்னு பாரு”

 

மயில் நடம் இடுவோன் மலரடி போற்றி

சரணம் சரணம் சரவண பவ ஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்

சரணம் சரணம் சண்முகா சரணம்

 

என்று இந்து தன் தேன் குரலில் பாடி முடிக்கவும், அருணின் கார் அவள் வீட்டு காம்பவுண்ட்டுக்குள் நுழையவும் சரியாய் இருந்தது.

 

வழக்கத்தை விட பூஜை முடிய நேரமானதால் பூஜை அறை வாசலில் வந்து நின்ற பிரபாகரன் இந்துவிடம் விபூதி வாங்கிய கையோடு பேச்சை ஆரம்பித்தார்.

 

“இந்து.. எது எதுல விளையாடுறதுன்னு விவஸ்தையே இல்லையா? அவன்தான் உனக்குன்னு சின்ன வயசிலயே முடிவு பண்ணிட்டோம்ல, அவனும் உம்மேல உயிராத்தான இருக்கான், பின்ன ஏன் கல்யாணத்துக்கு இவ்ளோ அவசர படுற? ஒரு ஒருவருஷம் உன்னால காத்திருக்க முடியாதா? வயசுக்கு வந்த பொண்ண கை நீட்டி அடிக்க கூடாதுன்னு நான் பொறுமையா இருந்தா, நீ குடும்ப மானத்தயே சந்தி சிரிக்க வச்சிடுவ போல.”

 

“அப்பா நான் அத்தை வீட்டுக்கு சீக்கிரமா போகத்தான் இப்டி எல்லாம் பண்றேன்.”

 

என்றும் இல்லாத கோபம் கொண்டு, “அதத்தான் ஏன்னு கேக்குறேன்” என்று அவர் மிரட்டிய தோரணையில், “நான்.. நான்..” அதுக்குமேல் வார்த்தை வராது அவளுக்கு பயத்தில் நாக்கு ஒட்டி கொண்டது.

 

“பதில் சொல்லு இந்து” என்று அடிக்க கை ஓங்கிட,

 

“மாமா” என்ற மிரட்டலோடு அருண் ஓடி வந்து அவளை தன் மார்போடு இறுக அணைத்து ஒளித்து கொண்டான். மாமா ரொம்பவே கோபக்காரர், நிச்சயம் அவளை செமத்தியாய் திட்ட போகிறார் என்று தான் நினைத்தானே தவிர கை நீட்டும் அளவு போவார் என்று எதிர்பார்க்கவில்லை.

 

இறுக்கமான குரலில், “கல்யாணத்த நீங்க குறிச்ச தேதியிலயே வச்சுக்கலாம் மாமா, போய் ஆகவேண்டிய வேலைய பாருங்க” என்றதும் ஏகத்துக்கும் குஷியான இந்து அவன் உயரத்திற்கு தாவி ஒரு முத்தம் தந்துவிட்டு தன் அறைக்குள் சென்று மறைந்து கொண்டாள்.

 

அத்தையும் மாமாவும் இந்துவின் செய்கையால் அதிர்ந்து போய் விக்கித்து நிற்க, சின்னவள் சிந்துவோ சிரித்தே அவனை அசிங்க படுத்தினாள். இதுநாள் வரை ஒளிவு மறைவாக கெஞ்சி கேட்டும் கிடைக்காத முத்தம் இப்படி ஒரு சூழ்நிலை யில் கிடைத்ததால் அழவா சிரிக்கவா என்றறியாது தலையை சொரிந்து கொண்டிருந்தான் அருண்.

 

பிரபாகரன், “சிந்து நீ உள்ள போ, லதா போய் தம்பிக்கு காபி போட்டு கொண்டு வா, வாங்க மாப்ள உக்காருங்க”

 

வெட்கம் பிடுங்கிட நெளிந்தபடி வந்து அமர்ந்தான்.

 

“மாப்ள, அவ சின்ன பொண்ணு, குடும்பம் நடத்த பக்குவம் பத்தாது. ஏன்னு தெரியல இந்த ஒரு மாசமாத்தான் இப்டி நடந்துக்குறா. அவ சொல்றான்னு நாம கேக்கனுமா? அவ படிப்பு முடிய இன்னும் ஒரு வருஷம் வேற ஆகும், அதான் யோசனையா இருக்கு.”

 

“எனக்கும் தெரியும் மாமா, அதுனால தான் நானும் இத்தன நாளா தள்ளி போட்டுட்டு வந்தேன். பட் இந்து இவ்ளோ தூரம் சொல்றான்னா ஏதோ காரணமிருக்கும்னு தோணுது.”

 

“அப்போ கல்யாண

ஏற்பாடெல்லாம் ஆரம்பிச்சிடவா?”

 

தலை குனிந்து சின்ன சிரிப்போடு, “ம்..” என்றான்.

 

மூணாறே மூக்கில் விரல் வைக்கும்படி கோலாகலமாக நிகழ்ந்தேறியது அருண் இந்துஜா திருமணம். இத்தனை நாள் இந்து எதிர்பார்த்து இருந்த அந்த நன்னாள் இன்று அரங்கேறிட பிறந்தவீட்டை விட்டு வெளியேறிய இளவரசியவள் புகுந்த வீட்டின் மகாராணியாக மாறி தன் வலது காலை பதித்தாள். பட்டு புடவையும், நகைநட்டுமாக பலவித சீர்வரிசை பொருட்களும், அரியவகை பழங்களும் பலகாரங்களும் அந்த வீடெங்கும் நிறைந்திருக்க, மலர் மஞ்சம் தனில் மன்னவன் அவளுக்காய் காத்திருந்தான். குங்கும சிகப்பழகில் முகம் கொண்டு, குவளை மலர் நிறத்தில் பட்டுடுத்தி மங்கை அவள் மண் நோகாமல் நடந்து வந்தாள்.

 

அத்தனை வெட்கத்திலும் ஆசை அத்தானுக்காய் சிந்தாமல் சிதறாமல் வெள்ளிச் செம்பு நிறைய கொண்டு வந்த பாலை அவனிடம் நீட்ட, கொஞ்சமும் உணர்ச்சி இன்றி அதை வாங்கி ஓரமாக வைத்தான் அருண். கால் விரலால் கோலமிட்டு கொண்டே நெடு நேரமாய் நின்றிருந்தவள் பொறுமை இழந்து அவனை திரும்பி பார்க்க அவனோ ஏதோ ஒரு புத்தகத்தில் மூழ்கி இருந்தான்.

 

“இந்த நேரத்தில புக்க வச்சுகிட்டு என்ன பண்றீங்க அத்தான்?”

 

“காஸ்ட் அக்கவுண்ட்டிங் பத்தி படிச்சுட்டு இருக்கேன்டா”

 

“ஓ… புக் புதுசா இருக்கே, இத இப்பக்குள்ள தான் வாங்குனீங்களா?”

 

“நாசமா போச்சு, இது உன்னோட புக். நெக்ஸ்ட் வீக் உனக்கு இன்டர்னல் எக்ஸாம் வருதுல்ல, வா இந்த சாப்டர இன்னிக்கி கம்ப்ளீட் பண்ணு. நான் போயி டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திடுறேன்.”

 

‘அட பாவி பயலே, பர்ஸ்ட் நைட்ல புருஷன் பொண்டாட்டி பண்ற வேலையாடா இது? இதுக்குபோய் இத்தன கலர்ல ப்ளவர்ஸ் வச்சு பெட் டெகரேஷன் வேற… இவன சொல்லி என்ன செய்ய, எல்லாம் எங்க அப்பாவ சொல்லனும், பொண்ணுக்கு குடுத்து அனுப்பி இருக்குற சீர பாரு…’ மனம் ஆறும் வரையில் அத்தனை பேரையும் வாய்க்கு வந்தபடி வஞ்சனையில்லாமல் திட்டி தீர்த்தாள்.

 

“என்ன இந்து படிக்க ஆரம்பிச்சாச்சா?” என்றதும் மூஞ்சியை முன்னூறு மீட்டருக்கு தூக்கி வைத்து கொண்டு போய் பஞ்சு மெத்தையில் பொத்தென அமர்ந்தாள்.

 

“இதுக்குத்தான அப்பவே படிச்சு முடிச்ச பிறகு கல்யாணம் வச்சுக்கலாம்னு சொன்னேன். நீதான அடம் புடிச்சு இவ்ளோ தூரம் மல்லுக்கட்டி இழுத்துட்டு வந்துட்ட. இப்ப படிக்க முடியாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்? வா வந்து படி. பைனல் இயர் கம்ப்ளீட் பண்ணினதுக்கு பிறகுதான் மத்ததெல்லாம்.”

 

“ஆமாமா, எல்லாத்துக்கும் அடம்புடிச்சிட்டு இருக்கேன்ல, நான் அடங்கா பிடாறிதான். உங்களுக்காக இவ்ளோ அவசர அவசரமா கல்யாணம் செய்றதுக்கு ப்ரஷர் குடுத்தேன்ல எனக்கு நல்லா வேணும்.”

 

“எனக்காகவா, என்னடி சொல்ற?”

 

“அத்தை போனதுக்கு பிறகு நான் எங்க வீட்ல இருந்தாலும் என்னோட மனசெல்லாம் இந்த வீட்ட சுத்தித்தான் இருக்குது. நான் பத்து மாசமா உங்க எல்லாரையும் கவனிச்சுகிட்டே தான் இருக்கேன் அத்தான். நீங்க மூணுபேரும் ரொம்ப மாறிட்டீங்க, இங்க எல்லாமே தப்பா இருக்குது.”

 

“அப்டி என்னடா தப்பா இருக்குது?”

 

“வருண் கடைசியா வீட்ல எப்ப பிரேக் பாஸ்ட் சாப்ட்டான்னு உங்களுக்கு தெரியுமா?”

 

“தெரியாது”

 

“முழுசா ஒரு மாசத்துக்கு மேல ஆயிடுச்சு, இப்பல்லாம் எப்பவும் காலேஜ் கேன்டீன்க்கு வந்து சாப்பிடுறான். அவனுக்கு பாக்ஸிங்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்னு தெரியுமில்ல, அப்போ அவனுக்கு எவ்ளோ ஹெல்த்தியா புட் நாம குடுக்கனும்? எங்க கேன்டீன்ல போடுற சாப்பாட்ட பத்தி எனக்கு நல்லா தெரியும், வருணுக்கு என்ன தலை எழுத்தா அத போய் சாப்பிடனும்னு? இதுல ஈவ்னிங் ஆனா டெய்லி பீட்ஸா வேற, அவன ஏன்னு கேக்க ஆளில்லாததால அவுத்து விட்ட காளமாடு மாதிரி இப்டி ஊர சுத்திட்டு இருக்கான். அவன் கிடக்கட்டும், மாமா வீட்ட விட்டு கடைசியா எப்போ வெளியில வந்தாரு?”

 

“தெரியாது”

 

“போன தமிழ் நியூ இயர்க்கு பூஜை முடிச்சுட்டு சூரியன கும்பிட வெளியில வந்தாரு, அதுக்கு முன்னாடி பங்குனி உத்திரத்துக்கு, அதுக்கும் முன்னாடி ஒரு மேரேஜ் பங்ஷனுக்கு, மொத்தமா சேர்த்து சொன்னா இந்த பத்து மாசத்துல எட்டு தடவ வீட்டு வாசப்படிய தாண்டி இருக்காரு. சரி, மத்தவங்கள விடுங்க, நீங்க கடைசியா ஆபீஸ்க்கு எப்போ லஞ்ச் எடுத்துட்டு போனீங்க?”

 

“அதுவா… அதுவந்து… போன மாசம்..”

 

“போன மாசம் கிழிச்சீங்க… நீங்க லஞ்ச் எடுத்துட்டு போயி ரெண்டு மாசமாச்சு”

 

“நீங்க குடும்பத்தோட சேர்ந்து உக்காந்து சாப்ட்டு எவ்ளோ நாளாச்சு?”

 

“ஐயயோ, தெரியலயேடா…”

 

“போன மூணு மாசத்தில அஞ்சு தடவ மட்டும் தான் சேர்ந்து சாப்பிட்டு இருக்கீங்க”

 

“நீங்களும் வருணும் வாக்கிங் எக்ஸர்சைஸ் எல்லாம் பண்ணி எவ்ளோ நாளாச்சு?”

 

“மறந்திடுச்சுடா”

 

“ரொம்பல்லாம் இல்ல அத்தான் ஜஸ்ட் நாலு மாசமாச்சு, இப்பவாது புரியுதா, ஒரே வீட்டுக்குள்ள நீங்க மூணுபேரும் தனி தனி தீவு மாதிரி வாழ்ந்துட்டு இருக்கீங்கன்னு. ஜங்க் புட்னால வருணுக்கு இப்பல்லாம் பாக்ஸிங் நல்லா பண்ண முடியிரதில்ல. நீங்க லஞ்ச் வெளியில சாப்பிடுறதால அடிக்கடி உங்களுக்கு வயித்து வலி வேற வருது. நீங்க ரெண்டு பேரும் வெளியில போனதும் மாமா தனியா உக்காந்துட்டு அத்தையவே நினச்சு அழுதுட்டு இருக்காரு அத்தான். அவர பத்தி நினைக்க கூட நீங்க மறந்துட்டீங்க, மாமா பாவம்ல, ரொம்ப வயசாயிடுச்சுல, அவர நாமதான ஜாக்கிரதையா பாத்துக்கனும், அதுக்குத்தான் நான் இப்பவே கல்யாணம் வேணும்னு அடம்புடிச்சேன்” என்று விசும்பலோடு முடித்தாள்.

 

அவள் சொல்லி முடித்ததும் அருண் அவள் முகத்தை கைகளில் ஏந்தி, “சாரிடா கன்னுகுட்டி அத்தான் நீ ஏதோ பிரன்ட்ஸ்ட்ட பெட் கட்டிட்டு விளையாட்டு தனமா இதெல்லாம் பண்றதா தப்பா நினைச்சுட்டேன். லவ் யூ டா செல்லம்” என்று அவளை தாவி அணைத்து கொண்டான்.

 

கன்னுகுட்டி என்ற வார்த்தையில் பாதி கரைந்தவள், அவன் அணைப்பினுள் மீதியும் கரைந்து விட, கொண்டவனின் மார்பில் மாலையாகி கிடந்தாள்.

 

“இத நீ முன்னாடியே சொல்லி இருந்தா அத்தான் ஒழுங்கா இருந்திருப்பேன்ல, இதுக்காக கல்யாணம் வரைக்கும் நீ வந்திருக்க வேணாம்.”

 

“உங்க காதுல ஈயத்த காய்ச்சித்தான் ஊத்தனும் போல”

 

‘எனக்கு வாயில சனி’ என அருண் நாக்கை கடித்து கொண்டான்.

 

“பின்ன என்ன, ரெண்டு மாசமா நாம பேசும் போதெல்லாம் இந்த விஷயத்த பத்தி எவ்ளோ சொன்னேன். ஆனா அதுக்கு பிறகுமே உங்ககிட்ட எந்த இம்பரூவ்மென்டும் இல்ல, இங்கயும் எந்த சேஞ்ச்சும் தெரியல, அதான் வேற வழியில்லாம நானே களத்தில இறங்கிட்டேன். இப்பத்தான தெரியுது இந்த மரமண்டைல நான் பேசினது எதுவுமே ஏறலைனு.” என்று திரும்பிக்கொண்டாள்.

 

“இந்த அத்தானுக்கு நீ பேசும்போது பேச்ச கவனிக்க முடியலியே ஏன்டா?” என்று கண்களை மூடி அவள் தோள்களில் சாய்ந்து கொண்டான். அவள் தோள்களில் இருந்து ஏதோ ஒரு இனம் புரியாத வாசனை அவனை இம்சித்தது, கண் திறந்து பார்த்தான், புத்தம் புதிய மஞ்சள் கயிறு. அதை கட்டியது தான் என்று நினைக்கியிலேயே ஒரு பெருமை, ஒரு கர்வம், ஒரு சந்தோஷம் இல்லை இல்லை இந்த வார்த்தைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு பரவசம் அவனுள் தோன்றியது.

 

கொஞ்சல் மொழியில், “ஏன் அத்தான், இப்போ எம்மேல இருந்த கோவம் எல்லாம் போயிடுச்சா?”

 

“என் செல்ல குட்டிட்ட நான் கோச்சுக்குவேனா என்ன? நீ படிப்ப முடிக்கிற வரைக்கும் என்னையும் மீறி எதுவும் நடந்திட கூடாதுன்னு ஒதுங்கி இருக்க நினச்சேன். அதான் உங்கிட்ட கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா நடந்துக்க ட்ரை பண்ணேன். பட் நீ அழுததும் அந்த ஐடியா டோட்டல் ப்ளாப்” என்று காது மடலை இதழால் வருடியதும் வெட்க கூச்சலிட ஆழமாக அவன் மார்பினுள் புதைந்து கொண்டாள். அதில் தன்னை மறந்து அருண் சில இதழ் முத்தங்களை பரிசளித்தான்.

 

சில நிமிடங்கள் கழித்து அருண் நிதானமடைந்து, “நீ சொன்னத நான் கேட்டேன்ல, இப்ப நான் சொல்றத நீ கேப்பியாம். காலேஜ் முடிக்கிற வரைக்கும் இப்டி அத்தான கன்பியூஸ் பண்ணாம நீ சமத்தா இருப்பியாம், என்னையும் சமத்தா இருக்க விடுவியாம். அதுக்கு அப்புறம் நீ ப்ரீ ஆனதும் நாம குட்டி பாப்பா வாங்குவோமாம். சரியா”

 

முத்து பல் வரிசை தெரிய இந்து புன்னகைத்து கொண்டே வழக்கம் போல தன் தலையை கோவில் மணியாய் மளமளவென ஆட்டினாள்.

 

“தாயே பரதேவதை… நீ முடியாதுன்னு சொன்னா கூட பரவாயில்ல, தலைய மட்டும் இப்டி ஆட்டாதம்மா எனக்கு நெஞ்சு பக்கு பக்குன்னு அடிச்சுக்குது.”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: