Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 6

சையால் மனதை ஒரு நிலை படுத்தி வேலையில் கவனம் செலுத்தவே முடியவில்லை. காலையில் ஸ்கூலுக்கு வந்ததிலிருந்து அத்தனை கண்களும் அவளையே மொய்க்கிறது. சிலர் முதுகுக்கு பின்னால் புரணி பேசிக்கொண்டும் சிலர் பரிதாப பார்வை பார்த்து கொண்டும் இருப்பது, அவளுக்கு ஒவ்வொரு நொடியும் முள்மேல் நிற்பதை போல துன்புறுத்தியது. இத்தனைக்கும் இப்போதுதான் மணி பதினொன்றையே தொடுகிறது. போறாததுக்கு இந்த குழந்தைகள் வேறு சின்சேனின் அவதாரங்களாய் மாறி, “மிஸ் இவன் என்ன அடிக்கிறான், மிஸ் என்னோட பென்சில காணும்” என அவளை போட்டு வாட்டி எடுத்தார்கள்.

 

‘என்னால இதுக்கு மேல முடியாது, இந்த உலகத்துல ஒரு பொண்ணுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புன்னு எதுவுமே இருக்க கூடாதா? என்னோட சொந்த விஷயம்னு ரகசியமா எதையும் மனசுக்குள்ள வச்சிருக்க விட மாட்டாங்களா? ஏன் எல்லாரும் சும்மா சும்மா வந்து என்னை எட்டி பாத்துட்டு போறாங்க. சேய்.. எவ்ளோ நேரம் நானும் இதை சகிச்சுகிட்டே அமைதியா இருக்குறது? பேசாம மதியத்துக்கு மேல லீவ் எடுத்துடலாமா? அதான் சரி, இங்க இருந்தா வேடிக்கை பாத்தே என்ன சாகடிச்சிடுவாங்க.’ என பிரின்ஸிபல் அறைக்கு சென்றாள். அங்கே பிரின்ஸிபலுடன் வருணும் அமர்ந்திருந்தான்.

 

“சார், எனக்கு மதியம் லீவு வேணும்” என்றாள் பிரின்ஸிபலிடம்.

 

வருண், “சார் நீங்க கொஞ்ச நேரம் வெளியில இருக்கீங்களா, நான் இவங்ககிட்ட கொஞ்சம் பர்சனலா பேசனும்.”

 

பிரின்ஸிபல், “ஷ்யூர் சார்”

 

இசை, “சார் இவருகிட்ட நின்னு பேசிட்டு இருக்க எனக்கு டைம் இல்ல, க்ளாஸ்ல நிறைய வேலை இருக்கு. நீங்க லீவு தர்றீங்களா இல்லையானு சொல்லுங்க, நான் சீக்கிரம் போகனும்.” என்றதும் ஒரு நிமிடம் தயங்கி நின்ற பிரின்ஸிபல், வருண் கண்ணசைவை கண்டு உடனடியாக அந்த அறையை விட்டு வெளியேறினார்.

 

வருண் சாய்வு நாற்காலியில் வசதியாக சாய்ந்தமர்ந்து கொண்டு, “சொல்லுங்க மிஸ் இயலிசை என்ன வேணும்?”

 

“ஏன், இவ்ளோ நேரமா நான் தொண்ட கிழிய கத்தினது உங்க காதுல விழலியா?”

 

“சாரி, நான் கவனிக்கலியே என்னோட கவனம் வேற எங்கியோ.. இருந்தது…” என பார்வையால் அவளை மேலிருந்து கீழாய் வருடிட அவளின் பூவுடல் வருணின் பார்வை பட்ட இடங்களில் எல்லாம் புல்லரித்தது.

 

“இது ஸ்கூல், பிகேவ் யுவர் செல்ப்” என்று திரும்பி செல்ல எத்தனிக்க வருண் எழுந்து வந்து வழி மறித்து அவள் முன் நின்றதும், பயந்து போய் அருகிலிருந்த சேரை விடாமல் பிடித்து கொண்டாள்.

 

“என்னடா இயல், பயம்மா இருக்கா இல்ல மயக்கம் வர்ற மாதிரி இருக்கா? நான் கொஞ்சம் ஹேண்ட்சம்தான், ஆனா அதுக்காக நான் பக்கத்தில வந்ததுமே இப்டியா என் அழகுல மயங்கிடுறது…”

 

அவன் வார்த்தையில் சுதாரித்தவள் நிமிர்ந்து நின்று, “உங்கள சித்தார்த்கிட்ட பேச சொன்னேனே, பேசியாச்சா?”

 

“அதுவா… இன்னிக்கி மார்னிங் அவன ஒரு இடத்துக்கு வர சொல்லி போன் பண்ணேன், அவன் என்னடான்னா வர மாட்டேன்னு சொல்லிட்டான். சரிதான் போடான்னு நானும் விட்டுட்டேன்” என்றான் விட்டேற்றியாய்.

 

“உங்களுக்கு ஒரு விஷயம் தேவைன்னா அத அடையிறதுக்கு நீங்க சரியான விலை கொடுக்கனும். நீங்க எனக்கு குடுக்குற விலையிலேயே தெரியுது, உங்க மனசில என்னை எந்த இடத்துல வச்சிருக்கீங்கன்னு…”

 

வருண் அவளை நெருங்கி மூச்சு காற்று தொடும் தூரத்தில் நின்று, “ரெண்டு வருஷத்துக்கு முன்னால நான் உனக்கு கொடுத்த விலைய மறந்துட்டயா இயல்?”

 

அவள் கை கால்கள் தானாகவே நடுங்க தொடங்கிட வருண் பேச்சை மாற்றி, “ஹேய்… என்ன பாத்தா அவ்ளோ பயமா இருக்கா டார்லிங், பி கூல் நான் தள்ளியே நிக்கிறேன். என்னை உன் கிட்டத்துல கூட சேக்க மாட்டிக்கிறியே. ஏன், நான் உன்ன என் காதல்ல விழ வச்சிடுவேன்ற பயமா?”

 

அவன் நகன்றதும் மனதில் தைரியம் வந்து ஒட்டிக்கொள்ள, “இருக்க இடம் குடுத்தா மடத்தையே பறிக்கிற ஆளு நீங்க, உங்கள பாத்து நான் பயப்படாம இருக்க முடியுங்களா?”

 

“நேத்து நைட் ஏதோ கோபத்துல அப்டி பண்ணிட்டேன், அதுக்காக இப்போ சாரி கேக்கதான் உன்கிட்ட வந்தேன். பட் அதையே மறந்துட்டு வேற எதை எதையோ பேசி, பழசெல்லாம் ஞாபக படுத்தி உன்ன ஹர்ட் பண்ணிட்டேன் ”

 

“இட்ஸ் ஓகே சார், நான் கெட்டது எதையும் ஞாபகம் வச்சுக்க விரும்புறதில்ல”

 

“அப்டியா பேபி? பட் என்னிக்கோ நான் சொன்ன வார்த்தை எல்லாம் இப்ப வரைக்கும் அச்சு பிசராம எப்டி நீ திருப்பி சொல்ற? என்னையே மறந்தவ எதுக்கு என்னை பாத்த உடனே மயங்கி விழனும்? அதுவும் ரெண்டு தடவ. என்னால உன்னோட சாப்பாட்டு பழக்கத்த ஒரே வாரத்தில மாத்த முடிஞ்சது, அந்த சித்தார்த்தால ரெண்டு வருஷமா ஏன் முடியல ஸ்வீட்டி? இப்ப வரைக்கும் நான் பழக்கி விட்ட வாழ்க்கைய விட்டு உன்னால கொஞ்சம் கூட மாற முடியலன்னா, அந்த சித்தார்த்தால உன் மனசுக்குள்ள நுழைய முடியலன்னு தான அர்த்தம்?”

 

“……..”

 

“ஒண்ணு மட்டும் தெளிவா புரிஞ்சுக்கோ இயல், நீ வெறுத்தாலும் விரட்டினாலும் நான் உன்ன விட்டு ஒதுங்கி போயிடுவேன்னு மட்டும் நினச்சிடாத. இன்னிக்கி நைட்டும் கண்டிப்பா நான் உன் வீட்டுக்கு வருவேன்”

 

“இங்க பாருங்க, நீங்க முதல்ல சித் கிட்ட போய்….” அவள் முடிக்கும் முன்

 

“ஏய்.. நான் ஒண்ணும் சின்ன பப்பா இல்ல, சும்மா அதையே சொல்லி பூச்சாண்டி காட்டாதடி.”

 

“எனக்கு தல வலிக்குது. இப்ப லீவ் தருவீங்களா மாட்டீங்களா, அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க சார்”

 

“சும்மா எல்லாம் லீவ் தர முடியாது செல்லம், இப்போதான நீ சொன்ன, ‘ஒரு விஷயம் தேவைன்னா அத அடையிறதுக்கு சரியான விலை கொடுக்கனும்னு’. ஸோ ஸ்வீட்டாவோ ஸ்பைசியாவோ எனக்கு நீ ஏதாவது தந்தா நானும் உனக்கு லீவ் தர யோசிக்கிறேன்.” என்று அவள் முன் தன் கன்னத்தை நீட்டினான்.

 

“நான் இப்பவே வீட்டுக்கு போக போறேன், உங்களால என்ன செய்ய முடியுமோ அத செஞ்சுக்கோங்க.” என விருட்டென வெளியேறியவள் கை பிடித்து நிறுத்தி,

 

“என்கிட்ட இருந்து தப்பிச்சு போறது அவ்ளோ ஈசின்னு நினச்சிட்டயா இயல்? இன்னிக்கி ஈவ்னிங் ஸ்கூல் முடிஞ்ச பிறகு ஒரு ஸ்டாப்(staff) மீட்டிங் இருக்கு, அத எல்லா டீச்சர்ஸும் கண்டிப்பா அட்டர்ன் பண்ணனும்”

 

“இன்னிக்கி என்ன மீட்டிங்?”

 

“யாருக்கு தெரியும், இப்பத்தான மீட்டிங் இருக்குன்னு சொல்லி இருக்கேன், இனிமேதான் என்ன மீட்டிங் வைக்கலாம்னு நானே யோசிக்கனும்” என்றான் புன்னகையாய் தலை சாய்த்து.

 

“போடா லூஸு…” என்று கத்திவிட்டு இசை வெளியேற, வாசலில் ஒட்டுக்கேட்டு கொண்டு நின்ற ஒரு ஆசிரியையை பார்த்து, “ஏன் மேடம் இங்க நின்னு கஷ்டப்பட்டு கேக்குறீங்க, உள்ள வந்து ரெண்டு பேருக்கும் நடுவுல உக்காந்து வேடிக்கை பாக்க வேண்டியதுதான, தள்ளுங்க. என் உசுர வாங்குறதுக்குனே எங்கிருந்து தான் வந்து தொலைக்குதுங்களோ” என்று வசைபாடிவிட்டு சென்றாள்.

 

வருணோ, “அடேங்கப்பா ஊமையா இருந்தவ இப்ப என்னம்மா திட்றதுக்கு கத்து வச்சிருக்கா. வெளியில யாருக்கோ செம டோஸு போல, நல்ல வேள நான் சிரிச்ச சத்தம் அவளுக்கு கேக்கல, ஜஸ்ட் மிஸ்ல நான் தப்பிச்சிட்டேன்” என்று சந்தோஷமாக சிரித்து கொண்டிருந்தான்.

 

அடுத்த அரை மணி நேரத்தில் வருண் சொன்ன மாதிரியே மாலை நேர மீட்டிங்காக சர்குலர் டேபிளுக்கு வந்து விட்டது. வரப்போகும் முழு ஆண்டு தேர்வுக்காக மாணவர்களை வழிநடத்தி தயார் செய்ய ஆசிரியர்கள் விவாதம் நடைபெறுவதாய் அதில் அறிவிக்க பட்டு இருந்தது.

 

‘இந்த மீட்டிங் 6th to 12th எடுக்குற டீச்சர்ஸ் அட்டர்ன் பண்ணினாலே போதும், பர்ஸ்ட் ஸ்டேன்டர்டு படிக்கிற பசங்களுக்கு நாங்க என்னத்த பிரிபேர் பண்ண முடியும்? உப்புக்கு சப்பையா உக்கார வச்சு என் மூஞ்சிய வேடிக்கை பாக்க போறான்.’

 

சுமாராக ஐம்பது ஆசிரிய ஆசிரியைகள் அமர ஏற்றவாறு அனைவரும் ஒருவரை ஒருவர் காண வசதியாய், மீட்டிங் ரூம் வட்ட வடிவமாய் யு ஷேப்பில் மேஜைகளால் ஒழுங்கு படுத்த பட்டது. முன் பக்கத்தில் பிரின்ஸிபல் உதவி பிரின்ஸிபல் என முக்கிய நபர்கள் உட்கார நான்கு சேர்கள் போட பட்டு இருந்தது.

 

சரியாக மாலை நான்கு மணிக்கு ஆசிரியர்கள் அனைவரும் வந்துவிட, அடுத்த ஐந்து நிமிடத்தில் பிரின்ஸிபலுடன் வருணும் வந்தான். வகுப்பு வாரியாக ஆசிரியர்கள் அமர வேண்டுமென முன்னாலேயே அறிவிப்பு வந்ததால், இசை முதல் ஆளாய் அமர்த்த பட்டிருந்தாள். வருண் இசையின் பக்கமிருந்த சேரில் அமர்ந்து கொண்டான். மீட்டிங் பெரிய மாணவர்களுக்கான பரீட்சை பற்றியே நகர, இசை சுவாரஸ்யமின்றி யாருக்கு வந்த விருந்தோ என பேனாவை வைத்து விளையாடி கொண்டு இருந்தாள்.

 

திடீரென அந்த அறையின் கதவை யாரோ பலம்மாக தட்டும் சத்தமும், பியூன் கத்தும் சத்தமும் கேட்டது. அனைவரும் பேச்சை நிறுத்தி விட்டு அந்த பக்கம் திரும்பி பார்க்க, கதவு படாரென திறந்து கொண்டது. பியூனின் கைகளில் சிக்காமல் கிட்டத்தட்ட வருணின் ஜெராக்ஸ் காப்பியை போல இருந்த ஆறு வயது சிறுவன் ஒருவன் துள்ளி குதித்து ஓடி வந்தான்.

 

பந்தாவான வெஸ்டர்ன் ஆடை அணிந்து பால்மணம் மாறாத முக அழகில், நுனி நாக்கில் ஆங்கிலம் சரளமாக விளையாட, “டாட், இவர கொஞ்சம் சும்மா இருக்க சொல்லுங்க.”

 

பியூன், “சார், மீட்டிங் நடக்குதுனு தம்பிய வெய்ட் பண்ண சொன்னா கேக்க மாட்டிக்குது சார்”

 

“இவ்ளோ நேரமாவா மீட்டிங் நடத்துவீங்க? உங்களுக்காக நான் ரொம்ப நேரமா வெளியில வெய்ட் பண்றேன் தெரியுமா டாட் ” என்று சொல்லிக் கொண்டிருந்தவன் அப்போது தான் வருணுக்கு கொஞ்சம் தள்ளி இருந்த இசையின் முகத்தை பார்த்தான். இசையும் அவன் வளர்ச்சியில் தன் மனதை தொலைத்து மகிழ்ச்சியில் இருக்கும் இடத்தையே மறந்துவிட்டாள்.

 

தாயை கண்டதும் உலகையே மறந்த குழந்தை “அம்மா…..” என அவளருகில் ஓடி வர, அவளும் அவனை அணைக்க ஆசை கொண்டு எழுந்து நின்றாள். இசையின் இடையை கட்டிக்கொண்டான் தருண்.

 

“டாட் யூ ஆர் கிரேட் டாட். சொன்ன மாதிரியே மம்மிய கண்டு புடிச்சிட்டீங்களா? அதுக்காக தான் இவ்ளோ நாள் இந்த ஸ்கூலுக்கு வந்தீங்களா? மம்மி நீங்க இல்லாம நானும் டாடியும் தனியா ரொம்ப கஷ்ட பட்டோம். நீங்க சொன்ன மாதிரியே நான் நிறைய எக்ஸ்ட்ரா கிளாஸ் போறேன் மம்மி, என்னோட வேலை எல்லாமே நானே செய்ய கத்துக்கிட்டேன், இப்ப நான் தான் என் கிளாஸ்ல பர்ஸ்ட் மார்க் வாங்குறேன் தெரியுமா மம்மி. லாஸ்ட் சன்டே சவிதா ஆன்ட்டி என்னை அம்யூஸ்மென்ட் பார்க்குக்கு அவுட்டிங் கூட்டிட்டு போனாங்க, நான் ரொம்ப குட் பாய்யா நடந்து கிட்டேன் தெரியுமா. போட்டோஸ் கூட இருக்கு” என தன் மொபைலை எடுத்து அவளுக்கு ஆதாரம் காட்ட முற்பட்டான்.

 

வாயில் விரல் வைக்காத குறையாக அத்தனை முகங்களும் இசையையும் அந்த சிறுவனையுமே கண்கொட்டாமல் வேடிக்கை பார்த்தார்கள். இசை, “தருண் கண்ணா இங்க மீட்டிங் நடக்குது, வா நாம வெளியில போய் பேசலாம்” என அவனை வெளியே அழைத்து செல்ல, வருண் முகம் புன்னகை எனும் வெற்றி வாகை சூடிக்கொண்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: