கபாடபுரம் – 21

21. ஒரு சோதனை

 

    • மரக்கலத்தில் தீப்பந்தங்கள் ஏற்றிப் பொருத்தப் பெற்றன. இருட்டிவிட்டதை உணர்வுக்குக் கொணர்வதுபோல் அந்தப் பந்தங்களின் ஒளி இருளின் செறிவைக் காட்டலாயிற்று. எங்கோ தொலைவில் அதே போன்ற ஒளியின் தூரத்துப் புள்ளிகள் தென்படத் தொடங்கின.

 

    • “வேறு மரக்கலங்களும் தென்படுகின்றன. இனி பயமில்லாமல் போகலாம்” என்றான் முடிநாகன்.

 

    • “அதெப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியும்?” என்று பதில் வந்தது இளையபாண்டியனிடமிருந்து.

 

    • “கடற்பகுதியின் இந்த இடங்களில் முந்நீர்க் கொள்ளைக்காரர்களாகிய கடம்பர்கள் மிகுதியாயிருப்பதாகச் சொல்வார்கள். தனிக் கப்பல்கள் சிக்கிக் கொண்டால் கடம்பர்கள் துணிவாகக் கொள்ளைக்கு வருவார்கள். கூட்டம் கூட்டமாக மரக்கலங்கள் செல்லும்போது அவர்கள் தொல்லை இராது” என்ற முடிநாகனின் பேச்சை இடைமறித்து,

 

    • “உன் கண்ணில் இப்போது தென்படும் மரக்கலங்களின் ஒளித் தோற்றத்தைக் கொண்டு மட்டுமே அவை நமக்கு வேண்டியவர்களின் மரக்கலங்கள் என்றோ நம்மைப்போல் யாத்ரீகர்களின் மரக்கலங்கள் என்றோ எப்படிக் கொள்ள முடியும்?” என்று கேட்டான் சாரகுமாரன். அதை மறுத்துச் சொல்லவும் முடிநாகனால் இயலவில்லை. இளையபாண்டியனே மேலும் கூறத் தொடங்கினான். “நான் சொல்வதைக் கவனமாகக் கேள் முடிநாகா! தென்பழந்தீவுகள் பலவானாலும் – தீவுகளில் வாழ்பவர்களும், தீவுகளை ஆள்பவர்களும் கடற் கொலைஞர்களே. இனிவரப்போகும் எல்லாத் தீவுகளுக்கும் முன்வாயில் போன்ற இந்த எயினர் தீவிலேயே நாம் சந்தேகத்துக்கு ஆளாகிவிட்டோம். ஆயினும் தப்பி வந்தாயிற்று. நாம் அரச குடும்பத்துப் பிரதிநிதிகளா, அல்லது வெறும் யாத்திரிகர்களா? என்று சந்தேகத்துடனேதான் எயினர் தீவின் தலைவன் நமக்கு விடைகொடுத்திருக்கிறான். இதை நினைவில் வைத்துக் கொண்டு பயணம் செய்தால்தான் நாம் நம்முடைய பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பிப் போக முடியும். ஆகவே இனி நாம் ஒரு காரியம் செய்ய வேண்டும்…”

 

    • “என்ன செய்ய வேண்டும் என்றுதான் கூறுங்களேன்…”

 

    • “நம்மை யாத்திரிகர்களாவே நிரூபிக்க வேண்டும். எப்படி யார் நம்முடைய பொறுமையைச் சோதித்தாலும் நமக்குக் கோபம் வரக்கூடாது. கோபம் வந்தால் தன்மான உணர்வு பெருகும். தன்மான உணர்வு பெருகினால் நம்மை வீரமரபினராக நிரூபித்துக் கொள்ளத் தோன்றும். போரிடும் உணர்வு வெளிப்படுமானால் ‘உயர்ந்த அரசகுடும்பத்தைச் சேர்ந்த க்ஷத்திரியர்கள் இவர்கள்’ என்று தெளிவாக நம்மைப் பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். நாம் அதற்கு இடங்கொடுக்கக் கூடாது. ஆனால் அப்படிக் கோபதாபங்களுக்கு இடங்கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் தான் இனி நிறைய வரும் என்று தோன்றுகிறது. வீரத்தையும் காட்டக்கூடாது. செல்வத்தையும் காட்டக்கூடாது. நம்மிடமிருக்கும் விலையுயர்ந்த கபாடத்து முத்துக்களை வலிய எயினனிடம் வழங்கியதுபோல் இனியும் தொடர்ந்து வழங்கிக் கொண்டே போகக்கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது. அதுவும்கூட ஒரு நிலைமைக்கு மேல் நம்மைச் சந்தேகத்துக்குரியவர்களாக்கிக் காட்டிக் கொடுத்துவிடும். யாத்திரிகர்களிடம் எவ்வளவு முத்துக்கள் தான் இருக்க முடியும்?”

 

    • “இதைத்தான் நான் முன்பே கூறியிருக்கிறேனே? ‘யாத்திரிகர்கள்’ என்ற போர்வைதான் நமக்குப் பாதுகாப்பானது. அதில் சந்தேகமேயில்லை. ஆனால் இவர்களுடைய அன்பையும் மதிப்பையும் பெற நம்முடைய கபாடத்து முத்துக்களை அளிப்பது பயன்படுமானால் நாம் அதற்குத் தயங்குவானேன்?”

 

    • “தயங்க வேண்டிய அவசியம் எயினர் தீவில் இறங்கிய வேளையில் நமக்கு இல்லை முடிநாகா! ஆனால் இனி அப்படித் தயங்கி ஆக வேண்டிய அவசியம் இருக்கிறது. நாம் சந்தேகத்திற்கு ஆளாக வேண்டியதாக நேர்ந்துவிட்ட பின் தயக்கத்துக்குக் காரணமிருக்கிறது. நம்மை வழியனுப்பிய சுவட்டோடு எயினர் தலைவனே நாத கம்பீர ஆற்றின் முகத்துவார வழியே வேறிரண்டு கப்பல்களை அனுப்பி நம்மைச் சோதிக்க நேரிடலாம். அந்தச் சோதனையின் போது நாம் ஏமாறிவிடக்கூடாது என்பதுதான் என் கருத்து.”

 

    • “அப்படி ஒரு சோதனை நமக்கு வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா இளையபாண்டியரே? என்று முடிநாகன் வினாவி முடிக்கவும்,

 

    • “நிச்சயமாக நினைக்கிறேன்! அதோ எதிரே பார்! புரியும்” – என்று பரபரப்போடு எதிர்புறம் சுட்டிக் காண்பித்தான் சாரகுமாரன். முடிநாகன் அவன் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்து மலைத்தான். வழியை மறித்தாற்போல் கடலில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மரக்கலங்கள் நிற்பதும் அவற்றிலிருந்து தீப்பந்தங்களோடு சிறுசிறு படகுகளில் பிரிந்து இறங்கி ஆட்கள் வியூகம் வகுத்தாற்போல் கடலில் தென்படுவதும் நல்லதற்கு என்று படவில்லை.

 

    • “முடிந்தவரை கபாடபுரத்து அரச சின்னங்களள மறைத்துவை. முத்துக்களை மரக்கலத்தின் கீழறையில் கொட்டி ஒளித்துவிடு. ஒரு பாவமும் அறியாத யாத்திரிகர்கள் போல் நடிக்க இனி நீயும் நானும் துணிய வேண்டும். ‘வலிய எயினனின் அன்பிற்குரிய விருந்தினர்களாக இருந்துவிட்டு வேறு தீவுகளுக்காகப் பயணத்தைத் தொடர்வதாக அவர்களிடம் கூறுவோம். வலிய எயினன் நாட்டில் இயற்கையழகு மட்டுமே நம்மைக் கவர்ந்ததாகச் சொல்வது தவிரக் கப்பல் கட்டும் தளத்தைப் பார்த்த நினைவே நமக்கு அடியோடு மறந்துவிட்டதுபோல் நடிப்போம். தப்பி மேலே செல்ல இவற்றைத் தவிர வேறு வழி இல்லை. இவற்றைக் கொண்டே தப்பி மேலே சென்றுவிடலாம் என்பதற்கும் உறுதி இல்லை” என்றான் இளையபாண்டியன்.

 

    • “இது இப்படித்தான் நடக்கும் என்று எப்படிப் பொருத்தமாக உங்களால் அநுமானம் செய்ய முடிந்தது இளையபாண்டியரே?” – என்று முடிநாகன் வியந்தான்.

 

    • “ஏதோ மனத்தில் தோன்றியது. அதற்கு விளைவு இருக்குமென்றும் நம்பமுடிந்தது. நான் நினைத்தபடியே இப்போது நடக்கிறது. வழி மறித்துக் கொண்டு நிற்கும் கலங்களை மீறி நம் மரக்கலத்தைச் செலுத்த வேண்டாம். இங்கேயே அடங்கிப் பணிவதுபோல் நிறுத்த ஏற்பாடு செய். நமது மரக்கலம் நின்றவுடனே அவர்களே கோபாவேசமாக வருவார்கள். பணிவாகவே பேசுவோம். வலிய எயினனின் விருந்தோம்பும் பண்பைப் புகழ்வோம்” என்று நடக்க வேண்டியவற்றில் பரபரப்புக் காட்டத் தொடங்கினான் சாரகுமாரன். முடிநாகனுக்கு அந்த முன்னெச்சரிக்கை வியப்பை அளித்தது. இளைய பாண்டியருடைய ‘அரசதந்திர’ மதிநுட்பம் பெருகிவருவதை உள்ளூரப் பாராட்டிப் பெருமை கொண்டான் அவன். அதற்குள் கடலில் நாலா திசைகளிலிருந்தும் படகுகள் அவர்கள் கலத்தை நெருங்கின. கொள்ளையிடுபவர் வழக்கமாகக் குரவையிடும் கோர ஒலிவிகற்பங்களும் காது செவிடுபடும்படி ஒலிக்கலாயின. அவர்களோ இயல்பை மீறிய நிதானத்தோடு அந்தக் கடற்கொள்ளைக்காரர்களை எதிர்கொண்டனர். தோன்றியபடி தோன்றிய இடத்தில் சட்டங்களையும் கயிறுகளையும் பற்றி அவர்கள் மரக்கலத்தில் ஏறிவந்த போது அந்த ஆத்திரமே குளிர்ந்து போகும்படி இளையபாண்டியனும், முடிநாகனும் அவர்களைப் பணிவோடும் விநயத்தோடும் வரவேற்றனர்.”

 

    “உங்களுக்கு எது வேண்டுமானாலும் தரச் சித்தமாயிருக்கிறோம். இந்த மரக்கலத்தை உங்கள் சொந்த மரக்கலம் போல் நினைத்துக் கொள்ளலாம். நாங்கள் வலிய எயினரைச் சந்தித்த மகிழ்ச்சியிலிருக்கிறோம். வலிய எயினரைப் போல் வெறும் யாத்திரிகர்களிடம் இவ்வளவு அன்பு காட்டுகிற கனிவு வேறு யாருக்கு வரும்? எயினர் தீவின் அழகையும் இயற்கை வளத்தையும் எங்களால் மறக்கவே முடியாது. ‘மேலே உங்களுடைய யாத்திரையைத் தொடரும் போது கடலில் ஒரு பயமுமின்றிச் செல்லலாம்’ என்று வலிய எயினர் கூறிய வார்த்தைகள் இன்னும் எங்கள் செவிகளில் ஒலித்தவண்ணமிருக்கின்றன” என்று இளையபாண்டியனும் முடிநாகனும் அன்போடு கூறிய சொற்களைக் கேட்டு வந்தவர்கள் தயங்கித் தயங்கி நிற்கவே – இவர்கள் இருவரும் மேலும் உற்சாகமாக வலிய எயினனைப் புகழலாயினர். வந்தவர்கள் தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இளையபாண்டியனோ அந்தச் சோதனையிலிருந்து மீள முடிவு செய்துவிட்ட வைராக்கியத்துடன் காரியங்களைச் செய்யலானான்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஒகே என் கள்வனின் மடியில் – 17ஒகே என் கள்வனின் மடியில் – 17

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு நீங்க அனைவரும் தந்த வரவேற்புக்கு மிக்க நன்றி. ஒவ்வொரு பகுதிக்கும் ப்ளாகிலும், முகநூலிலும், மெயில் மற்றும் மெசேஜில் கமெண்ட்ஸ் தரும் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள் கோடி. விபிஆர்  எவ்வளவு பெரிய எழுத்தாளர் அவங்க  எனது கதைகள்

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 13’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 13’

ஒரு சுகமானதொரு கனவு. அதைக் கனவு என்பதை விட, கனவாய் உறைந்துவிட்ட நினைவுகளின் பிம்பம் என்று சொல்லலாம். அந்த நினைவுகளுக்குள் மூழ்கியிருக்கும் காதம்பரியுடன் நாமும் இணைந்து கொள்வோம்.   சற்று பூசினாற்போல் தேகம், பாலில் குங்குமப்பூவை லேசாகக் கலந்தால் இருக்குமே அதைப்

கடவுள் அமைத்த மேடை – 1கடவுள் அமைத்த மேடை – 1

வணக்கம் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. ராணிமுத்துவில் வெளிவந்த ‘வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே’ கதையை படித்துவிட்டு முகநூலிலும் மெயிலிலும் தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி. சித்ராங்கதாவில் சரயுவை பாராட்டி இன்னமும் எனக்கு எழுதுகிறீர்கள் நன்றி. இப்போது ‘கடவுள் அமைத்த மேடை’ கதைக்கு வருவோம்.