Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 5

ன்னுமாடி நீ அதையே நினச்சுட்டு இருக்க?” என்று கண்கள் பனிக்க நின்றவனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் எழுந்து வெளியே சென்றாள். அவளுக்கு பிடித்தமான சலவை கல்லில் ஏறி அமர்ந்து கொண்டு தார் சாலையில் இயந்திர கதியாய் சுழலும் ஜன கூட்டத்தில் தன் பார்வையை பதித்தாள்.

 

    பின்னாலிருந்து வருண், “இயல்… இயல்…”என்று வருந்தி அழைத்ததெல்லாம் வீணாகிட, அவள் முன்னால் வந்து நின்று முகவாயை தனக்கு தோதாய் இழுத்து பிடித்து, “அன்னிக்கி நான் ஏதோ கோபத்துல அப்டி பேசிட்டேன், அதுக்காக இத்தன நாளா வெறும் தோசைய மட்டுமாடி சாப்பிட்டுட்டு இருந்திருக்க? ஏன்டி நீ இப்டி இருக்க? என்னால தாங்க முடியலடி.. இங்க பாரு, வாடி நாம நம்ம வீட்டுக்கு போலாம். இனிமே ஆயுசுக்கும் நான் பழைய மாதிரி நடந்துகவே மாட்டேன். எனக்கு ஒரே ஒரு தடவ வாய்ப்பு குடுத்து பாரேன், தப்பா போன எல்லாத்தையும் நான் சரி பண்றேன், நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்டி.”

 

    அவளிடம் அதற்கு பதிலாக சிறு பிரதிபலிப்புமின்றி போக, “அடப்போடி…..” என நொந்து போய் திரும்பி கொண்டான்.

 

     “நான் என்ன சார் பண்றது? எதையாவது சாப்பிட ஆசப்பட்டு கையில எடுத்தாலே நீங்க பேசின பேச்சுதான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது. இப்ப கொஞ்ச நாளாத்தான் காபி குடிக்க பழகி இருக்கேன், அதுவுமே சித்தார்த் கொஞ்சம் கொஞ்சமா கன்வின்ஸ் பண்ணி காபி குடிக்க வச்சதாலதான்.”

 

     “மறுபடியும் அவன் புராணமா?”

 

     “ஏன் உங்களுக்கு அவன புடிக்கலயா?”

 

     “எனக்கு மட்டுமில்ல இந்த உலகத்துல எந்த ஆம்பளைக்குமே தனக்கும் தன் பொண்டாட்டிக்கும் நடுவுல வந்து நுழையிரவன சுத்தமா புடிக்காது.”

 

     “தேங்க்ஸ் பார் தி இன்பர்மேஷன் சார், நான் உங்க கூட உங்க வீட்டுக்கு வரணும்னு நீங்க ஆசப்பட்டா போய் சித்தார்த் கிட்ட எல்லாத்தையும் சொல்லி பர்மிஷன் வாங்கிட்டு வாங்க. அப்டி இல்லன்னா என்னை அவன்கூட போக விட்ருங்க. அவன் ஒண்ணும் உங்கள மாதிரி இல்ல, என்னை நல்லா புரிஞ்சுட்டு இருக்கான், இன்பேக்ட் ஐ லவ் ஹிஸ் பிகேவியர் வெரி மச்”

 

     “ஏன் இயல், சித்தார்த் மட்டும் போதுமா, இல்ல நான் ஜானகி மாமிட்டயும் பர்மிஷன் வாங்கனுமா?” என்றான் கடுப்பாக,

 

     “இல்ல இல்ல. அவங்க அதெல்லாம் கேட்டா தாங்க மாட்டாங்க, பாவம் பிபி பேஷன்ட் வேற, அதுவுமில்லாம சித்தார்த்க்கு இப்பவே என்ன பத்தி தெரிஞ்சிடுச்சுனா பின்னால எங்க லைப் ஸ்மூத்தா போகும் பாருங்க. ஸோ சித் கிட்ட மட்டும் பழசெல்லாம் முதல்ல இருந்து சொல்லி பர்மிஷன் வாங்கிட்டு வந்தா போதும்.”

 

      “அடிப்பாவி நிஜம்மாத்தான் சொல்றியா? உனக்கென்ன அறிவு கிறிவு கெட்டு போச்சா இயல்?”

 

     அவன் தவிப்பை ரசித்தவள், “நிஜம்மாதான் சொல்றேன்…” என்றபடி அந்த கல்லிலிருந்து தாவி இறங்கினாள்.

 

     “இயல்… இயல்… ஒரு ஆம்பள எப்டிடி இன்னோரு ஆம்பளகிட்ட அதெல்லாம் சொல்ல முடியும்? இந்த விளையாட்டே வேணாம், நான் வேணும்னா உனக்கு வேற நல்ல ஐடியா தர்றேனே… நாம ஊருக்கு போனதுக்கு பிறகு நான் உனக்கு பண்ணதெல்லாம் நீ எனக்கு திருப்பி பண்ணு, உனக்கு இஷ்டமான வீட்டு வேலை எல்லாம் என்னை செய்ய சொல்லு, வேணும்னா டெய்லி என்னை அடி, இல்லன்னா என்னை கொஞ்ச நாளுக்கு வீட்ட விட்டு வெளிய அனுப்பு, அதுவும் இல்லன்னா…”

 

     அவள் இடை மறித்து, “அட நிறுத்துங்க சார், என்னை எங்க அம்மா அப்பா அந்த அளவுக்கு மோசமா வளக்கல. என்னோட முடிவு ரொம்ப சிம்பிள். ஒண்ணு போய் சித்தார்த் பர்மிஷன் வாங்கிட்டு வாங்க, இல்லன்னா இங்க இருந்தே கிளம்பிட்டே இருங்க, அட்லீஸ்ட் நான் அவன் கூடயாவது சந்தோஷமா இருப்பேன்.”

 

     “என்னடி, போனா போகுதுன்னு கொஞ்சம் விட்டு புடுச்சா ஓவரா பண்ற. கண்டவன்கிட்ட போய் நான் கெஞ்சிகிட்டு நிக்கனும்னு எனக்கென்ன வேண்டுதலா?  எனக்கு இதுவரைக்கும் மத்தவங்களுக்கு ஆர்டர் போட்டுத்தான் பழக்கம், நான் யாருகிட்டயும்  அடங்கி போனதா சரித்திரமே இல்ல. இப்ப சொல்றேன் கேட்டுக்க, ஊருக்கு நீயா வந்தா நடந்து வரலாம், நானா தூக்கிட்டு போனா பறந்து வரலாம். எனக்கு தெரிஞ்சு அவ்ளோதான் ரெண்டுக்கும் இருக்குற வித்யாசம்”

 

      “தூக்கிட்டு போய் என்ன செய்வீங்க? கயித்தால கட்டி வைக்க போறீங்களா? இல்ல காலம் முழுக்க வீட்டுக்குள்ள வச்சு கதவு ஜன்னலெல்லாம் பூட்டி வைக்க போறீங்களா? ஏற்கனவே ஒருதடவ உங்க கண்ணுல மண்ண தூவிட்டு தப்பிச்சு ஓடி வந்தவதான நான்.”

 

   ‘அவ சொல்றது சரிதான், மறுபடியும் தொலைஞ்சு போயிட்டான்னா தேடி கண்டு பிடிக்க என் உடம்புலயும் மனசுலயும் திராணி இல்ல. வேற வழியில்லையே, என்ன செய்ய? அவ சொல்றபடி ஆடத்தான் செய்யனுமா? ரெண்டு வருஷத்துல நல்லாவே பழிவாங்க கத்து வச்சிருக்காளே பாவி’

 

     “சரி இயல், நான் போய் அவன பாத்து பேசுறேன்”

 

     “பேசினா மட்டும் போதாது, என்னை கூட்டிட்டு போக பெர்மிஷன் வாங்கனும்”

 

    “ம்ச்ச்ச்.. இம்சடி நீ” என்றவனின் புலம்பல் சத்தம் கேட்டு அவளுக்குள் அத்தனை சந்தோஷம். அதன்பின் தோசை சுடும் முறையை இன்டர்நெட்டில் அலசி ஆராய்ந்து வித விதமான ஷேப்களில் தோசை சுட்டு தந்தான். அன்று முழுவதும் அடிக்கடி ஜானகி மாமி வந்து இசையை பார்த்து விட்டு சென்றார். மதியத்திற்கு மேல் காய்ச்சல் நன்றாகவே குறைந்துவிட, வருணை கட்டாய படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றினாள்.

 

    “இப்ப போறேன், மறுபடியும் நைட் வருவேன். அப்போ மட்டும் நீ இந்த வீட்ல இல்லன்னா, என் கோபமெல்லாம் அந்த சித்தார்த், ஜானகி தல மேல தான் போய் விடியும் ஜாக்கிரத…” மிரட்டிவிட்டு சென்றான்.

 

    அவன் போன பிறகு அசந்து போய் படுக்கையில் சாய்ந்தாள் இசை, ‘ஷப்பா… முடியல. இவன் வந்து முழுசா 24 மணிநேரம் கூட ஆகல, ஆனா எனக்கு என்னவோ ஒரு யுகமே ஆன மாதிரி இருக்கே. நான் இங்க இருந்து ஓடி போயிட்டா அவன்கிட்ட இருந்து தப்பிச்சிடலாம், ஆனா பாவம் சித்தும் ஜானகி மாமியும் மாட்டிக்குவாங்க. எனக்கும் இங்க ஒரு பாதுகாப்பான சூழல் கிடைச்சிருக்கு, புதுசா போற இடத்துல இவ்ளோ நல்லா அமையாது.’

 

    ‘அதுசரி, நான் எதுக்கு அவனுக்கு பயந்து ஓடனும்? அவனால நிச்சயமா சித்தார்த்த பாத்து பேசி சம்மதம் வாங்க முடியாது. வருணுக்கும் பொறுமைன்ற வார்த்தைக்கும் ரொம்ப தூரமாச்சே, கண்டிப்பா சொதப்பிட்டுத்தான் வந்து நிக்க போறான். அவனால ஊர்ல இருக்குற எஸ்டேட் வேலையெல்லாம் விட்டுட்டு ரொம்ப நாள் இங்க தங்கவும் முடியாது, ஐ திங்க் வருண் சீக்கிரமா இந்த இடத்த காலி பண்ணிடுவான்னு நினைக்கிறேன். அதுவரைக்கும் மட்டும் அவன நான் கஷ்டப்பட்டு சமாளிக்கனும், ஐயயோ என்ன தனியா புலம்பிட்டு இருக்கேன், இதுக்கெல்லாம் சேத்து உனக்கு இருக்குடா வருண்’ என புலம்பி கொண்டே உறங்கி போனாள்.

 

   இரவு நேரம் புழுதி காற்றோடு அடைமழை விடாமல் பிடித்து கொள்ள, அவன் வருவது நிச்சயமில்லை என நிம்மதியாய் இருந்தாள் இசை. சரியாய் இரவு ஒன்பது மணிக்கு குடையும் கையுமாய், “ஹாய் பேபி” என மோகன புன்னகையோடு அழகிய மன்மதனாய் வருண் வந்து நின்றான். காலையில் இருந்த கலக்கம் துளியும் இப்போது அவன் கண்களில் இல்லை. அவன் கொண்ட திடீர் மாற்றத்தில் இசை கதிகலங்கிட, அவனோ துளியும் கவலையின்றி இயல்பாக பெட்ரூம் உள் நுழைந்து ஆடைகளை மாற்றி விட்டு வந்தான்.

   

     “இயல் வர்ற வழியிலயே மாவு வாங்கிட்டு வந்துட்டேன், நான் தோசைசுட்டா ரவுண்டாவே வர மாட்டிக்குது, நீயே சுட்டு தர்றியா? ரொம்ப பசிக்குது”

 

     “நீங்க கேக்குறதெல்லாம் செஞ்சு குடுக்க நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரியா?”

 

     “அடடடடா அடங்க மாட்டியாடி நீ, சரி குடுடி நானே சுட்டுக்கிறேன்” என்று மாவு பாக்கெட்டுடன் கிச்சனுக்குள் நுழைந்து அடுப்பை அதகளம் செய்தான்.

 

     ‘ஒழுங்கா நானே சுட்ருக்கலாமோ. வெறும் தோசைய சுடுறதுக்கு போய், வெங்கல கடைக்குள்ள யானை புகுந்த மாதிரி உருட்டிட்டு இருக்கான்.’ என்று இசை கடுப்பாகினாள். மேலும் மேலும் பாத்திரங்கள் உருளும் சத்தம் அதிகமாக இசை எரிச்சலோடு கிச்சனுக்கு வந்தாள். “நாலு தோசைய சுடுறதுக்கு ஏன் பாத்திரத்த இந்த உருட்டு உருட்டுறீங்க? தள்ளுங்க நானே சுட்டு தொலைக்கிறேன்.”

 

     அவள் கரண்டியை கையில் எடுத்ததும் வருண் அடுப்பங்கறை திண்டில் ஏறி அமர்ந்து கொண்டான். காற்றில் நெற்றி தாண்டி புரளும் கூந்தலை அள்ளி கொண்டையிட்டு, துள்ளி செல்லும் முந்தானையை இழுத்து இடை பிரதேசத்தில் சொருகி, ஒரு கரண்டி மாவெடுத்து அழகாய் கை வளைத்து தோசை வார்ப்பவளை கண்டு அவன் சொக்கித்தான் போனான். இசை இரண்டே நிமிடத்தில் மளமளவென பாதி வேலையை முடித்துவிட்டாள். வெளியே மழையின் சத்தம் கொஞ்சமும் குறையவில்லை, பேய் காற்றின் பரிசாக சில சாரல் துளிகள் ஜன்னல் தாண்டி உள் நுழைந்து உள்ளிருந்தவர்களை எட்டி பார்த்து சென்றது. கடைசி தோசை வார்த்த நேரத்தில் கரன்ட் கட் ஆகிட, தேடி பிடித்து மெழுகு வர்த்தியை ஏற்றினாள். பென்சில் சைசில் இருந்த அந்த சின்ன மெழுகுவர்த்தி தன்னால் இயன்ற அளவிற்கு வெளிச்சம் தர முயல, மெல்லிய வெளிச்சத்தில் பௌர்ணமி நிலவாக அவள் முகம் ஜொலித்திட, தன்னவளின் அழகை வருண் கண் கொட்டாமல் ரசித்தான்.

 

     அவன் பார்வையில் மாற்றம் வந்ததை ஆரம்பத்திலேயே இசை கண்டு கொண்டாள். எனினும் அவன் முன் அதை காட்டி கொள்ள விரும்பாமல், முகத்தில் சிறிதும் சலனமின்றி வேலையை முடித்தாள். இசை வருணிடம் ஒரு தட்டை நீட்ட, தட்டோடு அவள் கையையும் சேர்த்து பிடித்து இழுத்து தன் மேல் விழ வைத்தான்.

 

     இசை “ஏற்கனவே உங்க மேல செம காண்டுல இருக்கேன், மூடிட்டு தின்னுங்க”

 

     “நானும் கூட செம மூடுல இருக்கேன் பேபி” என இவ்வளவு நேரம் விழியால் வருடியதை, விரல்களால் வருட தொடங்கினான்.

 

    “போதும் விடுங்க வருண்…”

 

     “நீ இல்லாம ரெண்டு வருஷமா காஞ்சு போய் கிடக்குறேன்டி”

 

     “ஏன் எனக்கப்புறம் வேற எந்த இளிச்ச வாச்சியும் கிடைக்கலியா?” கேள்வியால் அவன் மனம் துவண்டு அசந்த தருணம், அவன் பிடியில் இருந்து நழுவிக்கொண்டாள்.

 

   வருண் சட்டென சுதாரித்து அவள் முந்தானையை விடாமல் பிடித்து கொண்டு, “ஏன் கிடைக்காம, அதெல்லாம் நிறைய கிடைச்சது. ஆனா மகாராணி மாதிரி ஒருத்தி எம் மனசுக்குள்ள உக்காந்துகிட்டு, நான் என்ன செய்யனும் என்ன செய்ய கூடாதுன்னு, என்னை அதிகாரம் பண்ணிட்டு இருக்குறா. என்னை எதிர்த்து பேசவே பயப்படுற ஆளுங்க நடுவுல அவ மட்டும் எதிர்ல நின்னு என்னை எரிக்கிற மாதிரி முறைச்சு பாக்குறா. இப்ப கூட பாரு, நான் நல்ல பையனா இருக்கத்தான் ஆசப்படுறேன், ஆனா இந்த லிப்ஸ் இருக்குதே இது, இந்த கண்ணு இருக்குதே இது, ரெண்டுக்கும் நடுவுல மாட்டிட்டு நான் என்னதான் செய்ய…”

 

     “இப்ப தெரிஞ்சிடுச்சுல உங்க லட்சணம். நீங்க மாறிட்டேன்னு சொன்னது பொய்தான, நான் முன்னவிட இப்ப கொஞ்சம் அழகாயிருக்கேன்னு ஆசப்பட்டு சுத்தி சுத்தி வர்றீங்க இல்லையா?”

 

     “ஏய் சீ.. என்னை முன்னமாதிரி நினைச்சு பேசாத இயல், இப்ப நான் நெறயவே மாறிட்டேன். உம்மேல உயிரையே வச்சிருக்கேன்”

 

     “அப்டின்னா நான் சொன்னத முதல்ல செஞ்சுட்டு வந்து என்ன தொடுங்க, முடியாதுன்னா என் வாழ்க்கைக்கு குறுக்க வராதீங்க நான் சித் கூடவே போயிடுறேன்.”

 

     “அசிங்கமா பேசாத, தாலி கட்டுனவன் நான் இருக்கும் போது எப்டி இன்னோருத்தன் கூட போய் நீ… சொல்லவே கூசுது”

 

     “எனக்கு கூசலையே, நீங்க மாறிட்டீங்கன்றது என்ன எலிஜிபிலிட்டி சர்டிபிகேட்டா? அத கேட்ட உடனே நீங்க எனக்கு செஞ்ச கொடுமை எல்லாம் மறந்துட்டு, நான் உடனே வால ஆட்டிகிட்டு உங்க கூட கிளம்பி வந்திட்டே இருப்பேனா? மறக்கவும் மன்னிக்கவும் நான் என்ன ஏசுவா? சகமனுஷி. என்னை சுத்தி இருக்குற மத்தவங்கள மாதிரி ஒரு சாதாரண வாழ்க்கைய வாழ ஆசப்படுற ஒரு உயிர். உங்களுக்கு எப்பவும் நீங்க ஆசப்படுறது மட்டும் நடக்கனும், அதுனால எதிர்ல நிக்கிறவன் எக்கேடு கெட்டாலும் கவலையில்ல. இப்போ வரைக்கும் எம்மேல  உங்களுக்கு துளி கூட அக்கறை இல்ல, இந்த நேரத்தில வந்து இங்க நிக்கிறீங்களே பாக்குறவங்க உங்களுக்கும் எனக்கும் என்ன உறவுன்னு நினப்பாங்க? நீங்க போனதுக்கு பிறகு நான் தெருவுல நடந்தா என்னை என்ன பேர் சொல்லி கூப்பிடுவாங்க?”

 

      “நான் வேணும்னா நம்ம ரெண்டு பெரும் ஹஸ்பெண்ட் அன்ட் வொய்ப்னு ஊரறிய சொல்லிடவா?”

 

    “தேவையில்ல, நீங்க கெட்டவன்னு தெரிஞ்சு, காலம் முழுக்க அழுதுகிட்டே உங்களோட வாழ்ந்து ‘நான் நல்லவள்’னு நிரூபிக்கிறத விட, நல்லவன்னு தெரிஞ்ச ஒருத்தன்கூட ‘நான் கெட்டவன்ற’ பேரோட சந்தோஷமா வாழலாம்னு நினைக்கிறேன். அதுவும் போக நீங்க எனக்கு தாலி கட்டினதுக்கு எந்த ஆதாரமும் இல்ல, அந்த தாலியும் இப்போ என் கழுத்துல இல்ல. ஸோ இதுகூட கிட்டத்தட்ட ஒரு கள்ள தொடர்புதான…”

 

     வருண் கையிலிருந்த தட்டு பறந்து போய் எங்கேயோ விழ, “இயல்….” என கோபமாய் கத்தினான்.

 

    “கத்தாதீங்க, நீங்க இங்க வந்து போறத பாத்தவங்க கண்ணுக்கு அப்டிதான் நம்ம உறவு தெரியும். அதுவுமில்லாம எனக்கு நீங்க வேணாம், சித் தான் வேணும். ஸோ ப்ளீஸ் கெட்அவுட்.”

 

     வருண் அவளை அடிக்க கை ஓங்கியதை கண்டு சிறிதும் அச்சமின்றி கன்னத்தை காட்டி கொண்டு நின்றாள். ஓங்கிய கையை இறக்காமல் அவளை இறுக்கி அணைத்து இதழ் முத்தமிட்டதும் இயலிசை இயக்கமின்றி, இவ்வுலகினை மறந்து நின்று விட்டாள். பளார்ரென்று கதவு அடி வாங்கிய சத்தம் கேட்டு கண் விழித்தாள், அங்கே வருண் இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: