Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 2

ருண். ஆறடிக்கும் அதிகமாக வளர்ந்தவன், லேசாக ட்ரிம் செய்திருந்த தாடியும், கூரான கண்களும் என்னை நெருங்க முயற்சிக்காதே என்று எதிரில் நிற்பவர்களை பயமுறுத்தி திகிலூட்டும் படியான வரம் பெற்று வந்திருந்தது. அவன் அணிந்திருந்த பகட்டான உயர்தர ஆடைகள், எங்களின் எஜமானர் கோடிகளில் புரளும் செல்வ சீமானென்று ஊரறிய திமிராய் பறைசாற்றின. மூணாறில் பரம்பரை பணக்காரரும், மிகப்பெரிய எஸ்டேட் ஓனருமான சோம சுந்தரத்தின் இரண்டாம் தவப்புதல்வன் வருண்.

 

    பள்ளி நிறுவனர் முகில் கிருஷ்ணன் எதிர்பாராத விதமாக பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் காலில் பிராக்சர் ஆகி படுத்துவிட்டார். இயர் என்டிங் என்பதால் அவரின் பிஸினஸ்ஸை அவசரமாக கவனிக்க நம்பிக்கையான ஆள் தேவைப்பட்டது. வருணின் நண்பன் யாதவ் கிருஷ்ணன் மூன்றுமாத வெளிநாட்டு பயணம் முடிந்து திரும்பும் நேரம், திடீர் புயலின் காரணமாய் அனைத்து ப்ளைட்டுகளும் கேன்சல் ஆனது. யாதவ் வருகை தாமதமானதால், நண்பனுக்காக அவனின் தந்தைக்கு உதவிட வருண் பத்து நாட்களுக்கு முன்னால் சென்னை மாநகருக்குள் பிரவேசித்திருந்தான்.

 

      வந்திறங்கிய இரண்டு நாட்களிலேயே வருண், முகில் கிருஷ்ணன் விட்டுப்போன அலுவலக வேலைகளை பக்காவாக சரி செய்துவிட, அதன் பின்னர் அவர்கள் நடத்தும் பள்ளிக்கும் ஒரு விசிட் அடித்தான். அங்கு தான் இசையையும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கண்டான். அவன் தன் அறைக்குள் இருந்தபடி கண்ணாடி சுவரின் வழியே சில அடி இடைவெளியில் வெளியே நிற்கும் அவளை பார்த்தான், இது அவள்தானா என்று யூகிக்கவே முடியாத அளவு நிறைய மாறி இருந்தாள். அவனின் கையிலிருந்த பைல் நழுவியது கூட தெரியாமல் முகம் கொள்ளா புன்னகையோடு, இமைக்க மறந்து அவளையே பார்த்திருந்தான். அறைக்கு வெளியில் இருந்தவளுக்கு அங்கே கருப்பு நிற கண்ணாடியை தவிர வேறெதும் தெரியாததால், அவள் தன்போக்கில் கிரவுண்டிலிருந்த தன் வகுப்பு குழந்தைகளை தனியாக பிரித்து வரிசையாக நிற்க வைத்து, வகுப்பிற்கு திருப்பி அனுப்பி கொண்டிருந்தாள். வருண் அவளோடு பேச ஆசைப்பட்டு அவளெதிரில் சென்றானானால் வேறு வினையே வேண்டாம், அடுத்த நிமிடமே இந்த ஜில்லாவையே விட்டு ஓடி மறைந்து விடுவாள். மாலைவரை பொறுமையாய் இருந்தவன் அவளை பின் தொடர்ந்து சென்று, அவள் தங்கி இருக்கும் வீட்டையும் கண்டு கொண்டான். அந்த  தெரு முனையிலேயே இரவெல்லாம் அவளை காண தவமிருந்தும் அன்று தேவதை தரிசனம் அவனுக்கு கிட்டவில்லை. எனவே அதனையடுத்து வந்த எட்டு நாட்களும் சும்மாவேனும் பள்ளிக்கு செல்வதும், அவளை மறைவிலிருந்து எட்டி பார்ப்பதும் அவனுக்கு பழக்கமாகி போனது. போனில் ரகசியமாக ஒன்றிரண்டு போட்டோ எடுத்ததோடு, ஆபீஸ் பைலில் இருந்த அவள் போட்டோவையும் திருடிக் கொண்டான். இதுவும் போதாதென தினமும் மாலைக்கு பின் அவள் தெருவிலேயே பழியாய் கிடந்து தேவுடு காத்தான்.

 

     இன்று காலையில் முகில் கிருஷ்ணன், “வருண் கண்ணா சிரமம் பாக்காம, எனக்காக இவ்ளோ பெரிய உதவி செஞ்சிருக்க. அதுக்கு பரிசா இன்னிக்கி ஈவ்னிங் நம்ம ஸ்கூல்ல நடக்கப்போற ஆனுவல் டே பங்ஷனுக்கு நீதான் சீப் கெஸ்ட்”

 

      ‘கிழிஞ்சது கிருஷ்ண கிரி’ “இல்ல அங்கிள், ஸ்டேஜ் எல்லாம் எனக்கு முன்ன பின்ன பழக்கமில்ல. நீங்களே போயிட்டு வாங்க” என அவரை பேசி சமாளிக்க முயற்சித்தான்.

 

    “அட நாங்க மட்டும் மாசாமாசம் ஸ்டேஜ் ஏறிட்டா இருக்கோம். நம்ம ஸ்கூல்தான, சும்மா வாப்பா…” என்று வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார், வருண் பாஷையில் சொல்வதானால் இழுத்து சென்றார். அவனுக்கும் கூட மனதின் ஓரத்தில் ஒருவேளை இத்தனை நாட்களில் அவள் தன்னை மன்னித்திருக்க கூடுமோ என்ற நப்பாசை வந்து ஒட்டி இருந்ததால், அவள் முன் தன்னை கொண்டுபோய் நிறுத்த கிடைத்த நல்லதொரு வழியாக இதை எண்ணி கொண்டான். உள் நுழைந்ததிலிருந்து ஆசை ஆசையாக இசையை மட்டுமே வருண் கண்கள் வட்டமிட்டு வந்தது. அவன் மனம் சொன்ன பேச்சை கேளாமல் பதில் தேடும் பறவையாக நிலை கொள்ளாமல் தவிக்க, அத்தனை பேர் முன்னிலையில் தன்னுடலை நிதானமாக வைத்துக்கொள்ள மிகவும் சிரமப்பட்டு போனான். தன்னை கண்டதும் அழுவாளா, சிரிப்பாளா, இல்லை அடிப்பாளா என்ற யோசனையோடு ஆவலாய் அவளையே பார்த்திருக்க, அவளோ அவனை பார்த்ததுமே மூர்ச்சையாகி சரிந்தது விட்டாள். அவளை போலவே அவன் மனதில் கட்டிய மணல் கோட்டையும் சரிந்து விழுந்துவிட்டது.

 

    சித்தார்த் புயல் வேகத்தில் மயங்கி கிடந்த இசையின் அருகில் வந்து, உரிமையாய் அவளை தன் மடிமேல் கிடத்தி கொண்டது வருண் மனதில் பெரிய சவுக்கடியாய் விழுந்தது. இதுநேரம் வரை பொது இடம் என கட்டி வைத்திருந்த பொறுமை எனும் கயிற்றை அறுத்தெரிந்து விட்டு வருண் தன்னவளை தேடி தாவி ஓடி வந்தான். சித்தார்த் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவிக்கவும் பாதி விழி திறந்தவள், வருண் அவளருகில் வந்து நிற்பதை கண்டதும் மீண்டும் மயங்கி விழ சித்தார்த் தன் மார்பில் தாங்கி கொண்டான். மறுபடி மறுபடி மயங்குவதால் இன்னதென்று காரணம் புரியாமல் செய்வதறியாது தத்தளித்தான் சித்தார்த்.

 

    “ஹாஸ்பிடல்க்கு சீக்கிரம் கொண்டு போங்கப்பா” என்று கூட்டத்தில் யாரோ குரல் கொடுக்க, சித்தார்த் அவளை தன் கையில் தூக்கி கொண்டு அந்த கூடாரத்தை விட்டு வெளியேற முயல்கையில், முன்னால் வந்து வழி மறித்து, அவளை என்னிடம் கொடு என்பதைப்போல கைகளை நீட்டி நின்றான் வருண்.

 

     சுற்றி இருந்த அனைவரும் குழப்பத்தோடு வருணை பார்க்க, அவனோ சற்றும் அசராமல் இசையை இன்னும் தன் கையில் தராமலிருந்தவனை ஒரு கோப பார்வை பார்த்தான். உண்மையில் அந்த கழுகு பார்வை சித்தார்த் ஆழ் மனம் வரை சென்று ஈட்டி போல பாய, மதியம் இசை ஏதோ கண்கள் அவளை பயமுறுத்துவதாய் சொன்னதெல்லாம், சம்பந்தமில்லாமல் இப்போது அவன் மனதில் தோன்ற ஆரம்பித்தது. சித்தார்த் அசையாமல் சிலையாயிருக்க, வருண் ஓரடி முன்னால் வந்து வலுக்கட்டாயமாக இசையை அவன் கையிலிருந்து பிடுங்கி சென்றான். முகில் கிருஷ்ணன் வருணை போக விட்டு, மற்றவர்களை சமாதான படுத்தி நிகழ்ச்சி வேலைகளை கவனிக்க வைத்தார்.

 

     தன் காரில் முன் இடது சீட்டில் அவளை வசதியாக படுக்க வைத்து, நெற்றியில் புரளும் முடி கற்றைகளை ஒரு புறமாக கோதிவிட்டு, கசங்கி இருந்த சேலையை நீவி நேராக்கி, சிற்றிடைக்கு சீட் பெல்ட்டும் மாட்டி விட்டான். அவள் மட்டும் விழித்தாளானால் அவன் கை பட்ட இடமெல்லாம் நெருப்பால் கழுவி துடைத்திருப்பாள், அத்தனை கோபம் அவன்மீது அவளுக்கு. சென்னை மாநகரின் மாலை நேர டிராபிக்கில் அவன் கார் ஊர்ந்து செல்ல, அடிக்கடி அவள் விரல்களின் இடையில் தன் விரல் சேர்த்து நுழைத்து கொண்டு, அவளுடனான இந்த நிமிடங்களை அவன் மிகவும் ரசித்து ரசித்து அனுபவித்தான். நெடுநேரம் காரின் ஏசி காற்று முகத்தில் அடித்ததால் மயக்கம் தெளிந்தவள் தன் நீல நிற விழிகளை லேசாக விரித்தாள்.

 

      “குடிக்க தண்ணி வேணுமா?” என்று வருண் கேட்டதும், துள்ளி எழுந்த இசை ‘நான் எப்டி இவனோட காருக்குள்ள வந்தேன்? அப்போ இவன் என்னை அந்த வீட்டை விட்டு போக விடவே இல்லையா? நான் தனியா வாழ்ந்ததெல்லாம் வெறும் கனவா?’ கண்களை உருட்டி திரட்டி தான் இருக்கும் இடத்தை கிரகிக்க முயன்றாள். எதிரில் தெரியும் நெரிசலான போக்குவரத்து பாதையும், அணிந்திருந்த ஆடையும் எதுவும் கனவல்ல நிஜம்தான், என மூளைக்கு உரக்க உரைத்ததும் சற்றே ஆசுவாசமானாள்.

 

    “கார நிறுத்துங்க, நான் இங்கயே இறங்கிக்கிறேன்.”

 

     “ஏன்? நானே வீடு வரைக்கும் வந்து டிராப் பண்றேன்.”

 

    “வேணாம் சார், நடந்து போற தூரம்தான் நானே போய்க்கிறேன்.” ‘சார்’ என்ற வார்த்தையை அவள் வேண்டுமென்றே அழுத்தி உச்சரிக்க, அவன் நீண்ட பெருமூச்சொன்றை இதயத்திலிருந்து வெளியேற்றினான்.

 

    “ஏன் பொய் சொல்ற இயல்? உன்னோட வீடு இந்த ஏரியாவே கிடையாதுல்ல. ஹேண்ட் பேக் வேற நாம ஸ்கூல்லயே விட்டுட்டு வந்தாச்சு, உன் கைல ஆட்டோ பிடிக்க கூட பணம் இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும். பேசாம வீடுவரைக்கும் என்கூடவே வா”

 

   அவளுக்கு இப்போதுதான் ஸ்கூல் பற்றின ஞாபகமே வந்தது. ‘அடச்சே… இவன பாத்த பயத்தில அத்தன பேர் முன்னாடியும் மயங்கி விழுந்து தொலைச்சுட்டேனே… அதுக்கப்புறம் அங்க என்னென்ன நடந்துச்சோ… போதாததுக்கு இவன் கார்லயே வேற கூட்டிட்டு வந்திருக்கானே. நாளைக்கு ஸ்கூலுக்கு போனதும் எல்லாரும், எனக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்னு கேள்வி கேட்டே சாகடிக்க போறாங்க. உண்மைய சொல்லவும் முடியாது, சொல்லாம ஒதுங்கவும் விட மாட்டாங்க. ஒரு லிமிட்டுக்கு அப்புறமும் நான் எந்த பதிலும் சொல்லலன்னா, எங்களபத்தி அவங்கவங்க மனசு போல இஷ்டத்துக்கு கதை கட்டி விட்ருவாங்க. இனிமே என்னால மத்தவங்க முன்னாடி எப்டி சாதாரணமா இருக்க முடியும். வேற வேலையத்தான் தேடனுமா… எல்லாம் இவனால வந்தது, கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தேன், அத கெடுக்குறதுக்குனே வந்து தொலச்சிருக்கான் பாவி. நான் தான் எதுவுமே வேண்டாம்னு விலகி வந்துட்டேன்ல, பின்ன எதுக்காக மறுபடியும் என் வாழ்க்கைக்குள்ள இவன் வர்றான்?’ எண்ணங்கள் தறிகெட்டு ஓட, நெற்றியை நீவியபடி யோசனையோடு அமர்ந்திருந்தாள்.

 

     “முன்ன விட இப்போ நீ ரொம்ப அழகா இருக்க இயல். கொஞ்சம் புஸு புஸுன்னு கன்னம், ஷார்ட் ஹேர், ஐ ப்ரோ திரெட்டிங், அதுலயும் இந்த வெயில்ல உன் ஸ்கின் டோன் ரொம்ப சூப்பர். பட் நீ எவ்ளோதான் மாற முயற்சி பண்ணாலும் சில விஷயம் மட்டும் மாறாம அப்டியே இருக்குது பாரேன்….” என்றவன் அவளின் நெற்றி நீவிய விரல்களை தொட்டு வருடினான்.

 

    அவன் கைகளை தட்டி விட்டு, “ஒழுங்கா ரோட்ட பாத்து ஓட்டுங்க. உங்கள நம்பி அங்க இன்னோரு ஜீவன் இருக்குறத மறந்திடாதீங்க.”

 

     “எஸ் மேடம்…” என உரக்க கத்தி சல்யூட் அடித்தபடி சாலையில் கவனத்தை பதித்தான்.

 

     கார் அவளின் வீடு இருக்கும் தெருவை நெருங்கியதும், “போதும், போதும். இங்கயே நிறுத்திடுங்க, நான் இறங்கிக்கிறேன்.”

 

    “உன்னோட வீட்டுக்கு என்ன கூப்பிட மாட்டியா?”

 

    “உங்க லெவல்க்கு அந்த சாதாரண வீட்டுக்குள்ள நீங்க காலெடுத்து வைக்கலாமா சார்?” வேண்டுமென்றே அவள் வார்த்தைகளால் அடிக்க, அடி வாங்கிய வலி அவன் கண்ணில் தோன்றி மறைந்தது.

 

     “சரி வீட்டு சாவி இல்லயே, எப்டி கதவ திறக்க போற?”

 

     “என்னோட ஹவுஸ் ஓனர் கிட்ட ஸ்பேர் கீ இருக்கு, நீங்க என்ன பத்தி கவலபடாம கிளம்புங்க சார்.” என்று தன் கோபத்தை அவன் கார் கதவில் காட்டிவிட்டு சென்றாள். அவள் கண்ணிலிருந்து மறைந்ததும், வருண் அந்த தெருவில் தன் வழக்கமான இடத்தில் காரை கொண்டு போய் நிறுத்திவிட்டு சீட்டில் இலகுவாக சாய்ந்து அமர்ந்தான்.

 

    இத்தனை நாட்களுக்கு பிறகும் கூட அவளின் கோபம் துளியளவும் குறையாதிருப்பதை உணர்ந்ததும், அவள் மனம் தன்னால் எத்தனை தூரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என புரிந்தது. ‘அவ வேணும்னே என்ன அவமான படுத்துறா, பழசெல்லாம் குத்தி காட்டுற மாதிரி பேசுறா, கோச்சுகிட்டு இரக்கமே இல்லாம முகம் கொடுத்து கூட பேச மாட்டிக்கிறா’ என விம்மிய மனதிடம், ‘அவள நீ படுத்திய பாட்டுக்கு, இது உனக்கு தேவைதான்’ என்று பதிலுரைத்தான். நேரம் கரைவதை பொருட்படுத்தாமல் அவளை மீண்டும் ஒருமுறை காணவேண்டி இருள் சூழ்ந்த பாதையில் வழிமேல் விழிவைத்திருக்க, விர்ரென்று பைக்கில் முன்னால் பறந்து சென்றான் சித்தார்த்.

 

     முன்ன பின்ன இசையின் வீட்டு பக்கம் வந்து பழக்கமில்லாததால் இரண்டு மூன்று வீடுகளில் ஏறி இறங்கி அவள் அட்ரஸ் விசாரிப்பவனை, வருண் காரில் இருந்தபடியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். இறுதியாய் சித்தார்த் இசையின் வீட்டை கண்டுபிடித்ததும், வருணும் காரிலிருந்து இறங்கி விருவிருவென வர, இருவரும் அடுத்தடுத்து அந்த அப்பார்ட்மென்ட்க்குள் நுழைந்தனர். கிரவுண்ட் ப்ளோரில் ஜானகி மாமி “ஏன்டி எத்தன தடவ சொன்னேன், செடிக்கு மறக்காம தண்ணி ஊத்தனும்னு. இப்ப மட்டும் நான் பாக்கலன்னா அடிக்கிற வெயிலுக்கு நாளைக்கே காஞ்சு போயிருக்கும்.” என்று ஒதுக்கு புறமாய் வளரும் அழகு செடிகளுக்கு நீரை பாய்ச்சியபடி மகளை வசைபாடி கொண்டிருந்தார்.

 

    புதியவர்களை கண்டதும் ஜானகி மகளை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, “யாருங்க நீங்க ரெண்டுபேரும்?”

 

    சித்தார்த், “நான் இசையோட ப்ரண்ட்.”

 

    வருண், “நான் இயலிசையோட ஹஸ்பெண்ட்”

2 Comments »

  1. வருண் சூப்பர்!! வருண்- இயலிசை பழைய கதை என்ன என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது!! அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  2. Ennathu husbanda? Varun romba athiradi super intro. First epi padichitu oru pei kathaiya irukumonu ninachan. Sitharth vanthathum love story. Ippo varun entrya partha family misunderstanding mathri irruku. Nice going. Riya mam ithu completed storya?. Illa serial storya?.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: