Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 7

  ரவோடு பகல் கைகோர்த்து

நின்ற அழகிய மாலை நேரம், வெற்றி கனவோடு கைகோர்த்து நின்றான் வருண். பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் வீட்டிற்கு சென்றாகி விட்டது, இசையையும் சேர்த்து. மற்றவர்களை போல சித்தார்த்தால் எனக்கென்ன என்று போக முடியவில்லை, இசையை உயிருக்கு உயிராக காதலித்து விட்டானே. அவளை புரிந்து கொள்ள முயன்றதில் அவன் தனது நிம்மதியை தொலைத்து விட்டு, திக்கு தெரியாத பறவையை போலானதுதான் மிச்சம். தனிமையை விரும்பி பள்ளிக்கு பின்னால் தனக்கும் அவளுக்கும் இஷ்டமான அந்த பன்னீர் பூக்களை சூடிய பெரிய மரத்தின் கீழிருக்கும் ஸ்டோன் பெஞ்ச்சில் அமர்ந்திருந்தான். தென்றல் காற்று வந்து ஆதரவாக அவன் தலைவருட அந்த சுகத்தில் லயித்து தலைக்குமேலே விரிந்து கிடக்கும் விண்ணை பார்த்தான். இந்த வானத்தை ஆயிரம் முறை பார்த்தாலும் அது ஏதோ ஒரு புதிய காட்சியை காட்டிய படி, ஒரு புதிய செய்தியை சொல்லி கொண்டே இருக்கும். அவளும் எட்டாக்கனியான இந்த வானத்தை போலத்தான் விசித்திரமாய் இருக்கிறாள். அவளை பற்றி தெரிய வரும் ஒவ்வொரு செய்தியும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், கேள்வியே புரியாத புதிரை போல ஏன் இத்தனை குழப்பங்களாய்? அவள் வாழ்க்கையை பற்றி யாரிடம் கேட்டு தெளிவு படுத்தி கொள்ளலாம் என குழம்பினான்.

 

    சித்தார்த் பின்னாலிருந்து வருண், “குட் ஈவ்னிங் மிஸ்டர் சித்தார்த்” என்றான்.

 

     இந்த நேரத்தில் வருணின் வருகையை எதிர்பாராததால், “ஹலோ சார்” என்றான் குரலில் ஸ்ருதியின்றி.

 

    “நான் இல்லாதப்போ நீங்கதான் என் வொய்ப்க்கு நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கீங்கன்னு கேள்வி பட்டேன். தேங்க்ஸ் பார் யுவர் சப்போர்ட்.”

 

     சித்தார்த் நக்கலாக, “யாரு நானா? என்கிட்ட மட்டுமில்ல உங்க வொய்ப் இதுவரைக்கும் யாருகிட்டயும் ஹெல்ப்னு போய் நின்னதே இல்ல”

 

    “அவளுக்கு கொஞ்சம் வீம்பு ஜாஸ்தி, பட் மத்தவங்கள விட நீங்க அவளுக்கு ரொம்பவே ஸ்பெஷல்னு எனக்கு தெரியும்”

 

    “நாங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் ப்ரன்ட்ஸ். எங்கள பத்தி யாரோ தேவையில்லாம உங்க கிட்ட தப்பா சொல்லி வச்சிருக்காங்க”

 

    “சொன்னது யாரோ இல்ல, சாட்ஷாத் என் பொண்டாட்டியேதான்”

 

     சித்தார்த்துக்கு மீண்டும் தலை சுற்றியது, ‘இவ என்ன பொண்ணா இல்ல மிஸ்ட்ரி வேர்ல்டு ஏன்ஜலா? இது வரைக்கும் அவ குடுத்த ஷாக்கே தாங்கமுடியாம உக்காந்திருக்கேன், அதுக்குள்ள அடுத்த ஷாக் குடுத்துட்டா’

 

    “நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும், இதபத்தி பேசத்தான் காலைலயும் போன் பண்ணேன். பட் போன்ல சொல்ல முடியல…” என்று இழுத்தான்.

 

     இவனுக்கு கேட்க வேண்டும், அவனுக்கு சொல்ல வேண்டும், இருந்தும் கதையை ஆரம்பிக்க வழி தெரியாமல் ஒருவன் விரல் நகத்தை கடித்து கொண்டும், இன்னொருவன் இலையை பிய்த்து எறிந்து கொண்டும் காலம் தாழ்த்தினார்கள். இருள் தாழ உலகின் ஒலியெல்லாம் அடங்கிய தருணத்தில் தூரத்து மரத்திலிருந்து ஒரு குயில் கூவும் சத்தம் மட்டும் காற்றை கிழித்து கொண்டு வந்து இருவரின் காதிலும் கேட்டது.

 

     வருண், “இயலும் இப்டிதான் ரொம்ப அழகா பாடுவா, அவ குரல முதல்முதலா ஒரு கோவில்லதான் கேட்டேன். கிட்டத்தட்ட இயலோட வாய்ஸ்ம் ஸ்ரேயா கோஷல் வாய்ஸ் மாதிரியே கிரிஸ்டல் கிளியரா இருக்கும்.”

 

    சித், “ஸோ லவ் மேரேஜ்ஜா”

 

     துக்கமும் மகிழ்ச்சியும் ஒரு சேர புன்னகைத்த வருண், “லவ்வா… நான் தாலி கட்றதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி வரைக்கும் அவளுக்கு என்ன பத்தி எதுவுமே தெரியாது, அவ்ளோ ஏன் அந்த கல்யாணத்த பத்தியே அவளுக்கு தெரியாது.”

 

     “அப்போ சைல்டு மேரேஜ்ஜா?”

 

     “இல்ல டூ இயர்ஸ் பிவோர்தான் மேரேஜ் ஆச்சு”

 

     “அந்த பையன் தருண் யாரு?”

 

     “என்னோட பையன்தான்”

 

     சித் வருண் சட்டையை பிடித்து கொண்டு, “டேய், என்ன விளையாடுறியா? விட்டா ரெண்டுபேரும் என்னை பைத்தியாமாக்கிடுவீங்க போல. அப்டி என்னதான்டா நீங்க ரெண்டு வருஷத்துக்கு முன்ன செஞ்சு தொலச்சீங்க? என்னால சத்தியமா கெஸ் பண்ணவே முடியலடா. நீ உண்மையிலேயே அவளுக்கு ஹஸ்பெண்ட்தானா? சாதாரணமா இருக்குற அவளுக்கும் பரம்பரை பணக்காரனா இருக்குற உனக்கும் என்ன சம்பந்தம்? எப்டிடா? இது எப்டி சாத்தியமாகும்? எனக்கு நல்லா தெரியும் இப்பத்தான் அவளுக்கு 22 வயசு ஆகுது, நீ எப்டி ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே அவள மேரேஜ் பண்ணின? அப்போ அவ படிப்ப கூட முடிச்சிருக்க மாட்டாள்ல. இதுக்கு நடுவுல ஆறு வயசுல குழந்தை எங்கிருந்து வந்தது? அப்போ அது பொறக்குறப்போ அவளுக்கு 16 வயசா? அது உங்க குழந்தை இல்லன்னா உன்னோட முக சாயல் எப்டி வந்தது? எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு, நடந்தது என்னன்னு தயவு செஞ்சு சொல்லிடு ப்ளீஸ்”

 

     “அட இருடா, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு சொல்றேன்” என்று தன் கோட்டை கழற்றி கையில் வைத்துக்கொண்டு சொல்ல ஆரம்பித்தான்.

 

    “மூணாறு பக்கத்தில இருக்குற தேவிகுளம் தான் எங்களோட சொந்த ஊர். இதோ இந்த ஸ்கூல மாதிரி மூணு மடங்கு பெருசு என்னோட வீடு. ஸ்கூல் கிரவுண்ட் எங்க பேக் ஸைடு கார்டன்ல கால்வாசி தான் இருக்கும். எங்க அப்பா சோம சுந்தரம் கேரளாவோட பணக்காரங்க லிஸ்ட்ல 20 வருஷமா டாப் டென்ல இருக்குறவரு, அம்மா ஆனந்தி ஹவுஸ் வொய்ப். அங்க ஒரு பெரிய மலையே எங்களுக்கு சொந்தமா இருக்கு, 100 வருஷமா டீ எக்ஸ்போர்ட் பிஸினஸ் பண்ணிட்டு வர்ற குடும்பம் நாங்க. கல்யாணமாகி ரொம்ப நாளா குழந்தை இல்லாம இருந்த அம்மா அப்பாக்கு 15 வருஷம் கழிச்சு குழந்தை பொறந்துச்சு. எங்க தாத்தாவோட பேரு அருணகிரின்றத சுருக்கி அருண்னு அவனுக்கு பேர் வச்சாங்க. பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்னோட அண்ணன். அதுக்கு பிறகு ஆறு வருஷம் கழிச்சு நான் பொறந்தேன். நானெல்லாம் பார்ன் வித் கோல்டன் ஸ்பூன் தெரியுமா. அண்ணனுக்கும் எனக்கும் எதிர்காலத்தில எந்த பிரச்சனையும் வரக்கூடாது, பேரு கூட ஒத்துமையா இருக்கனும்னு வருண்னு எனக்கு பேரு வச்சாங்க. இன்பேக்ட் இந்த பேர செலக்ட் பண்ணினதே என்னோட அண்ணன்தான்.”

 

     சித், “நான் உங்க குடும்ப ஹிஸ்ட்ரிய கேக்கல, இசைய எப்டி கல்யாணம் பண்ணீங்கன்னு தான் கேட்டேன்.”

 

      “அந்த பிளாஷ்பேக் புரியனும்னா இந்த பிளாஷ்பேக்கையும் நீ கேட்டுத்தான் ஆகனும்”

 

      “ஸ்ஸ்ஸ்ஸ்… சரி சொல்லு…” இருவரும் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த பெரிய கதையை பற்றி விவாதிக்க வசதியாய் சாய்ந்து அமர்ந்து கொண்டனர்.

   

            *****   *****    *****

 

   குளிரும் பனியில் மஞ்சள் முகமாய் கதிரவன் எழும்ப, இருட்டும் வெளிச்சமும் பட்டும் படாமலும் விட்டும் விடாமலும் வெண் போர்வை பனியினை மெல்ல மெல்ல விலக்கி கொள்ள, மலையாள மலைமகளின் கண் கொள்ளாக் காட்சி மப்பும் மந்தாரமுமாக கண் நிறைய விரிந்தது. மூணாறு, எண்ணற்ற தலைமுறையினர் வந்து போயிருந்த போதிலும், புதிய நூற்றாண்டு மக்கள் மத்தியில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தாலும், இந்த மலை பிரதேசத்தில் மட்டும் இயற்கை அன்னை அழகாய் துயிலுகிறாள்.

 

       வன விலங்குகள் நுழைந்து விடாமல் மிகப்பெரிய காம்பவுண்ட் சுவர்களுடன் நவீன முறையில் பிரம்மாண்டமாக எழுந்தருளி இருந்தது அந்த மாளிகை. பொதுவாகவே கேரள வீடுகள் எல்லாம் ஒன்றை ஒன்று ஒட்டாமல் தனித்து நிற்கும். இந்த மாளிகை தன் பணச்செழுமையை காட்ட மற்றவர்களை விட்டு இன்னும் தள்ளி இருந்தது. வீடே அலறிடும் படி புயலென தன் காரை ஓட்டி கொண்டு வந்து காம்பவுண்ட் கதவை உடைத்து கொண்டு நின்றாள் இந்துஜா(19).

 

     கார் கீயை கூட எடுக்காமல் அம்போவென அதை அங்கேயே விட்டுவிட்டு உள்ளே நுழைய, பின்னாலேயே துள்ளி துள்ளி ஓடி வந்தாள் அவளின் தங்கை சிந்துஜா(15). இருவரும் ஆனந்தியின் தம்பி பிரபாகரன் வழி புதல்விகள். (ஆனந்திக்கு இரண்டு தங்கை ஒரு தம்பி, நமக்கு நடுப்பட்டவர்கள் தேவையில்லை என்பதால் அவர்களை இங்கேயே விட்டு விட்டு பிரபாகரன் மகள் இந்துஜாவை பின் தொடரலாம்.)

 

    இந்து விருந்தினருக்காக அமைக்க பட்டு இருக்கும் முதல் ஹாலுக்குள் நுழைந்தாள். சின்னவள் தன் செல்ல மாமனுக்கு தகவல் தர வேகமாக இரண்டாம்தர ஹாலுக்கு ஓடிவிட்டாள்.

 

    இந்துவை பார்த்ததும் எதிர்பட்ட வேலைக்காரர்கள் எல்லாம் தங்களது வருங்கால எஜமானிக்கு வணக்கம் வைத்து ஒதுங்கிட, நேராக சென்று பெரிய போட்டோவில் துயிலும் தன் அத்தை ஆனந்திக்கு விளக்கை ஏற்றினாள். முந்தைய நாட்களில் வந்தவுடன் அத்தையின் மடியை கட்டி கொள்பவள் இப்போது விழிகள் கசிய விளக்கை ஏற்றி வணங்குகிறாள்.

 

   இரண்டாம் ஹாலுக்கு நுழைந்த இந்து,  “சாந்தி….” என்று சத்தம் கொடுத்தாள். அவளின் சத்தம் மாளிகை முழுவதும் எதிரொலித்தது.  

 

     ஓடி வந்து பவ்யமாக நின்றாள் சமையல்காரி சாந்தி.

 

    “அத்தையோட விளக்கு அணைஞ்சு கிடக்கு” என்று சாந்தியை தீப்பார்வை பார்த்தாள்.

 

    சாந்தி, “மன்னிச்சிடுங்கம்மா, இனிமே இப்டி நடக்காது”

 

    “ம்ம்…..”

 

    இதற்குள் அவளின் சத்தம் கேட்டு அறுபதை தாண்டிய சோம சுந்தரம் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் தன் அறையை விட்டு வெளியே வந்திருந்தார். அவரின் கை பிடித்து சோபாவில் அமர உதவினாள் இந்து.

 

    “எங்க மாமா இருக்கான் அந்த தடியன்?”

 

    “என்னம்மா ரொம்ப கோவமா இருக்கியா?”

 

    “பின்ன உங்க புள்ள செஞ்ச வேலைக்கி சந்தோஷமாவா இருக்க சொல்றீங்க”

 

     “அவன் சொல்றதும் சரியாத்தானமா இருக்கு”

 

     “எது மாமா சரி? அத்தை போயி முழுசா ஒரு வருஷம் கூட ஆகல, நீங்க மூணு பேரும் எவ்ளோ மாறிட்டீங்க. போன வருஷம் மலைக்கோயில் திருவிழாக்கு ராஜா மாதிரி போனீங்க, இந்த வருஷம் மலையே ஏறுவீங்களான்னு டவுட்டா இருக்கு. அட நீங்களாவது வயசானவரு முடியாதவருன்னு விட்ரலாம், அருணும் வருணும் ரொம்பவே இளச்சுட்டாங்க மாமா. இப்டியே விட்டா உங்க புள்ள எங்க கல்யாணத்தப்போ ஒட்டடை குச்சி மாதிரி வந்து நிக்க போறாரு, மாலையோட கணம் தாங்காம ஸ்டேஜ்லயே விழுந்து வார போறாரு, எல்லாரும் பாத்து கேலியா சிரிக்க போறாங்க சொல்லிட்டேன்.”

 

      “ம்க்கும்….” என்ற கனைப்பு சத்தம் கேட்க திரும்பினாள், அவளின் ஆசை அத்தான் அருண் பின்னால் வந்து நின்றிருந்தான். அவனை கண்டதும் தன் மாமனாருக்கு பின்னால் போய் ஒழிந்து கொண்டாள் இந்து. அருணுக்கும் வருணுக்கும் உருவத்தில் கொஞ்சம் ஒற்றுமை இருந்தாலும் குணத்தில் அப்டியே நேர் எதிர். அருண் நாணல் போல வளைந்து கொடுப்பவன், பொறுமையில் புத்தருக்கு நிகர், தனது கருத்து சரி என்ற போதும் தன் எதிராளிக்கும் பேச வாய்ப்பு தந்து அவர்களின் தவறை புரியவைக்க முயலும் அறிவு ஜீவி. ஆனால் வருண் சற்றும் வளைந்து தராத ஆலம் விருக்ஷம், பிறந்ததிலிருந்தே அத்தனை பேருக்கும் செல்ல மகன் உத்தரவை மட்டுமே இட்டு பழகியவன் என்பதால் முன்கோபம் அவனுக்கு வலதுகை, தான் சொன்ன வார்த்தை தவறாய் இருந்தாலும் அதையும் சரியாக்க தெரிந்த சாணக்கியன்.

 

  அருண், “காலங்காத்தால காலேஜ்க்கு போகாம இங்க வந்து என்ன பிரச்சனை பண்ணிட்டு இருக்க இந்து.”

 

    சிந்துஜா, “அக்கா உங்ககிட்ட நியாயம் கேக்க வந்திருக்கா அத்தான்” என்றாள் அவன் தந்த சாக்லேட்டை சப்பிக்கொண்டே.

 

     “அடியே சக்களத்தி….” என்று உறுமினாள் சிந்து. அவர்கள் இருவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் என்பது ஊரறிந்த சேதி. இந்துவை வெறுப்பேற்றி பார்ப்பதிற்காகவே சிந்துவின் பால் அருணுக்கு கரிசனம் அதிகமாய் தோன்றும்.

 

     சிந்து, “எங்கிட்ட ஏன்க்கா ஏறுற? போ போயி உங்க மாமாகிட்டயே மல்லுக்கட்டு”

 

     சோம சுந்தரம், “அவ மறந்து விட்டாலும் நீ என்னை விட மாட்டிக்கிற சிந்து, இந்த மாமாவ பாத்தா உனக்கு பாவமாவே இல்லையாம்மா”

 

     சிந்து, “எனக்கும் இப்டித்தான மாமா கடுப்பா இருந்திருக்கும். ஏன் எனக்கும் அக்காக்கும் இந்த பேர வச்சீங்க? ஏதோ பெரிய புலவராட்டம் இப்டியா எங்க நாலு பேருக்கும் ரைமிங்கா பேரு வைப்பீங்க?அட்லீஸ்ட் கொஞ்சம் மாடர்னாவாச்சும் வைக்கலாம்ல.”

 

    “தெரியாம வச்சுட்டேம்மா, இனிமே இப்டி பண்ண மாட்டேன்டி தங்கம்”

 

      “நீங்க இப்ப திருந்தி என்ன பியோஜனம்? போங்க மாமா” என்று அருணை இடித்து கொண்டு நின்றாள்.

 

     இந்து, “உங்க சண்டைய நிறுத்திட்டு கொஞ்சம் என்னோட பிரச்சனைய கவனிக்கிறீங்களா? மாமா… பண்றதெல்லாம் பண்ணிட்டு கல்லுளி மங்கனாட்டம் நிக்கிற உங்க உத்தம புத்திரன கூப்ட்டு நியாயம் கேளுங்க.”

 

     “ஏய்… அப்டி என்ன அநியாயம் பண்ணிட்டேன்”

 

     “ஏன் எங்க அப்பாக்கிட்ட கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டீங்க அத்தான்?”

 

    “கல்யாணமே வேண்டாம்னு சொல்லல, இப்போதைக்கு வேண்டாம்னுதான் சொல்லி இருக்கேன்.”

 

   “நானும் மாமாவும் எங்க அப்பாவ கன்வின்ஸ் பண்ண எவ்ளோ கஷ்ட பட்டோம் தெரியுமா? நீங்க என்னடான்னா அசால்ட்டா ஒரு வருஷத்துக்கு தள்ளி வச்சிட்டீங்கள்ல. மாமா… உங்க புள்ளைக்கு என்னை புடிக்கலயான்னு கேளுங்க மாமா.”

 

     கல்லூரிக்கு தயாராகி வெளியே வந்த வருண், “என்ன இந்து இருக்குற அரியர கிளியர் பண்ண முடியலன்னு இப்டி ஒரு ஷார்ட் கட் கண்டு புடிச்சிருக்கியா?”

 

   இந்து வருணை பார்த்து “மரியாத மரியாத…” என்றிட அவனோ பழிப்பு காட்டி சென்றான். பதிலுக்கு அவனை வக்கனைத்து விட்டு மீண்டும் விட்ட இடத்தில் இருந்து பல்லவியை மாமனாரிடம் பாட தொடங்கினாள்.

 

      சோமசுந்தரம், “டேய் இந்து ரெண்டு நாளா சாப்டாம இருந்து அவங்க அப்பாகிட்ட சம்மதம் வாங்கிருக்கா தெரியுமா, பாவம்டா இந்த பொண்ணு”

 

    அருண், “அப்பா நீங்க இவ பேச்ச நம்பாதீங்க, ரெண்டு நாளும் சிந்துதான் ரகசியமா போய் சாப்பாடு குடுத்திருக்கா. இதுக்கு மேல நீங்க இதபத்தி யோசிக்காதீங்க பேசாம ரெஸ்ட் எடுங்க, நான் பாத்துக்குறேன். இந்து, நீ மேல என்னோட ரூம்க்கு வா”

 

    “மாட்டேன் அப்புறம் பேசியே என்ன ஏமாத்திடுவீங்க”

 

     “இப்ப நீ வர்றியா இல்லயா?”

 

      “மாமா நான் உங்கள நம்பித்தான் போறேன், உள்ள ஐயோ அம்மான்னு எதாச்சும் சத்தம் கேட்டுச்சுனா உடனே ஓடி வந்திடுங்க”

 

      அவள் உள்ளே நுழைந்ததும் கதவை அவசரமாக தாழிட்ட அருண் தன் கை வளைவில் கொண்டு வந்து நிறுத்தி, “ஏன்டி குட்டிபிசாசு, சொன்னா கேக்கவே மாட்டியா? நான் தான் போன வாரமே தெளிவா சொன்னேன்ல 19 வயசில கல்யாணம் பண்றது தப்பு, நீ படிச்சு முடிச்ச பிறகு கல்யாணத்த வச்சுக்கலாம்னு, போறாததுக்கு நீயும் வருணும் ஒரே க்ளாஸ் வேற, உங்க பிரன்ட்ஸ் எல்லாம் உங்கள கலாய்ப்பாங்கன்னு தெளிவா புரியிர மாதிரி தானடி சொன்னேன். பின்ன ஏன்டி இப்ப வந்து இவ்ளோ குட்டி கலாட்டா பண்ணிட்டு இருக்க? உங்க அப்பாவயே ஏமாத்தி சம்மதம் வாங்கிட்டல்ல, அழிச்சாட்டியம் பண்றடி நீ”

 

     “பேசாதீங்க, கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டீங்கள்ல போங்க அத்தான், ஐ ஹேட் யூ.”

 

     “ஸோ வாட் ஐ ஈட் யூ” என்று இதழ் நோக்கி குனிய, அவனை தள்ளி விட்டாள் இந்து. “பாத்தியா நீ பக்கத்தில இருந்தா எனக்கு செல்ப் கன்ட்ரோலே இல்ல. இப்பவாது புரியுதா நான் ஏன் நீ படிப்ப முடிக்கனும்னு சொல்றேன்னு”

 

    “புரியுது” என்று கோவில் மணியாக தலையாட்டினாள்.

 

    “போன வாரமும் இப்டிதான் நல்லா மண்டைய ஆட்டின, இப்பவும் அதையே பண்ற, உன்ன நம்பி நான் பேக்டரிக்கு கிளம்புறேன்.”

 

   அன்று முழுவதும் அருணின் நினைவெல்லாம் இந்துவை சுற்றியே இருந்தது ‘ஏன் இவ்ளோ அடம்பிடிக்கிறா? திடீர்னு என்ன ஆச்சு அவளுக்கு, ஈவ்னிங் எதாச்சும் கிப்ட் குடுத்து கன்வின்ஸ் பண்ணனும்’. மாலையில் பேக்டரி முடியும் நேரம் இந்துவின் வீட்டிலிருந்து போன் வந்தது.

 

    பிரபாகரன், “மாப்ள, வர்ற 20ம் தேதி நாள் ரொம்ப நல்லா இருக்கு, அன்னிக்கே வச்சுக்குவோமா”

 

    “எத வச்சுக்கனும் மாமா?”

 

    “உங்க கல்யாணத்த…”

 

     “என்னது கல்யாணமா?”

 

    “என்ன மாப்ள இப்டி கேக்குறீங்க, அடுத்த முகூர்த்தத்திலயே கல்யாணம் வைக்க சொன்னீங்கன்னு இந்து இங்க வந்து சொன்னா”

 

     “என்னது???”

1 Comment »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: